சயனப் பெருமாள் கோயில் வளாகத்தில் இருக்கும் நாகலிங்க மரத்தடியில் அட்டனக்காலிட்டு அமர்ந்திருந்தான் சசிகுமார். ரத்தப் பிசுபிசுப்புடன் உரிக்கப்பட்டிருந்த கருநாகத்தின் சட்டையை, இரண்டாக மடிக்கப்பட்ட ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஒட்டி வைத்திருந்தான். தரையில் விரிக்கப்பட்டிருந்த தடித்த காக்கி நிற அட்டையில் மார்க்கர் பேனாவால் சிலரது பெயர்களை எழுதி வைத்திருந்தான். முத்துமுத்தான கையெழுத்துகளிலிருந்த அந்தப் பெயர்கள்மீது குங்குமத்தைக் கொட்டியிருந்தான். அந்தக் குங்குமத்தின் மேல் கொஞ்சம் நீர் தெளித்துப் பரப்பி விட்டிருந்தான். கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் இருப்பவனைப் போலக் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன், பெருங்கோபம் கொண்டவன் போல, ஆங்காரமாக் கொக்கரித்துக் கொண்டே, அருகில் கழற்றிப் போட்டிருந்த குதி தேய்ந்த தன்னுடைய செருப்பை எடுத்துத் தரையில் விரிக்கப்பட்டிருந்த அட்டை மீது எழுதியிருந்த பெயர்களைச் சத்தமாக உச்சரித்துக்கொண்டே, அந்தப் பெயர்கள் மீது பரப்பப்பட்டிருந்த அடர்ச் சிவப்பு குங்குமத்தை ஆவேசத்தோடு அடித்துக் கொண்டிருந்தான். நீர் கலந்த அந்தக் குங்குமம், செருப்படி பட்டு ரத்தச் சிவப்பாக மாறி அவன் முகமெங்கும் தெளித்தது. பிறகு பிடரி வரை நீண்டு தொங்கிக் கொண்டிருந்த தலைமுடி கோதி நிமிர்ந்தவன் அவனது முகத்தில் வழிந்த குங்குமச் சிதறல்களை லாவகமாகத் தன் விரல்களால் வழித்தபடி, அதை வேகமாகச் சுண்டி விசிறியடிக்கும் அந்நொடியில் அவன் அத்தனை அகோரமாகக் காட்சியளித்தான். பழிதீர்த்து வன்மம் மறைந்த மகிழ்ச்சியில் குழந்தைச் சிரிப்புடன் எழுந்து அங்கிருந்து மலையடிவாரத்தை நோக்கி நடந்தான் சசிகுமார்.
“ஆதமங்கலம் புதூர் சுத்து வட்டாரத்துல சசிகுமாரைத் தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. அவன் நாற்பது வயதுடைய ஒரு சித்தன். இராமாயணம், மகாபாரதம்னு புராணக் கதைகளை அச்சு பிறழாமல் சொல்லுவான். அறிவியல், விஞ்ஞானத் தொழில்நுட்பம், அரசியல், சட்டம், கலை, இலக்கியம் எனச் சகலமும் பேசுவான். சித்த வைத்தியராக மாறிப் பிணிதீரக் கேட்பவர்களுக்கு மருத்துவக் குறிப்புகள் கூட வழங்குவான். திடீரென யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அந்த ஊரை விட்டு நடந்தே ராமேஸ்வரம் சென்று விடுவான். அங்கிருந்து ரயிலேறி சென்னை போவான், சென்னையிலிருந்து காசிக்குப் போவான், மும்பை வீதிகளில் சுற்றித் திரிவான். இப்படி மனம் போன திசையில் கால்போன போக்கில் காசே இல்லாமல் இந்தியாவையே சுற்றி வலம் வருவான். அவன் பூண்டிருக்கும் பரதேசிக் கோலமும் கற்றிருக்கும் ஆன்மீகமும் நுனி நாக்கில் இருக்கும் ஆங்கிலமும் அவனுக்குக் கைகொடுத்துக் கொண்டிருக்கிறது போலும். ஆனால் உள்ளூர் வாசிகளைப் பொறுத்தமட்டில் அவனொரு பைத்தியக்காரன்”
