கூகி வா தியாங்கோ ஒரு புரட்சிக்காரர். சிறைவாசத்தின் கோரங்கள், பழங்குடியினரை அழித்தொழிப்பது, ஏழைகளை ஒடுக்கியடக்குவது, உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகள், கட்டுப்பாடற்ற சந்தை முதலாளித்துவம் என்று எந்தவொரு முக்கியமான அரசியல் பிரச்சினையையும் எடுத்துக்கொள்ளுங்கள். கூகியின் கதைகளாகட்டும், விமர்சனங்களாகட்டும் கோட்பாடுகளாகட்டும் – அவையாவுமே இப்பிரச்சினைகளின் ஆணிவேராக இருக்கும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை தீர்க்கமாகவும், பெரும்பாலும் தீர்க்கதரிசனமாகவும் அலசி ஆராயும். ஏனென்றால், கூகி ஒரு மார்க்ஸியச் சிந்தனையாளர். முன்பு 2021இல் நடந்த எங்கள் உரையாடலின்போது முரண்பாடுகள் குறித்த அவரது யோசனையைப் பற்றி விவாதித்தோம். அப்போது அவர், “மார்க்ஸின் தர்க்கமுறை, ஹேகலின் தர்க்கமுறை என தர்க்கமுறைப் போராட்டங்களாக நான் போராட்டத்தைப் பற்றியே நிறையே பேசுகிறேன்” என்றார்.
1938இல் கென்யாவின் லிமூரு என்னும் கிராமத்தில் ஜேம்ஸ் கூகி பிறந்தார், அருகிலிருந்த கிக்கூயூ நகரத்தின் மிஷனரி உறைவிடப் பள்ளியாகிய அல்லையன்ஸ் உயர்நிலைப் பள்ளிக்குப் படிக்கச் சென்றார், பிறகு 1959இல் உகாண்டாவின் கம்பாலாவில் இருக்கும் மக்கரேரே பல்கலைக்கழகத்தில் பயில நல்கை பெற்றார். 1964 முதல் 1967 வரை இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றார், நைரோபி பல்கலைக்கழகத்தின் இளம் பேராசிரியராக அவர் இருந்தபோது பல்கலைக்கழகப் பாடத்திட்டம் ஆப்பிரிக்க இலக்கியத்தை மையப்படுத்தி இருக்கவேண்டுமென்று வாதிடும் அறிக்கையான “ஆங்கிலப் பாடத்துறையை அழிப்பது” பற்றி இன்னொருவருடன் இணைந்து எழுதினார். சினுவா அச்சீபியின் பிரசித்தமான கட்டுரையாகிய “ஆப்பிரிக்கப் பிம்பம்: கான்ராடின் Heart of Darknessஇல் இனவெறி” வெளியாவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே, அதாவது 1973இலேயே கூகி ஆற்றிய ஓர் உரையில் “ஆப்பிரிக்காவிலும் ஆப்பிரிக்கர்களிடமும் இயல்பாகவே காட்டுமிராண்டித்தனம் உண்டு எனும் ஊகத்தின் அடிப்படையிலேயே கான்ராடின் கதைகள் எழுதப்பட்டுள்ளன: ஐரோப்பாவின் மிகச்சிறந்த மனங்களும் இதயங்களும் கூடக் கெட்டுப்போகும் அபாயத்தில் இருக்கின்றன” என்று வாதிட்டார். அதுநாள்வரை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்த கூகி இனி தனது தாய்மொழியான கிக்கூயூவில் மட்டுமே எழுத எழுபதுகளில் முடிவெடுத்தார். அவரது இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்தது, அவரது பிரசித்திபெற்ற கோட்பாட்டைப் பற்றி அவர் எழுதிய மெல்லிய புத்தகம்தான். அது அவரது மெய்யான வெற்றியைப் பறைசாற்றியது – மேற்கோள் காட்டவேண்டிய அவசியமே இல்லாமல் “காலனியத் தாக்கத்தை நீக்குவது” எனும் வரி நமது பொது விவாதங்களில் இன்று வியாபித்துவிட்டது.
2012இல் வெளியான அவரது Globalectics: Theory and the Politics of Knowing எனும் புத்தகத்தில் கூகி தனது எழுத்துப்பணியை “வறிய கோட்பாடு” என்று வர்ணிக்கிறார். இங்கு வறுமை என்பது உச்சபட்சப் படைப்பூக்கத்துடன் பரீட்சார்த்த முறைகளைக் கையாண்டு பிழைத்திருப்பது என்று பொருள். அவரது நாவல்களின் வறிய கோட்பாடு எது என்று கேட்கப்பட்டபோது அவர் ஒரு வறண்ட சிரிப்புடன், “என்னுடைய குக்கூயூ எழுத்தும் அதுதான் என்று நினைக்கிறேன். கிடைக்கும் குறைந்தபட்சப் பொருளை அதிகபட்சம் உபயோகித்துக் கொள்வதுதான் வறிய கோட்பாடு” என்றார். அது கிக்கூயூவோ ஆங்கிலமோ, அவர் எழுதிய சமூக நாவல்களுக்கு ஒரு தனிப்பட்ட மார்க்ஸியச் சாயலைக் கொடுத்ததன் மூலம் கூகி அதிகபட்சமாகத்தான் செயல்புரிந்திருக்கிறார். அவரது நாவல்கள் கென்யாவின் காலனிய, நவகாலனிய ஆட்சிகளின் வன்முறையையும் ஊழலையும் விவரிக்கின்றன. உலகளாவிய முதலாளித்துவ அமைப்பை “பெருநிறுவனத்துவம்” என்று அழைக்கும் கூகி அதை மிகக்கடுமையாகக் கிண்டல் செய்து 2004இல் வெளியிட்ட – 2006இல் அவரே மொழிபெயர்த்த – Wizard of the Crow அவரது மிகச்சிறந்த படைப்பாகும். சமீபத்தில் அவர் எழுதிய The Perfect Nine (2018, சுய மொழிபெயர்ப்பு 2020) எனும் காவியக் கவிதையில், கிக்கூயூ உருவான இதிகாசக்கதையின் நிஜ நாயகியாக உடல் ஊனமுற்றப் பெண்ணொருத்தியை முன்வைக்கிறார். கலையில் இருந்து அரசியலைப் பிரித்துப் பார்க்கும் கேள்வியே கூகியிடம் இல்லை, அதேசமயம், அவை ஒன்றோடொன்று பிணைந்திருப்பதாலேயே அரசியலைச் சொல்வதில் சோடை போய்விடுவதும் இல்லை. ஏழைகள், கறுப்பினத்தவர், பெண்கள் போன்ற மக்களுக்காக எழுதுவதும், மக்களோடு சேர்ந்து எழுதுவதும் கூட மக்களுக்காகப் போராடும் செயலே என்பதே அவரது எழுத்துக்கு அரசியல் அங்கீகாரத்தைக் கொடுக்கிறது.
கூகி காகிதப்போர் மட்டும் தொடுக்கவில்லை, அதற்கும் மேலே செய்துவிட்டார். வேறொருவருடன் சேர்ந்து கிக்கூயூவில் இவர் எழுதி அரங்கேற்றிய நாடகத்திற்காக கூகி கைதுசெய்யப்பட்டு 1977 முதல் 1978 வரை நைரோபியின் காமீட்டி உயர்பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது அவர் எழுதிய Devil on the Cross நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஊக்குவிக்க 1982இல் லண்டனுக்குச் சென்றார். தாய்நாட்டுக்குத் திரும்பிவந்தால் அவருக்கு “சிவப்புக் கம்பள வரவேற்பு” அளிக்கப்படுமென கென்ய அரசாங்கம் எச்சரிக்கவே, அவர் ஐக்கிய ராஜ்ஜியத்திலேயே ஏழுவருடங்கள் இருந்தார்.1987இல், கூகியின் Matigari (1986, மொழிபெயர்ப்பு – 1989) எனும் நாவலை கென்ய அதிபர் டேனியல் அராப்மொய் தடைசெய்தார். அதில் வரும் ஒரு குறிப்பிட்ட பெயர்கொண்ட நாயகனை – இயேசுவைப் போன்று “நீதியும் நியாயமும் எங்கே இருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டு அலைந்தவனைக் கைதுசெய்யப் புலனாய்துத் துறையால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக நாடு கடத்தப்பட்டிருந்த கூகி Wizard of the Crowஇன் கிக்கூயூ பதிப்பை வெளியிட கென்யாவுக்குத் திரும்பியபோது, அவரும் அவரது மனைவியும் துப்பாக்கிமுனையில் தாக்கப்பட்டனர்.
நோபலுக்குப் பரிந்துரைக்கப்படும் திறமையானவர்களின் பட்டியலிலும் பின்காலனிய இலக்கியத்தின் பாடத்திட்டங்களிலும் அவர் தொடர்ந்து இருந்துவந்தபோதும், அரசியலையும் புனைவுவையும் பற்றிய மேற்கின் இடதுசாரி இலக்கியவாதிகளின் விவாதங்களில் அவர் ஒதுக்கப்பட்டுக்கொண்டே இருந்தார். அவரது எழுத்தின் புரட்சிகர வார்ப்பு ஏன் கண்டுகொள்ளப்படவில்லை? அவரது நாவல்கள் “சிறுபான்மையின” மொழியில் எழுதப்பட்டு, “சிறுபான்மையினரை மையப்படுத்தும்” அரசியலைப் பேசுவதால் இலக்கியரீதியாகவும் அதைச் சிறுபான்மையாகச் சிலர் கருதியிருக்கலாம். அவரது “பின்காலனிய” உலகப்பார்வை கடந்தகாலத்தால் இறுக்கப்பட்டிருப்பதாக மற்றவர்கள் நினைத்திருக்கலாம். உண்மையில் பின்காலனியக் காலத்தில்தான் இப்போதும் வாழ்கிறோம். இவற்றையெல்லாம்விட மிக எளிமையான காரணமும் உண்டு. முன்பே சொன்னதுபோல், கூகி மார்க்சியச் சிந்தனையாளர் – நாற்காலியைத் தேய்க்கும் வகையறா இல்லை. முதலாளித்துவச் சுயபுனைவுக் கதையொன்றில் வர்க்க வேறுபாட்டு ஆய்வு அழகுக்கு இருக்கலாமே தவிர ஒரு நாவலாசிரியரின் இத்தனை அரசியல் அர்ப்பணிப்பு வேலைக்கு ஆகாது. ஒரு நிஜக் கலைஞன் எப்படிப் புரட்சிகரமாக இருப்பானோ அப்படித்தான் கூகி இருந்தார், சொல்லப்போனால் நம் காலத்துக்கு அவர் அதிகப்படியாகவே புரட்சிகரமானவர்.
உங்கள் நாவல்களின் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் தருகிறீர்களா?
இதில் என்ன வேடிக்கையென்றால் என் எல்லா நாவல்களையும் கடவுளோடு ஒரு மல்யுத்தம் என்ற ஒரே தலைப்போடுதான் தொடங்குவேன். எழுதும்போதுதான் எனக்கே தெரியவரும், அடடா, இது அது இல்லையே…
எதனால் அந்தத் தலைப்பு?
நான் வளர்ந்ததே பழைய ஏற்பாடு நூலோடுதான். எனக்கு அப்போது கிக்கூயூவில் வாசிக்கக் கிடைத்த ஒரே புத்தகம் அது மட்டுமே. அதை வாசிக்கையில் எனக்கு நானே கதை சொல்லிக்கொள்ள முடிந்தது. எங்கள் சமூகத்தில், வேலையெல்லாம் ஒழிந்த மாலைவேளைகளில் எல்லோரும் கூடியமர்ந்து கதைசொல்லும் வழக்கத்தின் ஒரு நீட்சியாகவே அது இருந்தது. அந்தக் கதைகளைப் போலவே மாய எதார்த்த படைப்புதான் இதுவும். நினைத்துப் பாருங்கள், மீனின் வயிற்றுக்குள் ஜோனாஹ் என்னும் ஒரு மனிதன்! சிங்கங்களின் குகைக்குள் டேனியல், சவுலின் மனவுளைச்சலைக் குறைக்க யாழ் வாசிக்கும் டேவிட். தேவதூதரோடு மல்யுத்தம் செய்யும் ஜேக்கப்பின் நினைப்பாகவே நான் இருந்ததுண்டு– அந்தக் காட்சி என் மனதுக்குப் மிகப்பெரிய சக்தியைக் கொடுத்திருந்தது.
