கடிதம் 1
எனதாருயிர்க் கண்ணாளுக்கு,
இப்பொழுதுதான் இரவு திடீர் என்று முழித்துக் கொண்டேன். பயங்கரமான கனவு. நேரம் என்னவென்று தெரியவில்லை. மனம் நிம்மதியில்லை. எப்பொழுதும் உன்னைப் பற்றிய கவலையே.
உனக்குக் கடுதாசி எழுதினால் கொஞ்சம் மனம் நிம்மதியாகும் என்று எழுதுகிறேன். நீ எதற்கும் கவலைப்படாதே. நான் 15-ந் தேதி அங்கு வந்துவிடுவேன். அங்கு வந்தால் கொஞ்சமாவது மனம் நிம்மதி அடையும்.
இல்லாவிட்டால் பொல்லாத கனவுகள். வீணான பயங்கள். நான் என்ன செய்யட்டுமடி கண்ணா. உன்னை ராஜாத்தி மாதிரி வைத்திருக்க ஆசை. விதி என் கால்களைத் தட்டிவிடுகிறது. அதன் எதிர்ப்புக்கு நான் அஞ்சவில்லை. நீ இங்கு வந்து பக்கத்தில் படுத்திருந்தால் போதும். நீதான் என் தெய்வம். என் உன்னைத் தழுவுவது போல் நினைத்துப் படுத்திருக்கிறேன். இனியாவது கனவிருக்காது என்ற நம்பிக்கை.
உனக்கு ஆயிரம் முத்தம்,
சொ.வி…
கடிதம் 2
எனதாருயிர்க் கண்ணாளுக்கு,
நேற்று உன் கடுதாசி கிடைத்தது. அது கிடைக்கும் முன் உனக்குப் பணம் அனுப்பி விட முடியும் என்று எதிர்பார்த்தேன். அடுத்த வெள்ளிக் கிழமைவரை நீ அங்கு காத்திருக்க வேண்டியதுதான். அதற்கு முன் திங்கட்கிழமையன்று தந்தி மணியார்டரில் பணம் அனுப்புகிறேன்.
உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். இங்கு அந்த நம்பி குறிச்சி சித்தியும் கந்தனும் வந்திருக்கிறார்கள். பாப்பா கருவுற்றிருக்கிறாள். அழைத்துக் கொண்டு போக வந்திருப்பதாகத் தெரிகிறது. இன்று அவர்களை எல்லாம் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்.இங்கு மற்றொரு விசேஷம். நாம் டி.எஸ்.ஸி. வீட்டில் வைத்திருந்த சாமான் பெட்டி கரையான் அரித்துவிட்டது. இன்று வேறு பெட்டி வாங்கிக் கொண்டு போய் அதில் சாமான்களைப் போட்டு வைக்கப் போகிறேன்.
இன்று என் “உலகத்துச் சிறுகதைகள்” வெளிவந்துவிட்டது. மணிக்கொடி பிரதியுடன் ஒரு காப்பி அங்கு வந்து சேரும்படி வசதி செய்திருக்கிறேன். வேறு எத்தனை காப்பிகள் அங்கு வேண்டியிருக்கும் என்று எழுதினால் சௌகரியம். அத்துடன் ஹிந்தி கதை புஸ்தகமும் அனுப்பி வைத்திருக்கிறேன். எதற்கும் மனசைக் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்காதே. எல்லாம் அடுத்த வாரத்துடன் சரியாகிவிடும் என்று நிச்சயம் நம்புகிறேன். பயப்பட வேண்டாம். இங்கு கி.ரா. கே.என்.எஸ்.(அவர் என் கூடத்தான் இருக்கிறார்.) யாவரும் செளக்கியம். வருகிற 15-ந் தேதி கி.ரா. ஊருக்குப் போகிறார்.
சூறாவளி என்று அவர்கள் ஒரு பத்திரிகை ஆரம்பித்து வேலை நடத்தி வருகிறார்கள். வேலை ரொம்பத் தட புடலாக நடக்கிறது. ஆபீஸில் டெலிபோன் கூட வைத்திருக்கிறார்கள். முதல் முறையாக இப்பொழுதுதான் கூப்பிட்டார். ‘சௌக்கியம், வெற்றிலை வேண்டுமா?’ என்று கேலிப் பேச்சு பேசிக் கொண்டிருந்தேன்.
