எதிர் வன்முறை
நான் பார்த்திருக்க எப்பொழுதேனும்
நசிந்த அலகு திறக்கும்போதெல்லாம்
தலையைச் சுற்றிச் சிரித்தபடியே வீசி எறிவேன்
சிறுசிறு கற்களை
விளையாட்டுத்தனமாய்
அதுவும் அதே விளையாட்டுத்தனத்தோடு போய்க் குவிந்துவிடும்
நங்நங்கென்று குதூகலித்தபடி
என் வீட்டின் பின்புறமுள்ள
ஊரின் உயிர்க் குறியில்.
தீபகற்ப வாழ்வு
அறையாகக் கட்டாமல்
ஒற்றைச் சுவர் மட்டுமெழுப்பி
அதில்
அகல சன்னல் வைத்துச் சாத்தி
நீளக் கதவு வைத்துத் தாழிட்டு
சுவர்மீது கண்பொத்தி நிற்க
மனமோ அரற்றி அரற்றித் தேம்பி
அசைவற்ற வாய்நிலையில்
தாரைதாரையாய்க் கண்ணீர் சொரிகிறது
சுற்றிய மூவெளிகளிலுமாக
ஒரு வாழ்வு வந்து
அடித்துத் துவைக்கும் பிறப்பிடத்தே.
மழுமட்டையும் இன்கக்னிட்டோ டேப்பும்
அவர் கவனித்தறியாத அல்லது கவனித்து
வேண்டுமென்றே ஏற்றுக்கொள்ளாதொதுக்கிய கதைகளை
நட்பின் கட்டாயத்தில் கேட்டறிந்தபின்
துணுக்குற்று குற்றம்கொண்டதாக ஒருநாள் கூறி
அவர் வழிவந்த சந்ததி வழிவரும் சந்ததி முழுக்கவும்
இப்போதைக்கு அவருமாகவும் சேர்ந்து
மன்னிப்புக் கோருவதாக மண்டியிட்டார்
நேற்றைய நடுயிரவு போராட்டக் களத்தின் செய்திக்காக
நீங்கள் விழித்திருந்தீரா இல்லை
இன்கக்னிட்டோ டேப்பில் மூழ்கியிருந்தீரா
எனக் கேட்டு முடிப்பதற்குள்
செந்நீர் ஒழுகிட எம் சிரம் கொய்தி நடக்கிறார்.
புத்த பூர்ணிமை
அப்பனின் அப்பனாய் ஆதியில் வந்தவன்
பற்றற்றான் பற்றினைப் பற்றி நில்லென்றான்
அதே நிலத்தில்தான்
நேற்று பிரசவிக்கப்பட்ட கொள்ளுப்பேரன்
முழு நிலவுக்கு விடுமுறை கோரும் விண்ணப்பத்தில்
படுத்துறங்கிக் கொண்டிருக்கிறான்.
மூத்தோனின் உப்பளக் கால்வாய்
ஆயிரங்கரம் நீட்டி அகழ்ந்தெடுத்த ஆதியிருளை
சேரிகூடி சேகரித்த மொத்த இலகுவின்
துணைகொண்டு
அதிமந்தத்தின் எதிர்ச்சொல் வழியே
மூன்றாம் கோளின் ஆழி வெளிச்சத்திற்குள்
மூழ்கடிக்கிறான் நம் மூத்தோன்
முழுமுற்றாகக் கரைந்து மென்கோட்டு ஓவியமாய்
உருமாறும் மனமுடைய அதில்
உடைந்த குடுவையின் சில்லொன்று கீற
பெருகிய உப்பளக் கால்வாய்
அடுக்கப்பட்ட செருப்புகள் நடுவே
மறைப்பேதுமின்றி வெய்யிலில் காய்ந்திருந்து
தார்ச்சாலையில் விரைந்தோடுகிறது.
Art : saatchiart.com
இயற்பெயர் ப.ஏகாம்பரம். மணப்பாறைக்கு அருகிலுள்ள பாலப்பட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பை முடித்துவிட்டுத் தற்போது சென்னையில் வணிகவரித் துறையில் பணியாற்றுகிறார். இவரது கவிதைகள் கொலுசு, படைப்பு, வல்லினம், வாசகசாலை ஆகிய மின்னிதழ்களில் வந்துள்ளன.








Leave a Reply