“சுமார் முப்பது வருஷத்துக்கு முந்தி அந்த ஊரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவன். படிப்பில் படு சுட்டி. ஊரோட முதல் டாக்டரா வரப் போறான் என அந்த ஊரு மக்கள்ல இருந்து ஸ்கூல் டீச்சருங்க வரைக்கும் ரொம்ப நம்பிக்கையோடயும் எதிர்பார்ப்போடும் இருந்தாங்க. டீச்சருங்க கணிப்பும் ஊரு மக்களோட நம்பிக்கையும் வீண் போகல. பிளஸ் டூ பப்ளிக் எக்ஸாமுல ஆயிரத்து நூற்றி முப்பத்தெட்டு மார்க் எடுத்து மாவட்டத்துலயே முதல் மாணவனா வந்தான். சசிகுமாருக்கு ஒரு அக்காவும் தம்பியும் இருந்தாங்க. சசிகுமார் அளவுக்கு இல்லேன்னாலும் அவுங்களும் நல்லா படிக்குற பசங்கதான். அக்கா சசிகலா வேலூரில் இருக்க காலேஜில் பிகாம் படிச்சிட்டு இருந்தா. தம்பி செல்வக்குமார் பத்தாவது பப்ளிக் எக்ஸாம் எழுதிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருந்தான். சசிகுமார் அப்பா ஒரு லாட்டரிச் சீட்டு விக்குற ஏஜென்ட். உள்ளூருலயே ஒரு லாட்டரிச் சீட்டுக் கடையும் வச்சிருந்தார். அதோட உள்ளூர் மக்களுக்கு வட்டிக்குக் கடனும் கொடுப்பார். அவுங்க அம்மா ஒரு இல்லத்தரசி. சசிகுமார் குடும்பம் ஆதமங்கலம் புதூரில் ஒரு செல்வாக்கான குடும்பமும் கூட. நிலபுலம்னு அவுங்களுக்குப் பாரம்பரியச் சொத்துக்களும் ஏராளமா இருந்துச்சு. ஆதமங்கலம் புதூர்ல மட்டுமில்லாம அக்கம் பக்கத்து ஊருல உள்ளவங்களுக்குக் கூட ஊரு உடையார தெரியாம இருக்க வாய்ப்பில்ல. அத்தனை செல்வாக்கான மனிதர் சசிகுமாரின் அப்பா சங்கரலிங்கம் உடையார்”
இப்படிப்பட்ட குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த சசிகுமாரோட வாழ்க்கை ஏன் இப்படித் தலைகீழா மாறுச்சு? பெரும்பாலான மனிதர்கள் ஏதோ ஒரு லட்சியத்தோடும் திட்டத்தோடும்தான் தங்கள் வாழ்நாளைக் கடத்த முயற்சிக்கிறார்கள். காலம் எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் கொடுக்கிறது கிடையாது. சசிகுமாரைப் பற்றி சந்துரு சொல்லக் கேட்டதும் காலத்தின் மீது கடுங்கோபமாக இருந்தது.
“பிளஸ் டூ முடிச்சதுமே சென்னை மருத்துவக் கல்லூரியில விண்ணப்பிச்சிருந்தான் சசிகுமார். கவுன்சிலிங் லெட்டரும் வந்துருந்துச்சு அவனுக்கு. மருத்துவக் கல்லூரி மாணவனா காலடி எடுத்து வைக்கப் போற அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருந்தான். ஆனா அந்தப் பொல்லாத காலம் அவனுக்காகக் காத்திருக்கல. நேர்காணலுக்குப் போகவிருந்த மொத நாள் சாயுங்காலம் தன்னோட ஸ்கூல் டீச்சரப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அவனுக்குப் பேரதிர்ச்சி ஒன்னு காத்திருந்தது.
நாட்டு ஓடுவேய்ந்த பாரம்பரியமான அவன் வீட்டு வாச முன்னாடி ஊரே கும்பலா கூடியிருந்துச்சு. கூச்சலும் குழப்பமுமா ஊரு ஜனம் மொத்தமும் பதற்றத்தோட நின்னுகிட்டு இருந்தாங்க. தன்னோட சைக்கிள நிறுத்திட்டு என்னமோ ஏதோனு இவனும் பதற்றமா கூட்டத்த விலக்கிட்டு உள்ள போனான். போனவன் ஒரு கணம் உறைஞ்சி போய் நின்னான். கத்திக் கதறி அழக்கூட அவனுக்கு ஜீவன் இல்லை. மூர்ச்சையாகிப் பொத்தென்று கீழே விழுந்தவன் முகத்தில், அங்க கூடியிருந்தவங்க தண்ணீர் தெளித்து எழுப்பியதும் அடைத்துப் போன காதுகளில் அவனது அக்காவின் அழுகுரலும் மரண ஓலமும்தான் கேட்டுச்சு. நிலைகுலைந்து போனவன் நிதானித்து எழுந்து வீட்டின் கூடத்திற்குள் ஓடினான். கூடத்து நடு உத்திரத்தில தன் பொண்டாட்டிச் சேலையில தூக்குப் போட்டுக்கிட்டு நாக்கு நீண்டிருக்கச் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தார் அவனது அப்பா சங்கரலிங்கம் உடையார்!”