இங்கு யாவரும் சௌக்கியம். என்னையும் (மனசு) என் உடம்பையும் தவிர. வைத்தியரிடம் போவதாக இல்லை. எல்லாம் நீ இங்கு வந்த பின் பார்த்துக் கொள்ளுவோம்.
இப்படிக்கு,
உனதே உனது,
சொ.வி
கடிதம் 3
எனது ஆருயிர்க் கண்ணாளுக்கு,
இந்தக் கடுதாசி வந்து சேருமுன் உனக்கு ரூ.10/- தந்தியில் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். சம்பளம் வந்ததும் அதாவது இரண்டொரு நாட்களுக்குள் இன்னும் கொஞ்ச ரூ. அனுப்புகிறேன். இந்த மாதத்துடன் நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். பயப்படாதே. மலைக்காதே. கண்ணா, குஞ்சுவுக்கு எப்படி இருக்கிறது. பணம் கிடைத்ததும் முதலில் அவளுக்கு மீன் எண்ணெய் வாங்கு. ராஜாத்தி, குஞ்சுவின் கவலையில் உன் உடம்பைக் கவனிக்காமல் போட்டுவிடாதே. குஞ்சு என் உயிர். நீ என் உடம்பு. கடிதம் கிடைத்ததிலிருந்து அங்கு வந்து ஒரு தடவை பார்த்துவிட்டுப் போக வேண்டும் என மனசு துடித்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்வேன் கண்ணா. கொஞ்சம் பொறு.
போன கடுதாசியில் உனக்கு ஏதோ சாமான் பிரமாதமாக வாங்கி விட்டதால் பணம் போய் விட்டது வீணாக என்று கவலைப்படுகிறாய். அதனால் ஒன்றும் கஷ்டம் ஏற்பட்டுவிடவில்லை. வரவேண்டிய இடங்களில் கொஞ்சம் சிக்கல். அதுதான்.
நம்முடய குடும்ப வாழ்வில் உனக்குப் பிரியமான வஸ்து என்று ஒரு சாமான் வாங்கிக் கொடுக்க முடிந்திருக்கிறதா? உன் ஆசை எல்லாம் ஏமாற்றமாக நான் எவ்வளவு தூரம் அசட்டையாகவும் அஜாக்கிரதையாகவும் இருந்திருக்கிறேன். என்னுடய ஆசைஎல்லாம் உன்னுடய ஆசைகளைத் திருப்தி செய்து வைப்பதே, இருக்கும். கண்ணா, நீயே யோசித்துப் பார். உனக்கு ஒரு நல்ல அதற்கும் நீ குறுக்கே நிற்காதே. எனக்கு ரொம்ப வருத்தமாக தாமான் வாங்கிக் கொடுத்து, நீ சந்தோஷமாகப் போட்டுக் கொள்வதைப் பார்த்து ஆனந்தப்பட இதுவரை கொடுத்து வையாத பாவி நான். ஆனால் இந்த நிலை இனியும் நீடிக்கும் என நான் நம்பவில்லை. சிரமம் அகலும் காலம் வந்துவிட்டது. நம் வாழ்வின் கஷ்டங்களை மாற்ற வந்திருப்பவள் குஞ்சு. அவள் இப்பொழுது கஷ்டப்படுவதைக் கண்டு மனசு ஒடிந்துவிடாதே. குழந்தைப் பருவத்தில் நானும் அப்படித்தான் இருந்தேனாம். என் ரத்தம் என்னைப் போலவேதான் இருக்கும். அதற்காகப் பயப்படவோ அல்லது நீ ஏதோ பாபம் செய்துவிட்டதாகவும், அதற்குத் தண்டனை என்றும் வீண் கோட்டைகள் கட்டிக் கொண்டு, மனசை அதனுள் சிறை வைத்து வாட்டிக் கொண்டு கஷ்டப்படாதே. உன் மனசில் ஏதோ தப்பிதம் செய்துவிட்டோம். என்று பதிந்திருக்கும் எண்ணம் அடியோடு மாறவேண்டும். இப்பொழுதுதான் நீ இப்படி நினைக்கிறாய் என்பதல்ல. வாழ்வில் தோன்றக் கூடிய சிறு முட் புதர்களுக்கும், கால் ஈறுக்கும் வழுக்கல் பாறைகளுக்கும் இந்த வியாக்கியானம் செய்து கொண்டிருந்தால், உன்னிடமுள்ள அபூர்வ குண காலமாகக் கோபம் வருவதெல்லாம் இதன் காரணத்தால்தான். அழகுகள் மாறிவிடும். சடக்குச் சடக்கென்று உனக்குச் சமீப இப்படி நீ நினைக்கவே கூடாது. நீ என்னைப் பொறுத்தவரை களங்கமற்றவள்தான். அதனால்தான் நான் உன் மேல் இப்படி வெறி பிடித்த மாதிரி உன் உயிருடன் ஒட்டிக் கிடக்கிறேன்… கண்ணா! இங்கு உன் நினைவுதான், என் உடலுக்கும் உயிருக்கும். உணவாகத் தேகத்திலும், மனதிலும் தெம்பு கொடுத்துக் கொண்டு வருகிறது. நீ இங்கு வந்துவிட்டால் என் மனசு எல்லாம் சமாதானமாகிவிடும்.
