Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

மதமாற்றம்

எழுத்துக்கினியவன் .
எழுத்துக்கினியவன் .
April 1, 2026
மதமாற்றம்

1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம்.

தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/).


இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான்.

இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள்.

“வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள்.

ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின.

இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்லா. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.

கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமே இருந்ததில்லை. ஆனால் ஒரு நாள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்த ஒரு சந்தைத் திடலில் நடந்த திறந்த வெளிக் கூட்டத்துக்குப் பிறகு கந்தல் உடையிலிருந்த ஒரு சிறு பையன் கேட்ட சாதுரியமான கேள்விகளால் பிரமித்துப் போன மிஷன் பாடசாலை முகாமையாளர், அந்தப் பையனுக்குப் புலமைப் பரிசிலோடு பாடசாலை அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்தப் பையன்தான் ரங்கு.

அந்தச் செய்தியைக் கேட்டதும் அவனுடைய பெற்றோருக்கு நல்ல மகிழ்ச்சி. இந்தக் கொல்லர் பட்டறையிலே மாய்வதை விட அவன் நன்றாக ஆங்கிலம் கற்றால் எப்போதாவது ஒரு நாள் ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.

விரைவிலேயே ரங்குவுக்குப் படிப்பில் ஆர்வம் பிறந்ததும் வேகமாக முன்னேறினான். பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு முதல் ரங்கு கொல்லர் பட்டறையில் எடுபிடி வேலைகள் செய்தபடியால் அவனது உடல் திடகாத்திரமாகத் திரண்டு வளர்ந்திருந்தது. அது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அவனுக்கு மிகவும் உதவியது.

இந்தப் புதிய மாணவன் வெகு விரைவில் வகுப்பாசிரியருக்கும் விளையாட்டு ஆசிரியருக்கும் மிகவும் பிடித்தமான மாணவன் ஆகி விட்டான். வகுப்பாசிரியர் தானே மதமாற்றம் செய்து கொண்டவர். அவரை மதமாற்றம் செய்தவர்களை விடத் தீவிரமான மதப்பற்று கொண்டவராகத் திகழ்ந்தார். ரங்குவில் ஒரு வருங்கால மதமாற்ற வாய்ப்பை இனங்கண்டு கொண்டார்.

பாடசாலையில் முதலாவது பாடம், “சமய அறிவு.” மாணவர்களுக்கு முதலில் பழைய ஏற்பாட்டு விவிலிய நூலும் அதற்குப் பிறகு சுவிசேஷங்களும் புகட்டப்பட்டன. ரங்கு இவற்றை ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் கற்றுக் கொண்டான்.

இதைக் கண்டு மகிழ்ந்த மறைப்பணியாளர்கள் ரங்குவுக்குச் சிறுவருக்கேற்ற மொழியில் எழுதப்பட்ட அழகான மதக் கதைப் புத்தகங்களை அன்போடு கொடுத்தார்கள். பலவண்ணச் சால்வைகளையும் வெள்ளை வேட்டிகளையும் அன்பளித்தார்கள்.

ரங்கு தன் ஆசிரியரின் வழிகாட்டலில் செழித்து வளர்ந்தான். எட்டாம் வகுப்பை அடைந்தபோது அவனுக்குப் பொதுவான பாடங்களின் அடிப்படை அறிவு நன்றாக இருந்தது மட்டுமல்லாது, விவிலிய நூலில் உள்ள வார்த்தைகளை மனப்பாடமாக்கி ஓதுவதற்கும் முடிந்தது. பாடசாலையின் வருடாந்தரப் பரிசளிப்பு விழாவில் சமய அறிவுக்கான பரிசு அவனுக்கே கிடைத்தது. கிறீத்தவனல்லாத ஒரு மாணவன் இந்தப் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது என்று பாராட்டிய பாடசாலை அதிபர் ஆசிரியர்களைத் தங்கள் வேலையைச் சீராகச் செய்ததற்கும் ரங்குவை அவன் கெட்டித்தனத்திற்கும் மெச்சினார்.

தனக்கிருந்த இந்த அறிவைப் பற்றி ரங்குவுக்கு மிகுந்த பெருமை. தனது அறிவைத் தன் பெற்றோருக்கும் முக்கியமாகச் சகோதரர், மைத்துனர்களுக்கும் காட்டிக் கொள்ள விரும்பினான். அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாததால் அவர்களோடு கணிதத்தைப் பற்றியோ சரித்திரத்தைப் பற்றியோ அளவளாவ முடியாது. ஆகவே, படிப்பறிவு இல்லாதவர்களுக்குக் கூட கதை கேட்பது சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்து அவர்களுக்கு விவிலியக் கதைகளைச் சொல்ல விழைந்தான்.

