வேலூர் மாவட்டம் குடியேற்றம் நகருக்கு அருகிலிருக்கும் சேத்துவண்டை கிராமத்தில் வசிப்பவர் ரகசியன். இவரின் இயற்பெயர் இரா.திருமலை. பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். ரகசியனின் ஐந்தாவது கவிதை நூல் மீட்பர் கொடுத்த விசா. இதற்கு முன்பு நெருப்பல்ல சூரியன், என் மாமிசத்தைப் பிடுங்கிப் பசியாறும் சைவம், வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு, காற்றில் கூனும் கிளை முதலான கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
ஒரு வகைமைக்குள் இவரது கவிதைத்தொகுப்பை அடக்கிவிடமுடியாது. ஒவ்வொரு கவிதையிலும் சமூகத்தின் மீதுள்ள அக்கறையையும் புரிதலையும் காணமுடிகின்றது. நான்கு வழிச் சாலைக்காகவும் எட்டுவழிச் சாலைக்காகவும் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதைக் கண்டு எழுதியிருக்கும் கவிதையில் சாலையோரங்களில் மரங்கள் இல்லாததால் குயில்கள் இல்லை. குயில்கள் இல்லாததினால் வழியில் பாடல்களும் கேட்பது இல்லை. இங்கு பால்யங்களில் கேட்ட குயிலிசை, நினைவுகளில் மட்டுமே இன்னிசைத்துக் கொண்டிருக்கின்றன என்கிறார். முன்னொரு காலத்தில்/ நானும் எனது அப்பாவும் மிதிவண்டியில் சென்று கொண்டிருக்கும் போதில் / மரங்களின் புகழினைக் குயில்கள் பாடிக்கொண்டிருந்தன. இக்கவிதையானது சாலையோரங்களில் இன்று மரங்களும் இல்லை குயில்களும் இல்லை என்கின்ற அவலநிலையைப் பதிவுசெய்கின்றது.
கவிதையின் தன்மையைக் குறித்துக் குறிப்பிடும்போது ஆழ்கடல் நீரின் மௌனத்தையும் மலைமீது மோதித் திரும்பும் முழக்கத்தையும் போன்றவை என்கிறார். சமூகத்தில் நடப்பதை உற்றுநோக்கும் போது கவிதையில் மௌனமாகவும் அநீதிகளைப் பற்றி பேசும் பொழுது முழக்கமிடுபவராகவும் கவிஞர் மாறிவிடுகின்றார்.
புத்தனை மூடி மறைக்கும் கள்வம்/ காலந்தோறும்/ நடந்தேறிக் கொண்டே இருக்கிறது. உலகெங்கும் வழிபடுகின்ற புத்தனைப் புராணக் கருத்துகளால் மூடி மறைத்துவிட முடியாது. புத்தன் சமநீதிநெறிக்கு எதிராக உள்ள பண்பாட்டுப் போரை முறிக்கும் வரை கூடுபாய்ந்து கொண்டே இருப்பான் என்கிறார்.
இங்கு ஜாதியின் பெயராலும் பெண்களின் பெயராலும் நடக்கும் சுரண்டல்களை எதிர்க்காமல் அமெரிக்காவின் சுரண்டலை எதிர்க்கின்றார்கள் என்று பகடி செய்கின்றதையும் பார்க்க முடிகின்றது.
தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம். பனைமரம் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் சமூகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. பனை மரத்தின் தேவையையும் சிறப்பையும் சொல்வதான கவிதையில் பனைமரத்தினை வளர்க்கச் சிரமபடத்தேவையில்லை. எளிமையாக வளர்க்க முடியும். பனைமரமும் புத்தனின் போதிமரமும் ஒன்றுதான் என்று ஒப்பீடு செய்கின்றார். பனைமரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதான கவிதையாக உள்ளது.
நம்பிக்கை அளிக்கும் சொற்கள்
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய துயரங்களைக் கடந்து போக வேண்டும். அதே கணத்தில் தேங்கி நின்றுவிடக்கூடாது. நம்பிக்கையோடு வாழ்வினை எதிர்கொள்ள வேண்டும் என்பதை, இதே நிலவு/ நாளையும் வரும்/இதே வானம்/நாளையும் இருக்கும்/நாம் இருந்தாலும் /இறந்தாலும்/இந்த ரோஜா செடி நாளையும் பூக்கும், நாம் சிறு புல் எனினும் சூம்பிய கால்களைக் கொண்டே காலனை உதைப்போம். உனக்கு இருப்பவை சிறகுகள் /கால்கள் என்று நின்று விடாதே என்ற வரிகள் நம்பிக்கைக்குச் சிறந்த உதாரணமாக உள்ளன.
