Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

முட்டுக்கட்டை

லோகமா தேவி
லோகமா தேவி
May 1, 2026
முட்டுக்கட்டை

2026 மார்ச் 29 அன்று திருவாரூரின் ஆழித்தேரோட்ட நிகழ்வு விமரிசையாக நடந்தது. நாளிதழ்கள், இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட எல்லாச் சமூக ஊடகங்களும் இந்நிகழ்வைச் செய்தியாக வெளியிட்டிருந்தன. லட்சக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டது, தேரின் 300 டன் எடை, 90 அடி உயரம், ஐந்து மூர்த்திகளின் நான்கு மாடவீதி உலா, சடங்கு சம்பிரதாய ஆகமங்கள் என அனைத்தையும் விரிவாகச் செய்திகளில் பார்க்க முடிந்தது.

எனினும், அத்தனை எடைகொண்ட தேரை இயக்கி, அது ஓடத் தொடங்கினால் நிறுத்த முடியாத அதன் வேகத்தில் ஏதேனும் சிறு பிசகு நடந்தாலும் உண்டாகக்கூடிய பேராபத்தை எல்லாம் தடுத்து நிறுத்தி, தேரோட்டத்தை ஒழுங்கு செய்யும் முட்டுக்கட்டைகள் குறித்து யாரேனும் குறிப்பிடுவார்களா என்று காத்திருந்தேன், ஆனால் இல்லை.

தேரோட்டத்தின் மிக முக்கியமான பகுதி அதன் முட்டுக்கட்டை அல்லது சக்கரக்கட்டை போடுவது. இதற்கெனப் பரம்பரையாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் ஆன ஒரு பெரும் குழு, தேரின் சக்கரங்களுடனேயே ஓடி வந்துகொண்டிருக்கும். அவர்களின் கையசைவு மற்றும் உரத்த குரல், தேர் செல்லும் வேகத்தைக் கணக்கிட்டு அவர்கள் சக்கரத்தடியில் இடும் முட்டுக்கட்டைகள்—இவற்றுடன் தேர் இழுப்பவர்களின் ஒழுங்கும் இணைந்துதான், தேர் மெல்ல மெல்ல அசைந்தாடிப் பாதுகாப்பாக நகர்ந்து வருகிறது.

இந்த முட்டுக்கட்டைகள் குறிப்பிட்ட வகை மரங்களிலிருந்தே உருவாக்கப்படுகின்றன. சோழர்கள் காலத்தில்தான் போருக்கான விரைந்து செல்லும் எடையற்ற தேர்களுடன், விழாக்களில் தெய்வங்களுக்கான மகாப் பிரமாண்டமான எடைகொண்ட ரதங்கள் உருவாக்கப்பட்டன. அந்த ரதங்கள் உலா வருகையில் அவற்றின் வேகத்தை மட்டுப்படுத்தி, தேரைத் தேவைப்படுகையில் திசைதிருப்பி, எங்கு நிறுத்த வேண்டுமோ அங்கு நிறுத்த முட்டுக்கட்டை போடுபவர்களின் பணி மிக முக்கியமானது.

சோழ அரசர்கள் குறிப்பிட்ட குடும்பத்தினரே அந்தப் பணியில் இருப்பார்கள் என்பதை அவர்களின் திறமையைப் பாராட்டி உறுதி செய்தார்கள். இன்றும் அவர்களின் தலைமுறையினரே அந்தப் பணியில் ஈடுபடுகின்றனர்.

முட்டு மரங்கள் எனச் சில குறிப்பிட்ட வகை மரங்கள் இருக்கின்றன; அவற்றிலிருந்து மட்டுமே இந்த முட்டுக்கட்டைகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவில் தேர்ச்சக்கர முட்டு மரங்களாக இலுப்பை, கருங்காலி, நாவல் மற்றும் வேங்கை மரங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

வெளிநாடுகளில் இயந்திரங்களின் முட்டுக்கட்டைகளுக்குப் பைன் (Pine) போன்ற எண்ணெய் நிறைந்த, எடைகுறைவான ஆனால் உறுதியான மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பெரிய மலை போன்ற கோயில் தேர்களின் பெரும் எடையைச் சுமக்கும் சக்கரங்கள் முட்டுக்கட்டையில் மோதும் உராய்வின்போது பயங்கரமான வெப்பம் உருவாகும். பைன் போன்ற பிசின் அதிகமுள்ள மரங்கள் அந்த வெப்பத்தில் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும்.