சமீபத்தில் வில்லியம் பிளேக்கின் The Marriage of Heaven and Hell நாவலை மீண்டும் எடுத்திருக்கிறேன். தினம் இரவு அதை ஒலிநாடாவில் கேட்டுவருகிறேன். மாபெரும் சக்திக்கு எதிரான மனிதனின் போராட்டம் என்கிற சிந்தனை என்னை எப்போதுமே ஈர்த்து வந்திருக்கிறது, முன்னேற்றத்துக்கு இட்டுச்செல்லும் எதிர்ப்புச் சிந்தனையும்தான். லீட்ஸில் மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் வாசித்தபோதுதான் இந்தச் சிந்தனை எனக்குள் ஊன்றியது.
அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆயுதம் ஏந்தலாமா கூடாதா என்கிற கேள்விதான் உங்கள் நாவல்களின் முக்கியச் சரடாக இருந்துவருகிறது.
நான் வளர்ந்ததே போராட்டங்களுக்கு நடுவேதான் என்பதை நீங்கள் ஞாபகம் கொள்ளவேண்டும். பிரிட்டிஷ், ஆப்பிரிக்க வீரர்களும் இத்தாலியப் போர்க்கைதிகளும் சூழ்ந்திருந்த நாட்டில் 1938 இல் பிறந்தேன். கென்யாவில் காலனியக் குடியேறிகளின் அரசு அப்போது மிக பலமாக இருந்தது – ராணுவம், நீதித்துறை என்று அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது பிரிட்டிஷ் அரசு, அதை எதிர்த்து 1952இல் மாவ் மாவ் என்றழைக்கப்படும் கென்ய மீட்பு மற்றும் விடுதலைப் படையினர் ஆயுதம் ஏந்தினர், அதில் சாதாரண விவசாயிகளும் உழைக்கும் மக்களுமே இருந்தனர். அவர்களில் ஒருவர் என் சகோதரர்.
எங்கள் குடும்பம் பெரியது, நான்கு தாய்மார்களும் ஒரு தந்தையுமாக பலதார மணவழக்கம் கொண்ட குடும்பம், ஒரே இடத்தைப் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து வந்ததால் நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாகவே இருந்தோம். அரசியல்தான் எங்களைக் கூறு போட்டுவிட்டது. பிரிட்டிஷாரை எதிர்த்து குட் வாலஸ் மலைகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது மாற்றாந்தாய் மகனாகிய டம்போவோ காலனிய இராணுவப்படையில் இருந்தான். ஷூ பாக்டரியில் பணிபுரிந்து கொண்டிருந்த மற்றொரு சகோதரனைக் காண அவர்கள் இருவரும் தனித்தனியே ஒருநாள் இரவு கிளம்பி வந்திருக்கின்றனர், வீட்டுவாசலில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதும் ஆளுக்கொரு திசையாகச் சிதறி ஓடிவிட்டனர். காலனியச் சிப்பாய்க்குப் பயந்து ஒருவன் ஓட, எங்கே இந்த மாவ் மாவ் படைக்காரன் தன்னைக் கொன்றுவிடுவானோ என்று இன்னொருவனும் ஓடிவிட்டான்! இப்படி ஒன்றோடொன்று மல்லுக்கட்டும் படைகளின் நடுவே நான் வளர்ந்ததால்தான் எனக்குள்ளும் மல்யுத்த யோசனை ஏற்பட்டிருக்கவேண்டும்.
குத்துச்சண்டையும் கொஞ்ச காலம் உங்களை வசீகரித்திருந்தது இல்லையா?
ஆமாம், அல்லையன்ஸ் உயர்நிலைப்பள்ளியில் என்னுடன் படித்தவன் குத்துச்சண்டை வீரனாக இருந்ததால் நானும் கைகளில் உறைகளை மாட்டிக்கொண்டு களத்தில் குதித்துவிட்டேன். நான் விட்ட முதல் முரட்டுக் குத்திலேயே எதிராளி கீழே விழுந்துவிட்டதைப் பார்த்து அன்று பயந்தவன்தான், அதன் பிறகு குத்துச்சண்டை வளையம் பக்கமே நான் போகவில்லை.
உங்கள் நாவல்களில் உங்கள் வாழ்க்கை வரலாறும் குடும்பக் கதைகளும் அடிக்கடி தென்படுவதுண்டு. அது ஒரு கடமையென்று நினைத்துச் செய்கிறீர்களா?
தெரிந்தே செய்ததில்லை. உதாரணத்திற்கு, என்னுடைய இரண்டாவது நாவலான Weep Not, Child (1964) என் சுயசரிதையே, இல்லையென்றும் சொல்லலாம். ஜோரோகேவுக்கு இரண்டு தாய்மார்கள்தான், என்னைப்போல் நான்கு இல்லை, ஆனால் நாவலின் தொடக்கம் எனது இரண்டாவது நினைவுக்குறிப்பு நூலாகிய Dreams in a Time of War (2010)இல் வரும் முதல் காட்சியைப் போலவே இருக்கும் – என் அப்பாவின் மூன்றாவது மனைவியாகிய என் அம்மா என்னைப் பள்ளிக்கு அனுப்பியதை விவரிக்கும் காட்சி. அம்மாவின் பெயர் வான்ஜீகூ. படிப்பு எனும் விஷயம் எனக்கும் முன்பாக அம்மாவின் கனவாக இருந்தது. என் வீட்டுப் பாடங்களை அவர் மேற்பார்வை செய்வதுண்டு; பிறகுதான் எனக்குத் தெரியவந்தது அம்மாவுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது, நான் என்ன செய்கிறேன் என்பதைக் கேள்விகளாகக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பது.
பின்னர் எனக்கும் அரசாங்கத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டபோது, என் கொள்கைகளை விட்டுத்தரச் சொல்லி என்னை வற்புறுத்தாத ஒரே நபர் அம்மாதான். நான் சொல்லும் காரணங்களைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொள்வார், ஓ அப்படியா, உனக்குச் சரியென்று பட்டதைச் செய், என்று அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் என் பக்கம்தான் இருந்தார். என்னால் அதை உணர்ந்துகொள்ள முடிந்தது.
உங்கள் உடன்பிறந்தவர்களும் அடிக்கடி உங்கள் நாவல்களில் தென்படுவதுண்டு.
ஆமாம், மாற்றாந்தாய் மகனாகிய என் சகோதரன் கிடோகோ பற்றி எழுதியிருக்கிறேன். ரொம்பவே இனிமையான பலசாலி இளைஞன் அவன், அழகன். அவனால் பேச முடியாது காதும் கேட்காது – சைகைமொழியில்தான் பேசுவான். எங்கள் எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும். பிரிட்டிஷ் படையினர் எங்கள் கிராமத்தைச் சூறையாடியபோது அவன் கொல்லப்பட்டான். நான் பள்ளியில் இருந்து ஆறு மைல்களுக்கும் கூடுதலான தூரத்தை வெறுங்காலில் நடந்து வீட்டுக்கு வந்து பார்த்தால் வீட்டில் உணவில்லை என்று தெரியவந்தது. நான் திரும்ப எத்தனித்தவேளை எனக்கும் என் சகோதரி ஒருத்திக்கும் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. கிடோகோவுக்குக் காது கேட்காது என்பதால் பிரிட்டிஷார் நிற்கச் சொல்லியும் அவன் ஓடிக்கொண்டே இருந்ததால் அவர்கள் அவனைச் சுட்டுவிட்டனர். அவனொன்றும் மாவ் மாவ் படைவீரன் கிடையாது – காது கேட்காத ஒரு பாவப்பட்ட ஜீவன் மட்டுமே.
என் சகோதரிகளில் ஒருத்தியாகிய வாபியாவும் கூட என் புத்தகங்களில் பல்வேறு வடிவங்களில் தோன்றியிருக்கிறாள். அவளுக்குக் கண்பார்வை கிடையாது, குச்சி வைத்து நடப்பாள் – அந்தக் காலத்தில் சக்கர நாற்காலிகள் கிடையாது – எலும்பே இல்லாதவள்போல் தடுமாறுவாள். படுக்கப்போகும்போது எங்களுக்குக் கதை சொல்வாள், மிக அபாரமான ஞாபகசக்தி அவளுக்கு, தோத்திரப் பாடல்களை நினைவுபடுத்த முடியாமல் என் உடன்பிறந்தவர்கள் திணறும்போது அவள்தான் உதவிக்கு வருவாள். அவள் எங்கள் சமூகத்தின் ஒரே கலைஞர், ஒரே பாடகி – எங்கள் குடும்பத்தின் ஹோமர். அவளிடம் அப்படியொன்றும் நிறைய இல்லை. ஆனால் இருந்ததையெல்லாம் மற்றவர்களுக்கே கொடுத்தாள், இது என்னை மிகவும் அசைத்துப் பார்த்த ஒரு விஷயம்.
The Perfect Nine இன் வாரீஜியா எனக்கு நினைவுக்கு வருகிறார் – நடக்கமுடியாத அந்தக் கடைக்குட்டி அதனாலேயே மற்றவர்களை “முழுமை” ஆக்குவாளே. வாபியாவுடனான உங்களின் இந்த உறவால்தான் அந்தக் கதாபாத்திரத்தின் மேல் பிரத்தியேக நேசம் காட்டினீர்களா?
இருக்கலாம். ஆனால் வாரீஜியாமேல் எனக்கு எப்போதுமே ஒரு வசீகரம் உண்டு. நாங்கள் வளர வளர, கிக்கூயூ மக்களின் தொன்மக் கதையில் வரும் மகள்களான கிக்கூயூவையும் மும்பியையும் பற்றித் தெரிந்துகொண்டோம். வாரீஜியாவின் மற்ற சகோதரிகள் திருமண வயதை எட்டியதும் அவர்களை மணம் முடிக்க நான் நீ என்று வரன்களிடையே போட்டி இருந்தது. ஆனால் வாரீஜியா பக்கம் மௌனமே இருந்தது. அவளைப்பற்றி எந்தத் தகவலும் இல்லாததால் அந்தக் கதையை என் கண்ணோட்டத்தில் The Perfect Nine இல் சொல்லியிருக்கிறேன். உடல் குறையென்று சொல்லப்படும் சவால்களைக் கடந்து வந்ததோடு, அன்புக்கும் வீரத்துக்குமான மொத்த உருவமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவள் அவள். அவளே காவியநாயகியாக உருவானாள்.
உங்களின் வாழ்வும், கென்ய மீட்பு மற்றும் விடுதலைப்படையின் அரசியலும் எப்போது உங்கள் புனைவுகளின் சாராம்சம் ஆகின?
கம்பாலாவில் உள்ள மக்கரேரே பல்கலைக்கழகத்தில்தான் நான் எழுதத் தொடங்கினேன். நைரோபியில் ஆப்பிரிக்கர்களை வெளியூர்க்காரர்கள் போல நடத்துவார்கள்; எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது, நான் கம்பாலாவுக்குச் சென்று இறங்கியதும், அந்நகரம் முழுவதும் எந்தப் பயமும் இல்லாமல் ஆப்பிரிக்கர்கள் சுற்றித்திரிவதைக் கண்டு வியந்துபோனேன். அதுநாள்வரை மன உளைச்சலில்தான் வாழ்ந்துவந்தேன் என்பதை மக்கரேரேவில் சேர்ந்த பிறகே தெரிந்து கொண்டேன் என்பேன். நடந்த அனைத்தையும் சிந்தித்துப் பார்ப்பதற்கான நேரத்தை மக்கரேரேதான் எனக்குக் கொடுத்தது.
கென்யாவின் காலனியப் படைகள் உங்களிடம் கடுமையாக நடந்துகொண்டதை In the House if Interpreter (2012)இலும் Dreams in a Time of War இலும் எழுதியிருக்கிறீர்கள் – ஆரம்பப்பள்ளியில் படித்தபோது இளம் சிப்பாயி ஒருவன் உங்களை முகத்திலேயே அடித்ததையும், பிறகொருமுறை பள்ளிச்சீருடையில் இருந்த உங்களை பஸ்ஸில் இருந்து இறக்கிக் கைது செய்ததையும். உங்களை எவ்வாறு இந்த நிகழ்வுகள் பாதித்தன?
