மொன்மார்ட்ரேயில் (பாரிஸ் நகரின் வடக்குப் பகுதி) ‘ரூ டி ஆர்கம்ப்ட்’ தெருவில் 75பி என்ற குடியிருப்பின் மூன்றாவது மாடியில், தூதீயுல் என்ற ஒரு நல்ல மனிதன் வாழ்ந்து வந்தான். அவன் சுவர்கள் வழியாக எந்தச் சிக்கலும் இல்லாமல் நடந்து செல்லும் ஒரு விசித்திரமான தன்மையைப் பெற்றிருந்தான். அவன் வில்பிடிப்பு மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பவன்; ஒரு சிறிய கறுப்பு ஆட்டுத்தாடியும் வைத்திருந்தான். பதிவு அமைச்சகத்தில் ஒரு சாதாரண எழுத்தராக வேலை செய்து வந்தான். குளிர்காலத்தில் அவன் பேருந்தில் வேலைக்குச் செல்வான்; நல்ல வானிலை அமைகையில் அவன் தனது வட்டக் கம்பளித் தொப்பியுடன் நடந்தே அலுவலகத்துக்குச் செல்வான்.
தூதீயுல் தனது நாற்பத்தி மூன்றாம் வயதில் இருந்தபோது தனக்கு இந்தச் சக்தி இருப்பதைக் கண்டுபிடித்தான். ஒருநாள் மாலை, அவனது சிறிய குடியிருப்பின் நடைமாடத்தில் அவன் நடந்து கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டது. இருளில் சிறிது நேரம் தடுமாறினான். விளக்குகள் மீண்டும் எரியும்போது, மூன்றாவது மாடியின் இறங்குமிடத்தில் தன்னைக் கண்டான். அவனது முன் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததால், இந்தச் சம்பவம் அவனது சிந்தனையைத் தூண்டியது. எனவே, இயல்பறிவின் எதிர்ப்புகளையும் மீறி, அவன் சுவர் வழியாக வீட்டினுள்ளே செல்ல முடிவு செய்தான். அவன் விரும்பிய எந்த ஆசைக்கும் தொடர்பில்லாத இந்த விசித்திரமான திறமை, அவனைக் குழப்பியது. எனவே, அடுத்த நாள் சனிக்கிழமை – அவன் தனது ஆங்கிலப் பாணி ஐந்து நாள் வாரத்தைப் பயன்படுத்தி உள்ளூர் மருத்துவர் ஒருவரை அணுகித் தனக்கு வாய்த்த விசித்திரத் திறனை விளக்கினான். தூதீயுல் உண்மையைச் சொல்கிறான் என்பதை மருத்துவர் உடனே நம்பினார். ஒரு முழுப் பரிசோதனைக்குப் பிறகு, கேடயச் சுரப்பியில் உள்ள முடிச்சுச் சுவரின் சுருளி கடினமானதே பிரச்சினைக்குக் காரணம் என்று கண்டறிந்தார். எனவே, வேளைப் பளுவைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் சொன்னார்; ஆண்டுக்கு இரண்டு முறைச் சாப்பிடச் சொல்லி நான்கு மடங்கு திறனுடைய பிரேட் பொடியைப் (அரிசி மாவும் குதிரை-மனிதக் கலப்பின இயக்குநீரும் சேர்ந்த கலவை) பரிந்துரைத்தார்.
முதல் மாத்திரையைச் சாப்பிட்ட பிறகு, தூதீயுல் மருந்தை ஒரு அலமாரியில் வைத்துவிட்டு மறந்துவிட்டான். உழைப்பை எப்படி அதிகப்படுத்துவது? ஒரு அரசு ஊழியராக, அவனது வேலைவிகிதம் அதிகமாவதை அனுமதிக்காத நடைமுறைகளால் நிர்வகிக்கப்பட்டது மற்றும் அவனது ஓய்வு நேரம், செய்தித்தாள்களைப் படிப்பதற்கும் தபால் தலைகளின் சேகரிப்பைக் கவனிப்பதற்கும் பிரிக்கப்பட்டிருந்தது. எந்த அதிகப்படியான ஆற்றல் செலவிலும், கடின உழைப்பிலும் அவன் ஈடுபடவில்லை. எனவே, ஒரு வருடம் கழித்து, சுவர்கள் வழியாக நடக்கும் அவனது திறன் மாறாமல் அப்படியே இருந்தது. ஆனால் அவன் அந்தத் திறனைப் பயன்படுத்தவில்லை. தற்செயலாக எப்போதாவது நடப்பதைத் தவிர, சாகசங்களில் ஆர்வமில்லாமலும் தனது கற்பனையின் மயக்கங்களுக்கு உடன்படாமலும் இருந்தான். அவனுக்குத் தனது வீட்டின் முன்கதவைத் தவிர வேறு எந்த வழியிலும் நுழைய எண்ணமில்லை. மேலும், சாவி மற்றும் பூட்டைப் பயன்படுத்தியே அவன் வீட்டின் கதவைத் திறந்து பழகியிருந்தான். ஒருவேளை, வயதான காரணத்தால் அவன் தனது பழக்கவழக்கங்களை மாற்ற மனதில்லாமல் இருக்கலாம். தனது வினோதத் திறமையைச் சோதிக்க எந்த ஊக்கமும் இல்லாமல், ஓர் அசாதாரண நிகழ்வு திடீரென அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போடக் காத்திருந்தான்.
