Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

சாரமேயன்

மனோஜ் பாலசுப்பிரமணியன்
மனோஜ் பாலசுப்பிரமணியன்
June 3, 2025
சாரமேயன்

“சரித்திரத்தில் நாய்களுக்கு இடமில்லை. அதுவும் இந்தக் கருத்த நாய்கள்….” கன்னத்துச்சதை குலுங்க கர்ஜித்த துரை தன் இடது காலைத் தூக்கி மரப் படிக்கட்டில் ஓங்கியடித்து இடுப்புறையிலிருந்து துவக்கை உருவினான். பின் அரைக்கணம் நிதானித்துத் துவக்கை இடுப்புறையிலேயே வைத்துவிட்டு இடப்பக்கம் திரும்பி ஒரு சர்ப்பத்தைப் போல நாக்கை வெளிநீட்டி தன் உதவியாளனுக்குக் கண்களால் சைகை செய்து உத்தரவிட்டான். அவ்வுதவியாளன் அருகிருந்த வீரர்களைப் பார்த்தான். இரண்டு வீரர்கள் முன்னே வந்து அங்கே கருத்து மெலிந்திருந்த மூன்று பேரை இழுத்துச் சென்றார்கள். நான் சற்றே நகர்ந்து பின்னால் வந்து சுவரோடு ஒட்டி நின்று கொண்டேன். மேலே பங்கா சரக் சரக் என்ற ஒலியுடன் அசைந்து கொண்டிருந்தது. 

அந்தத் துவக்கு வெளியே உருவப்பட்டதும் அதன் ராஜரீகமான தோற்றத்தையும், அதன் கருமையான உடலால் உருவான மினுமினுப்பையும் அது மீண்டும் ஒரு நடனக்காரியைப் போன்ற நளினத்துடன் இருந்த இடத்திலே சென்று அமர்ந்து கொண்டதைப் பிரம்மிப்புடனும் பதைபதைப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்கு முன்னால் அது போன்றதொரு கையடக்கத் துவக்கை நான் கண்டதே இல்லை. அவர் அணிந்திருந்த சிவப்பு மேற்சட்டையும் உடலில் இறுக்கிக் கட்டியிருந்த பிலுட்டு வாரும் காலோடு காலாய் ஒட்டியிருந்த வெள்ளைக் காற்சட்டையும் கருத்த தோலுடைய சப்பாத்துக்களும்.. வெள்ளையன் அவன் ஒவ்வோர் அசைவிலும் வெள்ளையன்.

வலதுபக்கம் திரும்பிய துரை கடுத்த முகத்துடன் என்னை நோக்கித் திரும்பி வாயிலைக் கை காட்டினான். நான் எச்சிலை விழுங்கிக் கொண்டு பழுக்கப் பழுக்க விழித்தேன். அங்கிருந்த மற்றொரு வீரன் என் அருகே வந்து சிறிது நேரம் வெளியே காத்திருக்கச் சொன்னான். நான் சற்றும் சலனமில்லாமல் மெல்ல வெளிநடந்து முகப்பறையில் சென்றமர்ந்தேன். 

என் சரீரம் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. மெல்லிய துடிப்புடன் கிடந்த தொடையை அழுத்திப் பிடித்தேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து மெதுவாக வெளிவிட்டேன். எழுந்து சென்று அருகிலிருந்த பானையிலிருந்த தண்ணீரை மண்டினேன். உப்பரிகையிலிருந்து குளிர்ந்த காற்று என் உடலில் அறைந்தபோது அந்தக் குளிர்ச்சியை நான் அவ்வளவு விரும்பினேன். 

தவறு. இங்கே வந்ததே தவறு. ஆனால் வந்துதான் ஆக வேண்டும். என் இரண்டு கண்களால் பார்த்தேன். நான் பார்த்ததை என்னாலேயே நம்ப முடியவில்லை. ஒருபோதும் செங்கோல் தாளாத கரங்களையுடைய ராணி மங்கம்மாளின் தவப்புதல்வனும் மதுரையை ஆண்ட விஜயரங்கநாத சொக்கநாத நாயக்கரின் மனைவியும் என்னை வளர்த்தவருமான மதுரை நாயக்கர் ஆட்சியின் கடைசி ராணி மீனாட்சியே நான் சொல்வதை நம்பமாட்டார். அப்படி நினைப்பதே தவறு. அவர் நம்புவார் என்று நினைப்பதே தவறெனில் இந்த உலகின் தலைமீது தன் வலது காலை வைத்திருக்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஓங்கு தாங்கான உடல் கொண்ட எப்போதும் துவக்குடனும் தேர்ந்த வேட்டையாளனின் கண்களுடனும் இந்துஸ்தானைச் சுரண்டுவதற்கு நெஞ்சில் ராட்சதத் துரட்டியுடன் வந்திருக்கும் மதுரையின் முதல் கலெக்டரான ஜார்ஜ் பிரக்டர் துரை நம்புவார் என்று நான் நினைப்பது பாவம். அதற்கு மன்னிப்பே இல்லை. 

நான் அந்தக் கோட்டை கட்டிடத்தின் மேற்பகுதியில் அமைந்திருந்த உப்பரிகையில் அமர்ந்திருந்தேன். கீழே நாக்கில்லாத மனிதர்கள் உயிர்போகும் வலியில் துடிப்பது போன்ற முரட்டு உறுமல் சத்தம் கேட்டு அதிர்ந்த போது நாக்கைத் துருத்திச் சைகை காட்டிய துரையின் முகம் என் நினைவில் வந்தது. நான் என் நாக்கால் மேலண்ணத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். நாக்கு. நாக்குதான் எங்களை இந்தச் சமூகத்தின் உச்சாணிக்கொம்பில் வந்து நிறுத்தி இருக்கிறது. 

