ஆப்பிரிக்காவைப் பூகோள அடிப்படையில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்தியம் என்று ஐந்தாகப் பிரிப்பர். வடக்கையும் தெற்கையும் சஹாரா பாலைவனம் பிரிக்கிறது. வடக்கு ஆப்பிரிக்கா ஏனைய ஆப்பிரிக்காவில் இருந்து தனித்திருப்பதால் அவர்களுடைய கலை, இலக்கிய, பண்பாட்டு நடைமுறைகள் ஆப்பிரிக்காவிலேயே வேறுபட்ட வகையினதாக இருக்கின்றன. ஆப்பிரிக்கர்களின் வேர் தென் ஆப்பிரிக்காவிலேயே இருப்பதால் அந்தப் பகுதி மட்டும் உலகின் பழமையான மனித இனங்கள் வாழக்கூடியதாக இருந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பல கறுப்பர் இனக்குழுக்கள் உள்ளன. சான் (San), கோய்கோய் (Khoekhoe), சூலு (Zulu), கோஸா (Xhosa), சோதோ (Sotho), தஸ்வானா (Tswana), வென்டா (Venda), தைசொன்கா (Tsonga) நெட்டெபேலே (Ndebele) முதலியன இனங்கள் தங்களுக்கென்று தனித்தனியான வாய்மொழி மரபுகளைக் கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் மரபுகள், ஒற்றுமை, வரலாறு, மதம், ஒழுக்கம், இசை, நடனம், மருத்துவ அறிவு என்கிற வகைமையில் அமைந்துள்ளன.
சான் இலக்கியம்
சான் மக்கள் தென் ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான பூர்வகுடி வேட்டையாடிகள். பான்டு மொழியினர் வருவதற்கு முன்பே ஆப்பிரிக்காவில் வசித்தவர்கள். உலகின் பழமையான கலாச்சாரங்களில் ஒன்றாக விளங்கும் இந்தக் குழுவினரிடம் புராணங்களும் வாய்மொழி இலக்கியங்களும் அதிகமுண்டு. அவற்றில் ஆரம்ப இனக்குழுவினரைப் பற்றிய கதைகள் (Early Race Stories), தந்திரக் கதைகள் (Trickster Tales) குறிப்பிடத்தக்கன. சூரியனும் சந்திரனும் ஒரு காலத்தில் பூமியில் மனிதர்களாக வாழ்ந்ததாகவும், தங்கள் முன்னோர்கள் அவர்களைத் தூக்கி வானில் எறிந்து விட்டதாகவும் சான் இனத்தார் ஆழமாக நம்புகின்றனர். இவர்களின் மதிக்கத்தக்க புராணப் பாத்திரமாகக் காக்ன் (Kaggen) உள்ளது. அது இயற்கையின் சக்தியாகவும் வடிவமாகவும் உலகப் படைப்பின் பிரதிநிதியாகவும் கருதப்படுகிறது. நன்மை தர ஒரு கடவுள் இருப்பதைப் போல தீமை தரவும் ஒரு கடவுள் இருப்பதாகச் சொல்லும் அவர்கள், ஒரு கடவுள் உலகத்தையும் உயிர்களையும் படைத்தது. மற்றொரு கடவுள் நோய்களையும் மரணத்தையும் கொண்டு வந்தது என்கிறார்கள். தென்னாப்பிரிக்காவில் மற்ற இனக்குழுக்களை விட சான் மக்கள் வளமான வாய்மொழி வரலாற்றைக் கொண்டுள்ளனர். அவர்களின் பழமையான பாறை ஓவியங்கள் நமீபியாவில் உள்ளன. அவை அவர்களினுடைய சமூக நம்பிக்கை, அமைப்புகள் பற்றிய தடயங்களை அறிவிப்பனவாக இருக்கின்றன.