அவனது துணைத் தலைமை எழுத்தர் திரு.மூரோன் பிற வேலைகளுக்கு மாற்றப்பட்டதால், திரு.லெக்குயெர் என்பவர் அவனது மேலதிகாரியாகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். லெக்குயெர் வெடுக்கென்று பேசுபவர்; நகந்துடைக்கும் தூரிகை போல மீசை வைத்திருந்தார். புதிய துணைத் தலைமை எழுத்தர் தூதீயுலின் வில்பிடிப்பு மூக்குக் கண்ணாடியையும் கறுப்பு ஆட்டுத்தாடியையும் முதல் நாளிலிருந்தே வெறுத்து வந்தார். அவனை ஓர் எரிச்சலூட்டும், கிழிந்த பழைய பொருளைப் போல நடத்தினார். ஆனால் மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் தனது துறையில் கணிசமான அளவிலான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தார். இது அவருக்குக் கீழே பணிபுரிபவர்களின் அமைதியைக் குலைப்பதற்கான விசயம். இருபது ஆண்டுகளாக, தூதீயுல் தனது அதிகாரப்பூர்வக் கடிதங்களைப் பின்வரும் முறைப்படியே தொடங்குவது வழக்கம்: “இந்த மாதத்தில், இந்தத் தேதியில் நீங்கள் தொடர்பு கொண்ட, மதிப்புமிக்க உங்கள் விசயத்துக்காக, முந்தைய அனைத்துக் கடிதப் பரிமாற்றங்களையும் குறிப்பிட்டு, உங்களுக்குப் பதில் தெரிவிக்கும் மகிழ்ச்சியைப் பெறுகிறேன் …” அதற்குத் திரு.லெக்குயெர் வேறு வடிவமைப்பை மாற்றத் திட்டமிட்டார். மிகவும் அமெரிக்கப் பாணியில்: “உங்களது இத்தனையாவது கடிதத்திற்குப் பதிலளிக்கிறேன், நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன் …” தூதீயுலால் இந்தப் புதிய கடிதப் பாணிக்குப் பழக முடியவில்லை. தன்னை மீறி, அவன் தனது பழைய பாரம்பரிய வழிகளுக்கு, ஓர் இயந்திரம் போன்ற பிடிவாதத்துடன் திரும்புவான். அது துணைத் தலைமை எழுத்தரிடம் ஒரு விரோதத்தைப் பெற ஆரம்பித்தது. பதிவு அமைச்சகத்திற்குள் வேலைச் சூழ்நிலை கிட்டத்தட்ட அடக்குமுறையாக மாறிப்போனது. காலையில் அவன் பயத்துடன் வேலைக்கு வருவான்; மாலையில் தூங்குவதற்கு முன் முழுப் பதினைந்து நிமிடங்கள் படுக்கையில் சிந்திக்கும் நிலையில் இருப்பது அடிக்கடி அவனுக்கு நிகழ்ந்தது.
தனது சீர்திருத்தங்களின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்தப் பிற்போக்குச் சிந்தனையால் வெறுப்படைந்த திரு.லெக்குயெர், தூதீயுலை ஒரு வெளிச்சம் குறைந்த, சிறிய அறைக்கு அனுப்பி வைத்தார். இந்த அறை அவரது அலுவலகத்திற்குச் செல்லும் வழியில், ஒரு பக்கத்தில் இருந்தது. இந்த அறைக்குள் நுழைய குறுகிய மற்றும் தாழ்வான ஒரு கதவைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அந்த அறையின் மேல் பெரிய எழுத்துகளில் ‘துடைப்ப நிலையடுக்கு’ என்று எழுதப்பட்டிருந்தது. முன்னெப்போதும் இல்லாத இந்த அவமானத்தை ஏற்க மனதளவில் தயாராகி விட்டான் தூதீயுல். ஆனால் வீட்டில் இருக்கையில், ஒரு குரூரமான குற்றத்தைப் பற்றிய செய்தியைப் படிக்கும்போது, திரு.லெக்குயெர் அந்தக் குற்றத்தில் பலியாகும் காட்சியை அவன் மனதில் கற்பனை செய்யத் தொடங்கினான்.
ஒரு நாள், துணை எழுத்தர் ஒரு கடிதத்தை ஏந்தியவாறு தூதீயுல்லின் சிறிய அறைக்குள் வந்து கூச்சலிட்டார்:
“இந்த முட்டாள்தனத்தை மீண்டும் எழுது! இந்த வெட்கக்கேடான, பேசவும் முடியாத, என் துறைக்கு அவமானம் தரும் இந்தக் குப்பைத்தனத்தை மீண்டும் எழுது!”
தூதீயுல் எதிர்ப்பைக் காட்ட முயன்றான். ஆனால் திரு.லெக்குயெர் கோபத்தில் கொந்தளித்தார். அவனை ‘செய்முறைப் பித்துப் பிடித்த ஒரு கரப்பான்பூச்சி’ என்று அழைத்தார். மேலும் அந்தக் கடிதத்தைக் கசக்கித் தூதீயுலின் முகத்தில் வீசி எறிந்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினார். தூதீயுல் தன்னடக்கம் உடையவனாக இருந்தாலும் மான உணர்ச்சி கொண்டவன். தனது சிறிய அறையில் தனியாக அமர்ந்திருந்தவன், மிகுந்த கோபத்தால் கொதிப்படைந்தான். திடீரென அவனுக்கு ஒரு ஞானோதயம் ஏற்பட்டது. தனது இருக்கையை விட்டு எழுந்து, தனது அறையையும் துணைத் தலைமை எழுத்தரின் அறையையும் பிரிக்கும் சுவருக்குள் நுழைந்தான். ஆனால் மிகவும் கவனமாக, அவனது தலை மட்டுமே மறுபக்கத்தில் தெரியும் வகையில் நுழைந்தான். திரு.லெக்குயெர் தனது மேசையில் அமர்ந்து, இன்னும் நடுங்கும் கையுடன், தனது ஒப்புதலைப் பெறச் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு தாளில் உள்ள காற்புள்ளியை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்குள் இருமல் ஒலி கேட்டது. மேலே பார்த்த அவர், தூதீயுலின் தலை ஒரு வேட்டை விலங்கின் தலையைப் போலச் சுவரில் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு வெளிப்படுத்த முடியாத பயத்தில் ஆழ்ந்தார். ஆனால் அந்தத் தலை இன்னும் உயிருடன் இருந்தது. அதன் கண்ணாடி மூலம் அந்தத் தலை அவரை வெறுப்புடன் பார்த்தது. மேலும், அந்தத் தலை பேசத் தொடங்கியது.
