எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அவருடைய சுதந்திரமான கருத்துரிமைக்காகவே எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் ‘நள்ளிரவில் குழந்தைகள்’ (midnight’s children) நாவலை வீட்டில் கண்படும் தொலைவிலேயே எப்போதும் வைத்திருக்கிறேன். நாவல் வந்த புதிதில் வாசித்தது இன்னும் ஒருமுறை வாசித்துவிடவேண்டும் என்ற விருப்பம்தான் அதற்குக் காரணம். தற்போது ருஷ்டியின் ‘விஜயநகரம்’ நாவலை வாசிக்கவேண்டும் என்று படிப்பறையில் மேஜையின் மேலேயே வைத்திருந்தேன். ஆனால், வாசிக்காமல் காலம் கடந்து கொண்டிருந்தது. அதற்குள் அவரின் தன் அனுபவ நூலான ‘கத்தி’ வாசிக்கும் ஆவல் ஏற்பட்டுவிட்டது.
மும்பையில் பிறந்த இந்தியரான சல்மான் ருஷ்டி பிரிட்டிஷ் –அமெரிக்க எழுத்தாளராகப் புகழ்பெற்று வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்தார். 2022 ல் விஜயநகரம் நாவலை முடித்துவிட்டு அதன் வெளியீடுக்காகக் காத்துக்கொண்டிருந்தவர், 33 வருடங்களுக்கு முன்பு தனக்கு வழங்கிய மரண ஆணையை மறந்தே போயிருந்தார். 1989ல் சைத்தானின் வசனங்கள் (The satanic verses) என்ற நூல் எழுதியதற்காக ஈரானைச் சேர்ந்த அயதுல்லா ருஹோல்லா கொமேனியால் வழங்கப்பட்ட ஃபத்வா (Fadwa) அது. கொலைமிரட்டலுக்காக ஆரம்பத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வலம்வந்து கொண்டிருந்தார் சல்மான் ருஷ்டி. ஆனால் அமெரிக்கக் குடியேற்றத்துக்குப் பின் கிட்டத்தட்ட தனக்கிருந்த கொலை அச்சுறுத்தலை மறந்துபோய், கவிஞரும் எழுத்தாளருமான தன் மனைவி எலிஸாவோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில், சொந்த நாட்டில் ஆபத்துகளை எதிர்கொள்ளும் எழுத்தாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் புகலிடத் திட்டத்தைப் பற்றிய ஒரு கருத்தரங்கு நியூயார்க் மாகாணத்தில் ஷெடாக்வ என்னும் இடத்தில் நடக்க ஏற்பாடானது. அதில் கலந்து கொள்ளச் செல்கிறார் ருஷ்டி. மேடையில் எழுத்தாளர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசவிருக்கையில் தனக்கு இடப்பட்ட மரணஆணை செயல்படும் என்று அவர் கொஞ்சமும் நினைக்கவில்லை. மேடையில் இருந்த தன்னை நோக்கி ஹதி மதார் என்ற அந்த 24 வயது இளைஞன் கத்தியோடு ஓடி வருவதைக் கண்ணுக்குக் கண்ணாகப் பார்க்கிறார். அவரால் தன் கொலையாளியை ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்காப்புக்காக அவர் தன் இடது கையை மட்டும் உயர்த்த முடிந்தது. அந்த இடது கையில் குத்தியதோடு அவன் அவர் உடலில் மொத்தம் 15 இடங்களில் குத்துகிறான். மிகப்பெரிய ஒரு வன்முறை வெறியாட்டம் பலபேருக்கு முன் நிகழ்த்தப்படுகிறது. இதெல்லாம் எதற்காக? அவருக்கு வழங்கப்பட்ட ஃபத்வாதான் காரணமா? ஆனால் ஃபத்வாவுக்குக் காரணமாக இருந்த ருஷ்டி எழுதிய ‘சாத்தானின் வசனங்கள்’ நூலை அவன் இரண்டு பக்கமே வாசித்திருக்கிறான். அப்படி அவன் தான் வாசிக்காத புத்தகத்திற்காக சல்மான் ருஷ்டியைக் கொல்லத் துணிந்த அவனுடைய வன்முறையின் மூலம் உண்மையில் அபத்தமானதுதான். ருஷ்டியைப் பற்றி வெறுப்பை உமிழும் சில யூடியூப் காணொளிகளைக் கண்டதே ருஷ்டியின் மீதான வெறுப்புக்குக் காரணம் என்கிறான் கொலையாளி.
