சபாபதி பேருந்தின் இருக்கை நுனியில் ஒட்டிக் கொண்டிருந்தான். அவனது அவசரம் புரியாத ஓட்டுநர் ஒரு புளியமரத்தைக் கூட விடாமல் பேருந்தை நிறுத்த, ஜனங்களை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டுக் கூப்பிட்டு ஏற்றிக் கொண்டிருந்தார் நடத்துநர். ஏற்கனவே பேருந்து நிரம்பிக் கிடந்தது. மூன்று பேர் இருக்கைகளில் நான்கு பேர் உட்கார்ந்திருக்க, இருக்கைகளுக்கு இடையிலிருந்த சந்துகளில் ஐந்தைந்து பேர் வரை நின்று கொண்டிருந்தனர்.
“உடனே கிளம்பி வரவும்…” என முனியம்மாவின் கணவன் ஊரப்பன் எழுதிய ஒற்றை வரியோடு மஞ்சள் நிறத் தபால் அட்டையை அன்று காலையில் தபால்காரர் அவனிடம் கொடுத்ததுமே சபாபதியின் மனசு தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கிவிட்டது.
என்னவாக இருக்கும் என யோசிக்கவே தேவையில்லாமல், அது முனியம்மாவைப் பற்றிய புகாராகத்தான் இருக்கும் என அவனுக்குத் தெரியும். ஆனாலும் மனசு கிடையாய்க் கிடந்து தவித்தது.
திருமணமான முதல் மாதத்தில் மூன்று முறை விருந்துக்கு வந்து போகும்போதெல்லாம் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை.
அடுத்த மாதம், சபாபதியும், அவன் மனைவியும், பார்வதியம்மாவுடன் அங்கே போனபோது அரசல் புரசலாக மாமியார்க்காரி மட்டும் குத்திக் குத்திப் பேசிக் கொண்டிருந்தாள்.
“இன்னாத்தப் பொண்ண வளத்தீங்களோ… எள்ளுனா எண்ணயா நிக்காகாட்டி போவுது… ஒடம்புல ஒரு சுறுசுறுப்பும் இல்லியே… எப்பவும் திம்மாக்கு மாரியே கீதே…”
“எத சொன்னாலும் ஈ…னு பெல்ல காட்டிகினு நிக்கிது… கல்பூரம் மாரி கப்னு புட்ச்சிக்க மாட்டன்து…”
“மாட்ட மேய்க்கிது… சாமானு கெய்வுது… துணிய தோய்க்கிது… வேலலாம் நல்லாதாஞ் செய்து… ஆனா எல்லாத்தியுமே சொன்னாதான செய்து… தானா செய்ற புத்தி இல்லியே…” எனப் புகாராக அடுக்கிக் கொண்டிருந்தாள் மாமியார்.
“ஊரும் புதுசு… ஆளுங்களும் புதுசு… ஒரே பொண்ணுனு சாலாக்கா வளத்துட்டம்… போவப் போவ செரியா பூடும்…” என்றாள் பார்வதியம்மா.
இவர்கள் பேசுவதைக் கூட ஈ என இளித்தபடியே கேட்டுக் கொண்டிருந்த முனியம்மாவைப் பார்த்து பல்லைக் கடித்தாள் சபாபதியின் மனைவி.
நான்காவது மாதம் சபாபதி மட்டும் போயிருந்தான். ஒரு சுற்று ஊதியிருந்தாள் முனியம்மா. முகத்திலும் ஒரு மினு மினுப்பு தெரிந்தது.
“ஏம்பா… இன்னா இது… எப்பப் பாத்தாலும் மண்ணு மாரி சொரணயே இல்லாம கீது… புத்தியில ஒரு தெளுவே இல்லியே… சோத்தக் கூட போட்டு வெச்சாதாந் துண்ணுது…” என்றாள் மாமியார்.