ஆனால் அந்த நடவடிக்கை அவனது உறவினர்களுக்குச் சந்தேகத்தையே கிளப்பியது. தங்களுடைய அன்பு மகன் பிழையான வழியில் போய் ஒரு நாள் கிறீத்தவ மதத்துக்கு மாறியே விடுவான் என்று பயந்தார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவன் ஓரளவு படித்தால் ஏதாவது மதிப்புக்குரிய வேலை கிடைக்கும் என்பது மட்டும்தான். அவனது ஆசிரியர்களின் மதத்தை உதாசீனம் செய்யும்படி உறவினர்கள் அடிக்கடி அவனுக்கு ஆலோசனை சொன்னார்கள். இப்போது ஒரு இடியாப்பச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு விட்டான் எனப் பயந்தார்கள். ஒரு நல்ல மாதச் சம்பளம் தரும் வேலையில் உள்ள கிறீத்தவனாக இருப்பதை விடப் படியாதவனாகக் கொல்லர் பட்டறையில் மாய்வது நன்று என்று நினைத்தார்கள்.

ஒரு நாள் தான் பாதிரிமாருடன் தேவாலயத்துக்குச் சென்றதாக ரங்கு சொன்ன போது அவனது அப்பா “விசுவாசமில்லாத முட்டாள்!” என்று ஏசினார்.

“மதம் மாறிப் போடாதையடா,” என்று அவனது அம்மா கெஞ்சினார். “இந்தப் பறங்கிப் பாதிரியளை நம்பாத. அவங்கள் உன்னை எங்களிட்டையிருந்து பிரிச்சுக் கொண்டு போகப் பாக்கினம். ஐயோ! நீ என்னை விட்டுட்டுப் போனா நான் என்ன செய்வனோ?” என்று புலம்பினார்.

“நான் ஒரு நாளுமே உங்களை விட்டுட்டுப் போக மாட்டன், அம்மா,” என்றான் ரங்கு, “நான் மதம் மாறினாலும் எப்பவுமே உங்கடை சொந்த மகனாத் தானே இருப்பன்.”

“ஐயோ, மோனை, மதம் மாறப் போறன் எண்டு சொல்லாத. உன்ர சொந்த பந்தங்களின்ர மதத்தை, முக்கியமா உன்ர அம்மான்ர மதத்தை விட்டு மாறுவியா? ரங்கு, என்ர மூத்த பிள்ளை, நான் சாகேக்க எனக்கு என்ன நடக்கப் போகுதோ?”

“என்னம்மா சொல்லுறீங்கள்?”

“ஆர் எனக்குக் கொள்ளி வைக்கப் போகினம், பிள்ளை? கொள்ளி வைக்கிறது மூத்த மகனின்ர கடமை. இந்தத் தொந்தி வச்ச ஐயர்மார் ஒரு வேதக் காரனை அந்தப் புனித வேலையைச் செய்ய ஒரு நாளுமே விட மாட்டாங்கள்.”

“அம்மா! சாவைப் பற்றிக் கதையாதையணை. நீ என்னைப் பயப்பிடுத்துறாய்.”

“நீ மதம் மாற மாட்டன் எண்டு சத்தியம் பண்ணித் தந்தால் நான் உன்னைப் பயப்பிடுத்தேல்லை.”

அம்மாவின் சொற்கள் ரங்குவின் மனத்தைத் தொட்டன. அவன் ஆணிவைத்து அடித்தாற் போல இருந்த இடத்திலேயே அசைய முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றான்.

“சரி ரங்கு,” என்று தொடர்ந்தாள் அம்மா, “நீ போய்ப் படி. அடுத்த கிழமை உனக்குப் பள்ளிக்கூடச் சோதினை இருக்கு.”

ரங்கு பாடசாலைப் பரீட்சையில் வெற்றிகரமாகச் சித்தியடைந்தான். எட்டாம் வகுப்பு என்பதால் அவனுக்கு ஆங்கிலப் பள்ளி விடுகைச் சான்றிதழ் கிடைத்தது. ஒரு அடித்தர வேலை எடுக்க அது போதுமானது. அவனது இலட்சியங்கள் குறைவாகவே இருந்ததால் அவன் மேற்கொண்டு படிப்பதை விரும்பவில்லை.