நிற்க. குஞ்சுவுக்கு உடம்புக்கு என்ன கோளாறு என்று வைத்தியன் சொல்லுகின்றான்? அதைக் கொஞ்சம் விபரமாக எழுது தாய்ப்பால் இல்லாததால் ஏற்பட்ட கோளாறா? அதனால் அவ்வளவு பயப்படுவதற்கு ஒன்றுமில்லையே. அவளுடய தேகஸ்திதியைப் பற்றி விபரமாக எனக்கு எழுது.
‘கண்ணா! அவளுக்கு என்னை நினைத்துக் கொண்டு ஒரு முத்தம் கொட்டி அவளை என் மடி மீது கிடத்திக் கொண்டு விளையாட வேண்டும் என்றிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் அவள் பூரண குணமடைந்துவிடுவாள். நான் சொல்லுகிறேன். இது
நிச்சயம்.
இப்படிக்கு,
சொ.வி…
கடிதம் 4
எனது ஆருயிர்க் கண்ணாளுக்கு,
முன்பாவது உடனே பதில் வரும். இப்பொழுது அதுவும் இல்லையா என்று அவசரப்படாதே. கடிதம் எழுதிய சமயத்தில் கையில் பணம் இல்லை, வந்தவுடன் வைத்து அனுப்பியிருந்தால், இதற்கு முந்தியதில் சொல்லியபடி ரூ.20/= கிடைத்திருக்கும். ரிஜிஸ்தர் செய்யலாமே என்று நினைத்ததன் விளைவாக உனக்கு ரூ.5/- குறைகிறது. அந்த ஐந்து உபயோகமாகவே செலவழிந்திருக்கிறது. அதாவது பாக்கி செலுத்தப்பட்டது. இப்பொழுது உனக்கு எவ்வளவு அனுப்புகிறேனோ, அந்தத் தொகைதான் மிச்சம். என் கைவசமும். அதாவது ரூ.பதினைந்து வைத்து மாதத்தை ஓட்ட வேண்டும். இரண்டு பேருக்கும் சமபங்காக இருப்பதால் அந்த ஐந்து ரூ. குறைவுக்கு ஏமாற்றமடையாதே. முடிந்தால் மறுதபாலில் அனுப்ப முயற்சிக்கிறேன். அதாவது வேறு எங்காகிலும் புரட்டி. ஞாயிற்றுக்கிழமை காலை இது உனக்கு எப்படியும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால், இதைச் சாதாரணத் தபாலில் துணிந்து அனுப்புகிறேன். உனக்கு அதிர்ஷ்டமும், எனக்குத் துணிவைப் போலக் கைராசியும் வாஸ்தவத்தில் உன்மேல் ஆசையும் இருந்தால் இது உனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். இக்கடிதம் வேறு ஒருவர் கைவசம் சிக்கினாலும் ஆபத்தில்லாதபடி இருப்பதும், அமைந்திருப்பதும் ஒரு அதிர்ஷ்டந்தானே! மறுபடி கடிதம் எழுதும்வரை என் ஆசையும் அன்பும்!