ஆனால், இலுப்பை மரம் அந்த வெப்பத்தைச் சீராகக் கடத்தும் தன்மை கொண்டது. சக்கரம் முட்டுக்கட்டையின் மேல் ஏற முயலும்போது உருவாகும் அதீத வெப்பத்தைத் தாங்கி, தீப்பற்றாமல் புகையை மட்டுமே வெளியேற்றும் தனித்துவமான பண்பு இலுப்பைக்கு உண்டு. அதனால்தான் இந்திய முட்டுமரங்கள் இத்தகைய பிரமாண்டமான பயன்பாட்டுக்கு மிகவும் ஏற்றவைகளாக இருக்கின்றன.

திருவாரூர் ஆழித்தேர் கட்டுமானத்தில் இரும்பிலான ஆணிகளின் பயன்பாடு என்பது மிக மிகக் குறைவு. தேரின் பிரமாண்டமான எடையைத் தாங்கிப் பிடிப்பது மர ஆணிகள் மற்றும் மரபுசார் அறிவினடிப்படையில் அமைந்த பிணைப்பு நுட்பங்கள்தான்.

ஆழித்தேரின் சட்டங்கள் மற்றும் குறுக்கு விட்டங்களை இணைக்க ‘மர ஆணிகள்’ மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவாக கருங்காலி அல்லது இலுப்பை போன்ற மிகக் கடினமான மரங்களால் செய்யப்படுகின்றன. இரும்பு ஆணிகள் காலப்போக்கில் துருப்பிடித்து மரத்தை அரித்துவிடும், ஆனால் மர ஆணி, தேரின் சட்டங்களோடு ஒன்றிணைந்து காலப்போக்கில் இன்னும் இறுகிவிடும். மழைக் காலங்களில் மரம் ஈரப்பதம் காரணமாகச் சற்று விரிவடையும் போது, மர ஆணிகளும் அதனுடன் சேர்ந்து விரிவடைந்து பிணைப்பை இன்னும் பலப்படுத்தும்.

தேர்க் கட்டுமானத்தில் ஒரு மரக்கட்டையில் குழி தோண்டி, மற்றொரு மரத்தின் துருத்தியிருக்கும் பகுதியை அதற்குள் பொருத்தி, அதன் குறுக்கே ஒரு மர ஆணியை அடித்து நிலைநிறுத்துவார்கள். இந்த அமைப்பு நூற்றுக்கணக்கான டன் எடையையும் தாங்கக்கூடியது.

ஆழித்தேர் ஓடும் வீதிகள் எப்போதும் சமமாக இருக்காது. தேர் ஆடிக்கொண்டேதான் நகரும். தேர் அசைந்து ஆடும்போது இரும்பு ஆணிகள் மரத்தைக் கீறி, பிணைப்பைத் தளர்வடையச் செய்யும், ஆனால் மர ஆணிகள் தேரின் அசைவுகளுக்கு ஏற்பச் சற்று வளைந்து கொடுக்கும். இதனால் மரம் பிளவுபடாது.

(தற்போது பாதுகாப்பிற்காகச் சில இடங்களில், குறிப்பாகச் சக்கரத்தின் இரும்புப் பட்டைகளிலும் (Iron rims), அச்சுப்பகுதியின் சில முக்கியமான இடங்களிலும் பெரிய இரும்பு போல்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை BHEL நிறுவனத்தின் ஆலோசனையின்படி கூடுதல் பாதுகாப்புக்காகச் சேர்க்கப்பட்டவை. இருப்பினும், தேரின் அடிப்படைக்கட்டுமானம் என்பது இப்போதும் மர ஆணிகளால்தான் அமைகிறது.)

பொதுவாக எல்லாரும் நினைப்பது போல, முட்டுக்கட்டை என்பது தேரை இறுதியாக நிறுத்தும் போது மட்டும் போடப்படுவது இல்லை; தேர் ஓடிக்கொண்டிருக்கும் போதே குறிப்பிட்ட தூர இடைவெளியில் முட்டுக்கட்டைகள் சக்கரங்களின் அடியில் தொடர்ந்து போடப்பட்டுக்கொண்டே இருக்கும். சக்கரங்கள் அவற்றின் மேல் ஏறி இறங்குவதன் மூலம் தேரின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் ஓட்டம் சீராக இருக்கிறது.

