எழுத்தாளர் ஜெயராணி அவர்களின் கறுப்பு வானம் சிறுகதைத் தொகுப்பு, ஒன்பது கதைகளை உள்ளடக்கியதாக உள்ளது. ஒவ்வொன்றும் அதனதன் பாணியில் தனித்துவத்துடன் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் அக்கதைகள் அனைத்திலும் பொதுவான ஒரு அம்சம் உள்ளது. அதுதான் மனிதர்களில் இயல்பாக இருக்க வேண்டிய மனிதம் சிதைந்தால், என்ன நடக்கும் என்பது. அம்மனிதம் இல்லாமலாவதன் அடித்தளம், சாதி மதப் பாலின வர்க்க இன வேறுபாடுகள்தான் என்பதை, இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஆழமாகப் பதிவு செய்கிறது.
ஒரு சமூகத்தின் சடங்கு சம்பிரதாயம் எனச் சொல்லப்படும் அத்தனையும், மூடநம்பிக்கையை அடித்தளமாக்கித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. அவை அத்தனையும், இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் ஆயுதம் எனச் சொன்னால் மிகையில்லை. காரணம், சடங்கு சம்பிரதாயம் எனச் சொல்லப்படும் அனைத்தும், பெண்களை ஒடுக்கும், பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பையும், அதனால் பாதிக்கப்படும் பெண்களையும், நம் கண் முன் நிறுத்தும் கதைதான் இப்புத்தகத்தின் முதல் கதை “பொட்டல் பிரசவம்.”
ஒரு வித்தியாசமான சடங்கைக் கொண்டுள்ள ஊருக்கு, பல கனவுகளுடன் திருமணமாகி வரும் பூவரசி, அச்சடங்குகளுக்கு எதிராக நடத்தும் போராட்டமாகவே இக்கதை இருக்கிறது. முத்துநகை என்ற பெண்ணின் வலியும், அவளது கதறலும், இக்கதையைப் படித்து முடித்து சில மணி நேரங்கள் கழிந்தாலும், நம் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கும். அத்தனை பெரிய வலிகளை பெண்கள் காலம் காலமாக அனுபவித்தாலும், அதை ஊர்க்கட்டுப்பாடு, சடங்கு, சம்பிரதாயம் எனக் காரணம் சொல்லி பாராமுகம் காட்டும் இந்தச் சமூகத்தை, பின்னங்கால்களால் எட்டி உதைத்து, அக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பூவரசியும், அவளுக்குத் துணை நிற்கும் முத்துநகையும் புரட்சிப் பெண்களாய் மனதில் பதிகிறார்கள்.
வரலாறு நெடுக பெண்கள் சாதித்தவற்றைத் திருடிக் கொண்டும், பெண்களின் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமலும் வஞ்சிக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தையும், இக்கதையின் கடைசிப் பத்தியில் அம்பலப்படுத்தியுள்ளார் எழுத்தாளர் ஜெயராணி.
அடுத்த கதையான “அறன் வலியுறுத்தல்” இந்நாளில் மிகவும் அவசியமான பார்வையை, நம் அனைவருக்குள்ளும் விதைக்கிறது. ஒரு பத்திரிகையாளர் ஒடுக்கப்பட்டமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துப் பேசுகையில், எவ்வளவு நேர்மையுடனும் அறத்துடனும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இக்கதை. பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும் எப்படியிருக்கிறோம் என்பதையும் சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டும் விதத்திலும் இக்கதை அமைந்துள்ளது.
“கிசா” என்ற பெண் பத்திரிகையாளர் மூலம், எப்படியெல்லாம் நாம் இருக்க வேண்டும் என்பதையும், இச்சமூகத்தில் நிலவும் சாதிய வன்முறைகளை எப்படி அணுக வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார் ஆசிரியர்.
இந்தியச் சமூகத்தின் ஆகப்பெரிய கொடூரம் சாதி அமைப்பு. அந்தச் சாதிய அமைப்பு, ஒடுக்கப்பட்ட மக்களை தினம் தினம் காவு வாங்குவதை, ரத்தமும் சதையுமாக இக்கதை பதிவு செய்கிறது. இக்கதையைப் படிக்கும் போது நாம் வாழும் காலத்திலேயே நடக்கும் சாதிய வன்முறைகள் நினைவிற்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. தலித் மக்களைத் தாக்குவதற்குக் காரணங்களே தேவையில்லை, அவர்கள் தலித்தாக இருப்பதே போதுமானது என்ற ஆதிக்கச் சாதிவெறியர்களின் உள்ளக்கிடக்கையைப் பட்டவர்த்தனமாக விவாதிக்கிறது இக்கதை.
