கவிஞர் முழுமதி எம்.முர்தளாவின் ‘மழையாகிறேன் வெயிலாகிறேன்’ எனும் கவிதைத் தொகுதி குறித்து எழுதுவதற்கு நீண்ட நாட்களாகச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் எமக்கு முன்னர் எழுத வந்தவர் என்ற வகையில் ஒரு மூத்தவர் (Senior). கொழும்பில் பணிபுரிந்த காலத்தில் அறை நண்பராக இருந்த வகையில் நெருங்கிய நண்பர். ‘பெருவெளி’ சஞ்சிகைக் காலத்தில் எம்மோடு பங்கேற்றுச் செயல்பட்ட வகையில் இலக்கியத் தோழருமாவார். அவருடைய இந்த நூல், இரண்டாவது கவிதைத் தொகுப்பாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கிறது.
முர்தளாவின் கவிதைகளைப் பற்றிப் குறிப்பிடுவதற்கு முன்னர், இன்றைய தமிழ்க் கவிதை மற்றும் ஏனைய இலக்கியங்களின் நிலை தொடர்பாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இன்றைய தமிழ் இலக்கியங்கள், அறிவியல் வளர்ச்சியோடு தங்களைத் தொடர்புபடுத்திப் புதுப்பித்துள்ளனவா என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் இந்தக் கவிதைகளைப் பரிசீலிக்க எண்ணுகிறேன்.
இன்று இலக்கியம் தவிர்ந்த ஏனைய கலைகள் புதிய மேம்பாடுகளைக் கண்டுவருகின்றன. தொழில்நுட்பம் மற்றும் நவீன கலை உள்ளீடுகளால் அவை மெருகேறியிருக்கின்றன. அவ்வாறு எல்லா கலைகளும் மாற்றங்களைக் கண்டிருக்கும் வேளையில், இலக்கியப் பிரதிகளில் இதுபோன்ற மாற்றங்கள் உள்ளடக்கப்படுகின்றனவா என்ற கேள்வி முக்கியமானது. இலக்கியத்தில் இந்த விஞ்ஞான மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என எவரேனும் கருதினால், அவரை இன்றைய இலக்கியக் களத்தில் இருக்கும் ஒரு பாமரராகவே நோக்க முடியும். சினிமா, இசை, ஓவியம் மற்றும் ஏனைய நிகழ்த்துக் கலைகள் அனைத்தும் புதிய அறிவியல் சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களோடு தம்மைப் புதுப்பித்துவிட்டன. ஆனால், இலக்கியம் மாத்திரம் பழைய பஞ்சாங்க நிலையிலிருந்து மீளாமல் உள்ளது.
மொழியைப் பிரதான ஊடகமாகக் கொண்டு செயல்படுவதனால், இலக்கியவாதிகளுக்கு மொழி தொடர்பான தத்துவார்த்த, அறிவியல் புலமை அவசியமாகிறது. இதை, குறிப்பிட்ட மொழி மீதான பாண்டித்தியத்தின் அவசியத்தை நான் வலியுறுத்துவதாகக் கருதினால் அது முட்டாள்தனமாகும். நான் கூற வருவது, மொழியின் செயல்பாட்டோடு தொடர்புடைய தத்துவார்த்தப் பின்னணி குறித்தே ஆகும். மொழியினால் வெளிப்படுத்தப்படும் அர்த்தத்திற்கும், புரிந்துகொள்ளப்படும் அர்த்தத்திற்கும் எத்தகைய உறவு உள்ளது என்பது பற்றியும், எழுத்து, பேச்சு, வாசிப்பு என்பவற்றின் ஆழத்தில் மொழியின் நிச்சயமற்றதன்மை தேங்கியிருக்கிறதா என்பது பற்றியுமான ஒரு பரிசோதனையாகும் இது. இந்த விதமான அணுகுமுறைகள் இன்றிப் படைப்பிலக்கியத்தைத் தொடுவது பாமர இலக்கியச் செயல்பாடாகவே அமையும்.
இத்தகைய சிந்தனைகளோடு முர்தளாவின் கவிதைகளை அவதானிக்கும்போது ஆசுவாசம் அடைகிறேன். அவருடைய கவிதைகள் நான் மேலே குறிப்பிட்ட அணுகுமுறைகளுக்கு நெருங்கி வருவதான உணர்வை ஏற்படுத்துகின்றன.