“சங்கட்டமா இருக்கும் அத்த… அங்க கூட அண்ணிக்காரிங்கதாம் போட்டு வெப்பாங்க… ஒல வெக்கக் கூட சொல்லிக் குடுக்கல… அதாங்…”
“இப்டி இர்ந்தா எப்டிபா… ஊட்டுக்காரனுக்கு சோத்த ஆக்கிப் போட ஒரு தெளுவு வாணாவா…”
“போவப் போவ கத்துக்கும் அத்த…”
“நல்லா கத்துக்கும்… பேச்சி கூட செரியா இல்லியே… மாத்தி மாத்தி பேசுது… அமாவாச கிர்த்திக வந்தா தானா பேசிகினு கீது… உங்க வகையறால இப்டி யாருக்குனா கீதா…”
“இல்லியே அத்த… நல்லாதான இர்ந்திச்சி…”
“இன்னா நல்லா இர்ந்திச்சி… புத்தி செரியில்லாத பொண்ண ஏமாத்தி குட்த்திட்டிங்களா இன்னா…?” எனச் சந்தேகமாகவே பேசிக் கொண்டிருந்தாள் மாமியார்க்காரி.
அவளைச் சமாளித்துவிட்டு வருவதற்குள் போதும் போதும் எனத் திணறிவிட்டான் சபாபதி.
இப்போது ஒற்றை வரியில் இப்படி ஒரு கடிதம் வந்திருக்கிறது. எப்படியும் அவள் குணத்தைப் பற்றிய புகாராகத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டான்.
இவன் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்த போது நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது.
”ஏம்பா… இப்டி ஒரு பைத்தித்த எம்புள்ள தலயில கட்டி வெச்சி ஏமாத்திப் புட்டீங்க…” என நேரடியாகவே கத்தினாள் மாமியார்க்காரி.
“இன்னாச்சி அத்த…” என்று கேட்டான் மெதுவாக.
“இன்னாத்த ஆவறது… அவரக்கா சொரக்காதாங் ஆவணும்… மூனு மாசம் தள்ளிப் போய்க் கீது… கொய்ந்த உண்டாயி கீறது கூட அதுக்குத் தெரில… அதுதாங் கிராக்குனா அதுக்கு மேல இவனும் ஒரு சாம்பராணி. எப்பப் பாத்தாலும் வேல வேலனு ஓடிகினே கீறான். ஒயிறு மோடு தட்டி கீதேனு கேட்டப்பதான் எனுக்கே தெரிது… எப்பப் பார்த்தாலும் மண்ணு மாரியே கீது… நாம ஒண்ணு கேட்டா அது ஒண்ணு சொல்து… உங்கூட்டுக்கே இட்டுகினு போய்டுபா… இப்டி இர்ந்தா எப்டி கொயந்திய பெத்துக் குடுக்கும்…” என்றாள் மாமியார்.
அதைக் கேட்டதும் பூரித்துவிட்டது சபாபதியின் மனம். உள்ளுக்குள் இருந்த பாரத்தையெல்லாம் ஒரு நொடியில் தொலைத்து விட்டு, அவனது மனம் துள்ளத் தொடங்கிவிட்டது. முனியம்மாவும் தாயாகப் போகிறாள். ஆனால் அதைக் கூட அவனால் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியவில்லை.
“அத்த நானு நல்லவிதமா சொல்லிட்டுப் போறங்… கொஞ்சம் சுறுசுறுப்பு கம்மிதாங்… ஆனாலும் எந்த வேல சொன்னாலும் மூஞ்சிய கோணாம செய்யும்… நானு புத்தி சொல்றங் அத்த…” எனச் சமாளித்தான்.
“நீ ஒண்ணத்தயும் சொல்ல வாணா… கூடவே இட்டுகினு போயி கொஞ்சநாளு வெச்சிர்ந்து அனுப்பு….”
“சீமந்தம் பண்ணிட்டு இட்டுகினு போறம் அத்த… இப்பவே இட்டுகினு போனா பங்காளி பைத்தாளிங்க வாய்க்கு வந்தமாரி பேசுவாங்க…”
அவளையும், மாமனாரையும் சமாளித்துவிட்டு ஊருக்குத் திரும்பி வருவதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.
ஏழாவது மாதம் போனான். ஒன்பதாவது மாதம் வளைகாப்பு செய்யலாமா என மாமியார்க்காரியிடம் கேட்ட போது, கலவை முண்டக்கன்னி கோயிலில் ஆடும் பேய்களைப் போல பேயாடிவிட்டாள்.