மனதைவிட்டு அகலாதவை அவை – துப்பாக்கியும் அதிகாரமும் இருப்பதாலேயே என் வயதையொத்த ஒருவன் என்னை அடித்த அந்த அடி. அடுத்தது, மக்கரேரேவுக்குப் போக நான் காத்துக்கொண்டிருந்தபோது நடந்த கைது சம்பவம், மிக மிக அநியாயம் அது. போலீஸார் பஸ்ஸுக்குள் அடையாளச் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர், நான் வரி கட்டாமல் ஏமாற்றியதாகச் சொன்னார்கள், நானொரு மாணவன் என்பதாலேயே என்னிடம் வரி ரசீதுகள் ஏதுமில்லை, அதை நிரூபிக்க என்னிடம் ஆவணங்களும் இருந்தன. அதுதான் நான் முதல்முறை நீதிமன்றத்துக்குப் போனது, எனக்காக நானே வாதிட வேண்டியிருந்தது. நாம் சிறுவர்களாக இருக்கும்போது, பெரியவர்கள் பொய் சொல்ல மாட்டார்களென்று நினைக்கிறோம். ஆனால் போலீஸார் அன்று கொடுத்த வாக்குமூலம் முழுக்கத் திரிக்கப்பட்ட பச்சைப்பொய்.
சாட்சி சொல்ல என் முறை வந்தபோது, என் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல துடியாய்த் துடித்தேன். நீதிபதி என்னிடம் தலைமை அதிகாரியைக் கேள்வி கேட்கச் சொன்னார், எனக்கோ குறுக்கு விசாரணை பற்றி எதுவும் தெரியாது, அச்சமயம் பார்த்து அல்லையன்ஸ் உயர்நிலைப்பள்ளியில் கற்றுக்கொண்ட விவாதபாணி ஒன்று சட்டென நினைவுக்கு வந்தது, பிறகு சூடுபிடித்துக் கொண்டது. அவரைக் கேள்விகள் கேட்டுக் கேட்டு என்னைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதைக் கண்டுகொண்டேன் – “இது எப்போது நடந்ததென்று நினைவிருக்கிறதா?’ அது நினைவிருக்கிறதா?” போலீஸ்காரர் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்லிக்கொண்டே போக, விளைவாக என்னை விடுவித்துவிட்டார்கள்.
உண்மைதான் எனக்கு எப்போதும் பலம் தந்தது. நம் பக்கம் உண்மை இருக்கும்போது நாம் உறுதியாக இருக்கலாம். பின்னர் என்னை காமிட்டிக்குக் கொண்டு சென்றபோது, எதையும் எழுதி வைத்துக்கொள்ளாமலேயே ஐந்து நீதிபதிகள் கொண்ட தீர்ப்பாயத்தின் முன் என்னால் பதிலளிக்க முடியுமென்று தெரிந்துகொண்டேன், ஏனெனில் என்ன நடந்ததென்று எனக்கு மிக நிச்சயமாகத் தெரிந்திருந்தது. நான் பற்றிக்கொள்ள உண்மை இருந்தது.
சிறையில் இருந்தபோது ஒரு நாவலையும் நினைவுக்குறிப்பையும் எழுதியிருக்கிறீர்கள். உண்மையை உரைக்க எந்த இலக்கியப் பாணியை விரும்புவீர்கள்?
புனைவோ நினைவுக்குறிப்போ எதுவாக இருந்தாலும் வேறெந்த வடிவத்தையும் விட கதைவடிவில் யோசிக்கவே எனக்கு விருப்பம்.
நாடகம்?
என் நாடகங்களும் முக்கியமாகக் கதைகளே, எந்த நாடகத்தையும் நான் திடுதிப்பென்று எழுதியதில்லை. மக்கரேரே மாணவனாக இருந்த நான் நாடகங்கள் எழுதத் தொடங்கியதே அங்கிருந்த தங்கும் விடுதிகளின் குழுக்களிடையே நிலவியப் போட்டியால்தான், என் குழுவின் மானம் வேறு கவலைக்கிடமாக இருந்தது – சென்ற வருடம் அவர்கள் அப்படியொன்றும் சோபிக்கவில்லை.
என் முதல் நாவலான The River Between(1965) கூட ஒரு போட்டியால்தான் வெளிவந்தது. பணத்துக்காகத்தான் அதை எழுதினேன். ஆயிரம் கென்ய ஷில்லிங் – இன்றைய மதிப்பில் ஐந்து அமெரிக்க டாலர்கள் – பரிசு கிடைக்குமென்ற ஆசையில் நாவலை உடனடியாக எழுதி முடித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். போகப் போக எனக்கே கதையில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் இளம் எழுத்தாளர்களிடம் எப்போதும் சொல்வேன், உங்களை எழுதத்தூண்டும் காரணியைப் பற்றிக் கவலையே படாதீர்கள். உங்கள் காதலியைக் கவர எழுதிகிறீர்களா, தவறேயில்லை. ஆரம்பித்துவிட்டால் போதும், எழுத்து தானாக வரும்.
ஒரு நாவலை எப்படித் தொடங்குகிறீர்கள்? ஏதேனும் திட்டம் போட்டா?
நான் திட்டம் எதுவும் போடுவதில்லை. எழுத எழுத நாவல் அதுவாக உருவாகத் தொடங்கிவிடும். பொதுவாக, ஆரம்பிக்கும்போது எனக்குப் பிரச்சினை வரும்தான், ஆனால் உருவாகும்போது வழிகாட்டும் வரைபடம் போலே வரும். சிலசமயங்களில் ஒரு பிம்பமாக – உதாரணத்திற்கு, யாரோ நடந்து செல்லும் காட்சியாக – உருவாகிவரும். சிலசமயங்களில் நினைவில் இருந்து உருவாகிவரும். கானா நாட்டுக்காரராகிய சமூக ஆர்வலர் கே.ஏ.புசியா கொடுத்த கல்வியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போதுதான் Weep Not, Childஇன் முதல்வரி எனக்குத் தோன்றியது, அதேபோல் தென்கொரிய கவிஞர் கிம் ச்சி-ஹா நிகழ்வுத்தொகுப்பாக எழுதிய “ஐந்து கொள்ளைக்காரர்கள்” எனும் கவிதைதான் Devil on the Crossஐ தொடக்கி வைத்தது. எழுபதுகளில் நான் டோக்கியோவுக்குச் சென்றிருந்தபோது அவர் எழுத்தைப்பற்றித் தெரிந்துகொண்டேன், எழுதியதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டாரென்றும் கேள்விபட்டேன். தொழிலதிபர்களையும், அரசியல்வாதிகளையும், இவர்களை ஒத்தோரையும் கொண்ட குழு ஒன்று விருந்து ஒன்றில் தாங்கள் செய்த ஊழல்களைப் பற்றிப் பெருமை பீற்றிக்கொள்ளும் கவிதை அது, அதை நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். 1976இல் அவருடைய எழுத்தை நைரோபி பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தினேன், அதன்பிறகு, தென்கொரிய அரசுப் பிரதிநிதி ஒருவர் என் அலுவலகத்துக்கே வருகைதந்து கிம் ச்சி-ஹா எவ்வளவு மோசமானவர் என்று எனக்கு விளக்கிச் சொன்னார். நான் அவரிடம், ஆனால் பாருங்கள், இங்கு கென்யாவில் எழுத்தாளர்களை சிறையில் அடைப்பதில்லை, என்று சொன்னேன். வெகு சீக்கிரத்திலேயே Devil on the Cross எழுதியற்காக நானே உயர்பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டேன்.
சிறைக்குச் செல்வதற்கு முன்பு கென்ய ஐரோப்பியக் குடியேறிகளின் சமூக வாழ்வைப் பற்றிய வரலாற்றை எழுதிக்கொண்டிருந்தீர்கள். ஏன் அது பிரசுரமாகவே இல்லை?
என்னிடம் அப்போது ஒரு இலக்கியத் தரகர் சேர்ந்திருந்தார், இந்த யோசனையைச் சொன்னது அவர்தான். A Colonial Affair என்று அதற்குப் பெயரிட நினைத்தோம். அதற்கு முன்பணமாகப் பெரிய தொகையை எனக்குப் பெற்றுத்தந்தார் – என்னுடைய நாவல்களுக்குக் கூட அவ்வளவு பணம் எனக்குக் கிடைத்ததில்லை. ஹேப்பி வால்லியின் வாழ்முறையைத் தெரிந்துகொள்ள பழைய செய்தித்தாள்களையும் குடியேறிகளின் நினைவுக்குறிப்புகளையும் படித்துக்கொண்டு ஆவணக் காப்பகங்களிலேயே ஆரம்பத்தில் கிடையாய்க் கிடந்தேன். ஆனால், குடித்துக் கும்மாளமிடும், அடுத்தவன் மனைவியோடு தகாத தொடர்பு கொள்ளும் இந்த வெள்ளைக் குடியேறிகளை – என் பாஷையில் சொல்வதானால் சொர்க்கத்தில் இருக்கும் ஒட்டுண்ணிகளை – ஆராய எனக்கு மனமும் இல்லை விருப்பமும் இல்லை என்பதைக் கண்டுகொண்டேன். அதனால் கிடைத்த பணத்தை இழந்தேன். எனது வருங்கால உரிமைத்தொகைகளில் இருந்து அந்த முன்பணம் கழிக்கப்பட்டது.
உங்களின் முதல்கட்டப் பிரதியை யாருக்கேனும் காட்டுவீர்களா?
இப்போதெல்லாம் நான் எழுதிய பத்திகளை உரக்கப் படித்துக் காட்டுகிறேன், குறிப்பாக என் குழந்தைகளிடம் – அவர்களுக்கு அதைக் கேட்கப் பெரிதாக விருப்பம் இருப்பதில்லை. செய்துகொண்டிருக்கும் வேலையைப் பொதுவாக நான் யாரிடமும் பகிர்வதில்லை. ஆனால் 1962இல், Weep not, Child இன் முதல்கட்ட எழுத்தை சினுவா அச்சீபியிடம் காட்டினேன். மக்கரேரேவில் என் வகுப்புக்கு அவர் வந்திருக்கிறார், பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய ஆங்கிலத்தில் எழுதும் ஆப்பிரிக்க எழுத்தாளர்களின் மாநாட்டில் மீண்டும் அவரைச் சந்தித்தேன். சில பக்கங்களை மட்டும் வாசித்து விட்டு அவற்றில் குறிப்புகள் எழுதிக்கொடுத்தார். அதில் ஒரு வரி என் நினைவில் உண்டு, சொல்லவந்ததை இழுத்து எழுதியிருந்தேன் என்பதைக் குறிக்க “செத்த பாம்பை அடிக்காதே” என்று குறிப்பிட்டிருந்தார், அந்த அறிவுரை எனக்கு ரொம்பவே உபயோகமாக இருந்தது. பின்னர் என் கையெழுத்துப் பிரதியை அச்சமயம் அவரது பதிப்பாளராக இருந்த ஹைனமன்னிடம் காட்டியிருக்கிறார், அவர்தான் இப்புத்தகத்தையும் பதிப்பித்தார்.
எழுதியதை ரொம்பச் சரிபார்ப்பீர்களோ?
சமயங்களில் நிறையவே. இப்போதும் நினைவிருக்கிறது, The River Betweenஐ நான் மிக நன்றாக எழுதிக்கொண்டே போனபோது ஒரு இடத்தில் வந்து நின்றுவிட்டேன். நான் காலத்தில் பின்னோக்கிப் போய், கதையை இன்னும் சில வருடங்கள் முன்பிருந்து தொடங்க வேண்டுமென்று நினைத்தேன். நீளம் தாண்டுவதை போலத்தான் இதுவும் – விசையைக் கூட்ட இன்னும் சில அடிகள் பின்னால் போகவேண்டியிருக்கும்.
அந்தப் புத்தகத்தில் முத்தோனி எனப்படும் ஓர் இளம்பெண் பெண்ணுறுப்புச் சிதைவு செய்துகொள்வதற்காகத் தன் குடும்பத்தை எதிர்த்து நிற்பாள். உங்கள் பத்திரிகை வாழ்வின் ஆரம்பத்தில் பெண்ணுறுப்புச் சிதைப்பை ‘கொடூரம்’ என்றவர் நீங்கள். ஆனால் நாவலில் இதை நீங்கள் கையாண்ட விதம் பலதளங்களிலும் கேள்வியை எழுப்புகிறதே.
