பயப்படாத காகம்
காகம் ஒன்று ஒரு மா மரத்தடியில் இரை பொறுக்கிக் கொண்டிருந்தது. அப்போது, காற்று கொஞ்சம் பலமாக வீசியது.
காற்றைத் தாங்க முடியாத மாங்காய் ஒன்று அறுந்து விழுந்தது.
அது காகத்தின் அருகில் விழுந்தும் காகம் பயந்து பறந்தோடவில்லை.
மரத்தடியில் ஒரு மாடு படுத்திருந்தது. அது காகத்திடம் கேட்டது. “மனிதர்கள் உன்னை விரட்ட கல் எடுப்பார்கள். கல் எடுத்துக் கையை ஓங்கும்போதே நீ பயந்து ஓடிவிடுவாய். ஆனால், இந்த மாங்காய் உன் பக்கத்தில் விழுந்தும் நீ பறந்தோடவில்லையே?”
காகம் சொன்னது, “மரத்திலிருந்து விழும் மாங்காய் யாரையும் விரட்ட வேண்டும் என்பதற்காக விழுவதில்லை. அதனால், நான் பயப்படவில்லை, பறந்தோடவில்லை.”
♦
இலையைத் தேடிய வண்ணத்துப் பூச்சி
வண்ணத்துப்பூச்சி ஒன்று ஒரு செடியைச் சுற்றி வட்டமிட்டது. அது பூவைத் தேடவில்லை. இலையைத் தேடியது.
அந்த வண்ணத்துப்பூச்சி இப்போது முட்டையிடும் பருவம். இலையின் அடியில் முட்டை வைப்பது வண்ணத்துப்பூச்சிகளின் வழக்கம். அதற்காகத்தான் அது ஒரு இலையைத் தேடிக்கொண்டிருந்தது.
வண்ணத்துப்பூச்சியிடம் அந்தச் செடி கேட்டது. “முட்டை வைப்பதற்கு நீ எப்படியான இலையைத் தேர்ந்தெடுப்பாய்?”
வண்ணத்துப்பூச்சி சொன்னது. “முட்டைகள் பொறிப்பதற்குள் உதிர்ந்துவிடாத இலையைத் தேர்ந்தெடுப்பேன். அந்த இலையில் முட்டை வைப்பேன்”.
♦
முள்ளின் நிழல்
அந்த மேய்ச்சல் காட்டில் நல்ல வெயில். எருமைகளால் அந்த வெயிலைத் தாங்க முடியவில்லை.
அருகில் நீர்நிலைகளும் இல்லை. ஒரு மரம் மட்டும் இருந்தது. அது ஒரு முள் மரம். அதனடியில் நல்ல நிழல் படர்ந்திருந்தது.
அந்த நிழலில் இளைப்பாறலாம் என்று எருமைகள் நினைத்தன. அந்த மரத்தை நோக்கிக் கூட்டமாக நடந்தன.
அந்தக் கூட்டத்தில் ஒரு குட்டி எருமையும் இருந்தது. அது தன் தாயிடம் கேட்டது.
“அந்த மரம் ஒரு முள் மரம் அதன் அடியில் போய் நாம் படுக்கலாமா?”
தாய் சொன்னது. “தோற்றத்தில் முள் மரமாகத் தெரியலாம். ஆனால், நிழலாக விழும்போது முள்கூட நம்மைக் குத்தாது.”
Art : displate

வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.
Leave a Reply