மௌமிதா ஆலம்
(தமிழில்: ஜி.ஏ. கௌதம்)
வன்புணர்வு எனும் பேரின்பம்
முகம், தோள்கள், மார்பகங்கள், வயிறு எனக்
கிழித்துக்கொண்டு கீழிறங்கும் கூர்நகங்கள்
தொடைகளை அடையும் வரை
படுத்துக்கொண்டு ரசிப்பது
ஓர் உச்சக்கட்ட பேரின்பம்!
கால்களுக்கு இடையிலிருக்கும்
அற்பமான சிறிய சதைத்துண்டை
இறுக்கும் பிடியொன்று பிய்த்து எடுக்கையில்
வெறுமெனே படுத்துக்கிடப்பது
ஆத்ம திருப்தி!
கன்னித்திரை கிழிக்கப்பட்டு
வெதுவெதுப்பான ரத்தம்
கால்களில் பீறிட்டு வழிகையில்
அதுவொரு அமைதியான ஆனந்தத் துயில்!
யாருமற்ற புதர்களில் சாக்கடைகளில்
துயில் கொள்வதும்
சிதைந்த சதைக்கூழில் புழுக்கள் விருந்துண்வதும்
எத்தனை இதம்!
கண்ணியவான்களின் சிரிப்பலையில்
சுவர்கள் அதிரும் அந்தச் ‘சபைக்கு’
இதுவல்லவா பெருமிதம்!…
ஹி ஹி ஹி ஹி… ஹா ஹா ஹா ஹா… ஹோ ஹோ ஹோ…
குறிப்பு :
“பாலியல் வன்புணர்வு தவிர்க்க முடியாதபோது, அதை படுத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டும்” என்று 2021-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்தில், கே.ஆர்.ரமேஷ் குமார் (காங்கிரஸ்) கூறிய கருத்துக்கு எதிராக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது.
மௌமிதா ஆலம் :
மௌமிதா ஆலம் (Moumita Alam) மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர், கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர். இவர் ‘தலித் நாஷ்யா ஷேக் முஸ்லீம்’ சமூகத்தைச் சேர்ந்த முதல் ஆங்கிலப் பெண் கவிஞர் என்ற சிறப்பைப் பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் பெண்ணியம், சிறுபான்மையினர் உரிமைகள், இஸ்லாமோஃபோபியா (Islamophobia), சாதியக் கொடுமைகள் மற்றும் அரச வன்முறைகளுக்கு எதிரான எதிர்ப்புக் குரலாக விளங்குகின்றன.
வங்காளம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கவிதைகள் எழுதுகிறார். Uttarbanga Sambad என்ற பெங்காலி நாளிதழிலும், Outlook, The Wire, Frontline போன்ற தளங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு The Musings of the Dark (2020), காஷ்மீர் விவகாரம், டெல்லிக் கலவரங்கள், ஷாஹீன் பாக் போராட்டம் மற்றும் கோவிட்-19 பொது முடக்கத்தினால் புலம்பெயர்த் தொழிலாளர்கள் சந்தித்த துயரங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. Poems at Daybreak (2024) இவரது இரண்டாவது தொகுப்பு. இவரது கவிதைகள் ஹிந்தி, உருது, அஸாமி, தெலுங்கு, கன்னடம், நேபாளி, ஒடியா, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஜி.ஏ கௌதம் :
படத்தொகுப்பாளர், எழுத்தாளர் & மொழிபெயர்ப்பாளர்.
காட்சித்தொடர்பியலில் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘டக்கர்’ ‘மரகத நாணயம்’, ‘நவரசா’, ‘மின்னல் முரளி’ போன்ற திரைப்படங்கள், 50க்கும் மேற்பட்ட குறும்படங்கள், வெப்சீரிஸ், ஆவணப்படங்கள், விளம்பரப் படங்கள் என 12 ஆண்டுகளாகத் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் படத்தொகுப்பு செய்த ’ஸ்வீட் பிரியாணி’ (2021) கோவா, கேரளா, மும்பை, ஜெய்ப்பூர் உட்பட இந்தியாவில் உள்ள முக்கியமான திரைப்பட விழாக்களில் வென்றுள்ளது.
சினிமா மற்றும் தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகளை முன்னணி இதழ்களில் எழுதி வருகிறார். ‘ஹேராம்’, ‘உத்தமவில்லன்’, ‘வெண்ணிற இரவுகள்’, ‘குற்றமும் தண்டனையும்’ போன்ற விக்கிப்பீடியா பக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், பென் ஓக்ரி, ரே பிராட்பரி, மரியோ வர்கஸ் யோசா, கூகி வா தியாங்கோ, எட்கர் கெரெட், அருந்ததி ராய் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார்.
தொடர்புக்கு: goodbadeditor@gmail.com







Leave a Reply