அந்த நாளிலிருந்து அவன் பழைய மாணவனாகவும் கீழ்மட்ட ஊழியர்களின் நண்பனாகவும் பாடசாலைக்குப் போய்வந்தான். இடைக்கிடை யாராவது ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் பள்ளிக்கூடத்துக்கு வர முடியவில்லை என்றால் அவர்களது வகுப்புகளுக்குப் போய் பிரதி ஆசிரியராகவும் பள்ளிக்கூட நிர்வாக வேலைகளுக்கு உதவியாளனாகவும் பணி செய்தான்.

கரடுமுரனான பாறை போல இருந்த படிப்பறிவில்லாத ஒரு கொல்லனைத் தாங்கள் செம்மை செய்து ஒரு சீரான சிற்பம் போலச் செதுக்கியதையிட்டுப் பள்ளிக்கூட நிர்வாகிகள் மிகவும் பெருமிதம் அடைந்தார்கள். பள்ளிக்கூடத்தின் எழுதுவினைஞர் குழாமில் ஒரு வெற்றிடம் வந்தபோது ரங்குவை உதவி எழுதுவினைஞனாக நியமனம் செய்தார்கள். ரங்குவுக்கோ நிரந்தரமான ஆசிரியனாக வருவதுதான் இலக்கு.

ரங்கு அதுவரைச் செய்தது உண்மையாகவே ஒரு அற்புதமான சாதனை. அவனது நியமனத்துக்கு முன் ஒரு கொல்லன் எழுதுவினைஞனாக வருவான் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத எட்டாக் கனியாக இருந்தது. படிப்பறிவில்லாதவர்கள் அவனை ஒரு மரியாதையுடன் பார்த்தார்கள். ஆனால் அவன் ஒரு ஆசிரியனாகினால் அதற்குக் கிடைக்கக்கூடிய மரியாதை இன்னும் பல மடங்கு அதிகம். அவர்கள் அறிவைத் தலைதாழ்த்தி வணங்கி மதிப்பவர்கள். அவன் ஆசிரியனானால் மரியாதையுடன், ‘பண்டிதர்’ என்று அழைப்பார்கள்.

ஒருநாள் ரங்கு மதம் மாறுவது என்ற முடிவைச் சடுதியாக எடுத்தான். உடனே அவனுக்கு ஞானஸ்நானம் செய்து தேவாலயத்தின் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொண்டார்கள். அவனது அப்பாவின் கோபம் அனல் தெறித்துப் பறந்தது. அவனது அம்மா கவலையால் மனமுடைந்து போனாள். அவனது எதிரிகள் அவனை, “பாதிரிகளின் அடிமை,” என்று இகழ்ந்தார்கள்.

அவன் ஏன் மதம் மாறினான் என்பதற்குப் பலதும் பத்துமாகப் பல்வேறு கதைகள் உலாவின.

“அவனுக்குப் பதவி உயர்வு கிடைக்க வேணுமெண்ட பேராசை. ஆனவடியா பாதிரிகளுக்கு வால் பிடிக்கப் பாக்கிறான். மதம் மாறாமலே பதவி உயர்வு எடுத்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு அலுவலக வேலை எடுத்திருக்கலாம். உதவாக்கரைப் பயல்!” என்று சிலர் அபாண்டமாகப் பழி சுமத்தினார்கள்.

“அவன் தாழ்த்தப்பட்ட சாதியில பிறந்தவன். அப்படியானவன் எப்பவும் தன்ர குணத்தைக் காட்டுவான். அவன் ஒரு கொல்லன் தானே. அவனுக்கு அடிமையா இருக்கிறதுதான் விருப்பம்,” என்றனர் வேறு சிலர்.

“அவன் நேர்மையானவன். உண்மையான கடவுளைச் சேர வேணுமெண்ட உந்துதல் அவனுக்கு வந்திருக்கு,” என்றனர் பள்ளிக்கூடத்திலுள்ள அவனது சக ஊழியர்கள்.

அவனது எதிரிகள் பொறாமையால் வாடினர். அவனையும் அவனது வெற்றிகளையும் வெறுத்தனர். பள்ளிக்கூடத்தில் அவனது பதவியைப் பற்றியோ அவனுக்குள்ள மரியாதையைப் பற்றியோ கேள்விப்படும் போதெல்லாம் கத்தியால் குத்தினது போல அவர்களின் பொறாமை அவர்களை வாட்டி வருத்தியது.

