அலைந்து, பரவி நிமிரும் தீயின் உக்கிரத்தில், ஒரு பெரும் வானம் சமாதானமாகிக் கொள்கின்றது – தீ.
அ
மிக நீண்ட வரிசை….
நிற்பவர்கள் மத்தியில்
ஒரு தீ விழித்துக்கொள்கிறது
வளைத்து, தள்ளிக் கொண்டு போகாத
அதன் தழலொளியில்
நிறைய அசுத்தங்கள்
வரிசைக் கட்டி நின்றன.
ஆ
ஏராளமான நிலப்படுக்கைகள்
இருள் போர்த்திக் கொண்டுள்ளன.
ஒரு தூய சாந்தம் நிலவும்
அந்த இருளை
நிமிடத்திற்கு நிமிடம்
வாயில்லாத அக்கினியொன்று
விழுங்குகின்றது.
இ
களைப்பாகயிருக்கின்றது
கபளீகரச் சந்தைப் பொருட்களைப் பார்த்து
அலுப்பாகயிருக்கின்றது
சாம்பல் நறுமணத்தை
மெதுவாக மூச்சிழுத்தேன்
தீயின் பொசுங்கலில்
ஓசையற்ற சந்தை தென்பட்டது.
ஈ
காலப்பெயர்ச்சி அனைவருக்கும்
பரிசுப் பொருட்களைத் தருவதில்லை
விடியலுக்கு முன்பே விழித்துக்கொண்டு
வெளிச்சத்தைத் தேடும் போது
வறண்ட நிலத்தின் தாகம் போல
தீ தன்னைப் பாய்ச்சுகின்றது.
உ
இருள் நன்று….
மறதியின் இருளில்தான்
ஞாபக வெளிச்சமாக
ஒரு சுடர் ஒளிர்கின்றது.
ஊ
கரடு முரடாக முறுக்கேறிக் கிடந்த சாலையில்
மந்தமான நண்பகல் மௌனமாகிக் கிடந்தது
போற போக்குல
ஒரு குரல்
அங்க தீப்பிடிச்சிருச்சாம் என்றதில்,
எங்க? எங்க?
எனக் கேட்ட நெடுஞ்சத்தத்தில்
சும்மா தான சொன்ன….
என்று
தீ கண் சிமிட்டிச் சிரித்தது.
எ
எவ்வளவு எவ்வளவு முகங்கள்
விநோதமாயிருக்கின்றன.
அதனெங்கும்
ஆக்கிரமிப்புகள்.
ஒவ்வொரு வாசலுக்குள்ளேயும் பிரவேசித்த
தீயின் உரப்பொலியில்
செஞ்சாந்து முகங்கள்.








Leave a Reply