Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

திறந்திடு சிஸேம்!

லோகமா தேவி
லோகமா தேவி
March 1, 2026
திறந்திடு சிஸேம்!

அலி மரக்கூட்டங்களுக்குப் பின்னே ஒளிந்திருந்தான். பெரிய மூட்டைகளோடு வந்த நாற்பது திருடர்களும் அந்த மாபெரும் மலையின் முன்னால் ஒவ்வொருவராக  குதிரைகளிலிருந்து இறங்கி நின்றார்கள். கொள்ளையர்களின் தலைவன் உரக்க மலையைப் பார்த்து “அப்ராகாடப்ரா திறந்திடு சிஸேம்” என்றதும், பெரும் சத்தத்துடன் அந்த மலையின் ஒரு பகுதி விலகி குகையின் உட்புறத்தைக் காட்டியது.

அத்தனை தொலைவில் இருந்த அலிக்குக் குகையின் உள்ளே கொட்டி வைக்கப்பட்டிருந்த பொன் மலைகளும், ஆபரணங்களும், பட்டுத் துணிகளும் தெரிந்தன. கொள்ளையர்கள் தங்களின் மூட்டைகளில் இருந்த செல்வத்தைக் குகையில் வைத்துவிட்டு வெளியே வந்து “அப்ராகாடப்ரா மூடிடு சிஸேம்” என்றதும், குகை பழையபடி மூடி அங்கு வெறும் மலை மட்டும் இருப்பது போலத் தோற்றமளித்தது.

இந்தக் காட்சி நாம் அனைவரும் அறிந்ததே. அலி பின்னர் தனியே அந்தக் குகைக்குச் சென்று அதே “அப்ராகாடப்ரா திறந்திடு சிஸேம்” என்று சொல்லி, குகைக்கதவைத் திறந்து உள்ளே சென்று வேண்டிய மட்டும் பொன்னையும் அருமணிகளையும் எடுத்துக்கொண்டு வந்து செல்வந்தன் ஆன கதையை நாம் அனைவரும் ஆயிரத்தொரு இரவுகளில் வாசித்திருக்கிறோம்.

அப்ராகாடப்ரா என்னும் மந்திரச்சொல் முன்காலத்தில் மந்திர வித்தைகளின் போது, குறிப்பாகத் தொப்பியிலிருந்து முயல் வரவழைக்கையில் சொல்லப்படும் ஒன்றாக 2-ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்தது. முதன்முதலாக அச்சில் இந்தச் சொல் ரோமானியப் பேரரசரான கேரகாலாவின் அரசவை மருத்துவரான குவிண்டஸ் செரீனஸ் சமோனிகஸ் 2-ம் நூற்றாண்டில் எழுதிய ‘Liber Medicinalis’ என்னும் மருத்துவ நூலில் (மலேரியா போன்ற) காய்ச்சல் மறைந்துபோவதற்காக மந்திரச் சொல்லாகக் குறிப்பிடப்பட்டது.

முக்கோண வடிவில் கத்தரிக்கப்பட்ட ஒரு தாளில் ‘அப்ராகாடப்ரா’ என்று எழுதி, அதை ஒன்றுக்குப்பின் ஒன்றாக ஒவ்வொரு சொல்லாகக் குறைத்து எழுதிக் கொண்டே வந்து, இறுதியில் வெற்றிடத்தை விட்டு அந்தக் காகிதத்தைத் தாயத்தாகக் கழுத்தில் அணிந்து கொண்டால் அந்தக் காய்ச்சலும் அந்த எழுத்துக்களைப் போலவே மாயமாகி மறைந்து போகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாயச்சிகிச்சை முறை அப்போது வெகுவாகப் புழக்கத்தில் இருந்தது. அந்நூலுக்குப் பின்னர் அப்ராகாடப்ரா என்னும் மந்திரச்சொல் எதையும் மறைந்துபோகச் செய்யவோ அல்லது மீண்டும் வரவழைக்கச் செய்யவோ கூடிய சக்திவாய்ந்த மந்திரச் சொல்லாகக் கருதப்பட்டது.

பல நூற்றாண்டுகள் வாய்மொழியாக, தலைமுறைகளாகச் சொல்லப்பட்ட ஆயிரத்தொரு இரவுகள் 8-ம் நூற்றாண்டில் பெர்சிய மொழியில் ‘ஆயிரம் கதைகள்’ என்று பொருள்படும் ‘Hezar Afsan’ என்னும் அச்சு நூலாக முதலில் வெளியானது.

