தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தைச் சேர்ந்தவர் கவிஞர் இந்துமதி. 2025 சென்னைப் புத்தகக் காட்சியில் இவரின் உக்கிரக்கவிச்சி என்னும் கவிதை நூல் கொம்பு பதிப்பகம் மூலம் வெளிவந்தது. முன்பொருநாள் தேவநேயப் பாவாணார் நூலகம் அருகிலுள்ள ஒரு தேநீர் கடையில் கவிஞர் வெய்யிலைச் சந்தித்த போது இந்துமதியை முதல்முறை அறிந்தேன். கபடமற்ற மழலை மொழியும், துடிப்பான உடல்மொழியும் அவரை மிகவும் அணுக்கமாக உணரவைத்தன. தனிப்பட்ட விசயங்களுக்காகப் புத்தகக் காட்சியைத் தவிர்த்து வந்த நான், இந்துமதியின் உக்கிரக்கவிச்சி நூல் வெளியீட்டிற்காக மனம் உந்திச் சென்றேன்.
சமூகச் செயற்பாட்டாளர், களப் பத்திரிகையாளர், எழுத்தாளர் ஜெயராணி உக்கிரக்கவிச்சி கவிதை நூலை வெளியிட்டார். பிறகு எனக்களிக்கப்பட்ட அவரின் கவிதை நூலில், இந்துமதியின் கையொப்பத்தைப் பெற்றுக்கொண்டு வீடு வருவதற்குள் வாசித்து முடித்தேன்.
பீடித் தொழிலாளர்களின் வேலைப்பாடு, பீடித் தொழிலுக்கும் தொழிலாளர்களுக்குமான உறவு, உழைப்புச் சுரண்டல், பொருளாதார நலிவு, சாதிய ஏற்றத்தாழ்வு, வெளிக்கிச் செல்லும் காட்டிலும் மட்டுமல்ல குடும்பக் கட்டமைப்பிலும் பெண்களின் பாதுகாப்பின்மை எனச் சமூக விளிம்பின் குரலாய் இவரின் கவிதைகள் ஒலிக்கின்றன. இலக்கியத்திற்கு நன்கு பரிச்சயப்பட்டது தென்காசி என்றாலும், அறியப்படாத வாழ்வை வட்டார மொழியில் உரக்கச் சொல்கிறார். உக்கிரக்கவிச்சி நூலை மையமாக வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் இந்துமதியிடம் உரையாடினேன். அவ்வுரையாடலிலிருந்து…
நீங்கள் பிறந்த அய்யாபுரத்தின் நிலவியல் தன்மைகளையும் அதன் பண்பாட்டுச் சூழலையும் விவரித்துக் கூறமுடியுமா?
தென்பொதிகை மலையடிவாரமான தென்காசி மாவட்டம் இலஞ்சி பக்கத்திலுள்ள ஒரு குக்கிராமம்தான் அய்யாபுரம். ஊரெல்லையில் இசக்கியும் சுடலையும் காவலுக்கு நின்று வரவேற்க ஊருக்குள் 1 கி.மீ தூரம் வரைக்கும் ஒரு பக்கம் பிராக்கல் குளமும், இன்னொரு பக்கம் வாழையும் தென்னையும் விளைஞ்சி கிடக்கும் வயக்காடுகளோடு ஒத்தையடிப் பாதையாகப் போகும். ஊரில் விவசாயமும், கட்டிட வேலையும், பீடிசுத்துவதும்தான் பிரதானமான தொழில். வயக்காட்டு வேலைக்குப் போனவர்கள் போக வேப்பமரத்து நிழலில், தெருக்களில், வீடுகளில் குழுவா அமர்ந்து பீடிசுத்துற பெண்கள்தான் அதிகம். அவர்களுக்கு வீடும், பீடித்தட்டும்தான் உலகம். அதனால் இந்த மண்ணுடைய மக்களுடைய பண்பாடு வேளாண்மையையும், பீடிசுத்தலையும் சார்ந்துதான் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் அன்னன்னக்கி உழைத்துச் சாப்பிடும் மக்களாகவே இருப்பதினால் அவர்களுக்கான பெரிய கொண்டாட்டாமே கோயில் கொடைகள்தான். பெண்களும் பீடித்தட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறதுனால நல்லது கெட்டதுக்கும் போகுறதுக்கான சூழல் குறைவுதான். மக்கள் அனைவரும் நாட்டார் கோயில் கொடைகளைத்தான் எதிர்பார்த்துக் கொண்டாடுறாங்க. அதற்காகவே சீட்டுப்பணம் சேர்த்துதான் செலவு செய்வார்கள். நாலு தெருக்கள் உள்ள ஊர்தான் என்றாலும் ஒவ்வொரு எல்லையிலும் நாட்டார் தெய்வத்தைப் பார்க்க முடியும்.
பீடித் தொழில் எப்போது அங்கு தோன்றியது. பீடித் தொழில் முதலாளிகளுக்கும் தொழிலாளிக்குமான உறவு குறித்தும் இன்றைய சூழலில் அத்தொழிலின் வளர்ச்சிப் போக்கு, மாற்றங்கள் குறித்துக் கூறுங்கள். கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து எல்லாம் பல்கிப் பெருகிய காலகட்டத்தில் பீடித் தட்டு மக்களின் உலகமாகவும் பண்பாடாகவும் இன்னும் நீடித்திருக்கக் காரணமென்ன?
பீடிசுத்துற தொழில் எங்க பாட்டி காலத்துல இருந்தே இருக்கு. ஒரு ஊரிலே ரெண்டு மூணு பீடிக்கடை இருக்கும். முந்துன நாளு பீடிக்கடைக்குப் போய் இலை, தூளை வாங்கிட்டு வரணும். அதுக்கப்புறம் தண்ணில அதை நனைச்சிப் பதமா வச்சிருந்தாதான் நெருசல் இல்லாம வெட்ட முடியும். அவங்க ஒவ்வொரு பீடிக்கும் ஒரு ஆர்ஸ் குடுப்பாங்க. அந்த ஆர்ஸ் அளவுக்கு வெட்டி அவங்க கொடுத்த தூளை வச்சி குறுக்குச் சுத்து இல்லாம சுத்தணும். அந்தப் பீடியை நூல் வச்சிக் கட்டி 4 மடக்கு அந்த பீடி முனில மடக்கனும். அதுக்கப்புறம் 14 பீடி, 27 பீடின்னு மொத்தமா கெட்டா கெட்டி சைஸ் பாக்கணும். இதுல எது சரியா இல்லாம இருந்தாலும் ஒரு பீடியைக் கூட எடுக்க மாட்டாங்க. 1000 பீடி சுத்துனா 220 ரூபா சம்பளம். அவங்க குடுக்கிற இலையோ, தூளோ பத்தலன்னா நம்ம கை காசு போட்டுதான் வாங்கணும். அதுலயே சம்பளத்துல பாதிப் போயிரும்.