பெண்ணுறுப்பு சிதைப்பு நாம் ஊக்கப்படுத்த வேண்டிய ஒரு சடங்கு கிடையாதுதான். அதேசமயம் அதைச் செய்துகொள்பவர்களை முட்டாள் என்றோ கிறித்துவத்துக்கு எதிரானவர்கள் என்றோ சொல்லவும் வேண்டியதில்லை. அவர்கள் பிசாசுகள் என்பதுபோலத் தாக்க வேண்டியதில்லை. விஷயங்களை அவர்கள் தாமாக உணரவேண்டும், அதுபற்றிய அறிவு புகட்டப்பட்ட வேண்டும். ஒரு பத்திரிகையாளனாக நான் ரொம்பவே ஆணித்தரமாகவே எழுதியிருக்கிறேன், ஏனெனில் ஒரு சாதாரணப் பத்திக்கட்டுரையில் நுணுக்கங்களுக்கு இடமில்லை. நாவல் அப்படியல்ல, அங்கு பிணக்கு வரும், இடர் வரும். அதனாலேதான் The River Betweenஇல் பெண்ணுறுப்புச் சிதைப்புக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரிப்பும் இல்லை. என் நாவலில் முத்தோனி செத்துப்போவாள், அப்படியாக அவளை நான் தண்டித்துவிட்டேன் என்று அர்த்தமில்லை. இப்படியும் நடக்கலாம் என்றுதான் சொல்லவருகிறேன்.
பெண்ணுறுப்புச் சிதைப்புச் சடங்கானது சுதந்திரப் போராட்டத்தின் இரு பக்கங்களாலும் அரசியல்ரீதியாகக் கட்டப்பட்டிருந்தது, அத்துடன், கென்யாவில் பள்ளிகள் நடத்திவந்த சில மிஷனரிகள் தேசியவாதப் போராட்டத்தை எதிர்த்துப் போரிடும் ஒரு வாய்ப்பாக இந்தச் சடங்கை எதிர்த்தனர். அவர்கள் கெடுதி என்றெல்லாம் அதைச் சொல்லவில்லை – நாம் கிறித்துவரா இல்லையா என்பதைப் பரிசோதிக்க இதை உபயோகித்துக்கொண்டனர், அவ்வளவுதான்.
ஒடுக்குமுறையின் கருவியாக மதம் உபயோகப்படுத்தப்படலாம் என்பதை எப்போது உணரத் தொடங்கினீர்கள்?
தொழிலாளர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தவரும் “Amazing Grace” எழுதியவருமான ஜான் நியூட்டனின் பாடல்வரிகளைப் பற்றி உங்களின் Birth of a Dream Weaver(2016)இல் ஆலோசிக்கும்போது நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீகள் – ”தம்மால் முடிந்த அளவு பாவங்களை வாழ்நாள் முழுவதும் செய்தாலும் மரணப்படுக்கையில் இருக்கும்போது அந்தப் பாவங்களைக் கழுவிக்கொள்ள முடியும் என்பதைப் பேரரசர்கள் அறிந்துகொண்ட அந்த நொடி கிறித்துவம் பேரரசுகளின் மதமாக உருவாகிவிட்டது.”
இது படிப்படியாக நடந்தது. பதின்வயதில் இறைபக்தியோடுதான் இருந்தேன், ஆனால் The River Betweenஐ எழுதிய நேரத்தில் நான் கிறித்துவத்தைக் கடுமையாக விமர்சித்தேன், குறிப்பாக கிறித்துவ மிஷன்களுக்கும் கென்யாவின் காலனியத் திட்டத்துக்கும் இடையே இருந்த தொடர்பைப் பற்றி. ஒரு கட்டத்தில், ஆன்மீகத்துக்கும் மதத்துக்கும் பெரிய வித்தியாசமிருப்பதை உணர்ந்துகொண்டேன். பெரும்பாலான மத இயக்கங்களின் ஆரம்பப்புள்ளியை ஆராய்ந்தால், அவை சாதாரண உழைப்பாளியின் பக்கம் இருந்ததைக் காணமுடியும். இயேசுவின் சீடர்கள் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களே – மீனவர்கள், இவர்கள் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவர்களென்று எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. ரோமானியப் பேரரசையும், பரிசேயர்கள் என்போரையும் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டிப் புரட்சி செய்தவர் அவர். இதையேதான் புத்தமதத்திலும் காண்கிறோம். புத்தர் செல்வச்செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் கிட்டத்தட்ட அனைத்தையும் துறந்து காட்டுக்குப் போகிறார், தனது சீடர்களும் தன் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காக. முகம்மதுவின் ஆரம்பகாலத் தீவிர விசுவாசிகளில் பெரும்பாலானவர்கள் பெண்களே, ஒருவன் நூறு பெண்களை மணம் முடிக்கலாம் என்பதை எதிர்த்து நான்கோடு அதைத் தடுத்து நிறுத்தியவர் அவர் என்பதால். இதில் பிரச்சினை என்னவென்றால் பல மதங்களும் முதலில் சடங்குகளைத் தொடங்குகின்றன, கொஞ்ச காலத்திலேயே அவை பழக்கங்களாக மாறி ஆன்மீகத்தை விடவும் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. அதன்பிறகு, நீ நான்கு வேளையும் தொழுதாயா? எனும் கேள்வியாக அது ஆகிவிடுகிறது. பிறகு சடங்கு சம்பிரதாயங்களைச் சமுதாயத்தில் ஆதிக்கச் சக்திகள் – பணக்காரர்கள் – தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுகின்றனர்.
அப்படியானால் மதங்களை ஆரம்பித்துவைத்த ஆன்மீகம் இயல்பாகவே புரட்சிகரமானதென்று சொல்ல வருகிறீர்களா?
பைபிளையும் கறுப்பின அமெரிக்கர் போராட்டத்தில் அது ஆற்றிய பங்கையும் பாருங்கள். “O Freedom” பாடல் உங்களுக்குத் தெரியுமா? மிக சக்திவாய்ந்த ஆன்மீகப்பாடல் அது. வரலாற்றின்படி பார்த்தால், அடிமை மக்களுக்கு முறையான கல்வி மட்டுமல்ல மொழியும் கூட மறுக்கப்பட்டிருந்தது – தோட்டப்பண்ணைகளில் ஆப்பிரிக்க மொழிகள் தடைசெய்யப்பட்டிருந்தன. எனவே அவர்கள் தங்கள் பாரம்பரியத்தின் தாளங்களை ஆங்கிலத்தின் சப்தங்களோடு திருமணம் செய்துவைத்தனர். விளைவாக ஒரு புது மொழி அமைப்பு கிடைத்தது, அந்த மொழி ஆன்மீகங்களை உற்பத்தி செய்தது. பால் ரோப்சன் “Go Down, Moses” பாடுவதை நினைத்துப்பாருங்கள். கறுப்பின அமெரிக்கர் வரலாற்றில் மட்டுமல்ல, எங்களின் ஆப்பிரிக்க வரலாறுகளிலும் பைபிள் கிட்டத்தட்ட ஒரு புரட்சிகரமான பங்கையே ஆற்றியிருக்கிறது. ஜோமோ கென்யாட்டா போன்ற கென்யர்கள், மோசஸால் வழிநடத்தப்பட்ட – ஃபாரோக்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இஸ்ரேலின் – குழந்தைகளோடு அவ்வப்போது தங்களை ஒப்பிட்டுக்கொண்டனர்.
உங்கள் எழுத்தில், கறுப்பின அமெரிக்கர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்களின் போராட்டங்களுக்கு இடையே சில தொடர்புகளை வரைகிறீர்கள். உதாரணத்திற்கு மாவ் மாவ் இயக்கத்தினர் கொண்டிருப்பது “வெகுஜன வெறி” என்ற ஜே.சி.காரோதெர்ஸுக்கும், சுதந்திரம் கேட்ட அடிமை மக்களின் ஆசையை “மனநோய்”என்ற அமெரிக்காவின் சாமுவல் ஏ.கார்ட்ரைட்டுக்கும் இடையே. புலம்பெயர்ந்தோரின் இதுபோன்ற தொடர்புகள் பற்றி முன்னரே அறிந்திருந்தீர்களா?
கென்யாவின் ஆரம்பகாலப் போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தியதால் அந்தக் காலத்தில் பெரிய நாயகனாகப் போற்றப்பட்ட ஹார்ரி துக்கு பற்றிய கதைகளையும் பாடல்களையும் கேட்டுதான் வளர்ந்தேன். அவருடைய நண்பரும் ஆலோசகருமான மணிலால் தேசாய் காந்தியுடன் தொடர்புகள் கொண்டிருந்த ஓர் இந்தியப் போராளியாவார், அத்துடன் துக்குவுக்கு உலகளாவிய கறுப்பின முன்னேற்றக் கழகத்தின் மார்க்கெஸ் கார்வேயுடனும் உறவு இருந்தது. அதனால்தான் அவரை பிரிட்டிஷார் சிறையில் அடைத்தனர் என்று நினைக்கிறேன்.
கென்ய வரலாற்றின் தொன்மத்தில் பங்களித்த ஒருவராக துக்கு என்னை எப்போதுமே வசீகரித்திருந்தார். ஆனால் சிறைபட்டபோது அவர் உடைந்துபோனார், தொழிலாளர்களை ஒழுங்கமைக்க அவர் பின்பற்றிய கொள்கைகளைத் தொலைத்துவிட்டார். பின்னர் என் எழுத்துப்பணியில், அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதும்படி யாரோ என்னைக் கேட்டுக்கொண்டார்கள். இதற்காக அவருடைய வீட்டுக்கே சென்று அவரைச் சந்திக்கவும் செய்தான். ஆனால் என்னால் இதைச் செய்யமுடியாது என்பதை உணர்ந்துகொண்டேன்.
வெள்ளை நிறுவனங்கள் – உதாரணத்திற்கு, கிழக்காப்பிரிக்க வேளாண் மற்றும் வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிந்தபோது – நடத்திய ஒடுக்குமுறையோடு தொடர்புடைய கருமையைக் கண்டுகொண்டதைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள், வாசிப்பின் வழியாகவும் இதைக் கண்டிருந்தீர்கள். இதே சிந்தனையை வெளிக்காட்டிய வேறு சில எழுத்தாளர்கள் யார்?
அல்லையன்ஸில் இருந்தபோது புக்கர் டி.வாஷிங்டனின் Up from Slaveryஐ வாசித்திருக்கிறேன். ஆனால் கறுப்பின அமெரிக்க இலக்கியத்தையும் கர்ரீபியன் இலக்கியத்தையும் மக்கரேரேவில்தான் கண்டடைந்தேன். இந்த எழுத்தாளர்களைப் பற்றி எங்கள் ஆங்கிலத்துறை எங்களுக்குக் குறிப்பிட்டதேயில்லை. ஆனால் சரித்திர ஆசிரியர் ஒருவர் சி.எல்.ஆர்.ஜேம்ஸ் போன்ற சிந்தனையாளர்களையும் ஜார்ஜ் லாம்மிங்கின் நாவல்களையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போதும் இப்போதும் லாம்மிங்கின் நாவலான In the Castle of My Skin வெகு அற்புதமாக வடிக்கப்பட்ட எழுத்தாகவே எனக்குத் தெரிகிறது. அந்நூல் என்னுடைய Weep Not, Child நாவலுக்குப் பல விதங்களில் உயிர்ப்பூட்டியிருக்கிறது. பார்படாஸின் கிராமத்துச் சமூகத்தை இத்தனை உயிர்த்துடிப்புடன் அவரால் வெளிப்படுத்த முடிந்ததென்றால் என்னாலும் அதையே கென்யாவில், கென்யாவுக்காகச் செய்யமுடியுமென்று அப்போது நினைத்தேன் என்பது ஞாபகத்தில் இருக்கிறது.