பின்னர் அது அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, பல துணைக் கதைகள் சேர்க்கப்பட்டு விரிவாக்கப்பட்டு 9-லிருந்து 12-ம் நூற்றாண்டுகளில் பாக்தாத்தில் வெளியானது. இதே நூல் 13-14-ம் நூற்றாண்டுகளில் எகிப்தில் மேலும் மாயாஜாலங்களும், பூதங்களும், நகர வாழ்வோடு தொடர்புடைய பல அற்புதங்களும் இணைக்கப்பட்டு வெளியானபோது, அதில் அப்ராகாடப்ரா என்னும் சொல்லும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஃப்ரெஞ்ச் தொல்லியலாளரும், மொழியியலாளருமான ஆண்டனி கேலண் (Antoine Galland) தான் 18-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கதைகளை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தார். ஆனால் முந்தைய அரபி, பெர்சிய மற்றும் எகிப்திய மொழி வடிவங்களில் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ கதை இடம்பெற்றிருக்கவில்லை. தற்செயலாக ஒரு சிரிய கதைசொல்லியின் மூலம் இந்தக் கதையைக் கேள்விப்பட்ட ஆண்டனி, அதை ஆயிரத்தொரு இரவுகளை ஃப்ரெஞ்ச் மொழியாக்கம் செய்கையில் சேர்த்துக்கொண்டதோடு, கள்வர்கள் குகையின் முன்னால் நின்று அப்ராகாடப்ரா என்று சொல்லிவிட்டுக் கூடுதலாக “Sésame, ouvre-toi” (திறந்திடு சிஸேம்) என்று சொல்லி அதன் பிறகே குகை திறக்கிறது என்பதையும் இணைத்திருந்தார்.

ஏன் ஆண்டனி இந்தச் சொல்லில் ‘சிஸேம்’ என்று எள்ளின் பெயரைக் குறிப்பிட்டார், ஏன் பார்லி அல்லது கோதுமை என்று குறிப்பிடவில்லை என்பது குறித்து மொழியியலாளர்கள் பல நூறாண்டுகள் விவாதித்தார்கள். இதற்கான தாவரவியல் அடிப்படையாக, அப்போது மத்தியக் கிழக்கு நாடுகளில் அதிகம் பயிரான எள் விதைகள் முற்றிய நிலையில் ‘டப்’ என்னும் சிறு ஒலியுடன் கனி வெடித்துத் திறக்கையில் சிதறி விழுவதால், குகை திறக்க ‘சிஸேம்’ என்னும் சொல்லை ஆண்டனி பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதினர்.

பின்னர் 1785-ல் ஆங்கில லெக்சிகன் (Lexicon) அகராதியில் ஆண்டனியின் “Open Sesame” என்னும் சொற்கள் அச்சில் வெளியாகின. 19-ம் நூற்றாண்டில் வேலை செய்யாமல் எளிதில் ஒரு விஷயத்தை அடைவதற்கு “Open Sesame” என்னும் சொற்கள் இணையாகச் சொல்லப்பட்டன. 1969 இல் கல்விக்கூடங்களில் முதன்முதலாகச் சேர்க்கப்படும் குழந்தைகளின் முன்னால், அவர்கள் மனது கல்விக்குத் திறக்கட்டும் என்னும் அர்த்தத்தில் “Open Sesame” என்று சொல்வது வழக்கத்தில் இருந்தது.

ஃப்ரெஞ்ச் மொழியாக்கத்தில் 18-ம் நூற்றாண்டில்தான் ‘திறந்திடு சிஸேம்’ என்பது அறிமுகமானது என்றாலும், எள் பயிரில் கனிகள் சிறு ஒலியுடன் வெடித்துத் திறப்பது 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காடுகளில் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது.

ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கருகிய எள் விதைகள் கண்டெடுக்கப்பட்டன. சிந்து நதிப் படுகையில் உருவான நாகரிகத்தில் (கி.மு. 3000 – 2500) மனிதன் முதன்முதலில் பயிரிட்ட எண்ணெய் வித்துப் பயிர் எள் தான் என்பதற்கு இவை சான்றளிக்கின்றன.

