‘மரளி மண்ணிகே’ என்னும் தலைப்பில் நவீன இந்தியாவின் ரவீந்திரநாத் தாகூர் என்று ராமச்சந்திர குஹாவால் புகழப்பட்ட சிவராம காரந்த் கன்னடத்தில் எழுதி தமிழில் ’மண்ணும் மனிதரும் ‘ என்ற தலைப்பில் தி.ப.சித்தலிங்கையாவால் மொழிபெயர்க்கபட்ட நாவலில் மூன்று தலைமுறை மனிதர்கள் வாழ்ந்த காலமும் அவர்களை வாழ்நாளெல்லாம் ஊர்விட்டு ஊர் அலைக்கழித்த சூழலும் விரிகிறது.
1840-ல் தொடங்கி 1940- வரை வாழ்ந்த ஒரு குடும்பத்தையும் அக்குடும்பத்தின் உறவுகளை, சுற்றத்தை, நட்பை, தொடரும் இருதலைமுறைகளைச் சொல்லுகிறது ‘மீண்டும் மண்ணுக்கே’ என்னும் பொருள்படும் தலைப்பில் கன்னடத்தில் எழுதப்பட்ட இந்நாவல்.
மிக விரிவான தளத்தில் எழுதப்பட்டிருக்கும் கதை புரோகிதம் செய்து வாழும் அந்தணரான ஐதாளரின் குடும்பத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. ஐதாளரின் தந்தை சிக்கனம் கருதி பெருமழை பெய்யும் காலத்தில் ஐதாளருக்குச் செய்து வைக்கும் கல்யாணத்தில் துவங்கி ஐதாளரின் பேரன் ராமனின் கல்யாணத்தில் முடிகின்றது.
கழிமுகத்தில் ஒரு சிறு வீட்டைத் தவிர வேறெந்தச் சொத்துகளும் இல்லாத புரோகிதம் செய்யப் போகும் இடத்திலேயே அன்றைய உணவை முடித்துக்கொள்ளும் ஐதாளரும், கடும் உழைப்பாளியான குழந்தைகள் இல்லா அவரது மனைவி பார்வதியும் சிறுவயதிலேயே கணவரை இழந்து குறைபட்டுபோன ஐதாளரின் சகோதரி சரஸ்வதியுமே முதல் தலைமுறை மாந்தர்களாகத் துவக்கத்தில் வருகின்றனர்.
ஐதாளர் குழந்தையின் பொருட்டு செய்துகொள்ளும் இரண்டாம் திருமணம் அதில் பிறந்து செல்லம் கொடுக்கப்பட்டு திசைமாறிப் போன லச்சன் அவன் மனைவி நாகவேணி ஆகியோர் இரண்டாம் தலைமுறை. கழிமுக வீட்டை விட்டு பெருநகரத்துக்குக் கல்வியின் பொருட்டு இடம்பெயரும் அவர்களின் மகன் ராமன் மூன்றாம் தலைமுறை என நீளும் கதையில் 18 மற்றும் 19 -ம் நூற்றாண்டின் காலச்சூழலை அவதானிக்க முடிகின்றது.
பல்வேறுபட்ட குணச்சித்திரங்கள் உள்ள பாத்திரங்களின் வாயிலாக அன்றைய மாந்தர்களுக்கு மண்ணின் மீதான பெருவிருப்பு இருந்ததையும் பெண்களின் அயராத உழைப்பால் குடும்பங்கள் தலை நிமிர்வதையும் தெளிவாகக் காணமுடிகின்றது. ஐதாளரின் திருமணத்திற்கு வர துணியாலான குடைபிடிப்பவர்களே ஊரின் பெருந்தனக்காரர்களென்னும் வரியிலிருந்தே அக்காலத்தின் பொருளாதார நிலையை அறிந்துகொள்ளலாம்.
ஏழை அந்தணர் வீடுகளில் உணவுப்பழக்கம் எப்படியென்பதையும் மிகச் சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறார் கதாசிரியர். கணவர் புரோகிதம் பண்ணப்போகும் வீட்டில் சாப்பிடுவதால் பெண்களிருவரும் அவடக்கீரை தாளித்தோ அல்லது உருளைக்கிழங்கோ வெள்ளரிக்காய்களோ இருக்கும் மிக எளிய உணவை ஒரு பொழுது உண்டுவிட்டு இரவில் பிடி அவலை நனைத்துச் சாப்பிட்டுவிட்டுப் படுக்கின்றனர். கடும் உழைப்புக்குச் சற்றும் பொருந்தாத ஏழ்மை. மாவடு தேடி நல்ல வெய்யிலில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து கிடைத்த மாங்காய்களை ஊறுகாய் போடுவதும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்யும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சூரனே சொல்லுவதுபோல ’பிராமணர்களுக்கு எதற்குக் குறைவென்றாலும் நாக்குக்கு மட்டும் அப்படி வேண்டியிருக்கிறது.’
பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளை, இக்காலத்துப் பெண்களால் நினைக்கவும் முடியாது. வீட்டைப் பெருக்குவது, பற்றுப் பாத்திரங்களைத் தேய்ப்பது, கால்நடைகளுக்கு நீரும் தீவனமும் வைப்பது, வயலில் வேலை செய்வது, வண்டல் மண்ணை அரித்துச் சட்டி சட்டியாகக் கொண்டு வந்து சேர்ப்பது, நீர்பாய்ச்ச ஏற்றமும் கபிலையும் இறைப்பது, தினப்படி வீட்டை மெழுகுவது, தோட்டத்தில் விதைப்பது, நாற்று நடுவது அறுப்பது, புன்னைக் காய்களைச் சேகரித்து எண்ணை எடுப்பது, பால் கறப்பது, கடல் நீரைக் காய்ச்சி வீட்டுச் சமையலுக்குத் தேவையான உப்பெடுப்பது, வெள்ளத்தில் அடித்து வரும் மரக்கட்டைகளை உயிரைப் பணயம் வைத்து விறகுக்கெனச் சேர்ப்பதென்று இப்படி முடிவில்லாமல் நீள்கிறது இவர்களின் உழைப்பின் பட்டியல். அப்போதைய பெண்கள் அசாத்தியமான உடல்வலிமையுடன் மனவலிமையும் உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். வெயிலும் மழையும் வெள்ளமுமாய் ஓயாமல் வாழ்வை அலைக்கழித்தாலும் பெண்கள் யாவரும் மூன்று தலைமுறைகளிலுமே புரிதலும் சகிப்புத்தன்மையும் அனைத்தையும் மன்னிக்கும் விசாலமானதும் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.
கணவர் எந்நேரம் வீடுதிரும்பினாலும் எந்தக் கேள்வியும் கேட்காமலிருப்பது புத்திரபாக்கியத்துக்கென மறுதிருமணம் செய்யும் போதும் எதிர்ப்பின்றி அதை ஏற்றுக்கொள்வது அத்திருமணத்திற்கென்று அப்பளம் இடத்துவங்குவதென்று பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்த வேதனைகளையும் அவர்களுக்கு நடந்துகொண்டிருந்த அநீதிகளையும் அப்போதைய வாழ்வின் இயங்குமுறைகளாகவே இந்நாவல் சொல்லிச் செல்கிறது.
அப்போது வழக்கத்திலிருந்த குறுநிலங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்த பெரிய முதலீடுகள் இல்லாத விவசாய முறைகளையும் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த முடி மணங்கு சேர் கோர்ஜி என்னும் அளவை முறைகளும் கதையில் பல இடங்களில் சொல்லப்படுகின்றன.
எத்தனை ஏழ்மையிலிருப்பினும் அந்தணர்களான அவர்களுக்குக் கீழிருக்கும் தாழ்த்தப்பட்டவர்களோடு இணைந்தே விவசாயம் நடந்திருக்கிறதென்பதும் ஐதாளரின் குடும்பத்திற்கு சூரனும் பச்சியும் செய்யும் பிரதிபலன் எதிர்பாராத தொடர் உதவிகளிலிருந்து புலனாகின்றது, இறந்த மாட்டின் சவத்தைப் பறையர்கள் வந்து எடுத்துச் செல்லும் வழக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கழிமுகத்தில் அமைந்திருக்கும் ’’கோடி’’ கிராமமே கதைக்களமென்பதால் அப்பொழுது படகுகளுக்கு மஞ்சி என்னும் பெயரிருந்ததும் பாய்மரப்படகில் ஒரு வகை பத்தொமாரி என்பதும் கோடா என்பதும் மிகப் பெரிய பாய்மரப்படகென்பதும் ஐதாளரின் பார்வையில் துறைமுகப்பகுதியை விவரிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்காத பெயர்களையும் விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
பிள்ளை இல்லாதவர்கள் சுவீகாரம் எடுத்துக்கொள்வது அப்போதும் நடைமுறையில் இருந்திருப்பதை சரஸ்வதியும் பார்வதியுமாய் ஐதாளரிடம் அதுகுறித்துப் பேசுவதிலிருந்து தெரிகிறது. எதிர்பாரா விதமாக ஐதாளர் சுவீகாரத்திற்கு முனையாமல் சத்தியபாமையை இரண்டாம் திருமணமே செய்துகொள்வது அந்தப் பெண்களுடன் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
இரண்டாவதாக ஒருத்தி தன் வாழ்வில் வரப்போகும் போதும் பார்வதி அவள் கன்னடப் பிராமணர்களில் ’கோட’ அல்லது ’சிவள்ளி’ இவற்றில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவளென்பதில் கவலை கொள்வதிலிருந்து அப்போது சாதிவேற்றுமைகள் மட்டுமன்றிக் குடும்பங்களுக்குள் நுண்ணிய சாதிய அடுக்கின் சிக்கல்களும் இருந்திருக்கிறதென்பதை அறியலாம்.