“அது ஒண்ணுதாங் கொறச்சலு… முத்தன பைத்தித்த எம்புள்ள தலைல கட்டிட்டு ஏமாத்திப்புட்டீங்களேடா பாவிங்க…. போயும் போயும் கிராக்கு புட்ச்சத எங்கூட்டுக்கு எட்த்தாந்துட்டமே… எங்க கொடி எப்டி வௌங்கும்…?”
“இது எங்கூட்ல பொறந்த ஒரே பொண்ணு… அதுக்கு சீமந்தங் கூட பண்ணலனா எப்படி அத்த…?”
“பொண்ணா இது… மண்ணு…. மண்ணு…. ஏரில கீற களி மண்ணு… இதுக்கு சீமந்தம் ஒரு கேடா…”
மாமியார்க்காரியின் ஆங்காரமான இந்தப் பேச்சுகளையும் இளித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தாள் முனியம்மா. வயிறு பெருத்து இரட்டைச் சரீரமாக மாறியிருந்தாள். முகம் மேலும் மினுமினுத்தது. கை கால்களில் வீக்கம் கண்டிருந்தது. மாமியார்க்காரியிடம் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல், பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்காமல் ஊருக்குத் திரும்பிவிட்டான் சபாபதி.
அதற்கடுத்த மாதமும் அந்த ஊருக்குப் போனான் சபாபதி.
சோளிங்கரில் இறங்கியதும் இரண்டு டஜன் கண்ணாடி வளையல்கள், சாந்துப் பொட்டு, மை டப்பா, குங்கும டப்பி, ஐந்து முழம் மல்லிகைப் பூ, மிக்சர் பொட்டலம், இனிப்புப் பொட்டலங்கள் என நிறைய்யவே வாங்கிக் கொண்டான்.
பெரிய பையோடு இவன் அவர்கள் வீட்டு வாசலை மிதித்ததுமே பத்ரகாளியாக மாறிவிட்டாள் மாமியார்க்காரி. ஆங்காரத்தோடு கத்தினாள். மண்ணை வாரித் தூற்றினாள்.
ஆனாலும் சபாபதி எதையும் கண்டு கொள்ளவில்லை.
முனியம்மாவின் கைகளில் அவனே வளையல்களைப் போட்டுவிட்டான். தலையில் பூச்சரத்தை வைத்தான். நெற்றியில் குங்குமத்தை வைத்து, தின்பண்டங்களை அவளிடம் கொடுத்து தின்னச் சொன்னான். ஆசை ஆசையாக அவள் தின்பதைப் பார்த்து அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“அத்தி… தித்திப்பு துண்றியா… நல்லா கீது… இந்தா…” என ஒரு ஜாங்கிரியை எடுத்து மாமியாரிடம் நீட்டினாள் முனியம்மா.
ஆத்திரம் பற்றிக் கொண்டது மாமியார்க்காரிக்கு. ஜாங்கிரியைப் பிடுங்கித் தெரு நாயின் எதிரில் விசிறி அடித்தாள்.
“அய்யோ அய்யோ… இப்டியாப்பட்ட முத்திப்போன பைத்தித்த எம்புள்ள தலைல கட்டி வெச்சி ஏமாத்திப்புட்டாங்களே… முனேஸ்வரா… கெங்கம்மா தாயே… இவங்களுக்குக் கூலி குடு…” எனத் தலையில் அடித்துக் கொண்டு கத்தினாள்.
அப்போதும் பொறுமை இழக்கவில்லை சபாபதி.
“அத்த… பெத்த தாயி மாரி நீதாம் பாத்துக்கணும்… நோவு வந்தா கூட சொல்லுமானு தெரில… எதனா மனசுல வெச்சிகினு கவனிக்காம உட்ராத அத்த… தாய் வேற புள்ள வேறயா ஆவற வரைக்கும் உசார கீணம்… இது எட்டாவது மாசம்… இப்ப கூப்ட்டுகினு போவக்கூடாது… அட்த்த மாசம் நாங்க வந்து கூப்டுகினு போறம்… அது வரைக்கும் பாத்துக்க அத்த…” எனப் பரிதாபமாகச் சொன்னான்.
அவன் கிளம்புகிற வரை மாமியார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தன.
மறுமாதம் சபாபதியும் அவன் சம்சாரமும் முனியம்மாவை அழைத்து வர அந்த ஊருக்குப் போனபோது அவர்களின் வீடு பூட்டிக் கிடந்தது.
