Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பட்டாங்கில் உள்ளபடி – பிரளயன்

பிரளயன் .
பிரளயன் .
October 1, 2025
பட்டாங்கில் உள்ளபடி – பிரளயன்

இடம்:
பாச்சல் காவல்நிலையம்,திங்களூர் சரகம், சான்றோர் மாவட்டம்.

நடிகர்கள் : வணக்கம்! பாச்சல்காவல்நிலையம், திங்களூர்சரகம், சான்றோர் மாவட்டம்.
இந்த காவல்நிலையத்துக்குப் புகாரொன்று வருகிறது.
அந்தப் புகார் அன்றாடம் வருகிற புகார்களில் ஒன்றல்ல!
காவல்துறையின் தீவிர கவனத்தைக் கோருகிற புகார்அது!
அது என்னவென்று பார்க்கலாமா
அது என்னவென்று பார்க்கலாமா?

பின்னணியில் வாக்கி-டாக்கி ஒலித்துக் கொண்டிருக்க மேசையில் தலைமைக்காவலர் அமர்ந்து ஃபைலைப் பார்த்து எழுதிக்கொண்டிருக்கிறார். காவலர்-3 ம், காவலர் 4-ம் பார்வையாளர்க்கு முதுகைகாட்டியபடி மேல்மேடையில் அமர்ந்து தத்தமதுஅலுவலில் மூழ்கியுள்ளனர். சீருடை அணியாத காவலர்-2 வலது மேடையில் பார்வையாளர்களுக்கு முதுகை காட்டிய படி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டி ருக்கிறார்.

தலைமைக்காவலரது கைபேசி ஒலிக்கிறது. அதை அவர் கவனியாது இருக்கிறார். மற்றொருகாவலர் அவரருகே வந்து கைபேசி ஒலிப்பதை சுட்டிக் காட்டுகிறார். அவர் ஒலிப்பதை அணைத்து விட்டுப் பணியில் மூழ்குகிறார்.

ஒரு நடுத்தரவயதுப் பெண்ணும் ஓர் இளைஞனும் உள்ளேவருகின்றனர். காவலர்- 3 ன்முன் நிற்கின்றனர்.

பெண்:

அய்யா நேத்து அவுங்க வூட்டுக் கிட்டவந்து தகரால் பண்றாங்கய்யா. கம்ப்ளயிண்டை வாப்பஸ்வாங்லீன்னா உசுரோட இருக்கமாட்டேன்னு மிரட்டறாங்கய்யா.

காவலர் -3 எந்த சலனமுமில்லாமல் அமைதியாக அப்பெண்ணிடம் பதிலிருக்கிறார்.

காவலர்-3

அதோ அந்தக்கடைசியில உக்காந்திருக்காருல்ல அவர் கிட்டபோங்கம்மா!

அந்தப் பெண்அவர் சுட்டிக்காட்டிய காவலரிடத்தில் செல்கிறாள்

பெண் : 

அய்யா
கம்ப்ளயிண்டை வாப்பஸ் வாங்லீன்னா உசுரோட இருக்கமாட்டேன்னு மிரட்டறாங்கய்யா.

உணவருந்திக் கொண்டிருக்கிற காவலர் அப்பெண்ணைப் பார்க்கிறார்.

காவலர்-2

அதோ அங்க ஒரு லேடி கான்ஸ்டபிள் உக்காந்திருக்கங்கள்லே அவங்கிட்ட போங்க

அந்தப்பெண்ணும் இளைஞனும் நடந்து சென்று பெண்காவலர் முன் நிற்கின்றனர்.

அம்மா நேத்து அவுங்க வூட்டுக்கிட்டவந்து
தகரால் பண்றாங்கம்மா!
கம்ப்ளயிண்டை வாப்பஸ் வாங்லீன்னா உசுரோட இருக்கமாட்டேன்னு மிரட்டறாங்கம்மா!

பெண்காவலர்

அதோ ஏட்டய்யா உக்கந்திருக்குறாருல்ல அவரப்போய்ப் பாருங்கம்மா!

அந்தப் பெண்ணும் இளைஞனும் தயங்கித் தயங்கி நடந்து சென்று தலைமைக்காவலர் முன் நிற்கின்றனர்.

பெண் :

அய்யா
அய்யாகும்புடறங்கய்யா
அய்யா
அய்யா

தலைமைக்காவலர் அலட்டிக்கொள்ளாது கண்களை மட்டும் உயர்த்திப் பார்க்கிறார்.

அய்யா நேத்து அவுங்க வூட்டுக்கிட்ட வந்து
தகரால் பண்றாங்கய்யா
கம்ப்ளயிண்டை வாப்பஸ்வாங்லீன்னா உசுரோட இருக்கமாட்டேன்னு மிரட்டறாங்கய்யா

தலைமைக்காவலர் :

எவுங்க?

பெண் :

அன்னிக்கு கம்ப்ளெயிண்ட் குடுத்தனேஅவுங்கய்யா

தலைமைக்காவலர்

அந்தப் பொட்டிக்கடைதகராறு?

பெண்

ஆமாங்கய்யா!

தலைமைக்காவலர்

அதான் கூப்ட்டு விசாரிக்கறோம்னு சொன்னோமுல்ல
விசாரிப்போம்.

பெண்

இன்னிக்கு என்மவன் வண்டிய மறிச்சு காத்தப் புடுங்கிவுட்டானுங்கய்யா

எழுதிக்கொண்டிருந்த தலைமைக்காவலர் நிமிர்ந்துபார்க்கிறார்.

கம்ப்ளெயிண்ட வாப்பஸ் வாங்லீன்னா உடம்புல உசிர் இருக்காதுன்னு மிரட்டுனாங்கய்யா!

தலைமைக்காவலர்

எப்போ?

பெண்

பன்னிக்கு தவுடு வாங்கிக்கினு வண்டியில கட்டி எடுத்தாந்தானுங்க,

அப்பங்கய்யா?

தலைமைக்காவலர்

அதான் எப்போன்னு கேக்கறன்ல

பெண்

இன்னிக்கு காத்தாலய்யா

தலைமைக்காவலர்

என்னா வண்டி?

தலைமைக்காவலர் இளைஞனைத் திரும்பிப்பார்த்துக் கேட்கிறார்.

பெண்

டிவிஎஸ் ஃபிப்டி

தலைமைக்காவலர்

ஏன் இவரு பதில் சொல்லமாட்டாரா?

பெண்

அவனுக்கு பேச்சு வராதுங்கய்யா!

தலைமைக் காவலர்அவ்விளைஞனை ஏற இறங்கப் பார்க்கிறார்.

தலைமைக்காவலர்

அன்னிக்கு கம்ப்ளெயிண்ட் குடுக்கும்போது இவரு வரல்லியா!

பெண்

எங்கவூட்டுகாரந்தான் வந்ததுங்கய்யா

தலைமைக்காவலர்

அவுரு ஏன் வரல்ல

பெண்

அது நடக்கமுடியாம வூட்லயே கிதுங்கய்யா

தலைமைக்காவலர்

சாமிக்கண்ணு

மேடையின் வலது புறம் அமர்ந்திருந்த சீருடை அணியாத அந்த கான்ஸ்டபிள் வருகிறார்

காவலர்-2

சார்

தலைமைக்காவலர்

இவங்க கம்ப்ளெயிண்ட என்னன்னு விசாரிச்சியா

சீருடை அணியாத அக்காவலர் அப்பெண்மணியையும் இளைஞனையும் ஏற இறங்கப்பார்க்கிறார்.

காவலர்-2

அந்தப் பொட்டிக்கடை தகராறு தானங்கய்யா! போனங்கய்யா கட பூட்டியிருந்துதுங்கய்யா

பெண்

ஆமாங்கய்யா அந்த தகராலுக்கப்பறம்அவங்க கடையே திறக்கலிங்க .பூட்டியே கெடக்குங்க!

தலைமைக்காவலர்

நீங்க போய் அப்படி உக்காருங்கம்மா நான் கூப்பிடறேன்! ஏய்யா சாமிக்கண்ணு இங்கவாய்யா

சீருடை அணியா அக் காவலர் அருகில்வருகிறார்

ஏன்யாஅந்த ஆளு என்னய்யா நினைச்சுகினுகிறான். சுமூகமாப் போற ஐடியா இல்லயாமா அவருக்கு!
இப்ப மறுபடியும் போயி அந்த வாயில்லாப் புள்ளய அடிச்சுகிறான். நம்மள வம்புல மாட்டி வுட்ருவான் போல கிதே?
த பாரு, அந்த ஆளுக்குத் தெரியுமா தெரியாதா? உண்மையிலேயே அந்த அம்மா குடுத்த கம்ப்ளெயிண்ட எஸ்சிஎஸ்டி பி ஓ ஏ ஆக்ட்ல போடனும். சுமூகமாப் போவனும் போனாப் போவுதுன்னு நாந்தான் போடல்ல. இப்படியே ஆட்னானுங்க வச்சுக்க, மகனே கண்டிப்பா எஸ்சிஎஸ்டி பி. ஓ. ஏ தான் உள்ளே உக்காந்து களி துன்ன வேண்டியதுதான்!

பெண்காவலர்

சார் அப்ப அந்த கம்ப்ளயிண்ட எஸ்ஸிஎஸ்டி பி ஓ ஏ ஆக்ட்ல போடலியா?

தலைமைக்காவலர்

அத, நீ எதுக்கு கேக்கற?

பெண்காவலர்

சார், நான் டிஎன்பிஎஸ்சி குரூப்- ஒன் எக்ஸாமுக்குப் படிச்சுகிட்டிருக்கேன். அதுல மனிதஉரிமைகள் ஒரு முக்கியமான சாப்டர் சார்.

எஸ். சி.எஸ்.டி.பி ஓ. ஏ ஆக்ட் சம்பந்தமா நிறைய கேஸ் ஸ்டடீஸ் என்ன சொல்லுதுன்னா தீண்டாமைவன் கொடுமை தொடர்பா வர்ற பல புகார்கள,தீண்டாமை வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ பதிவு பண்றதேயில்லை. தொடக்க நிலையிலையிலேயே அதை திசை திருப்பி விட்டுடறாங்க. இல்லன்னா தண்ணிய ஊத்தி நீர்த்துப் போக வச்சுடறாங்க. டைல்யூட் பண்ணிட்றாங்க. நம்ப ஸ்டேஷன்லஅது நடக்க வேணாம் சார்!