“அய்யா” என்றது தலை. “நீங்கள் ஒரு கயவர், ஒரு முரடன் மற்றும் ஒரு வஞ்சகர்.”
பயமடைந்து மூச்சடைத்த திரு.லெக்குயெர், இந்தப் பிரமையிலிருந்து கண்களை எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தார். இறுதியாக, தனது நாற்காலியிலிருந்து தன்னைத் தூக்கி, நடைக்கூடத்தில் ஓடி, தூதீயுலின் சிறிய அறைக்குள் சென்றார். தூதீயுல், பேனாவைக் கையில் வைத்துக் கொண்டு, தனது வழக்கமான இடத்தில் அமர்ந்து, அமைதியாகப் பணியில் ஈடுபட்டவனாக இருந்தான். துணைத் தலைமை எழுத்தர் அவனை நீண்ட நேரம் பார்த்துவிட்டு, திக்கித் திணறிப் பேசிய பிறகு, தனது அலுவலகத்திற்குத் திரும்பினார். அவர் இருக்கையில் அமர்ந்ததும், தலை மீண்டும் சுவரில் தோன்றியது.
“அய்யா, நீங்கள் ஒரு கயவர், ஒரு முரடன் மற்றும் ஒரு வஞ்சகர்.”
அன்றைக்கு மட்டும், அந்தப் பயங்கரமான தலை இருபத்தி மூன்று முறை சுவரில் தோன்றியது. மேலும் அடுத்த நாட்களிலும் அதே போலத் தொடர்ந்தது. இந்த விளையாட்டில் ஒரு திறமையைப் பெற்றிருந்த தூதீயுல், இப்போது துணைத் தலைமை எழுத்தரை அவமானப்படுத்துவதில் மட்டும் திருப்தி அடையவில்லை; அவன் தெளிவற்ற அச்சுறுத்தல்களையும் வெளியிட்டான். உதாரணமாக, ஒரு பேய்க்குரலில், உண்மையான பேய்ச் சிரிப்புடன் கூறினான்:
“ஓநாய் மனிதா! ஓநாய் மனிதா! மிருகத்தின் முடி!” (சிரிப்பு) “ஒரு கொடூரம் ஒளிந்திருக்கிறது; ஆந்தைகள் அதை வெளிப்படுத்தி விட்டன!” (சிரிப்பு)
இதைக் கேட்ட, பரிதாபமான துணைத் தலைமை எழுத்தர் இன்னும் வெளிறிப்போய் மூச்சுத் திணறினார். அவரது தலைமுடி குத்திட்டு நின்றது; முதுகில் அருவருப்பான குளிர் வியர்வைச் சொட்டியது. முதல் நாளில், அவர் அரைக்கிலோ எடை குறைந்தார். அடுத்த வாரத்தில், அவர் மெலிந்து விட்டது கண்கூடாகத் தெரிந்தது; அதனுடன் அவர் தனது வடிசாற்றை முட்கரண்டியால் சாப்பிடத் தொடங்கினார். யாராவது காவலர்களைப் பார்க்க நேர்ந்தால் முழு இராணுவ மரியாதை செலுத்தினார். இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில், ஓர் அவசர மருத்துவ வாகனம் வீட்டிற்கு வந்து அவரை அழைத்துச் சென்று, ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்தது.
திரு.லெக்குயெரின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட்ட தூதீயுல், தனது அன்புக்குரிய வழக்கமான நடைமுறைக்குத் திரும்பினான்: “இந்த மாதத்தின் இந்தத் தேதியிட்ட உங்களது மதிப்புமிக்கத் தகவலுக்கு அனுசரணையாக…” என்று தொடங்கினான். ஆனாலும், அவன் திருப்தி அடையவில்லை. அவனுக்குள் ஓர் ஆசை, தவிர்க்க முடியாத ஒரு புதிய தூண்டுதல் எழுந்தது; அது சுவர்களுக்கு ஊடே நடக்க வேண்டும் என்ற தூண்டுதலாகும். இது எளிதில் நிறைவேற்றப்படக் கூடிய ஒரு தூண்டுதல். உதாரணமாக, வீட்டில் அவன் அதைச் செய்தான். ஆனால் பிரகாசமான திறமைகளைக் கொண்ட ஒரு மனிதனால், சாதாரண இலக்குகளை அடைய அவற்றைப் பயன்படுத்துவதால் நீண்ட நேரம் திருப்தி அடைய முடியாது. மேலும், சுவர்களின் ஊடாக நடப்பது ஓர் இறுதி இலக்காக இருக்க முடியாது. அது ஒரு சாகசத்தின் தொடக்கமாகும்; இது ஒரு தொடர்ச்சியை, விரிவாக்கத்தை விரும்பி, இறுதியில் ஒரு பரிசைக் கோருகிறது. தூதீயுல் இதை நன்றாகப் புரிந்துகொண்டான். அவனுக்குள் ஒரு விரிவாக்கத்தின் தேவை, தன்னை நிறைவேற்றி மீற வேண்டும் என்ற ஒரு வளர்ந்து வரும் ஆசை மற்றும் சுவருக்கு அப்பால் உள்ளவற்றின் அழைப்பு போன்றவற்றால் ஒரு ஏக்கம் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, அவனுக்கு ஓர் இலக்கு கிடைக்கவில்லை. அவன் செய்தித்தாளில், குறிப்பாக அரசியல் மற்றும் விளையாட்டுப் பிரிவுகளில் கவனத்தை ஈர்க்கும் விசயங்களைத் தேடினான். இந்தத் துறைகளில் நல்ல மதிப்புமிக்கச் செயல்பாடுகள் கிடைக்கலாம் என்று அவன் நினைத்தான். ஆனால் சுவர்களின் ஊடே நடப்பவர்களுக்கு இவை எந்த வாய்ப்புகளையும் வழங்காது என்பதை இறுதியில் உணர்ந்தான். அதனால் ‘சுருக்கச் செய்திகள்’ பிரிவில் இருந்த வாய்ப்பளிக்கும் செய்திகளைத் தேர்ந்தெடுத்தான்.