பக்கத்து வீட்டில் விசாரித்தனர். முனியம்மாவை பிரசவத்துக்காக திருத்தணி மருத்துவனையில் சேர்த்திருப்பதாகத் தகவல் சொன்னார்கள். அதற்குள்ளாகவா என்ற சந்தேகத்தோடு அடுத்த பேருந்தில் ஏறி திருத்தணிக்குப் போனார்கள்.
நோய்களும், நோயாளிகளும் வந்து போவதற்கான சகல முகூர்த்தங்களோடும் பரந்து கிடந்தது அந்த மருத்துவனை. பிரசவ வார்டுக்கு இவர்கள் போனபோது மாமியார்க்காரிதான் இவர்கள் கண்ணில் பட்டாள். என்ன கத்தப் போகிறாளோ என பயந்தபடியே அவளை நெருங்கினார்கள்.
ஆனால் இவர்களைப் பார்த்துவிட்டுக் கத்தாமல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாள் அவள். அதுவே சபாபதிக்கு அதிசயமாக இருந்தது.
“டிலவரி ஆய்ட்ச்சா அத்த…?” என மெதுவாகக் கேடடுக் கொண்டே அவள் அருகில் போனான்.
“ம்… ம்… ஆயிட்ச்சி… ஆனா இன்னா புரோஜனம்…? அனாசரம் புட்ச்சது… ஒய்ங்கான புத்தி இர்ந்தா ஒய்ங்கா பெத்திருக்கும்… அர புத்தி… அர வேல… பெத்து தத்தம் குட்த்துட்ச்சி…”
“இன்னாச்சி அத்த…?”
“ம்… பொறந்து… பொறந்த வேகத்துலயே செத்துப் பூட்ச்சி…”
அதிர்ந்து போனார்கள் இருவரும்.
“நல்லா கீறவங்களுக்கே நல்லபடியா பொறக்கறது கஸ்ட்டம்… இது கஸ்மாலம்… அதாங்… பொறந்த நாள்ளியே சாவக் குட்த்திட்ச்சி…”
எதுவுமே பேச முடியாமல் வாயடைத்துப் போய் நின்றார்கள் இருவரும்.
“இப்டியே உங்கூட்டுக்கு இட்டுகினு பூடுங்க… பச்ச ஒடம்பு கொஞ்சம் தேறட்டும். அப்பறமா இட்டுகினு வந்து நம்ப ஊட்ல உடுங்க… இங்கியே இர்ந்தா ஒய்ங்கா ஒடம்பப் பாத்துக்காது…”
அவள் சொல்வதும் சரியெனப் பட்டது சபாபதிக்கு. அன்று மாலையில் டிஸ்சார்ஜ் செய்தார்கள். அங்கேயே ஒரு ஆட்டோ பேசி அங்கிருந்தே ஊருக்குக் கிளம்பினார்கள்.
வழியெல்லாம் அழுது கொண்டே வந்தாள் முனியம்மா. குழந்தை செத்துப்போன சோகத்தில் அழுகிறாள் என நினைத்தான் சபாபதி.
“நாம இன்னா பண்றது முனிமா… கடவுளுக்கு இன்னா கோவமோ… இப்டி ஒரே நாள்ல செத்துப்பூட்ச்சி கொயந்த… அயாத… இன்னொன்னு பொறக்கும்…” என்றான் சபாபதி.
“அணா… கொயந்த சாவல… மாமியார்க்காரி கொயந்திய வித்துட்டா…” என்றாள் முனியம்மா.
அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான் சபாபதி.
“இன்னா சொல்ற முனிமா…?”
“சவரமாட்டம் கொய்ந்த…. ஆயர்ரூபா வாங்கினு வித்துட்டா… சமுத்தரம் பக்கத்துல கீற ஊராமே… அந்த ஊரு ஆளுங்கதாங் வாங்கினு போனாங்க…”
“முனிமா… கிராக்கு மாரி பெனாத்திகினு வராத…” என்றாள் சபாபதியின் மனைவி.