முட்டுக்கட்டைகள் என்பது தேரின் ‘பிரேக்’ அல்ல அது தேரோட்டத்தை ஒழுங்குபடுத்தி திசைதிருப்பி நிற்கச்செயும் பணிகள் அனைத்தையும் செய்பவை.

ஆழித்தேருக்கு நவீன வாகனங்களைப் போலச் சக்கரங்களைத் திருப்பும் ‘ஸ்டீயரிங்’ வசதி கிடையாது. தேரின் அச்சு (Axle) நிலையானது. எனவே தேர் ஒரு பக்கமாக (இடதுபுறம்) திரும்ப வேண்டுமானால், இடது பக்கச் சக்கரங்களுக்கு அடியில் சிறிய முட்டுக்கட்டைகளை லாவகமாகப் போடுவார்கள். அப்போது இடது சக்கரம் மெதுவாக நகரும் அல்லது அப்படியே நிற்கும்; ஆனால் வலது பக்கச் சக்கரம் வேகமாகச் சுழலும். இந்த வேக வேறுபாடு தேரை இடதுபுறமாகத் திருப்ப உதவும்.

ஆயிரக்கணக்கான மக்கள் வடத்தைப் பிடித்து இழுக்கும்போது, சில சமயம் தேர் அதிக வேகம் எடுக்க வாய்ப்புண்டு. தேர் கட்டுக்கடங்காமல் ஓடுவதைத் தடுக்க, சக்கரங்களுக்கு முன்னால் முட்டுக்கட்டைகளைச் சற்று இடைவெளி விட்டுப் போட்டுக்கொண்டே வருவார்கள். சக்கரம் அந்த முட்டை நெருங்கும்போது உராய்வு ஏற்பட்டு அதன் மீது சக்கரங்கள் ஏறி இறங்கித் தேரின் வேகம் தானாகவே குறையும்.

அத்தனை எடைகொண்ட தேர்கள் வீதியில் உலா வருகையில் தேர் ஒரு பக்கம் சாயத் தொடங்கினால், அந்தப் பக்கச் சக்கரங்களுக்கு முட்டுக்கட்டை கொடுத்துத் தேரைச் சமநிலைப்படுத்துவார்கள்.

தேர் இழுக்கப்படும் ஏதாவது ஒரு வடம் அறுந்துவிட்டால் அல்லது ஒரு சக்கரம் பள்ளத்தில் இறங்கினால், தேர் பின்னோக்கி நகராமல் இருக்கச் சக்கரத்தின் பின்புறமும் முட்டுக்கட்டைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.

பல நூறு டன் எடையுள்ள தேர் நகரும்போது, அதன் சக்கரம் சுழலும் வேகத்தில் அதனடியில் ஒரு மரக்கட்டையை வைப்பது என்பது மிகக்கவனமாகச் செய்யப்படவேண்டிய ஒரு ‘இயற்பியல் சோதனை’ போன்றது.

தேரின் மரச்சக்கரத்தின் இரும்புப் பட்டை மரக்கட்டையின் மீது ஏறும்போது, உராய்வு ஏற்படும் இடத்தில் வெப்பம் பல நூறு டிகிரி செல்சியஸைத் தாண்டும். இதனால் மரத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களும், ‘லிக்னின்’ என்ற மரக்கூழ் மூலக்கூறுகளும் கருகி, அடர்த்தியான புகை வெளியேறும்.

புகை வந்தாலும், உடனடியாகத் தீப்பிடிக்காமல் இருப்பதற்குச் சில தாவரவியல் காரணங்கள் உள்ளன. முட்டுக்கட்டைகளாகப் பயன்படுத்தும் இலுப்பை அல்லது கருங்காலி மரங்கள் மிக அதிக அடர்த்தி கொண்டவை. தீப்பிடிக்கத் தேவையான ஆக்சிஜன் மரத்தின் உட்பகுதிகளுக்குள் எளிதில் செல்ல முடியாது. இதனால் மரக்கட்டை எரியாமல், அதன் மேல்பகுதிமட்டும் கருகுகிறது.

முட்டுக்கட்டை போடுபர்கள் வெறும் கைகளால் இதைச் செய்ய மாட்டார்கள். நீண்ட இரும்புக் கம்பிகள் (Crowbars) மூலம்தான் முட்டுக்கட்டைகளைத் தேர்ச்சக்கரங்களுக்கடியில் தள்ளிவிடுவார்கள்.