இங்கே திருமலை நாயக்கர் உருவாக்கிய ஆயிரம் சமஸ்கிருதப் பள்ளிகளில் முதன்மையானவர் என் தாத்தா. இராணி மங்கம்மாளின் ராஜகுருவாய் இருந்தார். ஒரு வகையில் பிரதானி. சொல்லப்போனால் முப்புறமும் சூழ்ந்து எழுந்து தீ போல வளைக்கப்பட்டிருந்த எதிர்ப்புகளை ஒடுக்கி மேலெழுந்து ராணி தன் ஆட்சியை நிறுவுவதற்கும் தக்கவைப்பதற்கும் என் தாத்தாவின் ராஜ வியூகம் முக்கியமான காரணமாக இருந்தது. ராணிக்கு என் தாத்தா எப்படியோ அப்படி மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்கு என் தந்தை. நான் அந்த அரண்மனையில்தான் வளர்ந்தேன். 

அந்நியப் படையெடுப்பிலிருந்து மாபெரும் இந்துக் கலாச்சாரத்தையும் அதன் கோவில்களையும் நினைவுச் சின்னங்களையும் காக்கவும் அதன் மெய்யான கீர்த்தியை மீட்டெடுக்கவும் துறவி வித்யாரண்யர் கையிலிருந்து போடப்பட்ட விதையால் உருவான விஜயநகரப் பேரரசு. மன்னர் விசுவநாத நாயக்கர், மன்னர் திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் போன்ற மாபெரும் மன்னர்களை உள்ளடக்கிய பேரரசு… ராணி மங்கம்மாளின் தவப்புதல்வனான விஜயரங்கநாத சொக்கநாதருக்கு வாரிசில்லாமல் போகும். எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்து வேறு வழியில்லாமல் அவரின் மனைவி ராணி மீனாட்சி பதவி ஏற்பார். உற்றவனே நம்பிக்கையின் குரல்வளையை அறுப்பான். மேலும் மேலும் எழுந்த நவாபுகளின் கடுமையான சூழ்ச்சி கலந்த எதிர்ப்புகள் அவரை அம்மையனுர் போரில் சுற்றி வளைக்கச் செய்யும். ராணி மீனாட்சி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்வார். நாயக்கர் ஆட்சியை நாவாபுகள் குழித்து மூடுவார்கள்.

அவர்களின் முதுகின் மீது வெள்ளையர்கள் தாங்கள் வலது சப்பாத்துக் காலைத் தூக்கி வைத்து இடது சப்பாத்துக் காலை இந்துஸ்தானத்தின் தலைமீது வைப்பார்கள். அதற்கு நாங்கள் பூத்தூவி அழகு பார்ப்போம் என்பது நான் கற்பனையிலும் நினைத்துப் பார்க்காதது. 

மதுரையில் நாயக்கர் ஆட்சி வீழ்ந்தபோது தந்தை என் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கண்டமனுர் ஜமீனில் தஞ்சமடைந்தார். அங்கே அவர் கணக்காராகத் தன்னைப் பணி அமர்த்திக் கொண்டார். உண்மையில் ஜமீனை விட அதிக நிலப் புலங்களை உடையவர் என் தந்தை. ஆனாலும் அவர் ஆங்கில ஆட்சிக்குப் பின்னால் வரப்போகும் பல விடயங்களை முன்னரே கணக்கிட்டிருந்தார். அதனால் தன்னை ஒரு பாதுகாப்பான இடத்தில் பொருத்திக் கொள்ள நினைத்தார். அதனால் இந்த ஜமீனுக்குக் கணக்கரானார். அவர் மறைவுக்குப் பின் நான் அந்தப் பதவியை ஏற்றேன். 

நாயக்கர் ஆட்சியின் தலைமகனான விஸ்வநாத நாயக்கர் உருவாக்கிய வரிவசூலிப்பு முறையான பாளையக்காரர் முறையே ஒரு பிரம்மாண்டமான சுரண்டும் அமைப்பு. சொல்லப்போனால் பிரிட்டிஷாருக்கு அந்த முறையைப் பின்பற்றி வரி வசூலித்தாலே போதுமென்றிருந்தது. ஏதோ ஒரு வெள்ளைக்காரன் அதை மிகத்துல்லியமாகக் கணித்திருக்கிறான். இந்த சுரண்டும் அமைப்பை மிகச்சரியாக உறைய வைத்திருந்தன. அதன் மீதேறி நின்று மேலும் மேலும் சுரண்ட நினைத்தான் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். 

*

அன்று காலையில் எனக்கு வந்திருந்த ஓலையும் அதிலிருந்த எனக்குப் பணிக்கப்பட்டிருந்த ஆணையும் என்னை வியப்பிலாழ்த்தியது. புதிதாய்ப் பணியமர்த்தப்பட்ட மதுரையின் முதல் கலெக்டரான பிரிட்டிஷ் துரை ஜார்ஜ் பிரக்டர் வரி வசூலிப்பைத் தீவிரமாக்கும் பொருட்டு ஒரு குழுவை உருவாக்கியிருந்தார். அதன் தலைவராக என்னை நியமித்திருந்தார்.

சரியாக எப்படி என்னைத் தேர்வு செய்தார் என்பதை இப்போது நினைத்தாலும் மயிர்க்கூச்செறிகிறது. அவருக்கு என்னைப் பற்றி யார் சொல்லியிருப்பார். எப்படி என்னைத் தேடி வந்து பிடித்தார். 

என் உள்ளம் வியப்பிற்கும் அச்சத்திற்கும் குழப்பத்திற்கும் சென்று சென்று மீளுவதைத் துண்டித்து நின்று நிதானமாக யோசித்தேன். 