காவலர்-2

நீ இந்த ஸ்டேஷனுக்கு வந்து எத்தினி நாள் ஆவுது

பெண்காவலர்

ஏழு மாசம் சார்

காவலர்-2

ஏழு மாசம்தானே ஆவுது, போவப்போவ தெரிஞ்சுக்குவ. த பாரும்மா, இந்த மாதிரி கேஸெல்லாம் முதல்லத்தான் வீராப்பாஇருப்பாங்க. அப்புறம் கோர்ட்டுக்குப் போற ஸ்டேஜுல, காசகீச வாங்கிக்கினு ஒரேயடியா பல்டி அடிச்சுடுவாங்க. ரெண்டுபேரும் திடீர்னு ராசியாயிடுவாங்க. கடைசியில நாமதான் கோர்ட்டு வாசல்ல வாயில விரல சூப்பிக்கிட்டு நிக்கனும். நாங்க பாக்காத எஸ்.சிஎஸ்டி ஆக்டா?

பெண்காவலர்

அவங்க ஒருத்தருக்கொருத்தர் ராசியாயி கைக்கோத்துக்கும் போது பாத்துக்கலாமே. இப்ப கம்ப்ளெயிண்ட நாம கரெக்டா ஃபைல் பண்ணனுமில்லியா சார்.

காவலர்-3

நீ சொல்றது சரிதாம்மா. அதே நேரத்துல ஒரு ஊர்ல லாஅண்ட்ஆர்டர் பிராப்ளம் வர்றதுக்கு நாமளே காரணமாயிடக்கூடாதுல்லியா?

டீக்கடைப்பையன் வருகிறார்.

டீக்கடைப்பையன்

சார்டீ எடுத்தாரட்டுமா சார். பஜ்ஜீ, போண்டா, மசால்வடை, கஜூர் எல்லாம் சூடா இருக்து சார். கொணாரட்டுமாசார்!

தலைமைக்காவலர்

டீ மட்டும் எடுத்தாப்பா!

டீக்கடைப்பையன்

எத்தினி டீ சார்

தலைமைக்காவலர்

தலைய எண்ணிகினு போடா

டீக்கடைப் பையன் தலையை எண்ணுகிறான்.

டீக்கடைப்பையன்

நல்லா எண்ணிட்டேன் சார் எல்லாருக்கும் ஒரே ஒரு தலை தான் சார் இருக்து.

டீக்கடைப் பையன் செல்கிறார்
டிஎஸ்பி வருகிறார்.
காவலர்கள் வணக்கம் செய்கின்றனர்.
டிஎஸ்பி உள்ளேசெல்கிறார். தலைமைக் காவலர் அந்தப் பெண்ணை அழைத்துச் சொல்கிறார்.

தலைமைக்காவலர்

சரிம்மா நீ போ கான்ஸ்டபிளஅனுப்பி விசாரிக்கறோம்.

பெண்

அய்யா வூட்ல இருக்கவே பயமாகிதுங்கய்யா

காவலர்-3

டி எஸ்.பி வந்துகிறார்மா! அதான்அய்யா ஆளனுப்பி விசாரிக்கறேன்றாருல்ல. மொதல்ல நீ எடத்த காலி பண்ணும்மா!

உள்ளே சென்ற டிஎஸ்பி திரும்பி வருகிறார்

என்னாங்க இது?ரூம்ல ஃபேனே ஒடல

பெண்காவலர்

ஷார்ட் சர்க்யூட் ஆவுதுன்னு எலக்டிரிஷீயன் கனெக்‌ஷனை கட் பண்ணிட்டுப் போயிருக்கான் சார். நாளைக்கு சரி பண்ணிடுவாங்க சார்.

டிஎஸ்.பி

ஏட்டய்யா, இன்ஸ்பெக்டர் எங்க? எங்கபோயிருக்காரு

தலைமைக்காவலர்

இன்ஸ்பெக்டரய்யா கோர்ட்டுக்குப் போய்கிறாருங்கய்யா!

கான்ஸ்டபிள் எழுந்து கொள்ள அவ்விடத்தில் டிஎஸ்பி அமர்கிறார்.

டிஎஸ்பி

ஜிடி..ஜெனரல் டய்ரீ

தலைமைக் காவலர் உள்ளே ஓடுகிறார்

மேசையிலிருக்கும் டிஎஸ்பி ரிஜிஸ்டரைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்.

பெண், டிஎஸ்பியிடம் அணுகி முறையிடுகிறார்.

பெண்

அய்யா, குடுத்த கம்ப்ளைண்ட வாப்பஸ் வாங்கச் சொல்லி மெரட்றாங்கய்யா.

காவலர் 2 ஓடிச்சென்று அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துச் சென்று காதில் கிசுகிசுக்கிறார்.
டிஎஸ்பி மெதுவாகத் தலையை உயர்த்தி அப்பெண்ணைப் பார்க்கிறார்.

காவலர்-2

பல்லைக் கடித்தவாறு டிஎஸ்பி காதில் விழாது அப்பெண்ணிடம் தாழ்ந்த குரலில்பேசுகிறார்.

த பார்மா அதான் ஆளனுப்ச்சி விசாரிக்றோம்னு அய்யா சொல்றாருல்ல. முதல்ல கிளம்பும்மா இங்கர்ந்து!

பெண்

வூட்ல இருக்கறதுக்கே பயமா இருக்குங்கய்யா!

காவலர்-2

அதான் ஆளனுப்ச்சி விசாரிக்றோம்னு சொல்றோமுல்ல

டிஎஸ்பி

யோவ் என்னாய்யாஅங்க? என்னாம்மா விசயம்? இங்கவாம்மா எங்கிட்ட சொல்லும்மா!

பெண்

அய்யா குடுத்த கம்ப்ளைண்ட வாப்பஸ் வாங்கச் சொல்லி மெரட்றாங்கய்யா.

டிஸ்பி

என்னா கம்ப்ளெயிண்டு யாரு மெரட்றது ,என்னங்க ஏட்டய்யா,என்னா கம்ப்ளயிண்டு இது?

காவலர்-2

அடிதடி கேஸ்ஸுங்கய்யா. பலசரக்குக் கடையில சரக்கு வாங்கப் போவும்போது ஏதோ தள்ளு முள்ளு நடந்துருக்குங்கய்யா.. விசாரிக்கலாம்னு கான்ஸ்டபிள் போனாருங்கய்யா ஆனாஅந்த . கடைக்காரன் கடய மூடிட்டு போயிட்டுகிறானுங்கயா.

டிஸ்பி

அந்தக் கடைகாரன் உன்ன அடிச்சுட்டானாம்மா?

பெண்

அந்த கடக்காரரு ஒன்னும் பண்ணலீங்க. மேலத்தெரு மாதலம்பாடியார்தானுங்க எட்டி ஒதஸ்ட்டாரு!

டிஎஸ்பி

யாரை

பெண்

என்னையத் தாங்க

காவலர் -3

ஏம்மா உன் புருசன அடிஸ்ட்டாங்கன்னு தானம்மா கம்ப்ளெயிண்ட் குடுத்தே! இப்ப மாத்திப்பேசறே!

பெண்

ஆமாங்கெ, முதல்ல என்ன ஒதஸ்சிட்டாரு,ஏன்யா கட்னபொம்பளய என்கண்ணு முன்னாலயே எட்டி ஒதக்கிறேன்னு என்வூட்டுக்காரு குறுக்கால வந்துமறிச்சாருங்க அவ்ளோ தாங்க, சாதிகெட்ட நாயி அவ்ளோ ஆங்காரமாடா உனக்குன்னு அங்கமுட்டு குடுக்கறதுக்கு வச்சிருந்த கட்டைய எடுத்து அவரயும் அடி அடின்னு அடிஸ்சிட்டாருங்க.குறுக்க பூந்து தடுக்க வந்த கடைக்காரரயும் அடிக்கப் போனாருங்க .பெரிய கும்ப கூடிப் போச்சுங்க. அப்புறம் அவெங்க மரிமகெங்காரன் வந்துதான் மாதலம்பாடியார இழுத்துனு போனாங்க.

டிஸ்பி

என்னான்னு சொன்னாங்க உன்னை

பெண்

சாதிகெட்ட நாயே, சக்கிலிநாயே, செத்தமாட்ட துன்ற உங்களுக்குல்லாம் அவ்ளோ ஆங்காரமாடான்னு அடிச்சாருங்க

டிஸ்பி

உன் புருஷன்காரன் என்ன பண்ணாருன்றதுக்காவ அப்டி அடிச்சாரு

பெண்

எங்கூட்டுப்ப் பொம்பளய ஏன்யா அடிக்கறீங்கன்னு வந்து அவருகையப் புடிச்சித் தடுத்தாறுங்க

காவலர்-2

ஒஹோ, உம் புருஷன்அவர் கையப்புடிச்சானா? அதான்!

டிஎஸ்பி

என்ன அதான்! என்னாமேன் அதான்!
கான்ஸ்டபிள்,அந்த அம்மாவோட கம்ப்ளயிண்ட எடுங்க!
எதுக்கும்மா உன்னை அந்த ஆள் எட்டி உதைச்சாரு?
அவரு எட்டி உதைக்கற அளவுக்கு நீ என்ன பண்ண?

பெண்

நான் ஒன்னும் பண்ணலீங்கய்யா!
எங்கூட்டுக்காரருக்கு ஒருகட்டு பீடியும் எனக்கு வெத்தலைசேரும் வாங்கிக்னு கடைக்கார் கிட்ட கொஞ்சம் சுண்ணாம்பு கேட்டனுங்கய்யா. அந்தப்பக்கம் சுண்ணம்பு டப்பா இருக்கு எடுத்துக்கோன்னாரு அவரு. சுண்ணாம்பு டப்பாவ மறைச்சா மாதிரி அங்க மாதலம்பாடியாரு நின்னுகினு இருந்தாரு. அய்யா கொஞ்சம் நவுந்துக்குங்கய்யான்னு சொல்லிட்டு கொஞ்சம் சுண்ணாம்ப எடுத்தேனுங்க. எப்படியோ தெரிய்ல அவர் மேல கை பட்டுடுச்சுங்க. அவ்ளோ தாங்க
உடனே வெறி வந்த மாதிரி செக்கிலி முண்டை கண்ணு தெரிய்லயாடி உனக்குன்னு எட்டி ஒதஸ்சிட்டாருங்க.

