மேற்கு ஆப்பிரிக்காவைப் போல தொன்மையான வாய்மொழி இலக்கியப் பாரம்பரியம் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் உண்டு. கென்யா, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, எத்தியோப்பியா, சோமாலியா நாடுகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் இலக்கியச் செழுமை உடையவை. அவற்றிடம் போர், தனிமை, துயரம், விளையாட்டு, அறம் குறித்த வாய்மொழி இலக்கியங்கள் நிறைய உள்ளன. காப்பியத் தன்மை கொண்ட நீண்ட பாடல்கள் இருக்கின்றன. பாடல்களின் அமைவுகளில் வாய்மொழி மரபுக்கேயுரிய செறிவான கட்டமைப்பு உண்டு. இவற்றிலெல்லாம் கிழக்கு ஆப்பிரிக்கர்களின் தனித்துவமான பண்பாட்டையும் வசிப்பையும் காணமுடியும். அந்த வகையில் கிழக்கு ஆப்பிரிக்காவின் வாய்மொழி இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க காப்பியம் ‘உதெந்தி வா தம்புகா’ (Utendi wa Tambuka). தமிழில் ‘தம்புகாவின் கதை’ என்று குறிப்பிடலாம். பாண்டு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த சுவாஹிலி (Swahili) மொழியில் புவானா மெங்கோ வா அத்மன் (Bwana Mwengo wa Athman) என்பவரால் எழுதப்பட்ட இக்காப்பியம் 18ஆம் நூற்றாண்டில் தான் நூல் வடிவமானது. தற்போது வடமேற்கு சவுதி அரேபியாவில் அமைந்துள்ள ‘தபுக்’ நகரத்தை சுவாஹிலி மொழியில் ‘தம்புகா’ என்பர். அந்நகரைப் பற்றிய கதையைத் தான் ‘தம்புகாவின் கதை’ நுவல்பொருளாகக் கொண்டுள்ளது.
சுவாஹிலி இலக்கிய வரலாற்றில் ‘உதெந்தி வா தம்புகா’ (Utendi wa Tambuka) ஒரு நாகரிகத்தின் அடையாளமாக இருக்கிறது. இந்தக் காப்பியம் கென்யாவின் லாமு (Lamu) தீவுக்கூட்டத்தில் உள்ள ‘பாத்தே’ (Pate) என்ற இடத்தில் உருவானதாக நம்பப்படுகிறது. வாய்மொழிப் பிரதிகளை ஆதாரமாகக் கொண்டு கி.பி. 1728இல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், ஆப்பிரிக்கக் கண்டத்தில் எழுதப்பட்ட மிகப் பழமையான இலக்கியங்களுள் ஒன்று. கிழக்கு ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளின் கலாச்சாரம், சமயம், வீரம் ஆகியவற்றைப் பறைசாற்றி எழுதப்பட்ட ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட செய்யுள் அடிகளைக் கொண்ட இக்காப்பியம், இன்று உலகெங்கிலும் உள்ள மொழியியல் அறிஞர்களால் மொழி அமைப்புக்காகவும் செவ்வியல் தன்மைக்காவும் வியந்து போற்றப்படுகிறது.
காப்பியம் இறை வணக்கத்தோடு தொடங்குகிறது. இஸ்லாத்தின் கடமையை விவரித்து பின்பற்றுவதற்கான கட்டளைகள் நிரல்படுத்தப்பட்டு இருக்கின்றன. ரோமானிய அரசன் ஹெராக்லியஸ் (Heraclius) முஸ்லிம்களின் வளர்ச்சியைத் தடுக்கவேண்டும் என்று கருதி வடக்கே தம்புகாவில் ஒரு மாபெரும் படையைத் திரட்டுகிறான். அவனது இந்த நடவடிக்கை மதினாவுக்கு ஒற்றர்கள் மூலம் வந்து சேர்கிறது. முஸ்லிம் படை தம்புகாவை அடைகிறது. முஸ்லிம்களின் துணிச்சலையும், மரணத்தைத் தழுவத் துடிக்கும் அவர்களின் வீரத்தையும் கேள்விப்பட்ட ரோமானியப் படை அச்சமடைகிறது. ஹெராக்லியஸின் ஆட்கள் நேருக்கு நேர் போரிடாமல் பின்வாங்குகிறார்கள். இரத்தம் சிந்தாமலேயே ஒரு தார்மீக வெற்றியை முஸ்லிம்கள் பெறுகிறார்கள் என்பதாகக் காப்பியம் நிறைவு பெறுகிறது. இஸ்லாத்தைத் தழுவிய ஆப்பிரிக்க மக்களின் துணிச்சலையும் வீரத்தையும் சொல்லும் இக்காப்பியம், அவர்கள் அடிமையாக இருந்த காலத்தில் அவர்களின் நினைவலைகளைத் தூண்டி அவர்களது போராட்டத்திற்குத் தேவையான மனஉறுதியைக் கொடுத்திருக்கிறது.