ஒவ்வொரு ஊருக்கும் கண்டிப்பா ஒரு பீடிக்கடை இருக்கும். சில கடைகள்ல காலையில கணக்குப் போட வேண்டியதா இருக்கும். சில கடையில சாயங்காலம், மத்தியானம்ன்னு எப்போ வேணாலும் போடச் சொல்லுவாங்க. அதைப்போல ஒரு 5 நிமிசம் லேட்டா போனாக்கூடக் கணக்க எடுத்துக்க மாட்டாங்க. பீடி முதலாளிகள் பெருசா பீடி சுத்துற மக்களோட தொடர்புல இருக்க மாட்டாங்க. இந்தக் கடையில் இலை போடுறதுக்கு, கணக்குப் பாக்குறதுக்கு ஆண் தொழிலாளர்கள் இருப்பாங்க. அவங்களோடுதான் பெரும்பாலும் மக்கள் தொடர்புல இருப்பாங்க. ஒரு சில சிறுபீடிக்கடைத் தொழிலாளி அந்த ஊர்க்காரரா இருந்தாங்கன்னா தொடர்புல இருப்பாங்க. இன்றைய காலக்கட்டத்துல நிறைய பெண்கள் படிச்சி வெளிய வருகிறதுனால பீடிச்சுற்றுற தொழில் கொஞ்சம் குறைஞ்சிருக்குதான் சொல்லலாம். நிறைய பெரிய கம்பெனிகள் மூடப்பட்டிருக்கு. ஆனாலும் மக்கள் தங்களுக்கு வேறெந்தத் தொழிலும் தெரியாதனால அந்தத் தொழிலுக்குள்ளேதான் இருக்காங்க.
இன்னைக்கு உலகம் நவீனமாக இவ்வளவு மாறிய பின்னும் பீடித்தட்டு மக்களோட உலகமா நீடிச்சிருக்கிறதுக்கான முக்கியக் காரணம் இது தொழில்ங்கிறத தாண்டி மக்களுடைய எல்லா வாழ்வு நிலையிலும் ஊடுறுவிய பண்பாடாக மாறிட்டு. பீடித்தொழில் சூழலில் பிறக்கிற ஒவ்வொரு பிள்ளைக்கும் சின்ன வயசில இருந்தே விளையாட்டா அந்தத் தொழில் சொல்லிக் குடுக்கப்படுது. அதுக்குள்ள அந்த வீட்டோட சூழலைக் காரணங்காட்டி மடக்குறதுக்குப் பழக வச்சிருவாங்க. 13 வயசுக்குள்ள ஒவ்வொரு பிள்ளையும் பீடிசுத்த படிச்சிருக்கணுங்கிறது எழுதப்படாத விதியாவே இன்னும் ஊர்கள்ல பாக்க முடியுது. அது மட்டுமில்லாம பெற்றோர்கள் தங்களோட பீடிசுத்துறதைப் பெருமையா கொண்டாட ஆரம்பிச்சதுனால பிள்ளைகள் படிச்சிருந்தாலும் பீடிசுத்துக்குப் பலியாக வேண்டிய கட்டாயத்துல இருக்காங்க.
இன்னுமே பிள்ளைகள் பள்ளிக்கூடம் முடிச்சி வந்ததும் பீடித்தட்டுல உட்காருற நிலை இருக்கு. பொருளாதாரத்துக்காகவும் வறுமையைப் போக்கிறதுக்காகவும் இருந்த தொழில் இன்னைக்கு கொஞ்சம் கொஞ்சமா பெருமைக்காக மாறிக்கிட்டு வருது. அதைப்போல பீடிச்சுத்துங்கிறது சீதனமாவும் மாறிட்டு. எங்கம்ம ஒரு நாளைக்கு நூறு தூள் தான் சுத்துனுட்டு கூட பத்து பவுன் கூட கேட்டதெல்லாம் இன்னமும் நடக்கு. இன்னைக்கு கல்விய உயர்ந்திருந்தாலும் எத்தனை டிகிரி படிச்சிருந்தாலும் பீடிச்சுத்த தெரியுமான்னு தான் கேட்டுட்டு கல்யாணம் முடிக்கிறாங்க. இது மறுபடியும் பெண்களை வீட்டுக்குள்ள முடக்குற ஒரு நிலையாத்தான் இருக்கு. படிச்சிருந்தா எப்படி படிப்புக்கு ஏத்த வேலைக்கு அனுப்பனும். பீடிச்சுத்த தெரிஞ்சிருந்தா அதான் சுத்துதல எங்கயும் போகம வீட்டுலயே கிடன்னு முடக்கிற நிலைதான் இன்னைய காலக்கட்டத்துலயும் இருக்கு. அதைப்போல கொஞ்சம் வசதியா இருக்கிறவங்க பீடி இலைகளை விலைக்கு வாங்கி அதைச் சுத்தி வட்டிக்குக் கொடுப்பாங்க. இதுல ஒரு கட்டு பீடி வாங்குனா அதுக்கு இன்னொன்னு வட்டிப்போட்டு கொடுக்கனும். இதுக்கு பேரு வட்டி பீடி. இதை மட்டுமே தொழிலா செய்ற பெண்களும் இருக்காங்க. அதுமட்டுமில்லாம இதை 10 கட்டு பீடியை 100 ரூபாய்க்கும் விற்பாங்க. இன்னக்கி கணக்கு போட்டே ஆகணும்னு நினைக்கிறவங்க அதை வாங்கிப் போடுவாங்க. ஆனா 100 ரூபா கூட சம்பளம் கூட வராது. இந்த வட்டி பீடினால ஆயிரக்கணக்குல கடனாகி ஊரவிட்டுப் போனவங்கலாம் இருக்கிறாங்க.
எல்லாருக்கும் கணக்கு தெரியும்ன்னு சொல்ல முடியாது. பெரும்பாலான மக்கள் படிக்காத பாமர மக்கள்தான் இருப்பாங்க நிறைய சூழல்களில் இந்த மாதிரி நிறைய இடங்களில் ஏமாந்து போயிருவாங்க. பணத்தைச் சேர்க்கிறதுக்குச் சீட்டு போடுற மாதிரியே பீடியைச் சேர்க்கிறதுக்கும் சீட்டு பீடி இருக்கு. இவ்வாறு மக்களோட, பெண்களோட, எல்லா வாழ்வுச் சூழலோடும் பீடிச்சுத்து கலந்திருக்கிறதுனால அதைத் தாண்டி வெளிய போகனும்ன்னு நினைக்க முடியாது. நினைச்சாலும் அந்த உலகத்தைத் தாண்டி வெளிய போக அவங்க வாழ்வியலோட பொருளாதார சமூக பண்பாட்டுச் சூழல் அனுமதிக்காது. அதை எல்லாத்தையும் உடைக்க வேண்டிய பெரிய பொறுப்பு இருக்கிறது.
