தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைபெற்ற உலகக் கவிதைகள் தினம் மற்றும் குமரகுருபரன் விஷ்ணுபுரம் இலக்கிய விருநு நிகழ்வில் நடைபெற எத்தனித்த சமகாலம் பற்றிய உரையாடலின் தொடக்கமாக இவ்வுரையாடலைத் தடாரி ஆசிரியர் குழு முன்வைக்கிறது. ‘சமகாலம் என்பதை எவ்வாறு வரையறுப்பது? நவீன இலக்கியத்தில் சமகாலம் எவ்வாறு செயல் பங்காற்றுகிறது?’ என்ற கேள்விக்குத் தமிழிலக்கியத்தின், கோட்பாட்டின் முகமாக விளங்கக் கூடிய ஆளுமைகள் அளித்த பதில்களே ‘சமகாலமும் இலக்கியமும்’. இவ்வுரையாடலில் நீங்களும் கலந்துகொண்டு கருத்துகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொகுப்பு : பச்சோந்தி
சமகாலம் என்பதைக் கல்விப் புலத்தில் ‘தற்காலம்’, ‘இக்காலம்’ என்று கையாள்கின்றனர். நமக்கு நீண்ட இலக்கிய மரபு இருக்கிறது. அதைக் கால அடிப்படையில் பிரிப்பதற்கு வெவ்வேறு அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றனர். சங்க இலக்கியம், சங்க மருவிய இலக்கியம் என்பன ‘முச்சங்கம்’ இருந்தது என்னும் நம்பிக்கையால் வந்த பகுப்பு. பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், நாயக்கர் காலம் என்பன அரசர்களை மையமாக வைத்த பகுப்பு. காப்பிய காலம், சிற்றிலக்கிய காலம் முதலிய பகுப்புகளும் உண்டு. இலக்கிய வகைமையினால் அமைவது இப்பகுப்பு. நூற்றாண்டு வாரியான பகுப்பும் விளங்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களில் முக்கியமானவராகிய மு.அருணாசலம் நூற்றாண்டு வாரியாகத்தான் வரலாறு எழுதியுள்ளார். இந்தத் தொடர்ச்சியில் நவீன இலக்கியத்தை எப்படிக் குறிப்பிடுவது? அரசர்களைக் கொண்டு குறித்ததன் தொடர்ச்சியாக ‘ஜனநாயக காலம்’ என்னும் பொருள் தரும் வகையில் தற்கால இலக்கியம், இக்கால இலக்கியம் ஆகிய சுட்டல்கள் அமைகின்றன என்று தோன்றுகிறது.
நவீன இலக்கியப் பாடத்தைத் ‘தற்கால இலக்கியம்’ என முன்னர் குறிப்பிட்டனர். இப்போது ‘இக்கால இலக்கியம்’ என்கின்றனர். தற்காலம் என்றால் யாருடைய தற்காலம்? எழுத்தாளரின் தற்காலம். இறந்த எழுத்தாளரின் படைப்புகளும் இந்தத் தலைப்புக்குள் இடம்பெறுகின்றன. இல்லாத ஒருவருக்கு இது எப்படித் தற்காலம் ஆகும்? இத்தகைய ஐயம் பேராசிரியர் ஒருவருக்கு வந்திருக்கிறது. ஒருவரின் வாழ்நாள்தான் அவருக்குத் தற்காலம். ஆகவே ‘தற்கால இலக்கியம்’ என்பது தன்வயப்பட்டது; தனிமனிதர் சார்ந்தது. அதற்கு மாற்றாகச் சற்றே விரிந்த காலத்தை உள்ளடக்கியதாக ‘இக்காலம்’ அமைகிறது எனக் கருதுகின்றனர். நவீன இலக்கிய வகைமை உருவாகித் தொடர்ந்து நிலவி வருவதால் அதன் ‘தொடக்கம் முதல் இப்போது வரை’ என்பதைக் குறிக்கும் வகையில் ‘இக்காலம்’ பயன்படுகிறது. இப்பாடப் பிரிவுக்குள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான பிரதாப முதலியார் சரித்திரமும் இடம்பெறலாம்; இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வெளியான ‘பேட்டை’யும் இருக்கலாம். நாவல் இலக்கியம் தோன்றி நூற்றைம்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதும் இவை மொத்தமும் ‘இக்காலம்’ தான்.
கல்விப் புலத்தில் ‘இக்கால இலக்கியம்’ என்பதும் இலக்கிய உலகில் ‘நவீன இலக்கியம்’ என்பதும் வழங்கி வருகிறது. ‘நவீனம்’ வடசொல் என்னும் கருத்தில் அதைக் கல்விப்புலத்தார் தவிர்க்கின்றனர். இப்போது எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ‘சமகாலம்’ என்பதைப் பயன்படுத்தும் போக்கு உருவாகியுள்ளது. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகத்தான் ‘சமகாலம்’ வந்திருக்கிறது. இதற்குக் குறிப்பான பொருள் வரையறை இன்னும் ஏற்படவில்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஒருசொல் அகராதியில் இடம்பெறும் என்றால் பொருள் வரையறை உருவாகிவிட்டது அல்லது உருவாகும் வகையில் அது பரவலான ஆட்சியைப் பெற்றுள்ளது என்று கருதலாம். ‘சமகாலம்’ க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் இடம்பெற்றிருக்கிறது. ‘ஒருவர் வாழ்ந்த அல்லது ஒன்று தோன்றிய அதே காலம்’ என்று பொருள் கொடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் ‘Contemporary period.’ சான்றாக இருதொடர்களைக் காட்டியுள்ளனர். ‘நாங்கள் இருவரும் சமகாலத்தில் இலக்கியத் துறையில் நுழைந்தவர்கள்’, ‘பெரியார் சமகால அரசியல் போக்குகளை விமர்சித்து வந்தார்’ ஆகியவை. வாழ்ந்த, தோன்றிய ஆகியவற்றுக்குப் பதிலாக ‘வாழும், தோன்றும்’ ஆகியவை இருந்திருக்கலாமோ? ‘ஒருவர் வாழும் அல்லது ஒன்று தோன்றும் அதே காலம்’ அல்லது ‘ஒருவர் வாழ்ந்த/வாழும் அல்லது ஒன்று தோன்றிய/தோன்றும் அதே காலம்’ என்று பொருள் கொடுத்திருக்கலாம்.
இலக்கிய விமர்சனம், திறனாய்வு ஆகியவற்றில் ‘சமகாலம்’ என்பது கோட்பாட்டு நோக்கில் ‘அன்றாடம்’ எனப் பொருள்படுவதாகத் தோன்றுகிறது. ‘படைப்பில் சமகாலம் பற்றிய கவனம் கூடுதலாகத் தேவை’ என்றால் பின்னணி, பிரச்சினைகள், நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றைக் கொண்ட ‘அன்றாடம்’ பற்றியே பேசுகிறோம். அது இலக்கியக் கோட்பாடு சார்ந்த பொருள். அகராதி சொல்வது போலப் பொதுவில் இது தனிமனிதர் வாழ்நாளையே குறித்து வருகிறது. ‘அவர் தம் சமகால எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தொடர்ந்து வாசிக்கிறார்’, ‘அவர் தம் படைப்புக்களில் சமகாலப் பிரச்சினைகளைக் கையாண்டுள்ளார்’, ‘சமகால உணர்வுடைய படைப்புக்கள் காலத்தைக் கடந்து நிற்கின்றன’ என்னும் தொடர்களில் ஓர் எழுத்தாளரின் வாழும் காலம் என்றே அர்த்தம் வருகிறது. இத்தகைய தொடர்களை இப்போதைய எழுத்தில் கூடுதலாகக் காண்கிறேன்.
‘தம் வாழ்நாளில் நடக்கும் அகப்புறப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக எழுத வேண்டியதில்லை; அதை ஆறப் போட்டால்தான் படைப்பாக வடிவம் பெறும்; அதற்குச் சில காலம் எடுத்துக் கொள்ளும். அதுவரை காத்திருக்க வேண்டும்’ என்பதான கருத்து நம் சூழலில் வலுவாக நிலவி வந்தது. அதன் இறுக்கம் இப்போது தளர்ந்திருக்கிறது. சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் அதற்குப் பங்களித்திருக்கிறது. ஒரு பிரச்சினை பற்றிய கவிதைகள் உடனடியாக அணிவகுத்து வருவதைக் காண்கிறோம். சுடச்சுடச் சிறுகதைகளும் நாவல்களும் வருகின்றன. ‘ஆறப் போட வேண்டும்’ என்னும் குரல் இப்போது கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதாக மாறிவிட்டது. இதை ஆரோக்கியமான மாற்றம் என்றே காண்கிறேன்.
தம் வாழ்நாளில் நடக்கும் விஷயங்களுக்கு எதிர்வினையாகவே படைப்புகள் உருவாகும்; உருவாகின்றன என்று நம்புகிறேன். ஓர் எழுத்தாளருக்குச் சமகாலம் பற்றிய உணர்வு இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் சமகாலத்தை அவரால் தவிர்க்க முடியாது. சமகாலம்தான் ஒரு படைப்புக்கு விதையாகிறது. வரலாற்றை வைத்து எழுதும் படைப்பாக இருப்பினும் அதற்கான உந்துதலும் அதில் பேசும் செய்திகளும் அதன் சாரமும் சமகாலத்தை ஏதோ ஒருவகையில் முன்னிறுத்தும் என்பதே என் அனுபவம்; அனுமானம்.
– பெருமாள் முருகன்
பழைய, புதிய கற்காலம், உலோகக் காலம் என்றும், பண்டைய காலம், இடைக் காலம், நவீன காலம், பின்நவீன காலம், சமகாலம் எனக் காலங்களை மனிதர்கள் பயன்படுத்துகின்ற கருவிகளின் அடிப்படையில் வகைப்படுத்துவர். இக்கருவிகளாலும், பூமியின் சுழற்சியையும் கணக்கிட்டும் காலங்களைக் கணக்கிடுகின்றனர். மனிதர்களின் கருவிகளுக்கும் சிந்தனைக்கும் தொடர்பு உண்டு. மனிதன் என்பவனும் கருவிதான். இவை ஒன்று மற்றொன்றின் மீது தாக்கங்களை விளைவிக்கும்; அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும். உணவுக்காக விலங்குகளை வேட்டையாட கற்கருவிகளைப் பயன்படுத்திய சிந்தனைதான் அக்கருவிகளை உலோகங்களிலும் தயாரிக்கத் தூண்டியது. கருவிகளின் கண்டுபிடிப்பானது உற்பத்தியையும் உபரிகளையும் இவற்றுடன் சிந்தனைகளையும் விளைவித்தது. இது கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனிதர்கள் குடும்பம், தனிச் சொத்து, அரசு என அரசியல் பொருளாதார நிறுவனங்களை நிறுவனமாக்கியது. கருவிகள் என்பது அறிவியல் ஆகும். சிந்தனை என்பது கருவிகளின் பயன்பாட்டால் விளைந்த நிறுவனங்கள் ஆகும். அறிவியல் அரசியல் பொருளாதாரத்தையும் சமூகப் பண்பாட்டையும் தீர்மானிக்கிறது. கருவிகளின் பயன்பாடு சிந்தனைகளையும் சமூகச் செயல்பாடுகளையும் மாற்றுகின்றன; மாற மறுக்கின்ற மனங்களும் உண்டு.
கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி உண்டபோதும் கூட்டமாக இருந்தவர்கள் உலோகங்களால் உற்பத்தியைப் பெருக்கியதால் குடும்பமாக உருமாற வேண்டும் என்ற சிந்தனையைத் தோற்றுவித்தது. கற்கருவிகள் அழிந்ததால் மனிதன் இப்பூமியின் விலங்குகளில் ஒரு வகையாக வாழ்வதும் அழிந்தது. அவன் ஒரு சமூக உயிரியாக உருமாறினான். ஒவ்வொரு கட்டமாக மாறிக் கொண்டே இருக்கிறான். வர்க்கம், மொழி, ஜாதி, மதம் என வெவ்வேறாகப் பிளவுபடுவதும் இதனாலேயே முரண்படுவதும் மோதுவதும் நிகழ்கின்றன. எனவே, சமகாலத்தை எவற்றைக் கொண்டு அளவிடுவது? கருவிகளிலிருந்தா? அல்லது கருவிகள் விளைவித்த சிந்தனைகளிலிருந்தா? கருவிகள் விளைவித்த சிந்துசமவெளி, கீழடி, சிவகளை நாகரீகங்களில் ஜாதி, மதம், வர்க்கம், ஆணாதிக்கம் போன்ற நிறுவனங்கள் இருந்தன என்று உறுதியாகக் கூற இயலாது. இல்லை என்றே கூறப்படுகிறது. இந்நாகரீகங்களைத் தமிழர்-திராவிடர் நாகரீகம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றுக்கும் பின்னர் தோன்றிய ஜாதிகள், மதங்கள், மொழிகள் இன்றும் நிலைத்து வலுப்பெறுகின்றன. இவை பண்டைய காலத்திலும் இடைக் காலத்திலும் தோன்றின. இவற்றைச் சமகாலத்தில் பின்பற்றுவோரை அதை நியாயப்படுத்துவோரை எந்தக் காலத்தில் வாழ்கிறார்? என வகைப்படுத்துவது. அக்கால கருவிகள் அழிந்து நவீன கருவிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. கலப்பை, ஏர், கமலை, மாட்டுவண்டி, கைத்தறி, சுண்ணாம்பு சூளை, வெள்ளாவி இன்னபிற கருவிகள் அழிந்தது டிராக்டர், மின்மோட்டார், பஞ்சாலை, பஸ் எனக் கருவிகள் மாறினாலும் பண்டைய கருவிகளால் தோன்றிய சிந்தனைகளையும் நிறுவனங்களையும் இன்றும் பின்பற்றும் மக்களையும், சமகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தாத மனிதர்களையும் இக்காலத்தில் வாழவில்லை எனக் கூற இயலுமா? சமகால கருவிகளுடனும் சிந்தனையுடனும் வாழ்கின்ற மனிதர்கள் கற்கால உணவு முறையையும் (Paleo Diet), அக்காலங்களில் தோன்றிய மதங்களையும் பின்பற்றுவோரையும் எந்தக் காலத்தில் வாழ்கின்றனர் என வரையறுப்பது? அறிவியல் வளர்ச்சிக்கு மூலமான மாயவித்தைச் சடங்குகள் கோயில் திருவிழாக்களாகச் சமகாலத்தில் இருக்கின்றன. இம்மாயவித்தை மதம் தோன்றுவதற்கு முந்தைய செயலாகும். ஆகவே, சமகாலம் என்பதை வரையறுப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் சமகாலம் என்றால் அவர்கள் பொருளியலிலும் பண்பாட்டிலும் ஒரே நிலையில் இருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்துகின்ற கருவிகளுக்கும் அவர்களின் சமூகப் பண்பாட்டுச் செயல்பாடுகளும் முரண்பாடுகள் இல்லை. கருவிகளுக்கு இணையாக அவர்களின் அரசியல், சமூகப் பண்பாட்டுச் செயல்பாடுகள் இருக்கின்றன. அவர்களுக்குக் கடந்தகாலம் என்பது வெறும் “நினைவுகளாக”, ”நினைவுச் சின்னங்களாக” இருக்கின்றன. ஜாதியச் சமூகத்தில் சமகாலம் என்பது கடந்த காலங்களின் கூட்டுக் கலவையான நிஜமாக இருக்கிறதே!
எடுத்துக்காட்டுடன் விளக்குவது என்றால், அவர்களுக்கு நோய் வந்தால் மருத்துவமனையையும் மருத்துவரையும் நாடுகின்றனர். மன நோய்களுக்கும் மனநல மருத்துவரையே அணுகுகின்றனர். நாம் மனக் கோளாறுகளுக்கு சாமியார்களை நாடுகிறோம். மருத்துவருக்கு முந்தைய மரபு சாமியார்கள். நோய் குறித்த அறிவியல் அறிவு வளராத காலத்தில் சாமியார்களை நாடினர். மருத்துவ அறிவியல் வளர்ந்த பின்னர் நோய்களுக்காகச் சாமியார்களை ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் நாடுவதில்லை. இந்தியாவில் மருத்துவர்களையும் சாமியார்களையும் நாடுகின்றனர். நோயிக்கும் பார், பேயிக்கும் பார் என்ற சொல்வழக்கும் இருக்கிறதே. சாமியார்கள் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவர்கள். இதுபோல்தான் ஜாதியும். இது வரலாற்றின் ஒரு இடைக் காலத்தில் தோன்றியது. தோராயமாகச் சுமார் ஏழரை நூற்றாண்டில் ஜாதி தோன்றியது. நாம் ஜாதியுடன் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோம். இதன் பொருள் நாம் ஏழரை நூற்றாண்டிலும் இருக்கிறோம் என்பதாகும். அக்காலத்தில் தோன்றிய புனிதம் தீட்டு என்ற கருத்தாக்கங்களை இக்காலத்திலும் பின்பற்றும் நம்மைச் சமகாலத்தில் வாழ்கிறோம் எனக் கூற இயலாது. உண்மையைக் கூறுவதென்றால், நாம் சமகாலத்துக்கு முரணாக இயங்குகிறோம். சமகாலம் என்பதை அறிவியல் பொருள்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய சமூகம் மாறியிருக்கிறதா? என்ற கேள்வியை அளவுகோலாக எடுத்துக் கொண்டால் நாம் சமகாலத்தில் இல்லை என்பது விளங்கும். கருவிகளுக்கு இணையான அறிவியல் வாழ்க்கை முறை உருவாகிறபோது நாம் சமகாலத்தில் வாழ்கிறோம் எனக் கூற முடியும்.
சமகாலத்தை, அதாவது சிந்தனையிலும் செயலிலும் அறிவியல் பொருளுக்கு ஏற்ப இணைந்து வாழ்ந்து சமூக மாற்றங்களையும் கணக்கில் கொண்டு இலங்கியங்களைப் படைப்பதில் இமையம் குறிப்பிடத்தகுந்தவர். அவருடைய கோவேறு கழுதைகளில் இதைக் காணலாம்.
– கோ.ரகுபதி
ஆங்கிலத்தில் இரண்டு சொற்களைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். Contemporary என்பதைத் தற்காலம் என்றும் Present என்பதைச் சமகாலம் என்றும் வரையறை செய்வேன். மகாபாரதமும் மணிமேகலையும் தற்காலத்தில் எழுதப்பட்டவை அல்ல. ஆனால் சமகாலத்தன்மையுடையவை. தற்காலத்தில் எழுதப்படும் யாவையும் சமகாலத்தன்மையுடையதாக இருந்தாக வேண்டும் என்பதில்லை. என்னளவில் காலாதீதக் கேள்வியைத் தற்காலப் பின்புலத்தில் எழுப்பும் இலக்கியம் சமகாலத்தன்மையுடையதாக ஆகிறது என்று எண்ணுகிறேன்.
– சுனில் கிருஷ்ணன்
மானுட வாழ்க்கையில் “இன்று” என்பதற்கு என்ன மதிப்போ, அதே மதிப்புதான்
இலக்கியத்தில் “சமகாலம்” என்பதற்கும். இப்படித்தான், “சமகாலத்தை” வரையறுப்பேன். “இன்று – இப்போது – இக்கணம்” – இந்த உயிர்ப்பே இலக்கியமும் வாழ்வுமாகும். அலுப்பும் சலிப்பும் கூடியதாயினும்கூட, உணர்வின் நகர்வுதான் சமகாலம். இது சதா அகத்தோடும் புறத்தோடும் உறவாடியபடியே இருப்பதாகும். ஒருவகையில் இலக்கியம் என்பதே காலத்தைக் கடப்பதுதான் என்று கொண்டால், காலமற்ற நிலையின் அகாலமே சமகாலம் என்பேன். நடப்பது தெரியாமல் நடந்துகொண்டேயிருப்பதுதான் சமகாலம். இறப்பு, நிகழ்வு, எதிர்வு மூன்றினுள்ளும் உணர்வே அலைமோதுகிறது. அம்மா வந்தாளின் அப்பு, படித்துறையில் அமர்ந்தபடி காவேரியுடன் மௌனித்திருப்பது, இலக்கியத்தில் சமகாலம் எவ்வாறு செயல் பங்காற்றுகிறது என்பதற்குத் தலைசிறந்த உதாரணமாகும். ஸ்டோர் குமாஸ்தா ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை, முதலாளி ஐயாவைச் சற்று நேரம் பார்த்துகொண்டே நின்றுவிட்டுப் பின் திரும்பி நடந்தார் (மனித யந்திரம்) எனப் புதுமைப்பித்தன் எழுதுகிறாரே, அக்கணம்தான் “சமகாலம்” என்பதற்கான இன்னொரு உச்சம். ஆத்மாநாம் மொழியில் சொன்னால், அந்த உயிரிழந்த பஸ்ஸரை அழுத்தும் கணமே அது!
“நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரின்” என்ற வெள்ளிவீதியின் தெறிப்பே சமகாலம். “வெற்பென்று வேங்கடம் பாடினேன்; வீடாக்கி நிற்கின்றேன்” என்ற திருமழிசையாரின் வியப்பிலும், “பசையுள்ள பொருளில் எல்லாம் பசை அவள் காண்; பழமையினால் சாகாத இளையவள் காண்” என்ற பாவேந்தரின் திளைப்பிலும் சமகாலமே சுடர்கிறது. எண்ணமற்ற நிலையே தியானம் என்றால், “கடந்து செல்லும் கங்கை ஆறு; ஓடிச் செல்லும் வேடன் உள்ளம்” (கம்பன்!) என்பதுபோல் காலம் காணாமலாகும் நனவே சமகாலம்!
– கல்யாண ராமன்
உருவம், உள்ளடக்கம் என்ற இரண்டு அம்சங்களால் ஆனதுதான் இலக்கியப் படைப்பு என்றாலும், அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கவியலாதபடி பிணைந்திருப்பதே ஆதரிசப் புள்ளி. ஆனாலும், ‘சமகாலம்’ என்ற ஒற்றை மதிப்பீட்டுக்குள் அதை அடக்க முடியாது. காரணம், உருவம் நடப்புக் காலம் சார்ந்ததாகவும், உள்ளடக்கம் எல்லாக் காலத்துக்கும் ஏற்றதாகவும் இருப்பதே படைப்புக்கு இலக்கிய அந்தஸ்து அளிக்கும். ஆக, இலக்கியத்தில் சமகாலம் என்பது நாட்காட்டியையும் கடிகாரத்தையும் சார்ந்து இருப்பதல்ல!
இன்றைக்கு யாரும் வெண்பாவில் கவிதை எழுத முற்பட மாட்டார்கள் – அதற்கு வாசகப் பெறுமானமும் இருப்பதற்கில்லை. இன்னொருபுறம், புதுமைப்பித்தனின் கதைகளில் ட்ராம் வந்துசெல்வதாலோ, பாரதியின் கதைகளிலும் கவிதைகளிலும் வடமொழிச் சொற்கள் சரளமாகப் புழங்குவதாலோ அவை சமகாலத்தவை இல்லை என்று நிராகரிப்பதற்கும் இல்லை!
உரைநடையில் செயல்படும் கால அமைப்பு பெரும்பாலும், படைப்புக்கு வெளியே நிலவும் கால அமைப்பை ஒத்தது. கவிதைக்குள் செயல்படுவது பிரத்தியேகமான கால அமைப்பு; மரபான முப்பட்டைக் கால அமைப்பைப் பொருட்படுத்தாதது. எனவே, இரண்டுக்கும் சமமான அளவீட்டு அலகுகள் செல்லுபடியாகாது.
உரைநடையைப் பொறுத்தவரை, குறிப்பாக புனைகதை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நடைமுறைக் காலத்தை அனுசரித்தே செயல்படுவது. கவிதையின் இயல்பு இன்னும் அதிகச் சுதந்திரம் கொண்டது.
எப்படியானாலும், அந்தந்தக் காலத்திய அரசியல் சரித்தன்மைக்கு ஈடுகொடுப்பதே சமகாலப் படைப்பு என்று நம்புவதில் எந்தவிதமான தர்க்க நியாயமும் இல்லை என்றே சொல்லவேண்டும்.