திருமண ஊர்வலத்தில் ஒவ்வொருவர் கையிலும் இரண்டு பந்தங்களைக் கொடுத்துக் கூட்டம் அதிகமானதுபோல் காட்டுவது, பாட்டியன்னம் என்னும் பாட்டிமை அன்று மணமகளுக்கு நடக்கும் சடங்கு, தாசிகள் பொன் பெற்றுக்கொண்டு சலாமிடுவது பெரும் அந்தஸ்தாகக் கருதப்படுவது போன்ற விவரணைகளிலிருந்து அப்போதிய திருமணங்களின் போது நடக்கும் பலவகையான முறைமைகள் வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது.
லச்சன் பிறந்த பிறகு அவனைப் பள்ளிக்கூடம் சேர்ப்பது குறித்தான பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவனைச் சேர்ப்பதென்பது இழிவு என்று பெரியவர்கள் யாவரும் ஒன்றே போல அபிப்பிராயப்படுவதிலிருந்து தீண்டாமை 18-ம் நூற்றாண்டு முடியும் தறுவாயிலும் மிகத் தீவிரமாக நிலவி வந்திருப்பதை உணரலாம்.
மெல்ல மெல்ல வட்டிக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் வருவதை, ஆடம்பரத்துக்கு விருப்பப்படும் குடும்பங்கள் பெருகுவதையெல்லாம் சீனப்பன், சீனப்பய்யராக மாறுவது போன்ற நுட்பமான கதாபாத்திர மாற்றங்களின் மூலம் சொல்லத் துவங்குகிறார் கதாசிரியர்.
காட்சிகள் மாறிக்கொண்டே வந்து லச்சன் தட்டுக்கெட்டு திசைமாறி தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, அவனால் அவன் மனைவியின் உடல்நிலையும் பாழாவதைப் பார்க்கிறோம், 500 ரூபாய் பணம் கொடுத்தால் மணியக்காரர் பதவி கிடைக்கும் என்னும் வரிகளில் லஞ்சம் கொடுக்கும் சூழல் 19-ம் நூற்றாண்டில் மெல்லத் துவங்கியிருப்பதை உணரலாம்.
பீட்ஸா இந்தியக் குக்கிராமங்களிலும் புழக்கத்திலிருக்கும் இக்காலகட்டத்தில் நாவலில் காப்பி என்னும் பானம் மெல்ல கலாச்சாரத்துக்குள் நுழைவதையும் பல ஆச்சாரமான குடும்பங்கள் அதை வீட்டுக்குள்ளே அனுமதிக்காமலிருந்ததையும் வியப்புடன் வாசிக்க முடிகின்றது. காலங்கள் மாறி வருகையில் லச்சனின் மனைவியான நாகவேணி சரஸ்வதியை, பார்வதியைப் போலல்லாமல் தன்னந்தனியே கணவனின்றியும் வாழத் துணிகையில் பெண்களின் மனோநிலையும் மாறிக்கொண்டு வருவதை நாம் அறியலாம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் செல்லும் ராமன் அப்போதைய சுதந்திர உணர்வெழுச்சி மிக்க இளைஞர்களின் பிரதிநிதியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.
எத்தனையோ கஷ்டகாலங்கள் மாறி மாறி வந்தாலும் மீண்டும் மீண்டும் மூன்று தலைமுறைப் பெண்களும் அந்த ஓட்டு வீட்டுக்கே திரும்புகிறார்கள். அம்மண்ணே அவர்களைப் பிணைக்கிறது. வாழ்வுடன் ’’மீண்டும் மண்ணிற்கே’’ என்னும் கன்னடத் தலைப்பும் ’’மண்ணும் மனிதரும்’’ என்னும் தமிழாக்கத் தலைப்பும் மிகப் பொருத்தமாகக் கதையின் மூன்று தலைமுறை மாந்தர்களையும் நமக்குக் காட்டித் தருகின்றது.