“ஊர்க்காரங்க ரெண்டு பேர் ஒரு ஏணியில் நின்னுகிட்டுப் புடவை சுருக்கை அவிழ்க்க முடியாமல் அறுத்துக் கொண்டிருந்தாங்க. அவனோட தம்பி செல்வகுமார் கையறு நிலையில் துவண்டு போய் நிற்க இரண்டு பேர் கைத்தாங்களாகப் பிடிச்சுக்கிட்டு இருந்தாங்க.
“ஐயோ அப்பா…… எங்கள இப்படி அநாதையா விட்டுட்டுப் போயிட்டீங்களே… அப்பா… அப்பா…”
பித்துப் பிடித்தவன் போலச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி நா வறண்ட தொண்டையோடு முனகிக் கொண்டிருந்தான். அவனது அம்மா வேதநாயகி தலைவிரி கோலமாக உறைந்து போய்ச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றி நாலைந்து பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
“வியாபாரத்துல என்ன நஷ்டமோ தெரியல இப்படி ஒரு முடிவ எடுத்துட்டாரு…”
“அட கூறுகெட்ட மனுசா… இருக்குற சொத்த வித்தாவது எப்பேர்ப்பட்ட கடனையும் அடைச்சிருக்கலாம்….”
“மூனு புள்ளைங்களப் பத்திக் கொஞ்சம்கூட யோசிக்காம இப்படிப் பண்ணிட்டாரே பாவி மனுஷன்…”
“மகாலட்சுமி மாதிரி இருக்குற இந்தப் பொண்டாட்டிய மறந்துட்டு இப்படிவொரு புத்திக் கெட்ட காரியத்த வூரு வொடையாரு பண்ணியிருக்கக் கூடாது…”
“இந்தப் பாழாப் போன ஊருல கட்டிக் கொடுக்குற வயசுல பொட்டப் புள்ளைய வச்சிக்கிட்டு மகராசி இனி என்ன பண்ணப் போறாளோ…”
“கடவுளுக்குக் கண்ணு இல்லங்குறது உண்மதான் போல எப்பேர்ப்பட்ட மனுசனுக்கு இப்படியொரு முடிவு…”
“படிக்கிற புள்ளைங்க எதிர்காலத்த நெனச்சிப் பாக்காம பாவி மனுசன் இப்படிப் பண்ணிட்டாரே…”
“பாவிப்பய கடவுளு ஒரு குருவிக் கூட்ட இப்படி அநியாயமா கலச்சிப்புட்டானே…”
பலரும் பலவிதமாகப் பேசிக் கலைஞ்சாங்க.
சங்கரலிங்க உடையார் செத்து ஆறு மாசத்துல புத்தி பேதலிச்சுப் போன அவரு பொண்ணும் நோய்வாய்பட்டுச் செத்துப்போனாள். வெளி உலகம் தெரியாத தாய் வீட்டுக்குள்ளவே முடங்கிக் கிடக்க ரெண்டு பசங்களும் நிர்க்கதியா நின்னாங்க. இந்தப் பசங்களப் பத்திக் கேள்விப்பட்ட உள்ளூர் சர்ச் பாதர் ஒருத்தரு ரெண்டு பசங்களையும் மேல படிக்க வச்சாரு… அஞ்சாறு வருஷம் கழிச்சு அடையாளம் தெரியாத ஆளுங்களால அடிச்சுக் கொல்லப்பட்ட அவுங்க அம்மாவோட சடலம் ஆறேழு நாள் கழிச்சு அம்மணமா ஏரிக்கரையில மெதந்துச்சு. போலீசுக்கு அடையாளம் காட்டப் போன சசிகுமாரு இது எங்க அம்மா இல்லனு சொல்லிட்டு, அந்தப் பொணத்தயே ரொம்ப நேரமா வெறிச்சுப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே இருந்தான்!”
