போரின் போது ஊடகங்கள் மீது செல்வாக்கு செலுத்த அல்லது அவற்றைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் பல்வேறு அழுத்த தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியது. மே 2009 இல் போர் முடிவடைந்த பின்னரும் இந்நிலைமை தொடர்ந்தது. முக்கியச் செய்தித்தாள் நிறுவனங்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்தன. The associated newspapers of Ceylon Limited, இலங்கைச் சுதந்திரக் கட்சி அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டது. Times of Ceylon Limited, ஆகஸ்ட் 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காகச் செய்தித்தாள் ஆசிரியர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டனர்.
அவசரகாலச் சட்டத்தின் பேரில் 1982 அக்டோபரில் தமிழ் செய்தித்தாள், “சுதந்திரன்” தடைசெய்யப்பட்டது, மேலும் 1982 நவம்பரில் எதிர்க்கட்சியினரின் செய்தித்தாள் “அத்தா” தடைசெய்யப்பட்டது. இதையடுத்து வடக்குப் பிராந்திய ஆங்கிலச் செய்தித்தாளாகிய “Saturday Review” ஜூலை 1983ல் தடை செய்யப்பட்டது. 1984 ஜனவரியில் மீண்டும் பிரசுரமாவதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும், அது ஜூலை 1985 வரை சிறப்புத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. 1990 களின் முற்பகுதி வரை வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் அரசாங்கத்தின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் இருந்தன. தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் தோன்றிய பிறகும், அடுத்தடுத்து பதவியேற்ற அரசாங்கங்கள், சட்டங்கள் மற்றும் நேரடித் தாக்குதல்கள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முயன்றன. இலங்கையில் இருந்த ஒரே செய்தி நிறுவனமான லங்காபுவத், இலங்கை அரசு சார்பாக, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைப் பரப்புவதில் பெரும்பாலும் ஈடுபட்டது. போரின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குள் வெளிநாட்டினர், குறிப்பாக வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
அடக்குமுறைகளை மறைப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளின் போது இலங்கை அரசாங்கத்தால் செய்தித் தணிக்கைகள் விதிக்கப்பட்டன. 1995 செப்டம்பர் முதல் செய்தித் தணிக்கைகளை அரசாங்கம் படிப்படியாக விதிக்க ஆரம்பித்தது. மே 2000 இல் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்தின் கீழ், ஆங்கிலச் செய்தித்தாளான சண்டே லீடர், சிங்கள இதழான இரிடா பரமுனா மற்றும் தமிழ் தினசரிப் பத்திரிகையாகிய உதயன் ஆகியவை தடை செய்யப்பட்டன. உள்ளூர்ப் பத்திரிகையாளர்கள் மீதான சரீரத் தாக்குதல்களை ராஜபக்ச அரசாங்கம் ஊக்குவித்ததோடு மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர், அரசு சார்பற்ற நிறுவன ஊழியர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்கள் மீதான வாய்மொழித் தாக்குதல்கள் பரவலாக நடைபெற்றன. இலங்கையில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். ஜனவரி 2015 முதல் ஜனாதிபதி சிறிசேனா அரசாங்கத்தின் உறுதிமொழிகள் இருந்தபோதிலும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் குறுக்கீடுகள் கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து அச்சுறுத்திய வண்ணம் இருந்தன. தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் கலாச்சாரமானது அரசாங்க ஒப்புதலுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி வெளிப்படைத்தன்மையைத் தடுக்கும் விதமாகச் செயல்பட்டது.
போரின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தமிழர்களைப் பயமுறுத்துவதற்காகப் பாலியல் வன்கொடுமையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினர். பல தமிழ்ப் பெண்கள் பாதுகாப்புப் படையினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உள்நாட்டில் இடம்பெயர்ந்த இளம் பெண்களும், விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் உறவினர்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களில் அடங்குவர். ஐ.டி.பி. முகாம்களிலும், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கான மறுவாழ்வு மையங்களிலும் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடந்தன. 2006 மற்றும் 2012 க்கு இடையில் இலங்கை அரசின் காவலில் இருந்த 75 பேர் – 41 பெண்கள், 31 ஆண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் ஆகியோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆவணப்படுத்தியுள்ளது. மீள்குடியேற்ற மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வில் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள், கணவனை இழந்த பெண்கள் மற்றும் உதவி கோரும் இடம்பெயர்ந்த பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை எளிதாக்கியுள்ளன. திருகோணமலையில் வசிப்பவர்கள் பிப்ரவரி 2017 இல் முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்கள் இன்னும் சில இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவித்தனர். ஆனால் இலங்கை அரசாங்கமானது இப்பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு பாதுகாப்புப் படையினரைச் சிறுமைப்படுத்தும் சதித்திட்டம் எனவும் கூறிவந்தது. குற்றச்சாட்டுகளை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க மறுத்தும் வந்தது.
இலங்கையில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறைக்கான பொறுப்புக்கூறல் குறித்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) 2026 அறிக்கை, ஆயுத மோதலின் போதும் அதற்குப் பின்னரும் தமிழர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் குறிவைத்து நடத்தப்பட்ட பாலியல் வன்முறை “வெறுமனே தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களின் தொகுப்பு மட்டுமல்ல, வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட பரவலான மீறல்களின் ஒரு பகுதியாகும்” என்று கண்டறிந்துள்ளது.“இந்தச் செயல்கள், அவற்றில் சில போர்க் குற்றங்களாக இருக்கக்கூடியவை, தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும், ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை அச்சுறுத்துவதற்கும், பயம் நிறைந்த சூழலை ஏற்படுத்துவதற்கும் ஒரு மூலோபாயக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய மீறல்கள் நிறுவன ரீதியாகச் செயல்படுத்தப்பட்டன. மேலும் இனமோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களை விகிதாசாரமற்ற முறையில் இவை குறிவைத்தன,” என்று அறிக்கை கூறியது.