கொலைகாரன் தன்னைக் குத்துவதற்கு எடுத்துக் கொண்ட 27 நொடிகளை ருஷ்டி முக்கியமாகக் கருதுகிறார். 27 நொடிகளின் மரணப் பிணைப்பே இந்த ‘கத்தி’ நூலை ருஷ்டி எழுதக் காரணமாக இருந்திருக்கிறது. ருஷ்டி இப்படியொரு புத்தகத்தை எழுதியிருக்கவே தேவையில்லை. ஆனால் கொலையாளியோடு ருஷ்டி இருந்த அந்நெருக்கமான 27 நொடிகள் கத்தி நூலாக வந்திருக்கின்றன. இந்நிகழ்வு நடந்தேறியபோது அங்கிருந்த கூட்டத்தினர் முதல் சில நொடிகள் அது ஏதோ எழுத்தாளர்களின் பாதுகாப்பு குறித்த சாகச நாடகம் என்றே கற்பனை கொண்டிருந்தனர். சில நொடிகள் அதிர்ச்சிக்குப் பிறகே அது உண்மை நிகழ்வெனத் தன்னுணர்வு பெற்றுக் கூட்டத்தினர் விரைந்து உதவி இருக்கின்றனர். குறிப்பாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்த ஹென்றி ருஷ்டியைக் கத்தியால் குத்திய ஹதி மதாரை 27 நொடிகளுக்குப் பிறகு தைரியமாகப் பிடித்துக் கொள்கிறார். அதற்குமேல் அவனால் கொலைச்செயலைத் தொடர முடியவில்லை. பின் அங்கிருந்தவர்கள் ருஷ்டிக்கு உதவி இருக்கிறார்கள். இந்நிகழ்வுக்கு வருவதற்கு இரண்டு நாளுக்கு முன்பு, ருஷ்டி ஒரு கனவினைக் கண்டிருக்கிறார். அக்கனவில் பொதுக்காட்சி சண்டையில் ஈடுபடும் வீரன் ருஷ்டியை ஈட்டியால் குத்துகிறான். அக்கனவு நிஜமாகவே நடந்தேறியபோது”ஆக, இறுதியில் வந்துவிட்டது, மேன்மைமிக்க அந்த நிகழ்வு” என்ற எண்ணமே அவருக்கு முதலில் தோன்றியிருக்கிறது.
சிறிதும் நியாயமற்ற செயலைச் செய்த தன் கொலையாளியின் உண்மையான பெயரைக் கத்தி நூலில் ருஷ்டி குறிப்பிடவில்லை. அவனை “ A” என்றே விளிக்கிறார். அவனைக் குறிப்பிடும்போது 27 நொடிகளுக்குப் பிரபலமாகியவன் அதாவது அவன் ருஷ்டியைத் தாக்கிய அந்நெருக்கமான 27 நொடிகள். அதன் பின் அவன் எந்தப் புகழுமற்ற அநாமதேயன் என்கிறார். ருஷ்டி கொலைகாரனோடு கற்பனையாகச் செய்யும் ஒரு நேர்காணல் ஒன்று புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. என்னளவில் அதை ஒரு தத்துவ விசாரணையாகப் புரிந்துகொள்கிறேன். கொலையாளியின் வெறுமையின் நோய்மைதான் இந்த வன்முறைத் தாக்குதலில் அடிநாதமாக அமைந்ததா என்பதைத் தெரிந்து கொள்ளும்விதமாக அந்த நேர்காணல் ருஷ்டியால் எழுதப்பட்டிக்கிறது. அந்நேர்காணலில் ருஷ்டி வெறுப்போடோ, வன்மத்தோடோ கேள்விகளை அமைக்கவில்லை. அவனின் அறியாமையை வாழ்வின் மீதான அவனின் திருப்தியின்மையை உணரச் செய்யும்விதமாகவே அவருடைய கேள்விகள் இருக்கும். தன்னுடைய எழுத்துகளைக் கொலையாளி வாசிக்கவில்லை. எதற்காகத் தன்னுடைய எழுத்துகள் மதவாதிகளால் வெறுக்கப்படுகின்றன என்பதைத் தன் எழுத்தின் வழியாகக் கொஞ்சம் கூடத் தெரிந்து கொள்ளாத அவனுடைய கொலைச் செயல் உண்மையில் ருஷ்டிக்கு வியப்பை உண்டாக்கி இருக்கிறது. “ருஷ்டியை எனக்குப் பிடிக்காது. அவரை வெறுக்கிறேன். அவர் நேர்மையற்ற மனிதர்” இந்தக் காரணத்தை மட்டும் கொலையாளி சொல்லியிருப்பது ருஷ்டிக்குப் போதவில்லை. எனவே, அவர் அவனை அறிந்து கொள்ள அல்லது அவனை அவனுக்குப் புரிய வைக்க அந்தக் கற்பனையான நேர்காணலைப் புத்தகத்தில் பதிவு செய்கிறார்.
