போர்ச்சுகலுக்கும் ஸ்பெயினுக்கும் நடுவே கோடு கிழிக்கப்படாத பதிமூன்றாம் நூற்றாண்டுப் பாணனின் பாடுகவிதைகள் கலீசியாவின் வீதிகளில் இன்றும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. நூற்றாண்டுக்கணக்காய்ப் பத்திரப்படுத்தி வைத்த கையெழுத்துப்பிரதிகள் இரண்டு. ஒன்று அரசன் டெனிஸ்; மற்றொன்று மார்ட்டின் கோடாக்ஸ். பண்ணியற்றிப் பாடவும் தெரிந்த நூற்றுக்கணக்கான பாணர்களில் வீகோ நகரத்துப் பாணன் மார்ட்டின் கோடாக்ஸின் பாடுகவிதைகள் மகளிரின் மொழியாய், வலியாய், காதலாய், கவலையாய் இசைக்கோர்வைகளாயின.
கவிதைகளை எழுதவும் எழுதிய பாடல்களை நடித்துப் பாடவும் திறன்பெற்றவர்கள் ஜாக்லர்கள்; பிறர் இயற்றிய பாடல்களைப் பாட மட்டும் தெரிந்தவர்கள் ட்ரபதோர்கள். ஜாக்லர்களின் பாடல்களான “காண்டிகா” வில் மூவகை: ஆணை நினைத்துப் பெண் பாடுபவை – அமிகோ, பெண்ணை நினைத்து ஆண் பாடுபவை – அமொர் மற்றும் மூன்றாவது, பகடிவகை. மூன்றடிப் பாடல்கள், ஒவ்வொரு பாடலின் ஈற்றடியும் ஒரே வரிதான் (திரும்பத் திரும்ப ஒரே வரி). முதலிரு வரிகளின் ஈற்றசைகள் சந்த நயம்; ஐகாரத்திலோ ஓகாரத்திலோ முடியும் ஒவ்வொரு வரியும். மார்ட்டின் கோடாக்ஸ் அனைத்துப் பாடல்களையும் லீஷாப்ரென் என்ற அந்தாதி வரிக்கட்டமைப்பில் எழுதினான் – முதல் பாடலின் இரண்டாம் வரி, மூன்றாம் பாடலின் முதலடியானது. இரண்டாம் பாடலின் இரண்டாமடி நான்காம் பாடலின் முதலடியானது. இப்படி வரிகள் திரும்ப வரும்படிச் செய்து பின்னப்பட்ட அமைமுறை கவிதையைப் பாடுகையில் வரிகளுக்கு அழுத்தங்கொடுத்துப் பாடுபொருளின் தீவிரத்தை உணர்த்தப் பயன்பட்டது.
இந்த மத்தியகால இலக்கியப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் சேர்த்து வைக்கப்பட்டாலும், இசையோடு சேர்த்துவைத்த பாடு கவிதைகள் மார்ட்டின் கோடாக்ஸின் “நேசங்கொண்டவனுக்கான ஏழு பாடல்கள்” மட்டுமே (காண்டிகா டி ஆமிகோ). பெண்ணுணர்வை ஆணின் வழியே வெளிப்படுத்திய கவிதைகள் இவை. வேறெந்தக் குறிப்புகளும் கிடைக்கவில்லை மார்ட்டின் கோடாக்ஸைப் பற்றி.
