குரலற்றவர்களின் குரலாக 26 கதைகள் ‘காடன் கண்டது’ என்ற தொகுப்பில் பதிவுருத்தப்பட்டுள்ளன. வ.ராமசாமியின் ‘மைக்குறத்தி’ என்ற கதையில் துவங்கி, ஆர்.பாண்டியக் கண்ணனின், ‘கல்குறி’ கதை வரை மிகக் காத்திரமான கதைகளாகத் தொகுக்கப்பட்டுள்ள இச்சிறுகதைகள் மானுட ஆய்வாளர்களுக்குப் புதிய கதவுகளையும், சாளரங்களையும் திறந்து காட்டியுள்ளன.
26 வகையாகப் பிரிக்கப்பட்ட குறவர்களின் பூர்வீகத் தொழில் வேட்டை. அதன் தொடர்ச்சி தேன், தினைமாவு விற்கவும் குறி சொல்லவும் நிலப்பகுதிக்கு வருவாளே மலைக்குறத்தி அவளின் குரல் வடிவில் மைக்குறத்தி கதையாடப்பட்டிருக்கிறது. “காடை, கவுதாரி, மைனா, வாங்கலியோ ஆயாளோ” என்ற குரல் மலைக்குறத்தியின் குரல் இல்லை. பச்சை குத்தனுமா, குறி சொல்லனுமா, காட்டுக் கருவேப்பிலை வாங்கலியோ” என்ற குரல்தான் மைக்குறத்தியின் குரல் என்று முடிக்கிறார் வ.ராமசாமி.
இருளன் ஆசை :
ந.பிச்சமூர்த்தி கோச் வண்டிக்கு ஆசைப்படும் குறவன் இருளன் என்ற பாத்திரம் மூலம் பதிவுருத்தி உள்ளார். சாலையில் செல்லும் கோச் வண்டியில் வண்டியோட்டியின் அனுமதியின்றிப் பின் பக்கத்தில் திருட்டுத்தனமாக ஏறி, வண்டியோட்டியால் சவுக்கடி கொடுக்கப்பட்டு “தள்ளிவிடப்படும் இருளனின் ஆசை. நிராசையாகிப் போனதையும், வெற்றிலை பாக்கு ஒரு வெடயம் எடுத்துப் போட்டுக்கொள்வான். அது பணம் கொடுத்து வாங்கிதோ திருடுயதோ” என்றும் ந.பிச்சமூர்த்தியின் கதை சொல்லல், குறவன் என்றால் திருடன் என்று பொதுப்புத்தி பிரச்சாரமாக அதீதச் சப்தமாக ஒலிக்கிறது.
“அடமானம் அறிவுமதி”
குறிஞ்சி நிலத்தில் விளையும், குறிஞ்சிப்பூ, மூங்கில் அரிசி, மூங்கில் குறுத்து, செந்நெல், தேன், தினை, மா, பலா என்ற மலை வளத்தில் விளையும் தானியங்களை, பழங்களை, குறவர்கள் சேகரித்து நிலப்பரப்பிற்குக் கொண்டு வந்து பண்ட மாற்றம் செய்தவர்கள். மலைவளத்தைக் கொள்ளையடித்த ஆங்கிலேயர்கள் அதை எதிர்த்த குறவர்களை மலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதின் விளைவு, அலைகுடிகளாக மாற வேண்டிய அவலம்.
பண்ட மாற்ற முதல் வியாபாரம் செய்த குறவர்கள் நிரந்தரக் குடியிருப்பு இன்றியும் நிரந்தரத் தொழில் மற்றும் தனது பன்றிகளை வளர்த்து அதை வியாபாரம் செய்திட, கடன் வாங்கும் நிர்பந்தம். கடன் கொடுப்பவன் குறத்தியின் மீது கண் வைத்தே கொடுக்கிறான். கடனை அடைக்க முடியாத நிலையில் அவனின் மனைவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் வன்முறை. இதைத்தான் அறிவுமதி செவிவழிச் செய்தியை வைத்துக் கொண்டு அடமானம் என்ற புரிதலற்ற கதையைப் புனைந்துள்ளார். குறவன் குறத்தியை அடமானம் வைத்துப் பிழைப்பான் என்பது அறிவுமதியின் அறியாமை. ஒரு படைப்பு என்பது இரண்டு விதமாக உருவெடுக்கும். ஒன்று அகத்திலிருந்து மற்றொன்று புறத்திலிருந்து. அறிவுமதி இரண்டாம் நிலைலிருந்தே இக்கதையைப் புனைந்திருக்கிறார்.