நாட்டார் வழக்காற்றியலைத் தெரிவு செய்தது எதனால்?
நான் இளங்கலை தமிழ் முடித்திருந்ததால் முதுகலை தமிழ்தான் படிக்கணும் என்று நினைந்திருந்தேன். சில சூழல் காரணமாக அதையும் தொடரமுடியாம இருந்தது. தெரிந்த தோழர் ஒருத்தர்தான் இந்த டிபார்மென்ட் போய்ப் பாத்துட்டு வாங்கன்னு சொன்னார். அரை மனதோடு போய்ப் பார்க்கும் போது அங்கிருந்த ஆசிரியர்கள் அணுகின முறையும், அந்தச் சூழலும் பிடிச்சிப் போகவே என்ன ஆனாலும் இங்கதான் படிக்கணும்னு நினைச்சிட்டுப் படிப்பைத் தொடர்ந்தேன். இளங்கலையில் மகளிர் கல்லூரியில படிச்சதுனால முதுகலை படிக்கும் போது என்னோட வகுப்புல நான் மட்டும்தான் ஒரே பெண்கிறதுனால ஆரம்பத்துல கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. அதுக்கப்புறம் அவங்க சொல்லிக் கொடுக்கிற விசயங்களும் நம்மை நடத்துற விதமும் இதுவரைப் பார்த்த கல்விக்கூடங்களோட கட்டமைப்பையும் ஆதிக்கத்தன்மையும் உடைச்சது. ஒரு பண்பாட்டுச் சூழலுக்குள்ள இருந்தாலுமே அதைத் தள்ளிவச்சி அதுக்குள்ள இருந்து என்னைப் புனிதப்படுத்திட்டே இருந்த என்னோட பார்வையை மாற்றி மனிதர்களை, மக்களை எப்படி அவங்க சூழலோடு அணுகணுங்கிற பண்பை நாட்டார் வழக்காற்றியல் துறைதான் எனக்குக் கற்றுக் கொடுத்தது. என்னோட கலை மக்களைப் பாடுறதில் துறைக்குப் பெரும் பங்குண்டு.
கடந்துவந்த கல்விக் கூடங்களில் எவ்விதமான ஆதிக்கத்தன்மையைச் சந்திக்க நேர்ந்தது? மக்களைப் பாடுறதில் துறையின் பெரும் பங்கு என்று எதைச் சொல்கிறீர்கள்?
ஐந்தாம் வகுப்பு வரைக்கும் ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில்தான் படித்தேன். சுற்று வட்டாரத்தில் பேரு வாங்கிய பள்ளியில் ஆசைப்பட்டு ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கும் அந்தப் பள்ளியைப் பார்த்ததும் பெரிய பிரமிப்புதான் ஏற்பட்டது. குடும்பச் சூழல் காரணமாகவும் என் புரிதல் திறன் காரணமாகவும் பெரிதாக என் மண்டையில் படிப்பு ஏறல. எனக்கு நினைவு தெரிந்த வரையில் 8 ஆம் வகுப்பு வரை நான் பெஞ்சில் உட்கார்ந்ததே இல்லை.
ஏதாவது வகுப்பில் மேல உட்கார அனுமதிக்கப்பட்டாலும் என் இடம் பாகம் பிரிக்கப்பட்டுதான் உட்கார அனுமதிக்கப்பட்டேன். என் பள்ளிக்காலங்களில் நிற, உடல் மற்றும் சாதியப் பாகுபாட்டினால் பெரிதும் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். நான் கறுப்பா இருக்கேன் அப்டின்றதுக்கா என்ன நிறைய பேர் தொடக்கூசுவாங்க, என்கிட்ட நிக்க மாட்டாங்க. அங்கிருந்த ஒரு சில ஆசிரியர்களும் அப்படியான ஆதிக்கத்தன்மையை என்கிட்ட காமிச்சிருக்காங்க. கவிதை எழுதி முதல் பரிசு வாங்கயில முன்னாடி நிக்க விடாமப் பின்னாடி துறத்துவிட்டுருக்காங்க. நா கவிதை எழுதுனேன்னு தெரிஞ்சா பரிசு கொடுக்காம இருந்திருக்காங்க. அதுக்காக நா கவிதை எழுதிப் படிக்கிற பசங்களுக்குக் கொடுத்துப் பரிசை வாங்கிக்கச் சொல்லுவேன்.
என்ன யாராவது கிண்டல் பண்றாங்கன்னு சொன்னா கூட ச்சீ நீ எதுக்கு இங்க வந்த உன் லீடரைப் போய் வரச் சொல்லுன்னு என்ன பாக்கிறதுக்கே அசிங்கப்படுவாங்க. என்ன கிண்டல் பண்றதே லீடர்தான்னு சொன்னாக்கூட கண்டுக்க மாட்டாங்க. இப்படிப் பள்ளிச் சூழலிலும், குடும்பச் சூழலிலும் புறக்கணிக்கப்பட்டதுனால அந்த நேரத்துல எழுத்துதான் எனக்கு ஆறுதலா இருந்தீச்சு. அந்தப் பள்ளியிலத்தான் முதன்முதலா என்னை நம்புன, அங்கீகரிச்ச கே.ஆர் மிஸூம் கிடைச்சாங்க. அவங்க என்னை நம்புறாங்கிறதுக்காகத்தான் எழுத ஆரம்பிச்சேன். இப்படியாக எல்லா நிலையிலும் உடைஞ்சிருந்தப்போ அவங்க கொடுத்த நம்பிக்கையிலதான் படிக்க ஆரம்பிச்சேன்.
அய்யாபுரத்தில் இருந்து சென்னைக்கு எப்போது இடம்பெயர்ந்தீர்கள்?
நாட்டார் வழக்காற்றியலில் ஒரு மாத காலம் விகடனில் இன்டர்ன்சிப் செய்வதற்காகத்தான் முதன்முதலாக சென்னைக்கு வந்தேன். சென்னையில் பெரிதாகத் தெரிந்தவர்களோ சொந்தகாரர்களோ இல்லாத நிலையில் கல்லூரியில் உடன் படித்த தோழியுடன் தங்கியிருந்தேன். அங்கு சில சாதியச் சிக்கல் உருவாகவே இனிமேல் சென்னையில் இருக்க முடியாத நிலை வந்தது. யாரிடமும் சொல்ல முடியாத விரக்தி நிலையில் அலைந்து கொண்டிருக்கும் போது முன்பின் அறியாத ஒரு அக்காவின் மூலம் ஓப்பன் ஹவுஸ் எனக்கு அறிமுகமானது. ஓப்பன் ஹவுஸ் என்றால் தெரிந்தவர்கள் யாரு வேணாலும் வரலாம் தங்கலாம். போய்ப் பார்த்ததில் பிடித்துப்போகவே பெரும் மன உளைச்சலிருந்த எனக்கு அங்கு வந்து போன ஒவ்வொரு மனிதரும் பெரும் நம்பிக்கையாய் இருந்தார்கள. ஓப்பன் ஹவுசில் இருந்த ஒவ்வொரு நாளும் எனக்கு கனவு போல இருந்தது. அது கொடுத்த அரவணைப்புதான் மறுபடியும் சென்னையை நோக்கிப் படையெடுக்க வைத்தது.