முட்டுக்கட்டைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மரங்கள் நன்கு முதிர்ந்த பின்னரே இதிலிருந்து முட்டுக்கட்டைகள் வெட்டி எடுக்கப்படும். மரம் முதிர்தல் என்பது சுமார் 60 முதல் 100 வயது வரை ஆக வேண்டும் என்கிற ஒரு கணக்கு இருக்கிறது. ஏனெனில், 50 ஆண்டுகள் வரை அதன் ‘மென்கட்டை’ எனப்படும் Sap wood (வெளிப்புற மென்மையான அடுக்கு) மிக அதிக அளவில் இருக்கும். அதேபோல், 100 வயதிற்கும் மேலான மரங்களில் ‘வைரக்கட்டை’ எனப்படும் Heartwood (நடுவில் இருக்கும் உறுதியான பகுதி) பகுதியில் குழிகள் அல்லது பொந்துகள் உருவாகத் தொடங்கும். எனவே, 60 முதல் 100 வயதுக்கு உட்பட்ட மரங்களிலிருந்தே முட்டுக்கட்டைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

தேர்ந்த, அனுபவம் வாய்ந்த ஸ்தபதிகள், ‘வைரக்கட்டை’ (Heartwood) எனப்படும் கருமை நிறமும், அதிக லிக்னின் செறிவும் கொண்ட மரத்தின் உறுதியான நடுப்பகுதியைத் தேர்வு செய்வார்கள். பொதுவாக 1.5 முதல் 2 மீட்டர் விட்டம் கொண்ட முதிர்ந்த மரங்களே இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

மரத்தை வெட்டுவதற்கு முன்பு சில முக்கியமான இயற்கை அறிகுறிகளையும் அவர்கள் உற்று நோக்குகிறார்கள் :

மரப்பட்டையின் பிளவுகள் ஆழமாக இருப்பது மரத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

மரத்தைத் தட்டும்போது உலோகத்தைத் தட்டுவது போன்ற (Metallic sound) கணீரென்ற ஓசை வர வேண்டும்.

நல்ல நீர் வசதி உள்ள இடங்களை விட, வறண்ட, பாறைகள் நிறைந்த அல்லது சுண்ணாம்புச் சத்து மிகுந்த நிலப்பகுதிகளில் வளரும் மரங்கள் மிகவும் உறுதியாக இருக்கும். சாதகமற்ற சூழலில் போராடி வளரும் மரங்களே அதிக அடர்த்தி கொண்ட வைரக்கட்டைகளை உருவாக்குகின்றன.

மரத்தின் சாற்றேற்றம் (Sap flow) மிகக் குறைவாக இருக்கும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலமே மரம் வெட்டுவதற்கு உகந்த காலமாகும்.

இலுப்பை போன்ற மரங்களில் நார்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் (Interlocked Grain). இதனால்தான் அவை பிளக்க முடியாத உறுதியைப் பெறுகின்றன. மரபுப்படி, மரத்தின் கிழக்கு நோக்கிய பகுதியிலிருந்து (East-facing side) கட்டையை வெட்டுவதை ஸ்தபதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மேலும், ஒரு மரத்தின் அடர்த்தியை (Density) உறுதி செய்ய ஒரு முக்கியமான சோதனையைச் செய்வார்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட மரத்தின் ஒரு சிறு துண்டை நீரில் போடும்போது, அது மிதக்காமல் உடனடியாக மூழ்க வேண்டும். அப்படி மூழ்கினால் மட்டுமே அந்த மரம் தேரின் எடையைத் தாங்கும் ‘வைரக்கட்டை’ தன்மையைப் பெற்றுள்ளது என்று உறுதி செய்யப்படும்.

தேர்க்கட்டுமானத்திற்கான சிற்ப சாஸ்திரம் உறுதியின் அடைப்படையில் மூன்று வகையான மரங்களைக் குறிப்பிடுகிறது (அந்தர்சாரம், பகிர்சாரம், சர்வசாரம்). இதில் அனைத்துப் பகுதியிலும் சமமான உறுதி கொண்ட ‘சர்வசாரம்’ கொண்ட மரங்களே இலுப்பைத் தேரின் அச்சு மற்றும் சக்கரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன

தேர்க்கட்டுமானத்தில் மரங்களின் தோற்றம் மற்றும் அவை எழுப்பும் ஒலியைக் கொண்டு அவற்றை மூன்றாகப் பிரிக்கிறார்கள்:

புருஷ மரம் (ஆண் மரம்) : சீரான உருண்டை வடிவத் தண்டு கொண்டவை. இவற்றைத் தட்டினால் துல்லியமான உலோக மணியின் ஓசை (Metallic Sound) எழும். இவை மிகுந்த ஆற்றல் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. தேரின் அச்சு, சக்கரம், கடையாணி மற்றும் முட்டுக்கட்டைகள் செய்ய இவை மிகவும் ஏற்றவை.