பார்வதி – சரோஜா ராமமூர்த்தி – ஸ்டேசன் மாஸ்டர் மனைவிக்கு உறுதுணையாக அழைத்து வந்த, பார்வதி, காடன் என்ற குறவனின் பேச்சில் மனம் மயங்கி அவன் இருப்பிடமான மலைக்குச் சென்று அங்குள்ள அருவியில் தினமும் குளிக்கிறாள். அல்லி மலர்களைக் கூந்தலில் சூடிக் கொள்கிறாள். ஸ்டேசன் மாஸ்டர் மனைவி பார்ப்பனப் பெண். ஒரு பார்ப்பனப் பெண் மற்றொரு பார்ப்பனப் பெண் குறவனரோடு உறவாடி வருவதை ஏற்றுக் கொள்வாளா? ஆணவப்படுகொலை செய்யப்படுகிறாள்.
காடர்கள்: ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பார்வதியை மலை அரசியாக மாற்றி அல்லது நம்பிக்கை கொண்டு, காட்டு மலர்களையும், தேன் தினைமாவுகளையும் படைத்து வணங்குகிறார்கள். பார்வதி என்ற மலைக்குறத்தி காடதிர அரற்றுகிறாள். பாப்பாத்தி குறத்தியாகிறாள். குறத்தி தெய்வமாகிறாள். ஒரு பெண்ணின் வன்கொடுமை மரணத்தில் இருந்துதான் பெண் தெய்வ வழிபாடு துவங்கியிருக்கிறது. அதுதான் குலதெய்வ வழிபாடு என்பது பார்வதி கதையில் பதிவுருத்தப்பட்டிருக்கிறது.
குற்றப் பரம்பரைத் தமிழ் ஒளி
“குறவருக்கும் மறவருக்கும் விடுதலை” என பாரதி பாடியது இந்நொடிவரைப் புழக்கத்தில் உள்ளது. ஒரு குறவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர வேண்டுமென்றால், காவல்துறையிடமிருந்து கடவுச் சீட்டு பெற வேண்டும். இது சுதந்திரத்துக்கு முன்பாக இருந்தது. இன்று வேறு வடிவமாக மாறி உள்ளது. குறவன் என்றாலே குற்றவாளிதான், எந்த விசாரணையுமின்றி அவன் மீது வழக்குப் பதிவு செய்யலாமென்று காவல்துறையில் எழுதப்படாத சட்டம் உள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்த அனைத்துச் சமூகத்திற்கும் குற்றப் பரம்பரைச் சட்டம் இருந்தது. காலப்போக்கில் சமூக மாற்றம், அரசியல் மாற்றம், பொருளாதாரத் தன்னிறைவு என மாற்றம் உண்டானதும், பெரும்பான்மைச் சமூகம் குற்றப் பரம்பரைச் சட்டத்திலிருந்து மீண்டுவிட்டது. ஆனால் குறவர் இனம் இந்நொடிவரை அச்சட்டத்தினால் தொடர் வன்கொடுமைகளைச் சந்தித்து வருகிறது. திருடாத குற்றத்திற்காக, யாரோ எங்கோ நடந்த குற்றத்திற்காக ஆண்களை லாக்கப்பில் வைத்து அடித்துத் துன்புறுத்திப் பொய்க் குற்றத்தை ஒத்துக்கொள்ள வைப்பது, ஒத்துக்கொள்ளாதவர்களை அடித்தே கொன்றுவிடுவது. பெண்களைப் பிறப்புறுப்பில் லத்திக் கம்பை வைத்துக் குத்திக் குதறி வன்கொடுமைப்படுத்துவது. ஒத்துக் கொள்ளவில்லையென்றால் பெண்களின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவி, துடி துடிக்க வைப்பது, இறுதியாக அப்பெண்ணின் கணவர், மகன் முன்பாக நிர்வாணமாக்கி வன்புணர்வு செய்து பிணமாக்குவது போன்ற வன்செயல்குற்றம், பரம்பரைச் சட்டத்தால் இந்நொடி வரை குறவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை பற்றி எனது ‘நுகத்தடி’ நாவல் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன்.
கலெக்டர் அலுவலகத்தில் காகிதம் காணாமல் போனாலும் சரி, கம்போஸ்ட்டில் குப்பைக்கூளங்கள் காணாமல் போனாலும் சரி, அது குறவர்களால்தான் களவாடப்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளூரிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளவர்கள். இதை மேலும் நீட்டிக்கும் கதைதான் குற்றப் பரம்பரைக் கதை.