பொறுப்பேற்றதும் மதுரை பற்றி அறிந்துகொள்ள நினைத்திருப்பார். இங்கே இறுதியாக ஆட்சியிலிருந்தோரைப் பற்றி ஆராய்ந்திருப்பார். போரில் கொல்லப்பட்டவர்கள் போக மீதி இருப்போரை நோக்கி விளக்கு திருப்பப்பட்டிருக்கும். அந்த வெளிச்சத்தில் இயல்பாகவே என் தாத்தா தெரிந்திருப்பார். தாத்தாவின் பின்புறமாக நின்றிருந்த என் தந்தையைத் தேடி என்னைக் கண்டடைந்திருப்பார். பாராளும் பிரிட்டிஷ் ராஜாங்கம் ஒருவரை கலெக்டராக நியமிக்கிறது என்றால் அவர் சாதாரணமான ஆளாக இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டேன். 

அப்போதெல்லாம் பிரிட்டிஷார் சொல்வதற்கு மேல் ஒரு சொல் கூட எவராலும் சொல்ல முடியாது என்று கருத்து நிலவியது. பீரங்கியின் முன் நிற்க யாருக்குத் தைரியம் வரும். அவர் எனக்கு அனுப்பியிருந்த பிரிட்டிஷ் ராஜ முத்திரையிட்ட ஓலையைப் படித்தேன். அந்த முத்திரை. அதைத் தடவித் தடவிப் பார்த்தேன். என் தந்தை இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். ஓலையில் எனக்கான பணி குறிப்பிடப்பட்டிருந்தது. 

தலைமுறை தலைமுறையாக நாங்கள் செய்து வரும் பணி. இப்பணியைச் செய்ய என் தாத்தாவினுடைய குறிப்புகளையும் தந்தையின் குறிப்புகளையும் ஒழுங்காகத் தொகுத்து அறிந்து கொண்டாலே போதும். அறிவுரைகள், அது நான் பிறந்த நாள் முதல் எனக்குச் சொல்லப்பட்டு வருவது. ராஜ தந்திரம், என் ரத்தத்திலேயே ஊறியது. முன்னர் நாயக்கர்களுக்குச் செய்தோம். இப்போது பிரிட்டிஷாருக்கு. அதற்கான சம்பளத் தொகை அதை வாயில் சொல்ல முடியாது. ஓலையைக் கையோடு எடுத்துக் கொண்டு மதுரைக்குப் புறப்பட்டேன். 

நான் அனுப்பியிருந்த ஓலையைப் படித்தவர்கள் மதுரைக்கு பிரிட்டிஷாருக்குச் செலுத்த வேண்டிய தங்கள் வரியை செலுத்தி விட்டார்கள். எவரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஓலையில் பிரிட்டிஷ் ராஜ முத்திரை. பிரிட்டிஷ் என்றால் துப்பாக்கி, பீரங்கி. அதற்கு அஞ்சாதவர்கள் மிகமிகக் குறைவு. அஞ்சாமல் எதிர்த்தவர்கள் ஒருவர் கூடப் பிழைத்ததில்லை. கிட்டத்தட்ட தென் தமிழகத்திலிருந்த அனைத்து பாளையங்களிலிருந்தும் வரியை நெல்லாகவும் தானியங்களாகவும் துணியாகவும் செலுத்தி விட்டார்கள். ஆனால் உத்தமப் பாளையத்திலிருந்து மட்டும் இன்னும் வரி வரவில்லை. துரை என்னையே நேரில் சென்று பார்க்கும்படி அனுப்பினார். அதுவரை நான் துரையைப் பார்த்ததே இல்லை. ஒட்டுமொத்த வரியோடு சென்று அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். அவரும் அதையே நினைத்திருக்க வேண்டும். ராஜாவுக்குக் கிறுக்குவதையெல்லாம் கணக்காக்கும் ஒரு கணக்கன்.

ஆனால் இதெல்லாம் நான் அவருக்கு மனமாரச் செய்வதல்ல. எனக்குள்ளே ஏதோ ஒரு ஓரத்தில் கொடூரமான வஞ்சம் இந்த வெள்ளையர்களின் மீது உண்டு. என் பதின்ம வயதில் மதுரை அரண்மனையில் ஒரு பிரிட்டிஷ் உயரதிகாரி உணவருந்துவதைப் பார்த்தேன். ஒரு பெரிய கோப்பையில் ஒரு மாட்டின் காலை வேகவைத்து எடுத்து வந்து வைத்தார்கள். அதை அவன் பூப்போல பிட்டுத் தின்றான். அது கோ. தெய்வம். காமதேனு. அதன் உடலில் கோடான கோடி தேவர்களும் தெய்வங்களும் வாழ்கிறார்கள். அவன் தொடையைத் தின்கிறான். நான் என் வாயைப் பொத்திக் கொண்டு அழுதேன். என் தெய்வத்தைத் தின்பவனை நான் எப்படி மனமார நேசிக்க முடியும்.

நான் மதுரையிலிருந்து மூங்கிலை வளைத்துச் செய்யப்பட்ட மேற்கூரை, வைக்கோல் போருக்கு மேல் ராமர் பச்சையில் வெல்வட் துணி போர்த்தப்பட்ட மாட்டுவண்டியில் இரண்டு நாட்களாகப் பயணம் செய்து உத்தமப் பாளையம் வந்தடைந்தேன். செம்மண் சாலையில் செல்லும் வழியெங்கும் தென்னை  மாமரங்கள். அதைச் சாலை என்றும் சொல்ல முடியாது. சக்கரங்கள் அச்சாணி வரை மண்ணில் புதைந்து போகும். செந்நீரில் செல்வது போல. சில இடங்களில் சரளைக்கல் சாலை. சாலை என்று சொல்ல முடியாது. நடந்து நடந்து நடப்பதற்கு ஏதுவாக மாறிவிட்டிருந்தது. அங்கேயெல்லாம் வண்டி வேகமாகச் சென்றது. தூரத்தில் பச்சையான மலைக்குன்றுகள். மதுரைக் காடென்றால் அதற்குக் கீழே உள்ளதெல்லாம் மலைகள். குளிர்ந்த மலைகளுக்கு நடுவே செல்வதே ஒரு இனிய பயணமாக இருந்தது. நான் உத்தம பாளையம் சென்று இறங்கி ஏற்கனவே எனக்காகச் சொல்லி வைக்கப்பட்ட இடத்தில் சென்று தங்கினேன்.

