சிகிச்சை
படுக்கையறையில் அமர்ந்தபடி
நம்ப முடியாது திகைக்கிறாள்
நீரின்றி வதங்கும்
பலகணியின் தொட்டிச் செடி மீது
தனக்கு இப்போதும் இரக்கம் பெருகுவதை.
வெயிலிலேயே காய்ந்து கிடந்தாலும்
ஈரம் உறிஞ்சாத கருங்கல் தளமென
இன்னும் மாறாதிருக்கும்
பூம்பஞ்செனெ மீள்கின்ற நுண்மனதைப்
புரியாது உற்று நோக்குகிறாள்.
கண்ணாடிக் குடுவையினுள் போட்டு
குலுக்கப்பட்ட கூழாங்கற்கள்
விரிசல்கள் ஏற்படுத்தவே இல்லையாவென
வியப்புடன் சோதிக்கிறாள் திரும்பத் திரும்ப.
திரவமாக வழிந்து ஓடுவதைத் தடுக்க
குளிரூட்டி கெட்டிப்படுத்துதல்
அதிக உஷ்ணமேற்றி ஆவியாக்குதல்
என்று இரு வழிகள் தானே…
இரவும் பகலும் தன்னை விடாது நோகடிக்கும்
தாளமுடியாத அந்த வலியை மறுக்க
தன் பற்களைத் தட்டி உதிர்த்து
மணிக்கட்டிலிருந்து உருவிய நரம்பில்
வரிசையாகக் கோர்க்கிறாள்.
குளியலறையில் யாரோ சாவதானமாக
நகம் வெட்டும் ஒலி கேட்கிறது.
தலைகீழாய்த் தொங்கும் வாழ்வு
எவ்வளவு சுதந்திரம் உன் ஜீவிதம்….!
அப்படியா…..!?
எண்ணிய பின் துணிந்தாலும்
துணிந்த பின் எண்ணினாலும்
ஒரு வேறுபாடும் இல்லையே உனக்கு.
ஓஹோ…!
எங்கு வேண்டுமானாலும் போகலாம்
எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
ம்…
அப்புறம்…
நிறுத்து தோழி..
கொல்லைப்புறத்தில் விரிந்திருக்கும்
மாமரத்தில் வீற்றிருக்கும் வௌவாலைப் பார்
இறக்கைகள் இருந்தாலும் கூட
வாய்த்தது என்னவோ
தலைகீழாய்த் தொங்கும் வாழ்வு தானே….?.!
ஜதி
அடுக்குமாடிக் கட்டிடத்தின்
மூன்றாம் தளக் குடியிருப்பில்
தட்டப்படும் நட்டுவாங்கம்
தாளம் தப்பாது ஒலிக்கின்றது.
இரண்டாம் தளத்தில் வசித்தவள்
தூக்கிலிட்டுக் கொண்ட மின்விசிறி
மின்சாரம் திரும்பியதும்
குறைந்த விசையில் சுழல்வதும்
அணைந்ததும்
சட்டென்று நிற்பதுமாய் இருக்கிறது.
கடிகை சுற்று திசையிலும் – பின்
எதிர் இடஞ் சுழியிலும் சுழன்று
ஜதிக்கேற்ப ஆடுகிறது அவள் உடல்
தையா தா ஹா..
ஏற்பது இகழ்ச்சி…??.!.!
அவள் யாரும் பார்க்காதவற்றை எல்லாம்
கண்டு கொள்கிறாள் – இருப்பினும்
எல்லோரும் சுலபமாகக் காண்பதை
இலகுவாகத் தவற விடுகிறாள்.
இப்படித்தான்
3டி காட்சியின் சித்திரங்களென
வாழ்வின் திரையில்
துருத்தி நிற்கும் உண்மைகளைப்
புறங்கையால் விலக்கி ஒதுக்குகிறாள்.
புரைதீர்ந்த நன்மை பயக்குமெனினும்
எத்தனை பொய்களை ஏற்கலாம்….?
வளர்ந்த தன் குஞ்சுகளில்
வால் நீண்டது குயிலினுடையதெனப் புரிந்ததும்
கூட்டிலிருந்து துரத்தி விடும்
காகங்களுக்கு மத்தியில்
தான் அடைகாத்துப் பொரித்தவற்றுள்
சுளகு போன்ற அலகு கொண்ட
வாத்துக் குஞ்சை – எவ்வித மறுப்புமின்றிச்
செட்டைகளுக்குள் அரவணைக்கிறது
அந்த வெகுளியான தாய்க்கோழி.
நான் என்பது..
என் இதயத்தை
எல்லோரும் பார்க்கும்படி
என் சட்டைப்பையின் மேல் தைத்திருக்கிறேன்.
மேல் வானில்
செம்மையாய்ச் சமைந்திருக்கும்
அந்திச் சூரியனைப் போல.
என்னைப் பற்றிய வாக்கியங்களை
மிகச் சுலபமாய்ப்
பிரகடனப் படுத்துகிறேன்.
இலையுதிர் காலத்தின் சருகுகளென
அவை – சாலையோரம்
சரசரத்துத் திரியும்படி.
என்ன…
இப்போதெல்லாம் – நான் எனது
என்று பேசுவது தான்
சற்று அசூயையாக உள்ளது.
கல்லறை நிலத்தின்
ஈர மண்ணில் காத்திருக்கும்
சின்னஞ்சிறு புழுக்களே..
உங்களுக்குப் படைக்கப்படும்
எந்த இரகசியமுமற்ற
ஓர் உடலை
எவ்வளவு ஆசையாய் உண்பீர்கள்…
Art : haroulita

Leave a Reply