நரிக்குறத்தி ஜெகசிற்பி
நரிக்குறவர்கள் வாழ்வியலின் முக்கியப் பண்பாடு நரிக்குறத்தி சூரிய உதயத்துக்கு முன் வெளியே சென்று பாசி, ஊசி மணிகள் விற்றுவிட்டு, அந்தி சாய்வதற்குள் குடிசைக்குத் திரும்ப வேண்டும். இல்லையென்றால் அவளை நரிக்குறவன் திருமண வாழ்விலிருந்து தீர்த்து விடுவான். ஒரு நரிக்குறவரின் மனைவி, வேறு ஒரு இளைஞரோடு காரில் செல்வதைப் பார்த்த சிறுவன் தண்டிக்கோடாவிடம் சொல்ல அவன் தாயாரை அடித்து வீழ்த்தும் அவலம். ஆனால் அச்சிறுவன் பார்த்தது நரிக்குறவர் வேடமிட்ட வேறு பெண்ணை. இப்படிப்பட்ட காத்திரமான பண்பாடு பற்றிய ‘நரிக்குறத்தி’ கதையில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஜெயுப்பு வீர வேலுச்சாமி
கிட்டா நாயக்கர் பிடிபட்ட பெருச்சாலியை வதக்கிச் சாப்பிட்டால் நெய் ஒழுகும் என ஏக்கமாய்க் குறவனிடம் சொல்லும்போது இங்கே நாயக்கர் என்ன குறவர் என்ன எல்லாரும் வேட்டைச் சமூகத்திலிருந்துதான் வந்துள்ளோம் என்பதை உணர்த்துகிறது. அதே கிட்டா நாயக்கர் குறத்தியைப் பெண்டாளா நினைத்து அவள் கால்மாட்டில் நின்று மன்றாடுவது சாதித் திமிரைக் காட்டுகிறது. தூக்கத்திலிருந்து எழுந்த குறவப்பெண் கிட்டா நாயக்கரின் அத்துமீறலைப் பார்த்துப் பெண்ணின் பேராயுதமான, எச்சிலைக் காரி அவன் முகத்தில் உமிழ்கிறாள். கிட்டா நாயக்கர் அவள் துப்பிய எச்சிலால் எரிந்து சாம்பல் ஆகிறான் என்று ‘ஜெயிப்பு’ கதை பதிவாகியுள்ளது.
பிரிதொரு மரணம் உதயசங்கர்
குறவர்கள் அலைகுடிகள், அலைவுற்று, அலைவுற்று ஓரிடத்தில் மையம் கொள்ள வழியற்று உண்ண உணவின்றி இருக்க இடமின்றி உயிரற்ற நிலையில் அலைந்தழிந்த குழுவே குறவர் இனம்.
வேறிடம் தேடியலைந்த போது கிழவன் நடக்க இயலாமல் மயங்கி விழுந்தவனுக்கு ஈயப் போனியில் தண்ணீர் கொண்டு வந்து நீர் தருகிறாள் குருவு. கிழவன் எழவில்லை மரணித்தது உறுதியானது. குருவின் கணவன் காளி அவளை “தேவிடியா முண்ட கெழட்டுப் பயல அங்கனயே விட்டுட்டுப் போவேம்ன்னே கேட்டியாடி” எனப் பெருங்குரலெடுத்து அரற்றியடி அடிக்கிறான். பதிலுக்கு இவளும், கீழே கிடந்த கல்லெடுத்து காளியை எறிந்து தாக்குகிறாள். இவர்களோடு வந்த பன்றிகளும், கழுதைகளும் மேய்ச்சலுக்கு அருகில் உள்ள கரிசல் நிலத்திற்குள் சென்று மேய ஆரம்பித்துவிட்டன.
சிறிது நேரம் குருவும், காளியும், பேசவில்லை. அதன்பின் காளி கிழவனுக்குக் கம்பளிப் போர்வையைப் போர்த்தி இரண்டடிக் குழியில் போட்டுவிட்டுத் திரும்பியவனுக்கு, நினைவுதட்டி அவன் மடியில் இருந்த சொக்கலால் பீடியை எடுத்துக் கிழவன் மீது போட்டுக் குழியை மூடினான். குருவு அவனுக்கு உதவி செய்தாள்.
பின்பு மேய்ந்தலைந்த பன்றிக் குட்டிகளையும், கழுதைகளையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். அப்போது குருவைப் பார்த்து “ரொம்பப் பசிக்கிதா” என காளி கேட்டான். அவள் அவனை வாஞ்சையோடு பார்க்கிறாள். காளி தன் டிராயர் சைடு பையிலிருந்து காய்ந்து போன, பன்ரொட்டியின் பாதியை பிய்த்துத் தந்துவிட்டு மீதியை அவன் தின்னுகிறான். “பிறிதொரு மரணம்” என்பது அவர்களுக்குள் நிலைகொள்ளவில்லை. அவர்களின் அன்பின் வெளிப்பாட்டில் மரணமே மரணித்துப் போகிறது.