காலையிலே எழுந்து அன்றைய நாளில் நிகழப் போகும் சம்பவங்களை முன்னரே நிகழ்த்திப் பார்த்துக் கொண்டேன். நான் செய்ய வேண்டியதையும் பேச வேண்டியதையும் எனக்குள்ளே தொகுத்துக் கொண்டேன். உத்தமபாளையத்து ஜமீனைச் சந்தித்துப் பேச வேண்டும். அவர்கள் ஏன் இன்னும் வரி செலுத்தாமல் இருக்கிறார்கள். ஒருவேளை என் கடிதம் இந்த மலைகளுக்கு மேல் ஏறி வரவில்லையோ.? ஜமீனே வண்டி அனுப்பி இருந்தார். குதிரை வண்டி. சாரதியை எங்கோ பார்த்தது போன்ற நினைவு. நான் புன்னகை செய்தேன். வண்டி சிறிது நேரத்தில் கோட்டை வாசல் முற்றத்தில் சென்று நின்றது.

அப்போதுதான் அவர்களை முதன் முதலில் கோட்டை வாயிலில் வைத்துப் பார்த்தேன். ஏழு பேராக இருந்தார்கள். முரட்டாம்பளைகள். நரம்போடிய உறுதியான கருத்த உடலில் ஆங்காங்கே சேறு ஒட்டியிருந்தது. உழுது கொண்டிருந்தவர்கள் பாதியில் எழுந்து வந்ததைப் போல. இல்லை இல்லை. ஒரு துண்டு நிலமே எழுந்து வந்ததைப் போல. அவர்களைப் பார்த்ததும் புரிந்து விட்டது. அவர்கள் மீதிருந்து வந்த ஒரு மண் வீச்சத்தால் மனதில் ஒரு விலக்கம் ஏற்பட்டது. எப்படியும் இவர்கள் உள்ளே வரமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

*

நான் அந்தக் கோட்டையில் தங்க வைக்கப்பட்டேன். அது பெரிய கோட்டை. அதன் சுற்றுச்சுவர் அதைவிடப் பெரியது, உயரமானது. மேல்தளத்தில் இரண்டு பகுதி. இரண்டு பகுதியிலும் ஒரே மாதிரியான ஆறு அறைகள். இன்னும் ஒரு மேல்தளம். கீழ்தளம் அதற்குக் கீழே மிகப்பெரிய கிட்டங்கி. வெளியே இருந்து பார்த்தால் கோட்டையின் தலைப்பகுதியில் அமைந்திருக்கும் உப்பரிகை மட்டுமே தெரியும். என் அறையிலிருந்து வெளிவந்தால் நேராக இந்த உப்பரிகைக்கு வந்துவிடலாம்.

ஒரு வழியாக எல்லாரும் வரி செலுத்திவிட்டார்கள். மூன்று ஊரைத் தவிர. விடிந்தால் அவர்களிடமும் வசூலித்துவிட வேண்டும். அதை ஏற்றிக்கொண்டு சென்று மதுரையில் கலெக்டர் ஜார்ஜ் பிரக்டருக்கு முன் கொட்ட வேண்டும். அவர் எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட என் வாயால் சொல்ல முடியாத அளவுக்குக் பகோடாக்களைத் தருவார். பொதுவாக பிரிட்டிஷார் எவருக்கும் எந்த வேலைக்கும் இவ்வளவு பகோடாக்களைத் தருவதில்லை. அவர் எனக்குத் தருவது இன்றைய வேலைக்கு மட்டுமல்ல. அவர் மீது நான் என்றென்றும் வைத்திருக்கப் போகும் விசுவாசத்திற்கு. விசுவாசம். அதைவிட பலமான ஒன்று இல்லவே இல்லை. அதை எவ்வளவு தங்கத்திற்கும் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் எவ்வளவு தங்கம் கொடுத்தாலும் கிடைக்காது.

அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தேன். எண்ணங்கள் சுழன்று சுழன்று எங்கெங்கோ சென்றன. எல்லாமே தங்கத்தாலான எண்ணங்கள்.

என் அறைக்கதவு தட்டப்பட்டது. நான் எழ முயன்றேன். இயலவில்லை. என்னைச் சுற்றி மிகமிக வசீகரமான வெள்ளை இளங்குமரிகள். அவர்களைத் தொட வேண்டியதே இல்லை. பார்த்துக் கொண்டே இருந்தாலும் போதும். ஒரு நொடியில் எல்லோரும் விலகிச் சென்றார்கள். என் அழகிய மனைவி அவளைக் கண்டேன். அவள் பேசும் சுந்தரத் தெலுங்கு எவ்வளவு அழகு. தமிழும் தெலுங்கும் கலந்த மொழியில் மழைப்பேச்சுப் பேசும் என் இனிய மகள். அவள் கன்னத்தில் விழும் குழி. அதில் ஒரு பொட்டு தங்கத்தை வைத்தேன். சட்டென்று விழித்துத் தலையை உதறி எழுந்துகொண்டு உப்பரிகைக்கு வந்து நின்றேன்.