கிகுயு
கென்யாவில் மிகப்பெரிய தொகுதியாக ‘பாண்டு’ இன மக்கள் இருக்கின்றனர். அவர்களை ‘கிகுயு’ எனக் குறிப்பிடுவர். அவர்களுக்கென்று ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு இல்லை. ஆனால் வாய்மொழிக் கதைகளும் பாடல்களும் அதிகம் இருக்கின்றன. அவை ஆப்பிரிக்கச் சமூக வரலாற்றுக்கு அடிப்படையாக இருக்கின்றன. ஆப்பிரிக்க வரலாற்றை மறுஎழுத்து செய்ய நினைப்போருக்கு ஏராளமான தரவுகளைத் தருகின்றன. அவர்களின் கதைகளில் பலவற்றில் கிகுயுவும் (Gikuyu) அவனது மனைவி மும்பி(Mumbi)யும் தலைமைப் பாத்திரங்களாக வருகின்றனர். சான்றாக இரண்டு கதைகளைப் பார்க்கலாம்.
நான்கு மகன்களைக் கொண்ட ஒருவர் மரணப் படுக்கையில் இருக்கிறார். அப்போது ஒருநாள் தன்னிடம் உடைமையாக உள்ள கால்நடை மேய்க்கும் கோல், வில், குத்து ஈட்டி, நிலந்தோண்டும் குச்சி ஆகிய நான்கு பொருள்களையும் தனது நான்கு மகன்களுக்கும் பிரித்துக் கொடுக்க விரும்புகிறார். அவற்றை வாங்கிக் கொண்டவர்கள் முறையே ஆயர், மாசாய், கம்பா, ஆதி என்னும் நான்கு இனமாக மாறுகின்றனர். இந்நால்வரையும் இன்றைய கிகுயு மக்கள் தங்களது மூதாதையர்களாகக் கருதுகின்றனர்.
இதையொத்த இன்னொரு கதையும் உண்டு. ‘கிகுயு’ இனத்தை முராங்கா மாவட்டத்தில் உள்ள ‘முகுர்வே வா கதாங்கா’விலிருந்து தோன்றியதாகக் கூறுகிறது அக்கதை. அதன் படி, கடவுள் கிகுயுவுக்குத் தோன்றி, கென்யா மலையின் தென்மேற்கே உள்ள அனைத்து நிலங்களையும் அவருக்கு ஒதுக்கினார். அங்கு கிகுயுவும் அவரது மனைவி மும்பியும் வீடு கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். அவர்களுக்குப் பத்து மகள்கள் பிறந்தனர். அந்தப் பத்துப் பேரும் கிகுயு இனத்தில் உள்ள பத்துக் குலங்களுக்குத் தாயானார்கள். இருப்பினும், அவர்களிடம் சரியான எண்களால் விஷயங்களைக் குறிப்பிடுவது ஒரு கெட்ட சகுனமாக நம்பப்படுவதால் அவர்கள் தங்கள் இனத்தில் பத்துக் குலங்கள் இருப்பதாக ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வது இல்லை. ஒன்பது மகள்கள் பிறந்து அவர்களின் குடும்பங்கள் ஒன்பது குலங்களாக மாறியதாகவும் மற்றொரு கதை உண்டு.