ஸ்திரீ மரம் (பெண் மரம்): அடிப்பகுதி பருத்தும், நுனிப்பகுதி சிறுத்தும் காணப்படும் மரத்தண்டு கொண்டவை. இவற்றைத் தட்டினால் மென்மையான உலோக ஒலி எழும். இவை தேரின் பிற உறுப்புகள் மற்றும் அலங்காரப் பகுதிகள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

நபும்சக மரம் (அலி மரம்): அடிப்பகுதி சிறுத்தும், நுனிப்பகுதி பருத்தும் காணப்படும் மரங்கள். இவை எத்தனை முதிர்ந்திருந்தாலும், தேரின் எந்தவொரு பாகமும் செய்ய இவற்றைப் பயன்படுத்துவதில்லை.

தேர்க்கட்டுமானத்திற்குச் சில குறிப்பிட்ட மரங்கள் தவிர்க்கப்படுகின்றன.

ஏராளமான பறவைகள் கூடுகட்டி வாழும் மரங்கள் தவிர்க்கப்படுகின்றன. எந்த உயிரினத்தின் வாழ்விடமாக இருந்தாலும், அந்த மரத்தைத் வனதேவதைகள் வாழும் இடமாகக் கருதி வெட்டக் கூடாது என்பது சாஸ்திரம். இன்னும் முட்டையிலிருந்து வெளிவராத குஞ்சுகள் இருக்கும் கூடுகளை அழித்து மரம் வெட்டுவது, ‘பறவைகளின் கண்ணீரில் தேர் செய்வதைப் போன்றது’ எனக் கருதப்படுகிறது. எனவே, அத்தகைய மரங்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகின்றன.

அருகில் வேறு மரங்கள் ஏதுமில்லாமல் தனித்து நிற்கும் மரங்களும் தவிர்க்கப்படுகின்றன. எல்லாத் திசைகளிலிருந்தும் வரும் காற்றின் வேகத்தைத் தனித்து எதிர்கொள்வதால், அந்த மரங்களின் உட்புறம் உறுதி குறைந்திருக்கும் என்பது ஒரு நுட்பமான கணிப்பு.

கோயிலைச் சுற்றியும், சாலையோரங்களிலும் மக்களுக்கு நிழல் தரும் மரங்கள் அவற்றின் சூழலியல் பயன் கருதித் தவிர்க்கப்படுகின்றன.

மரத்தை வெட்டுவதற்கு நல்ல முகூர்த்த நேரம் கணிக்கப்பட்டு, தலைமை ஸ்தபதி அந்த மரத்திற்குப் பூஜைகள் செய்வார். ‘மண்ணில் வளர்ந்து மலர்ந்தும், கனிந்தும், நிழலும், பிராண வாயுவும் தந்துகொண்டிருக்கும் நிலையிலிருந்து உன்னை உயர்த்தி இறைவனின் அருகிலேயே கொண்டு செல்லவிருக்கிறோம்; அதற்கு நீ அனுமதி தர வேண்டும்’ என்று அந்த மரத்திடம் மனதார வேண்டிக்கொள்வார்.

அதன்பின் மரம் வெட்டப்படும்போது, அது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி விழும்படியே வெட்டப்படும். மற்ற திசைகளில் மரம் தவறி விழுந்தால், அது துர்சகுனமாகக் கருதப்பட்டு அந்த மரம் தவிர்க்கப்படும்.

இந்தியாவில் பொதுவாக கருங்காலி, இலுப்பை மற்றும் வேங்கை மரங்கள் முட்டுக்கட்டைகளுக்காகவும், மருத மரம் அச்சாணிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. தேரின் பிற அலங்காரப் பாகங்களுக்குச் சந்தனம் அல்லது தேக்கு மரங்களும், சக்கரங்கள் செய்வதற்குப் புன்னை அல்லது நாட்டுக்கருவேல மரங்களும் தேர்வு செய்யப்படுகின்றன.