மேற்சொன்ன அனைத்தையும் ‘நவீன’ என்ற முன்னொட்டுக்கும் பொருத்திப் பார்க்கலாம். அவ்வையும் காளமேகமும் செய்யுள் வடிவத்திலேயே எழுதியபோதிலும், அவர்களுடைய கவிதைப் பார்வையில், பாடுபொருளில், நவீனத் தன்மை நிலவுவதைக் காண முடியும். இன்றைக்கு எழுதப்பட்ட படைப்பு, தன் உள்ளோட்டத்தில் பழமையின் நெடியோடு விளங்குவதையும் பார்க்க முடியும். ‘நூதனம்’ என்பதை ‘நவீனம்’ என்று பொருள்கொள்ளும் விபத்தையே பரவலாகப் பார்க்க முடிகிறது. புத்தம்புதிய உத்தியைப் பயன்படுத்தி, காலாவதியாகிவிட்ட விழுமியங்களை முன்வைக்கும் எழுத்தாளரை, ‘நவீன எழுத்தாளர்’ என்று சொல்வோமா என்ன!
மற்றபடி, படைப்புமனத்தின் தன்னிச்சையான செயல்பாட்டை வாசகமனம் கூர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. ‘நவீனம்’ என்பதோ, ‘சமகாலம்’ என்பதோ வாசகமனத்தில் நடைபெறும் மதிப்பீடு சார்ந்தது; படைப்பாளி கவனம் கொள்ளவேண்டிய அம்சம் இல்லை. அவர் முனைந்து உருவாக்கக் கூடியதும் அல்ல.
மேற்சொன்ன வரிகளை எழுதும்போது, இதுவரையிலுமான இலக்கியச் செயல்பாடுகளைப் பறவைப் பார்வையில் அவதானித்துக் கருத்துரைக்கக் கிளம்பும் மனம் எந்தக் காலத்தில் நிலைகொண்டிருக்கிறது!?
– யுவன் சந்திரசேகர்
சமகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட கருத்தியலால் கட்டமைக்கப்படும் சொல்லாடல் புலத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் காலத்தைக் குறிப்பது. சான்றாக, நவீனக்காலம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் சமகாலமாக அமைந்திருப்பதைக் காணலாம். நவீனக்காலம் என்பது முதலாளியத் தொழிற்புரட்சியால் உருவான நவீனத்துவம் என்ற கருத்தியலால் கட்டப்பட்ட “புதியன படைப்போம்” என்ற சொல்லாடல் வழியாக உருவான ஒன்று. இது பொதுவாக உலகின் சமகாலத்தைக் குறிப்பது. எனவே, “சமகாலம்” என்பது காலத்தால் குறிக்கப்படுவதில்லை, சமகாலக் கருத்தியலால் குறிக்கப்படுவது.
தொழிற்புரட்சியின் விளைவான நவீனத்துவம், இந்திய ஒன்றியத்தில் காலனியத்தால் அறிமுகமாகி, ஒன்றியத்தின் பழமையுடன், மரபுகள் என்ற பெயரில் உருவான ‘கலப்பின ஒட்டுயிர் நவீனத்துவமா’க (Hybrid Modernity) வெளிப்படுவதே. இதனையே, இந்திய ஒன்றியத்திற்கான சமகாலம் என வரையறுக்கலாம். இன்றைக்கான கலை இலக்கிய உற்பத்திகளின் வெளிப்பாடு என்பது இந்தக் கலப்பின ஒட்டுயிர் நவீனத்துவத்தால் கட்டமைக்கப்படுகிறது. ஒரேநேரத்தில் ஐரோப்பியனாகவும், இந்திய ஒன்றியத்தின் தனித்த பல தேசிய இனங்களின் மரபுகள் மற்றும் பழமைகள் கலந்தும் வெளிப்படுவதாகக் கலை இலக்கியச் செயல்பாடுகள் அமைகின்றன. இன்று வெளிவரும் எண்ணற்ற கலை இலக்கிய உத்திகள் இந்தக் கலப்பினத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இதனைக் கோட்பாட்டு அடிப்படையில் கூறினால், மேற்கத்தியச் சமூகத்தில் பின்நவீனத்துவ உத்தியாகவும், கீழைத்தேயச் சமூகத்தில் பின்காலனிய உத்தியாகவும் வெளிப்படுகிறது எனக் கூறலாம்.
நவீன இலக்கியம் என்பதே சமகாலத்தின் வெளிப்பாடுதான். எந்த ஒரு இலக்கிய உற்பத்தியும் அந்தந்தக் காலத்தின் ஆதிக்கக் கருத்தியலால் கட்டப்படும் பிரதிகளே. அதில் அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் எதிரான குரல் என்பது மொழிவழியாகப் பிரதியின் ஆழ்தளத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் அல்லது எதிர்மறையாக அணுகப்பட்டு உள்ளடக்கப் பட்டிருக்கும். எந்த ஒரு பிரதியும் சமகாலத்தின் இலக்கிய உற்பத்தி வடிவங்களைத் தனதாக்கிக் கொண்டு அறிந்தோ அறியாமலோ ஆதிக்கச் சொல்லாடலுடன் உறவு கொண்டே அமைகிறது. காரணம், இலக்கிய உற்பத்தியின் மூலப்பொருள் மொழியாக இருப்பதால், மொழிவழியாக இந்தக் கலப்பின நவீனத்துவக் கருத்தியல் கலை இலக்கிய உற்பத்திக்கான மூலப்பொருளை உருவமைப்பதாக அமைகிறது. எனவே, நவீன இலக்கியத்தில் சமகாலம் என்பது எந்தக் காலகட்டத்திலும் செயல்படும். தமிழின் சங்ககால இலக்கியத்தில்கூடச் சங்ககாலக் கருத்தியலால் அது கட்டப்பட்டாலும், இன்றைய சமகால நவீனக் கருத்தியல் வழியாகவே வாசிக்கப்படுகிறது. அல்லது நவீன ஒட்டுயிர் கலப்பின மொழியால் வாசிக்கப்படுகிறது. அவ்வகையில் எக்கால இலக்கியமும் சமகாலத்தால் வாசிக்கப்படுவதாக மட்டுமே அமைய முடியும். ஒரு இலக்கியப் பிரதி என்பது சமகால மொழியால் வாசிக்கப்படுவதால் சமகாலத்திலேயே பொருள் கொள்ளப்படும். அதனால்தான் இலக்கியம் காலந்தாண்டியதாக அமைகிறது. இலக்கியம் எக்காலத்திலும் சமகாலத்தன்மை கொண்டதாகவே அமையும். இதுவே பிரதியியல் கோட்பாட்டின் அடிப்படையாக உள்ளது.
– ஜமாலன்
இலக்கியத்தில் செயல்படும் காலம் வரையறைகளுக்கு உட்பட்டது அல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் ஏராளமான படைப்புகள் ஏன் தோன்றின? நாவல், சிறுகதை, நாடகம், ஓவியம், திரைப்படம் என்று சகலப் பிரிவுகளையும் பாதித்த பெருநிகழ்வாகப் போர் இருந்திருக்கிறது. எனவே படைப்புகளில் வெளிப்படும் காலத்தை, படைப்பாளிகளை விட காலமே நிர்ணயிக்கிறது எனலாம். இலக்கியம் பற்றிய பேச்சில் ‘சமகால இலக்கியம்’ என்னும் சொற்றொடர் பழகி வருவது மிக முக்கியம். ஒரு மொழியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவ்வப்போது யாரேனும் விசாரிக்கத்தான் வேண்டும். தன் மதிப்பீடு, குழு மதிப்பீடு, சாதிய மதிப்பீடு, வட்டார மதிப்பீடு, பொது மதிப்பீடு என்று பல வகையான மதிப்பீடுகளின் ஊடே ஒரு மொழியின் இலக்கியம் வளர்வதாக அல்லது தேய்வதாகப் பளிச்சென்று தெரிந்துவிடுகிறது.
நிறுவன மதிப்பீட்டால் ஒருபோதும் பயனில்லை. அரசு அங்கீகாரம் என்பது சில படைப்பாளிகளின் வாழ்வை அல்லது சாவை மகிமைப்படுத்தலாம். ஆனால் படைப்புகள் மேம்படலாம் என்றெல்லாம் எண்ணிவிட முடியாது. “படைப்புகளில் இயங்கும் காலம்” என்று யோசிக்கையில் அந்த யோசனையை மூலதனமாகக் கொண்டு இயங்குபவை வரலாற்றுப் புனைவுகள். புராணிக, இதிகாசப் புனைவுகள் படைப்பாளியையும்
அவர் சார்ந்துள்ள கருத்தியலையும் தூக்கிப்பிடிக்கப் பயன்படுகிறது. சீதா தேவியை தினமும் நெருப்புக்குள் தள்ளும் இவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
– சமயவேல்
“எக்காலத்தில் தோன்றியதாக இருந்தாலும், கலைச் செயல்பாடுகள் எல்லாமும் சமகாலத்தவையே. ஏனெனில் கலை என்ற ஒன்றே நிகழ்காலத்தில் மட்டும்தான் வெளிப்படுகிறது” என்ற கருத்தொன்று உள்ளது .
மேற்குலகின் ஆய்வாளர்கள் சமகாலம் அல்லது நவீனத்துவக் காலகட்டம் என்பதை இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தொடங்குவதாகக் கருதுகிறார்கள்.இந்தக் காலகட்டத்தின் சிந்தனைகளை, கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலக்கியம் என்று காலத்தை மட்டுமே கருத்தில் கொள்வதில் சிக்கல்கள் பல உள்ளன. இது, காலத்தின் போக்கில் நம் உணர்திறன்கள் மேம்பட்டு அல்லது பண்பட்டு, அதுவே கலைப்படைப்புகளிலும் வெளிப்படும் என்ற நம்பிக்கையில் சொல்லப்பட்ட கூற்று. ஆனால் எல்லா நேரங்களிலும் இடங்களிலும் இப்படியான ஒரு நேர்கோட்டில் கலை நிகழ்வதில்லை.
சமகாலம் என்பதைச் சமகாலத்தன்மை (contemporariness) என்று கொள்ளலாம்.
கலை என்றைக்குமே நிகழ்கால சமூக அரசியல் பண்பாடு சார்ந்து தன்னை முன்நிறுத்தும் தன்மையது. மேலும் அரசியல் சரிநிலை என்பது தொடர்ந்து முன்நகர்ந்து கொண்டே இருக்கும் இலக்கு. இந்தப் போக்கைக் குறைகூற முடியாது. ஏனெனில் இதுதான் பண்பட்டு முன்நகரும் சமூகத்தின் அடையாளமும் கூட. எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகத் தன்னைக் கருதும் கலைஞனுக்கு இந்த அரசியல் சரிநிலை இயல்பாகவே அமைந்துவிடும். கலைச் செயல்பாடுகள் கூடுமானவரை அதை நோக்கிய பயணமாக இருப்பதே நவீனத்துவத்தின் கூறுகளின் முதன்மையானது.
இனம், மதம், சாதி, நிறம் மொழி பால் மற்றும் பாலின ஈர்ப்பு சார்ந்த முன்முடிவுகளற்று, எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய, தீர்ப்பெழுதா தன்மை கொண்ட படைப்புகளே என்னைப் பொறுத்தவரை சமகாலத்தவையாக இருக்க முடியும். அது மட்டுமல்லாது பாலின, சாதி, மத அடிப்படையில் கிடைக்கும் சலுகைகளை, தனக்குச் சாதகமாக இருப்பினும், மறுப்பதும், இந்தப் பாகுபாடுகள் கொண்ட சமூகக் கருத்தியல்களை எதிர்த்துக் கேள்வி கேட்பதும் சமகால கலைஞனின் தார்மீகக் கடமையாகும்.
Edward Said சொல்வது போல ஆதிக்கக் கதையாடல்கள் [dominant narratives] மேல் தொடர்ந்து கேள்வி எழுப்புவதும் அதற்கு இணையான பிற கதையாடல்களை உருவாக்குவதுமே சமகாலத்தின் உண்மையான பிரதிபலிப்பாக இருக்க முடியும். இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, வடிவம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்த வெற்றுப் புதுமைகளை மட்டுமே முன்னிறுத்தும் படைப்புகள் வேடம் தரித்த போலிகளாகக் கருதப்பட வேண்டியவை .
