நெடுங்காலத்துக்கு முன் கோனிராயா என்றொரு கடவுள் இருந்தான். அவன் மிகவும் குறும்புத்தனம் நிறைந்தவன்; ஆனால் சாதாரணமானவன் அல்லன். அவனே அனைத்து கிராமங்களையும், வயல்வெளிகளையும், அழகான அடுக்குப்பாறை மலைச்சரிவுகளையும் உருவாக்கியவன். வெறும் வார்த்தையாலேயே அவன் இவற்றைத் தோன்றச் செய்தான். நீர்ப்பாசனக் கால்வாய்களைப் பயன்படுத்த மக்களுக்கு அவன்தான் கற்பித்தான். ‘புபுனா’ எனப்படும் நாணல் மலர் ஒன்றை நிலத்தில் விழச் செய்ததன் மூலம் நீரைப் பாயச் செய்தான். அவன் சென்ற இடமெல்லாம் பல அற்புதமான விசயங்களைப் படைத்துக்கொண்டே போனான். நெசவுத் தொழிலை உருவாக்கியவன் கோனிராயாதான் என்று சொல்வார்கள். அவனுக்கு ‘கொம்பி காமயோக்’ – தலைசிறந்த நெசவாளன் என்ற பெயரும் மக்களால் வழங்கப்பட்டு வந்தது.
எல்லா இடங்களுக்கும் நடந்து கொண்டே சென்ற அவன், தான்தான் வீரகொச்சா என்று அனைவரிடமும் சொல்லிக் கொண்டே சென்றான். ஆனால், அவன் கந்தல் ஆடைகளை அணிந்த ஒரு ஏழை மனிதனைப் போல உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தான். மேலும், அவன் சென்ற இடங்களில் காணும் அழகிய பெண்களை மயக்கி ஏமாற்றும் குணமும் கொண்டவனாக இருந்தான். இதனால் மக்கள் அவனை இகழ்ந்து ‘ஏமாற்றுக்காரா’ என்று அழைத்தனர்.
கோனிராயாவின் பெரும் ஞானமும் தந்திரமும் அவன் சென்ற இடமெல்லாம் வித்தைகளைச் செய்ய உதவின. இப்படி அலைந்து திரிந்து கொண்டிருக்கும்போது ஒரு நாள், அவன் காவியாக்கா என்ற மிக அழகான கன்னிப் பெண்ணைக் கண்டான். அவளது அழகு அவனை மயக்கியது. அவளை எப்படியும் வசியப்படுத்திவிட வேண்டும் என முடிவு செய்தான். அவளைப் பலரும் விரும்பினர், ஆனால் அவள் யாரையும் ஏற்க மறுத்துவிட்டாள். இப்படிக் கிழிந்த உடையுடன் வந்த கோனிராயாவைப் பார்த்தும் அவள் முகம்சுழித்து வெறுத்து ஒதுக்கினாள்.
ஒருநாள் முட்டைப் பழங்கள் தரக்கூடிய ‘லுக்குமா’ மரத்தின் அடியில் அமர்ந்து ஆடை நெய்து கொண்டிருந்தாள் காவியாக்கா. அவள் நெய்த ஆடை பலவண்ணங்களில் ஜொலித்தது. அப்போது தொலைவில் இருந்து கண்ட கோனிராயா அவளை எப்படியாவது வசியப்படுத்த விரும்பினான். உடனடியாகத் தன்னை அழகான இறகுகளைக் கொண்ட அற்புதமான பறவையாக மாற்றிக்கொண்டான். பின்னர் அந்த மரத்தின் கிளைகளில் வந்து அமர்ந்தான். தனது ஆண்மையை, கனிந்த சுவையான ஒரு பழமாக மாற்றி, அவளது காலுக்கு அருகில் விழச் செய்தான். இதைப்பற்றி அறியாத காவியாக்கா மகிழ்ச்சியுடன் அந்தப் பழத்தை எடுத்து உண்டாள். அந்தப்பழம் இனிப்புச்சுவை மிகுந்ததாக இருந்தது. மஞ்சள் நிறச் சதைப்பகுதியைக் கொண்ட அந்தப் பழத்தை ‘இன்காவின் தங்கம்’ என்றே குறிப்பிடுவதுண்டு.