“மெய்யாலுமாதாங் அண்ணி… பாப்பாத்தியாட்டம் இர்ந்திச்சி எம் பொண்ணு கொய்ந்த… எங்க மாமியார்க்காரிதாங் வித்துட்டா… துட்டுக்கு வித்துட்டு செத்துப் பூட்ச்சினு சொல்றா… ஊசி போட்ற டாக்டருங்களும் துட்டு வாங்கினு கம்னு கீறாங்க…”
“சினிமா கத மாரி சொல்லாத முனிமா… மாட்ட மேய்க்கம் போது யார்னா கத சொன்னா… அதக் கேட்டுட்டு ஒளறாத… கம்னு வா…” என்றான் சபாபதி.
“இல்லணா… நம்ப கொலசாமி பெரியாண்டவம் மேல சத்திமா… உட்டனு சொல்லு… மெய்யாலுமே கொயந்திய வித்துட்டா…”
அவர்கள் இருவருமே அதை நம்பவில்லை. அது இப்படிதான் ஏதாவது உளறும் என அவளை அடக்கியபடி, அவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்த போது நன்றாக இருட்டிவிட்டது.
குழந்தை பிறந்து இறந்துவிட்ட செய்தி தெரிந்து ஊர்ப் பெண்கள் வரிசை வரிசையாக வந்து முனியம்மாவைப் பார்த்துவிட்டுப் போனார்கள்.
“எங்கொய்ந்த சாவல… எங்கொயந்திய வித்துட்டாங்க…” என எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி அழுதாள் முனியம்மா. அழுதழுது அவளது முகமெல்லாம் வீங்கிவிட்டது.
“புத்தி கம்மின்னாலும் அதுவும் பொண்ணுதான… அதுக்கும் பெத்த பாசம் இருக்காதா… கொயந்த செத்துப் பூட்சின்னதும் இப்டிலாம் ஔறிகினு கீது பாவம்…” எனப் பரிதாபப்பட்டனர் ஊர்க்காரர்கள்.
மூன்றாவது நாளில் முனியம்மாவிற்கு இரண்டு மார்பகங்களிலும் கடுமையான வலி எடுத்தது. நேரம் ஆக ஆக அது உயிர் போகிற வலியாக மாறியது. மார்பகங்கள் இரண்டுமே பாறாங் கல்லைப் போல இறுகிவிட்டன. வலி தாங்க முடியாமல் மார்பகங்களை அழுத்திக் கொண்டு அழத்தொடங்கினாள். சிறிது நேரத்திற்குள் வாய்விட்டே கதறினாள். சில மணி நேரத்துக்குள்ளாகவே ஒப்பாரி வைத்துப் பாடிப் பாடி அழத் தொடங்கிய போது ஊரே கூடிவிட்டது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. குழந்தை செத்துப் போன ஏக்கத்தில் அழுவதாக நினைத்துக் கொண்டனர்.
மார்பைப் பிடித்துப் பிடித்து அவள் அழுவதைப் பார்த்துக் கொண்டிருந்த சாலம்மா கிழவிக்குச் சட்டென ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது. பார்வதியம்மாவின் காதில் குசுகுசுவென என்னவோ சொன்னாள்.
“அடியே வாக்கு பூக்கு தெரியாத பொம்னாட்டிங்களே… எய்ந்து ஊட்டுக்குப் போயி ராவுக்கு ஒல வெக்கிற வேலயப் பாருங்கடி… வண்ட்டிங்க… பெறாக்கு பாக்க…” என எல்லாப் பெண்களையும் அங்கிருந்து விரட்டிவிட்டாள்.
பெரிய மருமகள் வீட்டுக்கு வெளியே அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தாள். சின்னவள் மாடுகளை ஓட்டிக்கொண்டு போயிருந்தாள்.
கூடத்திலிருந்து பெரியவனின் அறைக்கு முனியம்மாவை இழுத்துக் கொண்டு போன சாலம்மா, அவளின் மாராப்பை விலக்கிப் பார்த்தாள். மார்புகள் இரண்டும் ரவிக்கைக்குள் இறுக்கமாகத் திமிறிக்கொண்டிருந்தன. ரவிக்கையின் ஊக்குகளை இழுத்தாள். அழுத்தமாக இருந்தது. இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்தாள். படீரெனத் தெறித்தது அந்த ஊக்கு. இன்னும் அழுத்தமாகப் பிடித்து ஒவ்வொரு ஊக்காக இழுத்து இழுத்து ரவிக்கையை விலக்கினாள். இரண்டு மார்புகளும் பப்பாளிப் பழங்களைப் போலப் பெருத்து ஊதிப் போயிருக்க, கருப்பான காம்புகள் விடைத்துக் கொண்டிருந்தன.