லீட்ஸில் இருந்தபோது அரசியல், அடிமைமுறை, புரட்சி ஆகியவற்றின் அடிப்படையில் லாம்மிங் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதினேன்; என்னுடைய ஆய்வுப்பயணத்தில் அது ஒரு திருப்புமுனை என்பேன். ஆக்ஸ்போர்டுக்கும் கேம்பிரிட்ஜுக்கும் எதிராக லீட்ஸ் உருவாகிக் கொண்டிருந்த காலம், ரொம்பவே உற்சாகமளிக்கும் இடம் அது. உழைப்பாளர் கட்சி அரசாள, லீட்ஸ் யுனைட்டட் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்பின விளையாட்டுவீரரான ஆல்பர்ட் லூயி ஜோஹன்னிசன்னை அப்போது அறிமுகப்படுத்தியிருந்தது. மக்கரேரேவில் இருந்தே எனக்குப் பழக்கமாகியிருந்த கென்ய மாணவன் ஒருவன் விடுமுறைக்கு பிரான்சுக்குச் சென்றிருந்தான், அவன் லீட்ஸுக்குத் திரும்பிவந்தபோது Les damnes de la teree எனும் நூலின் கசங்கிய பிரதியொன்றைக் கொண்டுவந்தான் – இப்படித்தான் நான் ஃப்ராண்ட்ஸ் ஃபானனைக் கண்டடைந்தேன். காலனிய மாணவர்கள் அனைவர் கைகளுக்கும் இந்நூல் சென்றடைந்தது. சுதந்திரம் பெற்ற பிறகும் கூட நாட்டில் சுரண்டல் ஏன் மாறவேயில்லை என்பது மார்க்ஸையும் ஃபானனையும் வாசிக்கும்வரை எனக்குப் புரிந்திருக்கவில்லை. ஆப்பிரிக்காவின் நிலை குறித்த மிகப்பிரதான காரணியை எங்களுக்குப் புரியவைத்ததன் மூலம் ஃபானன் எங்கள் கண்களைத் திறந்துவிட்டார். இந்தச் சிந்தனையை Petals of Blood(1977) தான் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருந்தது என்றாலும், A Grain of Wheat(1967) இலும் அது உண்டு.
வயதையும் மனமுதிர்வையும் எட்டுவதை முக்கியப்படுத்திச் சொல்லும் உங்களின் முந்தைய நாவல்களை விடவும் A Grain of Wheat, Petals of Blood ஆகிய இந்நூல்கள் கட்டமைப்பில் மிகப் புதிதாக இருந்தன, எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?
வடிவத்தைப் பொறுத்தவரை, முன்பு எழுதப்பட்ட அந்த இரு நாவல்களும் என் படிப்பின் விளைவாக உருவாகியிருந்தன. மக்கரேரே மாணவனாக இருந்தபோது, யதார்த்த மரபின் அங்கமாக இருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல்களை நான் வாசித்துக்கொண்டிருந்தேன். லாம்மிங்கோ அச்சீபியோ யார் எழுதியிருந்தாலும் அதை ஒரு ஆங்கில நாவலை வாசிப்பதைப் போலத்தான் வாசித்தேன்.
ஆனால் நான்காம் வருட முடிவில் எனது முதுநிலை ஆய்வறிக்கைக்காக கான்ராடை வாசித்தேன். ஒரு சில வழிகளில் பார்த்தால் அவரொரு பாரம்பரியக் கதைசொல்லி, அவர் நாவல்களை எழுதிய முறையோ – ஒருவர் கதை சொல்ல அது இன்னொரு கதைக்குப் போய் அங்கிருந்து இன்னொன்றுக்குப் போய் என்று – அப்படியே என் சமூகத்தின் வாய்மொழிக் கலாச்சாரத்தை எனக்கு நினைவுபடுத்தியது. மைய நேர்க்கோட்டுக் கதையில் இருந்து, கடந்தகாலத்தையோ வெவ்வேறு பகுதிகளையோ அடிப்படையாக வைத்துக் கிளைக்கதைகள் முளைத்துவரும் முறை.
கான்ராட்டின் தாக்கம்தான் A Grain of Wheat எழுதத் தூண்டியதா? சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் கதையாக இருந்தாலும் அதில் வரும் முன்னிகழ்வுகள் நாவலுக்கு ஒரு காவியத்தன்மையை தந்தன.
இருக்கலாம், ஏனென்றால் அப்போதுதான் நான் கான்ராட்டின் Under Western Eyes படித்திருந்தேன். அதைத் தெரிந்தேதான் செய்தேன் என்றாலும் பல்வேறு அமைவுகளையும் காலங்களையும் குரல்களையும் ஒருசேரக் கையாளத் தெரிந்துகொண்டதில் அப்படியொரு கிளர்ச்சி எனக்கு. எப்படிச் செய்வதெனத் தெரிந்துவிட்டால் போதும் கதையை உலகத்தின் முடிவுக்கும் கொண்டுபோகலாம் அல்லது ஆதிக்கும் திரும்பிப் போகலாம். Petals of Blood இல் இந்த உத்தியை மேற்கொண்டு கொண்டுசெல்ல முயன்றேன் – ஒரு கிராமத்தைச் சேர்ந்த நான்கே கதாபாத்திரங்களை வைத்து கென்யாவின் ஒட்டுமொத்த வரலாற்றையும் இதில் கொண்டுவந்தேன். சிறையில் Devil on the Crossஐ எழுதியபோது, இன்னும் எளிய கட்டமைப்பை உபயோகித்தேன். ஏதோவொரு நகரத்துக்கும் நைரோபிக்கும் இடையே வாரீங்கா மூன்று முறை பயணிக்கிறான்.
Matigari இன்னும் எளிமையாக இருந்தது. காலத்தை விடவும் இடத்துக்கான தேடுதல் வேட்கை அது.
ஆமாம், அதில் பெரிதாக ஒன்றுமே நடக்காது என்றாலும் எல்லாமே இருந்தது என்பதுதான் எனக்குப் பிடித்த விஷயம்.
Devil on the Cross, Matigariஇன் எளிமை நீங்கள் கிக்கூயூவில் எழுத முடிவுசெய்ததால் உண்டானதா? ஒருவகையில் பார்த்தால், உங்களின் இலக்கியப் பயணத்தை ஆதியில் இருந்து தொடங்க வேண்டியிருந்தது.
Matigariஇல் ஒரே வேடிக்கைதான். ஆனால் ஆங்கிலத்தைச் சார்ந்திருக்கும் பழக்கத்தை உடைத்து வெளியேறிக்கொண்டிருந்த எனக்கு Devil on the Crossஇல்தான் எல்லாக் கஷ்டமும். சிறையில் நான் சந்தித்த முக்கியப் பிரச்சினையே அடிக்கடி என்முன்னே வந்துநின்ற இந்தக் குட்டிப்பிசாசு தான் – ஆங்கிலேய உடையணிந்த பிசாசு. கிக்கூயூ மொழிக்காரர்களிடம் எழுத்துப்பழக்கம் பெரிதாக இல்லாததால் சரியான சொற்பிரயோகங்களைத் தேடிச் சிரமப்பட்டேன். உதாரணத்திற்கு imperialism போன்ற வார்த்தைகள் – உடனே இந்தக் குட்டிப் பிசாசு என்னிடம் வந்து சொல்லும், அடடா, ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்? நான்தான் இருக்கிறேனே…
கிக்கூயூ மொழியில் ஒருவித வழுக்கல் உண்டு. ஒரு வரியை எழுதிவிட்டு அடுத்த நாள் காலை அதை வாசித்தால் அதற்கு வேறொரு அர்த்தம் வந்திருக்கும். விட்டுவிடலாமா என்று அடிக்கடி தோன்றியதுண்டு. ஆனால் கிக்கூயூவில் ஒலிக்கும் இன்னொரு குரல் என்னைப் போராடச் சொல்லும்.
சிறையில் இருந்தபோது கிக்கூயூவில் நாவல் எழுதவேண்டுமென்று ஏன் முடிவெடுத்தீர்கள்?
1977இல் கூகி வா மிரீஇயுடன் சேர்ந்து கிக்கூயூ மொழியில் நான் எழுதிய I Will Marry When I Want எனும் நாடகத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டேன்; இது பின்னர் நூலாகவும் (1980, மொழிபெயர்ப்பு 1982) வெளியானது. ஆங்கிலத்தில் எழுதிய நாடகங்களுக்காக போலீஸார் என்னை எத்தனையோ முறை விசாரித்திருந்தாலும் சிறையில் தள்ளுமளவுக்குப் போனதில்லை என்னும் உண்மை என்னைத் தாக்கியது. இந்த நாடகத்துக்காக மட்டும் ஏன் சிறையில் அடைக்கப்பட்டேன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன், மொழிப்பிரச்சினை என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது. அச்சமயம் ஆப்பிரிக்க அரசாங்கம்தான் ஆட்சியில் இருந்தது, கிக்கூயூ மொழியில் வெகு சரளமாகப் பேசக்கூடியவராக அதிபர் இருந்தார். Devil on the Cross எழுதியபோது இவையெல்லாம் என் மனதைச் சுற்றிச் சுற்றி வந்தன.
நாடகத்தின் கதையை விடவும் அது சொல்லப்பட்ட மொழிதான் அரசாங்கத்தைக் கோபப்படுத்தியதென்று நினைத்தீர்களா?
நாடக அரங்கை கிராமத்துக்கே கொண்டுவந்ததுக்காக நாங்கள் பாராட்டப்படுவோம் என்று எதிர்பார்த்தேன். தொடக்ககாலத்தில் இருந்தே காமிரீத்துச் சமூகக் கல்வி மற்றும் பண்பாட்டு மையம் ஒரு சமூக அமைப்பாகவே கருதப்பட்டது. நடிகர்களும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களே, காட்சிகளை மெருகேற்ற அவர்களின் நடிப்பு மிக முக்கியம். காலனிய முறையில் அறிவுத்திறனும் தனித்திறனும் மறைக்கப்பட்டதைக் காட்ட முற்பட்டோம். அதைத் துல்லியமாக நடிப்பில் வெளிப்படுத்த கடும் உழைப்பும் விரிவான செயல்முறையும் வேண்டும். எங்கள் சமூக மொழியை உபயோகித்தால்தான் இதெல்லாம் நடந்தேறும்.
என் கைது பற்றி எனக்கென்ன குழப்பமென்றால், பின்காலனிய ஆட்சியை இதைவிடவும் மிக வெளிப்படையாக விமர்சித்த நாடகங்களை நான் முன்பே எழுதியிருக்கிறேன், அதிலும் நான் கடுமையாகத் தாக்கியெழுதிய Petals of Blood நாவல்களையெல்லாம் சொல்லவே வேண்டியதில்லை. மிகத்தெளிவாக என் எதிர்ப்பைப் பதிவுசெய்யவே Devil on the Crossஐ கிக்கூயூவில் எழுதினேன், அந்த அளவுகூட இந்த நாடகத்தை எழுதியிருக்கவில்லை. அப்போது எனக்கு நானே சொல்லிக்கொண்டேன், அல்லும் பகலும் கடும் காவலில் இருந்தபோதும் சரி, என்னை இந்தச் சிறைக்கு எது கொண்டுவந்ததோ அதையே நான் இங்கு செய்வேன். எனவே வர்க்கப் போராட்டத்தைப் பற்றி கிக்கூயூவில் – என்னை இங்கு கொண்டுவந்து சேர்த்த மொழியிலேயே – ஒரு நாவலை எழுதினேன். இதை எழுத எனக்குப் பேனாக்களும் காகிதங்களும் கொடுத்து உதவியவர்கள் சிறை வார்டன்கள்! எழுதியதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன் என்பதைக் கேட்டு அவர்களில் பலரும் குழம்பிப்போனார்கள். இதற்குப் பின்னால் வேறேதேனும் காரணம் இருக்கலாம் என்றுதான் நினைத்தார்கள். வெளியே நடக்கும் எதையும் அவர்கள் எங்களிடம் சொல்லக்கூடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்குத் தேவை செய்தி அல்ல – அவர்களிடம் நான் கேட்க விரும்பியது கிக்கூயூவைப் பற்றி. வேடிக்கை என்னவென்றால், சில வார்டன்கள் எனக்கு மொழி ஆசிரியர்களாக ஆகிவிட்டார்கள்.
நீதிமன்ற வழக்கில் இருந்து தப்பிக்கக் காலனியப் பள்ளியில் படித்த விவாதப் பாணி உங்களுக்கு உதவியதைப் போலவே வார்டன்கள் உங்கள் நாவலுக்கு உதவியிருக்கிறார்கள். ஒடுக்கியவர்களின் கருவிகளை வைத்தே அவர்களை எதிர்த்திருக்கிறீர்கள்.