நாட்கள் நகர்ந்தன. காவியாக்கா கருவுற்றாள். அவளுக்கு இது எப்படி நிகழ்ந்தது என்று புரியவில்லை. ஒன்பது மாதங்கள் முடிந்த பிறகு, அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எந்த ஆணையும் நெருங்கவிடாத அவளுக்கு அந்தக் குழந்தை தன் வயிற்றில் எப்படி உருவானது என்பது குழப்பமாக இருந்தது. ஒரு வருடம் கழித்துக் குழந்தை தவழத் தொடங்கியபோது, அவள் தனது குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தாள். அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து ‘வாக்கா’க்களையும் திரட்டி அவர்களிடம் தன் குழந்தைக்குத் தகப்பன் யார் என்று கேட்க விருப்பப்பட்டாள். ஏதோ ‘வாக்கா’ செய்த செயலாகத்தான் இருக்கும் என்று அவள் நம்பினாள்.
தெய்வீக சக்தி கொண்ட பொருள்களையோ, இடத்தையோ, மனிதர்களையோ அல்லது இயற்கை உருவங்களையோ இன்கா மக்கள் ‘வாக்கா’ என்று அழைத்தார்கள். மலைகள், மலைமுகடுகள், நீரூற்றுகள், மரங்கள், கோவில்கள், முன்னோர்களின் பதன உடல்கள் போன்றவற்றில் தெய்வீகச் சக்தி இருப்பதாக நம்பிய அம்மக்கள் அவற்றை ‘வாக்கா’ என்றனர். அந்தப் பொருள்களை நோக்கியோ அல்லது அந்த ஆவிகளை நோக்கியோ குறை தீர்க்கும்படியும் வழி காட்டும்படியும் வேண்டிக் கொண்டனர்.
காவியாக்கா அஞ்சிகோச்சா என்ற இடத்துக்குத் தன் குழந்தையுடன் சென்றாள். அது மிகவும் குளிர்ந்த, மலைகள் அடர்ந்த இடம். அங்கே சென்று அத்தனை வாக்காக்களையும் தன் முன் தோன்றவேண்டும் என்று வேண்டினாள். தன் மகனின் தந்தை யார் என்பதை அவர்கள் அறிவிக்கவேண்டும் என்று கோரினாள்.
கடவுள்களும் வாக்காக்களும் அஞ்சிகோச்சாவின் ஓரிடத்தில் கூடி வரிசையாக அமர்ந்தனர். காவியாக்கா அவர்களை நோக்கிப் பேசினாள் :
“மதிப்பிற்குரிய உயர்ந்தோர்களே, என் கைகளில் இருக்கும் இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்ததால் நான் அடைந்துள்ள பெருந்துயரத்தை உங்களுக்குத் தெரிவிக்கவே உங்களை இங்கே அழைத்தேன். இப்போது இந்தக் குழந்தைக்கு ஒரு வயதாகிறது; ஆனால் இவன் தந்தை யார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எந்த ஆடவனையும் நெருங்கியதில்லை என்பதும், என் கன்னிமை சிதையவில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். இப்போது நீங்கள் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்; உங்களில் யார் எனக்கு இந்தத் தீங்கை இழைத்தது? என் குழந்தையின் தந்தை யார்?”
அங்கிருந்த வாக்காக்களும் கடவுளரும் ஒருவரையொருவர் பார்த்தபடி மௌனமாக இருந்தனர். யார் முன்வந்து உரிமை கோருவார்கள் என்று காத்திருந்தனர். ஆனால் ஒருவரும் முன்வரவில்லை. அவர்களின் மௌனத்தைக் கண்டு காவியக்கா ஒரு முடிவெடுத்தாள் :
“உங்கள் யாருக்கும் பேச விருப்பமில்லை என்றால், நான் குழந்தையைக் கீழே விடுகிறேன். அவன் நிச்சயம் தன் தந்தையிடம் தவழ்ந்து செல்வான் – அவன் யாருடைய காலடியில் அமர்கிறானோ அவரே அவனது தந்தை.”
அவ்வாறு கூறி அவள் குழந்தையை இறக்கித் தரையில் விட்டாள்.