அதேபோல் சில நுண்ணிய உணர்வுகளை நூலில் ஆழமாக வெளிப்படுத்துகிறார் ருஷ்டி. உதாரணமாக இப்படிச் சொல்கிறார், “உங்கள் உடல் கடுமையான காயங்களை அடையும்போது உங்கள் உடலின் அந்தரங்கத்தை நீங்கள் இழந்து விடுகிறீர்கள். எனக்குத் தாக்குதல் நடந்த பின் காயங்களை அடையாளம் காண்பதற்காக எல்லோர் முன்பும் என் உடைகள் வெட்டப்படுகின்றன. அதாவது உயிர் வாழவேண்டும் என்பதற்காக நம்மைப் பிறரிடம் ஒப்படைத்து விடுகிறோம். நமது நிர்வாணத்தை ஆராய அனுமதி கொடுத்துவிடுகிறோம்” என்கிறார் ருஷ்டி. இந்தப் பகுதியை வாசித்தபோது என் முதல் பிரசவத்தின் போது என்னைச் சுற்றி இருந்த உறவினர் பெண்கள் முன்னிலையில் என் உடலை ஒப்புவித்தது எனக்கு நினைவுக்கு வந்தது. மருத்துவமனையில் சேர்க்க ஹெலிகாப்டரில் அவரை ஏற்றும்போது தன்னுடைய எடை குறித்து வருந்துபவர் சிகிச்சையின் முடிவில் தன்னுடைய எடை 55 பவுண்ட் குறைந்துவிட்டதை மகிழ்வாகக் குறிப்பிட்டு அதிலிருக்கும் நகைமுரணைப் பற்றிப் பேசுகிறார்.
கொலை முயற்சித் தருணங்களையும், அதன் பின்னான மருத்துவமனையின் வலி நிறைந்த கடினமான காலங்களையும், உயிர் பிழைத்தலுக்கான தன் உடலின் போராட்டங்களையும் உணர்ச்சிகரமாகவோ கழிவிரக்கமாகவோ ருஷ்டி கத்தியில் எழுதவில்லை. இத்தனைக்கும் கல்லீரல், வலது கண், இடதுகை, வாய்ப்பகுதி, நுரையிரல் என உடலின் முக்கியமான பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன. அதிலிருந்து மீள உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல துன்பங்களை அடைந்திருக்கிறார். அத்தகைய வலி இருந்தும் மிகப் பக்குவமாகச் சில அடிகள் விலகி நின்றே தனக்கு நடந்தவற்றை நினைவுகூர்கிறார். அதேபோல் தாக்குதல் நடப்பதற்கு முன் பின்னான விசயங்கள் மட்டும் புத்தக்கத்தில் இல்லை. காலத்தின் நினைவோடைகளாக அவருடைய அப்பா, அம்மா, அவருடைய பிள்ளைகள் என்று கடந்த காலம் சிறு நீரோடையைப் போல வந்து செல்கிறது. அவருடைய நாவல்களில் வரும் அப்பாவின் சித்திரத்தைக் கண்டு ருஷ்டியின் அப்பா அவரை வெறுத்ததையும், அதற்காக அப்பா தன்னுடைய அம்மாவைத் துன்புறுத்தியதைப் பற்றி எழுதியிருந்ததில் மட்டும் சிறு உணர்ச்சிவசப்படுதல் வெளிப்பட்டிக்கிறது. அவர் அதைச் சாதாரணமாகச் சொல்லியிருக்கலாம். அது என்னுடைய வாசிப்பின் உணர்ச்சிவசப்படுதலாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் புத்தகம் முழுதும் ஒரு பக்குவமும் நிதானமும் கைவரப்பெற்றவரைப் போலவே ருஷ்டி எழுதுகிறார். அந்தக் கனிவின் தொடர்ச்சியாக தன்னுடைய தாக்குதலுக்குப் பிறகு தன்னுடைய நண்பர்கள் சிலர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனதை அவர்களின் இல்லாமை குறித்து ஆழமான அன்போடு எழுதுகிறார்.