1870 – 1884 ஆண்டுகளில் ஜெர்மன் மொழியியல் அறிஞர் ப்ளீக் லாயிட் ஆர்க்கைவ் (Wilhelm Bleek), அவரது மைத்துனி லக்கி லியார்ட் (Lucy Lloyd) ஆகியோர் சான் மொழியைக் கற்று வாய்மொழி கதைகள், தனிப்பட்ட வரலாறுகள், பண்பாட்டுக் கூறுகள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்தனர். இது ‘Specimens of Bushman Folklore’ என்ற தலைப்பில் 1911ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்தத் தொகுப்பில் ‘நட்சத்திரங்களை உருவாக்கிய மூதாதைப் பெண்’ (The Girl of the Early Race, Who Made Stars) என்றொரு கதை உண்டு. ஆப்பிரிக்கர்களின் படைப்பூக்கத்திற்குச் சான்று பகரும் அழகான கதை. அது இப்படித் தொடங்குகிறது. ஒரு காலத்தில் ஆரம்ப இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி இருந்தாள். ஒருநாள் அவள் மரச் சாம்பலை எடுத்து வானத்தில் தூக்கி எறிந்தாள். அப்போது, “இந்தச் சாம்பல் எல்லாம் சேர்ந்து வானத்தில் பால் வட்டமாக ஆக வேண்டும். நட்சத்திரங்கள் அதற்கு வெளியே அழகாக நிற்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். அதன்படி, அந்தச் சாம்பல் பால் வட்டமாக மாறி வானத்தில் பரவியது.
பிறகு நட்சத்திரங்களும் பால் வட்டமும் சேர்ந்து வானத்தில் சுற்றி நகரத் தொடங்கின. பகலில் சூரியன் உதிக்கும்போது நட்சத்திரங்கள் மறைந்து விடும். இரவில் மீண்டும் வெளிச்சமாகத் தெரியும். சில நேரங்களில் அவை வெண்மையாகவும், சில நேரங்களில் சிவப்பாகவும் ஒளிரும். அவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இருளில் ஒரு அழகான காட்சியை உருவாக்கும்.
இரவில் மக்கள் பயப்படாமல் செல்ல, இந்த நட்சத்திரங்களும் பால் வட்டமும் சிறிது ஒளியைத் தருகின்றன. இந்த ஒளி இல்லையென்றால், உலகம் முழுவதும் இருள் மட்டுமே இருக்கும் என்பதாக அந்தக் கதை முடிகிறது. அந்தப் பெண் மனிதர்களுக்காகவே வானத்தில் ஒளியை உருவாக்கினாள் என்பது கதையின் சாராம்சம். உலகத்தின் பிரகாசத்தில் ஆப்பிரிக்கர்களின் உழைப்பும் இருக்கிறது என்பதை மிக நேர்த்தியாகச் சொல்லும் வாய்மொழியாடல் அது.
வடக்கு, கிழக்கு ஆப்பிரிக்காவை உள்ளடக்கிய பெரிய பிராந்தியத்தின் ஒரு பகுதியாகத் தென்னாப்பிரிக்கா இருந்தது என்பதைத் தொல்பொருள் சான்றுகள் காட்டுகின்றன. அந்தப் பிராந்தியத்தில்தான் நவீன மனிதர்கள் முதன்முதலில் தோன்றி வாழ்ந்தனர். ஆயிரக்கணக்கான தலைமுறைகளைச் சேர்ந்த, வேட்டையாடி உணவு சேகரித்தவர்கள் ஏறக்குறைய இரண்டு மில்லியன் ஆண்டுகளாகத் தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்ததாகத் தெரிகிறது. சான்றாக, கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், இருபதாம் நூற்றாண்டு சான் மக்களின் எலும்புக்கூடுகளைப் பெருமளவில் ஒத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்கால சான் மக்களின் கருவித் தொகுப்புகள் கற்கால வேட்டையாடி உணவு சேகரித்தவர்களின் கலைப்பொருட்களை ஒத்திருக்கின்றன.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் இந்தப் பகுதிக்கு ஆடுகளையும் மாடுகளையும் கொண்டு வந்த கோய்கோய் மேய்ப்பர்களே, தூரிகைக்குப் பதிலாக விரலால் வண்ணம் பூசப்பட்ட ஓவியக்கலைக்குக் காரணமானவர்களாக இருந்திருக்கலாம். வண்ணங்கள் பெரும்பாலும் ஒற்றை நிறமாகவும், ஓவியங்களின் கருப்பொருள் பெரும்பாலும் குறியீட்டு அர்த்தங்களைக் கொண்ட உருவமற்ற வடிவங்களாகவும் உள்ளன.
தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட மிக முக்கியமான பாறை ஓவியங்களில் ஒன்று, கிழக்கு கேப்பில் உள்ள லிண்டன் பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1917-ல் பண்ணையிலிருந்து அகற்றப்பட்டு, கேப் டவுனில் உள்ள தென்னாப்பிரிக்க அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இது லிண்டன் பலகை (Linton panel) என்று அழைக்கப்படுகிறது, இதில் உள்ள ஓர் உருவம் புதிய தென்னாப்பிரிக்காவின் தேசிய சின்னத்தில் பயன்படுத்தப்பட்டது. எண்பத்து மூன்று ஆண்டுகளாக அருங்காட்சியகப் பராமரிப்பில், இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டதால், லிண்டன் பலகையானது தென்னாப்பிரிக்கப் பாறை ஓவியங்கள் அனைத்திலும் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது. 1995 இல், ‘ஆப்பிரிக்கா- ஒரு கண்டத்தின் கலை’ என்ற சர்வதேசக் கண்காட்சியில், இந்தப் பலகை முதன்மையான ஈர்ப்புகளில் ஒன்றாக இடம்பெற்றது.
இந்த உருவம் ஆப்பிரிக்க மறுமலர்ச்சியின் ஆன்மாவை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் மறுமலர்ச்சியைத் தொடங்கியபோது, கலையும் கட்டிடக்கலையும் அதன் உச்சத்தை அடைந்திருந்த கிரேக்க, ரோமானிய செவ்வியல் காலத்தை நோக்கித் திரும்பின. சான் பாறை ஓவியம் உலகின் மாபெரும் தொல்பொருள் அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆப்பிரிக்காவின் கடந்த காலப் பெருமைகளைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகும்.
சூலு இலக்கியம்
சூலு (Zulu) மொழியில் ‘இஸிபோங்கோ’ (Izibongo) என்பது தோத்திரப் பாடல்களைக் குறிக்கும். நகுனி (Nguni), சோதோ-தஸ்வானா (Sotho–Tswana) மொழி பேசக்கூடிய தென் ஆப்பிரிக்கச் சமூகங்களில் காணப்படும் ஓர் அரசியல் கலை வடிவமான இது, ஒரு தனிநபரை வரையறுத்து பெயரிடும் செயல்பாட்டைச் செய்கிறது. துணிச்சலான படிமங்களும், கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியும் இதன் சிறப்பியல்புகளாக உள்ளன. இந்தத் தோத்திரப் பாடல்களின் வரலாறு குறைந்தது 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீண்டிருக்கிறது. இதுவரை 1750 முதல் 1900 வரையிலான தோத்திரப் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசர் சாக்காவின் (King Shaka) ஆட்சியில் (1816–1828) இப்பாடல்கள் வீரத்தையும் போர்வெற்றியையும் போற்றும் வடிவில் வளர்ந்தன.
தோத்திரப் பாடல்களைப் பாடுவோர் ‘இம்போங்கி’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் மதிப்பிற்குரிய நிலையில் இருந்தனர். ‘ஒரு தோத்திரப் பாடகன், ஒரு அதிகாரிக்கும் அவரது மக்களுக்கும் இடையில் இடைத்தரகராக, கல்வியாளராக, போற்றுபவராக, விமர்சகராகச் செயல்படுகிறார்’ என்ற ரஸ்ஸல் கஸ்சுலா (Russell Kaschula) கூற்று இதை மெய்ப்பிக்கும். சூலு மக்களிடம் போர்ப்பாடல்கள், பயணப் பாடல்கள், குழந்தைகளுக்கான நாட்டார் கதைகள் ஆகியன பரவலாக வழங்குகின்றன. கோஸா இனக்குழுவினரிடமும் தோத்திரப் பாடல்கள் உண்டு. ஆனால் அது சற்று சூலு இனக்குழு மரபிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. கோஸா இனக்குழுவினர் புதிய பாடல்கள் எழுதுகிறவர்களாகவும் அதை மனனம் செய்து ஒப்பிப்பவராகவும் உள்ளனர். இது சூலுவிடம் இல்லை.