ஆற்றின் வலது கரையில் இருக்கும் ஒரு பெரிய கடன் நிறுவனத்தில் தூதீயுல் தனது முதல் களவை மேற்கொண்டான். ஒரு டஜன் சுவர்களையும் இடைத் தடுக்குகளையும் கடந்து, பல பணப்பெட்டிகளை உடைத்துத் தனது பைகளைப் பணத்தாள்களால் நிரப்பினான். வெளியேறிச் செல்லும் முன், களவு நடந்த இடத்தில் சிவப்புச் சுண்ணாம்பு மூலம் ‘ஓநாய் மனிதன்’ என்ற புனைபெயரில் மிகவும் நேர்த்தியான ஒரு கையொப்பத்தை இட்டான். இந்தத் திருட்டும் கையெழுத்தும் பற்றிய செய்தி மறுநாள் அனைத்துச் செய்தித்தாள்களிலும் வெளிவந்தது. அந்த வாரம் முடிவதற்குள், ‘ஓநாய் மனிதன்’ என்ற பெயர் பிரபலமாகியது. பாரிஸ் காவல்துறையை மிகவும் புத்திசாலித்தனமாகக் கேலி செய்த இந்தத் துணிச்சல்மிகு திருடனுக்கு ஆதரவாகப் பொதுமக்களின் பலத்த அனுதாபம் பெருகியது. வங்கி, நகைக்கடை அல்லது பணக்காரர்களின் வீடு என ஒவ்வொரு இரவும், புதிய துணிச்சலான செயல்களை நிகழ்த்தித் தன்னைப் பற்றியே அனைவரும் பேசும்படிச் செய்தான் தூதீயுல். பாரிஸில் கனவு காணும் பெண்களோ, கிராமப்புற இளம் பெண்களோ, ஓநாய் மனிதனின் உடலும் மனமும் தங்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று விரும்பாதவர் எவருமில்லை. பிரபலமான புர்டிகாலா வைரத்தின் களவும் அரசு அடமானக் கடையில் நடந்த களவும் ஒரே வாரத்தில் நடந்த பிறகு, ஓநாய் மனிதனைப் பற்றிய மக்களின் உணர்வுகள் பரவசத்தின் உச்சத்தை அடைந்தன. இதனால் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பதிவேடுகள் துறை அமைச்சரையும் இந்த நிகழ்ச்சி பதவியிலிருந்து கீழே தள்ளியது. இருந்த போதிலும், தூதீயுல் பாரிஸின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக மாறினான்; எப்போதும் வேலைக்குக் குறித்த நேரத்திற்கு வந்தான். மேலும் பிரெஞ்சுக் கலாச்சாரத்திற்கு அவன் செய்த பங்களிப்பிற்காக ‘பால்ம்ஸ் அகாடமிக்ஸ்’ விருதுக்கு வலுவான வேட்பாளராகப் பேசப்பட்டான். பதிவேடுகள் அமைச்சகத்தில், ஒவ்வொரு நாள் காலையிலும் தனது சக ஊழியர்கள் முந்தைய இரவில் தான் நிகழ்த்திய சாதனைகளைப் பற்றி விவாதிப்பதைக் கேட்டு மகிழ்ந்தான். “இந்த ஓநாய் மனிதன்” என்று அவர்கள் ஆரம்பிப்பார்கள்; “அற்புதமானவன், ஒரு சூப்பர்மேன், ஒரு மேதை.” இதுபோன்ற பாராட்டுகளைக் கேட்டு, தூதீயுல் வெட்கத்தால் சிவப்பான். அவனது கண்ணாடிக்கும் கண்ணாடி மாட்டியிருந்த சங்கிலிக்கும் பின்னால் இருக்கும் அவனது கண்கள் வெம்மையுடன் மிளிர்ந்து, கண்களில் நன்றியும் தெரிந்தது.
சக ஊழியர்களின் இந்த அனுதாபமான சூழல் அவனை முழுமையாகக் கவர்ந்தது. தனது இரகசியத்தை இனிமேலும் மறைத்து வைத்திருக்க முடியாது என்று அவன் உணர்ந்தான். எனவே ஒருநாள், சிறிது நாணத்துடன் தனது சக ஊழியர்களைப் பார்த்தான். அவர்கள் பிரான்ஸ் வங்கியில் நடந்த களவை அறிவிக்கும் ஒரு செய்தித்தாளைச் சுற்றிக் கூடியிருந்தனர். பிறகு மிதமான குரலில் சொன்னான்: “உங்களுக்குத் தெரியுமா? நான்தான் அந்த ஓநாய் மனிதன்.” தூதீயுல் இப்படிச் சொன்னது சக ஊழியர்களிடையே பெரும் சிரிப்பை ஏற்படுத்தியது. அவனுக்கு ‘ஓநாய் மனிதன்’ என்ற கேலிப்பெயரையும் சூட்டினார்கள். அன்று மாலை, அவன் அமைச்சகத்தை விட்டு வெளியேறும்போது அவனது சக ஊழியர்கள் அவனை முடிவில்லாத கேலிகளுக்கு உள்ளாக்கினர். இவற்றையெல்லாம் கேட்டு அவன் மிகுந்த வருத்தமடைந்தான்.