ஆனால் அதற்கு மாறாகப் புத்தகம் முழுதும் ஒரு கனிவு வந்து சேர்ந்திருக்கிறது. 15 கத்திக் குத்துக் காயங்களுக்குப் பிறகு தான் உயிர் பிழைத்திருப்பதை என்னவென்று புரிந்து கொள்ளவதெனத் தெரியவில்லை என்கிறார். மரணம் அருகே வரும் போது மீதி உலகம் தொலைவில் போய்விடுகிறது. அப்போது ஏற்படும் பெரும் தனிமையை அன்பான வார்த்தைகள்தான் சரிசெய்கின்றன என்கிறார். தாக்குதலுக்குப் பிறகு தனக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரஞ்சு அதிபர் மக்ரோன் மாதிரியான அரசியல் தலைவர்களிடமிருந்து வன்முறைக்கு எதிரான கருத்துகள் அறிக்கையாக வெளிவந்தது தனக்குப் பெரும் ஆறுதல் என்கிறார். இன்னும் பல எழுத்தாளர்கள், கலை இலக்கிய நண்பர்களிடமிருந்து வந்த அன்பான விசாரிப்புகளும், ஆயிரக்கணக்கான வாசகர்களிடமிருந்து வெளிப்பட்ட ஆழ்ந்த பிரார்த்தனைகளும் அன்பு ஒரு சக்தி என்று தன்னை உணர வைத்தது என்கிறார். ”நான் கடவுளற்ற வேசி மகன் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தும் எனக்காகப் பிராத்தித்தார்கள்” என உருகிப் போகிறார். “அதிசயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நான் உயிர் பிழைத்திருப்பது அதிசயம். என் புத்தகங்களில் இருந்த மாயம் இப்போது யதார்த்தமாகி விட்டது” என்று தன் உயிர் பிழைத்தலைப் பற்றிச் சொல்கிறார். தன்னுடைய சாத்தானின் வசனங்கள் நூலில் இடம்பெரும் “திரும்பவும் பிறக்க முதலில் நீ இறக்க வேண்டும்” என்ற வரிகளை எழுதியதைப் பற்றிக் கூறி “கற்பனை செய்யும் மனமேகூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத வகையில் சில சமயங்களில் கற்பனை செயல்படுகிறது” என்கிறார்.
திரும்பப் பிழைக்கக் காரணமாக இருந்த மனிதர்களை நன்றியோடு நினைவுகூர்கிறார். குறிப்பாக ஒரு முன்னாள் தீயணைப்பு வீரர் ரத்தம் பெருகிக் கொண்டிருந்த ருஷ்டியின் கழுத்துக் காயத்தினைத் தன் பெருவிரலால் பிடித்துக் கொள்கிறார். அது ரத்தம் வெளியேறுவதைத் தடுத்து உயிர்பிழைத்த காரணங்களில் ஒன்றாக அமைகிறது. அவரை இந்தப் புத்தகத்தில் ஒரு கட்டைவிரல் என்றே குறிப்பிடுகிறார் ருஷ்டி. இப்படி நூலில் பல இடங்களில் ருஷ்டியின் கனிவு கூடி வெளிப்படுகிறது.
துப்பாக்கியைக் கண்டுபிடித்ததன் நோக்கம் ஆபத்தை விளைவிப்பதுதான். ஆனால் கத்தி அப்படி அல்ல மனிதர்களோடு நெருக்கமாகப் புழங்கக்கூடியது என்று ருஷ்டி குறிப்பிடுவதைப் பார்க்கும்போது கத்தி குத்துக்குப் பின் கத்தியோடு அவருக்கு எந்த ஒவ்வாமையும் இல்லை எனப் புரிகிறது. அதே சமயத்தில் கத்தி ருஷ்டியோடு பிரிக்க முடியாத ஒரு பந்தத்தைப் பெற்றுவிட்டது. தன் வாழ்க்கையில் கலையில் சந்தித்த கத்திகளைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார். பொலான்ஸ்கியின் knife in the water திரைப்படம், ஃபிலிப் புல்மேன் எழுதிய நுண்ணுணர்வுள்ள கத்தி நூல், காஃப்காவின் விசாரணை நாவலின் நாயகன் இறைச்சி விற்பவனின் கத்தியால் கொலையுறுவது, எட்வர்ட் அல்பியின் The zoo story ஓரங்க நாடகத்தில் தான் கத்தியோடு நடித்தது என்று கத்தியின் காவ்யப் பக்கங்களை எல்லாம், தன் உடலில் பாய்ந்த கொலைக் கத்தியோடு தொடர்புபடுத்தி ஒரு கலைப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்.
