மழை நின்ற பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு மைதானத்திற்குச் சென்றான் மாயவன். தெருவில் நடப்பதற்கு முன் முட்டிக்காலுக்கும் மேல் ஜீன்ஸ் பேன்ட்டை மடித்துவிட்டான். ஆடுதொட்டி அருகே வந்ததும் நீண்ட நேரம் அடக்கிவைத்திருந்த சிறுநீர் நினைவுக்கு வர, அருகே இருந்த மைதானத்திற்குள் சென்றான். முன்பு கருவேல முள் இருக்கும். அதன் மறைவில் சிறுநீர் பெய்வான். கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக மரம் செடிகளையெல்லாம் அறுத்தெறிய, மொட்டையாய்க் கிடந்தது மைதானம். அங்கு இட்டு நிரப்பப்பட்ட வண்டல் மண் சகதியாய்க் கிடந்தது. கவனமாகக் கால்வைத்தும் இரண்டு இடங்களில் வழுக்கிவிழத் தெரிந்தான். மைதானத்தின் வடக்கே இருந்த சிறு குட்டையில் சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். நீரினுள் நிற்கும் சிறுவனின் கழுத்தாழம் கொண்டது அக்குட்டை தனக்கென ஓர் இடத்தைத் தெரிவு செய்ய, கணத்தில் வயிறு பாதிக் காற்று போன பலூனாய்ச் சுருங்கிப் போனது. அங்கிருந்து நேராகக் கன்னிகாபுரம் மைதானத்திற்குச் சென்றான்.
ஆங்காங்கே தேங்கிய மழை நீர் மைதானத்தை உலக வரைபடமாய்த் தோன்றச் செய்தது. புல்வெளி தெரிய மிதக்கும் நீரை எத்தித் தள்ளியபடி நாயின் பிம்பம் தலைகீழாய் ஓடியது. சற்றுத் தூரத்தில் திரும்பி ஓடிவந்த அந்நாயினைத் துரத்தி வந்தது ஓர் இளைஞனின் தலைகீழ்ப் பிம்பம், வடமேற்கில் இருந்து பறந்துவந்த பந்து நீரில் விழுந்து எழ முடியாமல் ஒட்டிக்கொண்டது. மைதானத்தின் நடுவே ஒரு சிறுவன் காகிதக் கப்பல் விட, மற்றொரு சிறுவன் மணல் வீடு கட்டிக்கொண்டிருந்தான். லுங்கி அணிந்த முதியவர் நடைபாதையில் மிதிவண்டி ஓட்டி வந்தார். தாயும் மகளும் வாய்க்கட்டு போட்ட நாயுடன் நடைப்பயிற்சி செய்தனர். ஒன்றன் பின் ஒன்றாய் மைதானத்துக்குள் நுழைந்த மாடுகள் தேங்கிய மழை நீரை மோந்து பார்த்தன. ஓர் இளைஞனின் தொடைகள் காற்பந்தை மீண்டும் மீண்டும் வானோக்கி எகிறச் செய்துகொண்டிருந்தன. மேற்படிக்கட்டில் அமர்ந்திருந்த இளைஞர்கள் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலைப் பாடியபடிக் கைக்கொட்டி ஆர்ப்பரித்தனர். நீண்டு அகன்ற படிகளில் ஏறி உச்சிக்குச் சென்று பார்த்தான், வழக்கத்துக்கும் மாறான நீர்மட்டத்துடன் ஓட்டேரி நல்லா நகர்கிறதா, தேங்கி நிற்குறதா எனத் தெரியாமல் இருந்தது. நிலத்தை, மனிதர்களை, விலங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் இருள் சூழத் தொடங்கியது.