சில நாட்களுக்குப் பிறகு, ஓநாய் மனிதன் ‘ரூ டி லா பே’ என்ற தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் இரவு ரோந்துக்காரர்களால் பிடிக்கப்பட்டான். அவன் பணம் செலுத்துமிடத்தில் தனது கையொப்பத்தை இட்டுவிட்டு, ஒரு தங்கக் கிண்ணத்தின் உதவியுடன் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பல நகைக்காட்சிப் பெட்டிகளை உடைத்துக்கொண்டு மது அருந்துபவர்கள் பாடும் பாட்டைப் பாடத் தொடங்கினான். அவனால் சுவருக்குள் நுழைந்து ரோந்துக்காரர்களிடமிருந்து எளிதாகத் தப்பிக்க முடிந்திருக்கும். ஆனால் அவன் கைது செய்யப்படவே விரும்பியதாகக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தும் தெரிவித்தன. அவனது சக ஊழியர்கள் அவனை ஓநாய் மனிதனாக நம்ப மறுத்தது அவனை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. அவர்களை நம்பவைக்கவே அவன் மாட்டிக் கொண்டான். மறுநாள் செய்தித்தாள்கள் தூதீயுலின் புகைப்படத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டபோது, அவர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். தங்களது புத்திசாலித்தனமான சக ஊழியரைத் தவறாக மதிப்பிட்டதற்காக அவர்கள் மிகவும் வருந்தினர். அனைவரும் தூதீயுலைப் போல ஆட்டுத்தாடிகளை வளர்த்து அவனுக்கு மரியாதை செலுத்தினர். வருத்தமும் மரியாதையும் மிகுந்த சிலர், தங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் பணப்பைகளையும் பரம்பரைக் கடிகாரங்களையும் திருட முயற்சிக்கக்கூடத் தூண்டப்பட்டனர்.
ஒரு சில சக ஊழியர்களை ஆச்சரியப்படுத்துவதற்காக மட்டுமே காவலரிடம் வலிந்து தன்னை ஒப்புவிப்பது மிகவும் அற்பமான செயலாகும். மேலும் இது ஒரு விதிவிலக்கான ஆற்றல் படைத்த மனிதன் செய்யும் தகுதியற்ற செயல். ஆனால் இந்த வகையான முடிவுகளில், வெளிப்படையான உந்துதல்கள் மிகக் குறைவாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பதில், ஓர் அகந்தையான பழிவாங்கும் ஆசைக்கு இணங்குவதாகவே தூதீயுல் நம்பினான். ஆனால் உண்மையில் அவன் தனது விதியின் சரிவில் சறுக்கிக் கொண்டிருந்தான். சுவர்களின் ஊடே நடக்கும் ஒரு மனிதனுக்கு, குறைந்தபட்சம் ஒரு முறையாவது சிறையினுள் இராவிட்டால், ஒரு பிரகாசமான வாழ்க்கை இருக்க முடியாதுதான்.
‘லா சான்டே’ சிறையின் வளாகத்திற்குள் நுழைந்த தூதீயுல், விதி தன்னை மிகவும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதை உணர்ந்தான். சுவர்களின் தடிமன் அவனுக்கு உண்மையான விருந்தாக இருந்தது. அவன் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, சிறைச்சாலைச் சுவரில் ஒரு ஆணி அடிக்கப்பட்டு, அதில் சிறை அதிகாரியின் தங்கக் கடிகாரம் தொங்குவதைக் கண்டு காவலர்கள் வியப்படைந்தனர். இந்தப் பொருள் அவரிடம் எவ்வாறு வந்தது என்பதை அவரால் சொல்ல முடியவில்லை அல்லது சொல்ல விரும்பவில்லை. கடிகாரம் அதன் உரிமையாளரிடம் திரும்பக் கொடுக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாள் அது மீண்டும் ஓநாய் மனிதனின் படுக்கையருகில் காணப்பட்டது. அதோடு சிறை அதிகாரியின் தனிப்பட்ட நூலகத்திலிருந்து கடன் வாங்கப்பட்ட ‘மூன்று துப்பாக்கி வீரர்கள்’ நூலின் முதல் தொகுதியும் இருந்தது. ‘லா சான்டே’ சிறைச்சாலையின் ஊழியர்கள் மிகவும் பதற்றமாகினர். மேலும், காவலர்கள் தங்கள் புட்டத்தில் விளக்க முடியாத முறையில் உதைகள் விழுவதாகப் புகார் செய்தனர். சுவர்களுக்கு இப்போது காதுகள் இல்லை; ஆனால் கால்கள் இருப்பதுபோலத் தோன்றியது. ஓநாய் மனிதன் சிறை வைக்கப்பட்டு ஒரு வாரம் ஆனபோது, ஒருநாள் காலையில் தனது அலுவலகத்திற்குள் நுழைந்த சிறை அதிகாரி, தனது மேசையில் பின்வரும் கடிதத்தைக் கண்டார்:
‘அன்புள்ள சிறை அதிகாரிக்கு, இந்த மாதம் 17-ஆம் தேதி நடந்த நமது சந்திப்பைக் குறித்தும், மேலும், கடந்த ஆண்டு மே 15-ஆம் தேதியிட்ட உங்கள் பொதுவான அறிவுறுத்தல்களையும் குறிப்பிட்டு, நான் ‘மூன்று துப்பாக்கி வீரர்கள்’ நூலின் இரண்டாவது தொகுதியைப் படித்து முடித்துள்ளேன் என்பதையும், இன்று இரவு 11:25 முதல் 11:35 வரை தப்பிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்பதையும் தங்களுக்குத் தெரிவிப்பதில் பேருவகை கொள்கிறேன். அன்புடன், ஓநாய் மனிதன்.’
அன்றிரவு அவன் மீது கடுமையான கண்காணிப்பு இருந்தபோதிலும், தூதீயுல் 11:30-க்குத் தப்பித்தான். மறுநாள் காலை இந்தச் செய்தி பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. மேலும் இது நாடு முழுவதும் அவன் மீது பெருத்த மரியாதையை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்தச் சமீபத்திய சாதனை அவனது புகழை இன்னும் உயர்த்தியபோதிலும், தூதீயுல் இரகசியத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் மோன்மார்ட்ரே-யில் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் வெளியில் போய் வந்து கொண்டிருந்தான். தப்பித்து மூன்று நாட்களுக்குப் பின் நண்பர்களுடன் எலுமிச்சை சேர்த்த வெள்ளைத் திராட்சை மதுவை ஒரு கோப்பையில் அருந்திக்கொண்டிருக்கும் போது, மதியத்திற்குச் சற்று முன் ‘ரூ கௌலின்கோர்ட்’ தெருவில் உள்ள ‘கஃபே டு ரீவ்’-ல் அவன் கைது செய்யப்பட்டான்.