ஒரு மாலை நேரம் அவர்கள் எல்லோரும் எப்படி ரங்குவை வீழ்த்துவது என்று சதித்திட்டம் போடுவதற்காக ஒன்று கூடினார்கள். ரங்குவை அறவே வெறுக்கும் ஒருவன் முதலில் பேசினான். ரங்கு ஒரு நேர்மையற்ற நயவஞ்சகன் என்றும் அவன் உண்மையிலேயே இந்துவாக இன்னும் இருந்து கொண்டாலும் கிறீத்தவன் போலத் தன் எசமானர்களுக்குக் காட்டிக் கொள்கிறான் என்றும் ஒரு முறைப்பாட்டைப் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்தான். இதற்கு அத்தாட்சியாக ரங்குவின் வாழ்க்கையின் பல சம்பவங்களை அவர்கள் இலகுவில் முன் வைக்கலாம்.

“இதை வலு கவனமாச் செய்ய வேணும்,” என்று இன்னொருவன் எச்சரித்தான், “இப்பிடி முறையீடு அனுப்பினால் அதால பெரிய விளைவொண்டும் வராமல் விடலாம். ரங்கு மதம் மாற முதலே அவனைக் கிளாக்கரா நியமிச்சவை எண்டதை மறந்திடாதேங்கோ. நாங்க நினைக்கிற மாதிரி அவன் மதம் மாறினது அவ்வளவு பெரிய விஷயமில்லாமல் இருக்கலாம். யோசிச்சுப் பாருங்கோ தம்பிமார், எங்கட சமயத்தவரைப் பற்றி யோசிச்சுப் பாருங்கோ. பள்ளிக்கூடத்தில அவையள் கொஞ்சப் பேர் தான் இருந்தாலும் நல்ல பதவியளில இருக்கினம். ஆனபடியா அந்தரப் பட்டு மொக்குத் தனமா ஒண்டும் செய்யாமல் கவனமா யோசிச்சுச் செய்வம்.”

“நீங்கள் ரெண்டு பேரும் சொல்லுறது சரிதான்,” என்றான் இன்னுமொருவன், “இப்ப ரங்கு வேதக்காரன் ஆகிவிட்ட படியா, ‘அவன் உண்மையான வேதக்காரன் இல்லை, அவன் ஒரு கள்ளன், நயவஞ்சகன்,’ எண்டு சொல்லி ஒரு முறைப்பாடு அனுப்பினால், அது கட்டாயம் வேலை செய்யும். நயவஞ்சகம், நடிப்பு, பொய், இதுகளெல்லாம் வேதக்காரருக்குக் கொஞ்சமும் பிடியாத விஷயங்கள் எண்டதை மறந்துடாதேங்கோ. முறைப்பாடு கட்டாயம் வேலை செய்யும். அந்தக் கேடுகெட்ட படவான்ர வேலை பறிபோகும் எண்டதுக்கு நான் என்ன பந்தயமும் வைக்கத் தயார். சிவசிவா! அவன்ர வேலை பறிபோகும்!”

“சரியாச் சொன்னீங்கள் அண்ணை, சரியாச் சொன்னீங்கள்,” என்று இரண்டாவதாகப் பேசியவனைத் தவிர மற்ற எல்லோரும் ஒருமித்த குரலில் ஆமோதித்தார்கள்.

முறையீடு அனுப்புவது என்று தீர்மானித்தார்கள். முறையீட்டுக் கடிதத்தை எழுதுவதற்காக அடுத்த முறை கூடுவதற்கு நாளும் குறித்தார்கள்.

அவர்கள் கலையத் தொடங்கும் போது ஒருவன், “முறைப்பாட்டுக் கடிதத்தில கையெழுத்து வைக்கக் கூடாது. மொட்டைக் கடிதமாத்தான் அனுப்ப வேணும்,” என்றான். “ஓமோம்!” என்று மற்றவர்கள் ஆமோதித்தார்கள். அவர்களின் கண்களில் ஏதோ ஒரு இனங்கண்டு கொள்ள முடியாத பீதி படர்ந்தது.