கரிய நிறத்தில் விரிக்கப்பட்ட போர்வைக்குள்ளிருந்து நிலவு மெல்ல எழுந்து வந்தது. தூரத்தில் ஒரு வால் நட்சத்திரம் விர்ரென சென்று மறைந்தது. அதுவொரு கெட்ட சகுனம் என்று வான சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இங்கே மிகப்பெரிய பஞ்சம் வரலாம். 

எல்லா ஆட்சியையும் போலவே நாயக்கர் ஆட்சியிலும் கொடூரமான வரி வசூலிப்பு நடந்தது. இன்னும் சொல்லப்போனால் மிகமிகச் சீரான கறாரான வரி வசூலிப்பு. அவர்கள் அந்த வரியை இங்கு ஊர்களையும் சாலைகளையும் ஏரிகளையும் உருவாக்கும் திட்டத்திற்குச் செலவழித்தனர். எதை வளரச் செய்தார்களோ இல்லையோ வைணவத்தையும் சைவத்தையும் வளர்த்தனர். சமஸ்கிருதம் செழித்து வளர்ந்தது. கோயில்கள், திருவிழாக்கள், புதுப்புது சமய நிகழ்வுகள்.. போர்கள் மிகமிகக் குறைவு.

பஞ்சம் உருவானதே இல்லை. 

ஆனால் ஆங்கிலேயே ஆட்சியில் நடப்பது அச்சம் கொள்ளச் செய்கிறது. கொடூரமான வரிப்பேய்களாக இருக்கிறார்கள். இங்கே தோண்டியதை இங்கிலாந்தில் கொட்டுகிறார்கள். அதில் எவ்வளவு தங்கம்… எதிர்த்த எவரும் மண்ணுக்குள்ளே. இங்கே உருவாகப்போகும் பஞ்சம் மண்ணுக்கு அடியில் மிகப்பெரிய மண்டையோட்டு மலைகளை கட்டி எழுப்பக்கூடுமோ..? இங்கே எவர் நடந்தாலும் மண்டையோடுகளின் மீது நடப்பது போல. மண்ணைக் கிளறும் பன்றிக்கு கிழங்குக்குப் பதிலாக மண்டையோடு கிடைப்பது போல..

ஆனால் எந்தப் பஞ்சமும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் உப்பரிகையில் நின்றிருக்கிறோம். கீழ் தரையில் இருந்தவர்கள் மீதுதான் பிரிட்டிஷின் சாரட் ஏறிச் செல்கிறது. சிக்கியவர்கள் நசுங்கிச் சாகிறார்கள். அவர்களுக்கு நம் மேல் ஏறியது என்ன என்பதை அறிந்து கொள்ள இன்னும் இருநூறு வருடங்களாகும். ஆனால் இங்கே இருப்பவர்களில் பெரும்பாலானோர் மண்ணுக்கு அடியில் இருப்பவர்கள். 

அவர்களைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

*

ஆனால் அவர்களைச் சிறிது நேரத்திலே கோட்டைக்குள்ளே பார்த்தேன். அவர்களுக்கு என்ன வேண்டும் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. நான் அங்கிருந்த உப்பரிகைக்குச் சென்று நின்று என்னை மறைத்துக் கொண்டேன். கீழ்தளத்தில் ஜமீனின் தம்பி நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடமிருந்து எட்டு அடி தள்ளிக் கீழே சுடுமணலில் வெறுங்காலில் நின்றிருந்தார்கள். 

ஏழு பேர் இருந்த கூட்டத்திலிருந்து ஒரு பெரியவர் இரண்டு அடி முன்னே வந்து “வணக்கம் ஐயா” என்று சொன்னார். 

ஜமீன் தம்பி இவர்களைச் சட்டையே செய்யாமல் அருகில் நின்றிருந்த தன் பணியாளைப் பார்த்து என்ன என்பது போல தலையை ஆட்டினார். 

“நான் இவர்களை விசாரித்துவிட்டேன்” என்று பணியாள் சொன்னான். “என்ன” என்பது போல் மீண்டும் தலையாட்டினார் ஜமீன் தம்பி.

“இவர்கள் தம்மக்காரர்கள் ஐயா” என்று பணியாள் சொன்னான்.

“தம்மக்காரர்களா… அப்படி என்றால்…”

“இங்கே சற்றுத் தொலைவில் ஊருக்கு வெளியே ஒரு மலைக்குன்று இருக்கிறது. அதன் பின்புறம் சிறிய கோவில். சிலையெல்லாம் இல்லை. உண்மையில் அங்கே கோவிலே இல்லை. அங்கே இருப்பது தொட்டி. கற்பாறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய தொட்டி. அதைத் தம்மத்தொட்டி என்று சொல்கிறார்கள்”

“எதற்கு..”

“மதுரையிலிருந்து செல்லும் மலைப்பாதையொன்று மேற்குத்தொடர்ச்சி மலை வழியே சென்று நீலக்கல், கரிமலை, காளகெட்டி வரை நீண்டு மலையாள நாட்டைச் சென்று சேர்கிறது. துறவிகளின் பாதை. பெருவழிப்பாதை”