வெளிச்சத்தின் அடர்த்தியும் எல்லையும் தெளிவடைந்த போது, செவ்வானத்தின் மேல் பறக்கும் பறவைகளின் சிறகுகள் கருமையாகத் தெரிந்தன. உரித்த ஒல்லியான வெள்ளைப் பூண்டாய்க் காட்சியளித்தது நிலா. நரியைப் போன்ற நாயொன்று, மெலிதான நீண்ட வாலுடன் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருந்தது. கண்ணிமைகளின் மீதும் திறந்துகிடக்கும் கால்களின் மீதும் ஈக்கள் மொய்க்கத் தொடங்கின. வெகுநேரமாய்க் கன்னிகாபுர மைதானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாயவன் காயாம்பூவை போனில் அழைத்து மைதானத்தில்தான் இருக்கிறேன் எங்க இருக்கீங்க என்றான். 42 பேருந்தில் ஜீ3 தாண்டி வந்துகொண்டிருக்கிறேன். ஐந்து நிமிடங்களில் வந்துவிடுகிறேன் என்றார் காயாம்பூ.
டார்வினின் ‘ஜீவராசிகளின் மூலத்தைப் பற்றி’ (On the Origin of Species) நூலின் சுருக்கத்தை வாசித்துக்கொண்டிருப்பதாகச் சொன்ன மாயவன், இது சுருக்கம் என்றால் முழுமையாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளதா என காயாம்பூவிடம் கேட்டான்.
“உயிரினங்களின் தோற்றம்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. மார்க்சிய வழிகாட்டியாக இருக்கும் நிறைய சிறுநூல்களை வாசித்த பிறகுதான் கடைசியாக மூலதனத்தை வாசிப்பார்கள். அதுபோல் டார்வினின் பரிணாமத் தோற்றம் என்றால் என்ன, பரிணாம வளர்ச்சி என்றால் என்ன இப்படியான சிறு நூல்களை வாசித்த பிறகு மூலப் பிரதியாக உயிரினங்களின் தோற்றத்தை வாசிக்கலாம். இது தொல்காப்பியம் படிப்பதைப் போல். வாசித்தாலும் ஓரளவுக்குப் புரியும், புரிந்தும் புரியாமலும் இருக்கும், அத்துறை சார்ந்தவர்களுக்கு மட்டும் புரிவது போலும் இருக்கும். கிட்டத்தட்ட பைபிள் படிப்பது போல் இருக்கும். அதாவது உயிரினங்களின் பைபிள் என்று சொல்லலாம்.”
“இந்நூலின் ஓரிடத்தில் ‘பிராணியின் வெளிப்புறப் பண்பைக்கொண்டே மனிதன் தனக்குத் தேவையான பிராணியைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். ஆனால் இயற்கையோ பிராணியின் உட்புறப் பண்பையும் குணத்தையுமே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.’ என்று இடம்பெற்றுள்ளது. இந்த வெளிப்புறப் பண்பு, உட்புறப் பண்பு வேறுபாட்டை எப்படி இன்னும் கூர்மையாகப் புரிந்துகொள்வது.?”
“உயிரினங்களின் தோற்றம், வடிவம், அழகு போன்றவற்றைப் பார்க்கிறோம். ஆனால், இயற்கையைப் பொறுத்தவரை அழகு என்று ஒன்று கிடையவே கிடையாது. பயன்பாடு, பயன்பாடின்மை இரண்டும்தான் அதற்கு முக்கியம். எது தேவை என்று பார்க்கிறது. முள்ளம்பன்றிக்கு முள் நீட்டம் நீட்டமாக இருக்கிறது. நமக்கு அது அழகாகவா தெரிகிறது. ஆனால், இயற்கைக்கு அது முக்கியமில்லை. நாம் முயலைத்தான் வளர்ப்போம், முள்ளம்பன்றியை வளர்க்க மாட்டோம். ஏனென்றால், முயல் மிகவும் மென்மையாகவும் குழந்தை போலும் இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், முயலுக்கு நிறைய மயிர்க் கற்றைகளையும் அடர்த்தியான தோலையும் அழகுக்காக இயற்கை வழங்கவில்லை, குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் பள்ளங்களின் அடியில் வாழ்ந்து தகவமைத்துக்கொள்ளவும்தான்.