– அனுராதா ஆனந்த்
இலக்கியத்தின் சமகாலம் என்பது என்ன? எனும் கேள்வி அதி முக்கியமானது. சமகாலம் எனில் கடந்த 10 ஆண்டுகளின் சமூக அசைவியக்கம் எவ்வாறிருந்தது? பாசக ஆட்சி ஊழல் பொய் எனும் தவறான பிரச்சாரத்தால் ஆட்சிக்கு வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று இரண்டு மெகா ஊழல்களை ஊதிப்பெறுக்கி ஆட்சியைக் கைப்பற்றியது பாசக. அவை முன்வைத்த ஊழல்கள் எதனையும் நிரூபிக்க முடியவில்லை. மாற்றாக மக்களை வதைக்கும் செயலை முன்வைத்தது. டீமானிட்டசேசன் வாயிலாகப் பெரும் மனித அவலம் நடந்தேறியது. தங்களது பணங்கள் ஒரு நாள் இரவில் செல்லாதாக்கப்படும் என்று எந்த மனிதனும் நினைத்திருக்கமாட்டான். கால்கடுக்க நின்ன கோலமும் வெயில் மழையில் செத்து மிதந்த பிணங்களுமாக மனித குலம் மாறியிருந்தது. இதனைப் பொருளாதார அவசரநிலை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.
அவசநிலை காலம் 1975 ல் இந்தியாவில் பரப்பப்பட்டது. அவசரநிலையை எதிர்த்து இந்தியப் பரப்பெங்கும் உள்ள கவிஞர்கள் பொங்கி எழுந்தனர். கவிதைக்குள் துணிச்சலை வெளிப்படுத்தினர். அக்கவிதைகள் 1983 ம் ஆண்டு ஒருமுகப்படுத்தப்பட்ட தொகுப்பாக வெளிவந்தது. ‘Voices of Emergency, An All India Anthology of Protest Poetry of the 1975-77 Emergency’ என்ற ஆங்கிலத் தொகுப்பில் அஸ்ஸாமி, பெங்காளி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கொங்கணி, மலையாளம், மராத்தி, பஞ்சாப்பி, ராஜஸ்தானி, தமிழ், தெலுங்கு, உருது முதலிய மொழிகளில் வெளிவந்த 250 க்கும் மேற்பட்ட கவிதைகளை ஜான் ஓலிவர் பெர்ரி என்பவர் தொகுத்திருந்தார். இவையனைத்தும் சமகால அரசியலான அவசரநிலையைக் கண்டித்துப் பேசின. தமிழில் ராஜ் கௌதமன், ஜனகப்பிரியா, தமிழவன், மாலன், இன்குலாப், ஆத்மநாம், அஸ்ரப், தணிகைச்செல்வன் என்பதான 22 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் மார்க்சியர்கள். அரசை எதிர்த்துப் பேசும் துணிச்சலைக் கோட்பாடுகளே கவிஞர்களுக்கு வழங்கியது என்பதிருக்க, சமகாலத் துயரங்களைப் பாடுபொருளாக்கும் கலையை அவர்கள் கற்றிருந்தனர் என்பதே சாலப்பொருத்தமாகும்.
பொருளாதார அவசரநிலைக்கும் பின்னர் ஆர்.எஸ்.எஸ்ஸின் பண்பாட்டு அஜண்டா சட்டமாக்கப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலம் மூன்று துண்டுகளாக்கப்பட்டது. பாரம்பரியமான பாபர் மசூதி 1992 ல் இடிக்கப்பட்டது. இப்போது அதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மாட்டுக்கறி சொல்லின் வாயிலாக இஸ்லாமியர்கள், தலித்துகள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டனர். ஹிந்திமொழி வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. இது ஒரு பண்பாட்டு அவசரநிலையாகும்.
இதைத் தாண்டி கோவியட்டில் லட்சோப லட்சம் புலம் பெயர்த் தொழிலாளர்கள் கால்நடையாக 1000 கிலோமீட்டருக்கு அப்பால் நடந்து சென்றனர். பசியால் செத்தவர்களின் கணக்கு நம்மிடம் இல்லை. ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்த் தொழிலாளர்கள் மீது அய்யோவென ரயில் ஏறி இறங்கியதைக் கேட்டுப் பதறாத மனம் ஏது? கோவியட் மரணக் கணக்கு முறையாகத் தரப்படவில்லை என்பதிருக்க மக்களைக் காக்கும் அரச பாசிசம் “கோ கொரான கோ” எனச் சட்டிமுட்டிகளைத் தட்டிக் கொண்டிருந்தது. கோவியட் மூலதனம் ஒன்று மக்களைப் பிழிந்தெடுத்து உருவானது. ஒரு தக்காளி 20 ரூபாய் எனில் ஒரு கான்ஸ் 150 ரூபாய். உணவின் விலை பெரிதா, புகை, கான்ஸ், சீமச்சாராயம் முதலான போதை விலை பெரிதா, மருத்துவத் துயர விலை பெரிதா…..எது பெரிது என்பதான நம்பிக்கையற்ற உரையாடல்களே பலரது மனதைத் துளைத்தெடுத்தன.
இப்போது இங்கு கேள்வி கேட்கலாம். சமகால அரசியல் துயரம்தான் இந்திய வரலாறாக மாறிவருகிறது. இதனை எதிர்த்து எத்தகைய இலக்கியங்கள் உருவாகின? ஆதவன் தீட்சண்யா, லிபி ஆரண்யாவின் கவிதைகள், விடுதலை சிகப்பியின் பண்பாட்டுக் கவிதைகள் சமகால அரசியலைப் பேசின. சிவசங்கர் எஸ்.ஜே, சுகிர்தராணியின் சில கவிதைகள் தலித் அரசியலைப் பேசின. தூரனின் கவிதைகள் புலம் பெயர்த் தொழிலாளர்களின் பாடுகளை அட்டகாசமாகப் புனைவாக்கின. அ.பிரகாசின் கதைகள், வினையனின் கவிதைகள் சமகால தலித் நிலத்தை ஓரளவு காட்டியுள்ளன.
சமகால அரசியல் பிரச்சனைகளை முன்வைத்து வெளிவந்த அருந்ததிராயின் நாவல் முக்கியமான ஒன்றாகும். தமிழில் சமகாலச் சிக்கல்களைத் தொடர்ந்து எழுதிவருபவர் இமையம். சாதி மீறிய திருமணம் குறித்து அவர் எழுதிய நெடுங்கதை மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. இளவரசன்- திவ்யாவின் துயர்மிகு வரலாற்றை ஸ்தலமாகக் காட்டிய கெட்டிக்காரன் இமையம். அத்தோடின்றி நான்குவழிச் சாலைகளுக்காகப் பிடுங்கப்பட்ட நிலம் குறித்துப் பேசியுள்ளார். கோவியட் துயரம் குறித்துப் பாடியுள்ளான். அரசியலில் தலித்துகள் நடத்தப்படும் விதம் குறித்தும் பாடியுள்ளான். மொத்தத்தில் சமகாலத்தைப் பாடிய முதன்மைப் படைப்பாளி இமையம்தான்.
மொத்தப் படைப்பாளிகளில் ஒற்றை இலக்கப் படைப்பாளிகளே சமகாலம் குறித்துப் பாடியுள்ளனர். அப்படிப் பாடியவர்கள் கோட்பாட்டுப் புரிதல் கொண்டவர்கள். மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் முதலான கோட்பாடுகளை அறிந்தவர்களாலேயே சமகாலம் படைப்பாக்கப்பட்டது. மீதியானவர்கள் என்னவாயினர்?
மீதியானவர்கள் தங்களது அனுபவங்களைப் படைப்பாக்குகிறார்கள். சுயசரிதைகளைத் தங்களது புனைவு சக்தியால் படைப்பாக்க முயல்கிறார்கள். அவர்கள் அரசியல் நீக்கம் அடைந்தவர்கள். அதனாலேயே அவர்களிடம் கடந்த கால ரொமாண்டிசம் மேலோங்கியுள்ளது.
– அ.ஜெகநாதன்
தமிழ் இலக்கியச் சூழலில், யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை, சமகாலம் என்பது பத்தாண்டுகளுக்கு முன்பான காலகட்டம் எனும் கருத்து நிலை பெற்றிருக்கிறது. தற்போது ஈரான் நிலைகுலைந்திருக்கும் சமயத்தில் நமது சமகாலம் கடந்து போன பத்தாண்டிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது? அல்லது அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் இருந்து (2015…2005…1995)?.
வரலாற்றுக் காலம் என்ற ஒன்றிலிருந்து நாம் சில அனுபவங்களை வரையறுத்து வைத்திருக்கிறோம். 1947ஐ எடுத்துக் கொள்ளுங்கள், அதற்கும் காலத்திற்கும் ஒரு தொடர்புமில்லை. ஆனால் நம்முடைய வரலாற்றுக் காலத்தில் அதுவொரு முக்கியமான ஆண்டு. வரலாற்றுக் காலத்தில் இருந்து, சமகாலம் தனித்திருக்கிறது. அதன் அனைத்து அம்சங்களும் வரலாற்றுக் காலத்திற்குள் நுழையச் செல்லும் இரயில் பெட்டிகளைப் போல விரைகின்றன. எனினும் சமகாலத்திற்கு அது ஒன்று மட்டுமே குறிக்கோள் இல்லை. உண்மையில் சமகாலத்திற்கு எனத் தனியாக ஒரு குறிக்கோளும் இல்லை. அது நிகழ்வது, ஆனால் அது நிகழ்வதை நம்மால் உணர முடியாது. மேலும் சமகாலத்திற்கு என நம்மால் குறிப்பிட முடிகிற ஒரு பொருள் கிடையாது. அதன் பல்வேறு சாத்தியங்களை நமது தொடர்புகள், விழிப்புணர்வு, கருதுகோள்கள், ஆய்வுகள், ஆவணங்கள், நினைவு இவற்றால் வரையறுக்க முனைந்தால் மட்டுமே சமகாலத்திற்கு எனப் பொருள் உருவாகும்.
நம்மால் உற்றுநோக்கப்பட்டு, அதனோடு சேர்ந்து விளக்கப்படும் வரை நிகழ்பவை அனைத்தும் வரையறுக்க முடிகிற வகையில் நிகழ்வதில்லை. நம்மால் இடையீடு செய்யப்படும் வரை நிகழ்பவை அனைத்திற்கும் குறிப்பிட்ட பொருள் என்று ஏதுமில்லை. சமகாலத்தில் நம்மோடு இடையீடு செய்ய முடியாது. ஏனெனில், நாமே சமகாலத்தை உருவாக்குகிறோம். நமக்கு வேறு வாய்ப்புகளும் இல்லை. நாம் செய்யும் மொத்தச் செயல்களின் கூட்டுத் தொகையாகவே சமகாலம் எழுகிறது. அதனை வரலாற்றுக் காலத்திற்கு நகர்த்துவதற்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளி தேவை என்பதால் பத்தாண்டுகள் என்கிற ஒரு கருதுகோள் உருவாயிற்று எனக் கருதுகிறேன்.
2015 என்பது நமது சமகாலத்தின் துல்லியமான தொடக்கம் அல்ல. எனினும் அதுவே நமது சமகாலத்தின் மீபொருண்மை தொடக்கத்தின் ஆண்டு. இவ்வாறே 2015 ஆம் ஆண்டிற்கு 2005 ஆம் ஆண்டும். உயிரியல் வாழ்வு என்பது என்னதான் நமது உடல் சர்க்காடியன் கடிகாரத்தின் படி இயங்குவதாக நாம் பேசினாலும், அது காலமற்று இயங்குவதாகக் கருதுவதற்கே இடமுண்டு. அக்கடிகாரம் ஒளியோடும், இருளோடுமான உறவால் இயங்குவது.
