இரண்டு மாதங்களாக அவன் மரணத்தின் அரவணைப்பில் இருப்பதாகத் தெரிந்தான். இது நூதனமான நோய், குணப்படுத்த வழியில்லாதது என்ற மருத்துவர், என்ன செய்வதென்று தெரியவில்லை என முணுமுணுத்தார். நல்லகாலமாக, நோயாளி தானாகவே குணமடைந்து வரத் தொடங்கினான். அவன் தனது இயல்பான களிப்பையும், நிறைவான சாந்தத்தையும் இழந்திருக்கவில்லை. மிகவும் மெலிந்திருந்தான். அது ஒன்றுதான். ஆனால் பல வாரங்களாகக் குணமடைந்து அவன் எழுந்துகொண்டபோது மிகவும் தக்கையாக உணர்ந்தான்.
“பார்”, அவன் தன் மனைவியிடம் கூறினான் : “நான் நலமாகவே இருக்கிறேன், ஆனால் தெரியவில்லை, ஏதோ எனது உடலே இல்லாதமாதிரி தோன்றுகிறது. எனது தசைகளைக் கழற்றிவிட்டு ஆன்மாவை நிர்வாணமாக்கியது போல உள்ளது”
“வற்றிக்கொண்டிருக்கிறாய்” என்றாள் மனைவி
“இருக்கலாம்”
அவன் தொடர்ந்து குணமடைந்து வந்தான். இப்போது வீட்டைச் சுற்றி நடை பயிலவும், கோழிகளுக்கும் பன்றிகளுக்கும் தீவனம் போடவும் செய்தான். பரபரப்பும் கூச்சலும் கூடிய பறவைகளின் கூடத்திற்குப் பச்சை வர்ணம் பூசினான். இன்னும் விறகுகள் வெட்டி, அதனை ஒரு சக்கர வண்டியில் ஏற்றிக் கொட்டிலுக்கு இழுத்துச் செல்லவும் துணிந்தான்.
நாட்கள் செல்லச் செல்ல, பீட்டர் மேன்மேலும் எடை குறைந்தான். விநோதமான ஏதோ ஒன்று, அவனது சரீரத்தைக் கழற்றியபடி, தேய்வுறச் செய்து, வெறுமையாக்கிக் கொண்டிருந்தது. அவன் தனக்கு எடையே இல்லாததுபோல உணர்ந்தான். அது ஒரு தீப்பொறி, நீர்க்குமிழ் அல்லது பலூனைப் போன்ற எடையின்மை. வாயிலைத் தாண்டிக் குதிப்பதோ, நிலைப்படிகளில் ஒரே கணத்தில் ஐந்து படிகளைத் தாண்டுவதோ, மரத்தின் உச்சியில் உள்ள ஆப்பிளை எம்பிக் குதித்துப் பறிப்பதோ அவனுக்கு மிகச் சுலபமான காரியம் ஆனது.
“நீ மிகவும் தேறிவிட்டாய்” என்றாள் மனைவி. ஒரு சாகசக் கூத்தாடிச் சிறுவன் போல நடந்துகொள்கிறாய்.
ஒரு நாள் காலையில் பீட்டர் பயந்துபோனான். அதுவரை அவனது துருதுருப்பு அவனை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் அன்று எல்லாம் கடவுளின் எண்ணப்படி நடந்தது.
அவனே அறியாமல், அந்த கிராமத்து வீட்டின் மேலே காற்றில், ஒரு புதிய சாதனை புரியும் மானுட ஜீவிதத்தின் நாயகனாக அவன் மாறியிருந்தான். இது அபாரமானது. அபாரமானதே தவிர அற்புதமானது அல்ல. அற்புதம் அன்று காலையில் நிகழ்ந்தது.
அன்று அதிகாலையில், அவன் மேய்ச்சல் நிலத்துக்குச் சென்றான். தரையில் காலை ஊன்றி அழுந்தியவுடனே, கால்நடைக் கொட்டிலைத் எம்பித் தாவி விடுவோம் என முன்பே தெரிந்திருந்ததால், தயங்கியபடியே அடியெடுத்து வைத்தான். சட்டையின் கைப்பகுதியை மடித்துவிட்டபடி, ஒரு மரக்கட்டையை நிமிர்த்தி, கோடரியைப் பிடித்துக்கொண்டு முதல் வீச்சை ஓங்கினான்.
