நள்ளிரவு நேரம். கும்மிருட்டு ஊரைப் போர்த்தி இருந்தது. அங்கங்கே குறட்டைச் சத்தம் கேட்டது. தெருவிளக்கு கண்ணை மூடி மூடித் திறந்தது. தூரத்தில் நாய் ஒன்று குரைக்கும் சத்தம்.
படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தான் மித்ரன். தூக்கமில்லாமல் கண்கள் சிவந்திருந்தன.
இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் எதுவுமே தெரியவில்லை. கண்களைக் கசக்கிக்கொண்டு கூர்ந்து பார்த்தான்.
மித்ரனுக்கு இடது பக்கத்தில் அப்பா படுத்திருந்தார். வலது பக்கத்தில் தங்கை தென்றல் படுத்திருந்தாள். தென்றலுக்குப் பக்கத்தில் அம்மா படுத்திருந்தார்.
லேசாக இருமினான். யாரிடமிருந்தும் சலனமில்லை.
‘இதுதான் சரியான சமயம்…’ மனம் சொன்னது. மெதுவாக எழுந்து, படுக்கையை விட்டு வெளியே வந்தான். பீரோவுக்குப் பின்பக்கத்தில் வைத்திருந்த பையை எடுத்தான். பையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். பூனை நடை நடந்து, கதவு அருகே வந்தான். ஓசை வராமல் கதவைத் திறந்தான். வீட்டை விட்டு வெளியேறினான்.
அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிப்பவன் மித்ரன். படிப்பு என்று சொன்னாலே அவனுக்கு வேம்பாய்க் கசந்தது. வீட்டில் ஒருநாளும் புத்தகம் எடுத்துப் படித்ததில்லை.
“என்னப்பா… படிக்கலையா?” என்று அம்மா கேட்டால், “நான் ஸ்கூல்லேயே எல்லாத்தையும் படிச்சிட்டேம்மா…” என்று பதில் சொல்வான்.
பள்ளிக்குப் போவதாகச் சொல்லிவிட்டு, நண்பர்களோடு ஊர்ச் சுற்றிக்கொண்டு திரிந்தான் மித்ரன்.
நேற்று அப்பா டவுனுக்குப் போனார். வழியில் கணக்கு ஆசிரியர் முத்துக்குமாரைப் பார்த்திருக்கிறார்.
“சார்… உங்க பையன் ரெண்டு நாளாவே ஸ்கூலுக்கு வரலையே… ஏன்?” என்று கேட்கவே, பதிலேதும் சொல்லாமல் வீட்டிற்கு வந்துவிட்டார்.
பல நாள் தப்பு, ஒரு நாள் வெளியே தெரிந்தே தீரும் தானே..!
”ரெண்டு நாளா எங்கடா சுத்திட்டு வர்றே..?”
அப்பாவின் கேள்வியில் மிரண்டு போனான் மித்ரன். ‘அய்யய்யோ… தெரிஞ்சு போச்சே..!’
எதுவும் சொல்லாமல் நின்றான்.
“ஸ்கூலுக்குப் போறதா சொல்லிட்டு, ஊர் சுத்துறேனு இன்னொரு முறை எனக்குத் தெரிஞ்சது. நா பொல்லாதவனா மாறிடுவேன்..!” மித்ரனின் தலைமுடியைக் கொத்தாகக் கையில் பிடித்து, அப்படியே ஒரு உலுக்கு உலுக்கினார்.
மித்ரனுக்கு இந்தப் பூமியே தலைகீழாகச் சுற்றியது போலிருந்தது.
மனித நடமாட்டம் ஏதுமில்லை. வெறிச்சோடிக் கிடந்தது தெரு. வலது பக்கமாகத் திரும்பி வேகவேகமாக நடந்தான் மித்ரன். எங்கிருந்தோ கால்களுக்கு வேகம் வந்தது. நடை ஓட்டமானது.
சந்துக்குள் இருந்து நாய் ஒன்று குரைத்தபடி வெளியே ஓடி வந்தது. நாயைப் பார்த்ததும் ஓட்டத்தை நிறுத்தி மெதுவாக நடந்தான். ஓடி வந்த நாயும் மெதுவாக நின்றது. கொஞ்ச தூரம் நடந்தவன், பிறகு மீண்டும் ஓடினான்.
‘யாராவது பார்ப்பதற்குள் ஊரைவிட்டுச் சென்றுவிட வேண்டும்’ என்கிற எண்ணம் மட்டும் மனதில் உறுதியாக இருந்தது. வேகமாக ஓடினான். ஊர் எல்லையில் வந்து நின்றான் மித்ரன்.
மூச்சு வாங்கியது. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது.