இப்போது இலக்கியத்தில் சமகாலம் எனச் சொல்லப்படுவதற்கு வருவோம். இலக்கியம் உடனடி எதிர்வினை செய்யக் கூடாது என்றும், இலக்கியப் பூர்வமாக ஒன்றைச் சிந்திப்பதற்கான கால இடைவெளியை அது கடக்க வேண்டியது ஒரு முன்நிபந்தனையாக நம்முன்னே வைக்கப்பட்டிருக்கிறது. உடனடி எதிர்வினைக்கும், சமகாலத்தின் சாராம்சமாக, பொருளாக நாம் கருதுவதைப் படைப்பில் பேசுவதற்கும் வேறுபாடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை எடுத்துக் கொள்வோம், நமது இலக்கியத்திற்கு அது ஒரு பொருட்டே இல்லை. ஆனால் காலனிய துப்பாக்கிச் சூடுகள் முக்கியமான கருப்பொருள்கள் (எ.கா பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூடு). ஒரு சமூக நிகழ்வு படைப்பாக மாறுவதற்கு ஒரு கால இடைவெளி தேவை என்கிற அதே சமயத்தில் தனிமனித உறவுகள், நமது அன்றாட உரையாடல்கள் படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுகின்றன எனக் காண்போம்.
ஆங்கிலம் கலந்த நமது அன்றாட உரையாடல் இடம்பெறாத படைப்புகளை நாம் இனங்காண்பதே அரிதாக இருக்கிறது. இப்படைப்புகள் நமது சமகாலத்தின் எந்தத் தன்மையைப் பிரதிபலிக்கின்றன?. இது ஒரு துல்லியமான எல்லைப்பிரிப்பு (demarcation). சமூக, அரசிய நிகழ்வுகளை உடனடியாகப் படைப்பாக மாற்றாதே, ஆனால் நமது உரையாடலை நம் காதுகளில் ஒலிக்கிறவாறே பயன்படுத்து.
எழுதுகிற ஒருவர் காலக்கோட்டின்படி இயங்கத் தேவையில்லை. ஆனால் அவர் எழுதுகிற காலகட்டத்தின் பண்பாண்மை (Ethos) அதில் வெளிப்பட வேண்டும். சமகாலத்தின் பண்பாண்மை மற்றும் உணர்ச்சிக்கனிவு (pathos), இவற்றைத் துல்லியமாக அறிய முடிந்து வெளிப்படுத்த முனைந்தால், இலக்கியத்தில் அது சமகாலத்தைப் பிரிதிபலிப்பதைக் கடந்து அதன் பொருளைப் பேசக் கூடியதாக இருக்கும். இதனையே நாம் படைப்பின் ஆழமென்று கருதுகிறோம்.
அனைத்திற்கும் மேலாக, காலம் என்ற ஒன்று கிடையாது என்கிற முடிவை அறிவியல் எட்டியிருக்கிறது. ஆக எல்லாக் காலங்களும் சமகாலங்களே.
– பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
சமகாலம் என்பதை எப்படி வரையறுப்பது?
பொதுவாக இலக்கியமென்பது எப்பொழுதும் சமகாலத்திலிருந்து சற்றுத் தள்ளியே’தான் நிற்கிறது. ஒரு அனுபவத்தை எழுதுவதற்குக் காலமாகச் சற்றுப் பின்னகர்ந்த பின்பே, அதைப் படைப்பாளி படைக்கத் தொடங்குகிறான். நிகழ் அனுபவத்தை உடனடியாகச் சொல்வதில் இலக்கியத்திற்குக் கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அதனிலிருந்து அகலாது – அணுகாது மனநிலைக்கு வர வேண்டியிருக்கிறது. அவற்றைக் குறித்து உடனடி சரி – தவறுகளிலிருந்து விடுபட வேண்டியிருக்கிறது.
பொதுவாகச் சமகாலம் என்பதைப் படைப்பாளிகள் ISD அழைப்புகள் போலதான் அணுகுகிறார்கள். நாம் பேசியது சில விநாடிகள் தாமாதமாய்த்தான் அங்கு போய் சேரும். அல்லது குழாய் ரேடியோ வரிசையாகச் சாலையில் கட்டப்பட்டிருக்க, ஒரே பாடல் மிக நுண்ணிய கால வேறுபாடில் ஒவ்வொரு குழாயிலும் ஒலிக்கும்.
சமகாலம் நிகழும் வரை அது நமதில்லை. அது நிகழ்ந்து முடிந்த பின்’தான் நம் அனுபவமாக மாறுகிறது. மானுடக் குலத்தின் மாபெரும் துயரம், அத்தனை அனுபவங்களும் கண்ணெதிரே உருகிப் போவதே. எதையும் நமது என்று உணர்வதற்குள் அது கைநழுவி, ஓர்மையாகவும், ஏக்கமாகவும், கனவாகவும் மாறுகிறது.
அப்படியெனில், சமகாலம் என்ற ஒன்றே இல்லையா? எனத் தத்துவார்த்தமாகக் கேள்வி எழுப்பலாம்.
கைநழுவிப் போவதே மானுடர்களின் சமகாலம் என்பதைத் துயரத்தோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். சமகாலத்தை வரையறுப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. அது நம் சுவாசம் போல, அனிச்சையாக நாம் அறியாது, ஆனால் கனந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
2. நவீன இலக்கியத்தில் சமகாலம் எவ்வாறு செயல் பங்காற்றுகிறது?
நவீன இலக்கியம் சமகாலத்தை உடனே பிரதிபலிப்பதில்லை. படைப்பாளி ஒரு காலத்தை, அவனுக்கே சொந்தமான ஒரு காலத்தை உருவாக்குகிறான். அது இருபது வருடத்திற்கு முன்பாக இருக்கலாம், இருநூறு வருடத்திற்கு முன்பாகவும் இருக்கலாம். இதனோடு வேறொரு கேள்வியையும் எழுப்பலாம். நவீன இலக்கியம் NOSTALAGIA’வில் திளைக்கிறதா? ஒரு பொழுதுமில்லை. படைப்பாளி அவனாக ஒரு காலத்தை உருவாக்குகிறான். அந்தக் காலத்தைச் சமகாலமாக்குவது அந்தப் படைப்பின் வழி எக்காலத்திற்குமான கேள்விகள் எழுப்பப்படுவதின் வழியே’தான்.
தமிழில் நாம் அறிந்த நல்படைப்பாளிகள் பெரும்பாலும் காலத்தில் பின்-நகர்ந்து’தான் எழுதுகிறார்கள்.
அசோகமித்திரனின் “பதினெட்டாவது அட்சக்கோடு” நாவல் இந்தியா சுதந்திரம் அடையும் காலத்தை ஒட்டியது. ஆனால், அது எழுப்பும் கேள்வி என்றென்றைக்குமானது. அகிலனும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி கடந்த காலத்தைப் பற்றி எழுதுகிறார். ஆனால் அதில் கடந்த காலம், சமகாலம் எதுவுமில்லை.
நவீன இலக்கியத்தில் சமகாலம் எவ்வாறு செயல் பங்காற்றுகிறதெனில்? அது இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தைய காலத்தைப் பற்றி எழுதினாலும் மாறாத மானுடக் குலத்தின் அடிப்படைகளைப் பேசுவதன் வழி அது சமகாலமாக மாறுகிறது.
“நம் காலத்து நாயகன்” நாவலில் லேர்மத்தவ் 1840’ல் தன்னுடைய சமகாலத்தை’தான் எழுதினார். அவர் அதில் அடிநாதமாக எழுப்பிய கேள்விகளின் வழி, அந்த நாயகனின் குதிரையில் என்னாலும் ஏறிக் கொள்ள முடிகிறது.
பா.சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” என்றேனும் பழைய நாவலாக மாறுமா? அது என்றும் புதிது.
“காலத்தைச் செதுக்குகிறேன்” என்பது தர்கோவஸ்கி’யின் வாசகம் ஒவ்வொரு தீவிர படைப்பாளியும், அவனுடைய பிரத்யேகச் சமகாலத்தை, என்றைக்குமான சமகாலத்தை அவனே செதுக்குகிறான்.
எல்லாம் கைநழுவி, புகையாய்ப் போகும் வாழ்வில் அவனுக்கு அருளப்பட்டது அது மாத்திரமே.
– சாம்ராஜ்
காலம் நேர்க்கோட்டில் செல்லக்கூடியது. முன் இருந்த காலத்தை விடப் பின்னால் வரும் காலம் மேம்பட்டதாக இருக்கும். பழையன கழிதல் நல்லதற்கே. காலம் முன்னோக்கிச் செல்லச் செல்ல, மனித வாழ்க்கை முன்னேறும், அறிவு கூடும், வளங்கள் பெருகும், மனிதர்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள் களையப்படும், இயற்கை முழுமையாக மானுடக் கட்டுப்பாட்டுக்குள் வரும். “நவீன காலம்” என்று நாம் கொள்ளும் வரலாற்றுத் தருணத்தில் இத்தகைய கருத்துகள் செல்வாக்கு பெற வந்தன.
காலனியாட்சி, ஆள வந்த அயலவர்களின் இனவெறி, பண்பாட்டுச் செருக்கு, பெருமிதங்கள், அவர்கள் ஆட்சியில் ஏற்பட்ட முன்னுதாரணமற்ற பொருளாதாரக் கொள்ளை, சுரண்டல் ஆகியன நவீன காலத்துக்கு வழிக் கோலின. இதனால் இந்தியா உள்ளிட்ட காலனியாட்சிக்கு உட்பட்ட நாடுகளில் நவீன காலம் என்பது பலரைச் சஞ்சலப்படுத்தியது. தாம் வாழும் காலம், அதாவது சமகாலம், அசாதரணமான ஒன்று என்ற எண்ணம் மேலோங்கியது. நவீன சென்னை நகரம் பற்றிய குறிப்பு ஒன்று இதை நமக்கு உணர்த்துகிறது. இரு கந்தர்வர்கள் சென்னையைச் சுற்றிப் பார்க்க வருவதாகவும், வெள்ளை இனத்தவர்கள் நகரில் வாசம் செய்வதால் நகரத்தின் பண்பாடு கெட்டுப் போய்விட்டது, வெள்ளையர்கள் சட்டம், ஒழுங்கு, பொருளாதார வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியிருந்தாலும் பிராமணர்களை நிந்தனை செய்கின்றனர் என்று அவர்கள் கருத்துரைப்பதாக 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விஷ்வகுணதர்ச சம்பு என்ற வடமொழிநூல் குறிப்பிடுகிறது.
ஆங்கில ஆட்சி, அது கொண்டு வந்த மாற்றங்கள் இங்கு வேரூன்ற, வேறு பலரும் காலம் மாறி வருவது குறித்து கவலை கொண்டனர். இது கலிகாலம், பழையனவற்றைக் கலைத்துப் போட்டு விட்டுள்ளது, மரபுக்கும், காலம்காலமாக இருந்து வந்துள்ள பழக்க வழக்கங்களுக்குமான கனம், கம்பீரம், அதிகாரம் காணாமல் போய்விட்டன – இவ்வாறு சிந்தித்தவர்களில் பலர் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்தவர்கள், குறிப்பாக சமுதாய, பண்பாட்டு அதிகாரம் படைத்தவர்கள். என்றாலுமே, நவீன காலம் புகுத்திய புதுமைகள் இவர்களில் சிலருக்கு வியப்பூட்டக்கூடியவையாக இருந்தன.
கல்வியின் விரிவாக்கம் நிலை, அறிவியல் வளர்ச்சி, உலகெங்கும் நடைபெற்று வந்த சமுதாய மாற்றங்கள், குறிப்பாக, பெண்கள், பாட்டாளிகள் தங்களின் உரிமைகளுக்காகப் போராட வந்தது, இனவெறியை எதிர்த்து கறுப்பினத்தவர்கள் திரண்டது, சில நாடுகளில் அரசியல் அதிகாரம் என்பது பரவலாக்கப்பட்டிருந்த நிலை – இவற்றை ஏற்காது இருக்கவும் முடியவில்லை. காரணம் காலனியாட்சியின் தர்க்க நியாயங்களை எதிர்க்க இக்கருத்துகள் பயன்பட்டன.