பேரன்பின் உலகம்
‘பேரன்பின் உலகம்’ என்ற கவிதை ஆச்சரியப்படுத்துகிறது. சொற்கள் நேரடியாக வலியுறுத்துகின்ற வழமையான அர்த்தங்களிலிருந்து கவித்துவ உணர்வை வெளியேற்றுவதற்கு, அதே சொற்களைப் பயன்படுத்தும் ஒரு நுட்பம் இதற்குள் நிகழ்த்தப்படுகிறது. இதன் மூலம் உருவாக்கப்படும் அருவமான உருவம், மனிதகுலம் மீதான காலம் தாண்டிய அக்கறையாக மிளிர்வதை உணர முடிகிறது. இந்தக் கவிதையின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதை விளக்குவதே ஒரு தனி இலக்கியச் செயலாக இருக்கிறது. சொற்களுக்குள் இது என்ன விதமான சித்திரத்தை, பரவசமான காட்சியாக உருவாக்குகிறது எனும் அதன் உருவாக்கம் (Making) சார்ந்துதான் என்னால் இதில் திளைக்க முடிகிறது.
இரண்டு மழை
சொற்கள் எப்போதும் பொதுவான அர்த்தத்தையே கொண்டிருக்கும் என நம்புவோரின் அபிப்பிராயத்தைச் சிதைத்து, அந்த ரசனை நிலையைத் தடுமாறச் செய்யும் புனைவு நுட்பம் கொண்டதாக ‘இரண்டு மழை’ எனும் கவிதை அமைந்துள்ளது. இக்கவிதையில் வேறு வேறு மழைத்துளிகள் பற்றிப் பேசப்படுகிறது; பேருந்தில் (Bus) ஒரு மழைத்துளி, வெளியில் வேறொரு மழை என ஒவ்வொரு இடத்திலும் சொல்லப்படும் மழை, வேறு வேறு மழையாக இருக்கும்படி இந்தக் கவிதை புனையப்பட்டுள்ளது. மழை என்ற பொதுவான விடயத்தை எடுத்துக்கொண்டு, அது குறித்த நமது தற்போதுள்ள பார்வைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, முற்றிலும் வேறுபட்ட ஒரு மழையினூடாக இந்தக் கவிதை பேசுகிறது.
கனவொன்றுக்குள் மிதந்த நேரம்
நாம் நம்பியிருக்கும் கற்பிதங்களுக்கு மாற்றான ஓர் உணர்தலை உருவாக்க முயலும் கவிதையாக ‘கனவொன்றுக்குள் மிதந்த நேரம்’ என்பதைக் கூறலாம். சொல்லும் விதம், எடுத்துரைப்பு முறை என்பன இதில் புதிதாக இருக்கின்றன. மொழியின் ஒருபக்கச் சாய்வுத்தன்மையைச் சிதைத்து, கனவுக்கும் நிஜத்துக்கும் இடையிலான எல்லைகளை அழித்துவிடும் ஒரு புனைவுத் தொழில்நுட்பம் இக்கவிதையில் ஆளப்பட்டுள்ளது. இதன்போது உருவாகும் காட்சி அற்புதங்களின் வழியே வாழ்வு மீதான விமர்சனம் கட்டமைக்கப்படுகிறது.
உள்பெட்டி
‘உள்பெட்டி’ எனும் கவிதை, உள்பெட்டியின் மீது மனிதர்களுக்கு இருக்கும் மோகத்தை உணர்த்துவதோடு, அதனைத் தாண்டியும் சிந்திப்பதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது. உள்பெட்டி என்பதை மெய்நிகர் (Virtual) வெளி சார்ந்ததாகவும், உடலுறுப்பின் உள்ளமைப்பு சார்ந்ததாகவும் எண்ண வைக்கும் ஒரு தந்திரப் புனைவு இக்கவிதைக்குள் செயல்படுகிறது. இன்றைய சமூக வலைத்தளக் கலாச்சாரத்தில், உண்மையைவிடப் போலிகளே பகட்டாகவும் துல்லியமாகவும் உள்ளன. இன்றைய மனிதர்களிடம் ஒரு மெய் (Real) உலகமும் பல மெய்நிகர் (Virtual) உலகங்களும் உள்ளன. இங்கு போலியான நடத்தைகளே நிஜமானவையாக ஏற்கப்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில், நிஜ வாழ்வில் சாத்தியம் குறைந்த சாகசங்களை மெய்நிகர் (Virtual) வெளிச் சாதனைகளாக மாற்றிக்கொள்ள இன்றைய மனிதன் முனைகிறான். இதன்மூலம், போலிகளே உன்னதமானவை எனும் புதிய அர்த்தத்தை ‘உள்பெட்டி’ கவிதை ரகசியமாக உருவாக்குகிறது.