அந்த வீச்சின் அதிர்விலேயே அவன், சிறிதுநேரம் அந்தரத்தில் எழுப்பப்பட்டான். பின்னர், கூரைகளின் உயரத்தில் மிதந்தான். பிறகு, ஒரு முட்செடியின் மென்மையான இறகு விதை போல மெல்ல கீழே விழுந்தான்.
தனது மனைவி வந்தபோது, ஏற்கெனவே அங்கு பீட்டர் ஒரு திடமான மரத்துண்டைப் பற்றிக்கொண்டு, மரண பீதியுடன், நடுங்கியபடி கீழே கிடந்தான்.
“ஹீபி (ஏவ்லின்? ) நான் அனேகமாக சொர்க்கத்தில் விழுந்துவிடப் போனேன்.”
“உளறாதே! உன்னால் சொர்க்கத்துக்குள் விழ முடியாது, யாரும் சொர்க்கத்திற்குள் விழுவதில்லை. என்ன ஆனது உனக்கு?”
பீட்டர் நிலைமையை மனைவியிடம் விளக்கினான். அவள் எந்த அதிர்ச்சியுமின்றிச் சொன்னாள் : “நீ ஒரு சாகசக் கூத்தடி போல நடந்துகொள்ள முயற்சித்தால் இப்படித்தான் ஆகும். ஏற்கெனவே நான் எச்சரித்திருக்கிறேன். ஒரு நாள் நீ எதிர்பாராத பொழுதில், உனது கழுத்து ஒடியப் போகிறது”
“இல்லை, இல்லை” “இந்தமுறை வேறுமாதிரி, வானம் ஒரு பாதாளம் போல நான் தடுக்கி விழுந்தேன்,” என்றான்.
பீட்டர், தன்னைக் கீழே பிடித்துவைத்திருந்த மரத்துண்டை விட்டுவிட்டு மனைவியைப் பலமாகப் பிடித்துக் கொண்டான். அப்படியாகத் தழுவிக்கொண்டு அவர்கள் வீடு அடைந்தார்கள்.
“மனுசனே!” என்றாள் ஹீபி, அவள், தன் கணவனின் உடல் விசித்திரமான ஒரு காட்டு விலங்குக் குட்டியைப் போல, தப்பித்தோடும் பதறலுடன் தன்னுடன் கட்டுண்டிருப்பதாக உணர்ந்தாள். “மனுசனே, இம்சித்துக்கொள்வதை நிறுத்து, நீ என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறாய்! பறந்து செல்ல விரும்புவது போல இத்தனை அகலமான அடிகளை எடுத்து வைக்கிறாய்”
“பார்த்தாயா, பார்த்தாயா? ஏதோ ஒரு பயங்கரம் என்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது, ஹீபி, ஒரு திருப்பம்தான், பிறகு நான் மேலே போகத் தொடங்கிவிடுவேன்”
அன்று மதியம், பீட்டர், முற்றத்தில் அமர்ந்துகொண்டு, சோம்பலாக, நாளிதழில் சின்னச் சின்ன செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தான். சட்டென உரக்க வெடித்துச் சிரித்தபோது, அந்த உற்சாகமான அதிர்வின் உந்தத்தில், அவன் ஒரு பிசாசு போல உயர எழும்பினான், துடுப்பில்லாத முக்குளிப்பவன் போல. பின் சிரிப்பு அலறலாக மாறியது. சத்தம் கேட்டு ஓடிவந்த ஹீபி அவனது கால்சராயைப் பிடித்து இழுத்து எப்படியோ சமாளித்து அவனை மீண்டும் கீழே கொண்டு வந்தாள். இனிச் சந்தேகமே இல்லை என்றானது. ஹீபி அவனது சட்டை, கால்சராய்ப் பைகளைப் பெரிய கொட்டைகள், ஈயக் குழாய்த் துண்டுகள், கற்களைக் கொண்டு நிரப்பினாள்.