பிறப்பால், இனத்தால் ஒருவரைத் தாழ்ந்தவராகக் கருதுவது தவறு, மன்னராட்சியும், வலுவானவர்களின் அதிகாரமும் கடவுளால் செய்யப்பட்ட ஏற்பாடு அல்ல, அவற்றைத் தகர்த்தெறிந்து மக்களாட்சியைக் கொண்டு வர முடியும், இன்னும் சொல்லப் போனால் கடவுள் நம்பிக்கை என்பதற்கு ஆதாரமில்லை, மதங்கள் மனிதர்களால் படைக்கப்பட்டவைதான், தேவர்களால் அல்ல என்பன போன்ற கருத்துகள் பரவலாகப் பேசப்பட வந்தது – சிந்திப்பவர்களின், படைப்பாளிகளின் மனங்களை இவையும் ஆட்கொண்டன. இந்நிலையில், தாம் வாழும் காலத்தின் “நவீன”த் தன்மை அவர்களின் கற்பனையைத் தூண்டியது – இந்த நவீனத்தை எவ்வாறு உள்வாங்கிக் வாங்கிக் கொள்ளப் போகிறோம் என்ற கேள்வியை அவர்கள் எதிர்கொள்ள வந்த போது சமகாலம் என்பது குறித்து யோசிக்கலாயினர்.
சமகாலம் நமக்குச் சோதனையான காலம் என்றாலும், நம்மை நாமே சோதித்துப் பார்த்து பழையன, புதியனவற்றுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கான அசல் பண்பாடு எது, எது நமக்குக் கேடு விளைவித்துள்ளது என்று தரம் பிரித்து மரபு என்பதைக் காலத்துக்கு உரிய வகையில் மீட்டெடுக்க வேண்டும். குறைந்தபட்சம் பழையனவற்றை உள்ளபடியே ஏற்கலாகாது என்பன போன்ற கருத்துகள் வாதிடப்பட வந்தன.
இத்தகைய கருத்துகள் அன்றைய இலக்கிய உலகத்தைப் பாதித்தன. இவற்றுக்கு முகங்கொடுத்து எழுதியவர்களில் இருவர் முக்கியமானவர்கள் – பாரதி, புதுமைப்பித்தன். பொது வாழ்க்கையில் புழங்கவும், எழுதவும் வந்த பெண்களுக்கும் காலம் பற்றிய கவலைகள் இருந்தன.
இனி வரும் இலட்சிய உலகமான “கிருதயுக”த்தை நோக்கி சமகால வாழ்வைக் கட்டமைக்க வேண்டும் என்பது பாரதியின் இலக்கு. இந்த கிருதயுகம் என்பதைப் புரட்சிக் காலமாக விளித்த அதே சமயம், வேத காலத்தில் நிலவிய “அசல்” இந்துப் பண்பாட்டு மரபை மீட்டெடுக்கும் காலமாகவும் அவர் கணித்தார். இந்தச் சிக்கலுக்கு அவரது படைப்பாளுமை ஆட்பட்டதால் உண்டான கற்பனைத் தவிப்பு அவரின் இலக்கியத்துக்கு வலுவூட்டியது. அதே சமயம் முரண்பட்ட நிலைப்பாடுகளை அவர் மேற்கொள்ளவும் இந்தத் தவிப்பு காரணமாக இருந்தது.
சமகாலத்தைக் காலவெளிக்கு அப்பால் நிறுத்தி, அதைப் பொருளுடைய காலமாக அறிய பாடுபட்ட அவரின் புலமை அவரைச் சிலாகிக்க மட்டுமே கற்றுக் கொண்டுள்ள பொதுப் புத்திக்குப் புலப்படவில்லை. ஒன்று, அவர் தீர்க்கதரிசியாக, சிறந்த தேசியவாதியாக அறியப்படுகிறார். அல்லது அச்சு அசலான பார்ப்பனியச் சிந்தனையுடையவராக, இன்றைய இந்துத்துவ நிலைபாட்டுக்கு உகந்தவராக, முன்னோடியாக விமர்சிக்கப்படுகிறார்.
தான் வாழ்ந்த காலம் இட்ட சவால்களை எதிர் கொள்ள அக்காலத்தை வேறு வகையில் கற்பனை செய்ய அவர் முற்பட்டார். இதனால் அவரின் எழுத்துகளில் புரட்சிகர உவகை, களிப்பு துலங்குகின்றன. ஆனால் அவரின் கற்பனையார்ந்த இந்த உணர்ச்சி நிலையை அசல் இந்துப் பண்பாடு பற்றிய அவரின் அதிகாரத் தோரணையிலான பார்வை ஊடறுத்து விடுகிறது. இதனால் அவரின் கற்பனை வளம் சேதாரத்துக்கு உள்ளாவதுடன். காலம் பற்றிய அவரின் நூதனமான சிந்தனை வெறும் மனத்தவிப்பாக மட்டும் எஞ்சிவிடுகிறது.
சமாகாலம் கிளர்த்திவிட்டிருந்த மன சஞ்சலங்களைப் புதுமைப்பித்தன் நகைமுரணுடன் எதிர் கொண்டார். இது குறித்து ராஜ் கௌதமன் அற்புதமாக எழுதியுள்ளார் – காலம் விதித்த வரம்புகளை அவரின் படைப்பாற்றலும் கற்பனையும் எவ்வாறு கடக்க முற்பட்டன. இதனால் உவகை, களிப்பு ஆகியவற்றுக்கான உருவகமாக அவரின் எழுத்து எவ்வாறு உருப்பெற்றது, இந்த உருப்பெறுதல் என்பது எவ்வாறு காலச்சிக்கல்களை எதிர்கொள்ளும் தீர்வானது என்றரீதியல் செல்லும் கௌதமனின் வாசிப்பு சமகாலத்தைக் கடக்கும் கலைஞர்கள் குறித்த முக்கிய அவதானமாகும். இத்தகைய தவிப்பும், உவகையும் எவ்வாறு பின் வந்த ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்தவர்களிடத்தே இல்லாமல் போனது என்பதையும் கௌதமன் சுட்டிக் காட்டியுள்ளார் – குறிப்பாக சுந்தர ராமசாமி பற்றிய அவரின் கவனம் பெறாத நூலில்.
அதாவது, சமகாலத்தைச் சோதனைக் காலமாகக் கொள்ளாது, தன்னளவில் அதன் சிக்கல்களை ஆராய முனையும் போது சம்பந்தப்பட்ட படைப்பாளிகள் காலம் குறித்து அடிப்படையான கேள்விகளைக் கேட்காது போய் விடுகின்றனர். ஒன்று, மொழியின் நுணுக்கங்களுக்குள் தங்களின் படைப்புகளைக் கிடத்தி, அதனால் உண்டாகும் பரவசத்தை எழுத்துக்கான அளவீடாக உருமாற்றி விடுகின்றனர். அல்லது, தனிமனித மனச்சிக்கல்களைப் பிரதானப்படுத்தி, அவற்றை உள்மனக் கோலங்களாகப் பாவித்து விடுகின்றனர். இதனால் காலம் குறித்த ஆழமான பார்வை, புரிதல் அவர்களிடத்து இல்லாது போய்விடுகிறது என்று கௌதமன் வாதிடுவதாகக் கொள்ளலாம்.
சமகாலத்தில் வாழ்தல் என்பது எத்தனை சிக்கலானது என்பதைப் பெண் படைப்பாளிகளின் எழுத்துகளிலும் காணலாம். காலம் கிளர்த்தியிருந்த மாற்றங்கள் பெண்களின் விடுதலைக்கு, குறைந்தபட்சம் அவர்கள் தங்களை மனுஷிகளாக உணர்வதற்கு வழிவகுத்ததால் அதனை ராஜம் கிருஷ்ணன், ஹெப்சிபா ஜேசுதாசன் உள்ளிட்டவர்கள் தங்களுக்கான காலமாக வரித்துக் கொண்டனர். அதே சமயம், பெண்மைக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கணம் என்பது மொழியில், பண்பாட்டில் வேரூன்றி இருந்ததால், பெண்களின் பாடு குறித்து எழுதுகையில் கடந்த காலத்தின் அழுத்தம் இவர்களின் எழுத்தைப் பாதிக்கவே செய்தது. இதனால்தான் பெண்களின் அவா, ஆசை, விருப்பம், விழைவு என்பனவற்றை காலம் கடந்த நிலையில் இவர்களால் எல்லா நேரங்களிலும் கற்பனை செய்து பார்க்க இயலவில்லை. விதிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டித் தங்களுக்கான வாழ்க்கையை இவர்களின் படைப்புகளில் வரும் பெண்கள் அமைத்துக் கொள்ளும் போது, சமகாலத்தவராக மட்டும் இருந்து இதைச் செய்வதில்லை. காலம்காலமாக இருந்து வருவதாகக் கொள்ளப்படும் பண்பாட்டு ஒழுங்கு என்ற ஒன்றுக்குக் கட்டுப்பட்டும் இயங்க வேண்டியவராகின்றனர். ஹெப்சிபா இதனை நாசூக்காக எடுத்துச் சொல்கிறார். ராஜம் கிருஷ்ணன் கோபமும் தாபமும், கடக்க முடியாத சாதிய, பண்பாட்டு எல்லைகளுக்குள் சிக்குண்டும் இதைச் செய்கிறார்.
சமகாலத்தை முற்று முதலான விடுதலைக்கான காலமாக கற்பனை செய்தவர்களுள் முதன்மையானவர்
அயோத்திதாச பண்டிதர். வெள்ளையர் ஆட்சியின் நற்பயன்களைப் பட்டியலிட்டு மாட்சிமை பொருந்திய, கருணையான ஆட்சியாக அதனைப் பாவித்தார். ஆனால் ஆட்சியாளர்களின் இனமேன்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களால்தான் நாடு முன்னேறியுள்ளது என்பதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. காலம் காட்டிய மாற்றங்களை, குறிப்பாகப் பிறப்பின் அடிப்படையில் பேதங்களைக் கற்பிப்பது தவறு, மாந்தர்கள் அனைவரும் சமம், அறிவு என்பது அனைவருக்கும் வாய்த்துள்ளது, என்பன போன்ற கருத்துகள் விவாதிக்கப்பட்ட சூழலில், இவற்றுக்கான நியாயத்தை ஆட்சியாளர்கள் புகுத்திய நவீனத்துடன் அவர் இணைக்க மறுத்தார். மாறாக, தமிழ்ச் சமுதாயத்தின் ஆதிநிலை அறமாக விளங்கிய பௌத்தத்தைத் தற்கால முன்னேற்றச் சிந்தனைக்கான ஆதாரமாகக் கொண்டு புத்தரை எக்காலத்துக்கும் உரியவராகக் கட்டமைத்தார். பார்ப்பனர்களும் பிறரும் வேத காலத்தைப் பொற்காலமாகக் கொண்டது போல் அல்லாது, புத்தரின் காலத்தைத் தற்காலத்துடன் பொருத்திக் காட்டி, அவர் போதித்த அறம் என்பது காலத்தின் போக்கையே வழிநடத்த வல்லதாக விவரித்தார். சமகாலம் என்பதன் பிரச்சனைகளைக் களைய காலத்துக்கு அப்பாற்பட்ட அறவெளி உதவும், பூர்வ பௌத்த ஒளி மீண்டும் அறியப்படும் என்றும் வாதிட்டார்.
காலம் என்பது நேர்க்கோட்டில் செல்லக் கூடியதாக இருந்தாலும், நாம் வாழும் பொழுது, தருணம், இவற்றைக் காலவெளியில் நிறத்தி, அவற்றுடன் இணையவல்ல வேறு தருணங்களை அடையாளமிடுவதை அவர் முக்கியமாகக் கருதினார் என்று கொள்ளலாம். இத்தருணங்களைத் தருவிக்கும் போது சீவகாருண்யம் என்பதை நிறுவ எக்காலம் உதவும், எந்தக் காலத்துளி பயன்படும் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கவனமாக இதைச் செய்ய வேண்டும் என்பதை அவரின் எழுத்துகள் புலப்படுத்துகின்றன. அவர் தற்காலத்துக்குள் தன்னைக் கரைத்துக் கொள்ளவில்லை. கடந்தகாலத்தை மீட்டெடுக்கவும் முனையவில்லை. நற்காலம் என்பது நினைவில் தங்காமல் இருந்தாலும், அது நமக்கானது என்று அன்றைய தலித்துகளை நோக்கி அவர் பேசினார்.