கி.மு. 2000-ம் ஆண்டிற்கு முன்பே, சிந்து சமவெளி மக்கள் எள் மற்றும் அதன் எண்ணெயை மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி செய்தனர்.

கி.மு. 1500-ல் பண்டைய எகிப்தில் எள் ‘செம்செம்ட்’ (Semsemt) என்று குறிப்பிடப்பட்டு வழிபாட்டிலும், மருந்துப் பொருளாகச் சிகிச்சையிலும் பயன்படுத்தப்பட்டதைப் பாப்பிரஸ் நூல் குறிப்பிடுகிறது. மெசபடோமியாவில் கி.மு. 600-ல் எள் எண்ணெயைத் ‘திரவத் தங்கம்’ என அழைத்த பாபிலோனியர்கள், எள் மற்றும் எள் எண்ணெயை வரி செலுத்தவும் சம்பளமாகவும் பயன்படுத்தினர்.

பிறகு 8-ம் நூற்றாண்டிலிருந்துதான் எள் கனி வெடித்துக் கிடைக்கும் பல சத்துக்கள் நிரம்பிய அதன் விதைகள் ‘பொக்கிஷம்’ என்று பல நாகரிகங்களில் கருதப்பட்டதால், இந்த ‘திறந்திடு சிஸேம்’ என்பது உலகெங்கிலும் பிரபலமானது.

யூதர்களின் மாயாவாதச் சடங்குகளில் எள் சொர்க்கத்தின் இன்னொரு பெயராகக் கருதப்படுகிறது. ஹீப்ரூ மொழியிலும் எள்ளுக்கு ‘கடவுள்’ என்னும் பொருள் இருக்கிறது. Sesame என்னும் கிரேக்கச் சொல் பழமையான செமிடிக் மொழிகளில் ஒன்றான, இப்போது புழக்கத்தில் இல்லாத பண்டைய மெசபடோமியர்களின் மொழியான அக்காடியனின் (Akkadian) தாவர எண்ணெய் என்னும் பொருள் கொண்ட ‘šamaššamu’ என்னும் சொல்லில் இருந்து உருவானது.

மனிதர்கள் பயிரிட்ட முதல் எண்ணெய்ப் பயிர் எள்தான். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள் இந்தியாவில் பயிராகிறது. விஷ்ணுவின் வியர்வையிலிருந்து உருவான பயிர் என்று இந்து மதம் எள்ளைச் சொல்கிறது. தரிசு நிலங்களில் கூட எள் பயிராகும். பல மதங்களில் எள்ளும் எள் எண்ணெயும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

பயிரிடப்படும் எள்ளின் (Sesamum indicum) காட்டு மூதாதையான Sesamum mulayanum இன்றும் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையகப் பகுதிகளில் காணப்படுகின்றன. இது எள்ளின் பிறப்பிடம் இந்தியாதான் என்பதற்கான வலுவான மரபணுச் சான்றாகும். கி.மு 1000ங்களில் எழுதப்பட்ட வேத கால நூல்களில் எள் ஒரு புனிதமான தானியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இந்து சமயச் சடங்குகளில் எள் முக்கியப் பங்கு வகிப்பதற்குக் காரணம் அதன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகாலத் தொன்மைதான்.

விதையின் எடையில் சுமார் 57% எண்ணெய் அளவு கொண்டிருக்கும் எள்ளின் பல பயன்களில் ஒன்று, அதிலிருக்கும் லிக்னன்களான sesamin & sesamolin ஆகியவற்றின் ரத்தக் கொழுப்பைக் குறைக்கும் இயல்புதான். இந்த இரு வேதிப்பொருட்களால்தான் எள் எண்ணெய் அதிக காலத்துக்குக் கெட்டுப்போகாமல் இருக்கிறது.

சமஸ்க்ருதத் தைலம் என்பதிலிருந்து உருவான இதன் தமிழ்ப் பெயர்களில் ஒன்றான ‘திலம்’ என்பதிலிருந்துதான் ஆங்கிலப் பெயரான ‘Til’ என்பது வந்திருக்க வேண்டும். எள்தான் எண்ணெய்ப் பயிர்களின் ராணி. பெடாலியேசி (Pedaliaceae) குடும்பத்தைச் சேர்ந்த எள் பயிரின் தாவரவியல் பெயர் Sesamum indicum. இண்டிகம் என்னும் சிற்றினப் பெயர் இந்தப் பயிர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது என்பதைச் சொல்லுகிறது.