பாடு கவிதைகளில் குறிப்பிடப்படும் வீகோ நகரம் அவன் வாழ்ந்த ஊராக இருக்கலாம். பத்திரப்படுத்திய கையெழுத்துப் பிரதியில் அவனது பெயர் மார்ட்டிம் கோடாக்ஸ் என்றிருப்பதால், மார்ட்டிம் கோடாக்ஸ் என்றும் பலர் அழைக்கின்றனர். கலீசிய – போர்த்துக்கீஸிய மொழியிலமைந்த இந்தப் பாடு கவிதைகள் ஐபீரியப் பாணி வட்டாரமொழி வழக்கில் சொல்லப்பட்டவை. அக்கையெழுத்துப் பிரதியில் இசைக்குறிப்பும் சேர்ந்திருப்பது சிறப்பு. ஒரு பழைய புத்தகத்தின் உள்ளே நூற்றாண்டுகளாய் மறைந்திருந்த இந்தக் குறிப்பு 1914-ல் கண்டெடுக்கப்பட்டது.
வீகோவில் நேசங்கொண்டோனுக்காய் ஏழு பாடல்கள்
வீகோ நகரின் மணிக்கூண்டில் நடனமாடும் வேளையில் தலைவனைச் சந்தித்து நேசம் வயப்படுகிறாள் தலைவி. போருக்கு மன்னனுடன் சென்ற தலைவன் திரும்பி வருகிறான் எனத் தெரிந்த தலைவி வீகோ நகரின் அலைமோதும் கடலுக்கு வந்து அவனை எதிர்பார்த்துக் காத்திருப்பதை இந்தப் பாடுகவிதைகள் சொல்லுகின்றன. மிக இலகுவான சொற்கள் கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாடுகவிதைகளை இசையோடு கேட்பின் இப்பாடல்களின் தன்மை வேறுவடிவங்கொள்கிறது.
1
வீகோவின் ஆழி அலைகளே
கண்டீரோ எனுளங்கவர்ந்தோனை?
எந்தையே அருள்தாரும், வருகிறானா அவன்?
பொங்கும் ஆழி அலைகளே
கண்டீரோ எனது நேசனை?
எந்தையே அருள்தாரும், வருகிறானா அவன்?
கண்டீரோ எனுளங்கவர்ந்தோனை?
என்னிதயத்தில் நோவுதந்தோனை
எந்தையே அருள்தாரும், வருகிறானா அவன்?
கண்டீரோ எனது நேசனை?
என்னிதயத்தில் நோவுதந்தோனை
எந்தையே அருள்தாரும், வருகிறானா அவன்?
2
சேதி கிட்டியதின்று
என் நேசன் வருகிறான் திரும்பி
புறப்பட்டேன் அன்னையே, வீகோவுக்கு.
இன்றைக்கு வந்தது தகவல்
என் நேசன் வந்து சேருகிறான்
புறப்பட்டேன் அன்னையே, வீகோவுக்கு.
என் நேசன் வருகிறான் திரும்பி
அவன் நலமே, நன்றாயிருக்கிறான்
புறப்பட்டேன் அன்னையே, வீகோவுக்கு.
என் நேசன் வந்து சேருகிறான்
அவன் நலமே, நன்றாயிருக்கிறான்
புறப்பட்டேன் அன்னையே, வீகோவுக்கு.
அவன் நலமே, நன்றாயிருக்கிறான்
அவன் மன்னனின் நண்பனுங்கூட
புறப்பட்டேன் அன்னையே, வீகோவுக்கு.
அவன் நலமே, நன்றாயிருக்கிறான்
அவன் மன்னனின் கூட்டாளியே
புறப்பட்டேன் அன்னையே, வீகோவுக்கு.
3
உடன் வா சோதரியே, வா என்னோடு
அலை மோதும் வீகோவின் தேவாலயத்துக்கு
அங்கே அலைகளைப் பார்த்துக் காத்திருப்போம்.
உடன் வா சோதரியே, என்னுடனே நேரங்கழி
அலை உயரே எழும் வீகோவின் தேவாலயத்துக்கு
அங்கே அலைகளைப் பார்த்துக் காத்திருப்போம்.
அலைமோதும் வீகோவின் தேவாலயத்துக்கு
என் நேசன் விரைந்து வரப்போகிறான், அன்னையே
அங்கே அலைகளைப் பார்த்துக் காத்திருப்போம்.
