“திண்ணையில் இருக்க தெய்வம் படி போடாது டேய் மவனே” என்று அதிகாலை ஐந்து மணிக்கு அய்யா துப்புரவுப் பணிக்குச் செல்கிறபோது கத்திவிட்டுச் செல்லும் அந்த உயிரோசை இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளது.
காலை ஐந்து மணியிலிருந்து நகர வீதிகளிலும், தெருக்களிலும் குவிந்து கிடக்கும் மலத்தையும் குப்பைக் கூலங்களையும் அகற்றிச் சுத்தம் செய்து இரவில் வீடு திரும்பும் என் பெற்றோர்கள் உலை வைத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிப்பது வழக்கம். மழைக்காலத்தில் சுள்ளிகள் நனைந்து விட்டால் எரிக்க முடியாமல் பல இரவுகளில் பட்டினிதான். பகல் உணவு என்பது தெருக்களில் கிடைக்கும் பழம் சோறு மட்டுமே.
எல்லோரும் தன் பிள்ளைகளுக்குக் காலைச் சிற்றுண்டி கொடுத்து நன்கு தூய்மையான உடைகளைச் சீருடையாகத் தந்து பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போன்று, தாய் பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் தன் பெண் பிள்ளை ஒழுக்கமாக இருக்க வேண்டுமென நினைப்பது போன்று நம் பிள்ளைகள் படித்து முன்னேறி ஆபீஸர் ஆகவேண்டும் என்று என் தாய் தந்தைகள் முடிவெடுத்து என்னை அரசு பள்ளியில் சேர்த்து விட்டாலும் பள்ளி செல்வதற்கான அடிப்படைக் காரியங்களைச் செய்து கொடுப்பதில் அவர்களுக்கு வெற்று ஆசை மட்டுமே இருந்தது.
காலை உணவு என்பது என் அம்மா பல வீடுகளுக்குச் சென்று துப்புரவுப் பணி செய்துவிட்டு அந்த வீட்டில் கொடுக்கும் முந்தைய நாள் பழைய சோற்றைத் தனது ஈயச் சட்டியில் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பாள்.
காலையில் பசியோடவே என் பள்ளி வாழ்க்கை கழியும். பள்ளிக்கூடத்தில் சத்துணவுத் திட்டம் ஆரம்பித்தாலும் காமராசரின் மதிய உணவுத் திட்டம் இருந்தாலும் பள்ளியில் எல்லா மாணவர்கள் சாப்பிடும் தட்டு எனக்குக் கொடுக்க மாட்டார்கள். நான் துப்புரவு செய்யும் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால்.
வீட்டில் உள்ள அலுமினியத் தட்டுகள் ஓட்டையாகவும் நெளிந்தும் இருக்கும். அதை நான் பள்ளிக்கு எடுத்துச் சென்றால் சக மாணவர்கள் என்னைக் கேலி செய்வார்கள் என்பதால் எடுத்துச் செல்ல மாட்டேன்.
சீருடை என்பது என் பெற்றோர்கள் துப்புரவுப் பணி செய்திடும் வீதிகளில் இருந்தே கிடைக்கும். கால் சட்டையில் பித்தான் இருக்காது, அதை இழுத்துக் கட்டிச் செருகிக் கொள்வேன். பின்பக்கம் ஓட்டையாக இருக்கும். அதை அடைக்க வேறு துணி மூலம் ஒட்டுப்போட்டு அணிந்து கொள்வேன்.
மேல் சட்டைக்குப் பித்தான் இல்லை என்றால், கருவேலம் முட்களைப் பறித்துப் பித்தானுக்குப் பதிலாகப் பொருத்திக் கொள்வேன். அரசாங்கம் இலவசப் பாடப் புத்தகம் புதியதாக மாணவர்களுக்குப் படிக்கக் கொடுத்தால், அதை ஆசிரியர்கள் வெளிச் சந்தையில் விற்று விடுவார்கள். மாணவர்களுக்குப் பழைய நைந்து போன புத்தகம் சுழற்சி முறையில் படிப்பதற்குக் கிடைக்கும். என் நேரம் வந்தவுடன் மாணவர்களில் தாட்டியமானவன் எனக்குப் புத்தகம் கொடுக்க மாட்டான். ஏனெனில் என் கைபட்ட புத்தகம் மலம் நாற்றமோ அல்லது சாக்கடை நெடியோ அடிப்பதாகக் கூறிப் புத்தகம் கொடுக்க மாட்டார்கள்.
