நுண்கதை :
மரணித்த இரண்டு ஆண்டுகளின்பின் மிகுந்த அலைக்கழிப்பின் ஊடே வீட்டினுள் நுழைந்தாள் / நுழைந்தான்.
♦
முன்பு இருந்ததைவிட எல்லாம் சற்று ஒழுங்கில் இருப்பதைப் போலத் தோன்றியது.
♦
பெற்றோரையும் குழந்தைகளையும் பார்த்துக் கடந்து தான் எப்போதும் உறங்கும் கயிற்றுக் கட்டிலைப் பார்க்கையில் இரு உடல்கள் முழுக்கப் போர்வையால் தங்களை மறைத்தபடி உறங்கிக்கொண்டிருந்தன.
♦
பிறகு –
அதே அலைக்கழிப்புடன் சப்தமின்றி வெளியேறிவிட்டாள் / வெளியேறிவிட்டான்.
குறுங்கதை :
எவ்வளவோ தயக்கங்களின் பின்னர் அந்த நாள் வந்துவிட்டது. இனியும் முடியாது. குழந்தைகளைப் பார்த்தே ஆகவேண்டும். அதை நினைக்கும்போதே மனம் பூரித்தது. அதேவேளை சொல்ல இயலாத அளவிற்குத் துன்பம் மனதை அறுத்தது. ஒட்டுமொத்த உருவும் இற்று அக்கக்காய்ப் பிரிவதைப் போன்ற வாதை தோன்றியது.
இரு ஆண்டுகள். ஆம். முழுதாய் முடிந்துவிட்டன இரு ஆண்டுகள். இதோ, வாசலில் நிற்கும் முருங்கையும் வேம்பும் பூவரசும் கொய்யாவும் செழித்திருந்தன. நொச்சி கூட சளசளவெனக் காற்றில் அசைகிறது.
கசியும் காவிரி நீர்க் குழாயும் வாசலருகே இடிந்திருந்த இரண்டாவது படியும் சீர் செய்யப்பட்டுள்ளன. புதியதாகச் சில பூந்தொட்டிகள் கோழிகள் சீண்டாதபடி கம்பிகளுக்குள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
அப்பனின் குறட்டையொலி வரவேற்க, நுழைந்தாயிற்று. பெற்றோரையும் குழந்தைகளையும் பார்த்துக் கடந்து தான் எப்போதும் உறங்கும் கயிற்றுக் கட்டிலைத் தேட, சாத்தப்பட்ட படுக்கை அறை தென்படுகிறது.
வீட்டை மீள ஒருமுறை ஏக்கத்துடன் பார்க்கையில் முன்பு இருந்ததைவிட எல்லாம் சற்று ஒழுங்கில் இருப்பதைப் போலத் தோன்றியது.
பதற்றத்துடனும் ஏக்கத்துடனும் அறையில் நுழைந்து பார்க்கையில் முழுக்கத் தங்களைப் போர்வையால் மறைத்தபடி, கயிற்றுக் கட்டிலில் இரு உடல்கள் உறங்கிக் கொண்டிருந்தன.
சிறுகதை :
முன்பெல்லாம் வாசல் வழியாகத்தான் உள்ளே நுழைய இயலும் என்ற எண்ணம் வந்தபோது எனக்குள்ளேயே சிரித்துக்கொள்ள முடிந்தது. உள்ளபடி சொல்வதானால் இங்கு வருவதற்கு நான் ஏன் இருளைத் தேர்ந்தெடுத்தேன் என்பதே தெரியவில்லை. பல நாட்களாக இருந்த மனப் புழுக்கம் இன்றுடன் முடியப் போகிறது. வீட்டைச் சுற்றியுள்ள வலையாலான கம்பி வேலிக்குள் வந்தாயிற்று.
கொய்யா மரத்தில் வௌவால்கள் மொய்க்கின்றன. இந்தக் கன்று புதுக்கோட்டையில் ஒரு திருமண விழாவில் வழங்கப்பட்டதுதானே! ஆமாம்! ஆமாம்!. நம் நினைவு சரிதான். நாட்டு வகை. சிவப்புக் கொய்யா. நற்சுவை. என் மரமே! உன் கொழுந்தில் ஒரு முத்தமிட்டுக்கொள்ளவா?
மன்னித்துவிடு கொடுக்காய்ப்புளி மரமே! இளசில் உன் நடுத்தண்டு இரண்டாகப் பிரிந்தபோதே சேர்த்துவைத்துக் கட்டுப்போட எண்ணினேன். போதாத காலம்; என் சோம்பல் எல்லாவற்றையும் கெடுத்தது. நல்லவேளையாக நீ நலமுடன் வளர்ந்து நிற்கிறாய்.
