தொடுவானம்
ஊழிக் காலம் வரும் பொழுது
நீங்கள் அச்சமுற்று நடுங்கும் காலத்தில்
என் அங்கைகளில் வைத்து உங்களை அரவணைப்பேன்
ஓ அந்தக் கானகத்துப் பெரும் மரங்கள் சடசடத்து முறிந்தாலும்
மலை முகடுகளின் சரிவுகளில் பேராபத்து உண்டானாலும்
மேய்ச்சல் நில ஆடுகளான நீங்கள் உயிர்த் தரிக்கும் பொருட்டுக்
கற்குகைகளுக்குள் உங்களை ஆற்றுப்படுத்துவேன்
அந்த வானத்தின் படு கோரமான புயற் பற்களுக்குள்
உங்களைச் சிக்க ஒண்ணாமல் நிலம் பிளந்த பூகம்பத்தில் அடியில்
நெல் உமிகளைக் களைந்து ஊதி எடுத்த தானிய மணிகளைப் போல
உங்களைப் பாதுகாப்பேன்.
ஆமாம் மிக மோசமான கால் புண்கள் அல்லது பார்வையற்றுப் போன
கண் குழிகளுக்குள் இன்னும் உங்களது தாகித்த தொண்டை கரகரப்பிற்குச்
சோற்று வடிநீர் ஊற்றிக் கடந்து போவேன்…
போவேன் நீங்கள் என் முதுகைப் பார்த்துக் கொண்டிருக்கும் வரை
நீங்கள் தொலைதூர நட்சத்திரங்களை அவதானிக்கும் வரைப் போவேன்
அந்த இரவை நிலவு வரையும் வரைப் போவேன்
வெட்கங்கெட்ட ஒரு சூரியன் வரும் வரை
நீங்கள் தொடு வானத்தைப் பற்றி ஏதேனும் சொல்லும் பொழுது
உங்கள் வாசலில் அல்லது சாலைகளில்
நடமாட்டம் அதிகரிக்கிறது போலத் தோன்றினால்
ஒரு சிறிய உறை கிணறு வீட்டில் இருந்தால்
ஒரு நடை வண்டி மேலும் காற்றும் புயலுமான காலத்தில்
அந்தச் சடசடக்கும் சன்னல்கள்
அந்தப் படுக்கை அறை
கொஞ்சம் மணித் தாவரங்கள்
நல்லவேளை நீங்கள் என்னைப் பின் தொடரவில்லை என்பதனால்
என் வாக்குறுதிகளைத் திரும்பப் பெற யாரும் காத்திருக்க வேண்டியதில்லை
நீங்கள் யாருடைய முதுகையோ
திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பண்டம் கரைதல்
கடந்து போன அத்தனை கோடைகளையும் நினைவில் மீட்பது
ஏனோ ஒருவரின் முனைப்பாகி
அதுவே இறுதியில் எழுதுவதற்கான அற்பத்தனமாகி விடுகிறது.
மேலுமது தன் சட்டையை உரித்து விட்டு நகரும்
பாம்பொன்றின் தவளைகளற்ற கொடும்கோடையாகவும் இருக்கக்கூடும்.
தொடரும் இவ்வெப்பக் கதிர்கள்
மழைக்காலங்கள் வரும் வரையில்
மேட்டு நிலங்களுக்கான தன் சுமைகளின் தீராத அசதியை
ஒரு ரொட்டியாகவேனும் (சிலர் பணியாரங்களை இட்லிகளை விரும்பக்கூடும்) பண்டப்படுத்தித்தான் விடும்.
குழந்தைகள் எதிர்காலமறியாது உறங்குகிறார்கள் என்கிறேன்
கொஞ்சம் நல் நினைவுகள் எப்போதும் மீந்திருக்கின்றன.
யாருடைய வாசலில் அணிலாடினாலும்
அவை பூஞ்சிட்டுகளுடன் பூத்த மலரைத் தின்னப் போட்டியிடும் போது
காலங்களில் மனிதர்கள் காக்கைகளுக்கு உணவிடும் காருண்யம் கண்டு
அணில்களும் அவற்றை மெல்லப் பங்கிட்டுக் கொள்வது
ஒரு அனிமேஷன் காட்சிதான்..
இனிவரும் சின்னஞ்சிறு மகவுகளுக்குப் புலனாகும் உலகத்தில்
என் பண்டம் கரைந்து இந்தத் தானிய நிலங்களருகே
அதன் பூர்வீக மனிதர்களைப் போல
நாளடைவாய் நானும் விடை பெறுவேன்.
மேலும் அம்மகவுகளின் மொழியானது
இரவு நேரத் தாவரங்களின் வளிமண்டல அசைவுகளோடு
மற்றும் கைக்கருகே உறங்கும் வளர்ப்புப் பிராணிகளின் கத கதப்புடன்
தனது மண்ணின் பெருங்கனவை மீண்டும் எழுதத் துவங்குமெனில்
காலங்களில் அருகிவிட்ட என் பாடலின் ஒரு அசையேனும்
அதில் மீட்சி பெறும் என்பதன்றி என்பதன்றி……..
ஏதோன்றும் அற்பத்தனம் என்றளவில்தான் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துவிடுகிறது
Art : User-rh sokuctc

பின் காலனியக் கவிஞர் என்றழைக்கப்படும் யவனிகா ஸ்ரீராம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர். இரவு என்பது உறங்க அல்ல, தலைமறைவுக் காலம், கிடக்கட்டும் கழுதை உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதி உள்ளார்.








Leave a Reply