அப்போது தலைமைக்காவலர் ஃபைலை கொண்டு வந்து தர, டிஎஸ்பி ஃபைலை புரட்டிப்பார்க்கிறார்.

டிஎஸ்பி

உன்பேரு

பெண்

மரிக்கொழுந்துங்க

டிஎஸ்பி

உன் புருசன்பேரு

பெண்

சின்னப்பனுங்க

டிஎஸ்பி

சின்னப்பனா, சென்னப்பனா?

பெண்

சின்னப்பனுங்க

டிஎஸ்பி

கான்ஸ்டபிளைப் பார்த்துச் சொல்கிறார்.

அய்யா இங்கபாருங்க சென்னப்பன்னு எழுதி வச்சிருக்கீங்க

தம்பி, உன் பேரு

பெண்


புகழேந்திங்க, அவனுக்கு பேசவராதுங்க


டிஎஸ்பி


உன் சாதிய சொல்லித் திட்டினாங்களா


பெண்


ஆமாங்க! சாதியச் சொல்லித் திட்டினாங்கன்னு முந்தாநாள் கம்ப்ளெயிண்டு குடுக்கும்போதும் அந்த அய்யாகிட்டத் தெளிவா சொன்னேனுங்க


டிஎஸ்பி


அடிச்சாங்களா


பெண்

ஆமாங்க என்புருஷன கட்டைய எடுத்து அடிஸ்ட்டாங்க

டிஎஸ்பி


காயம் பட்டுச்சா


பெண்


ஆமாங்க அன்னிக்கி போலீஸ்ஸ்டேஷனுக்கு கம்ப்ளெயிண்ட் குடுக்கவந்தப்போ சமாளிச்சுகினு நொண்டி நொண்டி நடந்து வண்டாருங்க அப்புறம் வூட்டுக்குப் போயி உப்பையும் மஞ்சாவையையும் அரைச்சு பத்துபோட்டு வுட்டெனுங்க. மக்காநாளு பாத்தா காலு பொதபொதன்னு வீங்கிக்குச்சுங்க. இப்ப நடக்கக் கூட முடியலங்கே படுத்த படுக்கையா கிடக்காருங்க.


டிஎஸ்பி

ஆஸ்பத்திரிக்குப்போகலியா

பெண்

நாளக்கிதாங்க போவனும்

டிஎஸ்பி

கம்ப்ளயிண்ட வாப்பஸ் வாங்கச் சொல்லி மெரட்னது யாரு?

பெண்

எல்லாம் மாதலம்பாடியார் பங்காளி வகையறாதாங்க;
பேரு ராஜசேகருங்க; கூட் ரோட்ல உரக்கடை வச்சிக்றாருங்க.
வண்டிய காத்தெறக்கிவுட்டு, என் மவன் மென்னியப் புடிச்சிகிறாங்க.

டிஎஸ்பி

அடிச்சாங்களா?

பெண்

டேய் புகழு உன்னை அடிச்சாங்களாடா?

அவ்விளைஞன் என்ன சொல்வதென திகைத்துநிற்கிறான். அப்பெண் மீண்டும் உரத்தகுரலில் சைகை பாவனைகளோடு கேட்கிறாள்

டேய் புகழு உன்னைஅடிச்சாங்களாடா?

வாய்பேசவியலா அவ்விளைஞன் பலவித சப்தங்களையெழுப்பி பற்பல செய்கைகளோடு ஏதோ சொல்ல முயல்கிறான். வாயில் மண்ணள்ளிப் போட்டதாகவும் உயிர்நிலையைக் கசக்கியதாகவும் அவன் சைகைகள் மூலம் சொல்ல முயல்கிறான். அவனுக்கு அழுகை பீறீடுகிறது. அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பெண் அவன் சொல்வதெல்லாம் புரியவர புடவைத் தலைப்பினை சுருட்டிவாயில் வைத்தவாறு அழுகையை அடைக்க முயல்கிறாள்.

டிஎஸ்பி

நீங்க அப்படிப் போய் உக்காருங்க அப்புறம் கூப்புட்றேன்.

அந்தப் பெண்ணும் அவ்விளைஞனும் இடதுபுறத்திலுள்ள பெஞ்சினருகே சென்று தரையில் உட்காருகின்றனர்.

டிஎஸ்பி

கீழ உட்காராதீங்க. பெஞ்சு எதுக்கு போட்டுருக்கு. மேலஉட்காருங்க!

அவர்கள்பெஞ்சுமேல்அமர்கின்றனர்

அப்போது டீ எடுத்துக் கொண்டு டீக்கடைப் பையன்வருகிறார்.

டீக்கடைப்பையன்

சார் டீ

டிஎஸ்பி

அவங்க ரெண்டுபேருக்கும் டீ குடு!

டீக்கடைப்பையன்

சார் இது உங்களுக்குப் போட்டது நீங்ககுடிங்க அவங்களுக்கு வேற எடுத்தார்றேன்.

டிஎஸ்பி

பரவால்ல அங்க குட்றா!

டீக்கடைப்பையன்

இல்ல சார் இத நீங்க சாப்டுங்கசார்! அவங்களுக்கு வேற எடுத்தார்றேன்!

டிஎஸ்பி

குட்றான்னா

டிஎஸ்பி உரத்தகுரலில் சொல்லவும் மிரண்டு போன டீக்கடைப்பையன் அப்பெண்ணுக்கும் அப்பையனுக்கும் டீயைத்தருகிறார்..மீதியுள்ள டீயை டிஎஸ்பி மேசையில் வைக்கிறார். டிஎஸ்பி வேண்டாமென சைகைசெய்கிறார். மற்ற இரு போலீஸ்காரரிடம் டீயைத்தரஅவர்கள்வேண்டாமென சைகைசெய்ய டீக்கடைப் பையன் டீயைத் திருப்பியெடுத்துச் செல்கிறார். டீயைத் திருப்பி எடுத்துச் செல்வதைப் பார்த்த டிஎஸ்பி, டீக்கடைப்பையனைஅழைக்கிறார்.

டிஎஸ்பி

யேய் அந்த டீய எனக்கு குடு!

டீக்கடைப்பையன் ஓடிவந்து டீயைத்தரஅவர் டீயை வாங்கிக் குடிக்கிறார்.
பவ்யமாக நின்று கொண்டிருக்கும் இருகாவலர்களையும் ஏற இறங்கப் பார்க்கிறார்.

டிஎஸ்பி

ஏட்டு இங்கவாங்க! என்னங்க பண்ணிவச்சுருக்கீங்க
இதுஎஸ்சி, எஸ்டி, பி ஓ ஏ ஆக்டுலவர்ரனும். கம்ப்ளெயிண்ட் வந்தவுடனயே எனக்கு ரெஃபர் பண்ணியிருக்கனும். நான்- பெய்லபுள் அஃப்பன்ஸுங்க இது. ,நீங்க ஏதோ சாதாரண அடிதடி கேஸ் மாதிரி எழுதிவச்சிருக்கீங்க.

தலைமைக்காவலர்

சார் அவங்க அன்னிக்குஅவ்வளவு தெளிவா சொல்லல சார்

டிஎஸ்பி

என்னன்னு சொல்லி திட்னாங்கன்னு நீங்க தாங்க கேக்கனும்.
நீங்க ஏதோ பெட்டிஷன் குடுத்தா மாதிரி எழுதி வச்சுரிக்கீங்க! ஒதைச்சாங்க,கட்டையால அடிச்சாங்கன்னு சொன்னாங்கள்ல.
முதல்ல அடிபட்ட ரெண்டுபேரயும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போயி மெடிக்கல் ரிபோர்ட் வாங்கியிருக்கனும். என்ன பண்ணாரு உங்க இன்ஸ்பெக்டரு எங்கங்கே அவரு?

தலைமைக்காவலர்

கோர்ட்டுக்குப் போயிகிறாருங்கய்யா

டிஎஸ்பி

நீங்க இது சம்பந்தமா வேற என்னென்ன நடவடிக்கை எடுத்தீங்க

காவலர்-2

அந்தக் கடைகாரர விசாரிக்கலாம்னு போனங்கய்யா அவரு கடைப் பூட்டிருந்துது. கடையப் பூட்டிட்டு வெளியூருக்கு போயிருக்றதா சொன்னாங்கய்யா! அப்புறம்,அந்த மாதலம்பாடியாரு நம்பர வாங்கிஅவரு கூட பேசனனுங்கய்யா. ஸ்டேஷனுக்கு வரச் சொன்னனுங்கய்யா.

அவரு ஏதோ கல்யாண வேலையா வெளியூர் போயிருக்றதாவும் வர மூனு, நாலு நாள்ஆவும்னு சொன்னாருங்கய்யா.

டிஎஸ்பி

எதுக்கு அவர ஸ்டேஷனுக்கு வரச் சொன்னீங்க
சமாதானம்பேசறதுக்கா?

காவலர்-2

ஆமங்கய்யா

டிஎஸ்பி

சமாதானம்பேசி?

காவலர்-2

எல்லாம் ஊருக்கு உபகாரம் பண்லாமுன்னுதான்

டிஎஸ்பி

என்னது உபகாரமா?

காவலர்-2

இப்போ இந்தப்பிரச்சினையக் கிளப்புனமுன்னா ஊர்இருக்கிற இருப்புக்கு ஊரு ரெண்டு பட்டுடுமுங்க. அதனால சுமூகமாப் போகலான்னுதான்….

டிஎஸ்பி

ஏற்கனவே ஊரு ,சேரின்னு,ஊருரெண்டுபட்டுத்தான்யா கிடக்கு, தீண்டாமை வன்கொடுமைத்தடைச்சட்டமே ரெண்டுபட்டுக் கிடக்கிற ஊரை ஒன்னாக்குறதுக்குத்தான்யா. இந்தக் கேச ஃபைல் பண்றதால ஒன்னும் குடி முழுகிடாது.
யோவ் கான்ஸ்டபிள், உண்மையில நீங்க உபகாரம் பண்ணல; உபத்திரவம்தான் பண்றீங்க
ஏட்டு இங்க வாங்க, நீங்கஏட்டா இல்ல அவரு ஏட்டா?

