ஓவியர் பார்வதி பாலா திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைதல், களிமண் சிற்பங்கள் செய்தல் ஆகியவற்றில் நாட்டம் கொண்டுள்ளார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து வரும் இவர், இதன் வாயிலாகக் கலைகளில் தன்னைப் புதுப்பித்துக் கொள்பவராகவும் திகழ்கிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது ரேகை ஓவியம்.
பழமை வாய்ந்த கோயில் சுவரோவிய வர்ணங்களின் மீது ஏற்பட்ட ஈடுபாடும் தற்சார்பு வாழ்வியலின் முக்கியத்துவமும் இவரை இயற்கை வர்ண ஆய்வில் ஈடுபடச் செய்துள்ளன. TNMAI அறக்கட்டளையைச் சேர்ந்த மாதவன் பிள்ளை அவர்களின் முன்னெடுப்பில், 2022 மே மாதம் One Two Art Gallery இல் இயற்கை வண்ண ஓவியங்கள், தேங்காய் ஓடு, விதைகள், சிப்பிகளால் செய்யப்பட்ட அணிகலன்களைக் காட்சிப்படுத்தி உள்ளார்.
ம.செந்தமிழனின் ‘ஊழி’ உட்பட செம்மைப் பதிப்பக நூல்களுக்கு முகப்பு, உள் ஓவியங்கள் வரைந்துள்ளார். 2016 இல் தனது ஓவிய வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து ஓவியக் கண்காட்சி நடத்தியுள்ளார். வானகம், வள்ளுவம், செம்மை, பொதிகைச் சோலை போன்ற அமைப்புகளில் சிறார்களுக்கு ஓவியம் மற்றும் இயற்கை வண்ணப் பயிற்சி அளித்துள்ளார். வழிபாட்டு ஓவியங்கள், கருத்து ஓவியங்கள், ஆடை ஓவியங்கள், திருமணப் பதாகை ஓவியங்கள், புடைப்புச் சிற்பப் பலகைகள் செய்தல், விதைகள் – களிமண் – தேங்காய் ஓடு போன்ற பொருட்களைக் கொண்டு அணிகலன்கள் செய்தல், சுவர் ஓவியங்கள், லோகோ வடிவமைப்பு ஆகிய வெவ்வேறு கலைவடிவங்களில் தொடர்ந்து செயல்பங்காற்றி வருபவர் ஓவியர் பார்வதி பாலா.
நீலவான், நிலா உடனான மௌன உரையாடல்கள்.
வறண்ட பூமியை ஆரத் தழுவுதல். அன்பின் துளிகளாய் வானம் பொழிந்த துளிகள். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.
இறையினைக் கண்டதில்லை. ஆயினும் அதன் துளிகளே நாம்.
உயிர்க்குடமாகிய கூடல்.
மருத்துவக் கருத்தொன்று நீர்வண்ண ஓவியமாய்…
மனம் – நீர் – நிலவு – சூழல் ஆகியவற்றின் நேர்கோட்டுக் குளுமை.
வேரூன்றி வளர்ந்து வளரும் சந்ததிகளுக்குள்ளும் விருட்சமாக வளர வேண்டும்.
(இயற்கை வண்ணங்களைக் கொண்டு கைரேகைகளால் வரையப்பட்ட ஓவியம்)
விரல்களே தூரிகை; மிதக்கும் விடுதலை.
(இயற்கை வண்ணங்களைக் கொண்டு கைரேகைகளால் வரையப்பட்ட ஓவியம்)
ஒற்றை முனி பல்லுருவங்களாய். தனித்திருக்கும் நாம் ஆதியில் யார்? உள்ளொளியின் தேடல்.
மீண்டும் மீண்டும் மலரும் யாக்கை மலர்.
(இயற்கை வண்ண ஓவியம்)

கவிஞர், பத்திரிகையாளர். இயற்பெயர் ராச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழே இயங்கும் ஜனசக்தி வார இதழில் பணிபுரிந்து வருகிறார். வேர்முனைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலையம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ‘பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்’ எனும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகி உள்ளன. ‘மாமிச அம்புலி’ என்னும் சிறுகதை அகழ் இணைய இதழில் எழுதியுள்ளார்.
Leave a Reply