பொதுவாக 100 செ.மீ உயரம் வரை வளரும் எள் பயிர், நல்ல வளமான நிலங்களில் 2 அடி உயரம் கூட வளரும். நிமிர்ந்து நேராக, உறுதியாக வளரும் இது, பல மென்மயிர்கள் போன்ற வளரிகளால் சூழப்பட்ட நாற்கோணத் தண்டைக் கொண்டிருக்கும். எள் பயிரின் கீழ்ப்புறம் இருக்கும் இலைகள் அகலமாகவும் ஓரங்களில் மடிப்புகள் கொண்டும் இருக்கும். மேற்புற இலைகள் நீளமாகவும் அகலம் குறைவாகவும் அமைந்திருக்கும். அதுபோலவே கீழ்ப்புற இலைகள் எதிரடுக்கிலும், மேற்புற இலைகள் மாற்றடுக்கிலும் அமைந்திருக்கும். இதன் ஆணிவேர்த் தொகுப்பு மிக உறுதியானது; பிற எண்ணெய் வித்துக்களைக் காட்டிலும் எள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.

மணி வடிவிலான அழகிய குழல் போன்ற மலர்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது இளம் ஊதா நிறங்களில் இருக்கும். செவ்வக வடிவக் கனி வெடித்துத் திறந்து பளபளப்பான கருமை நிறத்திலிருக்கும் எள் விதைகளை உதிர்க்கும். பசும்பாலைக் காட்டிலும் எள் எண்ணெயில் அதிக கால்சியம் இருக்கிறது.

ஆயுர்வேத மருத்துவம் எள் எண்ணெயைப் பல சிகிச்சைகளில் பயன்படுத்துகிறது. தாவர எண்ணெய்களில் எள் எண்ணெய்க்குத்தான் ‘நல்ல எண்ணெய்’ என்று பெயரே இருக்கிறது.

 


எள் சக்களத்தி

Cleome monophylla என்னும் எள் பயிரைப் போலவே இருக்கும் தாவரத்திற்கு ‘எள் சக்களத்தி’ என்று பெயர். எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள் தாவரங்களில்!


 

லோகமா தேவி
லோகமா தேவி

வேட்டைக்காரன் புதூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொள்ளாச்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணி புரிந்துகொண்டிருக்கிறார். மேலும், அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.

தாவர உலகம், ஸாகே-போதையின் கதை, வானவில் மரம், விலக்கப்பட்ட கனி, தந்தைப்பெருமரம், நுண்ணுயிருலகு உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மரங்களின் மறை வாழ்வு என்னும் நூலை மொழியாக்கம் செய்துள்ளார்.

தோழி விருது 2019, செங்கால் நாரை விருது 2022, இந்திய மருத்துவக் கழகம் வழங்கிய Women of Wonder விருது 2025, சிறந்த அறிவியல் நூலிற்கான முனைவர் உலோ.செந்தமிழ்க்கோதை நினைவு விருது 2025 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • முதலைகளின் தீப்பாடல்

    முதலைகளின் தீப்பாடல்

    March 1, 2026
  • தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    March 1, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    March 1, 2026
  • ஆன் செக்ஸ்டன் கவிதைகள் – 06

    ஆன் செக்ஸ்டன் கவிதைகள் – 06

    March 1, 2026
  • இலங்கையின் இருண்ட யுகம் – ஊடகச் சுதந்திரமும் பாலியல் துஷ்பிரயோகங்களும்

    இலங்கையின் இருண்ட யுகம் – ஊடகச் சுதந்திரமும் பாலியல் துஷ்பிரயோகங்களும்

    March 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (16)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இலக்கியம் (18)
  • உரையாடல் (9)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (95)
  • கட்டுரை (4)
  • கதை (6)
  • கதை (4)
  • கவிதை (76)
  • கவிதை (13)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (13)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (42)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (8)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (11)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (33)
  • வாழ்வியல் (2)

Archives

  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • முதலைகளின் தீப்பாடல்

    முதலைகளின் தீப்பாடல்

    March 1, 2026
  • தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    March 1, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    March 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (16)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இலக்கியம் (18)
  • உரையாடல் (9)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (95)
  • கட்டுரை (4)
  • கதை (6)
  • கதை (4)
  • கவிதை (76)
  • கவிதை (13)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (13)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (42)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (8)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (11)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (33)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top