கழிவறையில் உபயோகிக்க எனக்குத் தரப்பட்ட காகிதம் சுத்தப்படுத்த சரிப்படவில்லை. ஆனால் எழுத நன்றாகவே பயன்பட்டது. பாக்கெட்டுகளில் வந்த அந்தக் காகிதம் உண்மையில் ரொம்பவே தரமாக இருந்தது.
கிடைக்கும் பொருட்களை வைத்துப் படைக்கும் யோசனையை “வறியக் கோட்பாடு” என்று நீங்கள் Globalecticsஇல் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. சாமுவேல் பெக்கட் முதலில் பிரெஞ்சில் எழுதிவிட்டுப் பிறகு அதையே அவர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கையில் அவரது படைப்பில் உபயோகமான ஒரு கட்டுப்பாட்டை உணர்ந்திருக்கிறார். கிக்கூயூவில் எழுதியபோது நீங்களும் அப்படி உணர்ந்தீர்களா?
பெக்கட் ஐரிஷில் எழுத முயன்றிருக்க வேண்டும்! உண்மையைச் சொல்வதானால், கிக்கூயூவில் எழுதியபோது எத்தனையோ சவால்களை எதிர்கொண்டேன், பதிப்பாளரைக் கண்டுபிடிப்பதும் அதில் ஒன்று. கென்யாவிலுமே கூட எத்தனையோ பிரச்சினைகள் எழுந்தன. வியாபாரத்தில் எப்படிப் பேசவேண்டும், பள்ளியில் என்ன கற்பிக்கப்படவேண்டும், என்ன புத்தகங்கள் விற்கப்படவேண்டும் என்பதெல்லாமே ஆங்கிலத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. 1952இல் ஆப்பிரிக்கர்கள் நடத்திய பள்ளிகளை பிரிட்டிஷார் மூடிய பிறகு ஆப்பிரிக்க மொழிப் புத்தகங்களும் துண்டுப் பிரசுரங்களும் மிகச் சொற்பமாகவே கிடைத்தன. கென்யாவின் கலாச்சாரமும் அறிவுள்ள சமூகமும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டன. கிக்கூயூ மொழியில் முன்னெப்போதும் நடந்திராத ஒன்றை என் நாவல்களில் மூலம் நான் செய்தேன். என் புத்தகங்கள் ஒரு பாரம்பரியத்தையே ஸ்தாபித்தவையாகக் கருதப்படுகின்றன.
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து காலனியத் தாக்கத்தை நீக்குவதில் நீங்கள் நீண்டகாலமாகவே ஆர்வம் கொண்டிருந்தீர்கள். 1968இல் நைரோபி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பாடத்துறையை ஒழிக்க வேண்டுமென்று நடந்த விவாதத்தில் நீங்களும் பங்குபெற்றிருந்தீர்கள்.
ஒரு வகையில், பின்காலனித்துவமும் காலனியத் தாக்க நீக்கமும் 1968ல்தான் நைரோபியில் தொடங்கியது. நைஜீரிய வரலாற்றாசிரியரான கென்னத் டைக், கென்ய வரலாற்றாசிரியர் பெத்வெல் ஓகோட் -அல்லையன்ஸில் எனக்குக் கணிதம் கற்பித்தவரும் இவரே – ஆகியோரின் அனுபவங்களில் இருந்து நானும் என்னுடன் பணிபுரிந்தோரும் நிறைய கற்றுக்கொண்டோம். வாய்மொழிப் பதிவுகளும் வரலாற்றின் முக்கிய மூலப்பொருளாக ஒத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினார்கள். எங்கள் கேள்வி என்னவென்றால், நாம் கென்யாவில் இருக்கும்பட்சத்தில் நம் அனுபவங்களின் மையமாக இருக்க வேண்டியது நைரோபியா, இல்லை லண்டனா? ஆங்கிலப் பாடத்திட்டத்தின் அஸ்திவாரத்தையே நாங்கள் கேள்வி கேட்டு அசைப்பதாகச் சிலர் ஆத்திரப்பட்டார்கள் – ஷேக்ஸ்பியரை ஒழித்துவிட்டு கர்ரீபிய கம்யூனிஸ்டுகளை உள்ளே கொண்டுவர நாங்கள் முயல்வதாக கென்ய பாராளுமன்றம் சொல்லியது. வி.எஸ்.நைபாலை ஒரு கம்யூனிஸ்டாகப் பார்த்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது!
சிறையில் இருந்தபோது மொழியைப் பற்றி எனக்குள் எழுந்த சிந்தனைகள் அதற்கும் முன்னர், அதாவது 1966இல் நியூயார்க்கில் நடைபெற்ற பென் அகில உலகக் கருத்தரங்கில் நான் பங்கெடுத்தபோதே உருவாகத் தொடங்கிவிட்டன. ஆர்தர் மில்லர் தலைமையில் அமைந்த விவாதக் குழுவில் பாப்லோ நெரூதா, இக்னாஷியோ சிலோனே ஆகியோர் பங்கேற்றனர். சமகால இத்தாலிய நாவல்கள் மற்ற மொழிகளுக்கு – குறிப்பாக ஆங்கிலத்துக்கு – மொழிபெயர்ப்பாகும்போது அவை சந்திக்கும் போதாமையைப் பற்றி சிலோனே குறைப்பட்டார். அப்போது, ஒன்றிரண்டு வார்த்தைகளோடு மட்டும் இயங்கும் ஏதோவொரு பாண்டு மொழி இல்லை இத்தாலிய மொழி என்று தொனிக்கும்படிப் பேசினார். அது என்னைக் குத்தியது. ஒட்டுமொத்தப் பார்வையாளரும் பார்க்க நான் எழுந்துநின்று அவர் பேச்சைத் திருத்தியது இன்றும் என் நினைவில் உண்டு. நான் கடுங்கோபத்தில் இருந்தேன், லீட்ஸுக்குத் திரும்பியபோது – அப்போது நான் A Grain of Wheatஇன் பாதி வேலையில் இருந்தேன் – இப்படி ஆங்கிலத்தில் எழுதுவதன் மூலம் சிலோனே சொன்னது சரிதான் என்று நிரூபிக்கிறோமோ என்று எனக்குள் உள்ளூர ஓர் உணர்வு. அப்போது தொடங்கியதுதான் இந்த மனப்போராட்டம்.
காலனியத் தாக்கத்தை நீக்குவது மேற்கை – ஹாலிவுட்டை, பத்திரிகைத்துறையை, பதிப்பகங்களை, பல்கலைக்கழகங்களை – பெருமளவில் கவர்ந்திழுத்திருக்கிறது. உங்கள் கொள்கையை நிலைநாட்டி விட்டதாக உணர்கிறீர்களா?
Decolonizing the Mind (1986) வெளிவந்தபோது ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் சிலர் என்னை ஒருவிதமாக வெறுத்ததை என்னால் அப்போது உணரமுடிந்தது. வண்டியின் பின்னாலிருப்பதைக் காட்டும் கண்ணாடியைப் பார்த்து வண்டியை ஓட்டச்சொல்கிறார் கூகி என்று யாரோ சொன்னார்கள். ஆப்பிரிக்க மொழிகளின் பின்தங்கிய நிலையைப் பற்றிய அவரது கருத்தைத் தெரியாத்தனமாக அவரே காட்டிக்கொடுத்து விட்டாரென்று அப்போது நினைத்துக்கொண்டேன். இதே நபர் ஆங்கிலத்தில் எழுதுவதில் மிக முற்போக்கானவர்! மற்றொரு சமயம், லண்டனில் நடந்த மாநாடு ஒன்றில் இந்தப் புத்தகத்தைத் தற்காத்து நான் பேசிக்கொண்டிருக்கையில் யாரோ ஒருவர் ஸுலு மொழியில் என்னிடம் கேள்வி கேட்டார். அதன்மூலம் ஆப்பிரிக்க மொழிகளில் பேசவேண்டுமென்ற யோசனையைக் கேலிகூத்தாக ஆக்கப் பார்த்தார்.
பின்னர், பிளேக்கின் வரியாகிய “மணற் துகளில் உலகைக் காண்பது” என்னை ஈர்த்தது. “Globalectics” எனும் யோசனை அப்போது உதித்ததுதான். நமது சொந்த அனுபவத்தை ஒரு மணற்துகளாக கருதிக்கொண்டால், அந்த துகள் வழியாக – நமது சொந்த வரலாறுகளின் வழியாக, நமது சொந்த மொழி வழியாக, அது ஆங்கிலமோ கிஸ்வாகிலியோ – நம்மால் உலகைக் காண முடியும். அதிகாரப் படிநிலையைத்தான் நான் வெறுக்கிறேன். ஒரு மொழியை விட இன்னொன்று உயர்ந்தது என்று சொல்லவேண்டியதில்லை.
உங்கள் வாழ்க்கைக் குறிப்புகளை ஆங்கிலத்திலும், உங்கள் நாவல்களை கிக்கூயூவிலும் எழுதுவது ஏன்?
Decolonizing the Mind தான் ஆங்கிலத்தில் நான் எழுதும் கடைசிப் புத்தகம். அதன்பிறகு வருகின்ற அனைத்தும் கிஸ்வாகிலியிலும் ஆங்கிலத்திலும் இருக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படிச் செய்தால், நான் யார் என்பதை, என்ன செய்தேன் என்பதை அவரவர் விருப்பப்படி விளக்கிக்கொள்ள ஏதுவாகிவிடுமென்று எண்ணினேன். உதாரணத்திற்கு, ஆங்கிலம் ஒரு பரிசுபோலே வழங்கப்பட்டிருப்பதாக அச்சீபே சொன்னதை நான் குறிப்பிட்டிருந்ததை அவர் தவறாகப் புரிந்துகொண்டார். அவர் சொன்னதைத்தான் நான் திருப்பிச் சொல்லியிருந்தேன். ஆனால் அவர் அதை நல்லவிதமாக எடுத்துக்கொள்ளவில்லை.
கிக்கூயூ மொழி நாவல்கள் கிக்கூயூ மொழி பேசுபவர்கள் பலரையும் சென்றடையுமென்று அறிவேன். அதே சமயம் நானொரு ஆங்கிலப் பேராசிரியரும் கூட என்பதால் விவாதத்தில் நீடிக்கவும், நான் கற்பித்த மொழியில் படைப்பூக்கத்தோடு இருப்பதை நிரூபிக்கவும் வேண்டியிருந்தது. உலகெங்கும் பரந்து வாழ்ந்துவரும் என் பேரக்குழந்தைகளுக்காகவும் குழந்தைகளுக்காகவும்தான் உண்மையில் என் வாழ்க்கைக்குறிப்புகளை எழுதினேன்.
Decolonizing the Mindஇல் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதோடு தொடங்குவது முக்கியம் என்றீர்கள். ஆனால் Globalecticsஇல் உங்கள் வாதத்தைத் திருத்திக்கொண்டீர்கள் போலிருக்கிறதே.
2002இல் நான் நியூயார்க் பல்கலைக்கழகத்தை விட்டு அர்வினுக்கு வந்து அகில உலக எழுத்து மற்றும் மொழிபெயர்ப்பு மையத்தை ஸ்தாபிக்கும் இயக்குநர் ஆனேன். புதிதாக ஒன்றைத் தொடங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். தொடக்கமாக கென்யாவை அர்வினுக்குக் கொண்டுவரலாமா? ஏற்கெனவே கலிபோர்னியாவில் இருப்பதைப் பற்றி யோசிக்கலாமென்று முடிவு செய்தேன். எனவே, எங்களின் முதல் பொது நிகழ்ச்சிக்கு அமெரிக்கப் பழங்குடியின எழுத்தாளர்களையும், கர்ரீபிய எழுத்தாளர்களையும் கூட்டிவந்தேன். அடுத்து, கறுப்பின அமெரிக்கர்கள் அமெரிக்கக் கலாச்சாரத்திலும் அமெரிக்கப் பேச்சிலும் ஏற்படுத்திய மாற்றத்தைக் கவனப்படுத்தினோம், இப்படியாக உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் ஆட்களை அழைத்துவரத் தொடங்கினோம். இரண்டே வருடங்களில் ஃபிஜி, சமோவா, ஐஸ்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து எழுத்தாளர்களை அழைத்துவந்தோம், அத்துடன் அந்நாடுகள் அனைத்திலும் எங்களின் திட்டப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. காலப்போக்கில் நாங்கள் ஒருவரையொருவர் எப்படி அடையாளப்படுத்திக் கொண்டோம் என்பதை அறிந்துகொள்வதே எங்களின் நோக்கமாக இருந்தது.