“முன்னொரு காலத்தில் இந்த வழியே சென்ற துறவிகளின் குழுவொன்று பசியால் தன் பயணத்தை நிறுத்தி அந்தச் சிறிய குன்றில் அமர்ந்துகொண்டு, குழுவில் இருந்த வயதில் சிறிய இரு துறவிகளை ஊருக்குள் உணவு வாங்கிவர அனுப்பியிருக்கிறது. உள்ளே வந்த இருவர்களுக்கு அதிர்ச்சி. இன்னும் உயிர்பிரியாத சடலங்களை மிருகங்களும் பறவைகளும் இழுத்து உண்ணுவதைக் கண்ட துறவிகள் அலறி அடித்து ஓடி இருக்கிறார்கள். அங்கிருந்த அத்தனை துறவிகளும்  ஊருக்குள் ஓடி வந்தார்கள். கூட்டில் உயிர் ஒட்டியிருப்பவர்களைத் தேற்றினார்கள். கொடூரமான பஞ்சம். எங்கெங்கோ ஓலை எழுதி அனுப்பி உணவுப்பொருட்களை வரவழைத்தார்கள். மீதமிருந்த உணவுப்பொருட்களை ஒரு பெரிய கற்தொட்டியை உருவாக்கி அங்கே கொட்டி வைத்தார்கள். அங்கே யாரும் சமைக்காத உணவுப் பொருட்களைக் காட்டலாம். யாரும் எடுத்துக் கொள்ளலாம். வருவோர் போவோர்க்கெல்லாம் வழங்கும் தொட்டி. தம்மத் தொட்டி” என்று சொல்லி முடித்தான் பணியாள். 

“ஓ, அதனால் என்ன… இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்றார் ஜமீன்.

“கொடுக்க முடியாது என்று சொல்கிறோம். வரி கொடுக்க முடியாது” என்று உரத்த குரலில் இரண்டடி முன்னே வந்து சொன்னார் அந்தப் பெரியவர். 

அதன் பிறகு அங்கு நடந்த சம்பவத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

*

பரந்து விரிந்த பசுமையான நிலம். எல்லாமே பச்சை. பச்சையென விரிந்த பச்சை. மா பலா வாழை கூடவே வரும் தென்னை. ஒருநாள் இவ்வளவு பச்சை நிறைந்த இடத்திற்கு நானும் துரையும் வருவோம். ஒயிலான வளைவுடைய கோப்பையில் அவனுக்குப் பிடித்த இங்கிலாந்து மதுவை ஊற்றி வைப்பேன். அவன் கடித்துக் கொள்ள மாட்டுத் தொடை கேட்பான். இப்போது அதைத் தருவதில் எனக்கு எந்த சங்கோஜமும் இல்லை. துரை இந்தப் பச்சை முழுவதையும் பத்திரம் எழுதித் தருவான். அதை நான் கணக்குப் போட்டு வைத்திருந்த இருநூறு வருடங்கள் மீது இறுகப் போர்த்துவேன். 

இன்னும் முன்னூறு வருடங்கள் ஆனாலும் எங்களை இந்த உப்பரிகையிலிருந்து ஒருவரும் கீழே இறக்க முடியாது. இந்தக் கோட்டை எங்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாதது போலத் தெரியும். ஆனால் எங்களுடையதுதான். இங்கே எந்த ஆட்சி வந்தாலும் இந்த உப்பரிகை எங்களுக்குத்தான்.

கும்மென்ற இருட்டு. வானில் சிதறடிக்கப்பட்ட நட்சத்திரங்கள். இரவுப்பூச்சிகளின் சப்தம். தூரத்தில் சூறை பொங்கிச் சுழன்றாடலாம் என்று நினைத்த போது அது கிளப்பும் அழுத்தமான மண் வாசனை என்னை விலக்கம் கொள்ளச் செய்தது. அப்போதுதான் அதைப் பார்த்தேன். கருநீல வானம் பின்னணியில் விரிந்து கிடக்கத் தூரத்தில் ஒரு நாய். அதின் மீது அமர்ந்து வரும் சிறுவன். ஒரு கணம்தான். நான் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பார்த்தேன். காட்சி மாறி இருந்தது. அங்கே கும்பலாகச் சிலர் எதையோ சுமந்து வந்து கொண்டு கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏதோ ஒரு நாட்டுப்பாடலைப் பாடிக்கொண்டே வந்தார்கள். பாட்டுச் சத்தத்தைக் காற்று இங்கே வரை தூக்கி வந்தது. ஒரு அறுபது எழுபது பேர் இருக்கலாம். அவர்கள் சுமந்து வருவது என்ன என்பதை உற்றுப் பார்த்தேன். ஒரு தெளிவும் இல்லை. அவர்கள் மிக அருகில் வரவர அது மணி என்று தெரிந்தது. மிகப்பெரிய கோவில் மணி. மூன்று நான்கு ஆட்கள் சுற்றி வளைத்துப் பிடித்தால் கொள்ளும் அளவுக்கு அகலம்.

அப்படி ஒரு ஏழு எட்டு மணியைக் கொண்டு வந்து கோட்டைச் சுவருக்குச் சற்று தூரத்தில் நிறுத்தி வைத்தார்கள். ஒவ்வொன்றும் ஒரு ஆள் மட்டத்திற்குப் பெரியது. அவர்கள் என்ன செய்கிறார்கள். ஏதும் வினோதச் சடங்கா.?

ஒரு பெரிய மரத்தைக் கட்டையெனச் செதுக்கித் தூக்கி வந்திருந்தார்கள். மணியின் முனையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென மரத்தை மணியுடன் கோர்த்து அதைத் தங்கள் வலிமையான தோளால் தாங்கிக் கோட்டைச் சுவரை நோக்கி ஓடிவந்து அதை ஓங்கி இடிக்கத் துவங்கினார்கள். எல்லாம் சில கணங்களில் நடந்தன. அப்போதுதான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே விளங்கியது. நான் உப்பரிகைக்கு மேலிருந்த பகுதிக்கு ஓடிச் சென்று அபாய மணியை அடித்தேன். சங்கூதும் காவலனைக் காலால் எட்டி உதைத்து எழுப்பினேன். அவன் ஊதிய சங்கொலி எல்லா வீரர்களையும் எழுப்பி விட்டது. மீண்டும் பதைபதைப்புடன் உப்பரிகைக்கு ஓடிச் சென்றேன். 