பூரி ஜகன்னாதர் ஆலயத் தேருக்கான பிரத்யேகச் சிற்ப சாஸ்திரம், தமிழில் ‘நமை’ அல்லது ‘நுண்ணெரா’ (Axle wood tree) எனப்படும் மரத்தைத் தேர்க்கட்டுமான மரங்களின் அரசன் எனக் குறிப்பிடுகிறது. இதன் தாவரவியல் பெயர் Terminalia pendula (முன்பு Anogeissus pendula). இது பாதாம் மரங்களின் Combretaceae குடும்பத்தைச் சேர்ந்தது. அங்கு தேர் சாஸ்திரப்படி, மிகத் துல்லியமாக 6 அடி விட்டம் கொண்ட நமை மரங்களே தேர்க்கட்டுமானத்திற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்தியாவில் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் விழாக்களில் மரங்களைக் கொண்டு செய்யப்படும் பிரம்மாண்டமான வடிவங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வகை மரங்களிலிருந்துதான் உருவாக்கப்படுகின்றன.

இந்தியத் தேர்களைப் போலவே, ஜப்பானின் 12 டன் எடையுள்ள மிதக்கும் “யமபோகோ” (Yamaboko Floats) தேர்கள் ஜப்பானிய சைப்ரஸ் (Cypress – Hinoki) மரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. ஒரு ஆணி கூட இல்லாமல், ஒன்றுடன் ஒன்று இணையும் மரக்கட்டைகளைக் கொண்டு, பல சுற்றுச் சணல் கயிறுகளால் கட்டப்பட்டு இவை உருவாக்கப்படுகின்றன.

இவற்றின் சக்கரங்கள், தூண்கள் மற்றும் பலகைகள் செய்வதற்குப் பொன் மூங்கில் மற்றும் ஓக் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கியோட்டோ நகரின் புகழ்பெற்ற விழாக்களில், இவை பட்டுத் துணிகளால் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருகின்றன.

இத்தாலியின் நோலா பகுதியில், நல்ல இழுவிசைத் தன்மை கொண்ட செஸ்ட்நட் (Chestnut) அல்லது பாப்லர் (Poplar) மரங்களால் செய்யப்படும் ‘ஜிக்லி’ (Gigli) எனப்படும் பிரமாண்டமான மரக் கட்டுமானங்கள் புகழ்பெற்றவை.

கி.பி. 1887-லிருந்து பாரம்பரியத் திருவிழாக்களில் இவை இடம் பெற்று வருகின்றன. இந்தியத் தேர்களைப் போலவே, இவை சுமார் 25 மீட்டர் உயரமும், 3 டன் வரை எடையும் கொண்டவை. இந்த மாபெரும் மரக் கோபுரங்களை ஒரு பெரிய குழுவினர் தங்கள் தோள்களில் சுமந்து வீதி உலா வருவது இத்தாலியின் மிக முக்கியமான விழாவாகும்.

ஸ்பெயினில் புனித வாரத்தின் (Holy Week) போது, ‘பாசோஸ்’ (Pasos) எனப்படும் பிரமாண்டமான மரச் சிலைகள் வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இவை பெரும்பாலும் பைன் மரக்கட்டைகளால் செதுக்கப்படுபவை. சுமார் 2 டன் வரை எடையுள்ள இந்த மரச் சிலைகளை, ஒரு குழுவினர் தங்கள் தோள்களில் சுமந்து செல்வது அங்குள்ள மரபு.

அதேபோல், பெல்ஜியம் மற்றும் வடக்கு பிரான்ஸ் பகுதிகளில் திருவிழாக்களின் போது, மரங்களால் செய்யப்பட்ட ராட்சத மனித உருவங்கள் (Processional Giants) வீதிகளில் உலா வருகின்றன. இவை பிரமாண்டமான உருவங்களாக இருந்தாலும், எடைகுறைவான வில்லோ மரங்களால் செய்யப்படுகின்றன. இதனால், அந்த ராட்சத உருவங்களுக்குள் இருக்கும் தனிநபர்களால் எளிதாக அதனைத் தூக்கிக்கொண்டு நடக்க முடிகிறது.