இடது மார்பில் கை வைத்து லேசாக அழுத்தினாள். பாறாங்கல்லை அழுத்துவதைப் போல கெட்டியாக இருந்தது. மெதுவாக அழுத்தியதற்கே வலி தாங்க முடியாமல் வாயிலடித்துக் கொண்டு கதறினாள் முனியம்மா.
“பாலு கட்டிகினு கெல்லு மாரி கீதுடி… உள்ள கட்டிகினு கீற பாலு வெளிய வந்தாதாங் நோவு போவும்… அப்டியே உட்டுட்டா ஜொரம் வந்துடும்… ஜன்னி வெச்சிக்கும்… உசுருக்கே ஒலயா பூடும்டி…” எனப் பார்வதியம்மாவிடம் சொன்னாள் சாலம்மா.
இடது மார்பின் காம்பைப் பிடித்து அழுத்தி உருவினாள் பார்வதியம்மா. ஒரு துளி பால் கூட வரவில்லை. ஆனால் வலியில் கால்களை உதைத்துக் கொண்டு அலறினாள் முனியம்மா.
“நல்லா கட்டிகினு கீதுறி… டிலிவரி ஆயி நாலு நாளுதான ஆவுது… அதாங்…” என்றாள் சாலம்மா.
“இப்ப இன்னா பண்றது கெய்வி… எதுனா கைக் கொயந்தய எட்த்தாந்து குடிக்க வைக்கலாமா…?”
“கெட்டுப் போன பால குட்ச்சா கொயந்திக்கி ஆவாதே… கறந்து வெளிய உட்டுல்லாம்னா கை வெச்சாவே கத்தறாளே…”
“யார்னா மார்ல வாயி வெச்சி உறிஞ்சி உறிஞ்சி வெளிய துப்பிட்டா செறியா பூடும்…”
“யாரு செய்றது அந்த வேலய…?”
இருவருமே சங்கடத்தில் நெளிந்தனர். முனியம்மா வலி தாங்க முடியாமல் அழுவதும், குதிப்பதுமாக ஆர்ப்பாட்டம் செய்தாள். பார்க்கப் பார்க்க பாவமாவும், பயமாகவும் இருந்தது.
“ஏண்டி பார்வதி… நீ பெத்த பொண்ணு தான… நீயே வாய வெச்சி உறிஞ்சி துப்புடி…” என்றாள் சாலம்மா.
அதற்குப் பிறகும் தயங்கினாள் பார்வதியம்மா. வலியில் மேலும் மேலும் துடிக்கத் தொடங்கினாள் முனியம்மா.
வேறு வழி தெரியவில்லை. கதவைச் சாத்தி உள்பக்கமாகத் தாளிட்டாள் பார்வதியம்மா. ஒரு சொம்பை எடுத்து வந்து அருகில் வைத்துக் கொண்டாள்.
இடது மார்பின் காம்பில் வாயை வைத்து மெதுவாக உறிஞ்சினாள். வாய் நிறைய்ய பால் நிறம்பியதும் அதை சொம்பில் துப்பினாள். மீண்டும் வாய் நிறைய்ய உறிஞ்சி சொம்பில் துப்பினாள். அப்படியே உறிஞ்சி உறிஞ்சித் துப்ப, இறுக்கம் தளர்ந்து அந்த மார்பு வற்றத் தொடங்கியது. பால் குறைந்ததும் பஞ்சு போல மிருதுவாக மாறிவிட்டது.
அதே போல வலது மார்பிலும் வாய் வைத்து உறிஞ்சி உறிஞ்சி சொம்பில் துப்பினாள். சொம்பு நிறைந்து விட்டது. இரண்டு மார்பகங்களிலும் பால் வற்றியதும் வலி போன இடமே தெரியாமல் சிரிக்கத் தொடங்கிவிட்டாள் முனியம்மா.