சாதியைப் பற்றிப் பேசாமல் கடந்து செல்வது சாதிய இறுக்கத்தை அதிகரிக்குமே தவிர, சாதியை ஒழிக்கும் தீர்வாகாது என்பதையும் இக்கதை படித்து முடிக்கும் போது உணர வைக்கிறார் ஆசிரியர். ஒவ்வொருவரும் தங்கள் ஒவ்வொரு செயலிலும் மிக நேர்மையோடு சாதியைத் தூக்கியெறிவதால் மட்டுமே, ஒருவர் சாதியற்ற மனிதனாக மாற முடியும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது. மேலும், நாம் யார் பக்கம் நின்று இதுபோன்ற சாதிய வன்முறையை அணுக வேண்டும் என்பதையும், கிசா, சரண் என்பவருடன் நடத்தும் உரையாடல் மூலமும், கிசாவின் வேலையிடத்தில் அவள் கடந்து வரும் அனுபவங்கள் மூலமும் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக நம் செயல்கள், ஒரு நாளும் எக்காரணம் கொண்டும், குரலற்றவர்களின் குரல்வளையை நெறிப்பதாக இல்லாமலிருப்பதே அறன் என்பதை, மிக ஆழமாகப் பதிய வைக்கிறது இக்கதை.
“ஒரு சர்வாதிகாரிக்குத் தன் அடிமையின் சுதந்திரத்தை விடவும் துன்புறுத்தும் கொடுந்தண்டனை வேறென்ன இருந்துவிடப் போகிறது!” என்ற வரி இப்புத்தகத்தின் மூன்றாவது கதையான “ஏழாவது ஜன்னல்” சிறுகதையில் இடம்பெற்றுள்ளது. இக்கதையின் சுருக்கமான வடிவம் என்று கூட இவ்வரியைக் குறிப்பிடலாம். அழகான குழந்தைப் பருவம் ஆலிஸின் மனதில் விதைத்த பூந்தோட்டம், ரம்மியமாகப் பூத்துக் குலுங்கும் நேரம், சேந்தன் எனும் அரக்கன் ஒவ்வொரு பூவாய்க் கசக்கி நாசம் செய்து, கடைசியில் அப்பூந்தோட்டத்தையே சூறையாடுவதைக் கண்முன் கண்டும் தடுக்க இயலாமல், கையறுநிலையில் நிற்கும் ஆலிசிடம், இச்சமூகத்தில் வாழும் பல பெண்களின் சாயல் தெரிகிறது.
ஒரு பெண்ணை அடக்கி ஒடுக்கிக் குளிர் காயும் ஆணாதிக்கத்திற்கு எதிராய், வெகுண்டெழும் பெண்ணின் அகவன்முறை எப்படியிருக்கும் என்பதைக் கண்முன் காண்பிக்கிறது இக்கதை. நம் நெஞ்சைக் கனக்க வைக்கும் விதமாய், ஒவ்வொரு ஜன்னலாய்த் திறந்து கொண்டே தன் கதையை விவரிக்கும் ஆலிஸ், கடைசியில் அவள் மூடும் ஒரு ஜன்னலின் வழியே நமக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தை அளிக்கிறாள்.
முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை நம்மால் வெறுக்க இயலுமா? இப்படிக் கேட்டால் முடியாது எனச் சொல்வோம். ஆனால் அந்த நபரின் சாதி, மதம், இனம், மொழி, நாடு, பாலினம் என ஏதாவது ஒன்றைச் சொல்லி, அவரை அடையாளப்படுத்திவிட்டு அவரை வெறுக்க இயலுமா எனக் கேட்டால்? சாதி, மத, இன, மொழி, பாலின துவேஷச் சிந்தனையால் மூழ்கடிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும், காரணமே இல்லாமல் சக மனிதரை வெறுப்பார்கள் என்பதற்குச் சாட்சியாய் உள்ளது, இப்புத்தகத்தில் உள்ள நான்காவது கதை “ஒரு கருவின் சிதைவு”.