“அம்மா செத்த வேதனையில மனம் பேதலிச்சுப் போச்சுனு ஊருசனம் மொத்தமும் அன்னைல இருந்து அவனப் பைத்தியமாதான் பார்த்தாங்க. அவன் தம்பி செல்வக்குமார் படிச்சு எப்படியோ ஒரு அரசு வேலைக்குப் போயிட்டான். மருத்துவக் கனவு கை நழுவிப் போன சசிகுமார் பேருக்கு பி.எஸ்ஸி மேத்ஸ் படிச்சான். பிறகு தொலைதூரக் கல்வியில என்னென்னவோ டிகிரிங்கலாம் முடிச்சான். எதுலயுமே பிடிப்பில்லாமல் போனவன், ஒரு கட்டத்துல வீடு வாசல மறந்து இப்படி வீதியில திரிய ஆரம்பிச்சுட்டான்!”
சசிகுமாரின் கதையைச் சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டான் நண்பன் சந்துரு. அந்தக் கணம் எனக்கு சசிகுமாரைப் பார்த்துப் பேசணும் போல இருந்தது. ‘இன்னொரு முறை வரும்போது கண்டிப்பா பாத்துப் பேசலாம்’ என அன்னைக்கு காலபைரவர் கோயில் வாசலில் உட்கார்ந்திருந்த சசிகுமாரை சந்துரு அடையாளம் காட்டியும் சசிகுமாரைச் சந்திக்காமலேயே வந்துவிட்டேன். அஞ்சாரு மாசத்துக்கு அப்புறம் ஒரு நாள் மீண்டும் நண்பன் சந்துருவுடன் ஆதமங்கலம் புதூர் சென்றிருந்த போது, காவி உடையில் வியர்வையில் நனைந்து நெற்றியில் வழிந்த குங்குமச் சிவப்புடன், பிரித்த ஊதுபத்திகளைக் கைநிறைய அள்ளிக்கொண்டு கடைவீதியில் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தான் சசிகுமார். சந்துருவைப் பார்த்ததும் அருகில் ஓடி வந்தவன் காத்திருக்காமல் கட்டி அணைத்துக் கொண்டான்.
“எப்படி நண்பா இருக்க… பாத்து எவ்ளோ நாளாச்சு… சாமிக்குச் சஞ்சலமா இருக்கு ஒரு பியர் வாங்கிக் கொடேன்”
நண்பன் சந்துருவிடம் உரிமையோடு கேட்டான். மறுப்பேதும் கூறாமல் அவனை அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்கு அழைத்துப் போய் அவனுக்கு ஒரு பியர் வாங்கிக் கொடுத்த சந்துரு தனக்கும் ஒரு பியரை வாங்கிக் கொண்டு பிறகு இருவரும் நாகலிங்க மரத்தின் அருகில் இருந்த ஓடை மதகில் போய் உட்கார்ந்து கொண்டனர். பியர் குடித்துக் கொண்டே, தங்கள் பள்ளிப் பருவ நினைவுகளில் மூழ்கியிருந்தனர். சந்துருவிடம் ஏதேதோ பால்ய காலக் கதைகளையும் கதையில் உலாவிய சில பருவப் பெண்களைப் பற்றியும் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான் சசிகுமார்.
கொஞ்சம் போதையானதும் நண்பன் சந்துருவின் கைகளிலிருந்த மிச்ச பியரையும் உரிமையோடு பிடுங்கி வேகமாக உறிஞ்சிக் குடித்த சசிகுமார், சாமியாடி போல் நிலை குலைந்தான். நொடியில் முகம் மாறி ஆவேசமானவன், கையில் வைத்திருந்த பியர் பாட்டிலை ஓடைக்கரையில் மண்டிக் கிடந்த நாணற்காட்டுப் புதரில் வீசியெறிந்தான்.
“பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க செங்கரையான் தின்னுருக்க நாயமில்ல அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா…”
ரோசாப்பூ ரவிக்கைக்காரி சினிமாப் பாடலை உச்சஸ்தாயில் பெருங்குரலெடுத்துப் பாடிக் கொண்டிருந்தான்.
அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து என்ன நினைத்தானோ தெரியவில்லை, பாடுவதை நிறுத்திவிட்டுக் கலகலவென்று சத்தமாகச் சிரித்தான். அந்தக் கணம் அவ்விடம் அமானுஷ்யமாக இருந்தது. வேட்கை தீரச் சிரித்தவன் சிரிப்பதை நிறுத்தி விட்டு,
“நண்பா என்ன ஒருவாட்டித் தேவுடியா புள்ளனு திட்டுங்க” என்றான்.
ஒரு கணம் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனை விட்டு தூரம் வந்தும், அவன் அப்படிக் கேட்டதிலிருந்து என்னால் எளிதாக மீள முடியவில்லை. இத்தனை வன்மத்தோடு தன்னைத் தானே திட்டச் சொல்லிக் கேட்கும் அந்தக் குரூர கோபம் தன் சுயத்தின் மீதா இல்லை தன் தாயின் மீதா சங்கடத்தோடு சந்துருவிடம் கேட்டேன்,
“என்னாச்சு இந்த சசிகுமாருக்கு ஏன் இப்படிலாம் நடந்துக்குறான்?”
“அட அன்னைக்குச் சொன்னேல்ல அவுங்க அப்பா ஊரு உடையாரு நடுக் கூடத்துல தூக்குப் போட்டுச் செத்ததப் பத்தி. அந்த ஆளு செத்ததுக்கும் இவன் இப்படி ஆனதுக்கும் அந்தத் தேவுடியா முண்டதான் காரணம்”
“எந்தத் தேவுடியா முண்ட?”
“சொல்றேன் பொறுங்க… உடையாரும் சசிகுமாரும் லாட்டரிச் சீட்டுக் கடையில் இருந்து அன்னைக்கு மதியம் வீட்டுக்குப் போயிருக்காங்க. பக்கத்து வீட்டுக்காரனும் அவுங்க அம்மாவும் ஒரே படுக்கையில் நிர்வாணமா இருந்தத, அப்பன் மவன் ரெண்டுபேருமே பாத்துட்டாங்க. பாவம் பையன் கண்ணு முன்னாடி அப்படி ஒரு சூழ்நெல வேற எந்தவொரு தகப்பனுக்கும் வந்துறக் கூடாதுங்க அன்னைக்கே நாண்டுகிட்டுத் தூக்குல தொங்கிட்டாரு ஊரு உடையாரு. பாவம் இப்படி தெனந்தோறும் செத்துக்கிட்டே இருக்கான் நண்பன் சசிகுமாரு!”
சந்துரு அப்படிச் சொல்லி முடித்ததும் சடுதியில் திரும்பி சசிகுமாரைப் பார்த்தேன். அங்கிருந்து எழுந்தவன் சிதறிக் கிடக்கும் நாகலிங்கப் பூக்களை எல்லாம் மிதித்துக் கசக்கியபடி ஆவேசமாகக் காலடி வைத்து நடந்து கொண்டிருந்தான். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு அவன் ருத்ர தாண்டவம் ஆடிச் செல்வது போல் இருந்தது.
Artwork – Mart Hemingway

திருக்குமரன் கணேசன் ( பி.1984)
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே திருலோக்கி என்னும் சிற்றூரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
முந்தைய படைப்புகள்; ‘நிலவெறிக்கும் இரவுகளில்’, ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’, ‘இரண்டாம் ஏவாள்’, ‘தாகத்தோடு அலையும் நதி’ , ‘பூனைகளின் மீசை’. 2022-ஆம் ஆண்டு ‘நோஷன் பிரஸ்’ நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசும் ‘இந்தியாவின் அடுத்த மாபெரும் எழுத்தாளர்’ என்ற விருதையும் பெற்றவர். காலச்சுவடு பதிப்பகத்தில் வெளிவந்த ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ நூலை முன்வைத்து, 2023 ஆம் ஆண்டிற்கான “ஸ்பாரோ” இலக்கிய விருதையும் பெற்றிருக்கிறார்.
இரண்டு ஆவணப் படங்களை இயக்கியிருக்கும் இவர். இதுவரை நான்கு திரைக்கதைகளை எழுதியிருக்கிறார். திரைப்பட இயக்கத்தை இலக்காகக் கொண்டு எதார்த்த மற்றும் மாற்று சினிமா படைப்பாக்க முயற்சியில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
Leave a Reply