பள்ளி இடைவேளை நேரத்தில் நெல்லிக்காய், கலாக்காய், மாங்காய் இத்தியாதி, இத்தியாதி தின்பண்டங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உண்பார்கள். குறிப்பாகக் காக்கா கடி கடித்து ஒருவருக்கொருவர் கொடுப்பார்கள். நான் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
விளையாட்டு பீரியர்டில் அனைவரும் கபடி விளையாடுவார்கள். ஒருவரை ஒருவர் தொட்டுப் பிடித்து விளையாடும் கள்ளன் போலீஸ் விளையாட்டில் என்னைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
எனக்கு ஆறாம் வகுப்பில் பீ வண்டி என்று பட்டா பெயர்தான் வைத்துக் கூப்பிடுவார்கள். ஒரு சில நேரம் என்னைப் பார்க்கும் போது மூக்கைப் பொத்திக்கொண்டு அழிச்சாட்டியம் பண்ணுவார்கள். எங்கள் கிராமத்தில் நாடார்கள் குடியிருக்கும் பகுதியில் காளியம்மன் கோயில் புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறும்.
அக்கோவில் வரி வசூல் செய்வார்கள். குறவராகிய எங்களிடம் வரி வாங்க மாட்டார்கள். மாறாகக் கோயில் சுத்தம் செய்வது, விழாவில் நடைபெறும் விருந்தோம்பல் முடிந்து எச்சில் இலைகளை எடுக்க வேண்டும். அருகாமை வீதிகளில் விழா முடிந்து காலையில் பொங்கல்கட்டி, தேங்காய், பழம், பூஜைப் பொருட்கள் வந்து சேரும். ஆனால் எங்கள் வீட்டுக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள்.
கோவில் திருவிழாவிற்குக் கைராட்டினம் வந்து இருக்கும். நான் ராட்டினத்தில் ஏறிடப் பத்துக் காசு வைத்துக்கொண்டு வரிசையில் நின்று இருப்பேன். எனக்கு முன்பும், பின்பும் நின்று இருப்பவர்கள் ராட்டினப் பெட்டிகளில் ஏறிக் கொள்வார்கள். நான் மட்டும் அதே இடத்தில் நின்று கொண்டே இருப்பேன். மற்றவர்கள் ஏறி இறங்குவதை நாள்முழுவதும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பேன்.
பள்ளிக்கூடம் செல்வதற்காகக் குளிப்பதற்குத் தண்ணீர் அடிக்கத் தெருவில் இருக்கும் பொதுக் குழாயடிக்குச் சென்று வரிசையில் காத்திருப்பேன். என் முறை வந்தாலும், தண்ணீர் அடிக்க விடமாட்டார்கள். அவர்களாகப் பார்த்துத் தண்ணீர் எனக்கு ஊற்றி விடுவார்கள்.
நாடார் வீட்டுத் திருமணத்தில் முதல் பந்தியிலிருந்து இறுதிப் பந்தி வரை எச்சில் இலை எடுப்பவனாக இருந்திருக்கின்ற போது எல்லோரும் உண்டு கழித்த பதார்த்தங்கள், உணவு அறை முழுவதும் சிந்திச் சிதறிக் கிடக்கும். அவர்கள் சிந்தி இருக்கும் உணவுக் கழிவுகளின் நெடி என் நாசியை வருடி அகோரப் பசியைத் தூண்டினாலும், பந்தியில் அமர்ந்து உணவருந்த முடியாது. பந்தியிலமர்ந்து உணவருந்த என்னிடம் இருப்பதிலேயே நல்ல சட்டை, டிராயர், அணிந்து கொண்டு பந்தியில் அமர்ந்துவிட்டால், உடை மட்டும் என்னை வேறுபடுத்திக் காட்டி இருக்கலாம்.
ஆனால் முகத்தில் இவன் ஒரு தலித்; இவன் ஒரு குறவன்; இவன் யாரு தெரியுமா? கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளர்களின் மகன் என்று ஓங்கி ஒலித்து என்னைக் காட்டிக் கொடுத்துவிடும். பலமுறை கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போய் திருமண மண்டபத்தின் வெளியே துரத்தியடிக்கப் பட்டுள்ளேன்.