௨.அமரன் பொல்லம் பொத்தலையா பொல்லம்
குறிஞ்சி நிலத்திலிருந்து துரத்தி அடிக்கப்பட்டுக் குறவர்களின் பிறிதொரு தொழில் கூடைமுடைவது, கொல்லம் கட்டுவது, இவற்றை முடைந்திட வனத்திற்குச் சென்று, மூங்கில் குருத்துகளை வெட்டிக்கொண்டு வருபவர்களை வனத்துறையினர் கைது செய்து ஏற்கெனவே குற்றப் பரம்பரைச் சட்டத்தில் இருக்கும் குறவர்களை வனத்துறையினர் இலகுவாகத் திருட்டுப் பட்டம் கட்டிப் பொய் வழக்கு போட்டுச் சிறையில் அடைத்து விடுவார்கள். இதிலிருந்து மீள்வதற்கு நகரங்களுக்கு இடம் பெயர்ந்து, கிடைக்கும் பணிகளை மேற்கொள்ளும் நிலையில் இவர்களுக்குத் துப்புரவுப் பணி வழங்கப்படுகிறது என்பதைவிடத் திணிக்கப்படுகிறது.
துப்புரவுப் பணிகளில் மிகக் கொடூரமான செயல் என்பது மனித மலத்தை மனிதனின் கையால் அல்ல வைப்பது. இதனால் எந்தவித ஆய்வுகளும் கண்டுபிடிக்க முடியாத நோய்வாய்ப்பட்டுக் கொத்துக் கொத்தாக மரணிக்கும் துப்புரவுப் பணியாளர்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவோடு சென்நர்ஃபார் ஈக்விட்டி ஸ்டடீஸ் மற்றும் வாட்டர் எஸ்ட், நிறுவனம் இந்தியாவில் ஆய்வு செய்ததில் 11,139 பெண்கள் உலர் கழிப்பறைகள் மற்றும் திறந்தவெளி வடிகால்களைக் கையால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதை 2018 ஆம் ஆண்டு ஆய்வு அறிக்கை சொல்கிறது. இப்படி ஈவு இரக்கமற்ற பணிகளில் ஈடுபடும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலில் கொலை மற்றும் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர். ஆண்கள் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு லாக்கப் மரணத்தைத் தழுவுகின்றனர். இதன் விரிவான உண்மையான சம்பவங்கள் எனது சலவான், நுகத்தடி நாவல்களில் மிகக் காத்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
௨.அமரன் பொல்லாம் பொத்தலயா என்கின்ற சிறுகதையில் கூடை முடைவதையும் பொல்லம் கட்டுவதையும் அதனைத் தொடர்ந்து துப்புரவுப் பணியில் ஈடுபடுவதையும் போற போக்கில் வெறும் செவி வழிச் செய்திகளால் நிரப்பியுள்ளார். ஆனால் உண்மையான குறவர்களின் வாழ்க்கை அப்படி அல்ல. கல் தோன்றா மண் தோன்றா காலம் முன்தோன்றியவர்கள் தமிழர்கள் எனப் பெருமையை அடித்துக் கொள்வோம். மண்ணும் தாவரமும் பறவைகளும் நீர்நிலைகளும் தோன்றியதற்கு முன் மனிதர்கள் தோன்ற முடியாது. அதேபோன்று முதுதொன் குறவர்கள் என்று நான் முன்னிறுத்த முடிந்தாலும் இன்றைய குறவர்கள் படும் அவலத்தையே நான் முன்வைக்க நினைக்கிறேன்.
மகாமுனி – ரமேஷ் – பிரேம்
மொழியாளுகையும் கற்பனைப் புரவியேறிப் பயணிக்கும் வேகமும் குளம்பொடியால் புழுதி பறக்கும், பரபரப்பும், அமானுஷ்யச் சம்பவங்களை ஹேஸியமாய் ஒருங்கிணைத்த, நீட்சியான கவிதை மகாமுனி.