1994 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலாவின் பதவியேற்பு விழாவில் கோஸா இனத்தின் தோத்திரப் பாடல்களுக்காகப் புகழ்பெற்ற ஜோலானி ம்கிவா (Zolani Mkiva) இஸிபோங்கோ ஒப்பித்தார். இது ஒரு சக்திவாய்ந்த தகவல் தொடர்பு வடிவமாக கோஸா வாய்மொழி கவிதை எப்படி தொடர்கிறது என்பதை உலகத்துக்குக் காட்டியது. ஜோலானி ம்கிவா இன்றும் கோஸா வாய்மொழி மரபுகளை மீட்டெடுத்து ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.
கோஸா மரபில் ‘இஞ்சோமி’ (Iintsomi) என்றழைக்கப்படும் நாட்டார் கதைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இவை கூத்து போல நிகழ்த்தப்படும். சடங்குகள், நிகழ்வுகளின் தொடக்கம், பொதுக் கூட்டம் ஆகியவற்றில் இடம் பெறுகிறது. கோஸா கவிஞரும் நாவலாசிரியருமான எஸ்.இ.கே.மக்ஹாயி (S.E.K.Mqhayi) ‘தென் ஆப்பிரிக்காவின் கவிஞர்’ என்று அழைக்கப்பட்டார். அவரது படைப்புகள் ஆப்பிரிக்க மரபுகளை நினைவூட்டி ஐரோப்பிய, ஆப்பிரிக்க வாழ்க்கை முறைகளுக்கு இடையேயான பதட்டங்களை வெளிப்படுத்தின.
சோதோ மொழியில் தோத்திரப் பாடல்கள் ‘லிதோக்கோ’ (lithoko) அல்லது ‘டிபோக்கோ’ (diboko) என்று அழைக்கப்படுகின்றன. இவை சூலு, கோஸா ஆகியவற்றின் இஸிபோங்கோவைப் போலவே தலைவர்களின் வெற்றிகளையும் குடும்ப வரலாற்றையும் சமூக அடையாளத்தையும் கொண்டாடுகின்றன. டி.பி. குனேனே (D.P.Kunene) எழுதிய பாசோதோ வீரநிலைப் பாடல்கள் (Heroic Poetry of the Basotho) என்ற நூல் இம்மரபை விரிவாக ஆவணப்படுத்தி இருக்கிறது. ‘பாசோதா’ என்றால் ‘சோதோ மொழி பேசுகின்ற மக்கள்’ என்று பொருள். இது போல ‘லிபேலா’ என்கிற வாய்மொழிப் பாடல்களும் சோதோ மொழியில் உண்டு. ‘லிபேலா’ என்பது பாசோதோ (Basotho) புலம்பெயர்ந்த ஆண்களால் இயற்றப்படும் ஒரு தனிப்பட்ட பாடல் வடிவம். தங்கள் பயணங்களிலும் தொழிலாளர் முகாம்களிலும் அனுபவித்த துன்பங்களை இவர்கள் பாடல் வழியாக வெளிப்படுத்துகின்றனர். இதை டேவிட் கோப்லான் (David Coplan) தன்னின உண்ணிகளின் காலத்தில் (In the Time of Cannibals) நூலில் பதிவு செய்திருக்கிறார்.
வென்டாவும் தஸ்வானாவும்
வென்டா (Venda) மக்களிடம் ‘ஸ்விக்கோடோ’ (Zwikhodo) என்று அழைக்கப்படும் தோத்திரப் பாடல் மரபு உள்ளது. ‘ஸ்விக்கோடோ’ என்ற சொல் ‘கோடா’ (khoda) என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்துள்ளது. இதன் பொருள் தோத்திரம் என்பதாகும். இந்த மரபு சூலு இஸிபோங்கோவிலிருந்து வேறுபட்டு, பேச்சிப் பாணியில் ஒப்பிக்கப்படுகிறது.