நற்காலமாக அவர் கொண்ட காலம் பூர்வ பௌத்தர்களுக்கான காலமாக அமைந்து போனது – இந்த பூர்வ பௌத்தர்கள் அனைவருக்கு முன்னால் இருந்தவர்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளாது, அவர்களின் “பூர்வம்” என்பது தற்காலத்துக்குரியது, நம் அனைவரையும் ஆற்றுப்படுத்த வல்லது என்றரீதியில் அதை விளக்க வந்தார். இனி வரும் உலகம் “பூர்வர்”களின் உலகமாக இருக்க வேண்டுமானால், பூர்வர்களின் அறம் பொது அறமாக அறியப்பட வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. இவ்வகையில் பூர்வம் என்பது குறியீட்டுச் சொல்லாக, சமகாலத்தின் முரண்பாடுகளைக் கடக்க உதவும் சங்கேதச் சொல்லாக ஆகிப்போனது.
– வ.கீதா
சமகாலம் என்பது என்னளவில் சிக்கலான கருத்தாக்கம் ஆகும். உண்மையில், உலக நாடுகள் பொதுமைக்கும் ஒருவிதப் பொதுத்தன்மை நிலவுவதாக எடுத்துக்கொண்டாலும், கால, தேச, வர்த்தமானங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டிற்கு நாடு, மாநிலத்திற்கு மாநிலம் வாழ்வியல் என்பது மாறுபட்டதாகவே உள்ளது. உதாரணமாக, பருவங்கள் என்பது உலகம் மொத்தத்திற்குமான பொதுவான நிலைமை என்றாலும், பூமத்திய ரேகையைக் கொண்டு பார்த்தால் நாடுகளில் பருவ நிலைகள் உலகம் பூராவும் ஒரே மாதிரியும், ஒரேசமயத்திலும் நிகழ்வதில்லை. நிகழும் காலக் கணக்கின் படியும் பார்த்தாலும், ஒரு நாட்டில் பனி அதிகம் நிலவுவதாகவும், கோடை அரிதானதாகவும் இருக்க, இன்னொரு நாட்டில் கோடை அதிகம் நிலவுவதாகவும் பனி அரிதின் நிகழ்வாகவும் இருக்கிறது. பனி சூழ் நாடுகளின் மொழிகளில் அது தொடர்பான வார்த்தைகள் எண்ணற்றவையாகவும், துல்லியம் மிக்கவையாகவும் இருக்க, அதற்கு நேர்மாறாக வெப்ப நாடுகளில் அது சார்ந்த சொற்கள் குறைவாக இருப்பதைக் காணலாம். அடிப்படையான நேரக்கணக்கை எடுத்துக்கொண்டாலுமே நாளும், அதன் கணக்கும் பொதுவானதாகவே இருப்பினும், பூமி சுழல்வதைப் பொறுத்து இந்தியாவின் நேரமும், அரபு நாட்டின் நேரமும், ஐரோப்பாவின் நேரமும் முன்னும், தள்ளியும் இருப்பதைக் காணலாம். இதையொட்டி பல்வேறு பண்பாடு, தொழில், தொழில்நுட்ப வேறுபாடுகளைக் கொண்ட நாடுகளாக உலகின் தேசங்கள் உள்ளன. எனவே, பொதுவான சமகாலம் என்பதும், அதை உள்ளடக்கிய நாட்டின் சமகாலம் என்பதும் வேறுவேறாக இருக்கின்றன.
போக்குவரத்து, உலகமயமாக்கல், அபரிவிதமான தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை வளர்ந்துவிட்ட சூழலில் நாடுகளுக்கிடையிலான கோடுகள் அழிந்துவருகின்றன என்பது ஓரளவு உண்மையென்றாலும், அதன் கலாச்சார அடிப்படைகளின் சில அம்சங்களும், குணங்களும் வேறுபாடுபடாமல் இருப்பதாகவேபடுகிறது. போர்ப் பதற்றம், வலதுசாரி அரசுகளும் பெற்றுவரும் செல்வாக்கு, மத ரீதியிலான ஒடுக்குமுறைகள், நோய்த் தொற்றுகள், இவற்றிற்கு எதிர்நிலையில் சமூக ஊடகங்களின் பயன்பாடு, அதனடிப்படையிலான புது வாழ்வியல் என்பதாக உலகின் சமகாலம் நிலவுகிறது.
இந்தியாவின் சமகாலம் என்பது அடிப்படையில் மற்றெந்த நாடுகளைவிடவும் வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இலக்கியத்தில் இதன் சமகாலம் என்பது காவியப் பரவலாக்கத்தையொட்டியும், பேரரசு உருவாக்கத்தையொட்டியும் அதன் விளைவாகவும் ஒரு சமகாலத்தை முந்தி உருவாக்கி இருப்பினும், ஸ்தூலமான இந்திய இலக்கியச் சமகாலம் என்பது ஐரோப்பியர் வருகையையொட்டி, ஆங்கிலம் என்ற பொது மொழி, கல்வியை ஊடகமாகக் கொண்டு நவீன இலக்கியப் போக்காக நிலைபெற்றது.
தமிழ் ஒரு பொதுமொழியாக நாடுகள் கடந்து நிலவினாலும், இலங்கையில் போர் நிலவிய காலத்தின் சமகாலமும், அதேகாலகட்டத்தில் தமிழ்நாட்டின் சமகாலமும் ஒன்றல்ல. அந்தவகையில், தமிழ்நாட்டின் சமகால இலக்கியம் என்பது, என்னளவில் அதற்குப் பங்களித்த இலக்கியவாதிகளின் படிப்பு, ஜாதி உள்ளிட்டவற்றின் பின்னணிகளையொட்டி பார்ப்பன, வெள்ளாள, தலித், வட்டார மொழி, குடும்ப வாழ்வியல்களைப் பேசும் போக்குகளாகத் தொடங்கியும், வளர்ந்தும், கோட்பாடு, அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றின் பாதிப்பில், பரீட்சார்த்த முயற்சிகள், வெவ்வேறு அரசியல் விழிப்புணர்வினைக் கொண்ட வகைமைகளாகவும் நிலைபெற்றன.
இன்று தமிழின் சமகாலம் என்பது, எழுதுபவர்களுக்கு அதன் வகைமைகள் குறித்த ஓர்மை தரும் பாரத்தால் சில குறிப்பிட்ட தன்மைகளுக்குள் தேங்கிவிட்டதாகவேபடுகிறது. குழந்தமை, வாழ்வின் வினைவேக்கம், அதிலிருந்து மீட்டெடுக்கப்படும் கதைக்களங்கள், கவிதைத் தருணங்கள் என்று மாளாத சில கருப்பொருட்களுடன் கவிதையும், கதையும் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதாகவே படுகிறது. ரயில், விமானம், பலகர சாலைகள் எனப் பெரிய போக்குவரத்து மாற்றம் நேர்ந்துவிட்டபோதும், அரிதாக எழுதப்பட்டும் பிரதிகளைத் தாண்டித் தமிழ்க் கதைகள் வீடு, தெரு, மாவட்டத்தைத் தாண்டிப் பயணிப்பதில்லை. மேலும், சமீபத்தில் எழுதப்பட்ட கன்னட குயர் இலக்கியக்கியத்தைப் படித்த ஓர் இளம் தமிழிலக்கியவாதி தற்பாலுறவு பற்றிய கதைகள் தனக்கு வித்தியாசமாக இருப்பதாகச் சொல்லி, வித்தியாசம் என்ற அச்சொல்லை வேறு எதற்காகவோ மேற்கோள் குறிஇட்டுக் காட்டியிருந்தார். அதைப் படிக்க நமக்குத்தான் வித்தியாசமாக இருந்தது. காரணம், குயர் மக்களின் வாழ்வு இன்று மம்மூட்டி போன்ற உச்ச நட்சத்திரங்கள்கூட எடுத்துப் பண்ணும் கருவாக மாறி இருக்கிறது. மலையாளத்திலேயே இந்த நிலையென்றால், மேற்கு நாடுகளில் கேட்கவே வேண்டாம், இன்றைய சூழலில் இன்ஸ்டா உட்பட (எதிர்மறையாகவும்) கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டு வெகுஜனத்தின் ஓர்மைக்குள் வந்துவிட்ட ஒரு வாழ்க்கையாக குயர் மக்களின் உலகம் மாறிவரும் சூழலில் ஓர் இலக்கியவாதி, அதுவும் இளைஞர் இப்படிக் கூறுவதைப் படித்தபோது, எந்த “லோகத்தில்” இவர்கள் எல்லாம் வாழ்கிறார்கள் என்றுதான் கேட்கத் தோன்றியது. போல, மாற்றுத்திறனாளிகள் இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் ஒரு கரிசனமாக உருவாகவில்லை.
கூடவே, கழிவிரக்கம் இன்று அதிகம் செல்லுபடியாகும் கவித்துவமாக, சமகால உணர்வாகக் காட்டப்படுவது எந்தளவில் உண்மை என்பதை ஆராய்ந்துதான் பார்க்கவேண்டும். போலவே, அரசியல் விழிப்புணர்வு என்பது வாய்ப்பாட்டுத் தன்மையுடையாதச் சுருக்கிப் புரிந்துகொள்ளப்படுகிறது. சில இருமைகள், சில குறியீடுகள், சில தரப்புகள், தனிமைப்படுத்திக் கொள்ளுதல்கள் என்பதாக இன்றைய அரசியல் இல்லைவே இல்லை. நாம் இவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அன்றி, பணநீக்கம், பாரிய அரசியல் மாற்றம், கொரோனா போன்ற எதிர்பாராத நெருக்கடி, போர்ப் பதற்றம், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என எதற்கும் தலைகொடுக்காத தன்மையைத் தமிழில் எழுதப்படும் பிரதிகளில் காண முடிகிறது. இன்றும் திரைகளில் மகாபாரதம், இராமாயணம் பார்க்கும், படிக்கும், மறுபிரதியாக்கும் சமூகமாக நாமிருப்பது ஓர் அதிசயம்தான் இல்லையா?? உண்மையில் தமிழ் இலக்கியத்தில் சமகாலம் என்பது நினைவேக்கமாக அது நிலவிய தலைமுறைக்கு, அடுத்த தலைமுறை எழுதும் அவர்காலத்தின் இறந்தகாலமாக, அதன் வகைமைகள் நிறுவிய இலக்கியச் செல்லுபடிகளை முதுகில் சுமந்தலையும் விலங்காகவே இருக்கிறது.
– றாம் சந்தோஷ் வடார்க்காடு
சமகாலம்’ என்ற கருத்தாக்கத்தை ஒற்றைப்படையான, நேர்கோட்டு அர்த்தத்தில் விவாதிப்பதே ஒருவித அறிவுஜீவி சோம்பேறித்தனம் அன்றி வேறில்லை. காலண்டர் தேதியைக் கிழித்து எறிவது போல, இலக்கியத்தையும், கலை குறித்த பிரக்ஞையையும் ‘இதுதான் சமகாலத்தியது’, ‘அது நேற்றையது’ என்று பிரித்துப் பாகம் போடுவது, ஆளும் வர்க்கத்தின் நிர்வாக வசதிக்கான ஒரு மேட்டிமைவாதச் செயல்பாடாகும். இந்தச் சூழலில், உண்மையான சமகாலத்தவர் யார் என்ற கேள்வியை நாம் ஆழமாக எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இத்தாலியத் தத்துவவியலாளர் ஜோர்ஜியோ அகம்பென் குறிப்பிடுவதைப் போல, உண்மையான சமகாலத்தவர்கள் என்பவர்கள் தங்கள் காலத்தின் நிகழ்வுகளோடு முழுமையாகப் பொருந்திப் போகிறவர்கள் அல்ல. மாறாக, யார் ஒருவர் தன் காலத்தோடு ஒரு நெருக்கடியான, முரண்பட்ட உறவில் இருக்கிறார்களோ, அவர்களே உண்மையான சமகாலத்தவர்கள். அவர்கள் நிகழ்காலத்தின் மீது படிந்திருக்கும் அதிகாரத்தின் இருளையும், அதன் கட்டமைப்புகளுக்குள் புதைந்திருக்கும் குற்றங்களையும் ஊடுருவிப் பார்க்கவல்லவர்கள். ஒரு சமூகத்தின் அதிகார அமைப்புகள் உற்பத்தி செய்யும் நோய்க்குறிகளைக் கண்டறிந்து, அதன் கூட்டுப் பிரக்ஞையைத் தத்துவார்த்த ரீதியாக மறுசீரமைப்புச் செய்ய முயல்பவர்கள் அவர்களே.