பாடசாலை அதிபர் முதலில் அந்த முறையீட்டுக் கடிதத்தை உதாசீனம் செய்தார். இரண்டு காரணங்களுக்காக. முதலாவது அது ஒரு மொட்டைக் கடிதம். அவர் எப்போதுமே மொட்டைக் கடிதங்களைச் சந்தேகக் கண்களுடன் பார்ப்பவர். இரண்டாவது, அந்தக் கடிதத்திலிருந்த குற்றச்சாட்டுகள் நம்பத்தகுந்தவையாக இருக்கவில்லை. யார் மேலும் அப்படியான குற்றச்சாட்டுகள் திணிக்கப் படலாம். அவற்றை நிரூபித்துத் தண்டனை வழங்குவது முடியாத காரியம். இவையெல்லாம் தனித்தனி ஆட்களின் நேர்மைக்கே என்று விடப்பட வேண்டிய விடயங்கள்.

ஆனால் மொட்டைக்கடிதங்கள் இடைவிடாது வந்த வண்ணமே இருந்தன. ஒரு நாள் அலுப்புத் தாங்க முடியாமல் உதவி எழுதுவினைஞனைத் தன்னைச் சந்திக்க வருமாறு பணித்தார்.

ரங்கு எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தான். அடுத்த ஞாயிறு தேவாலயத்தில் திருப்பலி பூசை முடிந்ததும் சபையிலிருந்த ஒரு தேவாலய உறுப்பினர் யாரையாவது பிரார்த்தனை செய்யும்படி பாதிரியார் வரவழைத்த போது ரங்குவே தன்னார்வத்துடன் எழும்பிப் போய்ப் பிரார்த்தனை செய்தான்.

கொஞ்ச நாள் பள்ளிக்கூடத்தில் எல்லாம் சுமுகமாக நடந்தது. ரங்குவின் எதிரிகள் இன்னுமொரு முறை அவனைக் குற்றம் சாட்ட முனைந்தார்கள். அவன் அடிக்கடி ‘சிவசிவா’ என்று சொல்கிறான் என்று முறையிட்டார்கள். “அவன் உதடுகளில் எப்பொழுதும் இருப்பது சிவபெருமானின் பெயர்தான், யேசுநாதரின் பெயரல்ல.” மீண்டும் அதிபரின் அலுவலகத்துக்கு மொட்டைக் கடிதங்கள் சரமாரியாகப் பொழியத் தொடங்கின.

இந்தப் பிரச்சனை ஏதோ விதமாக மறைந்து போய் விட்டது என்று நினைத்திருந்த அதிபருக்கு இது மிகவும் எரிச்சல் ஊட்டியது. அவர் மொட்டைக் கடிதங்களைக் கவனமாகப் படிக்காமல் மேலோட்டமாகத் தான் பார்த்தார். பாடசாலைத் தலைவர் என்பதால் அவருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடையாது.

ஒரு சனிக்கிழமை ஒரு மொட்டைக் கடிதம் அவரது கையைப் போய்ச் சேர்ந்தது. சனிக்கிழமைகள் தமிழ் இலக்கியத்துக்காக என்று அவர் ஒதுக்கிய நாட்கள். அந்த நாட்களில் அவர் திருக்குறளைத்தான் படிக்க விரும்பினார், மொட்டைக் கடிதம் எழுதுபவர்களின் கிறுக்கலான கையெழுத்துகளையல்ல! அவர் உதவி அதிபரை அழைத்து அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொன்னார்.

உதவி அதிபவர் இந்த நாட்டுக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. ரங்குவின் மேற் சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை என்றுதான் அவருக்குப் பட்டது. இதை உடனேயே விசாரித்தறிய வேண்டும் என்று தீர்மானித்தார். அடுத்த நாள் அவர் ரங்குவின் வீட்டுக்குப் போனார்.

“வணக்கம், சேர்,” என்றான் ரங்கு.

“வணக்கம், ரங்கு.”

“கொஞ்சம் நிண்டு கொள்ளுங்கோ சேர், நான் ஒரு கதிரை கொண்டு வாறன்,” என்ற ரங்கு தன் குடிசைக்குள் போய் ஒரு நாற்காலியைக் கொண்டு வருவதற்காகத் திரும்பினான்.

“கதிரையை விடு. எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. இங்க ஒரு முக்கியமான விஷயம் இருக்குது,” என்றபடி தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை உப அதிபர் எடுத்து அதை ரங்குவின் கையில் கொடுத்து விட்டு, “இது உண்மையா?” என்று கேட்டார்.