அரசுப் படைகளால் நிகழ்த்தப்பட்ட கடந்தகாலப் பாலியல் வன்முறைகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வதற்கும், முறையான மன்னிப்புக் கோருவதற்கும் காலதாமதமற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை, நீதித்துறை மற்றும் சட்டக் கட்டமைப்பில், உயிர் பிழைத்தவர்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதோடு, வழக்குகள் தொடர்வதற்கான ஒரு சுயாதீன அலுவலகத்தை நிறுவ வேண்டும் என்றும் உளவியல் மற்றும் சமூக ஆதரவை அழுகிப் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.
பல ஐ.நா. அறிக்கைகள் இன மோதலில் நிறுவனமயப்படுத்தப்பட்ட அல்லது கட்டமைக்கப்பட்ட பரவலான பாலியல் வன்முறைகளையும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் அரசின் தொடர்ச்சியான தோல்வியையும் ஆவணப்படுத்தியுள்ளன. இனமோதல் தொடர்பான பாலியல் வன்முறை (CRSV) வழக்குகள் நீண்டகாலமாகப் பதிவு செய்யப்பட்டவையாக இருந்தபோதிலும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் போதுமான அளவு அவற்றை விசாரிக்கவோ அல்லது வழக்குகளைத் தொடரவோ தவறிவிட்டன, சர்வதேச ரீதியான அழுத்தங்கள் இருந்த போதும், நம்பகமான பொறுப்புக்கூறலை எளிதாக்குவதற்கும், உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை (SGBV) கருத்தியல் அடிப்படையில் CRSV ஐப் புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் மற்றும் சிவில் சமூக அறிக்கைகள் இது ஆழமாக வேரூன்றிய மற்றும் கட்டமைக்கப்பட்ட முறைசார் பிரச்சினை என்று சுட்டிக்காட்டியுள்ளன.
2009 இல் முடிவடைந்த உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து நாள்பட்ட உடல் காயங்கள், மலட்டுத்தன்மை, உளவியல் சிக்கல்கள் மற்றும் தற்கொலை எண்ணங்களால் அவதிப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமை, பாலியல் சிதைவு (Sexual mutilation), கட்டாய நிர்வாணம் (Forced nudity) உள்ளிட்ட துஷ்பிரயோகங்களின் அதிர்ச்சியூட்டும் கொடுமைகள் என்ற நிலைக்கு அப்பால், இத்தகைய பாலியல் ரீதியான தாக்குதல்கள் நீண்டகால உளவியல் அதிர்ச்சியை ஏற்படுத்தவும் சமூகங்களை உடைத்தெறியும் நோக்கம் கொண்டவை என்பது அவதானிக்கப்பட்ட விடயங்களாகும் . “பாலியல் வன்முறை என்பது ஒருபோதும் நின்று விடாத ஒரு சித்திரவதை” எனப் பிழைத்தவர் ஒருவரின் சாட்சியம் கூறுகிறது. பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்களின் குடும்பங்களுக்குச் சமூக ரீதியான களங்கம் ஏற்படுத்தப்படுவதோடு, பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தைகள் முத்திரை குத்தப்பட்டுப் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது. சமூகங்கள் பயம் மற்றும் தீர்க்கப்படாத உளவியல் அதிர்ச்சிகளால் பிளவுபட்டுள்ளன எனவும் சுட்டிக்காணப்படுகிறது.
“இனமோதல் தொடர்பான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு இறுதியாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்குவதற்கான இலங்கை அரசாங்கத்திற்கான ஒரு தெளிவான அழைப்பாக இந்த அறிக்கையின் வெளியீடு செயல்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ‘ திட்டமிட்ட நோக்கத்துடன் பரவலாக ஏற்படுத்தப்பட்ட தன்மையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள், உள்நாட்டு, புலம்பெயர் தேசத்துச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் பொறுப்புக்கூறலுக்கும் நீதிவழங்கலுக்கும், இலங்கை அரசாங்கத்தின் மீதான தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்த வண்ணம் செயல்பட வேண்டும்.
உசாத்துணை :-
இலங்கையில் இனமோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளுக்கான பொறுப்புக்கூறல் அறிக்கை – ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம்
Armament for Repression, Militarization of Sri Lanka – தமிழர் தகவல் மையம்.
Art from theguardian
பத்திரிகையைத் துறையில் ஓராண்டு பட்டயப் பிடிப்பை முடித்துக் கொண்டு இலங்கையில் ஊடகவியலாளராக தினக் குரலிலும் சண்டே லீடர் பத்திரிகையிலும் பணியாற்றியவர். பின்னர் இங்கிலாந்தில், கணக்கியலில் இளம் கலை பட்டத்தையும் பயின்று அத்துறையிலும் சட்டத்துறையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கணக்கியல் துறையில் பணி புரிந்து கொண்டு, அரசியலில் முதுகலைப் பட்டத்திற்குப் பகுதி நேரமாகப் பயின்று வருகிறார். இடதுசாரியான இவர் லண்டனில் பல புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணியச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவரின் முதலாவது நூல் “கருப்பை அரசியல்” மிக அண்மையில் வெளியாகி உள்ளது. காட்சிமொழி காலாண்டிதழ் மற்றும் தினகரன் (இலங்கை) ஞாயிறு வார மஞ்சரியான சாளரம் ஆகியவற்றுக்கு ஆக்கங்கள் எழுதி வருகிறார்.







Leave a Reply