“பொய்ச்சிகின போடி கெய்த… இதக் கூடச் சொல்லத் தெரியாத பொண்ணு இன்னா பொண்ணோ…” என அங்கலாய்த்தாள் சாலம்மா.
மறுநாளும் அதே போல பால் கட்டிக் கொண்டது. முனியம்மாவே அம்மாவைக் கூப்பிட்டு, மார்பைத் திறந்து காட்டினாள். பழையபடியே பாலை உறிஞ்சி எடுத்துத் துப்பினாள் பார்வதியம்மா. மறுநாளிலிருந்து முலைக் காம்பில் வாய் வைத்து பால் உறிஞ்சும் போது உடல் முழுவதும் புல்லரிப்பாக இருந்தது முனியம்மாவுக்கு. சாயந்திரமானால் “மொலப்பாலு எடுமா…” எனத் தானாகவே போய் தாயிடம் மார்பைக் காட்டிக் கொண்டு நிற்பாள்.
மகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமே என பார்வதியம்மாவும் தினமும் பாலை உறிஞ்சி உறிஞ்சித் துப்பிக் கொண்டிருந்தாள். ஊரில் சரியாகப் பால் சுரக்காத சில தாய்மார்கள் தங்களது குழந்தைகளை முனியம்மாவிடம் கொண்டு வந்து விட்டனர். அவளும் பெற்ற குழந்தைக்குப் பாலூட்டுவதைப் போல அந்தக் குழந்தைகளுக்கும் பாலூட்டி அனுப்பினாள்.
இப்படி நாட்கள் நகர்ந்து, பால் சுரப்பு வற்றி, நின்று போன பிறகும், தனது பெண் குழந்தையை மாமியார் விற்றுவிட்டதை மட்டும் மறக்காமல் எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி அழுது கொண்டே இருந்தாள்.
ஒரு வேளை, அவள் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று யோசிக்கத் தொடங்கினான் சபாபதி.
ஆறேழு மாதங்கள் கழித்து, முனியம்மாவின் உடல் கொஞ்சம் தேறிய பிறகு, அவளை அழைத்துக் கொண்டு அவளது மாமியார் வீட்டுக்குக் கிளம்பினான்.
இவர்களைக் கண்டதும் மீண்டும் பத்ரகாளியாக மாறிவிட்டாள் மாமியார்க்காரி.
“இந்தப் பைத்தித்த இன்னாத்துக்கு இங்க இட்டுகினு வந்த… ஊரு மானம் போறதுக்குள்ள மரியாதயா பூடுங்க…”
“அத்த… இனிமே உகுத்தியா இருக்கும்… நானு நல்லா புத்தி சொல்லி இட்டுகினு வந்து கீறங்…”
“க்கும்… அவ பொய்சிதாங் ஊருக்கே தெரிமே… இன்னாத்த புச்சா கீய்க்கப் போறா…. எதுவும் பேசாம எம்புள்ள கட்ன தாலிய அவுத்துக் குடுத்துட்டுப் போயிகினே இருங்க…”
“அதுக்கு புத்திலாம் நல்லாதாங் கீது அத்த… உனுக்குதாங் புத்தி செரியில்ல… கொயந்த பொறந்ததும் செத்துப் பூட்சினு சொன்ன… துட்டு வாங்கினு வித்துட்டனு இது சொல்து… இன்னா நடந்துட்ச்சி…?”
இன்னொரு முறை தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பேயாட்டம் ஆடினாள் பத்ரகாளி.
“அதுதாங் அரப் பைத்தியம்னா… நீ ஒரு முக்காப் பைத்திமா கீற… உங்க குடும்பமே இப்டிதானா… அதும் பேச்ச கேட்டுகினு கொயந்திய வித்துட்டாங்கனு சொல்ற… யார்னா கேட்டா சூத்துல சிரிக்கப் போறாங்க… கம்னு பூடுங்க…. இதும் மூஞ்ச பாத்தாவே எனுக்கு அண்டம் புண்டம்லாம் பத்திகினு எரிது…”
“இல்லணா… எம் பொண்ணு கொயந்திய இவதாங் வித்துட்டா… கொயந்த கூட அய்துகினே போச்சி… பெரி பெரி நோட்டா குட்த்துட்டு கார்ல ஏறிப் போனாங்க…” என்றாள் முனியம்மா.