ஒருவர் சிறுபான்மையினராக இருப்பதாலேயே, எந்த முகாந்திரமும் இல்லாமல் அவர் மீது ஏற்படும் வெறுப்பு. ஒருவர் தலித்தாக இருப்பதாலேயே அவர் மீது ஏற்படும் ஒவ்வாமை. இவையெல்லாம் எவ்வளவு மோசமாக இச்சமூகத்தில் நிலைத்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இக்கதை. அதுவும் இது ஏதோ வளர்ச்சியடையாத கிராமப்புறங்களில் அல்ல. படித்த நவநாகரிக வாழ்வை வாழும் பொருளாதார நிலைத்தன்மையுள்ளவர்களும், சாதி மதத் துவேஷச் சிந்தனையால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இக்கதை. மேலும் எவ்வளவு அறிவியல் வளர்ந்தாலும் சாதியவாதம் இருக்கும் வரை, அந்த அறிவியல் வளர்ச்சியையெல்லாம் தங்கள் சாதியைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே இச்சமூகம் பயன்படுத்துகிறது என்பதையும், இக்கதையில் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் ஜெயராணி.
காதல் மனித இயல்பு. அவ்வியல்பை இயல்பென ஏற்றுக்கொள்ளாமல் அதற்குக் காரணம் கற்பித்து, காதலையும், பல சமயங்களில் காதலர்களையும் கொலை செய்யும் சாதியச் சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு காதலைப் பற்றி, மாய எதார்த்தவாதக் கதைசொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளதுதான் இப்புத்தகத்தின் பெயரைக் கொண்ட ஐந்தாவது சிறுகதை “கறுப்பு வானம்”
இக்கதையில் கதாபாத்திரங்களுக்குப் பெயரே குறிப்பிடப்படாமல் இருப்பது இக்கதையின் இன்னொரு சிறப்பு. இக்கதையைப் படிக்கும் அனைவருக்கும் நாம் வாழும் காலத்திலேயே ஆணவக்கொலை செய்யப்பட்ட ஒவ்வொரு காதலரும் நினைவிற்கு வருவர். அத்துடன் இந்த ஆணவக்கொலைகளைக் கண்டும் காணாமல் அல்லது வெறுமனே உச்சுக்கொட்டி கடந்து செல்லும் ஒவ்வொருவரும், மறைமுகமாக இது போன்ற நிகழ்வுகளில் எப்படி ஒரு பங்காளியாக மாறுகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
“நான் இந்தக் கடற்கரைக்கு இளைப்பாற வரவில்லை, ஏனென்றால் நிற்கதியிலிருப்பவர்களுக்கு இளைப்பாறுதல் சாத்தியமில்லை” என்று இக்கதையில் ஒரு வரி வரும். இக்கதையைப் படித்து முடிக்கும் போது, நமக்கு ஏற்படும் உணர்வும் அதுதான். காதலித்த ஒரே காரணத்திற்காக இல்லாமலாக்கப்படும் ஒவ்வொரு உயிரும், அவ்வுயிரை நேசித்தவர்களும், என்னவெல்லாம் அனுபவித்திருப்பார்கள், அவர்களின் வலி எப்படியானது என நம் இவ்விருவரையும் உணர வைத்து மனதைக் கனக்க வைக்கிறது இக்கதை.
கல்வி நிலையங்களில் மாணவர்கள் மத்தியில் நிலவும் சாதிய மனநிலையையும், அதற்கான காரணங்களையும் இப்புத்தகத்தின் ஆறாவது கதை “பாடம்” அக்குவேர் ஆணிவேராக ஆராய்கிறது. அக்கதையில் வரும் நிகழ்வுகள் நிஜத்தின் கோர முகத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும், சங்கமித்ரா எனும் தலைமை ஆசிரியையின் கதாபாத்திரம், நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
நம் சமூகத்தில் சாதி ஒரு அவலம் என்றால், அச்சாதியைத் தங்கள் ஆதாயத்திற்காக அப்படியே நிலைத்திருக்கச் செய்யும், இக்கதையில் வரும் நாகராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனநிலையில் இருப்பவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதையும் நம்மை உணர வைக்கிறார் ஆசிரியர். கடைசியில் சாதிவெறியால் சக மனிதனை ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கும் ஒருவர், அதுவும் மாணவர்கள் இச்சமூகத்தின் விளைபொருட்கள்தான் என்பதை ஆழப்பதிய வைக்கிறார். அத்துடன் இந்தச் சாதிய எண்ணத்தைக் களைய, குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொருவருக்கும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது.
ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்துவிட்டதாலேயே, அவர்கள் மீது வன்முறை நடத்தலாம், யாருக்கும் எதற்கும் பதில் சொல்லத் தேவையில்லை எனும் சாதிவெறியர்களின் எண்ணத்தை, கதையாக விரிக்கிறது இப்புத்தகத்தின் ஏழாவது கதை “இளவஞ்சிக் காவியம்”. ஒரு நட்பு கூட சாதிஇந்துவின் கண்ணோட்டத்தில் உள்நோக்கம் கற்பிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் சமூக எதார்த்தத்தை இக்கதை பேசுகிறது.
இக்கதையில் பல சமூக எதார்த்தங்கள் பேசப்பட்டாலும், இதில் வரும் இளவஞ்சியின் தாய் “முத்தி” இச்சமூகத்தின் சாதிவெறிலிருந்து தப்பி ஓட, விளிம்புநிலை மக்கள் எவ்வளவு பிரயத்தனப்பட வேண்டியுள்ளது என்பதற்குச் சாட்சியாக இருக்கிறார். இளவஞ்சியைப் போல பலரும் சமூகத்தின் சாதியின் பிடியிலிருந்து தப்பி ஓட முடியாமல், அதற்குள் கிடந்து உழன்று வேதனைப்படுவது நம் சிந்தனைக்கு வருவதைத் தடுக்க இயலவில்லை. Poetic Justice என்று சொல்வார்களே, அதுபோல இக்கதை முடிந்திருப்பது மிகப்பெரிய ஆசுவாசமாக உள்ளது. இளவஞ்சியின் மீள்வருகையை சினிமா பாணியில் சொல்லவேண்டுமெனில் “மாஸ்” எனலாம். மேலும் இக்கதை எழுதப்பட்டு விவரிக்கப்படும் விதமே ஒரு சினிமா பார்க்கும் உணர்வை அளிக்கிறது. மிக சுவாரசியமான உணர்வுப்பூர்வமான கதை “இளவஞ்சிக் காவியம்”.
ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொண்டு, எந்த நிபந்தனைகளும் இல்லாமல் காதலிக்கும் இருவரிடையே நடக்கும் உரையாடல் மிக சுவாரசியமானது. அந்த உரையாடலின் ஒரு சிறு பகுதியைக் கதையாக்கினால் எப்படியிருக்கும் என்பதைத்தான், இப்புத்தகத்தின் எட்டாவதுக் கதை “ஆதியிலோர் அன்பிருந்தது” உள்ளடக்கியுள்ளது.
ஒவ்வொரு வரியும் கவிதை. சுதந்திரம் இல்லாத காதல் காதலாகாது என்பதை, பெயரில்லாத அவன் வெவ்வேறு வார்த்தைகளில் விவரிக்கையில், பெயரற்ற அவள் கசிந்துருகி காதலில் திளைக்கிறாள், அவள் மட்டுமல்ல அவளுடன் சேர்ந்து வாசகர்களாகிய நாமும்தான். “பின்னிரவு வரை நீண்ட இந்த விளையாட்டு முடிந்த போது எங்கெங்கும் சிதறிக் கிடந்த முத்தங்கள் வானத்திலேறி நட்சத்திரங்களாகின” என்றொரு வரி இக்கதையில் இடம்பெற்றுள்ளது. அது போலத்தான், இக்கதையைப் படிக்கும் போது, நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும், காதலாகவே மாறிப்போகிறது. ஒவ்வொரு வரியையும் ரசித்து உணர்ந்து உள்வாங்கி, மீண்டும் மீண்டும் அவ்வுணர்வை அசைபோட்டு நான் படித்த மிக அழகான கதை “ஆதியிலோர் அன்பிருந்தது”.
ஒரு எழுத்தாளன் எப்போது எழுத்தாளனாகிறான் என்றொரு கேள்வியை, இப்புத்தகத்தின் கடைசிக் கதை “உள்ளொளி தரிசனம்” எழுப்புகிறது. தென்னவப்பாண்டி நிகரிலன் ஆகி அனைவராலும் கொண்டாடப்படும் இலக்கியவாதியாகிறான். ஆனால் அவனுக்குள் இருக்கும் தென்னவப்பாண்டிதான் அவனது சிந்தனையை ஆள்கிறான்.
தென்னவப்பாண்டியாக இருந்த போது, அவனுள் இருந்த அதே அழுக்குகள்தான், அவன் நிகரிலனாக இலக்கியம் படைக்கும் போதும் வெளிப்படுகிறது. அவ்வழுக்குகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்தும் கனியன், விக்ரமாதித்தன் கழுத்தில் தொங்கும் வேதாளம் போல, நிகரிலனைத் திக்குமுக்காட வைக்கிறான். உண்மை சுடும் என்பதைப் போல, கனியனின் இருப்பே நிகரிலனை அல்லோலகல்லோலப்பட வைக்கிறது.