ரசனைக்காக இயற்கை எதையும் வழங்கவில்லை. மலர்களெல்லாம் வெவ்வேறு நிறங்களிலும் வாசனையாகவும் இருக்கின்றன. ஒரு மரத்தில் மலரும் இருக்கும் முள்ளும் இருக்கும். இவற்றில் மலரைப் பார்த்துதான் ரசிக்கிறோம் முள்ளை இல்லை. மலர் மிகவும் அழகாக இருக்கிறது. இது குழந்தையின் சிரிப்பு, இறைவனின் சிரிப்பு என்றெல்லாம் கொண்டாடுகிறோம். ஆனால், இதற்காக இயற்கை உண்டாக்கவில்லை. மலருக்கு நிறைய வண்ணங்களையும் அடர்த்தியான தோலையும் கொடுத்திருப்பது வண்டுகளைக் கவர்வதற்காகத்தான். அப்போதுதான் மலரில் இருக்கும் தேனைக் குடிக்க வண்டு வரும். அவ்வாறு குடிக்கும் போது மலரின் மகரந்தம் வண்டின் காலில் ஒட்டிக்கொள்ளும். அது இன்னோர் இடத்திற்குச் செல்லும் போது மகரந்தச் சேர்க்கை உண்டாகிறது. அதனால்தான் பூக்கள் கலராக இருக்கிறதேயொழிய, மனிதர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நம்முடைய ரசனையில் பூ அழகாக இருக்கிறது. ஆனால், தாவரங்களை விலங்குகள் தின்றுவிடக் கூடாது என்று இயற்கை உருவாக்கிய மெக்கானிசம்தான் முள். மயில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. அது தோகை விரிப்பது தன் துணையை உறவுக்கு அழைக்கத்தான். பாம்பைக் கண்டால் நாம் ரசிக்கவா செய்கிறோம், பெயெரைக் கேட்டால் பயந்து நடுங்குகிறோம் அல்லவா. ஆனால், ஜோடிப் பாம்பு அதை ரசிக்கத்தானே செய்கிறது. இதைத்தான் டார்வின் சொல்கிறார்.”
*உயிரினங்களின் தோற்றம்’ ஏன் மிகவும் இன்றியமையாத நூலாகச் சொல்லப்படுகிறது? ”
“இது எழுதுவதற்கு முன்பு உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது குறித்துக் கோட்பாடு கிடையாது. உயிர்களைக் கடவுள் படைத்தார் என்று மதம் சொல்கிறது. திடீரென்று தோன்றியது என்று மக்கள் சொல்கிறார்கள். பிரபஞ்சத்திலுள்ள எந்தப் பொருளும் திடீரென்று உருவாக முடியாது. படிநிலையான வளர்ச்சியில்தான் உருவாக முடியும் என்பதை முன்மொழிந்தார். வெந்நீர் உருவாக வேண்டுமென்றால், தண்ணீர் முதலில் 30 டிகிரி செல்சியஸில் இருக்கும். இதிலிருந்து 31, 32, 33 ஒன்று ஒவ்வொரு படியாக மாறி மாறித்தான் 100 டிகிரி செல்சியஸை வந்தடையும். மந்தகதியில் ஆரம்பித்து மெல்ல மெல்லத்தானே கொதி நிலைக்குச் செல்கிறது. அதுபோல் எல்லாமே படிநிலையான வளர்ச்சியில்தான் நடக்கிறது என்றார். இப்போது கைகளுடன் இருக்கும் மனித இனம், ஆதிகாலத்தில் நான்கு கால்களுடன் இருந்தது. முன் இரண்டையும் பூமியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து, கைகளாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஒவ்வோர் உயிரினமும் எவ்வாறு தோன்றியது என்பதை வகைப்படுத்தினார்.”
“கல்லூரி மாணவராக இருக்கும் போது ஐந்தாண்டுகள் பயணம் செய்தார். அப்போது அவருக்குக் கிடைக்கும் விநோதமான தாவரங்கள், பூச்சிகள், பல்லி, ஆமை எல்லாவற்றையும் சேகரித்துத் தொகுத்துப் பார்க்கிறார். அந்நிலையில் இன்னின்ன உயிரினங்கள் இதனிதன் தொடர்ச்சியாக இருந்திருக்கலாம் என்கிற சிந்தனைக்கு வருகிறார். பாம்பு, பல்லி, முதலை, அரணை, பூரான், ஓணான் இதெல்லாம் ஒரே இனம்தான். பல்லி மெல்ல ஊர்ந்து ஊர்ந்துதான் பாம்பாக மாறியது என்கிறார். இப்படி மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகளாகத்தான் இருந்தார்கள். குரங்குக்கும் மனிதர்களுக்கும் தொடர்ச்சி இருக்கிறது என்பதை அவர் கண்டுபிடித்தார்.”
