அத்தகைய பெண்களின் ஈன ஒலிகளுக்கு இடையே
இவ்வுலகில் ஒரு குழந்தையாய்ப் பிறந்து விடுவதுதான் எவ்வளவு எளிது.
அந்த மழைக்காலங்களில்தான்
கர்ப்பப்பைகளில் அதீத ரத்தப்போக்கு இருப்பது தெரியவந்தது.
பாருங்கள் கூடவே மிகச் சிறந்த காதல் பாடல்களும்
கடவுள் பாதம் அனைத்து உயிர்களுக்கான சரணாகதிகளின் பொருட்டு
மகிமை மிக்கப் பக்திப் பாடல்களும் இயற்றப்பட்டிருந்தன.
மேலும் ஈனுதல் நிமித்தம் உன்னதமான சமாதானங்கள் உண்டாகி
அதுவே குடியிருப்புகளில் பிரசங்கம் ஆகி
மேலும் அமைதியின் பொருட்டு வாழ்வின் நிரூபணங்களாகி இருந்ததைப்
பணிவுடன் அனைவரும் ஏற்று வந்ததன் படி
மேலும் எல்லோரும் கடவுளின் பொருட்டு தங்களது கடமையில் இருந்தார்கள்.
கேளுங்கள்! அற்புதம்! அத்தனையும் இசைப் பாடல்களின் உன்னத சங்கீதங்கள்!
அல்லது ஒரு பெண்ணைப் படுக்கை அறையில் விருத்தி செய்யும் பொருட்டுத்
தேவைப்பட்ட ஏராளமான குடிமையியல் வரி விதிப்புகள்.
பெண்களை அன்புமிக்க வேசைகளாகவும்
மறுபுறம் புனித தெய்வங்களின் ஆசீர்வாதம் மிக்க தேவதைகளாகவும் வர்ணிப்பதற்கும் ஆக
அவரவர் மொழியில் எழுதுவதற்கும்
கற்றும் நடத்தை கொள்வதற்கும் ஆக இருந்ததுதான் அழகியல் உச்சம்.
மட்டுமல்லாமல் அதுவே எல்லா மொழியிலும் பேரிலக்கியம் என்பதாகத் தொடர்ந்து
இன்றளவும் வாசிக்கக் கிடைக்கிறது… கடவுளுக்குத் தோத்திரம்.
போகட்டும்அத்தனை நூற்றாண்டுகளின் மீது
இரு பாலரும் இன்றளவில் முத்தமிட வேண்டியதுதான் மிச்சம் எனில்
பல நூறு தேநீர்க் கோப்பைகளை உடைக்க வேண்டும்.
மேலும் ஓராயிரம் நிலங்கள் பயிராக வேண்டும்
பெருங்கடல்கள் ஓயாது மீன்களைப் பெருக்க வேண்டும்
அழகிய மலர்களையும் அதற்கான பாடல்களையும் புலவர்கள் இயற்ற வேண்டும்
கொல்லர்கள் இரும்பைக் காய்ச்சி வடிக்க வேண்டும்
உலகையே மூடும் அளவிற்குப் பருத்திகள் ஆடைகளாக நெய்யப்பட வேண்டும்
மற்றும் மழையின் இசையைப் பாடவும் அருவிகளின் குரல் இசைய வேண்டும்.
பல ஆறுகள் தாறுமாறாக ஓடிக் கடலில் சேர வேண்டும்.
வீடுகளில் நிலவொளியும் சூரியனும் பிரகாசிக்க வேண்டும்.
இப்படித்தான் ஆதியில் ஆறுகள் விளைநிலங்களை நோக்கிப் பாயவில்லை என்பதால்
மனிதர்கள் அதை வழிநடத்தினார்கள்
ஆதியில் கால்நடைகள் குடியிருப்புகளுக்கு வரவில்லை என்பதால்
மனிதர்கள் அதைப் பழக்கி வழிநடத்தினார்கள்
ஆதியில் தேவர்கள் பூமிக்கு இறங்கவில்லை என்பதால்
மனிதர்கள் நீதியின் பொருட்டுக் கடவுளைத் தங்களுக்கு ஏற்ப வழி நடத்தினார்கள்.
அதற்காகப் பல யுத்தங்களை நடத்தினார்கள்.
(ஒரு போர் வீரனுக்கும் அவன் வருகைக்காகக் காத்திருக்கும் இளம்பெண்ணுக்கும்
இடையே நிகழும் காமம் இன்றி இப்பூமிக்கு அழகியல் ஏது)
ஓவியர்களைப் பாருங்கள் அவர்கள் இன்னும் நிர்வாணத்தை முடிவற்று வரைகிறார்கள்.
மண்பானைகளை வனைபவர்களைப் பாருங்கள்
உள்ளீடு கொண்ட வெற்றிடத்தின் அற்புதத்தை உருவாக்குகிறார்கள்.
ஒரு காலத்தில் அதில்தான் உலகம்
தன்னை ஒரு வரலாற்றைப் போல சேமித்துக் கொண்டது.
இன்னும் தங்களது மொழியில் கவிஞர்கள் யாராவது
பெண்களைக் கற்பனை செய்து கொண்டு இருந்தால்
பக்தர்கள் தெய்வத்தின் மீது சன்னதம் கொண்டிருந்தால்
கனவுகளில் இன்னும் பானைகளில் தங்கக் காசுகள்
உலகெங்கும் புதைக்கப்பட்டிருப்பதாக நம்புவர்களுக்கும்
இப்பூமிப்பந்தின் மீதான எல்லையற்ற தேசங்களுக்குள்
பயணிக்க விரும்புபவர்களுக்கும்
இன்னும் வயல்களில் குட்டைகளில் வாத்துகள் மேய்ப்பவர்களுக்கும்
இன்னும் தெருவில் குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பவர்களுக்கும்
இன்னும் ஏதேனும் நடக்கும் என்று ஓயாமல் பேசுபவர்களுக்கும்
இத்தகைய முன்னேற்பாடுகளை
ஏற்கெனவே இப்பூமியில் உண்டாக்கியவர்களுக்கும்
அத்தகைய ஈன ஒலிகளுக்கு இடையே
பெண்களின் இடுப்பு எலும்புகள் விரியும் போது
ஒரு குழந்தையாய்ப் பிறந்துவிடுவதுதான் எவ்வளவு எளிதாகி விடுகிறது.
நினைக்கையில் எனக்கும் வெட்கமாய்த்தான் இருக்கிறது!

பின் காலனியக் கவிஞர் என்றழைக்கப்படும் யவனிகா ஸ்ரீராம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர். இரவு என்பது உறங்க அல்ல, தலைமறைவுக் காலம், கிடக்கட்டும் கழுதை உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதி உள்ளார்.
Leave a Reply