பீடித் தொழிலுக்கும் உங்களுக்குமான உறவு எத்தகையது?
நான் பொறந்ததே பீடித்தட்டுலன்னுதான் சொல்லுவேன். நான் மட்டுமல்ல அந்தச் சூழல்ல பொறக்கிற ஒவ்வொரு பிள்ளையும் பீடித்தட்டுக்குள்ளதான் பொறந்து வளரும். பள்ளிக்கூடம் போகுறப்போ வாங்கிட்டுப் போற ரெண்டு ரூவால இருக்கிற பீடிவாசத்தை மோந்துக்கிட்டே போவேன். எனைச் சுத்தியிருந்த அத்தனை மனிதர்களின் வாழ்க்கையும் தட்டைச் சுத்தித்தான் இருந்தது. இராத்திரி தெருவிளக்குல பீடிச்சுத்தும் போது பேசப்படுற கதைகளைக் கேட்பதுக்காகவே சுத்திப் பழகுனேன். எந்நேரமும் பீடிச்சுத்தி வலிக்கும் விரல்வலிகளை மறைக்கிறதுக்காகப் பாட்டுக் கேட்குறதையோ, பேசிக்கிட்டிருக்கதையோ இயல்பாக மாத்திக்கிட்டாங்க அதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது.
சின்ன பிள்ளையில பீடிச்சுத்தி விளையாடப் பிடிச்சிருந்தாலும் ஒரு கட்டதுக்கு மேல பீடிச்சுத்துதான் உன்னோட தகுதி இதுதான் என்று முடக்க ஆரம்பிச்சிருச்சு. பீடித்தட்டுக்குள்ள அமுங்கிடக் கூடாதுன்னு எதிர்க்கிறதுக்கான ஆயுதமா படிப்பை எடுத்துக்கிட்டேன். இருந்தாலும் இன்னமும் என் மேல வீசுற பீடிவாசனையை ஒதறுனாலும் அப்பத்தான் செய்யுது.
பீடி சுத்தும்போது கேட்ட கதைகள் எவ்விதமான புரிதலையும் தாக்கத்தையும் உண்டு பண்ணின?
நான் பொறந்ததுல இருந்து பெரும்பாலும் பீடிச்சுத்துதவங்களோடத்தான் இருக்கேன். சின்ன வயசில இருந்தே அவங்க பேசுத கதைகளைக் கேக்கதுக்காவே அவங்க கூடவே ஒட்டிக்கிட்டுப் போவோம். இராத்திரி நேரத்துல போய்ப் படுன்னு விரட்டி விட்டுருவாவ எல்லாரும். ஆனா அப்படி என்னத்தான் பேசுவாவங்கிற ஆவல் இருந்துக்கிட்டே இருக்கும்.
பீடிச்சுத்தையில பேசப்படுகிற கதைகளில் துக்கம், சந்தோசம், கையறு நிலைன்னு எல்லாமே இருக்கும். கை எவ்ளோ வேலை பார்த்தாலும் வாய் ஒருத்தருக்கும் ஒட்டிக்கிடக்காது. அப்படிப் பேசாம சுத்துனா சுத்து ஓடாதுன்னு சொல்லுவாவ. பீடிச் சுத்தையில அவங்க பேசுற கதைகள் எல்லாமே அவங்க வலியை மறக்கத்தான்னு ரொம்ப நாள் கழிச்சித்தான் தெரிஞ்சிது. பீடிச்சுத்தையில சொல்லப்பட்ட கதைகள்தான் எனக்குள்ள கதைகேட்க ஆர்வத்தையும் அதை எப்படி உள்வாங்குறதுங்கதையும் சொல்லிக் கொடுத்துச்சு.
வயக்காட்டுல களப்பு தெரியக்கூடாதுங்கதுக்காவ பாட்டுப் பாடுத மாறி பீடிச்சுத்துதவங்க அவங்க கதைகளைப் பரிமாறிக்கிடுதாங்க. பெரும்பாலும் எல்லாரும் குழுவா இருந்து சுத்ததுறதுனால அதுக்கான சூழல் இயல்பாகவே அமைஞ்சிடுதுன்னு நினைக்கிறேன். பீடிச்சுத்தையில சொல்லப்படுற ஒவ்வொரு கதையிலும் நிறைவேறாத ஏக்கங்களும் தாளமுடியாத துக்கம், கோவம்ன்னு அத்தனையும் வெளிப்படும். மனிதர்களோட வெவ்வேறு மனநிலைகளையும், பெண்களோட உளவியலாகவும் சமூகத்துக்காகவும் தங்களை எப்படி இழக்குறாங்க அதை இந்தச் சமூகச் சூழல் எவ்வாறு கட்டமைத்திருக்கிறது போன்ற அடிப்படியான கேள்விகளையும், என்னைய சுய பரிசோதிக்கிற பல பரிமாணங்களையும் அந்தக் கதைகள் தான் ஏற்படுத்தின.
கல்வியை ஆயுதமாக மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு எந்தப் புள்ளியில் தோன்றியது?
நம்ம என்ன பண்ணாலும் நம்ப மாட்டுறாங்களேங்கிற ஆதங்கம் மனசுக்குள்ள எப்பயும் ஓடிக்கிட்டே இருக்கும். நமக்குப் படிப்பு வரமாட்டதுன்னு காரணம் சொல்லித்தான நம்மள ஒதுக்கி வைக்கிறாங்க அந்தப் படிப்பை வச்சேதான் நம்ம மேல போய் உட்கார முடியும்னு தெரிஞ்சிக்கிட்டே வெறியோட படிக்க ஆரம்பிச்சேன். பீடித்தட்டுல மட்டுமில்ல வேற எந்த வேலை செஞ்சாலும் நா ஊருக்குள்ளதான் இருக்க வேண்டிய வரும். அதுனால வெளிய போனும்னா படிப்புதான் சரியா இருக்கும். படிப்பை வச்சி வெளிய போனா யாரும் கேள்வி கேட்க மாட்டாவன்னு நினைச்சிதான் படிக்க ஆரம்பிச்சேன்.
இன்னொன்னு நா படிக்கிற படிப்பும் எழுத்தும்தான் ஒரு கட்டத்துக்கு மேல எனக்கு ஆதரவா இருந்தீச்சு. நா நல்லா படிக்கப் படிக்க எல்லாரும் என்ன கொண்டாட ஆரம்பிச்சாங்க. நிறைய இடையூறுகள் வந்தாலும் படிப்புதான் என்ன வெவ்வேறு நிலைக்குக் கொண்டு போனதை நானே உணர்ந்தேன்.