“மார்க்ஸ் சமூகம் எப்படி வளர்ந்தது என்பதைக் கண்டுபிடித்தார். மனிதச் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கு, இனக்குழுச் சமூகமா இல்லை பழங்குடிச் சமூகமா, இல்லை வனக்குடிச் சமூகமா இருந்து வேளாண்குடிச் சமூகமாக மாறி எனச் சமூக வரலாறுகளின் வளர்ச்சிப் படிநிலைகளை மார்க்ஸ் சொல்கிறாரோ அதேபோல் உயிரினங்களின் வளர்ச்சிப் படிநிலைகளை டார்வின் சொன்னார். மார்க்ஸ் மூலதனத்தை டார்வினுக்குத்தான் சமர்ப்பிக்க விரும்பியிருக்கிறார். இதற்காக டார்வினுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் மார்க்ஸ். ஆனால், டார்வின் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். சமூகப் படிநிலை வளர்ச்சியைச் செய்ய உங்களின் உயிரியல் கோட்பாடுதான் வழிகாட்டியாக இருந்தது.என்று சொல்லியிருக்கிறார் மார்க்ஸ்.”
“ஒன்றியிலிருந்து இன்னொன்று தொடங்குவதுதான் பரிணாமம் அல்லவா?”
ஆமாம். அவர் சொன்னது உயிரினங்களின் வளர்ச்சிக்குத்தான். ஆனால், அரசியல், பொருளாதாரத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது. அப்போதுதான் மார்க்ஸ் அதைக் கட்டமைக்கிறார். டார்வின் கோட்பாடு தமிழ்நாட்டுக்கு வருகிறது. டார்வினைப் பொறுத்தவரை பூனைக்கும் புலிக்கும் சரித்திரத் தொடர்ச்சி இருக்கிறது. இரண்டும் ஒரே வடிவத்தில் இருக்கின்றன. இரண்டும் ஒரே மாதிரி வேட்டையாடுகிறது. இரண்டின் உடல்மொழியும் ஒரேமாதிரி இருக்கிறது. இப்படிப் புலிக்கும் பூனைக்கும் தொடர்ச்சி இருக்கிறது. ஆனால், புலிக்கும் முயலுக்கும் தொடர்ச்சி இல்லை. பூனை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை இவையெல்லாம் ஒரு வகை. பாம்பு, பல்லி, முதலை, அரணை, பூரான், ஓணான் இதெல்லாம் ஒரு வகை. டார்வின் கோட்பாடு தமிழ்நாட்டுக்கு வருகிறது. இது என்ன சொல்கிறது என்றால் தமிழ், மலையாளம், கன்னடம் இதெல்லாம் ஒரு வகை என்கிறது. சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் இதெல்லாம் ஒரு வகை. இதைக் கண்டுபிடிக்கவும் டார்வினின் கோட்பாடுதான் ஆதாரமாக இருந்திருக்கிறது.”
“கோட்பாட்டுக்கும் சித்தாந்தத்துக்கும் என்ன வேறுபாடு?’
“மார்க்சியம் ஒரு சித்தாந்தம். கம்யூனிசம் ஒரு கோட்பாடு. உதாரணத்திற்குக் கம்யூனிசம் ஒரு பரந்துபட்ட பரப்பு, இதை மார்க்ஸ் மட்டும் உருவாக்கவில்லை. அவருக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. புத்திசம் ஒரு கோட்பாடு, அம்பேத்கரிசம் ஒரு சித்தாந்தம். வார்த்தைகளாகப் பார்த்தால் சித்தாந்தம் சமஸ்கிருதம், கோட்பாடு தமிழ். இந்த இடத்தில் மொழியை விட்டுவிடுவோம். நாம் புழங்கிய சொற்களுக்குச் சில அர்த்தங்களை ஊட்டியிருக்கிறோம் அல்லவா. தமிழ்ச் சூழலில் சில அர்த்தங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.”