அனைவருக்கும் பின்னால், கடைசி இடத்தில், கோனிராயா தனது கந்தல் உடைகளுடன் அமர்ந்திருந்தான். அழகான காவியாக்கா வாக்காக்களிடம் பேசும்போது அவனைக் கவனிக்கவே இல்லை; இவ்வளவு கேவலமாய் உடையுடுத்தி அழுக்கேறிப்போன ஒருவன் தன் குழந்தையின் தந்தையாக இருக்கக்கூடும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
ஆனால், அந்தக் குழந்தை அங்கு கூடியிருந்த கூட்டத்தைக் கடந்து, அழுக்கடைந்த கந்தல் ஆடை அணிந்திருந்த கோனிராயாவை நோக்கிச் சென்றது. குழந்தை மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே கோனிராயாவின் காலடியில் அமர்ந்தது.
இதைக் கண்ட காவியாக்கா சொல்லொண்ணா அவமானமும் ஆத்திரமும் அடைந்தாள். குழந்தையை வாரி அணைத்துக்கொண்டு, “என்னைப்போன்ற ஒரு குலமகள், இப்படிப்பட்ட ஒரு அழுக்கான ஏழை மனிதனால் கருவுற்றது எனக்கு எவ்வளவு பெரிய அவமானம்!” என்று கதறினாள். பின் எதையும் யோசிக்காமல் அங்கிருந்து கடற்கரையை நோக்கி ஓடினாள்.
அவளுடைய அன்பைப் பெற ஏங்கிய கோனிராயா, உடனடியாகத் தனது கந்தல் கோலத்தை விடுத்து, மிக அற்புதமான தங்க ஆடைகளை அணிந்தான். அங்கிருந்த பிற வாக்காக்கள் வியந்து நிற்க, காவியாக்காவிற்குப் பின்னால் ஓடினான்.
“காவியாக்கா, ஒருமுறை திரும்பிப் பார்! நான் எவ்வளவு அழகானவன், கம்பீரமானவன் என்று பார்!” என்று கூவினான். அவனது உடம்பில் இருந்து வெளிப்பட்ட பேரொளி அந்த நிலப்பகுதி முழுவதையும் பிரகாசிக்கச் செய்தது.
காவியாக்காவின் உள்ளம் அவமானத்தாலும் வெறுப்பாலும் நிறைந்திருந்தது. அவள் தலையைத் திரும்பி அவனைப் பார்க்க மறுத்துவிட்டாள். மாறாக, தனது வேகத்தை அதிகரித்து, “இவ்வளவு கேவலமான, அழுக்கான ஒருவனால் நான் கருவுற்ற பிறகு, நான் யாரையுமே பார்க்க விரும்பவில்லை!” என்று இரைந்தபடி ஓடினாள். கோனிராயா அவளைத் தொடர்ந்து துரத்திச் சென்றான். ஆனால் அவள் வேகமாக ஓடி அவன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டாள்.
அவளைத் தேடிச் சென்ற கோனிராயா, வழியில் ஒரு மலைக்கழுகைச் சந்தித்தான். காவியாக்காவைப் பார்த்தாயா என்று அவன் கேட்டதற்கு, அந்தப் பறவை, “அவளை நான் மிக அருகில் பார்த்தேன்; நீ இன்னும் கொஞ்சம் வேகமாகச் சென்றால் அவளைப் பிடித்துவிடலாம்” என்று பதிலளித்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த கோனிராயா, மலைக்கழுகை இவ்வாறு ஆசீர்வதித்தான் :
“நீ விரும்பும் இடமெல்லாம் செல்லும் ஆற்றலை உனக்குத் தருகிறேன். காடுகளையும், பள்ளத்தாக்குகளையும், மலை இடுக்குகளையும் நீ கடந்து செல்வாய். யாராலும் தொந்தரவு செய்ய முடியாத உயரத்தில் நீ கூடு கட்டுவாய். இறந்த விலங்குகள் எதையும் நீ உணவாகக் கொள்ளலாம். உன்னைக் கொல்பவன் எவனோ, அவனும் கொல்லப்படுவான்.”