கதை சொல்லும் ஓவியங்கள்
ஒரு காட்சியை எமது புலன்கள் எவ்வாறு புரிந்துகொள்கின்றன என்பதை, உண்மைக்குப் புறம்பான தர்க்க நியாயங்களை மொழிக்குள் நிலைநிறுத்துவதன் ஊடாக விளையாட்டுத்தனமாகக் கட்டமைக்க முடியும் என்பதற்கு ‘கதை சொல்லும் ஓவியங்கள்’ ஒரு சிறந்த உதாரணம். இக்கவிதையில் சொல்லப்படும் சம்பவங்களுக்கு அப்பால், ஒரு ரகசியக் கதை உள்ளே ஓடிக்கொண்டிருப்பதை உணர முடிகிறது. அவர் வெளிப்படுத்த விரும்பும் கவித்துவ மர்மம் (poetry mystery) மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது சம்பவத்தைச் சொல்வதை விட, நமக்குள் உறங்கிக்கிடக்கும் இனம்புரியாத அன்பைத் தூண்டி, அதைக் கசிய வைக்கும் ஒரு நுட்பமாகவே இக்கவிதையின் கூறுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அவர்கள் மூவர்
மொழியழகு மற்றும் கவித்துவ எடுத்துரைப்பு நோக்கில் பார்த்தால், ‘அவர்கள் மூவர்’ கவிதையானது இத்தொகுப்பின் நலிவான கவிதைகளில் ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், இது முன்வைக்கும் சமூக விமர்சனம் (social criticism) முக்கியமானது. பொருளாதாரம் சார்ந்த வாழ்வில் கலைகளுக்கான இடம் என்ன என்ற வாதத்தை இது எழுப்புகிறது. நுகர்வுப் பண்பாட்டில் பொருட்களுக்குள் வாழும் மனிதனுக்கு, கலைகளின் மதிப்பு மிகவும் கீழான நிலையில் உள்ளது என்ற சிந்தனையை இக்கவிதை தூண்டுகிறது. பொருளாதாரம், சந்தை, பணம் என்ற எல்லைக்குள் சுழலும் இன்றைய சூழலில், ஒரு கலைஞனின் படைப்பிற்கும், அதற்காக அவன் செலவிடும் வாழ்விற்கும் என்ன அர்த்தம் என்ற கேள்வியை இக்கவிதை எழுப்புகிறது.
மொத்தத்தில், ‘மழையாகிறேன் வெயிலாகிறேன்’ தொகுதியானது, வாசகர்களின் வழக்கமான சிந்தனை முறைகளைக் கேள்விக்குட்படுத்தி, மொழியின் புதிய சாத்தியங்களையும், நவீன உலகின் சிக்கல்களையும் ஆராய்கிறது. மனதிற்குத் தீனியளிக்கும் (mind feed) மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டும் கவிதைகளை இன்று சந்திப்பது அரிதாக உள்ள சூழலில், இந்தத் தொகுதி அந்த ஏக்கத்தைப் போக்கும் விதமாக அமைந்துள்ளது. இது வெறும் கவிதைத் தொகுப்பு மட்டுமல்ல, சமகால இலக்கியம் பயணிக்க வேண்டிய பாதை குறித்த ஒரு வழிகாட்டியும்கூட.

கிழக்கிலங்கையில் அக்ரைப்பற்றைச் சேர்ந்தவர். இடதுசாரிச் சிந்தனை முகாமில் வளர்ந்து, அத்தோடு இலக்கியம் கோட்பாடு எனப் பன்மைத்தன்மைகொண்ட ஆளுமையாகவும் தொடர்ச்சியான வாசிப்பாளராகவும். ஆங்கிலம், தமிழ், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் வாசிப்பைத் தீவிரமாகக் கொண்ட, ஈழத்து எழுத்தாளர். அத்தோடு, பிரெஞ்ச் மொழியைக் கற்பிக்கும் விரிவுரையாளராகவும் இருக்கிறார். தொண்ணூறுகளில் எழுத வந்த போதும், தனது ஆரம்பகால எழுத்துக்கள் அனைத்தையும் கைவிட்டு, 2000மாம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதியவற்றை மட்டுமே தனது எழுத்தின் அடையாளமாக இன்றுவரை வைத்திருப்பவர்.
அரசியல், புனைவெழுத்துக்கள், நாவல் என்பனவற்றோடு சமகாலத்தின் முக்கியமான கோட்பாட்டு அடிப்படையிலான விமர்சகராகவும் இருக்கிறார். பின்நவீனக் கருத்தியல் சார்ந்த சிந்தனை முறையை இலங்கைத் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தித் தொடர்ந்து இயக்கும் மிகச் சிலருள் மிஹாத் அவர்களும் ஒருவர். பெருவெளி இலக்கிய இதழின் நிறுவனர்களிலும் ஒருவர். பொத்திரியாட் அவர்களின் வேர்ச்சுவல் ரியலிட்டி என்ற கருத்தியலை மையப்படுத்திப் பிரதிகளை விமர்சனத்திற்குள் கொண்டுவந்தவர்களில் மிஹாத் முக்கியமானவர். இதுவரை ஒரு நாவலும், ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.
Leave a Reply