ரங்கு கலக்கத்துடன் கடிதத்தை வாங்கிப் படிக்கும் போது அவனது உடல் நடுங்கத் தொடங்கியது. “இது முழுப் பொய் சேர்! முழுப் பொய்!”

“பொய் எண்டா ஏன் இப்பிடி எழுதிறாங்கள்?” என்று உறுமினார் உப அதிபர்.

“அவங்களுக்கு என்னில பொறாமை சேர். நான் இங்கை நல்ல வேலையில இருக்கிறதால என்னை வெறுக்கிறாங்கள். எனக்கு வேலை தந்ததுக்காக அதிபர் ஐயாவிலையும் அவங்களுக்குக் கோவம். சேர், தயவு செய்து அவங்களை நம்பாதேங்கோ. அவங்கள் நான் கொல்லன் பட்டறையில மட்டும்தான் வேலை செய்யலாம் எண்டு நினைக்கிறாங்கள்,” ரங்கு கொஞ்சம் மௌனமாக இருந்து விட்டுத் திரும்பவும் அழுதான். “இவங்கள் கெட்ட மனசுள்ள மனிசர், சேர். இந்த ராஸ்கல்களை ஒரு நாளும் நம்பாதேங்கோ.” கையை முட்டியாக்கிக் குலுக்கியபடி, “எனக்கு மட்டும் ஒரு வாய்ப்புக் கிடைச்சா… அவங்களுக்கு நல்ல பாடம் படிப்பிச்சுத் தருவன்,” என்றான்.

பிறகு கைகள் இரண்டையும் மேலே தூக்கி, “சிவசிவா, நான் எப்பிடி யேசுநாதரை மறக்க முடியும்!” என்றான்.

இதைக் கேட்டதும் உப அதிபருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவரது முகம் உடனே நெருப்பாகச் சிவந்தது. ரங்கு மேற்கொண்டும் விளக்க எத்தனிக்க, “இவ்வளவும் போதும். நான் கேக்க வேண்டியதெல்லாம் கேட்டாச்சு.” என்று சொல்லிவிட்டுக் கொல்லன் பட்டறையை விட்டு வெளியேறி நடந்தார்.

ரங்கு உப அதிபருக்குப் பின்னால் ஓடிப் போய் அவரது கையைப் பற்றி இரந்தான், “கோவிக்காதேங்கோ சேர். நான் என்னவோ பிழையாச் சொல்லீட்டனா? திருப்பிப் பட்டறைக்கு வாங்கோ, நான் எல்லாம் விளங்கப் படுத்திறன்.”

“எனக்கு உன்னட்டை இருந்து இதுக்கு மேல எதையும் கேக்கிற தேவை இல்லை,” என்று உப அதிபர் கத்தினார். பிறகு தன் கையைப் பலவந்தமாக விடுவித்துக் கொண்டு நடந்து போய் விட்டார்.

ரங்கு குழப்பத்துடன் ஸ்தம்பித்துப் போய் நின்றான். பிறகு, கைகளைப் பிசைந்தபடி, “சிவசிவா, நான் அழிஞ்சன்!” என்ற சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

உப அதிபர் நேரடியாக அதிபரிடம் சென்று என்ன நடந்தது என்பதை விவரித்தார். ஆனால் அதிபர் ரங்குவின் நடத்தையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அது உப அதிபரை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஏன் அதிபர் ஏதோ பெரிய நகைச்சுவை கேட்ட மாதிரி இப்படி வாய்விட்டுச் சிரித்தார் என்பது அவருக்குப் புரியவேயில்லை.

“உமக்கு இந்த இடம் புதுசு,” என்றார் அதிபர், “நான் சிரிச்சதைத் தயவு செய்து கண்டு கொள்ள வேண்டாம். உமக்குக் காலம் போகப் போக ஏன் சிரிச்சன் எண்டு விளங்கும். இப்ப உமக்குக் களைப்பா இருக்கும். போய் ஓய்வு எடும்.”

ரங்கு அன்றிரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து, அடுத்த நாள் விடிகாலையிலேயே வேலைக்குப் போய்க் கடுமையாக வேலை செய்தான். தன் வருங்காலத்தைப் பற்றி அவனுக்குப் பெருத்த யோசனையாக இருந்தது. ஏதோ தவறு செய்து விட்டது போன்ற உணர்வு அவனுக்கு மங்கலாக இருந்தாலும், அது என்ன தவறு என்பதை அவனால் இனங்கண்டு கொள்ளவே முடியவில்லை.