லா சான்டே சிறைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு, மூன்று பூட்டுகளுடன் கூடிய ஓர் இருண்ட சிறையறையில் அடைக்கப்பட்ட ஓநாய் மனிதன் அன்று மாலையிலேயே தப்பித்துச் சிறை அதிகாரியின் சொந்த வீட்டில், விருந்தினர் படுக்கையறையில் தூங்கச் சென்றான். மறுநாள் காலை சுமார் ஒன்பது மணியளவில், அவன் தனது காலை உணவுக்காகப் பணிப்பெண்ணை அழைத்தான். மேலும் தாமதமாக வந்த காவலர்களிடம் எதிர்ப்பின்றி, படுக்கையிலிருந்து பிடிக்கப்பட அனுமதித்தான். கோபமடைந்த சிறை அதிகாரி, தூதீயுலின் சிறையறை வாசலில் ஒரு காவலரை நிறுத்தி, அவனை அரைப்பட்டினி போட உத்தரவிட்டார். மதியம் சுமார் 12 மணியளவில், சிறைக்கைதி அருகிலுள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டான். பின்னர் தனது காபியை அருந்திய பிறகு, சிறை அதிகாரிக்குத் தொலைபேசி செய்தான்.
“வணக்கம்! சிறை அதிகாரி அவர்களே, இதைச் சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஆனால் சற்று முன்பு நான் வெளியேறும்போது, உங்கள் பணப்பையை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டேன். அதனால் இப்போது இந்த உணவகத்தில் பணம் செலுத்த முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளேன். நீங்கள் யாரையாவது அனுப்பி இந்தப் பணத்தைக் கட்டி உதவ முடியுமா?”
மிகவும் கோபமடைந்த சிறை அதிகாரி தானே விரைந்து வந்தார். அவனைப் பலவாறு மிரட்டினார்; தூற்றினார். தனிப்பட்ட முறையில் இப்படி அவமானப்பட்ட தூதீயுல், அடுத்த இரவே தப்பித்தான். இந்த முறை மீண்டும் சிறைக்குத் திரும்பிச் செல்லக்கூடாதென முடிவு செய்தான். தனது கறுப்புக் குறுந்தாடியை மழித்தான்; தனது வில்பிடிப்பு மூக்குக் கண்ணாடியையும் அதனைத் தாங்கிப் பிடிக்கும் சங்கிலியையும் கழற்றிவிட்டு, ஆமை ஓட்டுக் கண்ணாடியை அணிந்தான்; ஒரு விளையாட்டுத் தொப்பியை அணிந்தான்; முழங்காலுக்குக் கீழ் நான்கு அங்குலம் நீளும், கட்டம் போட்ட கால்சட்டையையும் அதற்கிணையான மேற்சட்டையும் அணிந்தான். அவனது தோற்றமாற்றம் இவ்வாறாக முழுமையானது. அவன் ‘அவென்யூ ஜூனோ’வில் இருந்த ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கினான். தான் கைது செய்யப்பட்ட நாள் முதல் அவன் தேர்ந்தெடுத்த தட்டுமுட்டுச் சாமான்களையும் அவனுக்கு மிகவும் பிடித்த பொருள்களையும் அங்குதான் அவன் அனுப்பியிருந்தான். அவன் இப்போது தான் அடைந்த புகழால் குழப்பமடைந்து சோர்வடைந்து கொண்டிருந்தான். மேலும் ‘லா சான்டே’யில் தங்கிய பிறகு, சுவர்களுக்கு ஊடாக நடப்பதில் அவனுக்குப் பெருஞ்சலிப்பே வந்துவிட்டது. தடிமனான, பெருஞ்சுவர்கள் கூட இப்போது அவனுக்கு ஜப்பானியத் திரைச்சீலைகள் போலத் தோன்றின. இப்போது அவனது இதயம் ஒரு பெரிய கூம்பகப் பிரமிடைக் கடப்பதைக் கனவு கண்டது. எகிப்துக்குச் செல்லும் பயணத்தைத் திட்டமிடும்போது, அவன் எந்தவொரு சாகச நிகழ்விலும் ஈடுபடாமல் மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தான்: தனது தபால்தலை சேகரிப்பு, திரைப்படங்கள் பார்ப்பது மற்றும் மோன்மார்ட்ரே-இல் நீண்ட நடைப்பயணங்கள் என்று நேரத்தைச் செலவளித்தான். அவனது உருவ மாற்றம் மிகவும் கச்சிதமாக இருந்தது; தாடியில்லாமல், கண்ணாடி அணிந்தபடி, தனது நெருங்கிய நண்பர்களைக் கூட அடையாளம் காணாமல் கடந்து செல்ல முடிந்தது அவனால். அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களின் மிகச் சிறிய உடலியல் மாற்றத்தையும் கண்டறியும் ஓவியர் ஜென் பால் மட்டுமே இறுதியாக தூதீயுலின் உண்மையான அடையாளத்தைக் கண்டுபிடித்தான். ஒருநாள் காலையில், ‘ரூ டி ல’அப்ரூவோயர்’ தெருமூலையில் தூதீயுலை முகத்துக்கு முகம் கண்டபோது, அவன் தனது முரட்டுப்பாணியில் இப்படிக் கூறினான்:
“நீ உன்னை யாரும் அறிந்துவிடாமல் இருக்க நல்ல ஒரு மாறுவேடத்தில் இருப்பதை நான் பார்க்கிறேன்.” “ஆ!” என்று தூதீயுல் முணுமுணுத்தான். “நீ என்னை அடையாளம் கண்டுகொண்டாய்!”