என்ன எல்லாரும் இழிவா, கேவலமா பாத்தாங்க ஆனா யாரையும் அப்படி பாக்காவே கூடாதுன்னு தீர்மானத்துல இருந்தேன். அதை எனக்குப் படிப்பும் நா பட்ட கஷ்டமும்தான் சொல்லிக் கொடுத்துச்சு. அதுனால இப்போதும் சொல்றேன் கல்விதான் எல்லாத்துக்குமான பெரிய ஆயுதம். அந்தப் படிப்ப வச்சிதான் எல்லாரையும் எளிமையா அணுக முடியுது. நம்ம கற்கிற கல்வி ஒண்ணு தான் கட்டமைப்புகளையும் சமூகப் போலித்தனங்களையும் ஏற்றத் தாழ்வுகளையும நொறுக்கக் கூடிய ஆயுதமாக இருக்கும்.
‘பீடித் தட்டிலேயே மாண்டு கிடைக்கும் தாய்மார்களுக்கு’ என்று உங்கள் முதல் கவிதை நூலான உக்கிரக் கவிச்சியைச் சமர்ப்பணம் செய்த பின்புலமென்ன?
வேற ஊரு உலகம் இருக்குதுன்னே தெரியாம பீடித்தட்டுக்குள்ளே தினந்தினம் செத்துப்போற எத்தனையோ தாய்மார்களைப் பார்த்துட்டு இருக்கேன். எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாம அந்தத் தொழில்னால ஏன் சாகுறோம்னே தெரியாம நோய் வந்து செத்துட்டு இருக்கிற மக்களோட நிலை கண்கொண்டு பார்த்தும் எதுவுமே செய்ய முடியாம பக்கத்துல இருந்தே பறி கொடுக்கிற கையறு நிலையில்தான் இந்தப் புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்தேன்.
அம்மணக் குண்டியோடு நாண்டுக்கிட்ட பேச்சியக்கா யார்? சுடுகாட்டுப் பாதையில் குருதி சொட்டச் சொட்ட அவள் தூக்கிச் செல்லப்பட்டது எதனால்?
நான் சின்ன வயதிலிருந்தே பாட்டி தாத்தாவால் வளர்க்கப்பட்டதால் நிறைய கதைகள் தான் கேட்டு வளர்ந்தேன். ஊரில் தினந்தினம் நடக்கிற ஒவ்வொரு சம்பவத்துக்கும் அவர்கள் காலத்தில் நடந்த, தெரிந்த கதையைச் சொல்வது வழக்கம். அப்படிச் சொல்லப்பட்டதுதான் பேச்சியக்கா கதை. ஆத்துக்குக் குளிக்கப் போவயில கெடுத்துத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்க. வீட்டுக்குக் கொண்டு வராம கேவலம்ன்னு யாரு கண்ணுலையிலும் காட்டாம சுடுகாட்டுல எரிச்சிட்டாயிங்கன்னு அந்தக் கதையைச் சொல்றப்போ எங்க பாட்டியோட கையறு நிலையும் ஆற்றாமையும் எனக்குள்ள எழுந்த கேள்விகளும் இன்னமும் அப்படியேதான் இருக்குது.
எப்போவோ நடந்த உண்மை கதையா மாறிட்டு. இன்னைக்குக் கதையா இருக்கிறது நாளைக்கு ஒண்ணுமே இல்லாம மாறிடும். காலங்காலமா ஆணாதிக்கம் பெண்களை ஒடுக்கி ஏவுகின்ற அத்தனை வன்முறைகளையும் கடந்து போகுறதையே புரட்சின்னு பண்ணிட்டு இருக்க நம்மள்ல எத்தனை பேருக்கு வீடுகள்ல பெண்கள் சுதந்திரமா தூங்கிறதுக்கான சூழலைக் கட்டமைச்சிருக்கோம். அதையே பண்ணாம வீதில கோசம் எழுப்பி எந்த பிரயோஜனமும் இல்லை.
வீடுகளில்கூடப் பெண்கள் சுதந்திரமாகத் தூங்கும் கட்டமைப்பு இல்லை என்பது ஏன்?
பெண்கள் மீது நடத்தப்படுகிற வன்முறைகள் செய்திகள் வழியாக அறிவது குறைவுதான். அதையும் நம்ம உச்சிக் கொட்டிட்டு வீர வசனம் பேசிட்டு ஈசியா கடந்து போயிடுறோம். வீடுகளில் கணவனால் தினந்தினம் நடத்தப்படுற வன்முறைகள், சின்ன பிள்ளைகளுக்கு வீட்டிலுள்ள ஆண்களால் நிகழ்த்தப்படுற பாலியல் தொந்தரவுகள், சமூகத்தால் நடத்தப்படுற பாலியல் சீண்டல்கள் எந்நேரமும் பெண்கள் மீது வன்முறைகள் ரொம்ப எளிமையா ஏவப்பட்டுட்டுதான் இருக்கு.
கற்புங்கிற கற்பிதத்தை அவளுக்குள்ள திணிச்சு வெளியவும் சொல்ல முடியாமல் உள்ளயும் வச்சி தினந்தினமும் திணறி சாவுற எத்தனையோ பெண்களை நான் பாத்திருக்கேன். அவங்களோட வாழ்க்கையில நிம்மதிங்கிற ஒண்ணு கிடையாது. செய்யாத ஒரு தப்புக்காக தூக்கத்தை, வாழ்க்கையை, எல்லாத்தையும் இழந்து நிர்க்கதியா நிப்பாங்க.
ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கெடுத்தா அவனுக்குக் கொண்டாட்டம் பெருமை. ஆனால், கெடுக்கப்படுற பெண்ணோட உளவியல் என்னவா இருக்கும்? நீங்க புகுத்தி வச்சிருக்கிற இந்தச் சமூகத்தோட கற்பிதங்களைச் சுமந்து அலையிற அவளால எப்படி நிம்மதியா தூங்க முடியும். வீடுதான் பெண்களுக்கான காப்பிடம் பேசிப் பேசி அவளால எங்கயும் போக விடாத திணறத் திணற சாகடிக்கிற வேலையத்தான் இன்னமும் பண்ணிட்டு இருக்கோம்.
எனக்கு வீட்டுலயே இந்த மாதிரி பிரச்சனை இருக்குன்னு ஒரு பொண்ணு சொல்லக்கூடியதளவுக்கு இன்னும் பெண்களுக்கான சுதந்திரச் சூழல் வரல.