தலைமைக்காவலர்

நாந்தான் சார்

டிஎஸ்பி

இந்த கம்ப்ளெயிண்ட் மேல உங்கள யாரு என்கொயரி பண்ண சொன்னது?

இந்த கம்ப்ளெயிண்ட் மட்டுமில்ல, தீண்டாமை வன்கொடுமையின் கீழவர்ற எல்லா கம்ப்ளெயிண்டுக்கும் என்குயரி ஆஃபீசர், என்னை மாதிரி ரேங்கில உள்ள ஒரு டிஎஸ்பிதான் தெரியுதா. யாரு அந்த என்குயரி ஆஃபீசருங்கறத எஸ்பி முடிவு பண்ணுவாரு.தெரியுதா?

தலைமைக்காவலர்

எனக்குத் தெரியும் சார்அந்தப் புள்ளாண்டானோட சொந்தக்காரருங்க யாரோ அந்த கிராமத்துல இருக்றாங்க போல சார்.அதாலஅவரு ஆர்வக் கோளாறாப் போயிட்டாருங்க!

டிஎஸ்பி

உங்க பார்வையில அவர் பண்ணது ஆர்வக்கோளாறு அப்படித்தானே!

இவங்க கம்ப்ளெயிண்ட் பண்ண விஷயத்தை, எதிர்தரப்பு ஆளுங்களுக்கு சொன்னதே நம்ப கான்ஸ்டபிள்தான். அது தெரிஞ்ச பிறகுதான் அவங்க கம்ப்ளெயிண்டை வாபஸ்வாங்குன்னு இவங்கள மிரட்டிருக்காங்க! இப்படி போட்டுக்குடுத்ததும் ஆர்வக்கோளாறுல பண்ணதுதானா?

தலைமைக்காவலர் பதில் சொல்லமுடியாமல் வழிகிறார்

சரிஇருக்கட்டும், திட்டினா செக்‌ஷன் வேற ;அடிச்சா இன்னொரு செக்‌ஷன்; கட்டையால அடிச்சா ஆய்தம் கொண்டு தாக்கறதுன்னு அர்த்தம்; அது வேற செக்‌ஷன். அந்த ஆள உடனே ஆஸ்பிட்டலுக்கு கூட்டிப்போயி மெடிகல்டெஸ்ட் எடுத்துருக்கனும். இதுக்கெல்லாம் அவங்களுக்கு ரிலீஃப் பண்ட் உண்டு. நிவாரணத்தொகை! பணய்யா பணம்! அதை உடனே அவங்களுக்கு வாங்கித் தர்ற ஏற்பாடு பண்ணியிருக்கனும்.

த பாருங்க, எஸ்சிஎஸ்டி பி ஓ ஏ, கம்ப்ளெயிண்டுன்னா கம்ப்ளெயிண்ட வாங்கினதுமே நீங்க எஃப் ஐ ஆரை ஃபைல் பண்ணிடனும் .என்கொயரி புண்ணாக்குன்னு நீங்க ஒன்னும் வெட்டத் தேவையில்ல. அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம். இதான் சட்டம் தெரியுதா?

கான்ஸ்டபிள்கள் தலையை அசைக்கின்றனர்

திருத்திஎழுதுங்க.அந்த அம்மா கிட்ட கரெக்டா கேட்டு வாங்கி எழுதுங்க! அவங்க சொல்றதயெல்லாம்அப்டியே எழுதுங்க

சாதியைச் சொல்லித் திட்டினது. காலால உதைச்சது. அவுங்க புருஷன கட்டையால அடிச்சது..எல்லாம் தெளிவா எழுதுங்க

அந்தப் பெண்ணை டிஎஸ்பி அழைக்கிறார். அப்பெண் வந்து மேசையருகில் நிற்கிறார்

எதனால அடிச்சாங்கம்மா உம் புருஷன

பெண்

கட்டையாலங்க

டிஎஸ்பி

கட்டையாலன்னா

பெண்

பொட்டிக்கடை பங்க்கதவை ரெண்டுகட்டைய வச்சி முட்டுக் குடுத்துர்ப்பாங்கங்க அந்த கட்டைய உருவி அடிச்சுட்டாருங்க

டிஎஸ்பி

பெரியகட்டையா இருக்கும்ல அது

பெண்

ஆமங்கய்யா

டிஎஸ்பி

போன் ஃப்ராக்சர்னு டாக்டர் சர்ட்டிஃபை பண்ணாருன்னா அது வேற செக்‌ஷன்.

அந்தப் பையன் வண்டியில காத்து புடுங்கிவுட்டான்ல அவன் மேல ரெண்டு செக்‌ஷனப் போடு

அவன் வாயில மண்ணள்ளிப் போட்டது உயிர்நிலையைக் கசக்குனது அதெல்லாம் அட்டெம்ப்ட்டு மர்டர்!அந்தசெக்‌ஷன்ல போடுங்க

இப்பயே கம்ப்ளெயிண்ட திருத்தி சரியா எழுதுங்க.

கம்ப்ளெயிண்ட் குடுத்த அவங்க வீட்டுக்கு ரெண்டு பேர உடனே செக்யூரிட்டி போடுங்க.

அப்புறம் எஃப் ஐ ஆர் போட்டு உடனே எஸ்பி ஆஃபீசுக்குஅனுப்புங்க. இப்பவே இப்பவே
எஸ்பி ஆபீஸுக்கு எஃப் ஐ ஆர் போய்ச் சேரணும்

டிஎஸ்பி உள்ளேசெல்கிறார்

காவலர் 2 அந்தப்பெண்ணைஅணுகுகிறார். டிஎஸ்பி உள்ளே செல்வதை உறுதிசெய்து கொண்ட காவலர், அந்தப் பெண்ணிடம் தாழ்ந்தகுரலில் பேசுகிறார்.

காவலர்-1

ஏம்மா உனக்குப் படிச்சுபடிச்சு சொன்னேனம்மா சாதிவிஷயத்தைச் சொல்லாதே சாதிவிஷயத்தைச் சொல்லாதேன்னு…சுமூகமாப் போயிடலாம்னு எத்தினிதடவ சொன்னேன்!இப்ப எல்லாத்தயும் பாழாக்கிட்டியம்மா!

இப்ப பாரு, விவகாரம் பெருசாவப் போவுது!

மாதலம்பாடியாரு அவங்க பங்காளி எல்லாரயும்கேஸ் போட்டு உள்ள தள்ளப் போறாங்கோ!
ஊர ரெண்டாக்கிட்டீங்களேம்மா

பெண்

ஊரு சேரின்னு ஏற்கனவே ஊரு ரெண்டாதாங்க இருக்குது !

காவலர் -2

இருந்தாலும் ஊரோட அமைதியச் குலைச்சீட்டிங்களம்மா

பெண்

ஊர் கொளத்துல குளிக்காத, ஊர் கிணத்துல தண்ணி மொள்ளாதேன்னு எங்களச் சொல்ற போது ஊரு அமைதி குலையலயா?

தீட்டுப்பட்டுடும் உங்க சகவாசமெல்லாம் அத்தோட இருக்கட்டும்னு ஒதுக்கிவைக்கும்போது ஊரு அமைதி குலையலயா?

கோயிலுக்குள்ள வராத, ஆடுவளக்காத, மீனுபுடிக்காதன்னு அழும்பு பண்றானுங்களே அப்பல்லாம் ஊரு அமைதி குலையலயா?

நாங்க வாயத் திறந்து பேசக் கூடாது என்ன ஏதுன்னு நியாயம் கேக்கக் கூடாது. அப்படிக் கேட்டா ஊரமைதி குலைஞ்சுடும்னா குலையட்டும்ங்க!

காவலர்

எம்மா எல்லாம் ஒரே ஊர்லதான கீறிங்க! இப்படில்லாம் பண்ணிட்டு அப்புறம் ஒருத்தர் மூஞ்சில ஒருத்தர் எப்படி முழிப்பீங்கோ!

பெண்

என்னாங்கய்யா பேசறீங்க
என்னா பேசறீங்க?

மாதலம்பாடியார் தங்கச்சியும் நானும் எட்டாவது வரைக்கும் ஒரேபள்ளிக்கூடத்துல ஒரேகிளாஸ்ல ஒன்னா படிச்சவுங்கதாங்க

தங்கச்சியோட கூடப்படிச்சவளாச்சே, அப்புறம் ஒருத்தர் மூஞ்சில ஒருத்தர் எப்படி முழிக்கிறதுன்னு என்னை எட்டி ஒதக்கிறதுக்கு முன்னால அந்த ஆளு யோசிக்கலியேங்கய்யா.

ஒரே ஊர்லதான கீறோம் ஒருத்தரு மூஞ்சில எப்படி முழிக்றதுன்னு என் வூட்டுக்காரன அம்மாம் பெரியகட்டையால அடிக்கறதுக்கு முன்ன அந்த ஆள்அப்பிடி நினக்கலீங்களய்யா!

அவங்க படனுங்க! ஜெயிலுக்குப்போவனுங்க! அப்பத்தாங்க புத்திவரும். மத்தவங்களுக்கும் பயம் வரும். இதாங்கநியாயம்!

ஆனா நீங்க அந்த நியாயத்தைப் பேச வேணாண்றீங்களா?

இந்த நியாயத்தையெல்லாம் பேசி என்னாகப் போகுதுன்னு முன்னமே தெரிஞ்சதாலோ என்னவோ,எம்புள்ளபொறக்கும் போதே வாய்பேசமுடியாத ஊமையாப் பொறந்துட்டான்.

இப்ப என்னயும் பேசவேணாம்னு சொல்றீங்களாய்யா!

உள்ளேயிருந்து வெளியே வருகிற டிஎஸ்பி, மருக்கொழுந்து சொல்வதை உன்னிப்பாகக் கவனித்தபடியே வருகிறார்.

டிஎஸ்பி

நீங்க பேசனும்மா வாயத்திறந்து பேசனும். யாருக்கும் பயப்படாம பேசனும்! உரத்துப் பேசனும். உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பத்திபேசனும். நடக்கிற அநியாயங்களைப் பேசனும்! தீண்டாமை வன்கொடுமையின் கீழேநடக்கிற குற்றங்கள் எல்லாமே போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகார்களா வர்றதேயில்லை. ஒருநூறு குற்றம் நடக்குதுன்னா பத்துகுற்றம்தான் புகார்களா போலீஸ் ஸ்டேஷனுக்கு வருது. அந்த பத்துகுற்றங்கள்ல ஒன்னு ரெண்டுகூட தண்டனை வாங்கிக் குடுக்கறஅளவுக்குப் போகறதில்ல. அதுக்குப்பலகாரணங்கள்.