குறிப்பு: ஞாயிற்றுக் கிழமை கிடைத்துத் தீர வேண்டும் என்று நான் ஆசைப்படுவதற்குக் காரணம் என்னவென்றால்,- அது என் பிறந்த நாள் என்று கண்டுபிடித்திருக்கிறேன். அந்த அசட்டுத்தனத்திற்காக!
அப்புறம் வழக்கம் போல் கடுதாசி முத்தம்.
இப்படிக்கு,
உனதே உனது
சொ.வி…
கடிதம் 5
எனதாருயிர்க் கண்ணாளுக்கு,
நீ இப்பொழுது அம்பாசமுத்திரம் வந்து என்னுடைய இரண்டு கடிதங்களையும் பார்த்திருப்பாய் என நினைக்கிறேன். அது எழுதிய பிற்பாடு கி.ரா வந்தார். ஜெமினி பழையபடி வேலை தொடங்கிவிட்டதால் அவருக்கு அதில் வேலை இருக்கிறதாம். பெரிய சம்பளக்காரர்களை எல்லாம் போகச் சொல்லியாச்சாம். ஆனால், ஒரு செட் மட்டும் இருந்து கொண்டு படம் பிடித்துக் கொண்டிருக்குமாம். கி.ரா.வுக்கு அங்கே வேலை ஸ்திரம். தவிர ராமையா அங்கிருந்து வெளியேறுவார் போலத் தெரிகிறது. என் கதைகள் இரண்டையும் பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை. நிற்க, இன்று ஆபீஸில் இருந்து உன் விலாசத்திற்குத் தினமணி அனுப்பச் சொல்லி இருக்கிறேன். கிடைத்த விபரத்திற்கு மறுதபால் எழுது. உனக்கு வேண்டிய ஜம்பருக்கு அளவு சொல்லு. ஒன்றுக்கு முக்கால் கஜம்தானே? பாடிக்கு மல்லும் வாங்கி புடவை அது எல்லாம் பார்ஸல் செய்கிறேன். அத்துடன் இங்கே கிடைத்துள்ள பவுண்ட்டன் பேனாவையும் அனுப்பித் தருகிறேன். வேறு என்ன வேண்டும் என்ற விபரத்தைத் தெளிவாக எழுது. நான் நடுராத்திரியில் கெட்ட சொப்பனம் கண்டு முழித்துக் கொண்டு தூக்கம் வராமல் இந்தக் கடிதம் எழுதுகிறேன். எனக்குச் சில தினங்களாக இப்படி நிம்மதி இல்லாத சொப்பனங்கள் வந்து கொண்டிருப்பதின் காரணம் அங்கே உன் மனக் கஷ்டம்தான் என்று நினைக்கிறேன். இது கடிதம் நடுராத்திரியில் எழுதுவதினால் சுருக்கமாகத்தானிருக்கும். தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்துக் கொள்ளப் போகிறேன்.
இப்படிக்கு,
உனதே உனது
சொ.வி…
நம்பர் 5, கிருஷ்ணா கார்டன் தெரு,
வாஸுதேவபுரம், ஐஸ்ஹவுஸ் ரோட்,
திருவல்லிக்கேணி,
9.5.41.
கடிதம் 6
19.3.47
அருமைக் கண்ணாளுக்கு,
உனக்கு இரண்டாவது கடிதம் எழுதாமலும், அங்கு வராமல் இருப்பதும் கண்டு மனம் கலங்கி இருப்பாய். இங்கே நிலை சீர்ப்படவில்லை. எதிர்பார்த்து நாட்கள் வீணாகிறது. இருந்தாலும் சீக்கிரம் இந்த இருட்டு அகன்றுவிடும் என்று நினைக்கிறேன். நிற்க, லோகு என்னைச் சந்தித்தார். அவர் மூலம் சொல்லிவிட்டது எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன். நீ சொல்லிவிட்டிருக்கிறபடி நான் ரேடியோப் பேச்சை முடித்துக் கொண்டு உடனே மறுநாள் வந்து சேருகிறேன். அங்கிருந்து உடனே புறப்பட்டு வந்துவிடலாம். இன்றைக்கு லோகநாதன் தன் சம்பந்தமான சகல விபரங்களையும், கடிதம் ஒன்றையும் அனுப்புவார். பார்த்து அங்கு சேர்ப்பித்துவிடு. பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவார்கள் என்பதையும் கேட்டு வை. அங்கே அவர்களுக்கு உறவினர்கள் உண்டா? எப்படிப்பட்ட குடும்பம் என்பதையும் விசாரித்து வை.