4
எந்தையே, என் நேசன் அறிவானோ
தனியளென்னைச் சுமந்து தவிக்கும் வீகோ
ஊற்றெடுக்கும் காதலுடன்.
எந்தையே, என் நிலையை அவனறிவானோ
தனியளாய் வீகோவின் கொடுமிரவில் தவித்தேனோ
ஊற்றெடுக்கும் காதலுடன்.
தனியளென்னைச் சுமந்து தவிக்கும் வீகோ
செவிலியுமென்னொடு துணையிருக்க மறந்தேளோ
ஊற்றெடுக்கும் காதலுடன்
தனியளாய் வீகோவின் கொடுமிரவில் தவித்தேனோ
கண்காணித்துக்காக்க எனக்கெவருமில்லையோ
ஊற்றெடுக்கும் காதலுடன்
செவிலியுமென்னொடு துணையிருக்க மறந்தேனோ
தானாகத் தாரைவார்க்குமென் கண்களோ
ஊற்றெடுக்கும் காதலுடன்
கண்காணித்துக்காக்க எனக்கெவருமில்லையோ
தனியே இரவுமுழுதுமென் கண்கள் நீரானதோ
ஊற்றெடுக்கும் காதலுடன்.
5
நேசம் என்னசெய்யுமெனத் தெரிந்த பெண்டிரே
என்னுடனே வாருங்கள் வீகோவின் கடலுக்கு
அலைகளில் நீராடிக் களிக்கலாமங்கே
நேசம் என்றாலென்னவெனத் தெரிந்த பெண்டிரே
என்னுடனே வாருங்களலை எழும்பும் கடலுக்கு
அலைகளில் நீராடிக் களிக்கலாமங்கே
என்னுடனே வாருங்கள் வீகோவின் கடலுக்கு
அங்கே என்னோடு நேசம் வைத்தவனைக் காணலாம்
அலைகளில் நீராடிக் களிக்கலாமங்கே
என்னுடனே வாருங்களலை எழும்பும் கடலுக்கு
அங்கே எனதன்பு நேசனைக் காணலாம்
அலைகளில் நீராடிக் களிக்கலாமங்கே
6
வீகோவின் மணிக்கூண்டுக்கருகே
ஆடினேன் தோளிடையோன் அவனொடு
வீழ்ந்ததென் மனம் காதலிலே!
மணிக்கூண்டருகே வீகோவில்
ஆடினேன் மென்னுடலினன் அவனொடு
வீழ்ந்ததென் மனம் காதலிலே!
ஆடினேன் தோளிடையோன் அவனொடு
வேறெந்த நேசமுமில்லையே இதுவரை
வீழ்ந்ததென் மனம் காதலிலே!
ஆடினேன் அவனொடு, அழகியயுடலினன்
வேறெந்த நேசமுமிதுவரை எனக்கில்லை
வீழ்ந்தெதென் மனம் காதலிலே!
வேறெந்த நேசமும் இதுவரை இல்லை
வீகோ வரும் வரை, மணிக்கூண்டுக்கருகே.
வீழ்ந்ததென் மனம் காதலிலே!
வேறெந்த நேசமுமிதுவரை இல்லை
மணிக்கூண்டருகே வரும்வரை வீகோவில்
வீழ்ந்ததென் மனம் காதலிலே!
7
அலைகளே, நான் காணவந்தேன்
காரணந்தெரியமா உங்கட்கு
ஏனவன் எனைச்சேரத் தாமதித்தான்?
அலைகளே, நான் தேடிவந்தேன்
ஏனென்று எனக்குச் சொல்லுங்கள்
ஏனவன் எனைச்சேரத் தாமதித்தான்?
இசை கேட்க : https://www.youtube.com/watch?v=sD2Hu_ae1Bc&list=RDsD2Hu_ae1Bc&start_radio=1
Leave a Reply