எத்தனை காரணங்களிருந்தாலும் இதை நாம இப்படியே அனுமதிக்க முடியாது.

எல்லாக் குற்றங்களும் போலீஸுக்கு தெரியப்படுத்தப் படணும். அந்த குற்றங்கள் சட்டப்படி விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படனும்.

குற்றங்கள் தண்டிக்கப்படுகிற போதுதான் குற்றங்கள் நடைபெறுவது குறையும்.

தீண்டாமை வன்கொடுமைகள் ஒழியனும்! தீண்டாமைஒழியனும்.

அப்பதான் ஊருசேரிங்கற பிரிவினைகள் ஒழியும்.
உண்மையிலேயே

தீண்டாமை வன்கொடுமைத்தடைச்சட்டம், ரெண்டாக இருக்கிற ஊரை ஒன்னாக்குறதுக்கான சட்டம்தான்.

அம்மா! உங்கவீட்டுக்கு ரெண்டு போலீஸ்காரர காவல்போடச் சொல்லியிருக்கிறோம்! நாங்க சட்டப்படி என்னா செய்யனுமோ அதை நிச்சயம்செய்வோம். நீங்க பயப்படாம போயிட்டுவாங்கம்மா!

அப்பெண்ணும் இளைஞனும் வெளியேறுகின்றனர்.
டிஎஸ்பி இருக்கையிலமர்கிறார். மற்ற காவலர்களைப் பார்த்து சொல்கிறார்.

டிஎஸ்பி

என்னாங்க பண்ணி வச்சிருக்கீங்க? நீங்க பண்ண வேலைக்கு உங்கள உங்க இன்ஸ்பெக்டர எல்லாரயும் சஸ்பெண்ட் பண்ணலாம்! என்ன பண்ணிட்லாமா?

காவலர்கள் தலையைச் சொரிகின்றனர்.

அப்போது ஓர் இளைஞர் ஓடி வருகிறார்.

இளைஞர்

அய்யாஅய்யா

சுடுகாட்டுக்குப் போக வழிவிடமாட்டேன்னு ஊராளுங்க தகராறு பண்றாங்கய்யா!

வேற வழி தெரியாம பொணத்தை நடுரோட்ல எறக்கிவச்சுட்டு எங்காளுங்க நின்னுகினு இருக்காங்கய்யா!

டிஎஸ்பி

எங்கய்யா இது

இளைஞர்

பழையூர்கிராமம், ஏத்தம்,கூட்ரோட்லசார்

டிஎஸ்பி

ஏட்டு எங்கங்கஇது?

தலைமைக் காவலர்

எனக்குத் தெரியும் சார்! புதுசா ஃப்ளைஓவர் கட்டறாங்களே. அதுக்கு லெஃப்ட்ல திரும்பி ரெண்டு கிலோமீட்டர் உள்ளாறபோவனும் சார்! அங்க இந்த மாதிரி கம்ப்ளெயிண்ட் நிறைய்ய வருது சார்!

சரி கிளம்புங்க ஸ்பாட்டுக்குப் போகலாம்

அனைவரும் வெளியேறுகின்றனர்.

காட்சி-2

ஒப்பாரிப்பாடல் ஒலிக்கிறது.

பாடல்

அம்மாடியோ ஆத்தாடியோ
அப்பனோட தேர்போகுதோ!!
மூங்கியிரண்ட முன் வளைச்சு
முத மூங்கீய பின் வளைச்சு
அம்மாடியோ ஆத்தாடியோ
அப்பனோட தேர் போகுதோ!!
பாலு ஒழுக தீபம் போட்டு
பரக்கபரக்கத் திரியப் போட்டு
பாலு ஒழுகும்திண்ணையிலே
பாத்தழுவார் பிள்ளைகளே!
அம்மாடியோ ஆத்தாடியோ
அப்பனோட தேர்போகுதோ!!
நெய்யி ஒழுக தீபம்போட்டு
நெருக்கி நெருக்கித் திரியப் போட்டு
நெய்யி ஒழுகும்திண்ணையில
நின்றழுவார் பிள்ளைகளே!
அம்மாடியோஆத்தாடியோ
அப்பனோட தேர் போகுதோ!!

இறுதி மரியாதை செய்ய ஒருவர் மாலைஎடுத்துச் செல்ல பின்னால் சிலர்ஆடிக்கொண்டு வருகின்றனர். இறந்த உடலைக் குளிப்பாட்டபெண்கள் நீர்மாலை கொண்டு செல்கின்றனர்.

காட்சி-3

சாலையை மறித்தவாறு பலவிடங்களில் நாற்காலிகளைப் போட்டு அவர்கள் அமர்ந்துள்ளனர்.
ஒருவர் முதிய பெண்மணியை அழைத்துவந்து காலியான நாற்காலியில் அமரவைக்கிறார்.

இரண்டாமவர்

ஏம்பா வயசானவங்களல்லாம் எதுக்குப்பா இந்த மறியல் போராட்டத்துல கூட்டியாந்து ஒக்காரவச்சிருக்கறீங்க? திடீர்னு போலீஸ் வந்து அடிச்சான்னு வய்யி ஓடி ஒளியமுடியுமா அதால?

ஒருவர்

இப்படிக் கிழடுகட்டல்லாம் இருந்தாங்கன்னா, அடிதடி பண்றதுக்கு போலீஸ் கொஞ்சம் யோசிப்பான். அதனாலதான். நீகுந்துஆயா!

இரண்டாமவர்

அதாவது பொம்மனாட்டிங்கள முன்னால உட்டுட்டுஅவங்கசேலைத் தலைப்புல ஒளிஞ்சுக்கலாம்ன்றே. அதானே!

ஒருவர்

ஆமாம்.

இரண்டாமவர்

ப்பூ. இது ஒரு பொழப்பு

மூன்றாமவர்

யோவ், அங்கபொணம் நாறிக்னுகிதாம்..

மற்றொருவர்

நாறட்டும்யா நாறட்டும்ங்கிறேன்!

முதிய பெண்மணி

நாறட்டுமா ஏற்கனவே நாற ஆரம்பிடுச்சிறா. நேத்து மத்தியானத்துலருந்து அங்கதானகிது!

அடுத்தவர்

என்னா பேசறே!நேத்து விடிகாத்தால செத்தான்ஆயா!

24 மணிநேரத்துக்கு மேல ஆயிடுச்சுல்ல இனிமேல பாடி புழுபுழுக்க ஆரம்ப்பிச்சுடும்ஆயா!

இன்னொருவர்

அதுவும் சரிதான் அவனும் என்னாய்யாப ண்ணுவான். எடுத்துக்கிட்டு போறவழி பிரச்சினை ஆயிட்டதால அவனுங்க அப்படியே உட்டுட்டாங்க நேத்திக்கு எதுவும்நடக்கல.

மற்றொருவர்

ஏங்க, போற வர்ற வழிங்க, அங்க கொண்டாந்து வச்சிட்டானுங்க.

அதுவுமில்லாம தெக்கால இருந்து காத்தடிச்சா அவ்ளோ நாத்தமும் ஊருக்குள்ள வரும்ங்க.

அவனுங்கள எப்படிங்க அவ்ளோதூரம் எடுத்துனுவர உள்ளவுட்டீங்க?

அதற்கடுத்தவர்

தோடா? வேலுடையான் பம்ப்செட்டுவரைக்கும்தான் ஊரு! அதுக்கப்புறம் எல்லாம் அவங்க புழங்கற இடம்தான். இப்ப என்னன்னா வேலுடையான் பம்ப்செட்ட தாண்டி நம்பாளுங்க ஊட்டகட்டிகினானுங்க. என்னா பண்ணச்சொல்றே.

இன்னொருவர்

சரி அவனுங்க அப்படியே வந்துஅப்படியே போவப்போறாங்க அதுல என்னா பிரச்சினை?

அதற்கடுத்தவர்

டேய் விளக்கெண்ணெய் நேத்துல இருந்து என்னா பேசிக்னு இருக்றோம்ன்றது உனக்குப் புரியுதாஇல்லியா?
அவனுங்க சுடுகாட்டுக்குப் போற எல்லாவழியும் அடைபட்டுப் போச்சுடா. ஒருபக்கம் தண்ணிநிக்குது; இன்னொரு பக்கம் நாயக்கரு கரும்புத் தோட்டம் போட்டுகிறாரு.

முதியபெண்மணி

கரும்புத்தோட்டமா ?அது பொறம் போக்குல்ல!.

அதற்கடுத்தவர்

ஆமா ஆயா, அதுக்கு என்ன இப்போ

அடுத்தவர்

தெக்கயிருந்து வடக்கபோறதுக்கு இந்தரோடு ஒன்னுதான்வழி.

இந்தவழியா பொணத்தைத் தூக்கிகினு போவனும்னு சொல்றானுங்கோ போவ சொல்லலாமா?

மற்றொருவர்

அதெப்படி?

முதிய பெண்மணி

நம்ம சுடுகாடும் அவனுங்க சுடுகாடும் பக்கத்துல, பக்கத்துலதானே இருக்கு?

ஒருவர்

அதுதான் பிரச்சினையே

அதற்கடுத்தவர்

முந்திமாதிரி இல்லப்பா, அவனுங்களுக்குல்லாம் ரொம்ப துளுத்துப் போச்சுப்பா. அன்னிக்கு ஏழுமலை டெய்லரும் நானும் டாஸ்மாக்காண்ட ஒக்காந்து சரக்குசாப்புட்டுனுகிறொம். அந்த சிப்பாயிமவன், முனுசாமி இல்ல,கிட்ட வந்தான்,கொஞ்சம் தண்ணி எடுத்துக்கட்டுமான்னு கேட்டான், யார்றா இவ்ளோஅதிகாரமா கேக்கறதுன்னு நிமிந்து பாக்கறேன், அடுத்தவார்த்தைக் கூடப்பேசாமஅவன்பாட்டுக்கும் தண்ணியெடுத்து அவன் கிளாசுல ஊத்திக்கினு போயிகினே இருந்துட்டாம்பா!