அப்பாவும் அம்மாவும் மண்டபத்தில் இதரப் பணிகளைப் பார்த்துவிட்டு வந்து “பொறுடா சிலுவாளம் முடிஞ்சதும் மருக்கம் பொறுப்புவாங்க” என்று ஆறுதல் தரும்போது நான் தலித்தாக என்னை உணரத் தெரிகின்ற வயது அப்போது எனக்கில்லை. திருமணம் முடிந்த பின்பு என் அம்மாவின் ஈயச் சட்டியில் அத்தாளச் சோறு மண்டப வாசலில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களோடு சேர்ந்து அத்தாளச் சோறு வாங்கிக் கொள்ள வேண்டும். அத்தாளச் சோறு கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது. அந்தக் கூட்டத்தில் பலமுறை என் தாய் தந்தை கூட்டத்தில் இருந்து நெட்டித் தள்ளப்பட்டுக் கீழே விழுந்து கை கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு வாங்கிய அத்தாளச் சோறும் தரையில் விழுந்து கிடக்கும்.
திருமண மண்டபத்தில் துப்புரவுப் பணி செய்தால் கூலியாகச் சோறு சாம்பார் கிடைக்கும் என்றுதான் வேலைக்குச் செல்வார்கள். ஆனால் அங்கே அது கிடைக்காது பின் எதற்கு? அங்கு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி? எழும்புவது நியாயம்தான்! கோவிலுக்குச் சென்று கடவுளிடம் தன் கஷ்டத்தைச் சொல்லி விட்டால் அவர் எப்படியும் கஷ்டத்தைத் தீர்த்துக் காப்பாற்றி விடுவார் என்ற கனத்த நம்பிக்கையோடு கோயிலுக்குச் செல்வதைப் போன்றுதான், என் பெற்றோர்கள் திருமண மண்டபத்திற்குத் துப்புரவுப் பணிக்குச் செல்கிறார்கள். திருமண மண்டபத்தில் கிடைக்காத உணவு குப்பைத் தொட்டியில் சிதறிக் கிடக்கும்.
சிந்தியதையும் எச்சில் இலைகளில் உள்ள பதார்த்தங்களையும் பன்றியின் பசிபோக்கச் சேகரித்துக் கொள்ளும் அப்பா, எச்சில் இலைகளை நறுக்காகச் சாப்பிட்டு மீதியை அப்படியே இலையில் வைத்துப் போன நபருக்கு நன்றி சொல்லிவிட்டு அதை எடுத்து அவர் சாப்பிட்டுவிட்டுப் பின்பு பசியோடு இருக்கும் எங்களுக்கு எடுத்துக் கொடுப்பதை உண்டு பசியாற்றிய காலம் இன்னும் என் வீட்டின் உணவு மேசையில் பரவி வழிகிறது.
திருமண வீட்டின் எச்சில் இலைகளில் அருந்திய சுவையான பதார்த்தங்களின் நெடி என் உள்ளங்கையில் படிந்து இருப்பதை எத்தனை முறை நுகர்ந்து பார்த்து இருப்பேன் என்பது எண்ணிலடங்காது. அந்நேரத்தில் என் மனதுக்குள் சில கேள்விகளும் எழுந்தாடும் என் சக பள்ளி நண்பர்கள் என் மீது என் கைகளிலும் எப்போதும் மலம் மற்றும் குப்பை நெடிகள் வீசுவதாகச் சொல்வது திருமண வீட்டின் பதார்த்த வாசனை நெடி சற்றென்று மறைந்து விடும்போது, என் கைகளைத் துண்டித்து விட என் மூளை அடிக்கடி சொல்லி நினைவூட்டும். இருப்பினும் என் கைகள் மீது தீராத நம்பிக்கை உண்டு. திருமண வீட்டில் சிறந்த வாசனை எப்போதும் வீசிக்கொண்டு இருப்பதாக உணரும் போது எனக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது. ஆனால், அது என்னவென்று அறிய முடியாத வயது இருந்தபோதிலும் ஏதோ ஒன்று என் மீது உயர்வு கொள்ள வைக்கிறது. அதை உணரும் போது நான் வளர்ந்தவனாக உணர்கிறேன்.