வேளாண்மையும் தொற்றுநோயின் இறப்புக்களும் ஏழ்மையுமாக முதல் தலைமுறை, ஆங்கிலக் கல்வியும் புதிய கலாச்சாரமும் கிடைக்கப் பெறும் இரண்டாம் தலைமுறை, பெருநகரங்களுக்குக் கல்வியின் பெயரால் இடம்பெயரும், அங்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் மூன்றாம் தலைமுறை என மாறிவரும் தலைமுறைகளின் மூலம் மாறி வந்திருக்கும் இந்தியச் சமூக வாழ்வினையும் சொல்லும் இந்நாவல் இறுதியில் ராமன் சரஸ்வதி என்னும் அவனின் பாட்டியின் பெயருடன் துடைப்பமும் கையுமாக வீட்டுப்பொறுப்பை நிர்வகிக்க வல்லவள் என்னும் சித்திரத்தைக் கொடுக்கும் பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்வதுடன் நிறைவடைகிறது.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் குழந்தைக்காக ஐதாளர் மறுதிருமணம் செய்து கொள்வதும் பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் மூன்றாம் தலைமுறைக்காரனான நவீனச் சிந்தனையுள்ளவனான ராமனும் பிற காரணங்களை விட வீட்டுப் பொறுப்பில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் காட்டியிருப்பதும் காலங்கள் எத்தனை மாறினாலும் பெண்களின் இடமென்று ஆண்கள் நிர்ணயம் செய்துவைத்திருப்பது சமையலறையும் படுக்கையறையும் தானென்பதையும் அன்றும் இன்றும் என்றும் இது ஆண்களின் உலகே என்பதை இந்நாவல் காட்டும் இடமென்பதாகவும் கொள்ளலாம்.
அக்காலத்திலிருந்த சாதிய அடுக்குகள், தீண்டாமை, தொற்று நோய்கள், பெண்களின் வாழ்வு முறை, ஆண்களின் அதிகாரம், புதுக் கலாச்சாரங்கள் மெல்ல மெல்லச் சமூகத்தில் நுழைவது எனப் பலவற்றைச் சொல்கிறது இந்நாவல். சிவரம காரந்தின் பாட்டி தனது தள்ளாத வயதில் விருப்பு வெறுப்புகளின்றி இக்கதையை அவருக்குச் சொல்லியதால் கதையிலும் எந்தப் பாரபட்சமும் சார்புமின்றிக் கதை மாந்தர்கள் அனைவரும் நடுநிலையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்.
மண்ணும், மழையும், பெண்களும், ஏழ்மையும், இசையும், இயற்கையுமாக அழகிய நாவல் இது. ராமனும் அவன் தாயும் ஓர் இரவில் பொழியும் நிலவின் புலத்தில் நனைந்தபடி கடற்கரையில் அமர்ந்திருக்கும் ஒருகாட்சி சம்சாரம் ஒரு நரகமென்றாலும் அதிலும் ரசிக்கத்தக்க விஷயங்கள் சம்பவங்கள் நிகழ்வுகள் இருக்கும் என நமக்கு இக்கதை உணர்த்தும் ஒரு அழகுச்சாட்சி. அக்காட்சி ஒரு கவிதையையைப் போல கதையில் தீட்டப்பட்டிருக்கும்.
ஞானபீட விருது சாகித்ய அகாதமி விருது எனப் பலவற்றைப் பெற்ற அறிஞரான சிவராம காரந்தின் கன்னட மொழிவளத்திற்குச் சற்றும் குறையாமல் தமிழில் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கும் திரு தி.ப.சித்தலிங்கையாவிற்கு வாசிக்கும் அனைவரின் நன்றிகளும் கட்டாயம் உரித்தாகும்.
வேட்டைக்காரன் புதூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொள்ளாச்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணி புரிந்துகொண்டிருக்கிறார். மேலும், அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.
தாவர உலகம், ஸாகே-போதையின் கதை, வானவில் மரம், விலக்கப்பட்ட கனி, தந்தைப்பெருமரம், நுண்ணுயிருலகு உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மரங்களின் மறை வாழ்வு என்னும் நூலை மொழியாக்கம் செய்துள்ளார்.
தோழி விருது 2019, செங்கால் நாரை விருது 2022, இந்திய மருத்துவக் கழகம் வழங்கிய Women of Wonder விருது 2025, சிறந்த அறிவியல் நூலிற்கான முனைவர் உலோ.செந்தமிழ்க்கோதை நினைவு விருது 2025 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.








Leave a Reply