அடுத்தவர்

நீவேற , நான் ஒரு குவார்ட்டர உட்டுட்டு ,கெழவி கிட்ட உக்காந்து மீனு வாங்கி துன்னுகினுகிறன், என்னா ஏதுன்னுகூடக் கேக்காம பக்கத்துல வந்து சப்புன்னு உக்காந்துகிறாம்பா!!

ஒருவர்

யாரு

அடுத்தவர்

அந்த அர்ஜூனன் மவன் பாக்யராஜு!

மற்றொருவர்

டாஸ்மாக்குல போயி இதயெல்லாம் பாக்கமுடியாது! இத்தயெல்லாம் வெளீய சொன்னம்னா உன்ன யாரு டாஸ்மாக்குக்குப் போவ சொன்னதுன்னு கேப்பாங்க!

அதற்கடுத்தவர்

தனித்தனி சுடுகாடு வேணா கேக்கலாம். ஆனா தனித்தனி டாஸ்மாக்கு கேக்கமுடியாது!

அடுத்தவர்

அத்தச் சொல்லு சிலநேரத்துல கட்டிங் சாப்புடறதுக்கு ஜோடி சேர எவன்னா வரானானுன்னு கடைவாசல்ல நின்னுகினு இருப்போம். பெரும்பாலும்அவனுங்கதான் வருவானுங்க. அவங்ககூட சேந்துதான் ஒரு குவாட்டர வாங்கிப் பங்கு போட்டு குடிஸ்ட்டுவருவோம்.

ஒன்னு சொல்றன்கேட்டுக்க. இப்பிடி ஒன்னா சேந்து கட்டிங் சாப்பிடும்போது நம்மாளு எவன்னா மாட்டினான்னுவய்யி, இந்த பிரிச்சு ஊத்தறதுல்ல நம்மாளுங்க ஒரு பிசுநாறித்தனம் பண்ணுவானுங்க பாரு! எப்பாஎப்பா!

ஆனாஅவனுங்கஅப்படியில்லப்பா ரொம்ப நீக்குப் போக்கா இருப்பானுங்க இன்னும் கொஞ்சம் ஊத்தட்டுங்களான்னு கேப்பான்.


ஒருவர்

எல்லாம் ஒரு பயம்தான்.

அடுத்தவர்

பயமுமில்ல ஒரு மயிருமில்ல.

அவங்கஆளுங்களுக்குள்ளெயே உக்காந்து சாப்பிடும்போதும் அப்பிடித்தான் இருப்பானுங்க. எந்த தகராறும் இருக்காது. பதவுசா சாப்புட்டு பதவுசாப் போவானுங்க. ஆனாநம்பஆளுங்க இருக்கானுங்களே ஓத்தா,எடுத்ததுக்கெல்லாம் தகராறு! வந்தமா, ஆளுக்கொருகட்டிங் சாப்ட்டோமா
போனோமான்னே இருக்கவேமாட்டானுங்க!


மற்றொருவர்

ஆமாடா!!

அதுதீட்டு, இதுதீட்டு, அங்கவரக்கக் கூடாதுன்னு, இங்கவரக் கூடாதுன்னு கோடுபோட்டு, புடுங்கிமாதிரி இங்கதான் பேசிகினு இருக்கலாம். ஆனாடாஸ்மாக்குக்கு போனா எல்லா ம்ஒன்னாதான் ஈஸிக்கனும்!

ஒருவர்

நீஎன்னாஅவங்களுக்கு சப்போர்ட்டாவேபேசினுகிறே?
என்னதான் இருந்தாலும்அவங்க வேற, நாமவேற!

இன்னொருவர்

என்னா மசுரு அவங்க ,இவங்க?பஸ்லபோறோம்; டிரெயின்லபோறோம்; கும்பலோடு கும்பலா திருப்பதிக்குப் போறோம், பழனிக்குப் போறோம் ,நாகூருக்குப் போறோம்,வேளாங்கண்ணிக்குப் போறோம்அங்கல்லாம் அவங்க இவங்கன்னா பாத்துக்கினுகிறோம்.

இங்கமட்டும் என்னடாஅவங்கஇவங்கன்னு நொட்டம்பேசிக்கினு?

ஒருவர்

ஏன் அவங்க இவங்கன்னு பேசாம, ஒன்னுமொன்னா ஆயிக்கலாம்னு சொல்றியா? இது ஊருடா அப்பிடித்தான் பேசுவோம்.

இன்னொருவர்

இவ்ளோ நியாயம் பேசறாரே ஏன் இவருபொண்ணை அவங்களுக்குக் கட்டிகுடுக்கச் சொல்லுங்களேன் பாப்பம்!

அடுத்தவர்

டேய் பொறம்போக்கு, யாருகிட்ட என்னடா பேசறே?

மற்றொருவர்

சரிவுடுவுடு அவன் என்னா அப்பிடிப் பேசிட்டான்! தோபார்டா நல்லா தெரிஞ்சுக்க! என் பொண்ணு இப்பநர்சிங் படிக்கிறா அவளே ஆசப்பட்டு யாரையாவது கட்டிக்கனும்னு சொல்றான்னு வையி நான்அதுக்குக்குறுக்க நிக்கமாட்டேன். அந்தப்பையன் எந்த சாதியா இருந்தாலும் நான்அதுக்கு மாட்டென்னு சொல்லமாட்டேன். அவகட்டிக்க ஆசப்படறது அவங்கஆளா இருந்தாலுஞ்சரி. சத்தியமா நான் குறுக்க நிக்கமாட்டென்!

ஒருவர்

ஆமா இவருஅவரு பொண்ணஅவங்களுக்குகட்டிவெப்பாரு, நாங்க பாத்துக்கினு சும்மா நிப்போம்!

டேய் உனக்குப் பொறந்துட்டாங்கறதுக்காக, உன்பொண்ண நீ எதுவேணாஞ் செய்வியாஅவஎங்ககுலம்டா, எங்ககொத்துடா!

உன்னை சும்மாவிட்டுருவோமா நாங்க
ஓத்தா, குடும்பத்தோட தூக்கி சொருவிடுவோம்!

பேசிக்கொண்டே ஆவேசமாக அவரை அடிக்க நெருங்குகிறார். மற்றவர்கள் சுதாரித்துக் கொண்டு அவரைத் தடுத்து விடுகின்றனர்.

மற்றொருவர்

ஆமா இவரு எங்கள குடும்பத்தோட தூக்கிசொருவுவாரு நாங்க அப்ப ஐஸ்புரூட் சப்பிகினு இருப்போம். போடாங்!

அடுத்தவர்

ஏம்பா இவன்பொண்ண உன் குலம் கொத்துன்னு சொல்றியே! இந்தவருசம் அந்தபொண்ணுக்கு காலேஜ்பீஸ் கட்டேன் பாப்பம் . ஒரு லட்சத்து எழுபதனாயிரம் ரூவா!

மற்றொருவர்

அந்த நாயி எதுக்குடா என் பொண்ணுக்கு பீஸ் கட்டனும்

பெருங்கூச்சல், தள்ளுமுள்ளு, களேபரம்ஏற்படுகிறது. முதிய பெண்மணி ஒருவரை தன் கைத்தடியால் இழுத்துப்பின் தள்ளுகிறார். பின் மெதுவாக கூச்சல் அடங்குகிறது.

மற்றொருவர்

தோ பார்! ஏதோ ஊர்ப் பெரியவங்க கூப்பிட்டீங்களேன்னு வந்து உக்காந்துகினுகிறன். இவன் இப்படியே பேசினுகிறான்னு வய்யி , மயிராச்சேன்னு எழுஞ்சிப் போய்கினே இருப்பேன்.

கூட்டத்தில் அமர்ந்திருக்கும் இன்னொருவர் திடீரென அங்கிருக்கும் திட்டின் மீது ஏறிப் பார்க்கிறார்

இன்னொருவர்

எப்பா போலீஸ் ஜீப்பு வருதுப்பா!

ஒருவர்

தோபாருங்க, போலீஸ் வருது! ரெண்டு நாளா இருக்குற வேல வெட்டிய உட்டுட்டு என்னத்துக்கு இங்க உக்காந்துருக்கோம்?.

எல்லாம் ஒரே மாதிரிபேசனும்! எவனும்இடைஞ்சு பேசக்கூடாது! அப்படி இடைஞ்சுபேசறதா இருந்தா இப்பவே மரியாதையா இடத்த காலி பண்ணிடுங்க

இருவர்எழுந்து செல்கின்றனர்.
டிஎஸ்பியும் கோட்டாட்சியரும் வருகின்றனர். ஒரு சிலர் எழுந்து நிற்கின்றனர். சிலர் அப்படியேஅமர்ந்து இருக்கின்றனர்.

டிஎஸ்பி

அப்படியே உக்காருங்க உக்காந்தே பேசுவோம்.

கோட்டாட்சியர்

த பாருங்க நேத்து உங்ககிட்ட சொன்னதயேதான் மறுபடியும் சொல்றேன் ;பொணத்தை அடக்கம் பண்ணாம இன்னும் வச்சிருக்கமுடியாது. பிரஸ்ல மீடியாவுல எல்லாம் வந்து, பிரச்சினை ரொம்பப் பெருசாயிடுச்சுங்க!

சிஎம்வரைக்கும் போயிடுச்சுங்க.

மற்றொருவர்

ஆர்டி ஓ மேடம் ! சி.எம்வரைக்கும்போவட்டும்ங்க! போவட்டும்னுதானே, இவ்வளோவும்பண்றோம்.

கோட்டாட்சியர்

ஐயா,எல்லாரும்கவனிங்க!இந்தகிராமத்துக்கு ,ஒருநல்லபேர்இருக்குங்க. கழிப்பறைவசதிகள வ்பராமரிக்கிறதுல, பொதுசுகாதாரத்துல, நூறுநாள் வேலைத்திட்டத்த செயல்படுத்தறதுல,பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்திடற பிள்ளைங்கள மறுபடியும் பள்ளிக்கூடத்துல கொண்டாந்து சேக்கறதுல, இப்படிப் பலசோசியல் இண்டிகேட்டர்ஸ்ல அதாவது சமூக வளர்ச்சிக் குறியீடுகள்ல உங்க ஊருக்கு ரொம்ப நல்லபேரு இருக்கு,அதக் கெடுத்துடாதீங்க. தயவு செய்து உங்களைக் கையெடுத்துக் கும்புடறேன். இந்த வழியா இறுதி ஊர்வலம் போகறத பிரச்சினையாக்காதீங்க!