மெல்ல மெல்ல என் பெற்றோர்களின் சகவாசத்திலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கிறேன் அல்லது அவர்கள் செய்கின்ற பணிகளில் பங்கேற்பினைத் தவிர்க்கிறேன். ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி கடந்து உயர்நிலைப்பள்ளி வந்து சேர்ந்து பயணிக்கும் போது நான் சக மாணவர்களிடம் தனிப்பட்டவனாக மாறுகிறேன். குறிப்பாக எல்லா மாணவர்களும் கால்பந்து, கிரிக்கெட், கபடி விளையாடும் போது சினிமாவில் கதாநாயகர், வில்லன் சண்டைக்காட்சியில் செய்திடும் ஜிம்னாஸ்டிக் செய்பவனாக முயற்சிக்கிறேன்.
வால்ட் அடிப்பது, முன்னிங் அடிப்பது, பின்னிங் அடிப்பது, சைக்கிளை நீளவாக்கில் நிறுத்தி வைத்து அதனைத் தாண்டி வால்ட் அடிப்பது, எனத் தனியாக நான் விளையாடியதைப் பார்க்க ஒரு பார்வையாளர் கூட்டம் பள்ளி மாணவர்கள் கூடும். என்னை மற்றவர் கவனிக்கிறார்கள். நான் செய்யும் வித்தைகளை ரசிக்கிறார்கள் எனத் தெரிந்தவுடன் மேலும் சிறப்பாக விளையாடத் துவங்குகிறேன்.
பார்வையாளர்களிலிருந்து கணேசன் என்பவன் எனக்குக் கிடைக்கிறான். தனி ஒருவனாக விளையாடிய எனக்கு கணேசன் சேர்ந்தவுடன் விளையாட்டுத் திடலே எங்களுக்கு நிரந்தர இடமாகப் போனது.
காலை 9 மணிக்கு முதல் பிரையர் துவங்கும் என்றால், காலை 7 மணிக்குப் பள்ளிக்கு வந்து முதலில் விளையாட்டுத் திடலில் எங்கள் விளையாட்டைத் துவங்கி ஒன்பது மணி வரை விளையாடிவிட்டுப் பின்புதான் பள்ளிக்குச் செல்வோம். மாலை நான்கரை மணிக்குத் திடலுக்கு வருகிறவர்கள், இரவு ஏழு மணி வரை திடலில் விளையாடுபவர்களாகத் துவங்கி அவனை விட்டு நான் பிரிய முடியாமை என்னை விட்டு அவன் பிரிய முடியாத இனம் காணாத நட்பு ஏற்பட்டு என் குடிசைக்கு அவனும் அவன் காரை வீட்டுக்கு நானும் சென்று வரத் துவங்கினோம்.
அவன் வீட்டில் எனக்கு அவன் சாப்பிடும் உணவுத் தட்டில் சோறு போட்டுக் கொடுத்து நெகிழ்வான தருணத்தில் நானும் இந்த உலகத்தில் வாழ்வதற்குத் தகுதியானவன் என உணரத் துவங்கினேன்.
அவன் அம்மாவும் அப்பாவும் சந்தையில் காய்கறி வியாபாரிகள். அவன் என்னை அவன் அப்பாவின் காய்கறிக் கடைக்கு அழைத்துச் செல்வான். அப்போது அவனுக்கு அவன் பெற்றோர் கொடுக்கும் அனைத்துச் சலுகைகளையும் எனக்கும் கொடுப்பதைப் பார்க்கும்போது தெருவில் இருக்கும் அவனின் உறவுக்காரர்கள், என்னைப் பற்றிப் பேசுவதைக் காதுகளில் கேட்காமல் இருக்கவே, நான் விரும்பினேன்.
இருந்தபோதிலும் அந்த இழிவுச் சொல் என் செவியேறாமல் இருந்தது இல்லை. “டேய் கணேசா கொறப்பயகூடச் சேர்ந்துகிட்டுத் திரிஞ்சா நம்ம எனத்துல ஒன்னும் பொண்ணு தர மாட்டாங்க. அப்புறம் குறத்தியதான் கட்டணம்” என்று அவன் சார்ந்த நாடார் இனத்தார் பேசும் குரல் என் செவியில் படிந்து அறைந்து செல்லும். ஆனாலும் எங்கள் நட்புக்கு யாரும் வேலி போட முடியவில்லை. எனக்கு எல்லா மனிதச் சுதந்திரமும் இந்த உலகத்தில் அவன் மூலமாகவே கிடைத்தது.