தஸ்வானா மக்களும் பாரம்பரிய தோத்திரப் பாடல் மரபைக் கொண்டுள்ளனர். நெட்டெபேலே மக்கள் அழகிய ஆடைகள் வீட்டு ஓவியங்களோடு கலைவடிவங்களையும் வாய்மொழி மரபையும் இணைத்து வருகின்றனர். சோங்கா (Tsonga), வடக்கு சோதோ (Northern Sotho) ஆகிய மொழி பேசும் சமூகங்களிலும் வாய்மொழி இலக்கியம் செழுமையாக இருந்துள்ளது.
ஆப்பிரிக்காவின் அனைத்துப் பிராந்தியங்களிலும் சிறுசிறு வேறுபாட்டுடன் வழக்கத்தில் இருந்த வாய்மொழி மரபுகள் அந்தந்தப் பிரதேசத்துக்கே உரிய தலைவர்களின் வரலாறு, குடும்ப வரிசை, போர்கள், இடப்பெயர்வுகள், ஒழுக்கம் ஆகியவற்றைப் புலப்படுத்துகின்றன. தோத்திரப் பாடல்கள் தலைவர்களைப் புகழ்ந்து மட்டும் பாடுவதாக இல்லை. கூர்மையான விமர்சனங்களையும் முன்வைக்கின்றன. சான் மக்களின் குணமாக்கல் நடனங்களும், மருத்துவ மரபுகளும் வாய்மொழியாகக் கடத்தப்பட்டு வந்தன; வருகின்றன. அவர்களின் இறுக்கமான ‘இனக்குழு’ கட்டமைப்பு அவர்தம் குடும்ப அடையாளத்தை நிலைநாட்டுகிறது. தெய்வங்கள், முன்னோர் ஆவிகள் முதலியவை குறித்த நம்பிக்கைகள் ஆப்பிரிக்கர்களின் உறுதிப்பாட்டைத் தெரிவிக்கின்றன.
1930களிலிருந்தே வாய்மொழி நிகழ்ச்சிகள் புத்தகங்களில் பாதுகாக்கப்பட்டு உள்ளன. தற்போது ஆப்பிரிக்கக் கதைப் புத்தகம் (Africa Storybook) போன்ற டிஜிட்டல் தளங்கள் பல ஆப்ரிக்க மொழிகளில் வாய்மொழிக் கதைகளை டிஜிட்டல்மயமாக்குகின்றன. தென் ஆப்பிரிக்காவின் கறுப்பர் சமூகங்களில் உள்ள வாய்மொழி இலக்கியம் சான் மக்களின் ஆழமான புராணக்கதைகள், சூலுவின் சக்தி வாய்ந்த இஸிபோங்கோ, கோஸாவின் நுணுக்கமான இஞ்சோமி, சோதோவின் லிதோக்கோ வரை மனிதகுலத்தின் ஆழமான கலாசார வேர்களைப் பிரதிபலிக்கின்றன. இந்த மரபுகள் இனக்குழு வரலாற்றை, அறிவியல் அறிவை, அரசியல் சிந்தனையை, ஆன்மிக நம்பிக்கைகளை தலைமுறை தலைமுறையாகக் கடத்திவரும் உயிரோடும் வலிமையோடும் இருக்கும் அறிவு அமைப்புகளாகும்.
இவ்வளவு செழிப்பான வாய்மொழி இலக்கியத்தையும் கலைப் பாரம்பரியத்தையும் கொண்டுள்ள ஆப்பிரிக்கர்களைச் சராசரி வெள்ளையர்கள் முதல் அறிவுஜீவிகள் வரை ‘மனிதர்களைப் போன்றவர்கள்’, ‘குறைபாடு உடையவர்கள் ‘என்று சித்திரித்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் மனம் எவ்வளவு குரோதத்தோடு இருந்திருக்க வேண்டும்?!
(நிறம் ஒளிரும்…)
artwork by Aaron
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு – தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு – வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் – நிலம் – சாதி – சாஸ்திரம்’ முதலிய நூல்கள் எழுதியுள்ளார்.







Leave a Reply