அதிபரும் உப அதிபரும் வழமை போல் சரியாக நேரத்துக்கு வேலைக்கு வந்தார்கள். ரங்குவின் கை நடுங்கத் தொடங்க அவன் கையெழுத்துக் கோணிப் போனது. அதிபர் தனது இருக்கையிலிருந்தபடி இதைக் கவனித்தார். பிறகு அவர் எழும்பி உதவி எழுதுவினைஞன் இருந்த இடத்துக்குப் போய் ஒரு கடிதத்தை அவனிடம் கையளித்தார்.

ரங்கு அதிர்ந்து போனான். இப்படி இதற்கு முன் ஒரு போதும் நடந்ததில்லை. நடுங்கும் கைகளால் கடிதத்தைத் திறந்து படித்தான்.

கண்களை ஒரு முறை மூடித் திறந்து விட்டு, இன்னொரு முறை கடிதத்தைத் படித்தான்.

அது உண்மைதான்! அவன் கடிதத்தில் படித்தது உண்மைதான். அவன் ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஆசிரியராகப் பதவி உயர்த்தப் பட்டிருக்கிறான்.

அவன் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

“ஓ! இப்பேர்ப்பட்ட நல்ல சேதி,” என்றான் அவன், “நன்றி சேர், மிக்க நன்றி.” கைகளைத் தூக்கிக் கடிதத்தைத் தலைக்கு மேல் உயர்த்தி, உரத்த குரலில், “சிவசிவா. நான் ஒருநாளுமே யேசுநாதரை மறக்க மாட்டேன்!” என்று கத்தினான்.

உப அதிபர் தன் காதுகளை நம்ப முடியாமல் அவனை வெறித்துப் பார்த்தார். பிறகு அதிபரைத் திரும்பிப் பார்த்தார்.

அதிபர் தன் மகிழ்ச்சியை மறைப்பதற்காகத் தலையைத் திருப்பிக் கொண்டார்.


அழகு சுப்பிரமணியம் — ஒரு வாழ்க்கைக் குறிப்பு
பிரேமிளா துரைரட்ணம்
(தமிழாக்கம்: எழுத்துக்கினியவன்)

1947ஆம் ஆண்டு 37 வயதில் இலங்கை திரும்பிய போது எடுத்த படம்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அழகு சுப்பிரமணியம் (1910-1971) வழக்கறிஞராகவும் (barrister-at-law), சிறுகதை, வானொலி நாடக எழுத்தாளராகவும், நாடகக் கதாசிரியராகவும் திகழ்ந்தார். அவரது தந்தையார் பிரித்தானிய காலனித்துவ இலங்கையில் நீதிபதியாகக் கடமையாற்றினார். அவரது பாட்டனார் ஒரு இலக்கிய கர்த்தா. இந்த இரண்டு தொழில்முறைகளையும் வெற்றிகரமாக ஒருமிக்க வைத்த அழகு சுப்பிரமணியம், தலை சிறந்த வழக்கறிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். 1933 ஆம் ஆண்டில் 23 வயதிலேயே இங்கிலாந்தின் லிங்கன் நீதிமன்ற அகத்தின் கௌரவக் கழகத்தில் (Honourable Society of Lincoln’s Inn) அனுமதிக்கப்பட்டார். 1941இல் இங்கிலாந்தில் வழக்கறிஞராகத் தொழில் புரியும் அனுமதி பெற்றார் (called to the bar). இலண்டன் மாநகரின் ப்ளூம்ஸ்பெரி இலக்கிய வட்டங்களில் ஏற்கெனவே நன்றாக அறியப்பட்டிருந்தவர், இலண்டன் எழுத்தாளர்களினதும் கலைஞர்களினதும் ஒன்றுகூடல்களில் ஒரு பெரிய ஆளுமையாக வரவேற்கப்பட்டார்.