ஆமாம், நான் தெரிந்தேதான் என் கருத்தைத் திருத்தியமைத்துக்கொண்டே இருக்கிறேன். இப்போது சொல்கிறேன், இருக்குமிடத்தில் இருந்தே தொடங்குங்கள், அங்கிருந்து உலகோடு தொடர்பு கொள்ளுங்கள். சமீபத்தில் காலனியத் தாக்கத்தை நீக்குவது பற்றி யேலில் பேசினேன், பிறகு டி.எஸ்.எலீயட்டைப் பற்றி நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். அவர் அமெரிக்காவில் பிறந்தவர் என்று தெரிந்தபோது நான் அதிர்ச்சியடைந்தது இப்போதும் நினைவில் உண்டு. ”மரபும் தனிநபர் திறமையும்” எழுதிய ஒருவர் இங்கிலாந்துக்குப் போனாரென்றால் என்ன அர்த்தம், மரபோடு மறைமுகமாகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவா? இங்கே மரபே இல்லையா? அப்படியானால் மத்திய அமெரிக்கர்களின் எழுதுமுறை எதை அடிப்படையாகக் கொண்டது?
யேலின் கட்டடக்கலை என்னை எப்போதுமே அசர வைக்கும் – அப்படியே ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போல இருக்கும்! அமிலத்தை ஊற்றிக் கற்களைப் பழசாக்கினார்கள் என்று கேள்விப்பட்டேன். இதுதான் காலனியத்தின் பின்விளைவு. காலனிய முறை இங்கேயும் மக்களை அவர்களின் பூர்வீகத்திலிருந்து வெளியேற்றி இருக்கிறது.
கான்ராட்டின் எழுத்து உங்களை ஈர்த்ததை ஒப்புக்கொள்ளும் அதே சமயம் அவருடைய இனவாத அரசியலையும் விமர்சிக்கிறீர்கள். இலக்கியத்தில் நிலவும் காலனிய மனப்போக்கை எதிர்ப்பதில் காலனிய நாட்டு அறிஞர்களின் பங்கு என்னவாக இருக்கிறது?
காலனியத்தை ஏவும் நாட்டைச் சேர்ந்த வாசகரின் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் எங்களுக்குத் தெரிந்துவிடும். நாங்கள் பார்க்கும் கோணமே வேறு. உதாரணத்திற்கு, மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த செல்வச்செழிப்பான கதாபாத்திரம் ஒன்றைப் பண்ணையார் என்று ஜேன் ஆஸ்டன் விவரித்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அவன் அடிமைகள் வைத்திருந்தவன் என்று எங்களுக்குத்தான் தெரியும்.
Wuthering Heights எனக்கு ரொம்பப் பிடிக்கும், பெற்றோர் இல்லாத ஏழைக் கதாபாத்திரமான ஹீத்கிளிஃப்பிடம் ஏதோ புதிர் இருப்பதாகவே எனக்கு எப்போதும் தோன்றும். லிவர்பூல் தெருவில் இருந்து கண்டெடுக்கப்பட்டவன் அவன் என்பது நமக்குத் தெரியும். மற்றவர்களிடமிருந்து இவனது – சரும நிறம், முடி கூட – மிகவும் வித்தியாசமாக இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கும்.
எங்கு வருகிறீர்கள் என்று புரிகிறது….
அந்த நாவலை நான் வாசித்த சமயம், வாசகர்கள் பலருக்கும் தெரியாத உண்மை – லிவர்பூல் அடிமைகளின் கூடாரம் என்பது – எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அந்நாவல் இங்கிலாந்துக்காரர் ஒருவரிடம் உரையாடியதற்கும் என்னிடம் உரையாடியதற்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. எமிலி ப்ரோண்டி அதில் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை என்றபோதும் ஹீத்கிளிஃப் ஒரு அடிமையாகவோ அடிமையின் மகனாகவோ இருந்திருக்கலாம் என்பதில் பெரிய சந்தேகமில்லை.
“கலாச்சாரத் தொடர்பு பிராணவாயுவைப் போன்றது” என்று நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இந்த வரி எமே செஸேராவின் Discourse on Colonalismஇல் இருக்கிறது. இதன் வழி, கிக்கூயூவில் என் வேர்களை ஊன்றிய அதேவேளை ஷேக்ஸ்பியரையும் எவ்வளவு மதித்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். ஆங்கிலத்தை ஷேக்ஸ்பியர் எந்தளவு மாற்றியமைத்திருந்தார் என்பதை அப்போது என்னால் பார்க்க முடிந்தது. இதை அவர் எவ்வளவு அனுபவித்துச் செய்திருப்பாரென்று அதற்கு முன்பு என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. கிக்கூயூவில் எழுதும்போது நானும் அப்படித்தான் உணர்கிறேன்.
Wizard of the Crow உங்களின் தலைசிறந்த படைப்பு என்று நினைக்கிறேன், நீங்கள் அனுபவித்து எழுதியதுபோல் தோன்றும் நாவலும் அதுதான். களியாட்டமும் நையாண்டியும் எக்காளமிட்ட படைப்பு அது, கழிவுகளை வைத்துச் செய்யும் நகைச்சுவை – ஒரே மலமும் குசுவுமாக – கூட அதில் இருந்தது. எங்கிருந்து இந்த விளையாட்டுப் புத்தி வந்தது?
அதுவொரு விசித்திரமான காலம். 1997 வாக்கில் நான் நியூ ஜெர்சியில் வசித்துவந்தேன், ஒருநாள் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்றேன். எதாவது வலி இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் போகும் கலாச்சாரத்தில் இருந்து வந்தவன் நான், அமெரிக்காவிலோ நோய் இல்லாவிட்டாலும் மருத்துவரிடம் போய் அனைத்தையும் பரிசோதித்துக்கொண்டனர். எனக்கு புராஸ்டேட் புற்றுநோய் என்று கண்டறிந்தார்கள் – என்னுடைய ஆண்டிஜன் அளவு அபாயகரமான அளவு அதிகமாக இருந்ததாகச் சொல்லி நான் மூன்றுமாதமே உயிர்வாழ்வேன் என்றார் அந்த மருத்துவர். அன்றிரவு வீட்டுக்குத் திரும்பியபோதுதான் Wizard of the Crow இன் முதல் வரி எனக்குத் தோன்றியது. இதுதான் என்னுடைய கடைசி நாவலாக இருக்குமென்று நினைத்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் அதை முடிக்க எண்ணினேன். ஆனால் அது முடிவடையாமல் இழுத்துக்கொண்டே போனது, நானும்தான் என்ன செய்யமுடியும். எழுதிக்கொண்டே இருந்தேன். வெறிபிடித்தது போல் எழுதிய இந்த நாவலைப் போலே வேறெந்த நாவலையும் நான் எழுதியதில்லை.
முடிக்கவேண்டும், முடிக்கவேண்டும் என்பது மட்டுமே என் மனதில் சதா ஓடிக்கொண்டிருந்தது. கடைசியில் அந்த நாவலை முடிக்க ஆறு வருடங்கள் ஆனது, பிறகு அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டியிருக்கவே மேலும் சில வருடங்கள் ஆனது.
மிகவும் வருந்துகிறேன் – புற்றுநோய் சரியானதா? இப்போது எப்படி இருக்கிறீர்கள்?
அவர்கள் எனக்குக் கொடுத்த மாத்திரைகள் உண்மையிலேயே அற்புதமானவை. என் மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும் மருத்துவர்கள் இப்போதும் ஆச்சரியப்படுவதுண்டு.
இவ்வளவு சோகமான, அச்சுறுத்தும் பின்னணியில் இருந்து Wizard of the Crow உருவாகியிருக்குமென்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவ்வளவு வேடிக்கையான நாவல் அது, மிகக் கவனமாக வடிவமைப்பும் கூட.
எழுதும்போதே வேடிக்கையாகத்தான் இருந்தது. வாய்விட்டுச் சிரிக்கவும் செய்தேன். நான் கிக்கூயூவில் முன்பு எழுதிய நாவல்கள் இதற்கு என்னைத் தயார்ப்படுத்தியிருந்தன, அத்துடன் அந்த மொழியே வெகு நகைச்சுவையானதுதான். அதில் “If” நோய்கொண்ட டாஜிரிக்காவை ஞாபகமிருக்கிறதா?
இருக்கிறதே, அந்த “வெள்ளை-நோவுக்காரன்”!
அவனுக்கு என்ன நோயென்றால், உங்களுக்கே தெரியும், ஒரு வார்த்தை அவன் தொண்டையில் சிக்கிக்கொள்ளும். கிக்கூயூவில் koruo என்றால் ”If only” என்று அர்த்தம் – உதாரணமாக, “எனக்கு மட்டும் வெள்ளைத்தோல் இருந்தால்” என்று சொல்வதுபோல்.
இரண்டு மொழிகளிலும் இது நன்றாகவே வேலை செய்தது. Koruo இருமுவதைப் போல் ஒலிக்கிறது, If! If! If! மூச்சிரைப்பதுபோலவோ ஆஸ்துமா வேதனை போலவோ ஒலிக்கிறது. கிக்கூயூவில் நீங்கள் எழுதும்போது சொல்விளையாட்டு இயல்பாகவே உண்டாவதைப் போல் எனக்குத் தோன்றுகிறது. மொழிபெயர்ப்பின்போது இந்த வார்த்தைச்சித்து அப்படியேவர முயல்வீர்களா?
இல்லை, அதற்குச் சமமாக எதையேனும் கண்டுபிடிக்கவேண்டும் அல்லது அதே யோசனையைக் கொண்டுவரும் எதையேனும் – உள்ளது உள்ளபடியே மொழிபெயர்க்க முடியாது, அப்படிச் செய்வதில் அர்த்தமில்லை. குறிப்பாக அந்த உதாரணமே சிரமமாகத்தான் இருந்தது. ஒரு காட்சியில், டாஜிரிக்காவை விசாரிக்கும் போலீஸ் அவன் “koruo” என்றதும் சட்டென ஓடிவிடுவார். ஏனெனில் koruo என்பதற்கு “அவர்கள் விரட்டி வருகிறார்கள்” என்றும் அர்த்தம். ஆனால் ஆங்கிலத்தில் if என்றதும் யாரும் ஓடமாட்டார்கள் அல்லவா, எனவே வேடிக்கையைக் கொண்டுவர நாவலின் ஆங்கிலப் பதிப்பில் டாஜிரிக்காவுக்கு மேலும் சில வரிகளைச் சேர்க்கவேண்டியிருந்தது.
Matigariஐ வாங்கூயி வா கோரோ தான் மொழிபெயர்த்தார். நீங்கள் மொழிபெயர்த்திருந்தால் அது மூலத்தோடு இன்னமும் நெருக்கமாக இருந்திக்குமென்று நினைத்தீர்களா?
தெரியவில்லை – நம் புத்தகத்தை நாமே மொழிபெயர்க்கும்போது மந்தமாகி விடுவோமென்று நினைக்கிறேன். கோரோ மிக அற்புதமாகவே மொழிபெயர்த்திருந்தார்.
இருமொழிகளையும் முழுமையாக அறிந்தவராக உங்களைக் கருதுகிறீர்களா?
கிடையாது, கிக்கூயூவில்தான் நான் இயல்பாக உணர்கிறேன். ஆங்கிலம் எனக்கு இப்போதுதானே தெரியும். என் அம்மாக்களும் அப்பாவும் பேசிய மொழி அது இல்லையே. இங்கேயே வளர்ந்த என் பிள்ளைகளைப் போலே நான் ஆங்கிலத்தை உபயோகிப்பதில்லை.
கிக்கூயூவில் எழுதியதைத் திருத்தும் எடிட்டர்களுடன் எப்படி வேலை செய்வீர்கள்?