சாசனம்-கந்தர்வன்
குறக்கிழவியின் துணிச்சல்:- நிலக்கிழார்களுக்குக் குறத்திகள் வங்கணத்திகள் அல்ல. நிலம் எல்லோருக்குமானது. ஆனால் எளியோர்களை ஆண்டான் அடிமைகளாக்கி, அவர்களின் நிலத்தையே அபகரித்துக் கொண்டு, அதே நிலத்தில் அடிமைகளாக, கைக்கூலிகளாக அமர்த்தி வன்கொடுமை செய்திடும் நிலையைக் காலமாற்றத்தால் எதிர்த்துப் போராடும் துணிச்சல் அம்மக்களுக்கு வரும்போது பொய்க்குற்றம்சாட்டித் துரத்தியடிக்கும் வன்மம் சாசனமாக வடிவம் பெற்றிருக்கிறது. தஞ்சை வெண்மணியில் குடிசையில் தீ வைத்து அப்பாவிக் கூலிகளைக் கொன்றழித்த, நிலக்கிழார்களின் அட்டூழியத்தை, நினைவூட்டும் விதத்தில் இக்கதையில் தன் அனுபவத்தின் வாயிலாகத் தன் தந்தையை ஒரு பாத்திரமாக்கிய கந்தர்வன். இலக்கியவாதி என்பவன் உண்மையின் பக்கம் சமரசமற்ற போராளியாக நிற்பான் என்பதை கந்தர்வன் நிரூபித்துள்ளார்.
பிலிசிங்கு எனும் சிக்கு லிங்கத்தின் வாக்குமூலம்
ஆயிஷா இரா.நடராஜன் நரிக்குறவர்கள் தங்குமிடத்தில் தனது உறவினர்கள் இறந்து போனால் அவர்களை அந்த டேராவுக்குள்ளே புதைத்துவிட்டு அடுத்த இடம் தேடிச் சென்றுவிடுவார்கள். ஆனால் இச்சமூகமும், சட்டமும், அதைக் குற்றச்செயலாக்கி அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை வழங்க முற்படுகிறது. நாடோடி மக்களான நரிக்குறவர்கள், குருவிக்கார்கள் இவர்களுக்கென்று நிலையான தகனம் செய்யும் இடுகாடு கிடையாது. பொதுச் சுடுகாட்டிலும், புதைக்கவோ, எரிக்கவோ முடியாது. ஏன் ஒவ்வொரு இனத்துக்கும், தனித் தனிச் சுடுகாடு உண்டு. ஆனால் இவர்களுக்கு இல்லாத நிலையில் பூனை தனது கழிவை மண்மூடி போட்டுவிட்டு அடுத்த இடத்திற்கு நகர்ந்து விடும். அதுபோன்று நரிக்குறவர்கள் தனது இனத்தார் இறந்துவிட்டால் டேராவுக்குள் புதைத்து விடுகின்றனர். இதை தேசக் குற்றமென்று சட்டம் விசாரணை செய்வதை நடராஜன் சமூகப் பொறுப்போடும் அலைகுடிகள் மீது இரக்கத்தோடும் எழுதியிருக்கிறார்.
கிருஷ்ணப் பருந்து – இலட்சுமணப் பெருமாள்
நரிக்குறவர்கள் பண்பாடு, சாதியற்ற முத்துக்கூத்தனின் மரணம். முத்துக்கூத்தன் சுடுகாட்டில் நடுச்சாமத்தில் புரண்டெழுந்து வந்து ஊருக்கு சாமக்குறி சொல்கிறவன். ஒரு நாள் இறந்து போகிறான். இறந்தவன் யார்? எந்தச் சாதி? என்ன மொழி பேசுகிறவன்? என அறியாத ஊர்சனம் அவனை அடக்கம் செய்திட முன்வரவில்லை. ஆனால் நரிக்குறவர்களிடம் முத்துக்கூத்தனுக்கு இருந்த தொடர்பால், அவர்கள் குய்யோ முறையோ என்று அடித்து ஒப்பாரி வைத்து, அவனைத் தனது டேராவுக்குள் அடக்கம் செய்துவிட்டு, இடம் பெயர்கிறார்கள். சாதி, மதம், மொழியெனப் பிரித்துப் பார்க்கும் மனித இனத்துக்குள் நரிக்குறவர்கள் மேலோங்கி மனிதநேயத்தையும் நட்பின் ஈர்ப்பையும், வாஞ்சையோடு வெளிப்படுத்தும் செயலையும், கிருஷ்ணப் பருந்து ஏற்றுக் கொள்வதின் குறியீடாக நரிக்குறவர்கள் முத்துக்கூத்தனைப் புதைத்த டேராவின் மேல் பறக்கிறது.