கோட்பாடு என்பது ஒரு பரந்துபட்ட அர்த்தம், சித்தாந்தம் என்பது ஓர் அரசியல்ரீதியாகச் சொல்வது. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில், குறிப்பிட்ட இலக்கோடு, குறிப்பிட்ட லட்சியத்தோடு, குறிப்பிட்ட செயல் நடைமுறைகளோடு, பேசுகின்ற விசயங்கள் சித்தாந்தம். சமூக நீதியைத் திராவிடமும் பேசுகிறது. தலித்தியமும் பேசுகிறது. பெண்ணியமும் பேசுகிறது. எனவே, சமூக நீதி என்பது கோட்பாடு, திராவிடம் என்பது சித்தாந்தம்.”
“சொற்களுக்கு எல்லாம் ஒரு அர்த்தமும் கிடையாது. எல்லாமே நாம் உருவாக்கியவைதான். ஏனென்றால் பழைய தமிழில் சித்தம் என்றால் அறிவு; அந்தம் என்றால் முடிவு. இது வேர்ச்சொல்லின் அடிப்படையில், சிந்தனையின் முடிவைக் கடவுள் என்று சொல்கிறார்கள். சிறுபத்திரிகை, அரசியல் களங்கள், சின்னச் சின்னக் குழுக்கள், அறிவார்ந்த குழுக்கள் போன்ற இன்றைய தமிழ்ச் சூழலில் இந்த வார்த்தைக்குச் சில அர்த்தங்களை ஊட்டியிருக்கிறோம். சில அர்த்தங்களைப் புகுத்தியிருக்கிறோம். இதன் அடிப்படையில் கோட்பாடு என்பது அறிவியல், தத்துவம் சார்ந்த பரந்துபட்ட ஒரு போக்கு எனச் சொல்லலாம். சித்தாந்தம் என்பது நடைமுறை சார்ந்தது. கோட்பாடு தியரிட்டிக்கல் என்றால் சித்தாந்தம் பிராக்டிகல். சித்தாந்தம் என்பது அறிவில் அந்தத்தைக் கண்டறிவது.”
“தெளிவாகச் சொன்னாலே சித்தாந்தம். அது தெரியாமல் போனாலே வேதாந்தம்’ என்று கண்ணதாசன் பாடல் வரிகள் இருக்கு அல்லவா!”
வேதங்களின் சாராம்சத்தை வேதாந்தம் என்றும் சித்தர்களின் சாராம்சத்தைச் சித்தாந்தம் என்றும் சொல்வார்கள். கண்ணதாசன் மதத்தின் அடிப்படையிலும் தமிழ் மரபிலிருந்தும் சொல்கிறார். நாம் சிறுபத்திரிகை சார்ந்த சூழலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறோம். கண்ணதாசனுக்கும் நவீன அறிவியலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
“என் கல்லூரி நண்பன் கூட அப்போது மிகவும் முற்போக்காக யோசிப்பான், ஈழம், தமிழ் தேசியம் என்று பேசுவான். ஆனால், ஒரு கவிதை நூல் எழுதி அதற்கு முன்னுரை வாங்கச் சாதிக் கட்சித் தலைவரிடம்தான் சென்றான். தேசியம் என்பான், மொழி என்பான் சேரி என்றால் இழிவாகப் பார்ப்பான். என்னதான் சிந்தாந்த மரபு, சிறுபத்திரிகை மரபு என்று பேசினாலும் எல்லாக் காலங்களிலும் சாதியும் ஒடுக்குமுறையும் தீண்டாமையும் தொடர்ந்து
நடந்துகொண்டுதானே இருக்கின்றன.”
“தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் எல்லாமே, சாதிப் பெருமை பேசுபவர்கள்தான். எல்லாம் கிராமத்து மனிதர்களிடம் ஆழமாய்
வேரூன்றியிருக்கும்.”
“கிராமத்துக்காரங்களை மட்டும் சொல்கிறீர்கள். அப்படியென்றால் நகர மனிதர்கள் சுத்தமாகச் சாதியைப் பற்றிப்
பேசமாட்டார்களா என்ன?”