குந்தர் கிராஸ், மிலன் குந்த்ரோ, ஆல்பெர் காம்யூ இன்னும் பல எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த கருத்தோட்டங்களைப் போகிற போக்கில் அழகாக தன் அனுபவங்களோடு பொருத்திப் பேசுகிறார். தன்னுடைய தாக்குதலை எதிர்த்து உலகம் முழுதும் பல ஆளுமைகளின் ஆதரவு ருஷ்டிக்கு இருந்தபோது இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து அப்படியொரு வார்த்தை வராதது அவரை லேசாகக் காயப்படுத்திச் செல்கிறது. இருந்தும் தன்னுடைய ‘விஜயநகரம்’ நாவல் இந்தியாவில் வெற்றியடைந்தது ருஷ்டிக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது.
ருஷ்டி மற்றும் எலிஸாவின் காதல் வாழ்வின் விவரணைகள் இந்தப் புத்தகத்தை நாவல் போல பாவிக்கும் ஒரு வேலையைச் செய்கிறது. கவிஞர், நாவலாசிரியர், புகைப்படைக் கலைஞர் என்று பன்முகத்தன்மையுள்ள எலிஸாவை ருஷ்டி சந்தித்தது முதல் அவர்களின் காதல் வாழ்வை ஈர்ப்போடு விவரிக்கிறார் ருஷ்டி. நான்காண்டுகள் தங்கள் காதலை ரகசியமாக வைத்து, அதன்பின் சில பேர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்தித் திருமணம் செய்துகொள்கிறார்கள். எலிஸா ருஷ்டியைவிட முப்பது வயது குறைந்தவர் என்றாலும் அழகான பக்குவப்பட்ட காதலாக அது இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள் நண்பர்களைச் சந்திக்கிறார்கள். அவரவர் எழுத்தைக் கவனிக்கிறார்கள். ருஷ்டி விஜயநகரம் நாவலை முடிக்கிறார். எலிஸாவும் ஒரு நாவலை எழுதி முடிக்கிறார். இப்படியான அருமையான வாழ்நிலையில்தான் கத்திக் குத்துச் சம்பவம் இருவரையும் புரட்டிப் போடுகிறது. விசயம் கேள்விபட்டுத் துடித்துப்போய் ஓடிவந்த எலிஸாவிடம் பெரிய அளவில் நம்பிக்கை வைக்காதீர்கள். ருஷ்டி மோசமாகக் காயப்பட்டிருக்கிறார். அவர் பிழைப்பது அரிது என்றே சொல்லியிருக்கிறார்கள். பயம் இருந்தாலும் அவர் எப்படியும் பிழைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் மருத்துவமனையில் அவர் அருகிலேயே இருக்கிறார் எலிஸா. உடலில் குத்தப்பட்ட காயங்களிலிருந்து நீர்மக்கழிவு வெளியேற உடலில் பல இடங்களிலும் பைகள் மாட்டப்பட்ட நிலையில் மிக அசௌகரியமான வலியை எழுபத்தைந்து வயதில் ஒருவர் கடந்து வந்திருக்கிறார் என்றால் அதற்கு மிகப்பெரிய தைரியமும் நம்பிக்கையும் வைராக்கியமும்தான் காரணம். அதற்குப் பக்கத் துணையாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தது எலிஸாதான். இந்த வன்முறைச் சம்பவம் அவர்கள் இருவரையும் இன்னும் அழுத்தமாக அன்பு கொள்ள வைத்திருக்கிறது. அவற்றையெல்லாம் ருஷ்டி விவரிக்கும்போது நாவல் போலவே எழுத்து நகர்கிறது.