பூராசாமி – அன்பாதவன்
சங்க இலக்கியங்களில் பன்றி, கேழல், ஏனம், முரமா, அலி, கோட்டுமா, களிறு, எய், எய்ம்மா எனப் பன்றியின் பெயர்கள் விளங்குகின்றன. பன்றி என்றாலே உடம்பெல்லாம் சேறு பூசிய கருத்த நிறத்துடன் கூடிய சாக்கடைகளிலும் மலக்கிடங்குகளிலும், திரிவதுதான் என நாம் அறிவோம். ஆனால் பன்றிகள் வன விலங்குகளில் ஒன்று, யானைக்கும் களிறு என்று பெயர், பன்றிக்கும் களிறு என்று பெயர், இரண்டுமே கரும் நிறத்திலான விலங்குகள். அயல்நாடுகளில் பன்றி வளர்ப்பு இன்றியமையாத தொழில். அதனால் அதை நன்கு கவனித்து வளர்த்து அதிக லாபத்திற்கு விற்பனை செய்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும், ஒரு குறிப்பிட்ட இனம் மட்டும் வளர்க்கிறார்கள். அவர்கள் மலம் அள்ளுகிறார்கள். பன்றி மலம் தின்னுகிறது என்ற பொதுப் புத்தி நிலவி வருகிறது.
மலை இடுக்குகளிலும், பாறை இடுக்குகளிலும் விளைந்து கிடக்கும் கிழங்குகளைப் பன்றிகள் தன் கூம்பு முகத்தால் முண்டி, முண்டி ஆய்ந்து கிழங்கை எடுத்துத் தின்னும். கிழங்கெடுத்த அவ்விடத்தில் குழிகள் உண்டாகி, அக்குழியில் மழைநீர்படிந்து தினை விளைந்து விடும். அதைக் கண்ட குறவர்கள், பன்றிகளைத் தனது வளர்ப்புப் பிராணிகளாக மாற்றி, கோடைக்காலத்தில் முல்லை நிலம் வந்து காட்டைத் திருத்தி மண்ணைப் பண்படுத்திப் பன்றிகளை வைத்து மண்ணைக் கீறி தினை விதைத்து முதல் விவசாயத்தைத் துவக்கியவர்கள், நாளடைவில் குறிஞ்சியுமின்றி, முல்லையுமின்றி அலைகுடிகளாக மாறும்போது அவர்களோடு பயனித்த பன்றிகள், துப்பரவுப் பணியோடு பன்றிகளும் துப்பரவு செய்ய நிர்பந்திக்கப்பட்டவைகளை மலைக்குறவர்கள் மலம் அள்ளும் குறவர்கள், கிழங்கு ஆய்ந்து உண்ட பன்றிகள், மலம் தின்னும் அவலம் ஏற்பட்டு இருவரும் இச்சமூகத்தின் தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டதை அருவருப்பின் உச்சமாக பூராசாமி கதையில் புனையப்பட்டுள்ளது.
நிறை – சிவக்குமார்
சாராயம் அருந்துவது உலகத்தில் குறத்தி மட்டும்தான் வேறு இனத்தில் பெண்கள் அருந்துவதில்லை என்பது போன்று இக்கதை நிகழ்த்திக் காட்டுகிறது.
சிறுதெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடுகளில் பெண் தெய்வங்களுக்குச் சாராயமும் சூட்டான் கறியும் படையிலிடுவது எதற்குத் தெரியுமா? வன்கொலை செய்யப்பட்டு அல்லது வன்புணர்வு செய்யப்பட்டு, தற்கொலை செய்யப்பட்ட, பெண்களால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக் கூடாதென்று ஆண்கள் அருந்தும் போதை வஸ்துகள் மற்றும் சுட்ட கறிகள் படையலிட்டு வணங்கப்படுகின்றன.
சூட்டான் கறி என்பது தொன்மத்தின் குறியீடு. வேட்டைச் சமூகத்தில், வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை உண்டது போக மீதியைக் குகைளில் போட்டுவிட்டு வேட்டைக்குச் சென்று விடுவார்கள். பிறகு, பெருங்காற்றின் விசையால் தாவரங்கள் ஒன்றோடொன்று மோதித் தீப்பற்றி வன விலங்குகளும் குகைகளில் பாறை இடுக்குளிலும், சிக்கி இருக்கும் விலங்குகள் தீயில் கருகி வெந்து போனதை முதலில் தின்றவர்கள் குறவர்கள். அங்கு துவங்கியது சுட்ட கறி தின்பது, மனிதப் பரிணாமத்தின் இரண்டாம் நிலை சுட்ட கறி தின்ற பின்புதான் வளர்ந்தது.