தபதபவென ஓடிப் போய் வேலியிலிருந்து ஒரு பெரிய அவுஞ்சி மண்டையை உருவிக் கொண்டு ஓடி வந்தாள் பத்ரகாளி.
“இன்னாடி சொன்ன… பைத்திக்கார்சி… யாரு வித்தது… மண்டைலியே ஜெவுரி புடுவங்… நாலு ஜெவுரு ஜெவுர்னா முத்திப்போன பைத்தியம் தெளிஞ்சி பூடும்…” என ஆவேசமாக அவுஞ்சி மண்டையை ஓங்கிக் கொண்டு ஓடி வந்தவள் நாக்கைக் கடித்துக் கொண்டு, கண்களை உருட்டியவாறு அப்படியே நின்றாள். அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
அதைப் பார்த்ததும் அரண்டு போய் விட்டான் சபாபதி. அவன் இருக்கும்போதே… இப்படி ஆங்காரம் பிடித்தவளாய் அடிக்க ஓடி வருகிறவள், அவளைத் தனியாக அங்கே விட்டுவிட்டுப் போனால் என்னதான் செய்ய மாட்டாள்.
“நாங்க எம்புள்ளைக்கி வேற பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணப் போறம்… இனுமே உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒறவும் இல்ல… நீங்க குடுத்த பாயி தலகாணி பொட்டிய எட்த்துகினு இந்தக் கஸமாலத்தக் கையோட இஸ்துகினு போய்டு…” என சபாபதியிடம் ஆவேசமாகக் கத்தினாள்.
மேலும் மேலும் திக்பிரமைப் பிடித்துப் போய் நின்று கொண்டிருந்தான் சபாபதி.
திம்மாக்கு போல நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தாள் முனியம்மா. அவளைப் பார்க்கப் பார்க்க மேலும் மேலும் ஆத்திரம் பற்றிக் கொண்டு உச்சிக்கு ஏறியது அந்த ராட்சசிக்கு. உடல் தடதடவென உதறியது. அதே வேகத்தில் முனியம்மாவை நோக்கி ஓடி வந்தவள், முனியம்மாவின் கழுத்திலிருந்த தாலிக் கயிற்றை எட்டிப் பிடித்தாள்.
கண் இமைக்கும் நேரத்தில் தாலிக்கயிற்றை இழுத்துக் கழுத்தின் வழியாகவே கழற்றியும் எடுத்து விட்டாள்.
சுற்றிலும் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வாயடைத்துப் போய்விட்டனர். அங்கே நியாயம் பேச யாருமே தயாராக இல்லை. அவளிடம் வாயைக் கொடுத்தால் மீள முடியாது என அந்த ஊருக்கே தெரியும்.
இத்தனையும் பார்த்த பிறகும், முனியம்மாவின் மாமனார் எதுவுமே பேசாமல் மாட்டுத் தொழுவத்தில் மாடுகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார். முனியம்மாவின் வீட்டுக்காரன் அப்போது வீட்டில் இல்லை.
அதற்குப் பிறகும் முனியம்மாவை அந்த வீட்டில் விட்டுப் போனால் அவளது உயிருக்கே உத்தரவாதம் இல்லை என நினைத்த சபாபதி யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் முனியம்மாவோடு பேருந்துச் சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
Thanks : Jean-Louis-Théodore Géricault

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நீவாநதிக்கரை (பொன்னை நதி) கிராமமான வசூர் கிராமத்தில் பிறந்தவர். விலங்கியலில் இளம் அறிவியல் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கியவர். தற்போது தமிழக அரசின் வருவாய்த்துறையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.
வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, அம்மக்களின் வட்டார வழக்கிலேயே தொடர்ந்து எழுதிவருகிறார்.
இதுவரை 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், 2 கவிதைத் தொகுப்புகள் என எழுதியுள்ளார். சிறந்த நாவலுக்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருது, எஸ்.ஆர்.எம்.தமிழ்ப்பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, சைளமா இலக்கிய விருது, சிறுகதைத் தொகுப்புகளுக்காக ஜெயந்தன் விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, எழுச்சித் தமிழர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
பல்வேறு பத்திரிகைகளில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.
Leave a Reply