வெட்டவெளியில் தனியே நின்றிருந்தான். சிள்வண்டுகளின் ரீங்காரம் கேட்டது. ‘இங்கு யாருமே இல்லையா… நான் மட்டுமா தனியாக நிற்கிறேனா..?’ என்று நினைத்த கணத்தில் அவனுக்குள் பயம் குடியேறியது. கால்கள் லேசாக நடுங்கின. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன.
‘ஏதோ அசட்டு தைரியத்தில் புறப்பட்டு வந்து விட்டோமோ..?’ என்று எண்ணத் தொடங்கினான். உள்ளுக்குள் லேசான தைரியத்தை வரவழைத்துக் கொண்டான். மேலே நிமிர்ந்து வானம் பார்த்தான்.
கருப்பு மையை ஊற்றியது போல் இருந்தது வானம். நிலவைக் காணோம். ‘ம்ம்… நாளக்கி அமாவாசை’ என்று தென்றலிடம் நேற்று அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. உடன் வருவதற்கு நிலவு கூட இன்றில்லை. ‘இப்போ இந்த இருட்டில் எங்கே போவது?’ கால்கள் பின்னின. நடக்கவே முடியவில்லை. அழுகை அழுகையாக வந்தது மித்ரனுக்கு.
‘ஆம்பளப் புள்ள அழக்கூடாது’ என்று சொன்ன அப்பா மீது கோபம் வந்தது. ‘ஏன்… ஆம்பளை அழக்கூடாது..? நான் அழுவேன். எனக்கும் அழுமை வரும்…’ என்று நினைத்த கணத்தில், கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ‘ஓ…’வென குரல் எடுத்து அழுதான் மித்ரன்.
காதுக்குப் பக்கத்தில், “அழாதே மித்ரன்…” என்றொரு குரல். திடுக்கிட்டுப் பார்த்தான். அந்த இருட்டிலும் மின்மினிப் பூச்சியொன்று அவனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
அது வெறும் பூச்சியல்ல… மித்ரனின் பெஸ்ட் ப்ரண்டுகளில் அதுவும் ஒன்று.
கடிகாரம் இரண்டு முறை மணியடித்தது.
தூக்கம் கலைந்தது மித்ரனுக்கு. சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது. வீட்டில் அப்பா, அம்மா, தங்கை… எல்லோருமே நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
‘யாரை எழுப்புவது..?’
அவனாக எழுந்து தோட்டத்துப் பக்கமாக வந்தான். கொய்யா மரத்தின் அருகில் யாரோ நிற்பது போலிருந்தது. மித்ரன் நன்றாக உற்றுப் பார்த்தான். யாருமில்லை. அப்பாடா…என்றிருந்தது.
“என்ன, பயமா இருக்கா..?” என்றொரு குரல் கேட்டது.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “யாரது?” என்றான்.
“நான் தான்” என்றபடி முகத்துக்கு நேராக வந்தது மின்மினிப் பூச்சி.
“அய்… மின்மினிப் பூச்சியா? உன்னாலே பேசக்கூட முடியுமா..?” ஆச்சரியத்தோடு கேட்டான்.
“ம்… என்னோடு பேச ஆசைப்பட்டு, யார் பேசினாலும் நானும் பேசுவேன். எனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா, அவங்க கூடவும் பேசுவேன். எனக்கு ரொம்ப நாளாவே உன்னைப் பிடிக்கும். ஆனா, இன்னிக்குத்தான் உன்னோட பேசுற வாய்ப்பு கிடைச்சது…” மின்மினிப் பூச்சி சொன்னதைக் கேட்டுக்கொண்டான் மித்ரன்.
அன்றிலிருந்தே இருவரும் நண்பர்கள் ஆனார்கள். மித்ரன் நினைக்கும் போதெல்லாம் மின்மினிப் பூச்சி வரும். அவனோடு பேசிவிட்டுப் போகும்.
“நீ ஏன் இப்ப வந்தே..?” என்று கோபத்தோடு கேட்டான் மித்ரன்.
‘யார் கண்ணிலும் படாமல் இங்கிருந்து போய்விட வேண்டும்’ என்று நினைத்திருந்தான் மித்ரன். இப்போது மின்மினிப் பூச்சி பார்த்துவிட்டதே என்கிற ஆத்திரம் வந்தது அவனுக்கு.
“நான் வர்றது இருக்கட்டும். நீ இந்த நடு ராத்திரியிலே எங்கே போறே..? அதை மொதல்ல
சொல்லு..!” என்றது மின்மினிப் பூச்சி.
“உனக்கிட்டே சொல்ல வேண்டிய அவசியமில்லே..!” என்றான் மித்ரன்.