ரோசாவும் வாழையும் நொச்சியும் மரமல்லியும் காட்டு ஈச்சையும் சற்று வளர்ந்திருக்கின்றன. முன்பெல்லாம் உங்களுக்கென ஒரு மணித்துளிகூட ஒதுக்காமல் போனதற்காக வருந்துகிறேன். மன்னியுங்கள்.
சிதைந்திருந்த வாயில்படி பூசப்பட்டுள்ளது. மேற்சுவரில் எரியாத பச்சை வண்ண விளக்குகள் இரண்டும் தண்மையாக ஒளி வீசுகின்றன. இந்தப் பல்லிகள் எப்போதுதான் ஓய்வெடுக்கும் என்பதே தெரியவில்லை.
நான் பல ஆண்டுகளாகப் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் நின்றுகொண்டிருக்கிறது. தூசுக்கள் சேராமல் இருப்பதைப் பார்த்தால் இப்போதும் இது பயன்பாட்டில் இருப்பதை உணர முடிகிறது.
அட! என் அப்பனே! இப்போதுமா உன் குறட்டை கட்டுக்குள் வரவில்லை. கதவுகள் அடைத்திருக்கும்போதும் வாசல்வரை தெளிவாகக் கேட்கிறது.
தோள்வரை தவ்வி தாவானை நக்கும் நாய் அதீதக் கோபத்தில் முன்னங்கால் நகங்களால் தரையைக் கீறி ‘உர் உர்‘ என்கிறது. இதோ, செல்லமாகக் கதகதப்பான அதன் உடலைத் தடவுகிறேன். சற்றே நெளிந்தபடி பின்னகர்ந்து மீண்டும் உறுமுகிறது. பாவம், அவன்தான் என்ன செய்வான்!.
செருப்புகள் இருக்கும் இடம் சுத்தமாக இருப்பதுடன் அவை வைப்பதற்காகச் சிறிய அலமாரியும் வைக்கப்பட்டிருக்கிறது.
அட! என் அம்மாவே! இன்னுமா என்னை உணர்ந்துகொள்ளவில்லை! இந்நேரம் நீ விழித்திருந்தால் தண்ணீர் வேண்டுமா என்றாவது கேட்டிருப்பாயே! பாவம். நீயும் என்ன செய்வாய். நாளெல்லாம் உழைத்து உழைத்து அசதியில் கிடக்கிறாய். நீ உறங்கு தாயே.
செல்லப் பூனைகளா! உங்களுக்குமா என்னைப் புரியவில்லை. உண்மையில் சோதனைதான். அட! கருப்பியே! நீ நான்கினை ஈன்றாயா என்ன! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வாலை விடைத்து மயிர்கள் புடைத்துத் திரிகிறதே. நன்றாக வளருங்கள் தங்கங்களே.
இதென்ன புதிதாக! சோஃபாவிற்கு மேலே உறை போடப்பட்டுள்ளது. அந்தக் கத்தரி வண்ணத்தின் மேல் இது அவ்வளவு பொருத்தமாக இல்லாதது போலத் தோன்றுகிறது. யாருடைய யோசனையாக இருக்கும். ஒருவேளை இந்தக் குட்டிப் பூனைகளின் சேட்டைகளைச் சமாளிக்க இப்படியொரு உத்தியைக் கையாண்டிருக்க வேண்டும். ஆம். உண்மைதான். குட்டிகள் கழிந்துவைத்துவிட்டால் சோஃபாவைத் தூக்கித் துவைக்க இயலாதுதானே!
புத்தகங்களே! யார் உங்களை இப்படிப் பளபளப்பான நெகிழிக் காகிதத்துள் அடைத்து வைத்தது. ஒன்றை எடுத்துப் பார்க்கிறேன். நக்கீரனின் காடோடி வருகிறது. பிலியவ் தாத்தன் வெள்ளத்தில் நீந்துகிறான். என் தாத்தனே! நான் வாழவேண்டிய வாழ்வை வாழ்கிறவனே. உன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது கிழவா’ என்கிறேன். காற்றில் தாள்கள் சடசடக்கின்றன. வரிசையில் ஜெயகாந்தனின் ‘குறுநாவல்கள்’ தொகுதி ஒன்றும், கி.கண்ணனின் ‘சோளம் என்கிற பேத்தியும்’, ஜி.கார்ல் மார்க்ஸின் ‘தீம்புனலும்’, விபூதிபூசனின் ‘அபராஜிதா – வெல்லப்பட முடியாதவனும்’ இருக்கின்றன. இருபெரும் சுவர் அலமாரிகளில் இரட்டை அடுக்காக உங்களைக் காண்பதில்தான் எத்தனை சுகம். தூசற உங்களை ஒருநாளும் கையால் தொட்டதில்லை. இப்போது நீங்கள் சற்று நிம்மதியாக இருப்பீர் என நம்புகிறேன்.