தினகரிக்கு உடம்பு எப்படி இருக்கிறது? பிள்ளை வைத்தியரைப் பார்த்து அவளுக்கு வேண்டியவைகளைச் சேகரித்து வை. நான் நிச்சயமாக அங்கே இந்த மாதம் 27-ந் தேதி புறப்பட்டு வருகிறேன்.
இப்படிக்கு,
உனதே உனது
சொ.வி…
கடிதம் 7
19.4.47
அருமைக் கண்ணாளுக்கு,
இன்று தந்தி மணியாடர் அனுப்பியது வந்து சேர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நான் எழுதிய இரண்டு கடிதங்கள், ஒரு கார்டு, ஒரு ஏர்மெயில் தபால் இரண்டும் வந்து சேரவில்லை என்பதை நேற்று லோகநாதன் மூலம் அறிந்தேன். போன மாசம் 20ந் தேதியும், பிறகு 29 அல்லது 28-லும் நான் கடிதம் எழுதினேன். இரண்டாவது கடிதத்தில் ஒரு பத்து ரூபா நோட்டு வைத்திருந்தேன். நிலைமை சரிப்படாததால்தான் உனக்கு இன்னும் பணம் அனுப்ப முடியாமல் இருக்கிறது. குழந்தைக்கு உடம்பு எப்படி இருக்கிறது? என்னுடய தரித்திரம் உங்களையும் வாட்டுகிறது. சீக்கிரம் பதில் எழுது. ஜெயராமன் எழுதிய இரண்டு கடிதங்களும் இங்கிருந்து மதுரை வந்த பிறகு அங்கிருந்து இங்கு கிடைத்திருக்கிறது. மதுரை வேலை முடிந்ததும் பணம் வரும். சீக்கிரம் முடித்துவிடுவேன். மனசில் உனக்கு எப்படிக் கொதிக்கும் என்பதை நான் அறிவேன். என் மனசைப் பற்றி அறிய ஆட்கள் கிடையாது. நீ சொல்லும் கல் நெஞ்சுதான் எனக்குப் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது. இந்தக் கடிதத்துக்கு உன்னிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு,
உனதே உனது
சொ.வி…
கடிதம் 8
23.4.47
அருமைக் கண்ணாளுக்கு,
இன்று இரவு நான் மதுரைக்குப் புறப்படுகிறேன். சூழ்ந்திருந்த இருள் விலக ஆரம்பித்து விட்டது. நான் மதுரை சித்திரகலா ஸ்டுடியோவில் பட விஷயமாகத்தான் போகிறேன். புதன்கிழமை அங்கிருந்து உனக்கு மனக்கவலை தீர்க்கும் தகவல் அனுப்ப முடியும் என்று எதிர்பார்க்கிறேன். நான் 26-ந் தேதி ரேடியோவில் பேசமாட்டேன் என்று நினைத்துக் கொள்ளாதே. அதை A.I.R. பதிவு செய்து கொண்டுவிட்டார்கள். கேட்டு, உன் கருத்தைச் சொல்லு. இத்தனை நாட்கள் பொறுத்த மாதிரி இன்னும் இரண்டொரு நாள். தினகரி எப்படி இருக்கிறாள். உடம்பு ஜாக்கிரதையாகக் கவனி. ஜெயராமன் கடிதம் வந்தது. அங்கு வேலை தாமதப்பட்டால் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லு. எங்கும் புறப்படாமல் தடுத்துவை.
