அது ஒரு மழைநாள். கையிலிருந்த சம்பளத் தொகையை வீட்டிற்கு அனுப்புவதற்காக விடுதிக்கு அருகில் இருந்த தபால் நிலையம் வந்திருந்தேன்.
மழைநாட்களில் குடைபிடிக்கும் பழக்கம் அறவே இல்லாத எனக்கு அந்த நாள் மிகப் பிடித்த ஒரு நாளாக அமைந்தது. ஒரு மழைநாளுக்கான சோம்பல் மொத்தத் தபால் நிலையத்தையும் ஆக்கிரமித்து இருந்தது. வெகுமுன்பாகவே நான் சென்றிருக்க வேண்டும். தபால் நிலைய அலுவலர்கள் அப்போதுதான் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர்.
நான் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் இருக்கையில் சென்று அமர்ந்திருந்தேன். எனக்கு முன்னதாக அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அமர்ந்திருந்தார். நான் அவரைப் பார்த்த கணம் அப்பெண்ணும் என்னைப் பார்த்தார். நான் சிரித்தேன். அப்பெண்ணும் பதிலுக்குச் சிரித்தார். நிறம் மாறிய பச்சை நிறப் புடவை கட்டியிருந்த அப்பெண் நரைத்த தலை விரக்தியான முகத்தோற்றத்தோடு என் கண்களுக்குத் தெரிந்தார்.
நேரம் கடந்துகொண்டிருந்தது. நான் தபால் நிலையத்தின் சுற்றும்முற்றும் பார்த்தேன். நான் அமர்ந்திருந்த இடத்திற்கும் நேரெதிராக, சுவரில் மாட்டப்பட்டிருந்த பெரிய கடிகாரம் சரியாகப் பத்து மணியைக் காண்பித்தது. அதன் வலது ஓரமாக ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கான வைப்புத் தொகை கணக்கு பற்றிய விவரங்கள் மற்றும் சேமிப்புக் கணக்குகளின் நலன்கள் போன்ற சில தகவல்கள் அதில் எழுதப்பட்டிருந்தன. அதற்குக் கீழ் நீரற்ற தண்ணீர்க்குடம் மூடியோடு வைக்கப்பட்டிருந்தது.
சிறிது நேரத்தில் எண் ஒன்று என்று குறிப்பிட்டிருந்த தடுப்புப் பகுதியில் ஒரு பெண் வந்து அமர்ந்தார். மிக ஒல்லியான தேகம் கொண்ட பெண். கூந்தலைப் பின்னல் இட்டு நெற்றியில் சிறிதாக விபூதிக் கீற்றொன்றை இட்டிருந்தார். பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகத் தோன்றிய அப்பெண்ணிடம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கே உரித்தான ஒருவித ஆளுமைக்கான அசைவுகள் அவ்வப்போது வெளிப்பட்டன.
எழுந்து அவர் அருகில் சென்ற நான் “மேம். வணக்கம். மணியார்டர் பண்ணனும்” என்றேன். கையில் ஒரு விண்ணப்ப படிவத்தைக் கொடுத்து நிரப்பி வருமாறு கூறினார்.
எனக்குப் பின், என்னோடு அமர்ந்த பெண்ணும் எழுந்து வந்து ‘காசு போடனும் மா’ என்றாள். அவருக்கும் ஒரு படிவத்தை நீட்டி நிரப்பி வருமாறு கூறினார்.
நான் என் படிவத்தை நிரப்பத் தொடங்கினேன்.
‘இங்க படிக்கிறியா?”
குரல் வர திரும்பிப் பார்த்தேன். அருகில் அமர்ந்து இருந்த முதிய பெண் கேட்டார்.
“ஆமா? பி.ஏ., படிக்கிறேன்”. என்றேன்.
“நல்லா படி. இந்தக் காலத்துல இல்ல. எந்தக் காலத்துலையும் பொம்பளங்களுக்குப் படிப்புதான் கை கொடுக்கும்..” என்று கூறியவர் ஏதோ ஒரு ஆழமான சிந்தனைக்குள் புகுந்தார்.
அவர் கூறியது மிகச் சரியான கருத்து. நான் அதற்குப் பெரிதும் உடன்படுவதாக அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அப்பெண்ணோ எந்த உணர்வுமின்றி என்னைப் பார்த்தார். அப்படித்தான் எனக்குத் தோன்றியது. சிறிது நேரத்தில் நான் படிவத்தை நிரப்பியிருந்தேன். அலுவலகப் பெண்ணிடம் சென்று பூர்த்தி செய்த படிவத்தை நீட்டினேன். மழை காரணமாக காசாளர் வரத் தாமதமாகும் என்றும் சிறிது நேரம் காத்திருக்குமாறும் கூறினார். நான் மீண்டும் அதே இருக்கையில் வந்து அமர்ந்தேன்.