மற்றொருவர்

மேடம், இந்தச் சுடுகாட்டுப் பாதைல்லாம் சோசியல் இண்டிகேட்டர்ல வராதா அதாவது சமூகவளர்ச்சிக் குறீயீட்டுல வராதா?? இல்ல தெரியாம கேக்குறன்!

இப்படிப் பேசியவரை நாட்டாமை தோரணையில் ஒருவர் முறைத்துப் பார்க்கிறார். மற்றொருவர் பவ்வியமாக அமர்கிறார்.

ஒருவர்

மேடம்! அது நடக்காதுன்னு தெளிவாசொல்லிட்டோமுல்ல அப்புறம்என்னபேசிகிட்டு. ரெண்டுநாளா இருக்குறவேல வெட்டியல்லாம் உட்டுட்டு எதுக்கு இந்த ரோட்லயே உக்காந்துனு இருக்கிறோம்? அப்படியே அந்தபொணத்த இந்தவழியாதான்எடுத்துக்கிட்டு போகனும்னாஅதுக்கு ஒரே ஒரு வழிதான்இருக்கு.
எங்களையெல்லாம் பொணமாக்கிட்டு அதைச்செய்யுங்க!

டிஎஸ்பி

என்ன? ஐயாவேபேசிக்கிட்டுஇருக்காரு! ஊர்பிரசிடெண்டுஎங்கே!

ஒருவர்

ஏன், அவங்க வந்து என்னா பண்ணப் போறாங்க? எதுவா இருந்தாலும் எங்க கிட்டசொல்லுங்க

கோட்டாட்சியர்

இல்ல, பிரசிடெண்டு எங்கன்னு கேட்டாருங்க

ஒருவர்

டேய் கூப்புட்றா தனலட்சுமிய ! ஊர் பிரசிடெண்டு என் மருமகள்தான்.

ஓர் இளம்பெண்வருகிறார். டிஎஸ்பிக்கும் கோட்டாட்சியருக்கும் வணக்கம்செய்கிறார். அவரை டிஎஸ்பியும் கோட்டாட்சியரும் தனியே அழைத்துச் செல்கின்றனர்.

ஊராட்சித் தலைவர்

மேடம், நான் உங்கிட்ட இன்னும் என்ன சொல்றதுன்னே தெரியலங்க!

கோட்டாட்சியர்

இல்ல என்கிட்ட சொன்னதையெல்லாம், டிஎஸ்பி கிட்டசொல்லுங்க. சார் இவங்க தனலட்சுமி, ஊரு பிரசிடெண்டு. உங்ககிட்ட பேசிகிட்டுருந்தாருல்ல மாணிக்கவேல், அவரோடமருமகள்.

ஊராட்சித்தலைவர்

சார், ஊர் ஜனங்கள மீறி அவங்க சொல்றத மீறி என்னால எதயும் செய்யமுடியாது சார்.

டிஎஸ்பி

ஒரு பிரசிடெண்டுங்கற முறையில உங்களுக்குச் சிலகடமைகள் உண்டு இல்லையா?

ஊராட்சித் தலைவர்

சார், இவங்க பண்றது ரொம்பஅநியாயம்னு எனக்கே நல்லா தெரியுது சார்! இவங்கள தூண்டிவிடறேதே எங்க மாமனார்தான் சார். எங்க வீட்டுக்காரரு, மூத்தாரு,கொழுந்தனாரு,எல்லாரும்அவருக்குஉடந்தைங்க! அவங்கள மீறி என்னால ஒன்னும் செய்யமுடியாது சார்! மேடம், நீங்க சொல்லுங்க மேடம்!
ஊராட்சித் தலைவர் திரும்பிச்சென்றுஉட்கார்ந்திருப்பவர்களிடம்சொல்கிறார்.

ஊராட்சித் தலைவர்

சித்தப்பா, நான்அவங்க கிட்டதெளிவாசொல்லிட்டேன். இந்தவழியாஅவங்க பொணத்தை எடுத்துகிட்டு போவமுடியாதுன்னு தெளிவா சொல்லிட்டேன்.

உட்கார்ந்திருப்பவர்

நல்லது

பிறகு முதிய பெண்மணியை அணுகுகிறார்.

ஆயா நான் அவங்ககிட்ட தெளிவா சொல்லிட்டன் இந்தவழியா அவங்க பொணத்த எடுத்துனு போவமுடியாதுன்னு தெளிவா சொல்லிட்டன்.

ஆயா

என்னாது என்னாது என்னாது??

ஊராட்சித் தலைவர்

இந்த வழியா அவங்க பொணத்த எடுத்துனு போவமுடியாதுன்னு தெளிவாசொல்லிட்டன் ஆயா.

ஆயா

மகராசி!

பிறகு ஊராட்சித் தலைவர் தனது மாமனாரை அணுகுகிறார். பவ்யமாக சேலையை இழுத்துப் போர்த்திக்கொண்டு பேசுகிறார்

ஊராட்சித் தலைவர்

மாமா! அவங்க கிட்ட தெளிவா சொல்லிட்டன் மாமா. இந்தவழியா பிணத்தை எடுத்துகிட்டு போகமுடியாதுன்னு தெளிவா சொல்லிட்டன் மாமா!

ஊராட்சித்தலைவர் தனலட்சுமியை, டிஎஸ்பியும் கோட்டாட்சியரும் தனியாக அழைத்துப் பேசுகின்றனர்.

டிஎஸ்பி

நீங்க ஒரு வேலை மட்டும்பண்ணுங்க
கிராமசபையை கூட்டுங்க கூட்டி இந்த கிராமத்துக்கு ஒரு சமத்துவ மயானம் வேணும்னு ஒரு தீர்மானத்தை நிறைவேத்துங்க!

பிரசிடெண்ட்

சார் அவங்கள மீறி நான் எதுவும்செய்யமுடியாதுசார்

கோட்டாட்சியர்

நீ ஏம்மா அவங்க கிட்டல்லாம் இதப்பத்தி பேசிக்கிட்டு இருக்கிறே!

தண்ணி தொட்டி கட்டறது சம்பந்தமா கிராமசபையை கூட்டனும் கலெக்டர் வேறகூட்டச் சொன்னாருன்னு சொல்லி ஒருதேதிய ஃபிக்ஸ் பண்ணுங்க மத்ததெல்லாம் நாம பாத்துக்கலாம்.

ஊராட்சித் தலைவர்

நீங்கதான் சிக்கல் வராம பாத்துக்கனும்

டிஎஸ்பி

த பாரும்மா

நீங்க கிராம சபைய கூட்டினீங்கன்னா சமத்துவ மயானம் சம்மந்தமான தீர்மானத்துக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமா?

ஊராட்சித் தலைவர்

சார் சிக்கலே எங்க மாமனாரும் வீட்டுக்காரரும்தான் சார்! ஊர் ஜனங்கஅவங்களுக்கு கொஞ்சம் பயப்படுவாங்களே தவிர அவங்க சொல்றதுக்கெல்லாம் தலைய ஆட்டிகிட்டு இருக்கமாட்டாங்க.

காதும் காதும் வச்ச மாதிரி கொஞ்சம் கிரவுண்டு ஒர்க்பண்ணோ முன்னா தீர்மானத்துக்கு பெரும்பான்மை ஆதரவு வாங்கிடலாம் சார்!

டிஎஸ்பி

அப்புறமென்ன சமத்துவ மயானத்துக்கான தீர்மானத்தை நிறைவேற்றுங்க!

கவர்ன்மெண்ட் பத்துலட்ச ரூபா நிதிதர்றாங்க அதுதெரியும்ல?

ஊராட்சித் தலைவர்

தெரியும் சார்.

ஊராட்சித் தலைவர் விடைபெறுகிறார். மறியல்செய்து கொண்டிருப்போரிடம் டி.எஸ்.பி உரத்தகுரலில் பேசுகிறார்.

டிஎஸ்பி

த பாருங்க, அவங்க பொணத்த இந்த வழியாத்தான் எடுத்துனு போவனும்னு கறாராச்சொன்னாங்க! நீங்க யாரும்கேக்கல. அதனால என்ன பண்ணாங்கன்னா நாங்கபொணத்தை அடக்கம் பண்ணலே நீங்களே பண்ணிக்குங்கன்னு ரோட்டுலயே போட்டுப் போயிட்டாங்க

இன்னொருவர்

இது என்னாங்க கதையாஇருக்குது? இந்தவழியில்லன்னா என்ன வேற வழியாஇல்ல ? கட்டுமரத்துல வச்சுகட்டி அப்படியே ஏரிவழியாவேப் போவலாமே. ஒருகாலத்துல அப்பிடில்லாம்தான் போய்கிறாங்க. அப்பிடியில்லன்னா தடியனூர்போயி அப்படியே சுத்தினுவந்துடலாம் என்னாகூட ஒரு அஞ்சுகிலோ மீட்டர்ஆவும்அவ்ளோதானே?

டி.எஸ்.பி

ஏங்க ஆவ்ற கதையப் பேசுங்க! இப்ப அவங்கபாடைய அப்டியே நடுரோட்டுல வச்சுட்டுப் போயிட்டாங்க. எல்லாம் இப்போ போலீஸ் கஸ்டடிக்கு வந்துடுச்சு. பொணத்தை எரிக்கறதோ புதைக்கறதோ எல்லாம் எங்க கஸ்டடியிலதான் நடக்கப்போவுது நாங்க பிணத்தைதூக்கிக்கிட்டு இந்த ரோட்டு வழியாத்தான் போகப்போறோம். பிரச்சினை பண்ணாம ஒத்துழைங்க!அப்படி இல்லன்னா நாங்க உங்கமேல சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

மறியலில்அமர்ந்திருப்பவர்களிடம்சலசலப்புஏற்படுகிறது. அம்முதிய பெண்மணிக்கு மருள் வந்து விடுகிறது. தலையை விரித்து விட்டுக் கொண்டு ஆடுகிறார்.