Indian Writing என்ற இலக்கியச் சஞ்சிகையை நிறுவிய பத்திரிகாசிரியர்களில் ஒருவராக அழகு சுப்பிரமணியம் கடமையாற்றினார். இந்தச் சஞ்சிகையில் இரவீந்திரநாத் தாகூர், ஜவஹர்லால் நேரு போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெளியிடப்பட்டன. விரைவிலேயே இந்தச் சஞ்சிகை இலண்டனில் இருந்த தெற்காசியாவைச் சேர்ந்த தீவிரமான காலனித்துவ எதிர்ப்புவாதிகளின் இயங்கு தளமாக உருவெடுத்தது. இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலண்டன் கிளையின் செயலாளர் என்ற முறையில் அழகு சுப்பிரமணியம் இலண்டனைச் சேர்ந்த உள்ளாட்சி இல்லம் (Swaraj House) என்ற காலனித்துவ எதிர்ப்பு அமைப்பில் ஈடுபட்டிருந்தார். 1935ஆம் ஆண்டின் பனிக்கால மாதங்களில் Bibliophile என்ற புத்தகக் கடையைத் திறந்த சசதர் சின்ஹாவின் உதவியாளராகவும் பணியாற்றினார். 1947இல், இலங்கை சுதந்திரமடைவதற்குச் சற்று முன்னர், இலங்கை திரும்பினார்.

அழகு சுப்பிரமணியத்தின் கதைகள் பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனமான பிபிசியின் உள்ளக மற்றும் வெளிநாட்டுச் சேவைகளில் ஒலிபரப்பப் பட்டன. அவரது ஆக்கங்கள் தமிழுக்கும் மற்றும் ரஷ்ய, போலிய, இடாய்ச்சு (யேர்மன்), கன்னட மொழிகளுக்கும் மொழியாக்கப் பட்டன.

நகைச்சுவை ததும்பும் ‘The Mathematician’ என்ற சிறுகதை உலகளாவிய ஆளுமையான அன்டன் செகோவின் எழுத்துக்கு நிகரானது எனக் கருதப்படுகிறது. இதன் இடாய்ச்சு மொழியாக்கம், ஹைடல்பேர்க் நகரத்தில் வெளியிடப்பட்ட Briefly Told: The Finest Stories, in World Literature என்ற தொகுப்பில் உள்ளடக்கப் பட்டது. ‘Lovely Day’ என்ற கதை Best Indian Short Stories என்ற தொகுப்பில் இடம்பெற்றது. இன்றும் இவரது ஆக்கங்கள் இலங்கையில் ஆங்கில இலக்கிய மாணவர்கள் பலரை, பல்கலைக்கழக இளமானி மாணவர்கள் உட்பட, உவக்க வைக்கின்றன.

அழகு சுப்பிரமணியத்தின் சில சிறுகதைகள் ராஜ ஸ்ரீகாந்தன் அவர்களால் மொழிபெயர்ககப்பட்டு “நீதிபதியின் மகன்” என்ற தலைப்புள்ள சிறுகதைத் தொகுப்பாக 1999 இலும் 2003 இலும் இரண்டு பதிப்புகளாக வெளிவந்தது. இவை கொழும்பில் இலங்கை தேசிய நூலகத்திலும் இலண்டனில் பிரித்தானிய நூலகத்திலும் உள்ளன. இதுவரை தமிழாக்கப்படாத சிறுகதைகளை எழுத்துக்கினியவனும் அனுஜா பிரகாஷும் தமிழாக்கி வருகிறார்கள். இந்த இதழில் வெளியாகும் “மதமாறி” என்பது அப்படியான ஒரு கதையே.


Art : Слава

எழுத்துக்கினியவன் .
எழுத்துக்கினியவன் .

எழுத்துக்கினியவன் என்ற புனைபெயரில் மொழியாக்கங்கள் செய்துவரும் ந.அசோகன் தமிழ் – ஆங்கிலம் என இருவழிகளிலும் மொழியாக்கங்களைச் செய்து வருகிறார். இவரது ஆங்கில மொழியாக்கங்கள் Copper Nickel, Lunch Ticket, Jaffna Monitor ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ் மொழியாக்கங்கள் காலச்சுவடு, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது ஆங்கில மொழியாக்கமொன்று Gabo Prize-க்கான இறுதிப் பட்டியலில் தேர்வானது.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • நீதிமணி கதைகள்

    நீதிமணி கதைகள்

    May 1, 2026
  • கே. கணேஷ்ராம் கவிதைகள்

    கே. கணேஷ்ராம் கவிதைகள்

    May 1, 2026
  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    May 1, 2026
  • வன்புணர்வு எனும் பேரின்பம்

    வன்புணர்வு எனும் பேரின்பம்

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (19)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (106)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (19)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • நீதிமணி கதைகள்

    நீதிமணி கதைகள்

    May 1, 2026
  • கே. கணேஷ்ராம் கவிதைகள்

    கே. கணேஷ்ராம் கவிதைகள்

    May 1, 2026
  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (19)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (106)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top