இது அவனைக் கவலையடையச் செய்தது. எகிப்துக்கான தனது பயணத்தை விரைவுபடுத்த முடிவு செய்தான். அதே நாள் மதியத்தில், ‘ரூ லெபிக்’ தெருவில் பதினைந்து நிமிடங்களில் இரண்டு முறைச் சந்தித்த ஒரு பொன்னிற முடியுடைய அழகியிடம் காதலில் விழுந்தான். உடனே அவன் தனது தபால்தலை சேகரிப்பு, எகிப்து மற்றும் பிரமிடுகளை மறந்துவிட்டான். அந்தப் பொன்னிற முடியுடைய பெண்ணும் அவனை உண்மையான ஆர்வத்துடன் பார்த்தாள். அவன் அணிந்திருந்த உடையும், ஆமை ஓட்டுக் கண்ணாடியும் இன்றைய இளம் பெண்களைக் கவர்ந்திழுக்கும் விசயங்கள் ஆகும். அவள் தன்னிடம் ஒரு பெரிய புள்ளி சிக்கியிருப்பதாக உணர்ந்தாள்; பலவகை மதுக்களின் கலவையையும் கலிஃபோர்னியாவில் இரவுகளைக் களிப்பது போலவும் கனவு கண்டாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஜென் பால் மூலம் தூதீயுலுக்கு, அந்த அழகி, பொறாமை கொண்ட ஒரு முரட்டு மனிதனை மணந்திருப்பது தெரியவந்தது. சந்தேகப் புத்தி கொண்ட அவளது கணவன் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை முறையைக் கொண்டவன்; இரவு பத்து மணி முதல் காலை நான்கு மணி வரை தனது மனைவியை அறையில் இரட்டைப் பூட்டுப் போட்டுப் பூட்டி வைத்துவிட்டு, அனைத்துக் கதவுகளையும் அடைத்து வைத்துவிட்டு வெளியேறுவானாம். பகலில் அவன் அவளைக் கடுமையாகக் கண்காணிப்பான். சில நேரங்களில் மோன்மார்ட்ரே தெருக்களில் அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளை வேவு பார்ப்பான்.
“எப்போதும் எச்சரிக்கையாக இருப்பான். அவன் ஒரு பெரிய முட்டாள்; மற்றவர்கள் தனது குளத்தில் மீன்பிடிப்பதை எண்ணிப் பொறுக்க முடியாதவன்.”
ஆனால் ஜென் பாலின் இந்த எச்சரிக்கை தூதீயுலின் உற்சாகத்தை இன்னும் அதிகரித்தது. மறுநாள் ‘ரூ தோலோஸ்’ தெருவில் அந்த இளம்பெண் பால்பொருள்கள் விற்பனைக் கடைக்குள் நுழைந்து கொண்டிருப்பதைக் கண்டு அவளைப் பின்தொடரத் துணிந்தான். மேலும் அவள் பொருள்களுக்கு விலைபோடக் காத்திருக்கும் போது அவளை மிகவும் மரியாதையாக நேசிப்பதாகவும், அவளைப் பற்றிய எல்லா விசயங்களும் தனக்குத் தெரியும் என்றும், பூட்டுகளைக் கொண்டு அவளை அடைத்து வைக்கும் கொடூரக் கணவனைப் பற்றித் தெரியும் என்றும் அவளிடம் சொன்னான். ஆனால் அன்று இரவே அவளைப் படுக்கையறையில் சந்திப்பதாக உறுதியளித்தான். பொன்னிற முடிக்காரி கன்னம் சிவந்தாள்; கையில் இருந்த அவளது பால் குவளை நடுங்கியது. அவளது கண்கள் ஏக்கத்தால் ஈரமாக, மெதுவாகப் பெருமூச்சு விட்டாள்: “ஐயோ! கண்ணியமானவரே, அது சாத்தியமில்லை.”
இந்தப் பிரகாசமான நாள் முடிந்த இரவின் சுமார் பத்து மணியளவில், தூதீயுல் ‘ரூ நோர்வின்ஸ்’ தெருவில் நின்றபடிக் கண்காணித்துக் கொண்டிருந்தான். ஒரு திடமான வெளிச்சுவரைக் கவனித்தான்; அதன் பின்னால் ஒரு சிறிய வீடு இருந்தது. அதன் உச்சியில் ஒரு வானிலைக் காட்டியும் ஒரு புகைபோக்கியும் இருந்தன. ஒரு கதவு திறந்தது; ஒரு மனிதன் வெளியே வந்தான். கதவை அவன் கவனமாகப் பூட்டிவிட்டு, ‘அவென்யூ ஜூனோ’வை நோக்கிக் குன்றின் கீழே நடந்தான். கீழேயுள்ள ஒரு சாலைவளைவின் தொலைவில் அவன் மறையும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தான் தூதீயுல்; பத்து வரை எண்ணினான்; பின்னர் முன்னேறி நடந்தான். ஒரு விளையாட்டு வீரன் போலச் சுவர் வழியாக நடந்து, அனைத்துத் தடைகளையும் தாண்டி, இறுதியாக அந்த அழகான தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணின் படுக்கையறையில் நுழைந்தான். அவள் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். அவர்கள் இரவு நெடுநேரம் கட்டில் விளையாட்டு நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.
மறுநாள் காலை, தூதீயுல் ஒரு கடுமையான தலைவலியுடன் எழுந்தான். அந்தக் காதல் உறவு கிடைத்திருக்காவிட்டால் இந்தத் தலைவலியைப் பெரிது படுத்தியிருக்கமாட்டான். இந்தப் புதிய உறவை அனுபவிக்க, தலைவலி தடையாக இருக்குமோ என்று எரிச்சலுற்றான். அலமாரியின் பின்புறத்தில் சிதறியிருந்த சில மாத்திரைகளைக் கண்டபோது, அந்த மாத்திரைகளில் ஒன்றைக் காலையிலும், இன்னொன்றை மதிய வேளையிலும் விழுங்கினான். மாலை நேரத்தில், அவனது தலைவலி குறைந்து வலி தாங்கக்கூடியதாக இருந்தது. இரவில் சந்திக்கப்போகும் காதலியை நினைத்த அவனது மகிழ்ச்சியில் மாத்திரைகளைப் பற்றி முற்றிலும் மறந்துவிட்டான். முந்தைய இரவின் காதல் நினைவுகளால் தூண்டப்பட்ட அந்தப் பெண் அவனுக்காகக் காத்திருந்தாள். அன்றைய இரவில், அவர்கள் காலை மூன்று மணி வரை காதல் விளையாட்டுகளைத் தொடர்ந்து நடத்தினர்.