“வார்த்தைக்கு வார்த்தை என்னோட பெஸ்ட் ஃப்ரண்டுன்னு சொல்லுவே. இப்ப என்னடான்னா, அந்த பெஸ்ட் ஃப்ரண்ட் கேட்டாலும் சொல்ல மாட்டீயா..?” மீண்டும் மின்மினிப் பூச்சி கேட்டது.
“எங்க வீடு, ஸ்கூலு, இந்த ஊரு எதுவுமே எனக்குப் பிடிக்கலே. நான் இந்த ஊரை விட்டே
போகப்போறேன்..!” என்ற மித்ரனின் வார்த்தைகளில் கசப்பு தெறித்தது.
“உனக்குப் பிடிச்ச தங்கச்சி, உன்னோட நல்லாப் பழகுற ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ், நீ
ஆட்டம்போட்டுக் குளிக்கிற ஊரணி, நான்… இது எதுவுமே உனக்குப் பிடிக்கலையா..?”
மின்மினிப்பூச்சி கேட்டதும், அவசரமாக மறுத்தான் மித்ரன்.
“இதெல்லாம் எனக்குப் பிடிக்கும் தான். ஆனா, இனிமே என்னாலே இந்த ஊர்ல இருக்க முடியாது” என்று சொன்னான்.
“குழப்பமா பேசுறீயே… மித்ரன். பிடிச்சவங்க இருக்கிற ஊரைப் போயி, பிடிக்கலேனு
சொன்னா எப்படி..?”
“என்னை நீ குழப்பப் பார்க்கிறே. நான் ஒரு முடிவு எடுத்திட்டேன். இனிமே இந்த
ஊருக்குள்ளே இருக்க மாட்டேன்” சொல்லும்போதே பற்களை ‘நறநற’வெனக் கடித்தான்.
“சரி, உன்னோட முடிவு நீ போ. நான் வேண்டாம்னு சொல்லலே. ஆனா, போறதுக்கு முந்தி, இந்த முடிவுக்கு என்ன காரணம்னு சொல்லிட்டுப் போகலாமே..!” கேட்ட மின்மினிப் பூச்சி, மித்ரனின் தோள் மீது அமர்ந்தது.
“நா ஒழுங்கா படிக்கலேனு வீட்டிலே அப்பா, அம்மா திட்டிக்கிட்டே இருக்காங்க. ஸ்கூலுக்குப் போனா ஹோம் ஒர்க், டெஸ்ட்னு வச்சு தொல்லைப் படுத்துறாங்க. ஊர்லே யாரைப் பாத்தாலும், ‘என்ன படிக்கிறே?’, ‘அடுத்த வருசம் பத்தாவது பப்ளிக் எக்ஸாம்’னு சொல்லியே என்னை வெறுப்பேத்துறாங்க. நான் ஏன் இந்த ஊரை விட்டுப் போகக்கூடாது..?” கேட்டுவிட்டு, அமைதியாக நின்றான் மித்ரன்.
“உன்னோட ஆதங்கம், ரொம்பவும் சரி. எல்லாருமே படிக்கிறதைப் பத்தியே பேசினா, யாருக்குத்தான் கோபம் வராது? நீ ஊரை விட்டுப் போகலாம். அதுக்குள்ளே ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போனா, நல்லா இருக்குமே..!” என்றது மின்மினிப் பூச்சி.
‘என்ன கேள்வி?’ என்பதுபோல் பார்த்தான்.
“வேறொண்ணுமில்லே. உங்க அப்பா, அம்மா, டீச்சருங்க எல்லாரும் ‘உன்னைப் படி, படி’ன்னு சொல்றது உன்னோட நன்மைக்கா..? இல்லை… அவங்களோட நன்மைக்காக..? இந்தக் கேள்விக்கு மட்டும் பதிலைச் சொல்லிட்டு நீ போ..!”
எங்கிருந்தோ காற்று ‘உர்’ரென்று சுழன்றடித்தது. மித்ரனின் மேலெல்லாம் மண்ணை வாரியிறைத்துப் போனது. தூசு விழாமல் கண்களை மூடிக்கொண்டான். பிறகு கண்களைத் திறந்தபோது, அவனது முகத்துக்கு முன்னே பறந்து கொண்டிருந்தது மின்மினிப் பூச்சி.
”ம்… சொல்லு?” என்றது மித்ரனைப் பார்த்து. “அது வந்து… அது வந்து… எ… என்…” எதுவும் சொல்ல முடியாமல் வார்த்தைகளை மென்று விழுங்கினான்.
“ ‘என்னோட நன்மைக்குத்தான்’னு உன்னோட தொண்டைக்குழி வரைக்கும் வருது. ஆனா, வெளியே சொல்ல முடியலை. அப்படித்தானே..?” மின்மினிப் பூச்சியின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்றான் மித்ரன்.