“நகரத்தில் வாழ்பவர்கள் சாதியின் வேர்களை வளர வளரத்தான் தெரிந்துகொள்கிறார்கள். பள்ளி, கல்லூரிக் காலங்களில் சாதி பற்றிய கவனம் பெரிதாக இங்கு இருக்காது. கல்லூரி மாணவர்களிடம் சமூக வேறுபாடுகள் இருந்தாலும்கூட, கல்லூரிப் பருவத்தில் பெரிதாக வெளிப்படாது. அங்கிருக்கும் நட்புச் சூழலில் சாதி பெரிய விசயமாகத் தெரியாது. அதிலிருந்து வெளிவந்த பிறகு சாதிய அடையாளங்களுக்குள் தங்களைப் புகுத்திக்கொள்வார்கள்.”
“ஆனாலும்,கிராமத்துக்காரர்களிடம் சாதிய உணர்வு மேலோங்கி இருப்பதாகச் சொல்வது கொஞ்சம் கவலையளிப்பதாகவும் சந்தேகத்திற்கிடமாகவும் இருக்கிறது. ஏதோ நகர வாழ் மக்களுக்குச் சாதிப் பெருமையே இல்லாதது போல் கட்டுக் கட்டுவதாக உள்ளது”
“கிராமத்தை ஒப்பிடும் போது, நகரத்தில் சாதியைவிட்டு வெளிவருவதற்கான எவ்வளவோ சூழல் இங்கு இருக்கிறது. கிராமத்தில் மாற்றுச் சமூகத்துடன் பழகும் வாய்ப்புக்கூடக் கிடையாதே?!”
“பழகுவது மட்டுமல்ல. அவர்களின் தெருக்களில் நடமாட முடியாது. வீட்டிற்குள் போகமுடியாது இப்படி ஏராளமான சிக்கல்கள் இருப்பது உண்மைதான்”
“வருணாசிரமக் கோட்பாட்டின் சமூக அமைப்புதான் கிராமம். கிராமம் என்கிற அமைப்பும் உருவாக்கமும் அதைத்தான் வலியுறுத்தும். அக்ரஹாரம் கிராமத்தின் மையத்தில்தான் இருக்கும். மையத்திலும் கூட வளங்கள் நிறைந்த நிலத்தின் மேட்டுப் பகுதியில்தான் இருக்கும். ஐயர், சத்திரர், வைசியர் எனப் பிரமிடு
போன்ற அடுக்குகளாக இருக்கும். ஆனால், கிராமத்தில் வளையம் வளையமாகப் பிரித்துவைக்கப்படும். ஆனால், நகரம் அப்படிக் கிடையாது. இது குறுக்கும் மறுக்கும் உருவான ஒன்றாக இருக்கும். ஆனால், இதற்குள்ளும் சாதியக் கட்டமைப்பை உருவாக்க முயற்சி
செய்வார்கள்.”
“வட சென்னைக்கும் தென் சென்னைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது, வடசென்னையில் பூர்வக்குடிகள் இருப்பார்கள். தென் சென்னையில் அதிகமாகப் புலம்பெயர்ந்தவர்கள்தான் இருப்பார்கள். வெளி மாவட்டத்தில் இருந்து இங்கு வந்தவர்கள் மிடில் கிளாஸாக, அப்பர் மிடில் கிளாஸாக மாறி வருகிறார்கள். புறநகர் ரயிலில் தாம்பரத்தில் இருந்து எக்மோர் வருபவர்கள் அலுவலகத்திற்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் தொழிற்சாலைகளுக்கும் பேட்டைகளுக்கும் செல்பவர்கள். அறிவியல், பொறியியல், மருத்துவம், சினிமா என அனைத்துத் துறை சார்ந்த கல்லூரிகளும் தென் சென்னையில்தான் அதிகம் உள்ளன. வடசென்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். நகரத்திற்குள் எல்லாவிதமான சுரண்டல் தன்மையும் இருக்கிறது. ஆனால், வருணாசிரக் கோட்பாட்டின் சமூக அமைப்பாக இருப்பது கிராமம்தான்.”