ஃபுமோ லியோங்கோ
12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புமோ லியோங்கோ வா பௌரி என்ற புகழ்பெற்ற நபரின் வாழ்க்கை முஹம்மது கிஜூம்வாவால் பாடலாக எழுதப்பட்டது. ஸ்வாஹிலி மக்களின் தேசிய வீரரான லியோங்கோ, மொம்பசாவின் வடக்கே உள்ள டானா நதியின் டெல்டா பகுதியில் வசித்து வந்தார். ஷாகா நகர மாநிலத்தின் ஆட்சியாளரான அவரது தந்தைக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவர் லியோங்கோ, இளையவர் மிருங்வாரி. தந்தையின் மரணத்திற்குப் பிறகு, மிருங்வாரி ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிருங்வாரி, லியோங்கோ தன் அரியணைக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என நினைத்தார். அதனால் மிருங்வாரி லியோங்கோவை ஒழிக்க பல முயற்சிகளைச் செய்தார். லியோங்கோவை ஒரு அழகான கல்லா (Galla) பெண்ணுடன் திருமணம் செய்து அவரைக் கல்லா நாட்டில் தங்க வைத்தார். சன்யே (Sanye/Boni), டஹாலோ (Dahalo) பழங்குடியினரிடம் லியோங்கோவின் தலையைக் கொண்டுவந்தால் பரிசு தருவதாக அறிவித்தார். ஆனால் லியோங்கோ அவர்களை ஏமாற்றினார். பின்னர் லியோங்கோவை பாட்டே நகரத்துக்கு வரச் செய்து, கைது செய்து சிறையில் அடைக்கிறார் மிருங்வாரி. சிறையில் இருந்தபோது லியோங்கோ சங்கிலிகளை உடைத்துத் தப்புகிறார். இறுதியில், மிருங்வாரி லியோங்கோவின் கல்லா மனைவியால் பிறந்த மகனைப் பயன்படுத்தி அவரைக் கொல்லத் திட்டமிடுகிறான். அரச வாக்குறுதிகளால் மகனை வளைத்து, லியோங்கோவைக் கொல்லக்கூடிய ஆயுதத்தின் ரகசியத்தை அறியச் செய்கிறார். மகன் தனது செம்புக் குத்துவாளால் உறங்கிக்கொண்டிருக்கும் தன்னுடைய தந்தை லியோங்கோவைக் குத்துகிறான். காயமடைந்த அவர், மூன்று நாட்கள் காயத்துடன் துவண்டு கிடந்து மூன்றாம் நாளில் இறந்து விடுகிறார். இந்தக் கதை இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை வாய்மொழியாகவே இருந்து வந்தது.
சோமாலியாவும் டெக்தீரும்
சோமாலியாவின் வாய்மொழிக் கதைகளில் டெக்தீர் (Dhegdheer) பிரபலமான எதிர்மறைத் தொன்மமாக உள்ளது. பாலைவன அரக்கியாக நம்பப்படும் அது நடிப்பில் அசாத்தியத்தைக் காட்டுகிறது. தேவைக்கு ஏற்றாற்போல வேடமிட்டு குழந்தைகளைக் கடத்துவது அதன் வேலை. சான்றாக, அம்மா வேடமிட்ட கதையைச் சொல்லலாம். இதில் சிறுமிகள் பாலைவனத்தில் குடிப்பதற்குத் தண்ணீர் தேடி அலைகின்றனர். அவர்கள் முன் அன்பைப் பொழியும் அம்மாவாக வேடமிட்டுக் கொண்டு டெக்தீர் வருகிறது. நயமாகப் பேசி சிறுமிகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு கொடுத்து உறங்க வைக்கிறது. இரவில் குழந்தைகளுக்கு முன் நீண்ட காதும் கூர்மையான பல்லும் கொண்ட மனிதரை உண்ணும் மிருகமாக தனது உண்மை உருவத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு புத்திசாலி சிறுமி மட்டும் விழித்திருந்து அதன் கால்களைக் கவனிக்கிறாள். அவை மனிதக் கால்களைப் போல இல்லை. சுதாரித்துக் கொண்ட அச்சிறுமி மற்ற சிறுமிகளையும் எழுப்பி தப்பிக்கச் செய்கிறாள். பாலைவனத்தில் அந்நியரையும் அதீத அழகையும் நம்பக்கூடாது என்கிற போதனைக் கதையாக இருந்து வந்திருக்கிறது.