பெல்ஜியத்தின் டெண்டர்மாண்ட் (Dendermonde) நகரில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில், ‘பயார்ட் குதிரை’ (Bayard Horse) எனும் பிரமாண்டமான மரச் சிலை வீதி உலா வரும். நான்கு சகோதரர்கள் அதன் மேல் அமர்ந்திருக்க, சுமார் 12 வீரர்கள் அந்தப் பிரமாண்டமான குதிரைச் சிலையைச் சுமந்து செல்வார்கள். இந்தக் குதிரை உருவம் பெரும்பாலும் எல்ம் (Elm) அல்லது ஓக் (Oak) மரக்கட்டைகளால் உருவாக்கப்படுகிறது.

இந்தியத் தேர்களைப் போலவே, நேபாளத்திலும் மகாரதோற்வத்தின்போது நான்கு மாடி உயரத்திற்கு ரதங்கள் கட்டப்படுகின்றன. இவை குங்கிலிய மரத்தின் (Sal tree – Shorea robusta) உறுதியான மரக்கட்டைகளால் செய்யப்படுகின்றன. இந்தியத் தேர்களைப் போலவே, இந்த ரதங்களும் இரும்பு ஆணிகள் பயன்படுத்தப்படாமல், இயற்கையான காட்டுக் கொடிகளைக் கொண்டே பிணைக்கப்படுகின்றன. இப்படிப் பிணைப்பதால்தான் அந்த ரதத்தால் ‘மூச்சுவிட முடியும்’ என்று அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.

இந்தத் தேரோட்டங்கள் எல்லாம் இயற்பியலின் இறுக்கமான விதிகளுடன் தாவரவியலின் அற்புதங்களையும் இணைத்துக்கொண்டு நூற்றாண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கிண்றன.

மனிதகுல முன்னேற்றத்தின் வரலாற்றைக் கற்காலம், வெண்கலக்காலம், இரும்புக்காலம் எனப் பிரித்துப் பார்க்கும் நாம், மனித வாழ்வியலில் ‘மரங்களின் காலம்’ (The Wood Age) எனும் ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக் குறிப்பிடுவதேயில்லை. ஆதிமனிதன் மரங்களின் அடியில் பாதுகாப்பாக வாழ்ந்த காலம் முதல், இன்று பிரமாண்டமான ஆழித்தேரைத் தாங்கிப் பிடிக்கும் முட்டுக்கட்டைகள் வரை, மரங்கள் மனித நாகரிகத்தோடு ஒன்றிணைந்தே பயணித்து வருகின்றன. ஆனால், வரலாற்றில் மரங்களுக்கான பக்கங்கள் எப்போதும் போதுமான முக்கியத்துவத்துடன் பதிவு செய்யப்படுவதில்லை.

இனித் தேரோட்டத்தைக் காணச் சென்றால், ஒரு செயலை நிறுத்துபவை என்று தவறாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கும் ‘முட்டுக்கட்டைகளை’, உண்மையில் ஒரு பெருஞ்செயலை மிகச் சரியாக வழிநடத்தி ஒருங்கிணைப்பவைகளாகக் கவனித்துப் பார்க்கலாம்.


 

லோகமா தேவி
லோகமா தேவி

வேட்டைக்காரன் புதூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொள்ளாச்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணி புரிந்துகொண்டிருக்கிறார். மேலும், அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.

தாவர உலகம், ஸாகே-போதையின் கதை, வானவில் மரம், விலக்கப்பட்ட கனி, தந்தைப்பெருமரம், நுண்ணுயிருலகு உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மரங்களின் மறை வாழ்வு என்னும் நூலை மொழியாக்கம் செய்துள்ளார்.

தோழி விருது 2019, செங்கால் நாரை விருது 2022, இந்திய மருத்துவக் கழகம் வழங்கிய Women of Wonder விருது 2025, சிறந்த அறிவியல் நூலிற்கான முனைவர் உலோ.செந்தமிழ்க்கோதை நினைவு விருது 2025 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • நீதிமணி கதைகள்

    நீதிமணி கதைகள்

    May 1, 2026
  • கே. கணேஷ்ராம் கவிதைகள்

    கே. கணேஷ்ராம் கவிதைகள்

    May 1, 2026
  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    May 1, 2026
  • வன்புணர்வு எனும் பேரின்பம்

    வன்புணர்வு எனும் பேரின்பம்

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (19)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (106)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (19)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • நீதிமணி கதைகள்

    நீதிமணி கதைகள்

    May 1, 2026
  • கே. கணேஷ்ராம் கவிதைகள்

    கே. கணேஷ்ராம் கவிதைகள்

    May 1, 2026
  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (19)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (106)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top