அவளிடம் விடைபெற்று வெளியேறும் போது, வீட்டின் இடைத்தடுப்புகள் மற்றும் சுவர்கள் வழியாக நடக்கும்போது, அவனது இடுப்புகளும் தோள்களும் சுவர்களில் தேய்த்து அழுத்துவது போன்ற ஒரு புதிய உணர்வை உணர்ந்தான். இருப்பினும், இதைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவது நல்லதல்ல என்று அவன் நினைத்துக் கொண்டே நடந்தான். வெளிச்சுவருக்குள் நுழையும் போதுதான் சுவரின் அந்தக் கணிசமான எதிர்ப்பைச் சந்தித்தான். சுவர் ஒரு திரவம் போல இருந்தாலும், ஒட்டும் தன்மை கொண்டதாக மாறுவது போல உணர்ந்தான். சுவரைக் கடந்து செல்ல அவன் செய்த ஒவ்வொரு முயற்சியின் போதும் சுவரின் அடர்த்தி அதிகரித்துக் கொண்டே சென்றது. அவனால் சுவருக்குள் தன்னைத் தள்ள முடிந்தது; ஆனால் இனி முன்னேறிச் செல்ல முடியாது என்பதை உணர்ந்து பயந்து போனான். அன்று காலையிலும் நண்பகல் வேளையிலும் அவன் எடுத்துக் கொண்ட இரண்டு மாத்திரைகள் அவன் நினைவுக்கு வந்தன. ஆஸ்பிரின் என்று அவன் நினைத்த அந்த மாத்திரைகள், உண்மையில் மருத்துவர் கடந்த ஆண்டு பரிந்துரைத்த நான்கு மடங்கு திறனுடைய பிரேட் பொடி மாத்திரைகள். மருந்தின் விளைவுகள், உடல் வேலைப்பளுவை அதிகரித்த காதல் விளையாட்டுகளுடன் இணைந்து அவனது சுவர்புகும் திறனை நிறுத்திவிட்டதை அவன் இப்போது உணர்ந்தான்.
தூதீயுல் சுவருக்குள்ளே ஒரு நிலையான பொருளாகப் பதிந்துவிட்டான். கல்லின் பண்புகளுடன் ஒன்றிணைந்து அவன் இன்றும் அங்கேயே இருக்கிறான். பாரிஸின் இரைச்சல் அடங்கும் நேரத்தில் ‘ரூ நோர்வின்ஸ்’ தெரு வழியாக நடந்து செல்லும் இரவு நேர விருந்தினர்கள், ஒரு முடக்கப்பட்ட முணுமுணுப்புக் குரலைக் கேட்கலாம். அது கல்லறைக்கு அப்பால் இருந்து வருவது போல் தோன்றும்; அதை மோன்மார்ட்ரேயின் சாலைகளின் சந்திப்புகளில் வீசும் காற்றின் புலம்பல் என்று அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அது ஓநாய் மனிதன் தூதீயுலின் குரல்; தனது பிரகாசமான வாழ்க்கையின் முடிவையும், வெட்டுப்பட்ட காதலின் துயரங்களையும் அவன் புலம்புகிறான். சில குளிர்கால இரவுகளில், ஓவியர் ஜென் பால் தனது கிட்டாரை எடுத்து, ‘ரூ நோர்வின்ஸ்’ தெருவின் ஒலி நிறைந்த தனிமையில் வெளியே சென்று, ஒரு பாடலுடன் அந்த ஏழைச் சிறைக்கைதியை ஆறுதல் செய்யலாம்; அவனது வீங்கிய விரல்களிலிருந்து எழும் கிட்டார் இசை, சுவரின் இதயத்தை நிலவின் துளிகள் போல் ஊடுருவலாம்.
The walker through walls, Marcel Ayme. Translated from French to English: Norman Denny, Berkley Publishing Corporation, 1932.
****
மார்செல் அய்மே (1902 – 1967)
மார்செல் அய்மே ஒரு பிரஞ்சு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர். அவர் பகடி, அதீத எதார்த்தம், சமூக விமர்சனம், மாய எதார்த்தம் போன்ற வகைகளில் கதை சொல்வதில் வல்லவர். அவரது கதைகள் குழந்தைகளும், பெரியவர்களும் ரசிக்கக் கூடியவை; அதே நேரத்தில் ஆழமான சமூக விமர்சனத்தையும், ஒழுங்கற்ற உலகத்தின் முரண்களையும் வெளிப்படுத்தும் தன்மையில் அமைபவை. அவரது கதைகள் இயல்பான வாழ்க்கையின் மீது மாயத்தன்மையைப் பூசுபவை; மந்திரம், அயலுலக மாயம், அறிவியலுக்கு மறுப்பான நிகழ்வுகளையும் சொல்பவை. அய்மே தனது கதைகளில் நடுநிலையான மனிதர்களின் மனநிலையை ஆராய்ந்து சொல்வதில் திறன் பெற்றவராக இருந்தார். சமூகம், நீதிமுறை மற்றும் அரசியல் போன்றவை எப்படி அடிப்படை மனித விருப்பங்களுடன் முரண்படுகின்றன என்பதை அவரது கதைகளில் காணலாம். நாம் எதற்காக விதிகளைப் பின்பற்றுகிறோம், சமூகம் ஏன் சிலரை மட்டும் ஆதரிக்கிறது போன்ற கேள்விகளை அவரது கதைகள் எழுப்பும். கதைமாந்தர்கள் தமக்கே விளங்காத சூழலில் சிக்கிக் கொள்ளும் காஃப்காயிச வெளிப்பாடுகளைக் காட்டுபவை அவரது எழுத்துகள்.
பாரிஸின் மொன்மார்ட்ரேயில் ‘மார்செல் அய்மே’ பெயரில் அமைந்த தெருவில், அவரது நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் ‘சுவருக்குள் புகும்’ மனிதனின் சிலை. சிற்பி – ஜீன் மாரே.
Thanks : alamy
Leave a Reply