“தேசத்தின் முதுகெலும்பு கிராமங்களில்தான் உள்ளது என்று காந்தி சொன்னதற்கும், கிராமங்களை அழித்தொழிக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னதற்கும் மேற்சொன்ன சமூகக் டமைப்புதானே காரணம்?”
“ஆமாம். வர்ணாசிரம அமைப்பை உடைக்கத்தான் அம்பேத்கர் சொன்னார்.”
“காந்தி தேசத் தந்தையாகவும் மகாத்மாவாகவும் பார்க்கப்பட்டவர். அவரின் கருத்துக்கு எதிராக அம்பேத்கர் இவ்வாறு சொன்னபோது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் அல்லவா.”
கட்டாயமாக ஏனென்றால் பொதுச் சமூகம் காங்கிரஸின் செல்வாக்கில் இருக்கிறது. வெகுஜனச் சமூகம், பொதுச் சமூகம் காந்திமயப்படுத்தப்பட்டிருக்கு அல்லவா. இந்தியாவை நவீனமயப்படுத்தியதில் மிகப் பெரிய பங்கு அம்பேத்கருக்குத்தான் உண்டு. ஆனால், பொதுச் சமூகம் காந்தியைத்தானே தலைவராக நினைத்தது. அம்பேத்கரைத் தலித் தலைவர் என்றுதானே கட்டமைத்தார்கள்.”
“இப்போதும் அந்த நிலை மாறவே இல்லையே. இன்னும் அவரைத் தலித் தலைவர் என்றுதானே சொல்கிறார்கள். பாஜக முதல் நடிகர் விஜய் வரை அம்பேத்கரின் பெயரை உச்சரிக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் அவரின் படங்கள் தென்படுகின்றன. முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் எனச் சமூக வலைத்தளமெங்கும் அம்பேத்கர் படங்கள் நிறைந்துகிடக்கின்றன. இவற்றில் தலித் – தலித் அல்லாதவர்களும் அடங்குவர். ஆனாலும், அம்பேத்கரைத் தலித் தலைவர் என்றே வரையறுக்கிறார்கள்.”
“காந்தி சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்ற காலத்தில் நவீன இந்தியாவைக் கட்டமைத்தவர் அம்பேத்கர்தான். நேரு பொருளியல் அமைப்பில் இந்தியாவை நவீனமாக்கினார். ஐந்தாண்டுத் திட்டம், ஜனநாயகத்தின் சில அடிப்படைத் தகுதிகள் ஆகியவற்றைக் கொண்டுவரப் பக்கபலமாக இருந்தார் நேரு. ஆனால், நவீனச் சமூக உருவாக்கம், தொழிலாளர் சட்டம், பெண் சொத்துரிமைச் சட்டம், வருங்கால வைப்பு நிதித் திட்டம், மகப்பேறு விடுமுறைக் காலத்திட்டம், நீர்ப்பாசனத் திட்டம் என எத்தனையோ விசயங்களைக் காலனியக் காலகட்டதிலேயே கொண்டுவந்தவர் அம்பேத்கர்.”
“தொழிலாளர், பெண்ணுரிமை, நீர்ப்பாசனம் உட்படப் பெரும்பாலானவை பொதுச் சமூகத்திற்கான திட்டமாகத்தானே இருக்கின்றன. பிறகு அவரை வெறுமனே தலித் தலைவர் என முத்திரை குத்துவது ஏன்? சட்டத்தை இயற்றிய மாமேதை என நாம் சொன்னால், அவர் மட்டுமா சட்டத்தை இயற்றினார் சட்டம் இயற்றிய குழுவில் அவரும் ஒருவர் எனவும் எத்தனையோ பொதுச் சட்டங்களைக் கொண்டுவந்தவர் எனச் சொன்னாலும் குறிப்பிட்ட சாதித் தலைவர் என எதிர்த்தரப்பினர் கூக்குரலிடுகின்றனர். தீரா நோய் பிடித்த சமூகமாக இருக்கிறதே. ஒருவகையில் பார்த்தால் கிராமங்கள் அழிந்துகொண்டே வருவது அம்பேத்கரின் கனவை நினைவாக்கும் செயல் என்று சொல்லலாம் அல்லவா.”