விகடனில் இன்டென்ஷிப் செய்த பருவ காலங்கள் குறித்து…
என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்த எனக்கு விகடனில் இன்டர்ன்ஷிப் செய்த காலங்கள்தான் எழுத்தின் வழியான பாதையையும் நம்பிக்கையும் கொடுத்தது. அதன் வழியாய்க் கிடைத்த மனிதர்கள் ஏகப்பட்டபேர் இன்னமும் துணையாய் நிற்கிறார்கள். வாழ்வின் அதிசயங்களில் எனக்குக் கிடைத்த ஒன்றாக விகடனைப் பார்க்கிறேன்.
எழுத வேண்டும் என்கிற உந்துதலையும் தேவையையும் எப்போது உணரத் தொடங்கினீர்கள்?
பள்ளியில் படிக்கிற காலத்திலே எழுதத் தொடங்கி விட்டேன். அந்தச் சூழலில் என் எழுத்தை நம்புறதுக்கான மனிதர்கள் இல்லாமலிருந்ததினால் எழுத்தின் மீதே வெறுப்பு உருவானது. உயிர் பொழைச்சி வாழ்ந்திரணும்ன்னு பசியோடு அலைஞ்சிட்டிருந்த சூழல்களில் எளக்காரமா விரட்டியடிக்கும்போது எதுவுமே செய்ய முடியாம இருந்த கையாலாகத்தன்மையும், எதுக்கும் லாயக்கில்லன்னு என்னைய நம்ப ஆரம்பிக்கும் போதுதான் எழுது இல்ல சாவுங்கிற தேவை எனக்கு உருவாகிச்சு. இந்தத் தொகுப்பில் உருவான கவிதைகளும் என்னை மீறி என்னைப் பொழக்க வைக்கிறதுக்காக எழுதப்பட்ட கவிதைகள் தான்.
கவிதையில் நெல்லை வட்டார வழக்கு மேலோங்கி உள்ளது! வட்டார வழக்கு கவிதையில் உண்டாக்கும் சாத்தியங்களாக எதைக் கருதுகிறீர்கள்?
வட்டார மொழிங்கிறது சமூகப் பண்பாட்டுச் சூழலிருந்து அதன் தன்மைக்கு ஏற்ப உருவாகுற ஒன்ன. அந்தச் சூழலில் வாழ்கிற மக்களைப் பத்தி எழுதும் போது அந்த வட்டார மொழியில் எழுதுவதுதான் நியாயம்னு நினைக்கிறேன். எல்லா கலை வடிவங்களை விடவும் கவிதைக்கு வட்டார வழக்கு பெருந்துணை புரியுதுன்னுதான் சொல்லலாம். ஏன்னா நம்ம சொல்கிற ஒரு வாக்கியத்தின் அர்த்தத்தை ஒரு வட்டாரச் சொல் விளக்கிட்டுப் போயிரும். ஆதாளிங்கிற அப்படியான முக்கியான ஒரு சொல்லாக நான் பார்க்கிறேன். என்னோட கவிதைக்கு நான் பயன்படுத்திருக்கிற வட்டாரச் சொல்தான் கவிதைக்கான சாரத்தையும் கவிதையை வெவ்வேறு கோணங்களில் உயிர்ப்பிக்கும்ன்னு நம்புறேன்.
உக்கிரக்கவிச்சியைப் படையல் செய்த உங்களின் குலதெய்வமான காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் எங்குள்ளது? படையலின் போது என்னவிதமான உணர்வுகள் எழுந்தன?
சொரிமுத்தைய்யனார் கோயில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு மேலே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காணி பழங்குடியினர் வாழும் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலானது குறிப்பிட்ட சாதியினரினால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் யாருக்கெல்லாம் குலதெய்வம் இல்லயோ அவர்கள் எந்தப் பாகுபாடுமின்றிக் குலதெய்வக் கோயிலாய் வழிபடலாம். ஊரில் நமக்கு எந்த நல்லது கெட்டு என்ன நடந்தாலும் சாமிக்குப் போய்ச் சொல்லிட்டு வருவது வழக்கமான ஒன்று. அதைப்போலதான் எஞ்சாமிக்குப் படைச்சிட்டு வந்தேன்.
நூல் வெளியீட்டின் போது இலக்கியப் பண்ணைக்குப் புதிதாக வந்திருக்கும் இந்துமதி என்று அரங்கத்தில் குறிப்பிட்டனர். ‘இலக்கியப் பண்ணை’ என்கிற சொல்லாடலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இலக்கியப் பண்ணை என்ற சொல்லை நான் ஆரோக்கியமான ஒன்றாகத்தான் பார்க்கிறேன். எழுத்து ஜனநாயகப்படுத்தப்பட்டபோதே எல்லோருக்குமான ஒன்றுதான் எழுத்து. இலக்கியம் எல்லோருக்குமான பண்ணை. அந்தப் பண்ணையை எந்தச் சூழலிலும் எழுதுகிற அத்தனை பேரும் நிச்சயம் படையெடுக்கத்தான் செய்வார்கள்.
வெந்தையக் கலரு சேலை கட்டின அம்மைக்கு மாத்துச் சேலை கட்டும் சூழல் இப்போதாவது வாய்த்திருக்கிறதா?
மாத்துச் சேலை கெட்டுவதற்கான பொருளாதாரச் சூழல் வாய்த்தாலும், கட்டமைப்பட்டிருக்கிற சமூகச்சூழல்தான் நமக்குப் பிரச்சனை. காலங்காலமாய்த் தன் குடும்பத்திற்காய் உழைக்கிற எத்தனை அம்மாக்களால் ஆசைப்பட்டபடி ஒரு சேலை வாங்க முடிகிறது. நமக்கெல்லாம் இதெல்லாம் தேவையான்னு அவளையே நம்ப வைக்கிற சாதுர்யம்தான் இருக்குதே தவிர எவ்வளவு உழைச்சாலும் குடும்பத்தைத் தவிர்த்து தான் ஆசைப்படுறத வாங்குறதுக்கான சூழல் இன்னமும் வரலன்னுதான் சொல்லுவேன். நம்ம அம்மைகளைச் சின்ன பிள்ளையைப் போல பிள்ளைகள் இருக்கயில உனக்கென்ன ஆசைன்னுதான சொல்லி வச்சிருக்கோம். அந்த உளவியல் கற்பிதங்களைத்தான் உடைக்கணும்.
தூமை பறித்தது பால்யத்தை மட்டும்தானா?
தூமை பறித்தது பால்யத்தை மட்டுமல்ல. வாழ்க்கையையும் சேர்த்துதான்னு நினைக்கிறேன். ஒன்னுமே அறியாத அந்த வயசுல தூமை தந்த வலியும், அது தந்த மன உளைச்சலும் குழந்தைத் தன்மையே கொன்னுட்டு. இன்னொரு பக்கம் தூமையால உடல் சார்ந்து பாதிக்கப்பட்டதுமில்லாம மனஉளைச்சல் சார்ந்தும் பாதிக்கப்படுறோம். ஒரு பொண்ணு கிட்டத்தட்ட தன்னோட முக்கால் வாசி வாழ்க்கையை அதைச் சகிச்சுதான் வாழவேண்டியதாக இருக்கு. தூமை இயற்கையானதுதான். ஆனால், ஆயுதமாகக் கொண்டுதான் பெண்கள் மீது எத்தனையோ கற்பிதங்கள் இன்னும் சுமத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. தூமை பால்யத்தை மட்டுமல்ல பெண்களின் வாழ்க்கையைப் புனிதங்களுக்குள் திணிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.
