வாழ்க்கை எதற்காக என்று எனக்குக் கேள்வி எழும் போதெல்லாம் நான் கவிதை எழுதுகிறேன்
1.பிறப்பின் வாச்சியம்
சூரியன் தோன்றுவதற்கு ஒரு நிமிடம் முன்பு சந்திரன் மறைந்ததும் ஒரு நிமிடம் கழிந்த இடைபட்ட நேரத்தில் அவன் பிறந்தான்.
புதியதாக வெட்டப்படும் ஒரு கிணற்றின் ஊற்று முதலில் கசிந்த நேரம் அது.
முயல் காதுகளை மேலே உயர்த்திக் கொண்டது போல மரஞ்செடிகள் அப்போது இலைகளை உயர்த்திக் கொண்டன.
உப்பு தான் எரிவதைச் சொல்லிக் கொண்டே எரிவது போல தன் பிறப்பைச் சொல்ல அழுது கொண்டே பிறந்தான்.
அவன் பிறப்பில் வேறு எந்த அதிசயமும் இல்லை.
ஓடைகள் அவற்றின் போக்கில் ஓடின.
பறவைகள் அவற்றின் போக்கில் பறந்தன.
வானம் சிலர் தலைக்கு மேலே பொழிந்தது சிலர் தலைக்கு மேலே வறண்டது.
2.அவனது வீட்டின் வரைபடம்
பகலில் தெரியும் தூரத்து மலையைச் சிறியதாக்கிப் பார்ப்பது போல இருந்தது இருளில் தெரியும் அவனது கூரை வீடு.
அவன் வளர்ந்த வீடு எந்த தேவதையும் இல்லாத வீடு அதனால் அவனே தேவதை அது பூனை இல்லாத வீடு அதனால் அவனே பூனை.
அது செழிப்பு இல்லாத வீடு அதனால் அவனே வீட்டின் செழிப்பு.
வீட்டில் எவை எல்லாம் இல்லையோ அவை எல்லாம் அவனே!
அம்மி மீது குழவிக் கல் இல்லாத அந்த வீட்டில் அவன்தான் குழவி.
3.அவனது சுய படம்
அவன் குழந்தையாக இருந்த போது எதிர்காலம் சின்னதாக இருந்தது. வளர்ந்த பிறகு அது பேருருவம் பெற்றது
யாராவது அவன் முகத்தைப் பற்றி யோசித்தால் வெட்டிய ஆப்பிளும்
அவன் உருவத்தைப் பற்றி யோசித்தால் கடம்ப மானின் குளம்படியும் நினைவுக்கு வரும்
அல்லது அவை தலைகீழாக நினைவுக்கு வரலாம்.
அவன் மகிழ்ச்சியின் இயற்பியல் ரொம்பப் பெரியது
அவன் சுமந்து செல்ல முடியாத அளவுக்கு
அதிக வெளிச்சம் கிடைத்துள்ளது
4.அவன் சைக்கிள் ஓட்டினான்
ஒரு கையால் திருப்பம் காட்ட முயன்று
மறு கையில் சரக்குப் பைகளைப் பிடித்துச் செல்லும்போது அவன் சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டான்
தெரு மூலையில் இருந்தவர்கள் கொல் என்று சிரித்தார்கள் அவர்களுக்கு அந்தச் சிரிப்பை வழங்கியதில்
அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான் ஏனென்றால் அவர்கள் அந்த நாளை எப்படிக் கழித்தார்கள் என யாருக்குத் தெரியும்?
5.அவன் கார் ஓட்டினான்
தெருவில் உள்ள வீடுகளை இடிக்க விரும்புவது போல்
தனது பிட்டத்தை அசைத்து நடக்கும் ஒரு பெண்ணின் பின்னால்
சாலை முழுவதும் வாத்துகள் நடந்து செல்கின்றன
சாலையில் சென்ற காரோட்டியான அவனுக்கு
இன்று பார்த்து எந்த அவசரமும் இல்லை
அவை சாலையில் அசைந்து செல்வதை இரசித்தபடி இருந்தான்
பின்னால் வந்த லாரிக்காரனுக்கு என்ன அவசரமோ
ஒலி எழுப்பியபடியே இருந்தான்
அவன் வாத்தையும் இரசிக்கவில்லை.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை என்னும் சிற்றூரில் பிறந்த இவர் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். சொற்களால் பொம்மை செய்பவன் என்று கூறிக்கொள்ளும் இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை எழுதுகிறார், தற்போது மொழிப்பெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி, சதுரமான மூக்கு, துரிஞ்சி, தண்ணீரின் சிரிப்பு, மற்ற விலங்குகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் எழுத்தெனப்படுவது என்ற புதிய நோக்கில் இலக்கண நூலும் “a piece of moonshine at dinner” (Writersgram publication) என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளன.
சிறார் இலக்கியத்தில் தங்கக் குருவி, காடனும் வேடனும், ஊசி எலியும் ஆணி எலியும், லிமொ ஆகிய நான்கு நாவல்கள் உட்பட பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
Leave a Reply