அதன் தொல் எச்சம்தான், குறவர்களின் வழிபாட்டில் படிமமாகி அதுவே வாழ்வியலாக மாறியதால் குடியும், கறியும் பிரிக்கயிலாத ஒன்றாக மாறிவிட்டது. அதனால் ஆண், பெண் குடிக்கிறார்கள். இதை வைத்துக் குறத்தி குடிப்பதால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள் என சிவக்குமார் ‘நிறை’ கதையில் சொல்கிறார்.
உலக இலக்கியங்களில் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பாக இருந்தாலும், அன்னா கரீனினாவாக இருந்தாலும் சரி, தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை, சூதாடியாக இருந்தாலும் சரி, அதில் ஆண் பெண் குடி இல்லாத ஒரு அத்தியாத்தைப் படித்துக் கடக்க முடியுமா? போதை வஸ்துகள் என்பது ஒரு தனிமனிதச் சுதந்திரமாக, கொண்டாட்டமாகக் காலமெல்லாம் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் ஒழுக்கம், ஒழுக்கமின்மை என்று வரையறை படுத்தியிருப்பது. மனிதனை ஒழுங்கப்படுத்த அல்ல, கட்டுப்படுத்த. இது பிறப்பு முதல் இறப்பு வரை ஒழுக்கம் என்ற ஆயுதம் கொண்டு மனிதர்களைக் கட்டுப்படுத்தி வைக்கத் தோதுவான இலகுவான காரியம். அப்படிப்பட்ட நிலையில்தான் குறத்தியின் போதை அவளை வன்புணர்வு செய்யத் தூண்டுதலாக அமைகிறது என்று நிறை சிறுகதையில் சிவக்குமார் எழுதியுள்ளார்.
சமாதானக்கறி – கண்மணி குணசேகரன்
‘கள்குடித்து விட்டாலே’ பாதிப் பொண்டாட்டி, பரிசம் போட்டு விட்டாலே முழுப் பொண்டாட்டி இதில் திருமணம் முடிந்து முதல் இரவுக்குச் செல்லும் தம்பதிகளைத் தடுக்கும் உரிமை தாய்மாமனுக்குக் கிடையாது,
தாய்மாமனுக்கு முட்ட முட்ட கள், சாராயம் கொடுத்து, பன்றிக்கறி கொடுத்து விருந்து பெண்ணை விலக்கி மணம் முடிக்க, ”தூயரமதி என எழுதிக் கொடுத்து விருந்து பணம் தாய்மாமன் பெற்றுக் கொண்டலே, அம்முறைப் பெண்ணுக்கும் தாய்மாமனுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஆனால் முதல் இரவுக்குப் போகும் போது தடுக்கும் பண்பாடு குறவர்களிடம் கிடையாது. இக்கதை தவறாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குறவர்களின் பண்பாடு, கலாச்சாரம் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ள பேராசிரியர் மணி.கோ.பன்னீர் செல்வத்தின் படைப்புகளையும் எனது மழைப்பாறை நாவலையும் வாசித்துப் பாருங்கள் நன்றாகப் புலப்படும்.
முகம் : தூயன்
பன்றி குறவர்களின் வாழ்வியலை ஒரு துளி கூட கற்பனைக்கு இடமளிக்காமல் செய்திகளைப் பரப்பாமல் குறவரினமாக வாழ்ந்து “முகம்” கதையைப் புனைந்துள்ளது உண்மைக்கு மிக நெருக்கமாக நம்பகத்தன்மை பெறுகிறது.
கல்குறி – பாண்டியக்கண்ணன்
குறி என்பது குறவர்களின் அகம் சார்ந்த தொழில். அகக்குறி, முகக்குறி, உடல்குறி என உளவியல் சார்ந்தும், உடலியல் சார்ந்தும், மனிதர்கள், விலங்குகள் பறவைகள், தாவரங்கள் என எல்லா உயிரினங்களின் அசைவுகளிலிருந்தும், சொல்லப்படும் குறிகள் ஏராளமானவை.
ஈகுறி, சோளிக்குறி, புளியம் முத்துக்குறி, சகுனக்குறி, பன்றிக்குறி, பூனைக்குறி, முயல்குறி, கிளிகுறி, பல்லிக்குறி தேவாங்கு குறி என இன்னும் இன்னுமாய், குறவர்கள் பார்க்கும் குறிகளுக்கு எண்ணிக்கை இல்லை.