அருகில் அமர்ந்து இருந்த முதிய பெண் அவரது படிவத்தை நிரப்பித் தரக் கேட்டதால் நான் அதையும் அவரிடம் இருந்த தகவல்கள் வைத்துப் பூர்த்தி செய்து வைத்தேன். காசாளர் இன்னும் அலுவலகம் வந்து சேரவில்லை.
அலுவலகத்தின் சிவப்பு நிறச் சுவர், கடிகாரம், அறிவிப்புப் பலகை, நீரற்ற தண்ணீர்க் குடம், ஒல்லியான பெண் ஊழியர் என ஒவ்வொன்றையும் பலதடவைகளுக்கு மேல் சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கதவோரத்தில் இருந்து வந்த மழை ஓசையோடு அலுவலகம் முழுவதும் நிசப்தமாக இருந்தது.
“நீ இந்த ஊரு தானா?”
குரல் வந்த திசையில் திரும்பினேன். முதிய பெண்தான் இதையும் கேட்டார்.
“இல்லங்க மா” என்றேன்.
“உன்ன பாத்தா சின்ன வயசுல என்னைய பாக்குற மாதிரி இருக்கு. இப்படித்தான் நானும் விழுவிழுனு இருப்பேன். ”
நான் அவர் கூறுவதைக் கேட்கும் தொனியில் அவர் பக்கமாகத் திரும்பி நேராக அமர்ந்தேன்.
“பள்ளிக்கூடம் போகனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.”
போனிங்களா? என்றேன்.
“எங்க விட்டானுங்க. பள்ளிக்கூடம் போனா எதுத்துப் பேசுவேன். சொல் பேச்சுக் கேக்க மாட்டேனு எங்கப்பன் என்ன பள்ளிக்கூடம் பக்கமே போகக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. அந்தக் காலத்துல அவங்கள மீறி என்ன நடக்கும். ஆனா நான் என் புள்ளைங்களப் படிக்க வச்சிட்டேன். என்னால முடிஞ்ச வரைக்கும். ”
“படிக்காததால எனக்கு ஒரு நஷ்டம் என்னனா? நான் விரும்பினவரு எனக்குக் கிடைக்கல. இன்னைக்கும் அந்த ஒரு வலி மட்டும்தான். கடைசி வரைக்கும் இருக்கும். கண்ணு மூடுற வரைக்கும்.” ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டார்.
அவர் விட்டுப் போய்டாரா?. என்றேன்.
“அவர் எங்க. அவர்லாம் என்ன விடனும்னு ஒருநாளும் நினைச்சதில்ல. அவங்க வீட்டுல படிச்ச பொண்ணு வேணும்னு விரும்புனாங்க. படிச்ச பொண்ணுதான் வாழ்க்கைய சரியா நடத்தும், படிச்ச பொண்ணுதான் புரிஞ்சி நடந்துக்கும், படிச்ச பொண்ணுதான் புள்ளைங்களப் படிக்க வச்சி ஆளாக்கும்னு அவர நிதம் கொன்னு எடுத்தாங்க. அவர் நல்ல படிச்ச டீச்சரு. என் பக்கம் வந்தா அவர் குடும்பத்த விடனும். எனக்குப் படிப்புதான் இல்லை. இங்கிதம் இருக்குல்ல. நானாதான் விட்டு வந்தேன்.” இரக்கம் கனிந்த முகத்தோடு என்னைப் பார்த்தார். இதைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவரது கண்கள் துளிர்க்க ஆரம்பித்தன.
நிறைவேறாத அன்பு கண்ணீராக உயிர் பெறும் போது அதில் ஒரு அமைதி வந்துவிடுகிறது. ஏனெனில் அப்படிச் சிந்தப்படும் அந்தக் கண்ணீர் மட்டும்தான் இன்னும் அப்படியான ஒரு அன்பை உயிரோட்டமானதாக வைத்திருக்கிறது. நானும் அலுவலகப் பெண் ஊழியரும் கடிகாரமும் அறிவிப்புப் பலகையும் காத்திருப்பு இருக்கைகளும் என அந்த அமைதியில் மிதந்தபடி இருந்தோம்.