நான் பயன்படுத்திய தட்டு இருக்கிறது. அதுவும் மினுமினுப்புடன். ஆச்சரியம்தான். இவர்களுக்குத்தான் நம்மீது எத்தனை அன்பு.
இது, அந்த நாட்காட்டியிலிருந்து வெட்டி ஒட்டப்பட்ட ஓவியம்தானே! லேமினேட் செய்யப்பட்டுள்ளது. உற்றுப் பார்க்கிறேன். வண்ணக் கலவைகள் உறுத்தவில்லை. பறவைகளும் கடலும் கப்பலும் தத்தளித்தபடியே மிதக்கின்றன.
மின்விசிறி ஓடுகையில் கேட்குமே அந்த ‘டகடக’ சப்தம். அடேய்! எங்கே ஒளிந்துள்ளாய் நீ! உன்னை மீளக் கேட்க வேண்டுமென உள்ளது. ஒருமுறை வந்து சப்தமிட்டுவிட்டுப் போ என்கிறேன். பலனில்லை.
பெரிய வெங்காயமும் கொத்துமல்லியும் புதினாவும் வெட்டப் பயன்படும் கட்டையும் கத்தியும் தனித்தனியே கழுவி காயவைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் இரண்டும் என் அம்மாவுடன் படுத்து ஆழ்ந்து உறங்குகின்றனர். இதோ, அருகில் அமர்ந்து அவர்களின் கன்னங்களில் மாற்றி மாற்றி முத்தமிடுகிறேன். பெரியவள் நன்றாக வளர்ந்துவிட்டாள். மூக்கு மேலும் வளைவாக இருப்பது அவள் முகத்திற்கு எடுப்பாக உள்ளது. கைகள் அச்சுப் பிசகாமல் அப்படியே என்னைப் போன்றே உள்ளன. கண்களில் நீர் கசிகிறது. சின்னவள் சற்றே சதைப் போட்டிருக்கிறாள். அட! என் தங்கமேயென நெற்றியில் முத்தமிடுகிறேன். கைகளால் கழுத்தைக் கட்ட முயன்று உறங்கிப் போகிறாள்.
நிலைக் கண்ணாடியில் பார்க்கிறேன். எனது உருவம்! சரி. அதைப்பற்றிப் பேச ஏதுமில்லை. விட்டுவிடலாம். அப்பா சற்றுத் தளர்ந்திருக்கிறார். உடல் மெலிந்திருக்கிறது. மிக நீண்ட நாட்களின் பின்னர் அம்மாப்பாவின் கால்களைத்தொட்டு வணங்குகிறேன். மனம் சற்று இலகுவாகிறது.
இப்போது பார்க்கையில், ‘முன்னர் இருந்ததைவிட ஒட்டுமொத்த வீடும் நன்றாகவே இருக்கிறது’. ஆம். கொஞ்சம் பெருமையாகவும் உள்ளது.
மிச்சம் இருப்பது அந்தப் படுக்கை அறை மட்டுதான். கயிற்றுக் கட்டில் வெளியே இல்லாததால் அறையில்தான் உறங்கிக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கணம் வரவே கூடாது என்றுதான் இத்தனை நாட்கள் தவிர்த்திருந்தேன். எப்படி அந்த முகத்தில் விழிப்பது? இடையில் விட்டுப் போனதற்காக தூ என முகத்தில் உமிழ்ந்துவிட்டால்! இல்லை இல்லை அப்படிச் செய்யச் சாத்தியமில்லை. துணிந்தாயிற்று. வேறு வழியில்லை. பார்த்துவிடுவோம் என்கிற எண்ணத்தில் படுக்கை அறையில் நுழைகிறேன். கட்டிலில் சீராக மூச்சுவிட்டபடி ஒரே போர்வைக்குள் இரு உருவங்கள் இருக்கின்றன. மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. பதற்றத்தில் சுவரைப் பற்றிக்கொள்கிறேன். போதும்! போதும்! என்றவாறு அறையைவிட்டு வெளியேறுகிறேன்.
வாசலருகில், மாலையிடப்பட்டு நெற்றியில் சந்தனமும் அதன் நடுவே குங்குமப் பொட்டும் வைக்கப்பட்ட பெரிய சட்டகத்தாலான எனது புகைப்படம் என்னைப் பார்த்துச் சிரித்தபடியுள்ளது.
Art : Liana Fourmouzi








Leave a Reply