கல்குறி என்று பாண்டி தனது மனைவி மாரி வைக்கும் கேள்விகளுக்கு கல்லால் குறிபார்க்கிறார். காணாமல் போன பன்றி காணாமல் போன மகள் பற்றி பாண்டி மருளாடி தனது மனைவி மக்கள் என்ற போதிலும், மகளுக்கு நடக்க இருக்கும் தீங்குதலை, துல்லியமாகக் கணித்துச் சொல்வது, மனைவிக்குக் கோபம், தன் மகனுக்கு நடக்க இருக்கும் தீங்கை ஒரு தந்தையாக இருந்தும் இப்படிச் சொல்கிறானே என்று அவள் கோபப்படுகிறாள்.
பாண்டி தான் ஒரு குறி சொல்லி, பின்புதான் மனைவி மக்கள். குறி கேட்கும் போது எதிராளி உறவோ, நட்போ எனப் பார்ப்பதில்லை. குறியில் என்ன வருகிறதோ அதைத்தான் சொல்ல முடியும் என்று தொழில் நேர்மையை எடுத்துரைக்கும் போது அத்தொழிலுக்கு வலு சேர்க்கிறது. அச்செயல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுத்தும் போது முற்போக்கு பிற்போக்கு எல்லாம் முடங்கி மனிதர்களின் நம்பிக்கை மேலோங்கி நிற்பதை கல்குறி சிறுகதை எடுத்துரைக்கிறது.
குறிஞ்சியில் இருந்தால் வேட்டை, முல்லை – மருதம் நிலத்துக்கு வந்தால் விவசாயம், பாலைநிலம் வந்தால் அந்நிலத்தாரோடு வீர விளையாட்டு, நெய்தல் வந்தால் மீன், கருவாடு, உப்பு வியாபாரம் செய்து வந்த மலைக்குறவர்கள் இன்றைய தமிழ்க்குறவர்கள்.
விவசாயத்திற்கு முதல் கருவி கலப்பை. அந்தக் கலப்பையில் அடிப்படைப் பன்றியின் கூப்பிய முகம். அந்த முகத்தை வைத்து மண் கீறி விவசாயத்தைத் துவக்கி வைத்தவர்கள் குறவர்கள். தேன், தினை, உப்பு, மீன், கருவாடு எனப் பண்டம் மாற்றமாக வியாபாரம் செய்தவர்கள் குறவர்கள். மலையில் பலம் வாய்ந்த விலங்குகளிடம் மல்லுக்கட்டி அதை அடக்கி ஆண்ட குறவர்கள் எதிராளியை எப்படித் தாக்க வேண்டுமென்ற வித்தைகளைக் கற்றவர்கள், மல்யுத்தம், சிலம்பு, ஈட்டி எறிதல் எனப் போர்த் தந்திரங்களை மற்றவர்களுக்குக் கற்றுத் தந்தவர்கள்.
அரசப்படைகளுக்கு யானைகளை மலையிலிருந்து பிடித்துக் கொண்டு வந்து சேர்த்து அந்த யானையை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் பழக்கிய பாகன்கள். இப்படித் தொன்முதுகுறவர்கள் முதல்குடியாக, மூத்தகுடியாக, சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட மலைக்குறவர்கள் இன்று தீண்டத்தகாதவர்களாக, குற்றப் பரம்பரையாகத் துப்பரவுப் பணியாளர்களாக உருவாக்கப்பட்ட குறவர்களைத் தகவல் அடிப்படையில் ஆளுவோர்களின் பொய்ப் பிரச்சாரத்தாலும், பத்திரிகை, ஊடகம், சினிமா என்ற தொடர்புச் சாதனங்கள் மூலமும், தலைசிறந்த மக்களால் நேசிக்கப்பட்ட இரண்டு முதல்வர்களின் சினிமா பிரச்சாரத்தாலும், குறவர்கள், வேறு நரிக்குறவர்கள் வேறு என்ற புரிதல் இன்றியும் இன்றுவரை தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வரும் குறவர்களின் வாழ்வியலைக் கேள்வி ஞானத்தோடும், செவி வழிச் செய்திகளோடும் ஒரு சில தந்திரவியல்களாலும் 1933 வ.ராமசாமி, 2024 பாண்டியக்கண்ணன் வரை “காடன் கண்டது” என்ற குறவர் இன வரைவியல் தொகுப்பைத் தந்த பேராசிரியர் ந.இரத்தினக்குமார் அவர்களைப் பாராட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஆர்.பி.கண்ணன் என்னும் இயற்பெயர் கோண்ட R.பாண்டியக்கண்ணன் விருதுநகர் மாவட்டம் கட்ராம்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்துறத் துறையில் பணி செய்கிறார். 2008 ஆம் ஆண்டு சலவான், மழைப்பாறை, நுகத்தடி, மேடை, துயர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
Leave a Reply