“அவரும் நானும் பக்கத்துப் பக்கத்து வீடு. போனா அவர் முகத்த பாக்கனுமேனுதான் இவ்வளவு தூரத்துல கல்யாணம் பண்ணிட்டு வந்தேன். வந்தவ அதுக்கப்புறம் போகவே இல்லை. அந்த முகத்தப் பாக்குற சக்தி எனக்கில்லை.” மீண்டும் பெருமூச்சொன்றை இழுத்து விட்டார்.
இந்தப் பெண்ணுக்குத்தான் எத்தனை அழுத்தம். நான் அவரது கைகளை என் கைகளால் பற்றினேன். மெல்ல தட்டிக்கொடுத்தேன். இப்போ அவர் எப்படி இருக்கிறார் என்று எதாவது தெரியுமா? என்றேன்.
இல்லை என்று தலையசைத்தார். அதே அழுத்தத்தோடு.
நீங்க எப்படி இருக்கீங்க அதாவது அவருக்குத் தெரியுமா?
தெரியாது என்றார்.
உங்களுக்குத் தெரிஞ்சிக்கனும்னு தோணலையா?
“தோணுது. ஆனா எப்படி. யாரக் கேக்குறது. ”
ஆமாம். யாரைக் கேட்பது. நானும் ஒருமுறை அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டேன். பிறகு கூறினேன்
நீங்க ஒரு லெட்டர் எழுதலாமே?
ஒரு நமட்டுச் சிரிப்போடு எழுதலாம். எனக்குத்தான் எழுத வராதே மா. படிக்கலையே என்றார்.
நான் எழுதித் தரேன். உங்களுக்கு எழுதனும்னு தோணினா சொல்லுங்க என்றேன். இன்னும் என் கைகள் அவர் கைகளைப் பற்றியபடிதான் இருந்தது.
அவர் யோசிப்பதாக எனக்குத் தோன்றியது. பின் அவர் கேட்டார், இது சரியா வருமா? அவருக்கு எதும் பிரச்சினை வராதுல்ல. நம்மளால யாரு வாழ்க்கையும் கெட்டுடக்கூடாதுல. அச்சமயம் என்னவோ அவர் மிதமிஞ்சிய அப்பாவியாகத் தோன்றினார்.
“காலம் ஓடிப்போய்டுச்சு. உங்க பசங்க மாதிரி அவங்க பசங்களும் படிச்சிப் பெரியாளா வந்துருப்பாங்க. உங்கள மாதிரி அவரும் இன்னேரம் உங்கள நினைச்சி வருத்தப்படுறாருனா இது ஒரு பெரிய ஆறுதல்தான். தப்பா போக எதுவும் இல்லை மா” என்றேன். பிறகு
நான் சிறிதும் தாமதிக்காமல் ஒல்லியான ஊழியரிடம் சென்று ஒரு இன்லண்ட் லெட்டர் வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தேன். கைப்பையில் இருந்து ஒரு பேனாவை எடுத்தேன். சொல்லுங்க நான் எழுதுறேன் என்று தயாரானேன்.
அவர் அமைதியாக அமர்ந்திருந்தார் மிக ஆழமான மௌனத்தோடு. நான் என் கைகளை எடுக்காமல் அவர் கைகளை உலுக்கினேன். பின் இயல்பு நிலைக்கு வந்தவராக நேராக நிமிர்ந்து அமர்ந்தார். அந்த அழுத முகம் கொஞ்சம் வெட்கப்படத் தயாரானது. குமிழ்ச்சிரிப்பு ஒன்று அவர் உதட்டில் மையம் கொண்டது.
“நீங்க அப்படியே சொல்லுங்க நான் அதை அப்படியே எழுதிடுறேன்” என்றேன்.
அவர் கூறத் தொடங்கினார்.
“அவருக்கு…..” மிக அழகாகத் தொடங்கியது கடிதம்.
மீண்டும் அமைதியானார்.
நான் கேட்டேன். அவருக்கு… அடுத்து என்ன எழுதனும்.
அவருக்கு
அன்புடன் கங்கா எழுதுவது.
ஓ. உங்க பேரு கங்காவா? என்றேன். ஆமாம் என்றாள்.
நலமா இருக்கீங்களா? என்னை நியாபகம் இருக்குங்களா?”
இரண்டு வரிகளுக்குப் பின் எழுதிட்டியா என்றார் என்னைப் பார்த்து.
நீங்க சொல்லுங்க. நான் எழுதிகிட்டேதான் இருக்கேன் என்றேன்.
“உங்க வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க.”
“கபடி விளையாட்டுல கீழ விழுந்திங்களே அந்தக் காயம் சரியாய்டுச்சா?