அதற்குள் அங்கிருந்த அத்தனை மணிகளும் மரத்தின் முனையில் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுக் கோட்டைச் சுவரை வந்து தாக்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு இடிக்கும் நான் நின்றிருந்த மாளிகையே நடுநடுங்கியது. இது போரா.? இல்லை கலவரமா.? நான்காவது இடியிலே ஒரு கோட்டைச்சுவரின் மூலையிலிருந்த பெரிய கருங்கல் ஒன்றை உடைத்துவிட்டார்கள். தட்டாலென்றொரு ஒரு வெடிச் சத்தம். 

தோட்டா உள்ளே நுழைய முயன்ற ஒரு முரட்டுப் பெரியவரின் தோள்பட்டை எலும்பை உடைத்துக் கொண்டு சென்றது. அவர்கள் கடைசியாக இடித்த பலம்பொருந்திய இடியால் கோட்டைச் சுவர் ஒருபுறமாகச் சரிந்து அவர்கள் மீதே விழுந்தது. மீதமிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினவர்களை மீட்டுக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் மீதும் துப்பாக்கி வெடிகள் விழுந்தன.

அப்போதுதான் நான் நின்றிருந்த உப்பரிகைக்குக் கீழே இரண்டு உள்ளூர் பிரிட்டிஷ் வீரர்கள் இருப்பதைப் பார்த்தேன். அவர்களை துரை அனுப்பி இருக்கலாம். என் பின்னாலேயே எனக்குத் தெரியாமலே. உலகின் தலை மீது தன் வலது காலை வைத்திருக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின். நான் இந்த வரியை அடிக்கடி நினைத்துக் கொண்டேன். அப்போதே எனக்குத் தெரிந்து விட்டது. பயப்படத் தேவை இல்லை. இது போர் அல்ல. கலகமும் அல்ல. மந்தைச் சண்டை. நான்கு வாழைப்பழம் தின்று முடியும் நேரத்தில் இந்தக் கும்பலைக் கொன்று விடுவார்கள். ஆனால் இந்த மண்புழுக்களுக்கு எப்படி இவ்வளவு தைரியம்.

ஆண்டாண்டு காலங்களாக இவர்களுக்கு இவர்கள் மண்புழுக்கள்தான் என்று அடியாழத்தில் உணர வைத்திருக்கிறோம். இப்போது கூட இதிலிருந்து தப்பித்துச் செல்பவர்கள் அவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று மண்ணுக்குள் படுத்துக் கொள்வார்கள். அவர்கள் குடும்பத்தை மண்ணை விட்டு வெளியே வர அனுமதிக்க மாட்டார்கள். மண்ணுக்கு அடியில்தான் நம் வாழ்க்கை. அதுதான் நமக்கான இடம். வெளியே செல்வது தவறு. கடவுள் நிந்தனை என்று அவர்கள் சந்ததிகளிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்தத் துப்பாக்கி வெடியும் குருதியும் சதையும் எலும்பும் அவர்களுக்கு ஆழப்பதிந்து விடும். கத்தி இல்லாத துவக்கு இல்லாத ரத்த வன்முறை இல்லாத ஒரு ஒழுங்கு இவ்வுலகில் இல்லை.

அப்படியும் மண்ணை விட்டு வெளியே வருபவர்களை நாயென அனுமதித்திருக்கிறோம். நான் இவர்களை நாய் என்கிறேன். உண்மையில் உலகம் ஒரு மிருகக்காட்சி சாலை என்றால் இந்துஸ்தானம் ஒரு நாய். அது நமக்குத் தெரிகிறதோ இல்லையோ பிரிட்டிஷாருக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் தலையை வருடிக் கொண்டே இருப்பார்கள். நாம் குனிந்து கொடுத்துக் கொண்டே இருப்போம். நாம் குனிகிறோம் என்ற நினைப்பே இல்லாமல், குனிந்து குனிந்தே முதுகு நமக்குக் கொக்கி போல ஆகிவிட்டது. இன்னும் நானூறு ஆண்டுகளுக்கு நிமித்த முடியாத கொக்கி.

என் முதுகே சிறியதாகக் கூன் போட்டுவிட்டதாக உணர்ந்தேன். இந்த இரவில் குருதியும் நிணமும் சிதறிக் கிடக்கும் இந்தக் காட்சியை நான் ஏன் பார்த்து நிற்க வேண்டும். ராட்சதத் துரட்டி வந்து நிற்கிறது. நான் அள்ளிப்போடப் பணிக்கப்பட்டிருக்கிறேன். அதைச் செய்யவில்லை என்றால் என்னையும் சேர்த்து அள்ளிச் சென்றுவிடும். உலகையே சுரண்ட வந்த துரட்டிக்கு நான் ஒரு பொருட்டே அல்ல.

*

அப்போது தான் தானியக் கிட்டங்கியிலிருந்து ஒரு அலறல் சத்தம் கேட்டது. அங்கே மற்ற வீரர்கள் எவருமில்லை. எல்லோரும் கோட்டைக்கு வெளியே இருந்தார்கள். நான் மூச்சிரைக்கக் கீழே ஓடிச் சென்றேன். கிட்டங்கிக்குச் செல்லும் வழியிலே ஒரு வீரன் வலிப்பு வந்து துடித்துக் கொண்டிருந்தான். நான் அவனைக் கடந்து சென்று உள்ளே பார்த்தேன். கிட்டங்கியே காலியாகிக் கிடந்தது. அங்கே ஒரு சிறுவன் தன்னந்தனியாகக் கால் நீட்டி அமர்ந்து அத்தனை நெல்லையும் தின்று முடித்துவிட்டிருந்தான். நான் உள்ளே சென்ற போது கடைசிக் கையை எடுத்து வாயினில் போட்டான். என் உள்ளம் அதிர்ந்து சரீரம் அதிர்ந்து வெலவெலத்துப் போனது. பேச்சே வரவில்லை. நின்ற இடத்திலிருந்தே நிலம் நோக்கிச் சரிந்தேன். 