“அங்கு காலியாகும் கிராமங்களில் இருந்துதான் தொழிலாளர்கள் இங்கு வருகிறார்கள். கிராமங்கள் அழிவதும் நகரங்கள்
விரிவடைவதும் இனித் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். அதனால்தான் சாதிசார்ந்த உரையாடல்கள், விவாதங்கள், கருத்தாடல்கள் நகரத்தை நோக்கி நகர்கின்றன.”
“நகரத்தை நோக்கி நகர்கின்றன’ என்பதை எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்”
“சமூக வலைத்தளங்கள் அமைப்புகள், சினிமா, அரசியல் களத்தில் கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் முன்பு இருந்ததைவிட இப்போது மிகவும் தீவிரத்தன்மையை நோக்கிச் செல்கின்றன.”
“கிராமங்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததன் விளைவுகள் என்று இவற்றைச் சொல்லலாமா?”
“நிச்சயமாக…”
“அம்பேத்கர் எதற்காக கிராமங்கள் ஒழியவேண்டும் என்று சொன்னாரோ அதே சாதியக் கட்டமைப்பு நகரத்திலும் தொடர்கிறதென்றால், கிராமங்கள் ஒழிந்தும் பயனில்லையே?”
“நகரத்தில் புலப்படாத தன்மையில் அரூபமாக வார்க்கப்படுகிறது அல்லவா.”
“அப்படியென்றால், அம்பேத்கரின் கிராமங்கள் ஒழிய வேண்டும் என்கிற கனவு நிறைவேறினாலும், சாதி ஒழிப்புச் சாத்தியமில்லை என்ற சூழலைத் தானே தோற்றுவிக்கிறது.”
“இங்கு மறுகட்டமைப்புச் செய்யப்படும்” (இருவரும் கோரஸாகச் சொல்கிறார்கள்.)
“சமூக இயங்கியல் என்பது பலதரப்பட்ட போக்குகள் கொண்டதுதானே.”
வெகுநேரமாய் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததில் மாயவனுக்குக் குண்டி மரத்துப் போய்விட்டது. சிமென்ட் திட்டில் பகலெல்லாம் ஊறிய சூடு உடல் முழுவதும் ஊடுபாவும். அன்று பெய்த மழையால் ஈரம் பாவியிருந்தது. மைதானத்தின் பேரமைதியின் மேல் ஒன்றடுத்து ஒன்றாகவும் பின் மொத்தமாகவும் நாய்களின் குரைப்பொலி பரவியது. சற்றுத் தொலைவில் மலர்ந்து சுருங்கியது நெருப்பு, யாரோ புகைப்பிடிக்கலாம் என்று இருவரும் பின்னி மில் தொழிற்சங்கக் கட்டடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர். அங்கு நடைவண்டியில் விற்கும் இட்லியும் குறுந்தோசையும் மிகவும் சுவையாக இருக்கும்.
ஈரம்படிந்த சாலையோரம் பரவிக்கிடந்த காய்ந்த அரசம் இலைகளைக் குவித்துக்கொண்டிருந்தவன் பொந்திலிருந்து வந்த எலியைக் கண்டு மிரண்டான். தொழிற்சங்கக் கட்டடத்தின் மேல் வேர்விட்ட அரச மரம் காற்றில் ஆட, கிளைகளில் தேங்கியிருந்த மழைத்துளி தெருவெங்கும் சொட்டியது. ஓரிரு துளிகள் தட்டில் விழுந்தன. அதையும் சேர்த்துச் சாப்பிட்டனர்.
பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்
Art : Vikrant Bhise

கவிஞர், பத்திரிகையாளர். இயற்பெயர் ராச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழே இயங்கும் ஜனசக்தி வார இதழில் பணிபுரிந்து வருகிறார். வேர்முனைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலையம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ‘பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்’ எனும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகி உள்ளன. ‘மாமிச அம்புலி’ என்னும் சிறுகதை அகழ் இணைய இதழில் எழுதியுள்ளார்.
Leave a Reply