காசு பணம் இல்லாத சூழலில் கவர்மென்ட் ஸ்கூலில் சேர்ந்து படிக்கச் சேர்ந்தால் கழிவறைக்குச் சென்று சுத்தம் செய்பவனுக்கு வகுப்பறை எதற்கு? என்று ஆசிரியர் பெருந்தகைகளின் அன்பான வேண்டுகோள். கழிப்பறையில் ஆரம்பப் பள்ளிக் காலமும் நடுநிலைப்பள்ளிக் காலமும் கரைந்தோடியது எனச் சொல்வதில் எனக்குத் தயக்கமோ கேவலமாகவோ தெரியவில்லை.
உயர்கல்விக்குச் சென்று படிக்க முயற்சித்தால் பன்றி எப்போதும் குட்டிச் சுவரில்தான் சுற்றித் திரிய வேண்டும் என்பது போன்று பள்ளிக்கு வெளியே உட்கார வைக்கப்பட்டுக் குருகுலக் கல்வி போன்று நடந்தேறியதை இந்நொடி வரை அந்த நினைவுகளில் இருந்து மீள முடியாத துயரார்ந்த நிலை!.
நாடார் பெண்ணா? நாயக்கர் பெண்ணா? என்று தெரியாமல் காதலிக்கும் போது எனது சுயம் தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் காதல் மட்டும்.
“குறப்பயலே சாவாசம் வச்சென்னா நீயும் கக்கூஸ் அல்லத்தான் போவ” என்று சுடுசொல் அவளை எரித்தாலும் எரிந்து முடிந்த சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழும் பீனிக்ஸ் பறவை போல் காதல் சிறகடித்துச் சுதந்திரப் பறவையாகப் பறந்து திரிந்து இன்று 37 ஆண்டுகள் கடந்து மூன்று பிள்ளைகள் காதலின் அடையாளமாக இருக்கும் போது இன்றளவும் நாடார் இனத்தின் தொடர்பு இல்லாத நிலையைப் பற்றி என்னோடு பயணிக்கும் என் மனைவியால் துயரத்தை அவளின் முதிய முகத்தில் தென்படும் எளிதான தமனிகளில் அடைந்து கிடைப்பதைத் தண்ணீரால் போக்கிக் கொள்ளும் நிகழ்வு ஒவ்வொரு காலையிலும் நிகழும்.
கோயில் சென்று துயரங்களைச் சொல்லி அழுது புலம்புவது போன்று என் வாழ்வின் சொல்லி அழுவதை விடத் துயரங்களை எழுதிக் கடந்திட முயற்சிக்க எல்லா எழுத்தாளர்கள் போன்று கவிதை என்ற வடிவம் கைகூடியது. கவிதை எழுதினேன் என்பதை விட எழுதிப் பார்த்தேன், மற்றவர் கவிதைகளை உற்று நோக்கிய போது நான் எழுதியது கவிதை அல்ல, அது வெறும் வார்த்தைக் கூட்டம் எனத் தெரிய வந்தது. அடுத்த கட்டமாக நாடார் தெருவிலும், நாயக்கர் தெருவிலும் நாடகம் போடுவதாகத் துவங்கியதும். பார்வையாளர்கள் தந்த உற்சாகமும் ஊக்கமும் திரைப்படத் துறைக்குள் நுழைந்திடும் தலைவாசல் திறந்தது. தலைவாசல் திறந்து இருந்ததால் யாரு வேண்டுமானாலும் உள்ளே சென்று விட முடியாது என்பதை மூன்றாண்டு கழித்து எனக்கு உணர முடிகிறது. திரைத்துறைக்குள் ஒருவர் நுழைந்து நிலை நாட்ட பத்து அல்லது இருபது ஆண்டுகள் கடந்திடும்.