பேயாட்டத்தைக் கொண்டாட்டக் காலமாகக் கருதும் பின்புலச் சூழல் குறித்து…
பேயாட்டத்தைக் கொண்டாட்டக் காலமாகக் கருதுவது ஒரு விரக்தி நிலைதான். பொறந்ததுல இருந்து பொண்ணுங்கிறதுனால திணறத் திணற வீட்டுக்குள்ளே ஒடுக்கிக் கட்டவிழ்க்கப்படுகிற அத்தனை வன்முறைகளையும் அறியாமலே அறிஞ்சும் ஒண்ணுமே செய்ய முடியாம திணறி, மூச்சி முட்டி சாவுத ஒவ்வொருத்தவங்களையோட கையறுநிலையும்தான் குலவைப்போட்டுப் பேயாட்டத்தைக் கொண்டாடுறதுக்கான காரணம்.
நவீன இலக்கியத்தில் நாட்டாரியலின் பங்கு என்ன?
நவீன இலக்கத்தில் நாட்டாரியலின் பங்கு இப்போது அதிகரித்து இருக்கு என்றுதான் நினைக்கிறேன். அதைப்போல இலக்கியத்தில் நாட்டாரியலையோட தேவையும் அதிகரிக்கிறதைப் பார்க்க முடியுது. கவிதை, சிறுகதைன்னு எந்தவிதமான இலக்கியமாக இருந்தாலும் அது மக்களையும், மக்கள் வாழ்வுப் பண்பாட்டுச் சூழலையும் பேசுறதுனால முக்கியமான ஆவணமாக நாட்டாரியல் சார்ந்த இலக்கியங்கள் இருக்கிறது. அதைப்போல இந்த நவீன இலக்கியத்தில் வழியாக நாட்டாரியல் இலக்கியமானது வெகுசனங்களுக்கானதாக மாறுவதைக் காண முடிகிறது.
ரயில் பாதையோடும் வாய்க்காலோடும் பள்ளிக்கூடம் சென்றிருக்கிறீர்கள். உங்க ஊருக்கு இப்போது பேருந்து வசதி ஏற்பட்டிருக்கிறதா?
வாய்த்திருக்கிறது. ஊரிலிருந்து மினி பஸ் ஒன்றை அய்யாபுரம், வேதம்புதூர், அழகப்பபுரம் மூன்று ஊருக்கும் சேர்த்து பஸ் அமைத்து விட்டிருக்கிறார்கள். அரசுப் பேருந்து எப்போதாவது எட்டிப் பார்க்கும். மினி பஸ் மக்கர் பண்ணினால் நடை ராஜா கதைதான் எல்லோருக்கும்.
பீடித் தொழிலாளிகள் அடிப்படைக் கூலி, கூலி உயர்வு ஆகியவற்றிக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் சூழலில் நடுவண் அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு என்னவிதமான தாக்கத்தை உண்டுபண்ணியது?
தென்மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பீடித் தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தொழில் நலிவடைந்து வருவதாகக் கூறி சில கம்பெனிகள் காலி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி விதிப்பால் இந்தத் தொழில் இன்னும் நலிவடையத் தொடங்கியது. பீடித்தொழிலுக்கு சரக்கு மற்றும் சேவை வரியான 28 சதவிகிதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது முன்பு செலுத்திய வரியை விட இன்னும் 11.42 அதிகமான வரி. இதனால் பல கம்பெனிகள் காலி செய்கின்ற நிலையைப் பார்க்க முடிகிறது. இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் மக்களும் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பீடித்தொழிலை விட்டு மாற்றுத் தொழில் இல்லாததனால் அதற்குள்ளே இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்போது இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து கம்யூனிஸ்ட் அமைப்புகள் பலவும் போராடின. நடுவண் அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் பீடித்தொழில் முழுவதுமாகத்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
தொழிற்சாலைகள், எந்திரங்கள் அற்று முழுக்க முழுக்க மனித உழைப்பால் உருவாக்கப்படும் பீடிகள் மனித ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா?
நேரங்காலமில்லாமல் பீடித்தட்டிலே இருப்பதனால் நுரையீரல் பிரச்சனை, மார்பகப் புற்றுநோய், காசநோய்ன்னு ஏகப்பட்ட நோய் இந்தப் பீடிச்சுத்தினால் வருது. போன வருசம் கூட எங்கூர்ல ஒரே வருசத்துல ஐந்தாறு பேர் கேன்சர் வந்து செத்துப் போனாங்க. செத்ததுக்கு அப்பறந்தான் அந்த நோய்ன்னு தெரியுது. செத்துப்போனது எல்லாமே நல்லா சுத்தக்கூடிய ஆளுவதான். அதுலயே கிடக்கிறதுனால அந்தத் தூளையும் இலையையும் மோந்துகிட்டுச் செக்கடிச்சி அதுக்குள்ளேதான் சாவுறாவ. இந்த நோயின்னு தெரிஞ்சாக்கூட ஆஸ்பத்திரில போய்ப் பாக்க எல்லாத்துக்கும் வசதி இருக்கணும்ல அதுக்காவவே பயந்துட்டு இருந்துக்கிடுதாவ. பீடிச்சுத்துத தூளையே பக்கத்துல போனாலே காம்பும் அதுவே சுவாசிக்க முடியாது. அந்த நூலை உத்துப்பார்க்கிறதுனால கண்ணு தெரியாம வந்துரும். காசநோய்தான் பீடிச்சுத்ததுல பாதிப்பேருக்கு இருக்கும். அஞ்சி நிமிசம் பீடி குடிக்கிறவங்களுக்கே அவ்ளோ நோய் வரும்போது ஆயுசுக்கும் அதுலே கிடைக்கிறவங்களே என்னென்ன நோயெல்லாம் வரும்.
அதிகமாகப் பீடி சுற்றும் பெண்களை வரதட்சணை கூட வாங்காமல் திருமணம் செய்து கொள்வது, உழைப்புச் சுரண்டல்களுக்கான ஒத்திகைதான் திருமணம் என்கிற சந்தேகத்தை உண்டுபண்ணுகிறதே!?