முதியபெண்மணி

டேய் இந்த வழியா சேரிப்பொணத்த எடுத்துனு போவக்கூடாதுடா?
எடுத்துனு போவக்கூடாது!!
ஆத்தாவுக்கு ஆவாதுடா!
தீட்டாயிடும்! தீட்டாயிடும்டா, தீட்டாயிடும்!!

டி.எஸ்.பி, அம்முதிய பெண்மணியை நோக்கி கத்துகிறார். முதிய பெண்மணி அமைதியாகிவிடுகிறார்.

டி.எஸ்.பி

ஏய்!கெழவி நீ பேசறது சட்டவிரோதம்.

தீட்டு கீட்டுன்னு பேசனதுக்கு உன்னை இப்பவே உள்ளதள்ளனும்.

தோ பாருங்க நாங்க பொணத்த இந்தவழியாத்தான் எடுத்துட்டுப்போகப்போறோம். மரியாதையாஇடத்தைக்காலிபண்ணுங்க. அப்படி எதனா பிரச்சினை பண்ணீங்க உங்க எல்லாரயும் எஸ்சிஎஸ்டிபிஓ.ஏஆக்ட்டுல அர்ரெஸ்ட் பண்ணிடுவேன். இந்தக் கெழவியயும் சேத்து. அப்புறம் பெயில் கூடக்கிடைக்காது ஆமாம். கான்ஸ்டபிள்ஸ் பாடிய எடுத்துட்டு வரலாம் வாங்க.

டிஎஸ்பி, கோட்டாட்சியர்மற்றும் போலீஸார் வெளியேறுகின்றனர். மறியல் செய்வோர்அப்படியே அமர்ந்திருக்கின்றனர். வெளியே சென்ற போலீஸார் பிணத்தை எடுத்து வருகின்றனர்.

டி எஸ்பி, கோட்டாட்சியர் பிற் போலீஸார் தூக்கிச்செல்ல சவ ஊர்வலம் மறியல் செய்வோரைக் கடந்துசெல்கிறது. மறியல் செய்வோர் திகைத்துப் போய் செயலற்று நிற்கின்றனர்.

இன்னொருவர்

எப்பா ஆர்டி ஓ மேடமே பொணத்த தூக்கினு வர்றாங்கப்பா

அடுத்தவர்

ஆமப்பா , டிஎஸ்பியும் கூடத்தூக்கினு வர்றாருப்பா

காட்சி-4

மேல் மேடையில் சிதை உருவாக்கப்பட்டு உடல் இறக்கிவைக்கப்படுகிறது.

பாடல்:

சமரசம் உலாவும் இடமே
நாம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில்மேலோரென்றும்
தாழ்ந்தவர் கீழோரென்றும்
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான்
சமரசம் உலாவும் இடமே
நாம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும்எங்கே
ஆவிபோனபின் கூடுவார்இங்கே
ஆகையினால் இதுதான்
நாம்வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

……………………………

டி.எஸ்.பி

ஆர்.டி ஓ மேடம் அவங்க குடும்பத்துல இருந்து யார்னா வந்துருக்காங்களா?

ஆர்.டி.ஓ

அவங்க பிள்ளைங்க வந்துருக்காங்க.. கூப்பிடுங்கஅவங்களை!

மூவர்வருகின்றனர்.

ஹெட்கான்ஸ்டபிள் கொள்ளிவைக்கிற கட்டையைஅவர்களில் ஒருவரிடம் தருகிறார்.

அவர் அதை வாங்கிக் கொண்டு அமைதியாக நிற்கிறார்.

கான்ஸ்டபிள்

ஏம்பா நிக்கிறே கொள்ளிவைப்பா!

மகன் – 1

அய்யா இவ்ளோ தூரம் பண்ணீங்க, நீங்களே கொள்ளியையும் வச்சிடுங்களேன்!

டி.எஸ்.பி

என்னப்பா சொல்றே நாங்கள்லாம் கொள்ளி வைக்கமுடியாது, அது சட்டவிரோதம். சொந்த பந்தங்கள்லாம் யாருமில்ல அனாதைப் பிணம்னு முனிசிபாலிடியோ,ஊராட்சியோ, அறிவிச்சாங்கன்னா, அதுக்கப்புறம்தான் நாங்க இறுதிச்சடங்கு செய்யலாம்.

மகன் – 2

இன்னைக்கி தூக்கிட்டு வந்து இங்கவச்சிட்டீங்க. நாளைக்கு இன்னொரு சாவுவுழுதுன்னு வச்சிக்குங்க. அதுக்கும் நீங்கவருவீங்களா?

டி.எஸ்.பி

நீங்க கம்ப்ளெயிண்ட் பன்ணீங்கன்னா நிச்சயம் நாங்கவருவோம்!

மகன் – 1

அப்போ,இனிமே சேரியில யார்னா செத்துப்போனா, மோளம் அடிக்கிறவனுக்கும் துட்டிசொல்றவனுக்கும் சொல்ற மாதிரி போலீஸுக்கும் தகவல் சொல்லனும்கறீங்க!

கான்ஸ்டபிள்

பிரச்னை வேணாம்பா, கொள்ளிய வைங்கப்பா!

மகன் – 2

சார், நாங்க பிரச்னைபண்ணல. எங்க பிரச்சினை என்னான்னு புரியவைக்கிறோம்; தெரியவைக்கிறோம்.

கான்ஸ்டபிள்

உங்களுக்கு ஆதரவா இருக்கணுமுன்னுதான் நாங்களேபொணத்த தூக்கிகிட்டு வந்தோம்.

மகன் -1

ஊர்வழியா நீங்கதானே தூக்கிட்டுவந்தீங்க! எங்கள தூக்கிட்டு
வர வுடல்லல்ல.

மகன் -2

நீங்க செஞ்சது உதவியே இல்ல. நீங்களே பொணத்தை தூக்கிட்டு வந்ததால எங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்ல.

நியாயமா,ஊர்வழியா நாங்கதான் பொணத்தை தூக்கிட்டு வந்திருக்கனும்;நீங்க அதுக்கு பாதுகாப்பு குடுத்துருக்கனும்.

ஒன்னு தெரிஞ்சுக்கங்கய்யா . பொணத்தை தூக்கினு வந்து அடக்கம் பண்ணோம்னு நீங்க வேணா ஃபிலிம் காட்டிக்கலாம்..மத்தபடி ஒரு சுக்குக்கும் இது ஒதவாது.

கான்ஸ்டபிள்

என்னப்பா இப்படில்லாம் பேசறீங்க?

டி.எஸ்.பி

இப்ப இருக்குற சூழல்ல எங்களால இதைத்தான் செய்யமுடியும்;அதைத்தான்செஞ்சோம்.

அதுக்கு மேல என்னபதில் சொல்றதுன்னு எங்களுக்கு தெரியல!உங்களோட எதிர்பார்ப்பை நாங்க நிறைவேத்தாம போயிருக்கலாம். ஆனா எங்களுக்குன்னு சிலபொறுப்புகள்,கடமைகள் இருக்குல்லியா?

மகன் – 1

என்னங்ககடமை? நாங்க பொணத்த நடுரோட்ல போட்டுட்டு போனதாலதானே நீங்கவந்தீங்க! இல்லாட்னாவந்துருப்பீங்களா?

டி.எஸ்.பி

உண்மைதான். நீங்கஉங்கஉரிமைக்காகபோராடினீங்க.

அதனாலதான் நாங்கவந்தோம். நீங்க பிரச்சினை வேணாம்னு பொணத்த வேற வழியில தூக்கிட்டு போயி அடக்கம் பண்ணிருந்தீங்கன்னா எங்களுக்குத் தெரிஞ்சே இருக்காது நாங்களும் வந்திருக்கமாட்டோம்.

மகன் – 1

அப்போ, பட்டியல் சமூகத்தோட பிரச்சினைகளை பட்டியல் சமூகம்தான் தீத்துக்கனும்னு சொல்லவர்றீங்களா?

தலைமைக்காவலர்

இந்த இடத்துல நாடகத்தை கொஞ்சம்நிறுத்துவோம். பட்டியல் சமூகத்தோட பிரச்சினைகளை பட்டியல் சமூகம்தான் தீத்துக்கனும்மான்னு கேக்கறாங்க.

குழு

பட்டியல் சமூகத்தோட பிரச்சினைகளை பட்டியல் சமூகம்தான் தீத்துக்கனும்மான்னு கேக்கறாங்க.

குழு-1

அதிகாரவர்க்கம் முறையாக நடந்தால் அதாவது அரசு அதிகாரிகள் சரியாக இருந்தால் பட்டியல் சமூக மக்களூக்கு நீதி கிடைத்துவிடும் என்பது உண்மைதான். ஆனால் எல்லாஅதிகாரிகளும்அப்படி இருந்து விடுகிறார்களா?

குழு-2

சமூகநீதியை செயலாக்கும் பொறுப்பு அதிகாரவர்க்கத்திற்கு மட்டுமே உரியதா?

குழு-3

சமூக நீதியை செயலாக்கும் பொறுப்பை அதிகாரவர்க்கத்திடமே விட்டுவிடலாமா?

குழு-4

சேரி , ஊர், என இரண்டாக இருக்கும் சமூகத்தை ஒன்றாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கிறது.

குழு

சட்டங்கள் அளிக்கும் உரிமைகளைப் பாதுகாக்க நாமும் பங்கெடுப்போம்.
கரம் சேருங்கள் ஒன்றிணையுங்கள் சமத்துவம்காண்போம்!
தீண்டாமைக் கொடுமைக்கு கொள்ளிவைப்போம்!


Art : julietseignious

பிரளயன் .
பிரளயன் .
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • நீதிமணி கதைகள்

    நீதிமணி கதைகள்

    May 1, 2026
  • கே. கணேஷ்ராம் கவிதைகள்

    கே. கணேஷ்ராம் கவிதைகள்

    May 1, 2026
  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    May 1, 2026
  • வன்புணர்வு எனும் பேரின்பம்

    வன்புணர்வு எனும் பேரின்பம்

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (19)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (106)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (19)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • நீதிமணி கதைகள்

    நீதிமணி கதைகள்

    May 1, 2026
  • கே. கணேஷ்ராம் கவிதைகள்

    கே. கணேஷ்ராம் கவிதைகள்

    May 1, 2026
  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (19)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (106)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top