எனக்கு என்னவோ ஒரே மாதத்தில் வாய்ப்புக் கிடைத்தது. பிரபல இயக்குனரின் உதவியாளராகப் பயணித்தாலும் தனியாகத் தெரியும் அளவுக்கு வர முடியவில்லை. திரைத்துறை என்பது சாதி, மதம், மொழி கடந்தது. அதில் உள்ள அனைவரும் பொதுத் தன்மையோடுதான் இருப்பார்கள் என நினைப்பது மூடத்தனம் என்று அறிய மூன்றாண்டுகள் கடக்க வேண்டியிருந்தது. நான் பணியாற்றிய இயக்குநரிடம் அவர் சாதியைச் சார்ந்தவர்களே முதன்மை உதவியாளர்கள். நான் எழாவது, எட்டாவது இடத்திலும் இருப்பேன். அந்த இடம் கூட இயக்குனருக்கு நான் விருதுநகர்காரன் பெரும்பான்மைச் சாதிக்காரனாக இருப்பேன் என்றே எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். ஆனால் நான் குறவன் எனத் தெரிந்தவுடன் அதுவரை நடிகர்களுக்குப் பாத்திரம் பற்றியும் பாத்திரத்தில் உடல் மொழி, வாய்மொழி, உடை, மேக்கப் எனச் சொல்லிக் கொடுத்து டேக்குக்குத் தயார் செய்யும் ஆளாக இருந்தவன். நாளாக நாளாக அந்த நடிகர்களுக்கு ஜூஸ் மற்றும் உணவு கொடுக்கும் ஆபீஸ் பாயாக மாற்றப்பட்ட துயரமே என்னைத் திரைத்துறையிலிருந்து ஊர் திரும்ப வைத்தது.
என் பிள்ளைகளுக்குக் கல்வி நிலையத்தில் துவங்கி அவர்கள் திருமணம் வரை என் சாதி தடையாக உள்ளது.
“நாடாத்திய முடிச்சவன் டா நமக்கெல்லாம் என்ன சம்பந்தம் என்று என் இனத்தின் குரல் ஒரு புறம்.
“குறப்பயட்ட சம்பந்தம் முடிச்சு எம்புள்ளையும் குறப் பிள்ளையா மாறவா” என நாடார் இனத்தின் குரல் மறுபுறம்! இரு பகுதியின் பெருங்குரல் என் செவியேறி அறைந்திட இரைச்சல் தாளாமல் காது பொத்திக் கண்களை மூடி, கையாலாகாத தனத்தில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பதை என்னவென்று சொல்வது.
பிள்ளைகளுக்கு அவரவர் இஷ்டப்படி திருமணம் என்ற வாழ்வியல் கொடி படர்ந்து விட்டது. அப்படி படர்ந்து வளர்ந்த செடி மரமாகி கிளை விரித்து அடர்ந்து வளர்ந்த போதிலும் அந்த மரத்தின் நிழலில் நான் சென்று நிற்க முடியாத அவல நிலைதான் இன்றளவும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் பங்கேற்பு, அமைப்பியல் கொள்கையோடு, என்னை உட்படுத்திப் பயணித்தாலும், எனக்கான தனி இருக்கையோ, கூட்டு இருக்கையோ கிடைப்பது இல்லை. அப்படிக் கிடைத்தாலும் அதில் நான் அமர முடியவில்லை. குறவன் என்பதால் நாற்காலியின் கால்கள் பறிக்கப்பட்டுக் கீழே தள்ளி விடப்படும் நிகழ்வு நாள்தோறும் நிகழ்ந்தேறிக் கொண்டே உள்ளது.
ஒரு அரசு ஊழியனாய் இவ்வுலகில் சிறிது பொருளாதார ரீதியாய் ஒரு அடி முன்னெடுத்து நடந்தாலும் என் சாதி பத்தடிக்கப்பால் என்னைத் தள்ளி துவசம் செய்துள்ளது.
அரசு பணியாளராய்ப் பயணிப்பதால் ஒழுகாத வீடு, பசியாத வயிறு, கிழியாத உடை என அடிப்படை கிடைத்து. சக மனிதர்கள் போன்று நான் வாழ்க்கையைக் கடந்தாலும் குற்றம் இழைத்து தண்டனைக் காலம் முடிந்தது. சிறையில் இருந்து வெளியே வரும் ஒரு சிறைவாசியை எப்படிப் பார்க்குமோ அப்படித்தான் என்னைப் பார்க்கிறது இவ்வுலகம்.
