மீறு
தலைமுடியை இழுத்து
குரல்வளையை நசுக்கி
கை கால்களைக் கட்டியிறுக்கி
நான் பேசக்கூடாது என்கிறாய்
நீ சொன்ன மறுகணமே
திமிறி எழுந்து
நான் காரித் துப்பிய எச்சில்
உன் தொண்டைக்குழியில்.
ஏக்கம்
பொறம்போக்கு நிலத்துச் செடிகள்
மழைக்காகக் காத்திருப்பதுபோல
என் நிலைமையும் திறமையும்
பொதுப் புத்தியில்
வந்து வந்து போகிறது.
கடவுள்
குழம்பியவனின்
தேடல்தான் கடவுள்
தெளிவு வந்தவுடன்
கடவுள் இல்லை என்பது உண்மையாகிவிடும்.
தாக்குதல்
சாதித் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க..
யாரிடமும் சொல்லமாட்டேன்
யாரும் என்னைக் கேட்கக் கூடாது
மீறிக் கேட்டால்
நான் நாயுடு என்பேன்
நான் நாயக்கர் என்பேன்
நான் கவுண்டர் என்பேன்
நான் முதலியார் என்பேன்
ஒருபோதும் சக்கிலி என்று
சொல்லமாட்டேன்.
இடைவெளி
விதைப்பைகள் வீங்கி அழுகினாலும்
சிறுநீரகங்கள் வெடித்துச் சிதறினாலும்
தொண்டைக்குழி சுருங்கினாலும்
விழிகள் வீணாகப் போனாலும்
பரவாயில்லை
இடைவெளிவிட்டு நீ
கொட்டாங்குச்சியில் ஊற்றும் தண்ணீர்
தேவையில்லை.
தீண்டாமைச் சுவர்
காலையில எந்திரிச்சு
இவனுங்க மூஞ்சில முழிக்கணுமா.
சேரித்தெரு சண்டைச் சத்தம்
என் சாதி கவுரவத்தைக் குறைக்குது.
மாட்டுக்கறி வாசம்
என் மானத்தை வாங்குது.
ஆடு மாடு என் நிலத்துல நடக்கும்போது
வயிறு எரியுது.
சுவரில்லாத அந்த இடம்
நீயும் நானும் சமம்ன்னு சொல்லுது.
வழக்கானாலும் வாதங்கள்
எல்லாமே சாதி பண பலத்தால்
வீணாகப் போகுது..
ஒவ்வொரு தீண்டாமைச் சுவர் மேலே
கால்மேல் கால்போட்டு
அமர்ந்துகொள்கிறது
சேரிப் பசங்களின் அம்மணக்குஞ்சு.
தேசப்பற்று
மதத்திற்கு மண்டியிட்டதால்
ஊருக்கு ஒரு சாதி
சாதிக்கு ஒரு நீதி
மதத்திற்கு ஒரு மநுநீதி
என் சாதி தெரிந்தவுடன்
உனக்கும் எனக்கும்
மனதுக்குள் மல்யுத்தப் போட்டி
சொந்த நாட்டிலேயே சுண்டெலிகளாய்
ஓடி ஒளிந்து வாழ
தப்பிக்க மதம் மாறுபவனும் மாற்றுபவனும்
மயிரிழையில் கொலை
பயந்து போனவனை
பக்தி போதையில் மயக்க
தப்பிப் பிழைப்பவனைப்
பொருளாதாரம் தூக்கிலிட
கொஞ்சம் பொறுங்கள்.
குண்டி கழுவப் போகும் தண்ணீரில்
உங்களின் தேசப்பற்றைக்
கலக்கிக் கொள்கிறேன்.
ஆச்சாரம்
சடலத்தின் பூமாலை
சாலையில் விழ
அதை கோமாதா ரசித்து ருசித்துச் சாப்பிட
சாப்பிட்டதால் பால் சுரக்க
கறந்த பால் அவாக்களின்
வீடுகளுக்குச் செல்ல
பாலும் தயிராகி, மோராகி அவாக்களுக்குச் சதையாக
அதுவே ஆச்சாரமானது.
வழி
என் வலராறுக்கு வழி விடாமல்
விதவிதமாக வழி மறிக்கிறாய்
முட்டிமோதி திண்டாடி
காட்டாறாக என் வழியை
நானே உருவாக்குகிறேன் .
குறுக்கே வந்தால் உதைபடுவது
நீ மட்டுமல்ல
உன் சாத்திரங்களை சம்பிரதாயங்களை சடங்குகளைப்
பாதுகாக்கும் சாதியும் மதமும்தான்.
காதல் கல்யாணம்
ஐயா சாமின்னு கூப்புட்ட நீங்க
அண்ணான்னு கூப்புடுற அளவுக்கு
வளந்துட்டீங்களாடா.
உங்கள மாமான்னு கூப்புடுற
அளவுக்கு வளந்துட்டோம்.
உன் பொண்ணு என்னைக் காதலிக்குறா
கல்யாணம் பண்ணிவை.
Art : Artydeel
சங்கர் சீரங்கன் என்னும் இயற்பெயர் கொண்ட விகாசன் நாமக்கல்லைச் சேர்ந்தவர். கணினி மென்பொறியாளரான இவர் பணியின் நிமித்தம் திருப்போரூரில் வசித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதிலும் ஓவியங்கள் வரைவதிலும் மிகுந்த ஆர்வமுடையவர். இவரது கவிதைகள், சிறுகதைகள், ஓவியங்கள் அனைத்துமே பெரும்பாலும் சமூக அரசியலையும் சாதியக் கட்டமைப்பிற்கு எதிராகவும் பேசக் கூடியவை.








Leave a Reply