அடிப்படைவாதமும் அது நிகழ்த்திய வன்முறையும், ஒரு எழுத்தாளரின் ஆளுமையைக் கொஞ்சமும் சிதைக்க முடியவில்லை. அவர் உறுதியைச் சிறிதும் அசைக்க முடியவில்லை. ருஷ்டி காயங்களிலிருந்து மீண்டுவிட்டார். ஆனால் கத்திக்குத்தால் அவர் நிரந்தரமாக வலது கண்ணின் பார்வையை இழந்துவிட்டிருக்கிறார். அதுவும் அவரைக் கலக்கமடையச் செய்யவில்லை. கண்களைப் பற்றிய பல்வேறுவிதமான கதைகளை வாசிக்கிறார். அப்படி வாசிக்கையில் புனைவுகளிலிருந்தும் புராணக்கதைகளிலிருந்தும் கிடைக்காத ஒரு அகத்தூண்டலை முன்னாள் கிரிகெட் வீரர் பட்டொடி மூலமே பெற்றேன் என்கிறார். 20 வயதில் கார் விபத்தில் ஒரு கண்ணின் பார்வையை இழந்த பட்டொடி கிரிக்கெட்டில் பெரும் சாதனையை நிகழ்த்திய வாழ்க்கைக் கதை தனக்கு அகத்தூண்டலை வழங்கி நம்பிக்கையளித்தது என்கிறார் ருஷ்டி.
அதேபோல் இந்நூலில் எனக்கு மிகவும் ஆச்சர்யபட வைத்தது சல்மான் ருஷ்டியின் கலையின் தேடல். அவர் உலகின் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளைக் கூர்ந்து வாசித்திருக்கிறார். அவற்றில் வரும் வசனங்களை நினைவில் கொண்டு எழுதுகிறார். இசை, தத்துவம், ஓவியம் என்று பரந்துபட்ட அவரின் அறிதல்களை விளக்கும்போது ஆச்சர்யப்பட வைக்கிறார்.
தாக்குதலிலிருந்து உயிர்பிழைத்தலை இரண்டாம் வாய்ப்பாகக் கருதி பல்வேறு ஆளுமைகள் கலைப்படைப்புகள் வழித் தனக்குத்தானே நம்பிக்கையூட்டும் ஒளியைப் பெற்றிருக்கிறார் ருஷ்டி. அகஸ்டஸ் சீஸரால் ஒடுக்கப்பட்ட கவிஞர் ஓவிட், ஜோசஃப் ஸ்டாலினால் ஒடுக்கப்பட்ட கவிஞர் மண்டல்ஸ்டாம், ஜெனரல் ஃபிராங்கோவினால் கொலை செய்யப்பட்ட கவிஞர் லோர்கா ஆகியோரின் கலைப் படைப்புகள் பாசிஸத்தைத் தாண்டி நிலைத்து நிற்பதைப் பெருமிதத்தோடு நினைவுகூர்கிறார். அதை இந்நூலில் பல இடங்களில் பகிர்கிறார். இத்தனைக்கும் சிகிச்சையின்போது குறை ரத்த அழுத்தம், சிறுநீர்ப்பாதைத் தொற்று, தலைசுற்றல், புற்றுநோய் இருக்குமோ என்ற அச்சறுத்தல் என்று பலவகையான உடல் உபாதைகளை அனுபவித்திருக்கிறார். ஆனால் கடைசியில் எல்லாவற்றையும் மீறி மீண்டெழுந்து தனித்துவமான சுதந்திர எழுத்தை வெளியிட்டிருக்கிறார். ஃபத்வாவோ, இந்த உலகிலுள்ள எந்த அடிப்படைவாதமோ அவரது கலை வெற்றியைத் தடுக்க முடியவில்லை. கத்தி நூலின் வாசிப்பு அனுபவம் மீண்டெழுதலின் ரகசியத்தை நம்முன் வைக்கிறது.

சந்திரா தங்கராஜ், தேனி மாவட்டம் கூடலூரில் பிறந்தவர். பூனைகள் இல்லாத வீடு, காட்டின் பெருங்கனவு, அழகம்மா, சோளம் ஆகிய சிறுகதை நூல்களையும் நீங்கிச் செல்லும் பேரன்பு, வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள், மிளகு, வேறு வேறு சூரியன்கள் ஆகிய கவிதை நூல்களையும் எழுதி உள்ளார். இயக்குநர் அமீர், ராம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, பின்னாளில் கள்ளன் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் பரிசு, ஆனந்த விகடன் விருது, சுந்தர ராமசாமி விருது, தேவதேவன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
Leave a Reply