* 

உள்ளே சென்று ஜார்ஜ் பிரக்டர் துரையிடம் அனைத்தையும் சொல்லி முடித்தேன். சொல்லும் போதே உடலும் குரலும் நடுங்குவதையும் கவனித்துக் கொண்டே நான் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நான் பொய் சொல்லவில்லை என்று அவர் நம்பியிருக்க வேண்டும்.

“அந்தச் சிறுவனை இழுத்து வந்திருக்கிறாயா..? “மிக நிதானமான குரலில் கேட்டார்.

வாயைத் திறக்காமலே ஆமாம் என்று என் உடல் முழுவதையும் அசைத்துக் காட்டினேன். துரை விறுவிறுவெனத் தண்ணீரில் செல்லும் வாத்தைப் போல நடந்து முற்றத்திற்கு வந்தார். நான் அவர் பின்னாலேயே ஓடியும் நடந்தும் சென்றேன்.

மூங்கிலால் வேயப்பட்ட குதிரை வண்டியில் அவனைப் பனை நாரால் கட்டித் தூக்கி வந்திருந்தேன். வண்டிக்குள் இருந்தவனைத் துணியால் மூடியிருந்தேன். துரை தன் துவக்கால் துணியைத் தூக்கிப் பார்த்தான். உள்ளேயிருந்து விசை பொருந்திய கல்லென ஒரு நாய் மழுச்செனப் பாய்ந்து வெளியே நின்று ஒரு சுற்று சுற்றி நின்று எல்லோரையும் பார்த்தது. 

துரை அஞ்சி நடுங்கிப் பதறியதில் அவன் கால்கள் அருகே இருந்த கல்லில் மோதி அவன் சப்பாத்துகளில் ஒன்று தானே கழன்றது. கோபத்தில் கத்திக் கொண்டு இன்னொரு சப்பாத்தையும் உதறி எறிந்தான்.

கரிய மயிர் நிறைந்த முறுக்கான உடல். உக்கிரம் நிறைந்த கண்கள். 

அது உகுக்கும் ஒளி. அதன் முதுகின் மீது அந்தச் சிறுவன். அவன் முகம். அது அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. துரை வெறிபிடித்த மிருகம் போல தன் துவக்கைத் தூக்கிக் குறிவைத்துச் சுட்டான். நாய் ஒதுங்கி ஓடியது. சற்றுத் தள்ளி மூட்டப்பட்டிருந்த தீக்குள் பாய்ந்து அப்பால் சென்று இருளுக்குள் மறைந்தது. துரை ஓங்கிக் குரலெடுத்துக் கத்தி “டாமிட்” என்றான்.

அங்கே நடந்து கொண்டிருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

துரை பயமும் பதற்றமும் கோபமும் கொண்டவனாய் நின்றான். அடுத்த சில கணங்களில் என்னை நோக்கித் தன் துவக்கை உயர்த்தினான். 

“நீ என்னை அசிங்கப்படுத்தி விட்டாய்”

“இல்லை துரை. சத்தியமாக இல்லை” 

துரை என் கண்களை ஆழமாகப் பார்த்தான். அவன் கைவிரல் துவக்கின் இழு விசைக்குள் செல்வதைப் பார்த்தேன். அந்தக் கணமே அருகே மூட்டப்பட்டிருந்த தீ நான்கு ஆள் மட்ட உயரத்திற்குச் சுழன்றெழுந்து பறந்தது. நாங்கள் இருவரும் அந்தத் தீ எழுவதைப் பார்த்தோம். என்னையும் அறியாமல் என்  இரண்டு கரங்களையும் கூப்பித் தலைக்கு மேலே தூக்கிவிட்டேன்.

தீ நடுவே சீறிக்கொண்டு வந்து எங்கள் முன்னால் நின்றது அந்த நாய். துரை அச்சம் நிறைந்த கண்களுடனும் நடுக்கம் நிறைந்த சரீரத்துடனும் நாயை நோக்கித் துப்பாக்கியை உயர்த்தினான். கர்ர் என்ற ஒலியுடன் நாய் தன் இடது காலை எடுத்து ஒரு அடி முன்னால் எடுத்து வைத்துத் தன் உடலை ஒரு உலுக்கு உலுக்கியதில் நெல்மணிகள் சிதறின. துரை தன் துவக்கைக் கீழே தாழ்த்தினான்.


Image : tallengestore

மனோஜ் பாலசுப்பிரமணியன்
மனோஜ் பாலசுப்பிரமணியன்

தேனியில் பிறந்தவர். சென்னையில் பொறியியல் பணி செய்கிறார்.  மதம், வரலாறு சார்ந்தவற்றில் ஆர்வமும் தேடலும் கொண்டவர். இவரின் முதல் சிறுகதை நிறமிலான் நீலம் இதழில் 2022 இல் வெளியாகியது. 

Share :

2 responses to “சாரமேயன்”

  1. A ANBARASAN
    July 17, 2025

    அற்புதமாக பின்னப்பட்டிருக்கிறது கதை. ஒரு வரலாற்றுச் சிறுகதை என்ற அளவுகோலை தானே வரையறுத்துக் கொண்டு அதன் எல்லையை தானே உடைத்தும் விடுகிறது கதையின் முடிவு. வாழ்த்துகள் மனோஜ் பாலசுப்பிரமணியன்.

    Reply
  2. deepika arumugam
    January 30, 2026

    சிறப்பான மொழிநடை, புதுமையான வருணனைகள், Kudos to your political correctness.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top