அரசு ஊழியனாய், அரசு ஊழியர்களுக்கான உரிமைப் போரில் பங்கேற்று இரண்டு முறை மத்திய சிறை தண்டனை டிஸ்மிஸ் ஒரு முறை, சஸ்பெண்ட் ஒருமுறை, மூன்று பதவி உயர்வு ரத்து, இரண்டுமுறை பணிமாற்றம் என்று நான் உரிமைக்காகப் போராடியதற்காகக் கிடைத்த தண்டனை, பொது நலத்துக்காகப் போராடினாலும் அமைப்புக்குள் எனக்குத் தனி இடம்தான், என்னோடு சிறை தண்டனை பெற்றவர்கள் மாநில அளவில் தலைமைப் பதவியில் இருக்கிறார்கள். ஆனால் நான் மட்டும் இன்றும் ஒரு கிளை நிர்வாகி கூட கிடையாது. இவை பற்றிச் சிந்திக்கும் போது காந்தியடிகள் கோமணம் கட்டினால் மகாத்மா! அம்பேத்கார் கோட் சூட் அணிந்தாலும் அவர் தலித்! என்கிற நிலைதான் பொதுவெளியில் எனக்கு ஏற்படும் துயரமான நிகழ்வுகள்.
என் தந்தை திராவிடக் கட்சிக்காக அயராது உழைத்துக் கட்சியின் கொள்கைகளை நாடகம் போட்டும் களக்கூத்தாடி கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்து மிசா சட்டத்தில் சிறையேகிய கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க ஓடி ஓடி உழைத்தாலும் உதய சூரியனின் ஒளி அவர்மீது படரவில்லை. மாறாக அமாவாசை இருட்டுதான் மேவியுள்ளது. சக தொண்டர்கள் தலைவன் ஆகும்போது என் தந்தை மட்டும் துப்புரவுப் பணியாளராக ஆக்கப்படும் கொடூரம் குறவனைத் தவிர வேறு யாருக்கு ஏற்படும்.
கல்வி கற்றாலும், பொருளாதார முன்னேற்றம் அடைந்தாலும், உடை நடை மாறினால், டூ வீலர், கார், இரண்டு அடுக்கும் வீடு கட்டிக் குடியிருந்தாலும், எது மாறினாலும் சாதி என்ற வன்மச் சொல் என் போன்றோரை ஆக்டோபஸ்போல் கொடூரமாக ஆக்கிரமித்து இருப்பதைச் சொல்லித் தீர்க்க முடியாமல் எழுதித் தீர்க்க முடிவெடுத்து எழுத்துக்கான பயிற்சி என்று உணரும்போது உள்ளூர் முதல் உலக எழுத்தாளர் வரை நண்பர்கள் மூலம் கிடைத்த போது படிக்க முடிந்தது.
நூறு பிரதிகளைப் படித்தவன், ஒரு பிரதியை உருவாக்கி விடுவான். குறிப்பாக சில ஆண்டுகள் சித்தாள் வேலைக்குச் சென்றவன் ஒரு நாள் கொத்தனார் ஆவது போல நானும் ஒருநாள் எழுத்தாளன் ஆவேன் என்ற நம்பிக்கையில் எழுதத் தொடங்கினேன்.
எல்லோரும் புறத்திலிருந்து எழுதினால், அகத்தில் இருந்து நான் கடந்து வந்த வாழ்வியலை எழுதுகிறேன். அகத்திலிருந்து வெளிப்படும் எழுத்தை உயிரோட்டமாக இருக்கும் என்று கனத்த நம்பிக்கையோடு என் மக்களின் துயரத்தை, போராட்டத்தை ‘சலவான்’ மூலம் வெளிப்படுத்தி இருக்கிறேன். இதன் பின்பு மறைப்பாறை, நுகத்தடி, மேடை போன்ற வாழ்வியல் சார்ந்த துயரத்தைக் குறித்து எழுதி இருக்கிறேன். இன்னும் இதுபோன்ற படைப்புகள் என்னுள் உறைபனியாய் உறைந்து கிடைக்கிறது.
* பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் நடத்திய ‘தலித் இலக்கியம் எனது அனுபவம்’ என்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
Art : stockcake

ஆர்.பி.கண்ணன் என்னும் இயற்பெயர் கோண்ட R.பாண்டியக்கண்ணன் விருதுநகர் மாவட்டம் கட்ராம்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்துறத் துறையில் பணி செய்கிறார். 2008 ஆம் ஆண்டு சலவான், மழைப்பாறை, நுகத்தடி, மேடை, துயர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
Leave a Reply