நிச்சயமாக. காலங்காலமாகப் பெண்களோட உழைப்பை வருமானமில்லாம சுரண்டுவதாகத்தான் திருமண அமைப்பு இருக்கிறது. அதைப்போல பீடிச்சுத்தும் தொழிலிலும் அவர்கள் செய்கிற வேலைக்கு ஏற்ற அடிப்படையான கூலி கூட வழங்கப்படுவதில்லை. பீடிச்சுத்தும் தொழில் காலையில் எழுந்து நிறுவனங்களுக்குப் போய் வேலை பார்க்கிற வேலை இல்லை. குறிப்பிட்ட நேர அளவில்லாமல் எந்நேரமும் அதுக்குள்ளே இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கக்கூடிய தொழில். எங்கயும் செல்ல வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு இந்த வேலையையும் செய்து விடலாம். அதனாலே நல்லா பீடிச்சுத்துற ஒரு பொண்ணைத் திருமணம் செஞ்சிட்டு வந்துட்டா அவ வீட்டை விட்டு எங்கயும் போக மாட்டா, வீட்டைப் பார்த்துக்கிடுவா, சம்பாதிச்சும் கொட்டுவா, பிள்ளைகளைப் பாத்துக்கிடுவாங்கிற நிலையில்தான் அதிகமாகப் பீடிச்சுத்தும் பெண்களை வரதட்சணை வாங்காமலோ அல்லது குறைவான வரதட்சணை வாங்கியோ திருமணம் முடித்துக் கொண்டால் எளிமையாக அவ உழைப்பினைச் சுரண்டிக் கொள்ளலாம்.
வீட்டிற்குள் அடைத்து வைத்துக்கொள்ளலாம் என்ற ஆதிக்கத்தன்மையோடு ஆணாதிக்கச் சமூகம் திருமண அமைப்போடு கூடிய பீடிச்சுற்றை ஊக்குவிக்கிறது. பீடிச்சுற்றை வைத்தே பெண்களுக்குள்ளே ஒரு பெண்ணை மதிப்பிடும் தன்மையை உருவாக்கி வைத்திருக்கிறது. இதனால் பெண்கள் தங்களுடைய உழைப்பு சுரண்டப்படுகிறது என்ற அறியாமையிலே இருக்கிறார்கள். இன்றைக்கும் பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும் உனக்கு பீடிச்சுத்த தெரியுமான்னு கேட்டு தான் திருமணம் செய்து வைக்கிறார்கள். கைத்தொழில் ஒண்ணு கத்து வைக்கிறதுல ஒண்ணும் தப்பில்லையே என்ற திரும்பத் திரும்பப் பெண்களுக்குள்ளே இத்தொழிலைத் திணிப்பதிலே மும்முரமாக இருக்கிறார்கள். படிச்சி பொருளாதாரச் சுதந்திரம் அடைந்து வெளிய வரணும்னு நினைச்சாலும் வீட்டுக்குள்ளே அடைத்து பெண்களோட உழைப்பைச் சுரண்டி முடக்குற நிலைதான் இருக்கிறது.
லீவுச் சம்பளம், போனஸ் போன்றவற்றை பல நிறுவனங்கள் வழங்குவதில்லை என்றும் ஒரு சிலர் பாதியைக் கொடுத்து விட்டு முழுதாகக் கொடுத்தது போன்று தொழிலாளர்களிடம் கையொப்பம் வாங்கி ஏமாற்றுவதாகவும் சொல்லப்படுகிறதே?!
அது உண்மைதான். பலர் ஊர்களில் இன்னும் அடிப்படையான கூலிக் கேட்டு பெண்கள் போராட்டங்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஒன்று நடப்பது கூட இங்கு யாருக்கும் தெரிவதில்லை. இப்போது மாஞ்சோலை மக்களிடம் கம்பெனி நஷ்டத்தில் ஓடுவதாகக் கூறி ஏமாற்றுவதைப் போல பீடிக் கம்பெனிகளும் யாருக்கும் தெரியாமல் கம்பெனியை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். அந்த கம்பெனியில் சுற்றும் மக்களுக்கு கம்பெனி பெயரையும், இவர்களுக்கும் கம்பெனிக்கும் இடையில் தொடர்பிலிருக்கும் மற்றைய ஊழியர்களைத் தவிர மற்றையவர்கள் யாரையும் தெரிந்திருக்காது. அந்த கம்பெனியின் முதன்மை அலுவலகம் கூட எங்கயிருக்கிறதென்று தெரியாமல் இருப்பார்கள். இந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு கம்பெனியைக் காலி செய்து எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இதனால் அவர்கள் வேலை பார்த்த சம்பளம், போனஸ் போன்ற எதுவுமே வழங்காமல் ஏமாற்றிவிட்டுப் போய் விடுவார்கள். மக்கள் ஊரூரா தேடி கம்பெனியைக் கண்டுபிடித்துப் போய்க் கேட்டாலும் அது சரியா இல்ல, இவ்வளவு தான் போனஸ் உங்களுக்கு, இவ்வளவு போனஸ் வந்தால் எனக்கு இவ்வளவு கமிஷன் தரணும் எனப் பல முறை அலைக்கழித்து மக்கள் உழைப்பை உறிஞ்சுவார்கள். ஒரு சில கம்பெனி இவ்வளவுதான் போனஸ் என்று பாதிப் பணத்தைக் கொடுத்துவிட்டு ஏமாற்றி விடுவார்கள். இது தெரியாத மக்கள் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். விவரம் தெரிந்தவர்கள் போய்க் கேட்டாலும் சமாளிக்கும் நிகழ்வுகளும் நடக்கும். இதற்கு மேல் யார்கிட்ட போய் சொல்லன்னு அப்படியே மக்கள் இருந்திருவார்கள்.
மக்களின் அறியாமையைப் போக்க என்ன வழிமுறைகள் இருப்பதாக நினைக்கிறீங்க? மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் ஒடுக்குமுறைகளும் அரசின் அதிகாரிகளின் கவனத்திற்கு இதுவரை சென்றதில்லையா?
இது எவ்வளவு பெரிய அநீதி என்பதை மக்களிடம் தொடர்ந்து உரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் மக்களின் அறியாமையைப் போக்குவதற்கான வழிமுறை. வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள்ளே திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் பொதுவான உரையாடல் ஒன்றை நிகழ்த்தி மக்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பார்த்துத் தொடர்ந்து அவர்களிடம் உரையாடுவது அவசியம் என நினைக்கிறேன். அரசின் அதிகாரிகளும் மக்களை நேரில் சந்தித்துப் பேசியதே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
கவிஞர், பத்திரிகையாளர். இயற்பெயர் ராச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழே இயங்கும் ஜனசக்தி வார இதழில் பணிபுரிந்து வருகிறார். வேர்முனைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலையம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ‘பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்’ எனும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகி உள்ளன. ‘மாமிச அம்புலி’ என்னும் சிறுகதை அகழ் இணைய இதழில் எழுதியுள்ளார்.








Leave a Reply