கலை கலைக்கானதே எனும் சப்பைக்கட்டு மூலம், சாதி மத ஆணாதிக்க எண்ணங்களைக் கேள்வியே கேட்காமல், தனக்குள் அப்படியே வைத்துக் கொண்டு தன்னை எழுத்தாளனாக வெளிப்படுத்திக் கொள்ளும் நிகரிலன் கதாபாத்திரம், கடந்தகால நிகழ்கால எழுத்தாளர்கள் பலரை நினைவுபடுத்துகிறது. அதேபோல கலை மக்களுக்கானதே என, அத்தனை அடிப்படைவாதங்களையும் கேள்வியெழுப்பும் கனியன், ஒரு எழுத்தாளன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறார்.
இவர்கள் இருவருக்குமிடையில் நடக்கும் வாதப் பிரதிவாதங்களாக இக்கதை நகர்ந்தாலும், இவற்றையெல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் காமாட்சி, “சரியைச் சரியென்று தவறை தவறென்றும்” சொல்லும் நீதிதேவதை போல் செயல்படுவது, இக்கதையின் சிறப்பு. கதை முழுவதும் இரண்டாம் கட்ட கதாபாத்திரமாகவே வரும் காமாட்சிதான், இக்கதையின் நாயகியாகப் போகிறாள் என்பதை எந்த இடத்திலும் வெளிப்படுத்தாமல், கடைசி சில வரிகளில் சொல்லி, வாசகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்து, உள்ளார்ந்த திருப்தியுடன் இக்கதையை முடிக்கிறார் ஆசிரியர். மிக நேர்த்தியான கதைசொல்லும் பாணிக்கு இக்கதை மிகச்சிறத்த உதாரணம்.
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையிலும், நிஜ நிகழ்வுகளை நம்மால் உணர முடியும். அதே அளவிற்கு, நிஜத்தில் கிடைக்காத நீதிகளை இக்கதைகள் அளிக்கும் போது, நிஜமில்லாவிட்டாலும் பரவாயில்லை, இப்படியொரு நீதி கிடைத்துவிட்டதே என, நிஜத்திற்கு அப்பாற்பட்ட கதையின் முடிவுகளையும், ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதுவே எழுத்தாளர் ஜெயராணி அவர்களின் எழுத்து, கூர் தீட்டப்பட்டிருப்பதற்குச் சான்று.
சமூக அவலங்களைப் பேசும் கதைகள், வறட்சியாகப் பாடம் எடுப்பது போல இல்லாமல், இக்கதைகளில் வார்த்தைகள் கோர்க்கப்பட்டுள்ள விதமும், கதை சொல்லப்படும் பாணியும் மிக நேர்த்தியாக வாசகர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் விதத்தில் உள்ளது. ஒவ்வொரு கதையும் அதனதன் போக்கில் ஒரு உச்சத்தை அடைந்து, வாசகர்களுக்கு மிகச்சிறப்பான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. மிக ஆழமான கருவைச் சுமக்கும், அழகான ஒன்பது கதைகளை உள்ளடக்கிய சிறுகதைத் தொகுப்பு எழுத்தாளர் ஜெயராணி எழுதிய “கறுப்பு வானம்”.
Dr. நாகஜோதி, எழுத்தாளர், தொழில் முனைவோர், இறை மறுப்பாளர். பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம், சாதி எதிர்ப்பு ஆகியவை சார்ந்து இயங்குகிறார். டிவிட்டரில் இயங்கும் முச்சந்துமன்றம் புத்தக வாசிப்புக் குழு உறுப்பினர்களில் ஒருவர். Dr. நாகஜோதி, மீரா, முனைவர் கோமதி, மற்றும் காளி ஆகிய நான்கு பெண்கள் தொடங்கிய ‘முச்சந்துமன்றம்’ புத்தக வாசிப்புக் குழு, ட்விட்டர் என்னும் X ஸ்பேஸ் தளத்தில் நான்கு வருடங்களுக்கு மேல் புத்தக வாசிப்பும் கலந்துரையாடலும் நிகழ்த்தி வருகிறது. அதில் 150 புத்தகங்களுக்கு மேல் வாசித்து விவாதித்து வந்திருக்கிறது.








Leave a Reply