மற்றொரு கதை. ஒரு பாலைவனக் கிராமத்தில் ஒரேயொர் ஆழமான கிணறு இருந்தது. அந்தக் கிணற்றில் தான் தங்களது தேவைக்குக் கிராம மக்கள் தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். கிராமத்துக்கு வெளியே, அந்தக் கிணற்றின் அருகில் டெக்தீர் மறைந்து வாழ்ந்தாள். ஒருநாள் காலையில் சில பெண்களும் குழந்தைகளும் தண்ணீர் எடுக்கச் சென்றனர். அப்போது அவர்கள் கிணற்றருகில் ஓர் அழகிய அந்நிய பெண்ணைக் கண்டனர். அவள் தன் தலையில் பாத்திரம் வைத்துக் கொண்டு அமைதியாக நின்றாள். அந்த அழகிய பெண் ‘நான் வழிதவறி வந்தவள். எனக்கும் தண்ணீர் வேண்டும்’ எனக் கேட்டாள். பெண்களும் சிறுமிகளும் அவளை இரக்கத்துடன் பார்த்தனர். ஒரு சிறுமி அவளது கையைத் தொட்டாள். அவள் கை குளிராகவும் மரக்கட்டையைப் போன்று கடினமானதாகவும் இருந்தது. சிறுமி அவளது காதுகளைக் கவனித்தாள். அவை நீண்டதாக இருந்தன. அந்தச் சிறுமி அழகிய பெண்ணை ‘டெக்தீர்’ எனக் கண்டுகொண்டு தனது அம்மாவிடம் மெல்லச் சொன்னாள். அம்மா மற்ற பெண்களை எச்சரித்தாள். பெண்கள் நீர் இறைக்கும் கயிற்றைக் கொண்டு டெக்தீரைக் கட்டிப்போட தயாரானார்கள். டெக்தீர் திடீரென தனது உண்மையான உருவத்தை எடுத்தது. அவள் குழந்தைகளைப் பிடிக்க முனைந்தது. பெண்கள் கயிற்றால் அதைச் சுற்றி பிடித்தனர். சிலர் அவளை கிணற்றின் அருகே தள்ளினர். இந்தக் கதை பல வடிவங்களில் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் டெக்தீர் வாய்மொழிக் கதைகள் குழந்தைகள் பாதுகாப்போடு தொடர்புடையதாக இருக்கின்றன.
இதைப் போலவே கபாய் (Gabay) என்ற நீண்ட வாய்மொழிப் பாடல் வடிவம் ஒன்றும் உள்ளது. படைப்புக் கட்டுப்பாடு நிறைந்த அரசியல் தாக்கம் வாய்ந்த பாடல் வடிவமாக இருக்கும் அது, குலப் பெருமை, போர், தன்மானம், அரசியல் முதலியவற்றை நுவல்பொருளாகக் கொண்டிருக்கிறது. வாய்மொழிப் பாடல் என்பதன் தன்மை மாறிவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் மக்கள் மனனம் செய்து வாய்மொழியாகப் பாடுகிறார்கள். பிற்காலத்தில் முகமத் அப்துல்லா ஹாசன் கபாய் வடிவப் பாடல்களைப் பாடியே தேசிய உணர்வை எழுப்பினார். குலங்களுக்கு இடையில் அமைதியைத் தக்க வைக்கவும் ஒருவரைப் புகழவும் தண்டிக்கவும் ‘கபாய்’ பாடப்பட்டன. இதை வீரயுகப் பாடல்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
கோர் மஹியா
கென்யா, தான்சானியா பகுதிகளில் வாழும் லூவோ (Lou) மக்களின் வரலாற்று நாயகன் கோர் மஹியா. அவனது மூதாதையர்கள் தொடங்கி மஹியாவின் சோதனைகள், வெற்றிகள் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது கோர் மஹியா காப்பியம் (The Epic of Gor Mahia). காப்பியத்தில் வரும் கோர் மஹியா அழிவுச் சக்தியை எதிர்நிலையில் வைத்து தம்மைக் காத்து வழி நடத்தி வருவதாக லூவோ மக்கள் நம்புகின்றனர். நீண்ட காலமாக லுவோ மக்களிடம் வரலாற்று நினைவுகளை நினைவூட்டிக் கொண்டே வந்திருக்கும் இக்காப்பியம், மக்களிடம் தாங்கள் வெற்றிக்கு உரிய வரலாற்றைக் கொண்டவர்கள் என்கிற எண்ணத்தை விதைக்கிறது. இதைப் பின்னாளில் அட்ரியன் ஒன்யாண்டோ (Adrian Onyando) நூலாக வெளியிட்டார்.