இங்கு கிக்கூயூவை மிக நன்றாகத் தெரிந்தவர்கள் வெகு சிலரே இருப்பதால் நானே எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் திருத்துபவராகவும் இருக்கிறேன். Wizard of the Crow மட்டும் விதிவிலக்கு. அதன் ஆங்கில மொழிபெயர்ப்புப் பணியை எர்ரோல் மெக்டொனால்டிடம் ஒப்படைத்தேன். அவர் அநியாயத்திற்கு மிக மெதுவாக – வெகு சிரத்தையெடுத்து – வேலை செய்பவரென்றாலும், எனக்கு வாய்த்ததிலேயே மிகத்திறமையான எடிட்டர் அவர்தான். நாவல் மிகக் கடினமாக இருந்ததை எனக்குச் சுட்டிக்காட்டினார் – பல பக்கங்களுக்கு அவர் போட்ட சிவப்புக்கோடுகளாகவே இருக்கும். அவர் வெட்டியதையெல்லாம் நீக்கிவிட்டே கிக்கூயூ மூலத்தில் சேர்த்தேன்.
உங்கள் நாவல்களுக்காகத் தகவல்கள் சேகரித்திருக்கிறீர்களா?
எழுதும்போது வேண்டுமானால் சேகரித்திருப்பேன், எழுதுவதற்கு முன்பு செய்ததில்லை. எனது கவனம் முழுவதும் கதை மீதுதான் இருக்கும். கதையோட்டம் தொடங்கியதுமே, நான் கேள்வி கேட்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் அதுவே என்னைக் கொண்டுபோய்விடும், எனக்கு மனிதர்களிடம் கேள்வி கேட்க ரொம்பப் பிடிக்கும். Wizard of the Crowஇல் வரும் ஒரு கதாபாத்திரம் இந்தியாவுக்குக் கல்விகற்கச் செல்வதாக வரும், அப்போது, கற்றறிந்த என் இந்திய நண்பர்கள் என்னிடம் மகாபாரதத்தை – என்னவொரு வளமான, அற்புதமான காவியம் – வாசிக்கச் சொன்னார்கள். அந்நூலில் காணப்பட்ட நடைமுறை வழக்கம் மிகக் கட்டுப்பெட்டித்தனமாக இருப்பதாகத்தான் முதலில் எனக்குத் தோன்றியது, பிறகுதான், காட்டில் வாழும் ஏழைச்சிறுவன் ஏகலைவனின் கதையைப் படித்தேன். கதைப்படி அவன் வில்வித்தை அறிந்த பெரியவரிடம் சென்று தனக்கும் அம்புவிடச் சொல்லித்தருமாறு கேட்கிறான், அவரோ மறுத்துவிடவே சிறுவன் வீடுதிரும்பி அந்த ஆசிரியரைப் போலவே ஒரு சிலையை வடிக்கிறான். சிலையின் மேற்பார்வையில் ஏகலைவன் ராஜாமார்களை விடவும் சிறந்த வில்லாளனாகிறான், நன்றிசொல்ல பெரியவரிடம் செல்கிறான், அவருக்கோ அதில் திருப்தியில்லை. அவனிடம், “குருதட்சணை கொடுத்துதான் நன்றி சொல்லவேண்டும்” என்கிறார், உடனே சிறுவன் “நீங்கள் என் குரு, என்ன கேட்டாலும் தருகிறேன்” என்கிறான். பெரியவர் ஏகலைவனின் கட்டைவிரலைத் தட்சணையாகக் கேட்கிறார், அப்போதுதான் அவனால் இனி அம்பெய்த முடியாது என்பதால். இப்படி ஒருவரை முடக்கும் செயலைக் கண்டு – உழைப்பவர்களுக்கோ குடியானவர்களுக்கோ முட்டுக்கட்டைப் போடும் செயலாகவே இதை விளங்கிக்கொண்டு – நான் அதிர்ந்துபோனேன். இச்செயலில் நான் மூன்றாம் உலக அரசியலை – மேற்கு ஆப்பிரிக்கர்களையும் ஆசியர்களையும் முடக்கும் போக்கை – காண்கிறேன்.
வாய்மொழிக் கதை வல்லுநரும், கிக்கூயூ கதைகளில் வரும் அரக்கர்களைப் பற்றி நன்கு அறிந்தவருமான வான்ஜீகு கபிராவுடன் The Perfect Nineக்காகக் கலந்தாலோசித்தேன்.
அந்தப் புத்தகம் எளிதாக இருந்ததா?
மூடியிருந்த கண்ணைத் திறந்துவிட்டதைப் போலிருந்தது. அர்வினில் பசிபிக் கடற்கரையோர நெடுஞ்சாலைப் பக்கமாக நான் வசித்தபோது பாறைகளில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். விரிந்த சமுத்திரப்பரப்பு ஏனோ என் பால்யத்தை நினைவுபடுத்தவே, கிக்கூயூ தோன்றிய பழங்கதையை வேறு கோணத்தில் யோசித்துப் பார்த்தேன். இந்தக் கதையில் வரும் மகள்களுக்குச் சகோதரர்கள் கிடையாது, தந்தையாலும் அவர்களோடு எங்கும் வெளியே சென்றிருக்க முடியாது. நான் இப்பெண்களை ஆராய்ந்து பார்த்தேன் – எப்படி இவர்கள் தங்களுக்கான ஆடைகளையும் ஆயுதங்களையும் உருவாக்கினார்கள், எப்படி வேட்டையாடவும் காட்டுமிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் தெரிந்துகொண்டார்கள்? அவர்களின் மனதுக்கும் உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையே படைப்பின் ஒருமைப்பாடு வெளிப்படுவதைக் கண்டேன். அவர்கள் எல்லாம் செய்தார்கள் – அவர்கள்தான் உண்மையான பெண்ணியவாதிகள். நாவலை வெகு சீக்கிரமாகவே – மிஞ்சிப்போனால் மூன்று மாதங்களுக்குள் – எழுதி முடித்துவிட்டேன்.
ஒரு நாவலை எழுதி முடிக்கும்போது கிடைக்கும் திருப்தி இருக்கிறதே, அது ரொம்பவே விசேஷமானது. எனக்குத் தெரிந்து வேறெந்த உணர்வும் அதற்கு ஈடாகாது. நான் நினைப்பதும் சரி, என் குழந்தைகளுக்கு எப்போதும் நான் சொல்வதும் சரி, என்னவென்றால், உங்கள் நாவலின் முதல் வரைவை எழுதும்போது அதில் உங்களின் ஆன்மா இருக்கும். நாம் எழுதும் எல்லா நாவல்களும் நம் ஆன்மாவைச் சுமந்தே இருக்கின்றன, அதைத்தான் வாசகர்களும் விரும்புகிறார்கள்.
முப்பதாண்டுகளாக இங்கு வசிக்கிறீர்கள். அமெரிக்கப் பிரஜை ஆகிவிட்டீர்களா?
இல்லை. கென்யக் குடியுரிமையை இழக்க நான் விரும்பவில்லை. எனக்கு அமெரிக்காவைப் பிடிக்கும், கிட்டத்தட்ட உலகத்தின் எல்லாச் சமூகமும் மதமும் இங்கு ஏதோவொரு வகையில் பிரதிநிதித்துவம் பெற்றுவிடுகின்றன. அவற்றின் தாராளகுணத்தை நான் மெச்சுகிறேன். அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் சமநிலையில் வைத்திருக்கும் அதன் அமைப்பை மெச்சுகிறேன். ஆனால் அமெரிக்காவின் பேரரசவாதப் போக்கும் உலக நாடுகளிடம் அது எடுத்துக்கொள்ளும் இடமும் எனக்குப் பிடிப்பதில்லை. இங்குக் கறுப்பின அமெரிக்கர்களும், கறுப்பர்களும் நடத்தப்படும் விதம் என்னை ரொம்பவே வருத்தப்பட வைக்கிறது.
சான் பிரான்சிஸ்கோவில் ஒரு ஹோட்டலில் “கறுப்பனாக இருந்தும் அமர்ந்ததற்காக” உங்களைத் தொல்லைப்படுத்தியதாகப் படித்திருக்கிறேன்.
அப்போது Wizard of the Crow நூலுக்காக ஒரு சுற்றுப்பயணத்தில் இருந்தேன், என் பதிப்பாளர் என்னை மிக சொகுசான ஹோட்டல்களில் தங்கவைத்தார். காலை உணவுக்கு முன்னர் உணவருந்தும் பகுதியில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தேன், அப்போது நேர்த்தியாக உடையணிந்து பார்க்க மிகவும் கண்ணியமாக இருந்த இளைஞன் ஒருவன் என்னிடம் வந்து “ஹோட்டலின் விருந்தினர்கள் அமரும் பகுதி இது” என்றான். ”நான் இந்த ஹோட்டலில் விருந்தினர் இல்லையென்று எதைவைத்து முடிவு செய்தீர்கள்?” என்று கேட்டேன். அவனோ, “பிளீஸ், நீங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும்” என்றான், இப்படியே எங்கள் வாக்குவாதம் தொடர்ந்தது. அவன் தவறான வார்த்தைகள் எதையும் உபயோகிக்கவில்லை, ஆனால் நான் அங்கு இருக்கக் கூடாது என்பதில் அவன் காட்டிய தீவிரம் இருக்கிறதே, அது இப்போதும் என் ஞாபகத்தில் உண்டு, என்னை யாராவது கத்தியிருந்தால் கூட அவ்வளவு மிரண்டிருக்க மாட்டேன். இதே வேறு மாதிரியான ஒரு சூழலில் அவன் கையில் ஒரு துப்பாக்கியும் இருந்திருந்தால் அதே தீவிரத்துடன் அவன் என்னைச் சுட்டுத்தள்ளியிருப்பான்.
அரவணைப்பது போல் ஒடுக்கும் இனவெறியை, அந்த வெள்ளை இனவெறியின் தீவிரத்தை உங்கள் நாவல்களில் தொடந்து எழுதிவருகிறீர்கள். எப்படி உங்களால் அந்த மனநிலையைப் படம்பிடிக்க முடிந்தது?
அல்லையன்ஸின் தலைமையாசிரியரான ஈ.கார்ரி பிரான்சிஸ் – முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் கொண்டிருந்த இவரிடமிருந்துதான் கற்றிருப்பேன் என்று நினைக்கிறேன். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் உற்பத்தியான அவர், அது தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததற்காக அடிக்கடி விமர்சிப்பதுண்டு. மாவ் மாவ் தீயவர்கள் என்று நினைத்தார், அதே சமயம் அவர்களின் மெய்யான பாடுகளையும் புரிந்துகொண்டார். அவருக்குத் தான் நடத்திய பள்ளியின் மீதும், ஆப்பிரிக்கர்களுக்குக் கல்வி அளிப்பதிலும் அபார நம்பிக்கையுண்டு, அதற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் அவர். அதேசமயம், ஆங்கிலேய மாணவனைப் போலச் சிறப்பாகப் படிக்க ஒரு ஆப்பிரிக்க மாணவனால் ஒருபோதும் முடியாது என்று நம்பியவரும் அவரே.
நீங்கள் மக்கரேரே பல்கலைக்ழகத்தில் பயின்றபோது, The River Between நாவலின் ஆரம்பகட்ட எழுத்துப்பிரதியில், கறுப்பினப் பெண் கதாபாத்திரத்துக்கு “அழகான நீலக்கண்கள்” என்று நீங்கள் குறிப்பிட்டிருந்ததை அறிஞர் ஜெரால்ட் மூர் சுட்டிக்காட்டியதாக Birth of a Dream Weaverஇல் எழுதியிருக்கிறீர்கள். அதன்பின்னர் நடந்த உரையாடல் காதிலே விழாத அளவுக்கு நீங்கள் அதிர்ந்து போயிருந்திருக்கிறீர்கள். காலனியத் தாக்கத்தை உங்களிடமிருந்தே நீக்கிய பயணம் எப்படியிருந்தது?
காலனிய முறையில் வாழ்ந்தவர்கள் எவராலும் காலனியத்தின் தாக்கங்களில் இருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டதாக சொல்லமுடியாதென்றே நினைக்கிறேன். அந்த மனப்போக்கை எதிர்த்து தொடர்ந்து போராடுவதுதான் நம்மால் செய்ய முடிந்த ஒரே காரியம். மனதில் விழுந்த வடுக்கள் ஆற நீண்டகாலம் ஆகும்.
நன்றி : theparisreview, Namwali Serpell
Art : SOMA NAMI BOOKS

Leave a Reply