சாமானியனின் வாழ்க்கையைப் பாடும் கவிதை.
பெருமழையை ரசித்துக்கொண்டிருந்த ஒருவன் இன்று சிறு மழைக்குத் தாங்காமல் சென்னை சாந்தோம் சாலை மழைநீரில் தத்தளிப்பதை ”இலை மேலேறி தத்தளித்துக் கரை சேர்ந்த துவக்கப்பள்ளி பாடநூல் எறும்பைப் போல” இருசக்கர வாகனத்தில் தத்தளித்துக் கரைச் சேர்ந்தான் என்கிறார்.
அவலம்
பாரத மாதா ஆளும் ஊர்களிலும் தமிழ்த்தாய் ஆளும் ஊர்களிலும் சேரிக்கு நடுவில் வானைத் தொடும் சுவர்கள் இருக்கின்றன என்ற உண்மையை அறிந்துகொள்ளுங்கள் மூடரே என்ற வரியில் தீண்டாமை இந்தியா முழுவதும் இருப்பதை அடையாளப்படுத்துகின்றார்.
அன்பு
நியாயமாகப் பார்த்தால் நாங்கள்தான் உங்களின் மீது பகை கொள்ள வேண்டும். நாங்கள்தான் அநீதிகளுக்குத் தொடர்ந்து ஆளாகிவருகின்றோம். ஆனாலும் உங்களுடன் எப்போதும் பூமிக்கு மழைக்கரம் கொடுக்கும் முகிலைப் போல கைகளை நீட்டிக் கொண்டிருக்கின்றோம் என்பதின் மூலம் அன்பை விதைப்பவர்களே ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர் என்பதை அறிய முடிகின்றது.
கனிவுடன் புகாரையும் பணிவுடன் விண்ணப்பத்தையும் எழுதுவதால் கவிதையை இழக்கிறது மொழி என்பதின் மூலம் இங்கு புகாரையும் விண்ணப்பத்தையும் எழுதும்போதும் கூட கனிவுடனும் பணிவுடனும்தான் எழுத வேண்டியுள்ளது. அதனால்தான் மொழி கவிதையை இழக்கிறது என்கிறார். அலுவல் மொழியின் தன்மையினைக் குறிப்பிடுகின்றார்.
கடவுளைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுதல்
காலங்காலமாகச் சாதியின் பெயரால் உள்ள தீண்டாமைக் கொடுமைகளுக்குக் காரணம் கடவுள்தான் என்கிறார். சாதியின் பெயரால் தொடர்ந்து ஒடுக்கப்படுவதைக் கண்டிக்கின்றார். உலகத்தைப் படைத்தோமா அழித்தோமா என்றில்லாமல் ஏன் தலையில் ஒருவனையும் காலில் ஒருவனையும் படைத்தாய் என்று கடவுளிடம் கேள்வியை எழுப்புகின்றார். கடவுளால்தான் மேல் கீழ் என்னும் பேதம் உருவாகியது. காலில் பிறக்க வைத்ததினால்தான் போகிறவர் வருகின்றவர் எல்லாம் கடவுளை அடிக்கிறார்கள். வருணாசிரமக் கொள்கை கடவுளின் பெயராலே தொடர்கின்றது என்கிறார்.
குழந்தைகளைக் குழந்தைகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரியவர்களின் அறிவைக் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. குழந்தைகளின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கவிதை.
குமிழிக்குள் இருக்கிறது குளம்
என்கிறது குழந்தை
இவ்வளவு நாளாய்
குளத்தில் குமிழி இருப்பதைத் தானே
கண்டிருக்கிறோம்?
குழப்பமாக இருக்கிறது என்றாலும்
குழந்தைகள்
பொய்சொல்ல வேண்டிய
அவசியமென்ன?
குழந்தை நின்று பார்த்த உயரத்தில்
ஏரியைப் பார்த்தேன்
ஆம்
குமிழிக்குள் தான் இருக்கிறது குளம்.