காப்பியத்தில் கோர் மஹியா ஒரு போர் வீரனாக வருகிறான். பகைவர்களை அஞ்சாமல் எதிர்கொள்கிறான். போரில் சூழ்ச்சியும் தந்திரமும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான். ‘வீரம்’ உடல் வலிமையோடு மட்டும் தொடர்புடையது என்ற எண்ணைத்தை மறுக்கும் கோர் மஹியா, வீரத்தை அறிவு, பொறுப்பு, சமூக ஒருங்கிணைவு ஆகியவற்றோடும் தொடர்புடையது என்கிறான். இது மக்களிடம் உடல் வலிமையின் போதாமையைச் சொல்வதோடு அறிவுத் தளம் நோக்கிய நகர்வுக்கும் பங்களிப்பதாக அமைந்துவிட்டிருக்கிறது.
முகிதே
வீரஞ்செறிந்த முகிதே என்னும் இளம்பெண்ணைப் பற்றியது ‘நமேனேவின் மகள் முகிதே’ காப்பியம். கென்யாவின் காம்பா (Akamba) மக்களின் வாய்மொழி மரபில் பல தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு வந்திருக்கும் பெயர் ‘முகிதே’. அவளது தந்தையின் பெயர் நாமேனே. அவ்விரு பெயர்களையும் இணைத்து இக்காப்பியத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதாகத் தெரிகிறது. காம்பா சமூகத்தில் குடும்ப மரபும் தந்தை வழிக் குல அடையாளமும் முக்கியம். அந்தச் சூழலில், பெண் குழந்தைகள் பெரும்பாலும் குடும்பப் பணிகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டனர். ஆனால் முகிதே சிறுவயதிலிருந்தே அச்சமின்மை, சுறுசுறுப்பு, கூர்ந்த அறிவு ஆகியவற்றால் தனித்துத் தெரிந்தாள். அவள் இயற்கையோடு ஒன்றியவளாக இருந்தாள். மலைப்பகுதிகள், காடுகள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் முதலிய அனைத்தும் அவளது விளையாட்டு வெளியாக இருந்தன. இயற்கையோடு இயைந்து பழகியதாலே அவளுக்கு உடல் வலிமையும் மன உறுதியும் உருவாயின. அவள் வாழ்ந்த காலத்தில் ஆணாதிக்கம் வலுவாக இருந்தது. பெண்கள் போரிலும் அரசியல் ஆலோசனைகளிலும் இடம் பெற முடியாது. ஆனால் முகிதே தன்னுடைய திறமையால் இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்தாள். அண்டை சமூகத்தினரால் ஏற்பட்ட சண்டையில் ஆண்கள் சோர்வுற்ற போது முகிதே தீரமாக முன் வந்து வழிகாட்டினாள் என்பதாகக் காப்பியத்தின் கதைப் போக்கு அமைந்திருக்கிறது. ஆணாதிக்கம் அதிகமிருந்த போர்ப்படையை நோக்கி வீரம் பாலினத்தால் வரையறுக்க முடியாது என்பதை முகிதே உணர்த்துகிறாள்.
(நிறம் ஒளிரும்…)
Art : artsandculture
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு – தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு – வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் – நிலம் – சாதி – சாஸ்திரம்’ முதலிய நூல்கள் எழுதியுள்ளார்.








Leave a Reply