இந்த வரையறையிலிருந்து கிளைக்கும் முக்கியக் கேள்வி: ‘யாருடைய சமகாலம்?’. ஏனெனில், எல்லோருக்கும் பொதுவான, ஒற்றைத் தன்மையிலான ‘சமகாலம்’ என்பது ஒருபோதும் சாத்தியமில்லை. சமகாலம் என்பது அதிகார உறவுகளால் தீர்மானிக்கப்படும் அனுபவங்களின் பன்மையேயாகும்.
உதாரணமாக, லத்தீன் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் ‘சமகாலம்’ என்பது காலனியத்தின் தீராத காயமாகவும், மேலாதிக்க அதிகாரத்திற்கு எதிரான தொடர்ச்சியான போர்க்குரலாகவும் வெளிப்படுகிறது. மத்திய கிழக்கில் இதே சமகாலம், முடிவற்ற அரசியல் வன்முறைகள் நிகழ்த்திய உளவியல் சிதைவாகவும், சீனாவில் அரசால் கட்டுப்படுத்தப்படும் மூலதனத்திற்கும் தனிமனிதச் சுதந்திர வேட்கைக்கும் இடையிலான ஒரு மௌனப் போராட்டமாகவும் உருப்பெற்றுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, சமகாலம் என்பது ஒரு சித்தாந்தப் போர்க்களமாகவே இருக்கிறது. அது, மதச்சார்பின்மைக் கருத்தியலுக்கும் இந்துத்துவ தேசிய மேலாதிக்கத்திற்கும் இடையிலான அதிகார மோதலாகவும், சாதியச் சமூகக் கட்டமைப்பின் வன்முறைக்கு எதிரான தலித் மக்களின் விடுதலை எழுச்சியாகவும், தீவிரப் பொருளாதார வளர்ச்சிக்கும் அதலபாதாளத்தில் கிடக்கும் சமூகச் சமத்துவமின்மைக்கும் இடையிலான பெரும் முரண்பாடாகவும் பல தளங்களில் இயங்குகிறது. புலம்பெயர்ந்து வாழும் மக்கள் கூட்டத்திற்கு, ‘சமகாலம்’ என்பது தாயகத்தின் நினைவுகளுக்கும் புகலிடத்தின் நிகழ்காலத்திற்கும் இடையில் சிதறுண்டு போன ஒரு கலப்பினம் இருப்பாகவே இருக்கிறது. பெண்களைப் பொருத்தவரை, சமகாலம் என்பது வரலாறு முழுவதும் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்புகளுக்கு எதிரான அன்றாடப் போராட்டமாகவும், தங்களுக்கான வரலாற்றைச் சுயமாக எழுதும் தொடர் முயற்சியாகவும் உள்ளது.
இத்தகைய உலகளாவியப் பன்மைத்துவங்கள் நிலவும்போது, தமிழின் விரிந்த சமூகப் பரப்பிற்குள் மட்டும் ஒரு ஒற்றைச் சமகாலம் என்பது எப்படிச் சாத்தியமாகும்? நிச்சயமாக முடியாது. தலித் ஒருவரின் சமகாலம் என்பது சாதிய ஒடுக்குமுறையின் கொடூரங்களுக்கு எதிரான தீராத போராட்டமாக இருக்கையில், ஈழத் தமிழரின் சமகாலம் என்பது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் நினைவுகளுடனும், இன்னும் எட்டப்படாத அரசியல் தீர்வுக்கான ஏக்கத்துடனும் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த இரண்டு அனுபவங்களும், தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கம் தனது நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் அனுபவிக்கும் ‘சமகாலத்திலிருந்து’ முற்றிலும் வேறானவை.
எனவே, ஒற்றையான ‘சமகாலம்’ என்ற கருத்தே அடிப்படையில் ஒரு பிற்போக்குத்தனமானது. பன்மைத்துவமான, ஒன்றுக்கொன்று முரண்பட்ட சமகாலங்கள் மட்டுமே சாத்தியம். சமூக, அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் இந்தச் சமகாலங்கள் மேலும் நுண்மையான பன்மைத்துவங்களாக மாறக்கூடியவை. இந்த யதார்த்தத்தை மறுத்து, எல்லோருக்கும் பொதுவான ஒரு ‘சமகாலத்தை’ முன்வைப்பது என்பது அறிவுபூர்வமான அயோக்கியத்தனமாகும்.
குறிப்பாக, இலக்கியத்தை மையப்படுத்தி ஒற்றைச் ‘சமகாலத்தை’ நிறுவும் முயற்சி மிகவும் அபாயகரமானது. ஏனெனில், இலக்கியம் என்பது இந்தப் பன்மைத்துவமான, முரண்பட்ட சமகாலங்கள் ஒன்றோடொன்று மோதியும், உரையாடியும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு களமாகும். அங்கே ஒற்றைத் தன்மையை முன்வைப்பது என்பது, பலதரப்பட்ட விளிம்புநிலைக் குரல்களை நெரிக்கும் ஒரு பாசிசச் செயல்பாடு அன்றி வேறில்லை.
இந்தச் சிதறுண்ட பன்மைத்துவத்தை, இன்றைய டிஜிட்டல் யுகத்தின் ‘காலவெளிக் குவிமையம்’ இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற நேர்கோட்டுப் பார்வையை அதிகார மையங்கள் கட்டமைக்க முயன்றாலும், அந்தப் பார்வை ஏற்கெனவே செத்துவிட்ட ஒரு மனப்பிறழ்வுச் சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆக, நமக்கான தீர்வு என்பது இந்தப் பன்மையான, சிதறுண்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளத் தகுந்த ஒரு புதிய கலை, இலக்கிய மொழியைக் கண்டடைவதில்தான் உள்ளது. அந்த மொழி, காலண்டர் கணக்கீடுகளை நிராகரித்து, ‘அனுபவத்தின் தீவிரத்தை’ மட்டுமே தனது அளவுகோலாகக் கொண்டு, தொடர்ச்சியான மாற்றங்களின் இயக்கத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். இலக்கியப் பிரதிகளில் காலம் என்பது ஒரு நேர்கோடல்ல. அது எண்ணற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு சிக்கலான சிலந்தி வலை. தேர்வு நம்முன் தெளிவாக உள்ளது: ஒன்று, போலியாகக் கட்டமைக்கப்பட்ட, ஒற்றைப்படையான ‘சமகாலம்’ என்ற சாக்கடையில் தொடர்ந்தும் நீந்திக்கொண்டிருப்பது. மற்றொன்று, உலகின் மகத்தான கலைப் பிரக்ஞையுடன் இணைந்து இந்த நொறுங்கிய, பன்மைத்துவமான காலத்தில் நின்று சுவாசிப்பது. இரண்டாவதே உண்மையானதும், அரசியல்ரீதியாக சரியானதுமாகும்.
– றியாஸ் குரானா
மனிதன் காலத்துக்கு அடிமை. மனிதனற்ற காலம் ஓர் அநாதை. எப்படியும் காலம் மனிதனோடு தொடர்புடையது. சமகாலம் என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும், அவனது உடலுக்கு வெளியேயுள்ள மற்றொரு உடலைப் போல அவனுடன் பிறந்து அவனுடன் இறக்கிற ஒன்று. தனிமனிதனைக் கொண்டுதான் நாம் சமகாலத்தை வரையறுக்க முடியும்.
எல்லாவிதிகளுக்கும் சட்டதிட்டங்கள் உண்டு என்பதைப் போல, அவற்றுக்குப் பொருந்திப் போகாத விதிவிலக்குகளும் உண்டு அல்லவா! எல்லா மனிதர்களும் இறந்தவுடன் சுவடுகள் அற்று இல்லாமல் போவது என்னும் விதிக்கு விதிவிலக்குகள் உண்டு. கலை-இலக்கியவாதிகள், வரலாற்று நாயகர்கள் அத்தகைய விதிவிலக்குகள் ஆவர். இவர்கள் இறந்த பின்பும் வாழ்பவர்கள். நடைப்பயிற்சிக்கு உடனழைத்துச் செல்லப்படும் செல்லநாயைப்போல காலம் அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடைபயிலும். ஆகவே சமகாலம் என்பதை வரையறுத்தல் கடினமானது.
இந்தப் புரிதலுடன் மதிவண்ணன் என்ற தனிமனிதனின் சமகாலத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம். எனக்குச் சற்று முந்திய சமகாலத்தில் அல்லது எனது சமகாலம் தனது குழந்தைமைப் பருவத்தில் இருந்த நாட்களில், தீபாவளியைத் தொடர்ந்த நாளில் காற்றில் படிந்திருக்கும் கந்தக வாசனைபோல, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் பரவியிருந்தது. அந்நாட்களில் டால்ஸ்டாய், கார்க்கி, தஸ்தாயெஸ்கி, சிங்கீஸ் ஐத்மாத்தாவ் இவர்கள் உருவாக்கிவிட்ட மனிதர்கள் பனிக்குல்லாயுடனும், நீண்ட கோட்டுகளுடனும் வெயில் சுட்டெரிக்கும் தமிழக வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.
நான் இளைஞனாகிய காலத்தில் சோவியத் ரஷ்யா உடைந்து சிதறிப்போயிருந்தது. மேற்கூறிய இலக்கியவாதிகளின் உலகிலிருந்து சோகம் ததும்பிய பாடல்கள் என்னைச் சூழ்ந்திருந்தன. அப்பாடல்கள் பிரபுக்கள், கனவான்களின் பசப்புகளை விடுத்து எளிய மனிதர்களின் தீரங்களையும், வாழ்வு குறித்த மதிப்பீடுகளையும் என்னில் விதைத்து விட்டுப் போயின.
அந்த எளிய மனிதர்களின் முகங்கள் எங்கள் சேரிகளில் இருந்தவர்களின் சாயலைக் கொண்டிருந்தன என்பதை அதைத் தொடர்ந்த நாட்களில் நான் கண்டுகொண்டேன். மேலே சொன்ன சேரிமனிதர்களின் கண்ணீரிலும், ஏக்கப்பெரு மூச்சுகளிலும் அந்த சமகாலம் வேர்கொண்டிருந்தது. திருவுருக்களின், பீடங்களின் தெய்வீக சன்னிதியில் கொடிமரங்களின் அருகிலேயே பலிபீடங்களும் இருந்தன. அங்குதான் நாங்கள் வெட்டப்பட்டோம். எங்களின் ரத்தமும், தசையும் அங்குதான் பங்கீடு செய்யப்பட்டன. இவற்றை வெடிப்புறப் பேசுவனவாய் எனது சமகாலம் இருந்தது.
உண்மையைக் கொல்வதற்காகக் கொழுத்த மனிதர்கள் வார்த்தெடுத்த கொலைவாளாக மௌனமே இருந்துவந்திருக்கிறது. அக்கொலைவாள் கைமாறி கைமாறி எங்கள் அருகே வந்து நிற்கிறது. மௌனத்துக்கு நிறமோ, உருவோ, வாசனையோ கிடையாது. அக்கொலைவாளில் ரத்தக்கறை இருக்காது. மௌனத்தால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் தவிப்பிலும், துடிப்பிலும் அதன் பெயர் கல்வெட்டு போல பதிந்திருக்கும். மௌனம் என்பது வன்மத்தின் மொழி. துரோகத்தின் திசையில் முதல் தப்படி.
கெடுவாய்ப்பாக இப்போதைய சமகாலம் முழுதிலும் சப்பாத்திக் கள்ளிகள் போல மௌனம் வளர்ந்து பரவிக்கிடக்கின்றன. அக்கள்ளிகளுக்கு நடுவே இருக்கும் இடைவெளி மணல்வெளிகளில்கூட அதன் வேர்கள்தான் பரவிக்கிடக்கின்றன. சமவெளியை வந்தடைய மானுடம் வேண்டிய வலுவினைப் பெறட்டும்.
– ம.மதிவண்ணன்

Leave a Reply