தொடர்ந்து சென்ற கோனிராயா ஒரு நரியைச் சந்தித்தான். காவியாக்காவைப் பற்றி நரியிடம் கேட்டான், ஆனால் நரி சொன்ன பதில் அவனுக்குக் கோபத்தை ஊட்டியது. “அவள் வெகுதூரம் சென்றுவிட்டாள், அவளைப் பின்தொடர்வதால் எந்தப் பயனும் இல்லை,” என்று நரி கூறியது. உடனே கோனிராயா நரியைச் சபித்தான் :
“நீ இனி ஒருபோதும் பகலில் வெளியே வரமாட்டாய்; இரவில் மட்டுமே நடமாடுவாய். உன்னிடமிருந்து எப்போதும் ஒரு வெறுக்கத்தக்கத் துர்நாற்றம் வீசும். மனிதர்கள் அனைவரும் உன்னைத் தூரத்திலிருந்தே துரத்தி வேட்டையாடுவார்கள்.”
கோனிராயா மேலும் வேகமாக ஓடினான். அப்போது எதிரே வந்த மலைப்புலி அவனுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியைச் சொன்னது. உடனே, புலிக்கு அவன் பின்வருமாறு வரமளித்தான்:
“அனைவரும் உன்னை மதித்து உனக்கு அஞ்சுவார்கள். தீமை செய்பவர்களைத் தண்டிப்பவனாகவும், மரண தண்டனையை நிறைவேற்றுபவனாகவும் உன்னை நியமிக்கிறேன். உனது இறப்பிற்குப் பிறகும் உனக்கு மரியாதை கிடைக்கும்; உன்னைக் கொல்பவர்கள் உனது தோலைத் திருவிழாக்களில் அணிந்து கொள்வார்கள்.”
இவ்வாறாக, கோனிராயா தனக்குச் சாதகமான செய்திகளைச் சொன்ன விலங்குகளுக்கு வெகுமதிகளையும், பிடிக்காத பதில்களைச் சொன்ன விலங்குகளுக்குச் சாபங்களையும் வழங்கினான்.
இறுதியாக, கோனிராயா கடற்கரையைச் சென்றடைந்தான். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. தன்னை அவமானப்படுத்தியவன் ஒரு கடவுள் என்றறியாமல், அந்த ஏழைப் பிச்சைக்காரனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆவேசத்தில் காவியாக்காவும் அவளது குழந்தையும் கடலோரத்தில் கல்லாக மாறிப் போயிருந்தனர். இதைப் பார்த்த கோனிராயா மனமுடைந்து போனான். என்ன செய்வது என்று தெரியாமல் அவன் கடலோரத்தில் மனம் போன போக்கில் நடந்தான்.
பின்னர் கடற்கரையில் இருந்த பச்சகாமக் கோயில் வளாகத்தை அடைந்து, லூரின் நதியின் முகத்துவாரத்தில் உள்ள குவானோ தீவுகளுக்கு அருகில் ஆழ்கடலுக்குள் நுழைந்தான். அங்கே கடலுக்குள்ளே ஒரு பாம்பினால் காக்கப்பட்டு வந்த இரண்டு பெண்களைக் கண்டான். அவர்கள் படைப்புக் கடவுள் பச்சாகாமக்-கிற்கும் கடற்பெண் கடவுள் உர்பாய் வாச்சக்-கிற்கும் பிறந்தவர்கள். வழக்கம்போல தனது மயக்கும் வேலைகளை அவர்களிடமும் காட்ட எண்ணி அவர்களை வசப்படுத்த முயன்றான் கோனிராயா. ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட, கடற்தெய்வம் உர்பாய் வாச்சக் கோனிராயாவின் மீது கோபங்கொண்டு அவனைத் துரத்தினாள். அவளிடமிருந்து தப்பி ஓடிய கோனிராயா ஒரு சிறிய குளத்தில் வைத்திருந்த அனைத்து மீன்களையும் பெருங்கடலில் கொட்டிக் கடற்தெய்வத்திடமிருந்து தப்பித்தான். கடல் முழுவதும் மீன்கள் இப்படித்தான் பெருகிப்போயின.
லூரின் முகத்துவாரத்தில் கல்லாக மாறிய காவியாக்கா, உயிர் கொடுக்கும் சக்தியின் பாதுகாவலராக மக்களால் பின்னாளில் வழிபடப்பட்டாள்.
சொந்த ஊர்: தூத்து







Leave a Reply