1.
தொலையாக் கேள்விகள்:
நினைவு
மௌனமோ? பேச்சோ?
கனவு
சிற்சுயப் பதிவோ?
பெருஞ்சுயச் சிதறலோ?
சிந்தனை
அறிவின் விளைவோ?
அறிவின் முற்கணமோ?
காண்பனவெல்லாம்
காண்பதால் தெரிவதோ?
காணத் தெரியாததால் தெரிவதோ?
அமைதி என்பது
அசைவுகள் ஒருங்கிணையும்
புள்ளியின் மையத்தில்
அகத்தைக் கிடத்திவிட்டு மகிழ்வதோ?
அசைவுகளே தானென அறியும்
அறிபவன் இறந்த நிலையோ?
2.
புழுதி மயக்கம்:
பசித்த பாம்பு
கவ்விய இரையென
நாரையின் கூரலகில்
குத்துப்பட்ட சிறுமீனென
பாறைகளுக்கிடையில்
கால் மாட்டிய களிறென
வெங்கனற்காற்றில்
துடித்தலையும் சுடரென
உட்கனத்தும்
வெளியேற மாட்டாமலும்
கட்டிநின்று வலியேற்றும்
முலைப்பாலென
அறம் தடுக்கும்
பிறன்மனை விழையும் மனத்தின்
கொதிகாமமென
உள்ளிருந்து உள்ளிருந்து
ஓயாது துடிதுடிக்கும்
வாழத் தெரியாதவன் வாழ்க்கை.
3.
கணத்தின் முன்றில்:
அந்தக் கதவு மட்டுமே திறந்திருக்கிறது.
மற்றெல்லாக் கதவுகளும் மூடிவிட்டன.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால்
உனது அகந்தையைத் தூண்டும்
அத்தனை பணிவுகளையும் காண்பாய்.
உன்னை மயக்கவே சுரக்கும்
காமத்தின் அத்தனை உடல்களையும்
காண்பாய்.
உன்னைப் பிச்சையெடுக்கச் செய்யும்
ஆசையின் இராஜபாட்டையை நீ பார்ப்பாய்.
உன்னிடம் கடுகளவு மிஞ்சிய
மௌனத்தையும் பறிக்க
உரைகளின் கரம் காத்திருக்கும்.
உனது சினத்தின் நடனத்தைக் காண
முரண்களின் கூட்டம் அமர்ந்திருக்கும்.
திரும்பி வந்த நான் சொல்கிறேன்
அந்தக் கதவு மட்டுமே திறந்திருக்கிறது.
உள்ளே நுழையாதே.
மழையும் வெயிலும்
பறவை இசையும்
காற்றின் கருணைத் தொடுகையும்
இன்றின் இக்கணத்தில்
மலர்வுறும் முன்றில் ஓரம்
மரணம் வரை இருந்து விடு.
4.
வாடா மலர்:
களங்கமின்மையின் மலரைக் காண
பக்தியில் திளைக்கும் ஒருகூட்டம்.
அறிவில் எரியும் ஒருகூட்டம்.
ஓகத்தில் ஒருகூட்டமும்
ஞானத்தில் ஒருகூட்டமும்
ஓயாது தேடும்.
பிரமையின் தோட்டத்தில்
பாவனை மலர்கள்
கிடைத்தனவே தவிர
களங்கமின்மையின்
வாடா மலர் கண்டபாடில்லை.
5.
மும்மலம்:
முதலில்
என்ன வாடை என்று உணரவில்லை.
அதே வாடை ஒருநாள்
கனவில் வீசியது.
கனவில் வீசிய நாளின்
அடுத்த பகலிலிருந்து
நினைவுகளில் வீசத் தொடங்கியது.
ஒரு பௌர்ணமி இரவில்
எண்ணங்கள் எல்லாம்
குமட்டும் நாற்றம்.
நாற்றம் தாங்காமல்
தலை தெறிக்க ஓடித்
தடுமாறி விழுந்த
கோயிலின் முற்றத்தில்
அமர்ந்திருந்த இரவலன் சொன்னான்:
தம்பி!
அது மலநாற்றம்.
உடல் தள்ளும் மலமல்ல தம்பி
உயிருடன் பிறந்த
உயிர்ப்புள்ள மலநாற்றம்.
ஓடாதே.
உட்கார்ந்துவிடு.
Art : theartteacher

Leave a Reply