அவனது உடைகளை மாற்றுவதுதான மிகச் சிரமமாக இருந்தது. ஹீபி, ஈய, இரும்புத் துண்டுகளை அகற்றிய கணமே, பீட்டர் மெத்தை விரிப்புக்கு மேலாக மிதக்கப் போனான். ஆனால் அவனது கைகால்கள் படுக்கையின் தலைப்பகுதி கம்பிகளுக்கிடையில் சிக்கியதால் அது தவிர்கப்பட்டது.
“கவனம் ஹீபி , இதனை நிதானமாகச் செய்வோம். நான் கூரையில் முட்டியபடி தூங்க விரும்பவில்லை.”
“நாளை வைத்தியரை அழைப்போம்”
“நான் அசையாமல் இருந்தவரை எதுவும் நேரவில்லை. நகர்ந்தபோதுதான் காற்றில் பறந்தேன்.”
நூறு முன்னெச்சரிக்கைகளுடன் அவன் படுக்கைக்குப் போக வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பாக உணர்ந்தான்.
“நீ எழுந்திருக்க விரும்புகிறாயா?”
இல்லை “நான் சௌகரியமாக இருக்கிறேன்”
அவன் அவளிடம் இரவு முகமன் சொன்னான். ஹீபி விளக்கை அணைத்தாள்.
ஒரு நாள் ஹீபி கண்விழித்தபோது, பீட்டர் ஓர் அருளப்பட்ட புனிதர் போல ஆழ்ந்த துயிலில் இருந்தான், தலை மேலே உத்தரத்தில் சிக்கிக் கொண்டிருந்தது.
அவன், ஒரு குழந்தையின் கையிலிருந்து தப்பிவிட்ட பலூனைப் போலத் தெரிந்தான்.
“பீட்டர், பீட்டர் “ என அவள் கலவரத்துடன் கூச்சலிட்டாள்.
கடைசியாக, பல மணி நேரம், உத்தரத்தில் மாட்டிக்கொண்ட வலியுடன், அவன் கண்விழித்தான்.
எத்தனை அவலட்சணம். அவன் எதிர்த்திசையில் குதிக்க எத்தனித்தான், மேலிருந்து கீழே விழவும், கீழிருந்து மேலெழும்பவும். ஆனால் மேற்கூரையோ அவனை மேலும் இழுத்தது, கீழே தரை ஹீபியை இழுத்தது போல.
“நீ வைத்தியரை வரவழைக்கும் வரை, எனது கால்களைப் பிணைத்து, கயிற்றால் அலமாரியில் கட்டி வைக்க வேண்டும், பிறகு என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.”
ஹீபி ஒரு கயிற்றையும் ஏணியையும் கொண்டு வந்தாள். கயிற்றை பீட்டரின் காலில் கட்டி எல்லா பலத்தையும் கூட்டி அவனை இழுத்தாள். மேலே சிக்கியிருந்த அவனது உடல் ஒரு ஆகாய வாயுக்கலம் போல மெல்ல கீழே வந்தது.
அவன் தரையிறங்கினான்.
அக்கணம், கதவு வழியாகத் திடமான காற்று வீச, அந்த அலையில் பீட்டரின் லேசான தேகம் மேலெழும்பியது. அவன் திறந்திருந்த ஜன்னல் வழியாக வெளியே மிதந்து சென்றான். நொடியில் அது நடந்தது.
ஹீபி கூச்சலிட, கயிறு நழுவி மறைந்துபோனது. ஒரு பண்டிகை நாளில், தவறவிடப்பட்ட வண்ணமயமான பலூன் ஒன்று அசைந்தபடி, முடிவில்லாத வெளி நோக்கி என்றென்றைக்குமாகத் தொலைந்துபோவது போல, பீட்டர், அந்த அதிகாலைக் காற்றில் உயரப் பறந்தான்.
முதலில் ஆகாயத்தில் அவன் ஒரு புள்ளியாகத் தெரிந்தான். பின்பு வெறுமையாக.

Leave a Reply