“வலப்பக்கம் கடவாயில இருந்த சொத்தப்பல்ல புடிங்கிட்டிங்களா? ”
“நேத்துக்கூட உங்களுக்குப் புடிச்ச முட்டக் கொழம்பு வச்சேன். திங்கதான் நீங்க இல்ல. இன்னுமும் உங்களுக்குப் புடிக்கும் தான. ”
“உங்கம்மா சொல்றமாதிரி அந்தப் புளியந்தோப்புப் பக்கம் அடிக்கடி போகாதீங்க. காத்து கருப்பு அண்டும். ”
“எனக்கு மூனு பொண்ணு. உங்கள மாதிரி நல்ல படிக்க வச்சி ஆளாக்கிட்டேன். ஆறு பேரபசங்க. கடைசி நாள எண்ணிக்கிட்டு இருக்கேன். என் கண்ணு மூடுறதுகுள்ள உங்களப் பாப்பனானு மனசு ஏங்குது.. ”
என்றபடி தொண்டைக்குழியை அடைத்த அழுகையை விழுங்கினார். நானும் சுவர்க் கடிகாரமும் அறிவிப்புப் பலகையும் காத்திருப்பு இருக்கைகளும் அடுத்து அவர் கூற வரும் வார்த்தையை எதிர்பார்த்தபடி இருந்தோம்.
எழுதிட்டியா மா? என்றார் என்னிடம்.
இதுவரைக்கும் எழுதிட்டேன். அடுத்து சொல்லுங்க என்றேன்.
எதுல நிறுத்துனேன் என்றவருக்கு மீண்டும் அதுவரை எழுதியிருந்த கடிதத்தை வாசித்துக் காட்டினேன்.
போதும் மா. இது போதும் முடிச்சிக்கலாம் என்றார்.
இன்னும் இடம் இருக்கு மா. எதாவது சொல்லுங்க என்றேன் நான்.
ஏக்கத்தோட நான் இருக்கேன்னு வருத்தப்படாதிங்க. இந்தப் பிறப்பு போனா போகட்டும். அடுத்த பிறப்புல நல்லா படிச்சி உங்க கை பிடிப்பேன்.
அன்போடு
உங்கள் கங்கா.
கடிதத்தை மடித்து ஒட்டினேன்.
மழை சற்று ஓய்ந்திருந்தது. நானும் சுவர்க் கடிகாரமும் காத்திருப்பு இருக்கைகளும் ஓய்ந்தது போல. காசாளர் உள் நுழைந்தார். இன்னும் ஓரிரு வாடிக்கையாளர்கள் வந்து சேர்ந்தனர்.
கங்கா அம்மாவிடம் வெளியில் இருக்கும் சிவப்பு நிறப் பெட்டிக்குள் அந்தக் கடிதத்தைப் போட வேண்டும் என்று கூறிவிட்டு நான் காசாளரைப் பார்க்கச் சென்றேன். பணத்தை அவரிடம் கொடுத்து அதற்கான இரசீதைப் பெற்றுத் திரும்பியபோது காத்திருப்பு இருக்கையில் நான்கைந்து நபர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால் கங்கா அம்மாவை மட்டும் காணவில்லை. இரசீதைக் கைப்பையில் திணித்துக் கொண்டே தபால் நிலையத்தின் வெளியே ஓடி வந்து பார்த்தேன். கண்களுக்கு எட்டிய தூரம் வரை எங்குமே கங்கா அம்மாவை நான் பார்க்கவில்லை.
மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. ஒரு முறை என் அருகில் இருந்த தபால் பெட்டியைத் தொட்டுப் பார்த்தேன். பின் நனைந்தபடியே பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன்.
Dora Poliedrica Painting

ஆசிரியர் குறிப்பு.
சேலத்தை அடுத்த ஆத்தூரில் பிறந்த கீதா பட்டதாரிப் பெண். கவிதைகளில் தொடங்கிய இவரது கலைப் பயணம்
பாடல்கள், கட்டுரைகள், பத்திகள், கதைகள் எனப் பரிணமித்து வருகிறது.
பட்டறிந்தவற்றிலிருந்து தனது ஆக்கங்களை வெளிக்கொணரும் கீதாவிற்கு கதை எழுதுவதில் பெரும் மயக்கம். கதை வடிவமே தனக்கான வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டடைந்த இவர் வருங்காலத்தில்
தேர்ந்த கதைசொல்லியாகவும், சிறுகதை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் தடம் பதிக்கும் தகவமைந்தவர். கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது கணவர். இவரது கவிதைகள் இணைய இதழ்களில் முகிழ்நிலா என்ற பெயரிலும் கீதா என்ற பெயரில் நீலம் இதழிலும் வெளி வந்துள்ளன.
Leave a Reply