ஒடுக்கப்பட்டவர்கள்
விதை எப்படி முட்டி முட்டி மோதி வளர்கின்றதோ அதுபோல் போராடி வளர்ந்தவர்கள். வானத்தின் மிக குறைந்த உயரத்தை இப்போதுதானே எட்டிப்பார்தோம். அதற்குள் எங்கள்மீது கொடுமைகள், கொலைகள், அவமானங்கள்? ஒடுக்குதல்கள், வன்முறைகள், வழிமறிப்புகள், கிண்டல்கள், கேலிகள் எதற்காக? என்று கவிஞர் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். ஆண்டாண்டுக் காலங்காலமாக அடிமைப்பட்டிருந்தவர்கள் இப்போது தான் மெல்ல வளர்ந்து வருகின்றார்கள் . சாதியின் பெயரால் அவர்கள் மீது மீண்டும் மீண்டும் வன்முறையை ஏன் நிகழ்த்துகின்றீர்கள் என்னும் கேள்வியை எழுப்புகின்றார்.
புலம்பெயர்ந்தவனின் துயர்
சங்க காலம் தொட்டே பொருள் தேடிச் சென்றவர் குறித்து கவிஞர்கள் பாடியிருப்பதைப் படித்திருக்கின்றோம். வீட்டிற்கு வர முடியாமல் ஊரை விட்டுச் சென்று வேலை செய்பவன் சுதந்திரமாகப் பறந்து திரிந்து மாலை கூண்டுக்குள் சென்று கூடடையும் பறவைகளைக் கண்டு ஏங்குவதைக் குறிப்பிடுகின்றார். புலம்பெயர்ந்து வாழ்பவரின் துயரினைப் பதிவு செய்திருக்கின்றார்.
உலகமயமாக்கல்
உலகமயமாக்கலால் வண்ணாரின் கழுதைகள், குயவரின் பானைகள், நெசவாளரின் தறிகள், உழவரின் நிலங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. ஆனால் பார்ப்பனரின் மந்திரத்தை மட்டும் அவரிடமே விட்டு வைத்திருக்கிறது. மனங்களில் உள்ள வருணாசிரக் கொள்கைகளை உலகமயமாக்கலால் கூட அழிக்க முடியவில்லை.
எல்லா ஊரின் நீர்த் தொட்டி அடியிலும்
உப்புத் துகள்கள் படிந்திருக்கின்றன
இந்த ஊிரின் நீர்த் தொட்டியில்தான்
மனுவின் மூளை
படிந்திருக்கிறது.
குடிநீரில் மலம் கலந்த கொடுமையைக் குறித்துப் பதிவு செய்திருக்கின்ற கவிதை.
முதுமை அழகு
வயதான பின்பு முதியவர்களிடத்தில் உள்ள சுருக்கங்கள் பார்க்க அழகாக இருக்கின்றன. சுருக்கங்கள் விழுந்த பின்பும் முதுமை இளமையாக இருக்கின்றது . முதுமை வெறுக்கக் கூடியதொன்றும் இல்லை. முதுமையிலும் வாழ்வைக் கொண்டாடலாம். இங்குத் தண்ணீரைக் கூறுவதாக இல்லாமல் சுருக்கங்கள் விழுந்த முதுமையின் அழகைச் சொல்ல வருகின்றார்.
சுருக்கங்கள் விழுந்த பின்பும்
இளமையாகவே இருக்கிறது
தண்ணீர்.
கொள்கைவாதிகள் நிலையைக் குறிப்பிடுகின்ற ஒரு கவிதையில் கொள்கைவாதிகள் இழிவுப்படுத்தப்படுகிறார்கள், நிர்வாணப்படுத்தப்படுகிறார்கள்,கொலை செய்யப்படுகிறார்கள் என்கிறார். ஆனால் காலமோ கொள்கைவாதிகளுக்கு வலுமிக்க மாலையைக் கோக்கிறது.
சமூகத்தின் அநீதிகளைச் சாடுகின்றவராகவும் உறவுளின் மேன்மைகள் குறித்தும் சமகால அரசியலையும் தன்னுடைய கவிதையில் பதிவு செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல் நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பள்ளிக்கல்வி சிறார் இதழின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றார். இந்து தமிழ் திசையில் ருசி பசி என்னும் தொடர் எழுதியவர். 15க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி உள்ளார். முனைவர் பட்ட ஆய்வு முடித்துள்ளார். தொடர்ந்து நாளிதழில் நூல் விமர்சனம் எழுதி வருகிறார்.








Leave a Reply