“என்னடா, இவனும் நமக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பிச்சிட்டானேனு நெனச்சிடாதே… மித்ரன். நம்மை மேல அக்கறை உள்ளவங்க, நம்மோட எதிர்காலம் நல்லா இருக்கணுமேனு நினைக்கிறவங்க தான் நமக்கு அறிவுரை சொல்வாங்க. அதுக்குப் போயி கோபப்படலாமா..? நீ நல்லாப் படிச்சு, பெரிய ஆளா வரணும்னு அப்பா, அம்மா ஆசைப்படுறது என்ன… அவ்வளவு பெரிய குத்தமா..? ஏதோ அவசரத்திலே நீ ஒரு முடிவு எடுத்திட்டே. அது சரிதானானு நீயே கொஞ்ச நேரம் யோசிச்சுப் பாரு..!”
எல்லாவற்றையும் கேட்டபடி அமைதியாக நின்றான் மித்ரன். மின்மினிப் பூச்சி சொல்வதிலுள்ள நியாயம் அவனுக்குப் புரியத் தொடங்கியது. ‘ஆத்திரத்தில் அவசரப்பட்டு விட்டோமோ..?’ என்று யோசிக்கத் தொடங்கினான்.
“எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. எந்தப் பிரச்சினையில இருந்தும் தப்பிச்சு ஓடுறது சரியான தீர்வில்லை… மித்ரன். ஒரு நிமிசம் யோசிச்சுப் பார்த்தீயா..? நாளைக்கு உன்னைக் காணாம உங்க அப்பா, அம்மா, ஏன்… உன்னோட அன்பான தங்கச்சி… எல்லாருமே எப்படிப் பதறித் துடிப்பாங்க. அதைக்கூட நினைச்சுப் பார்க்கலியே… நீ..?” சொல்லிவிட்டு, மித்ரனைச் சுற்றி ‘சர்’ரென்று ஒரு வட்டமடித்தது மின்மினிப் பூச்சி.
மித்ரனின் கையில் இருந்த பை நழுவி கீழே விழுந்தது. இரு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டான்.
“நான் தான் அவசரத்திலே ஏதோ தப்பா முடிவு எடுத்திட்டேன். நீ சொல்றதுதான் சரி. என்னோட நன்மைக்காகச் சொன்னதை நான் புரிஞ்சிக்கலே. இப்ப நான் என்ன பண்ணுறது..?” பதற்றத்துடன் கேட்டான் மித்ரன்.
“நான் தப்பா முடிவெடுத்துட்டேன்னு நீ எப்போ புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டீயோ, அப்பவே நீ தெளிவாயிட்டேனு அர்த்தம். இப்ப ஒண்ணும் தப்பா நடக்கலே. நல்ல பிள்ளையா திரும்ப வீட்டுக்குப் போயிடு..!” மின்மினிப் பூச்சி சொன்னதும், ‘திரும்பவும் வீட்டுக்கா?’ என்று அதிர்ச்சியாகக் கேட்டான்.
“ஆமா… உன்னோட வீட்டுக்குத்தான். நீ கிளம்பி வந்ததும் தெரியாது; இப்ப நீ திரும்பப் போயி படுக்கிறதும் யாருக்கும் தெரியாது. சரியா… வா..! நாம வீட்டுக்குப் போகலாம்…” என்றது மின்மினிப் பூச்சி.
“இத்தனை நாளா என்னோட பிரச்சினையை யார்கிட்டேயும் சொல்லாம, என்னோட மனசுக்குள்ளே மட்டுமே வச்சுக் குமுறிக்கிட்டு இருந்தேன். அதனாலே தவறான முடிவையும் எடுக்கிற மாதிரி ஆயிடுச்சு. இப்ப உன்கிட்டே சொன்னதும்தான் எனக்கு மனசு லேசானது மாதிரி இருக்கு. சரியான யோசனை சொன்ன நீ தான் எனக்கு என்னிக்குமே பெஸ்ட் ஃப்ரண்ட்…” என்று கண்கள் கலங்கிடச் சொன்னான் மித்ரன்.
“அதனாலதான் பெரியவங்க அப்பவே சொல்லி இருக்காங்க. ‘பகிர்ந்துகொண்ட இன்பம் இரட்டிப்பாகிறது; பகிர்ந்து கொண்ட துன்பம் பாதியாகிறது’னு. சரி… வீட்டுக்குப் போகலாம்… வா!” என்று மின்மினிப் பூச்சி, முன்னால் பறந்தது. அதன் பின்னாலேயே வீட்டை நோக்கி நடந்தான் மித்ரன்.
வரும்போது இருண்டு கிடந்த வழியெல்லாம், இப்போது வெளிச்சம் கொட்டிக் கிடப்பதுபோல் இருந்தது. முன்னிலும் வேகமாக வீட்டை நோக்கி நடந்தான் மித்ரன்.

Leave a Reply