இப்படிக்கு,
உனதே உனது,
சொ.வி…
கடிதம் 9
1.09.47
எனது ஆருயிர்க் கண்ணாளுக்கு,
அங்கிருந்து ஒரு கடிதமும் வராமலிருப்பது கவலையாக இருக்கிறது. நிலவரம் எப்படி? நான் இங்கு வந்தது முதல் வெளியே சொல்ல முடியாத நிலை. பொறுப்பாட்சி கலாட்டா ஜாஸ்தி. இன்று எங்கு பார்த்தாலும் ஸ்ட்ரைக். ஊர்வலம். இங்கிருந்து ஒரு கோஷ்டி மைசூருக்குக் கால்நடையாகப் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. வரவர நிலைமை எப்படி ஆகுமோ? பணம் எனக்கு நாளன்று கிடைத்ததும் உடனே அனுப்புகிறேன். நேராக நீ திருவனந்தபுரத்துக்குச் சென்று அங்குள்ள காரியங்களை முடித்துக் கொண்டு வா. இந்தப் படம் முடியும் வரை பெங்களூரில் குடியிருந்தால் என்ன என்று தோன்றுகின்றது. சுமார் ரூ.50-க்குள் தனி வீடு கிடைக்கும் ஐந்தாறு மாதம் கழித்துச் சென்னைக்குச் சென்று குடியேறினால் என்ன? இப்பொழுது நமக்குப் புதிய படம் கிடைக்காத வரையில் கையில் உள்ளதை விரயம் செய்யாமல் வீடு வாங்கச் சேமித்து வைக்க முடியும். நிற்கவும். குழந்தை பிறந்த நாள் விழா நடத்தவும் வசதியாக இருக்கும். குக்கர் சாமான்களை மட்டும் இங்கு எடுத்துக் கொண்டு வந்து, மற்றவர்களை ராமமூர்த்தி சற்றுப் பெரிய வீடு பிடித்து அதில் போட்டு வைத்தால் சௌகரியமாக இருக்கும் என்று தெரிகிறது. கொஞ்சம் வாங்கித் திருவனந்தபுரம் பார்சல் அனுப்புகிறேன்.
சென்னை விசஷேங்களை விபரமாக எழுதவும். இத்துடன் வைத்திருக்கும் முன்னுரையை கண. முத்தையாவிடம் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்யவும். இங்கு குளிர் ஜாஸ்தி என்பது தவிர வேறு எதுவும் சொல்லுவதற்கு இல்லை.
இப்படிக்கு,
உனது,
சொ.விருதாச்சலம்.
கடிதம் 10
Room No. 13, Udipi,
West Masi Street, Madurai.
7.6.47
அருமைக் கண்ணாளுக்கு,
போட்ட கடிதத்துக்குப் பதில் வராத காரணம் தெரிந்து கொண்டேன். நேற்று அல்ல, முந்திய தினம் மாலை லோகநாதன் கடிதம் வந்தது. அதிலிருந்து நீ வெகு கோபமாய் இருக்கிறாய் என்று தெரிந்து கொண்டேன். நீ என்ன வேண்டுமானாலும் கோபப்படலாம். புலி கூண்டில் இருந்து சீறுவது மாதிரிச் சீறினால் மனத்தளர்ச்சியும், ஆயாசமும்தான் ஏற்படும். இங்கே வந்த காரியம் தாமதப்படுவதினால்தான் உனக்கு இந்தத் தொல்லை. நான் கூடிய சீக்கிரம் பணத்தை வாங்கிக் கொண்டு அங்கு வருகிறேன். எதற்கும் கவலைப்படாதே என்றுதான் எழுத வருகிறது. கவலைப்படாமல் வைப்பதற்கு வசதிதான் தாமதமாகிறது. இனியும் தாமதமாகாது. குழந்தை தினகரி எப்படி இருக்கிறாள்? எனக்கு ஸ்ரீ ஆறுமுகம் பிள்ளையிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதற்கு என்ன பதில் எழுத வேண்டும்?
குழந்தையின் சௌக்கியம் பற்றியாவது ஒரு லைன் எழுது.
இப்படிக்கு.
உனது.
சொ.வி…
நூல் விவரம் : –
கண்மணி கமலாவுக்கு…
தொகுப்பாசிரியர்: இளையபாரதி
விலை: 200
பதிப்பகம் : வ.உ.சி நூலகம்
G-1, லாயிட்ஸ் காலனி, அவ்வை சண்முகம் சாலை,
இராயப்பேட்டை, சென்னை – 6000014
தொடர்புக்கு: 9840444841 / 9176003050
Illustrated By Arun

Leave a Reply