ஆங்கில மூலம்: எலிஸபெத் பவுயென்
தமிழில்: எழில் சின்னதம்பி
லண்டனில் நாள் முழுவதும் அலைந்து திரிந்த பிறகு, திருமதி. டிரோவர் அந்தப் பிற்பகற்பொழுதில் மூடிக்கிடந்த தனது வீட்டிற்குச் சென்று, சில பொருட்களை எடுத்துச் செல்ல விரும்பினாள். சில பொருட்கள் அவளுக்குச் சொந்தமானவை; மற்றும் சில அவளுடைய குடும்பத்தினருக்குச் சொந்தமானவை. அவர்கள் இப்போதெல்லாம் கிராமப்புறத்தில் குடியேறி, அந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு விட்டனர். புழுக்கமான ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதி அது. லேசான தூரல் விழும் ஒரு நாளாகவும் அன்றைய பொழுது இருந்தது. புழுக்கம் நிறைந்த அந்த மாலை நேரத்தில், தெருவோர மரங்களின் மீது சூரிய ஒளிபட்டு மின்னியது. கருமை நிறத்தில் குவிந்திருந்த மேகங்களின் பின்னணியில் உடைந்த புகைபோக்கிகளும் மேற்புறச் சுவர்களும் தெளிவாகத் தெரிந்தன. ஒரு காலத்தில் அவளுக்கு நன்கு பரிச்சயமான அந்தத் தெருவில் ஒரு விசித்திரமான, அறிமுகமில்லாத அமைதி சூழ்ந்திருந்தது – எந்தவொரு மனித நடமாட்டமும் இல்லாத பாதையைப் போல. ஒரு பூனை, வேலிகளுக்குள் நுழைந்து வெளியே வந்தது; ஆனால் திருமதி. டிரோவர் திரும்பி வருவதை எந்த மனிதக் கண்ணும் கவனிக்கவில்லை. இரு கைகளிலும் வைத்திருந்த பொதிகளை ஒரு கைக்கு மாற்றிக் கொண்டாள். மறுகையால் அவள் தன் வீட்டுக் கதவின் சாவித் துவாரத்திற்குள் சாவியை மெதுவாகச் செருகி, பூட்டைத் திறக்க முயன்றாள். பின்னர் வளைந்துபோன கதவை முழங்காலால் ஓர் உதை கொடுத்துத் திறந்தாள். அவள் உள்ளே சென்றதும், வீட்டிற்குள் அடைபட்டிருந்த செயலற்றுப்போன காற்று அவளை வரவேற்க வெளியே வந்தது.
மாடிப் படிகளுக்கருகே இருந்த சன்னல், பலகையால் அடைக்கப்பட்டிருந்ததால், கூடத்திற்குள் வெளிச்சம் வரவில்லை. ஆனால் ஓர் அறைக்கதவு சற்றே திறந்திருந்ததை அவளால் பார்க்க முடிந்தது. எனவே அவள் விரைவாக அந்த அறைக்குள் சென்று, அங்கு இருந்த பெரிய சன்னலைத் திறந்து, திரைச்சீலைகளை விலக்கினாள். வீட்டிற்குப் பழக்கப்பட்டவளாகச் சுற்றுமுற்றும் பார்த்தவள், தான் கண்ட பல விசயங்களால் குழப்பமடைந்தாள். அவளுடைய நீண்ட காலப் பழக்கவழக்கங்களின் தடங்கள் – வெள்ளைப் பளிங்குப் புகைபோக்கியின் மேல் மஞ்சள் நிறப் புகை படிந்திருப்பதும், எழுதும் மேசையின் மேல் ஒரு பூச்சாடி ஏற்படுத்திய வட்டமான கறையும், கதவை அகலமாகத் திறக்கும்போது, அதன் பீங்கான் கைப்பிடி சுவரில் பட்டு எப்போதும் ஒரு புள்ளி இருந்ததையும் கண்டாள். பத்திரப்படுத்தி வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பியானோ, அதன் இடத்தில் பூனையின் நகங்கள் போன்ற தடயங்களை விட்டுச் சென்றிருந்தது. அதிகத் தூசி படிந்திராவிட்டாலும், ஒவ்வொரு பொருளிலும் மற்றொரு வகையான படலம் படிந்திருந்தது; மேலும், ஒரே ஒரு துவாரமாகப் புகைபோக்கி இருந்ததால், முழு வரவேற்பறையும் குளிர்ச்சியான புகையின் வாசனையை வெளியிட்டது. திருமதி. டிரோவர் தனது பொதிகளை, எழுதும் மேசையின் மீது வைத்துவிட்டு, மேல் தளத்திற்குச் செல்ல அறையை விட்டு வெளியேறினாள்; அவளுக்குத் தேவைப்பட்ட பொருட்கள் படுக்கையறையிலிருந்த ஒரு பெட்டகத்தில் இருந்தன.
அவள் வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆவலாக இருந்தாள். அவளும் சில அண்டை வீட்டாரும் சேர்ந்து, வீட்டைக் கண்கணிப்பதற்குப் பகுதிநேரக் கண்காணிப்பாளன் ஒருவனை அமர்த்தியிருந்தனர். ஆனால் அவன் இந்த வாரம் விடுமுறையில் இருந்தான்; இன்னும் திரும்பி வரவில்லை என்பது அவளுக்குத் தெரியும். நல்ல நேரத்தில்கூட அவன் அடிக்கடி எட்டிப் பார்ப்பதில்லை. அவன் மீது அவளுக்கு எப்போதும் நல்ல நம்பிக்கை இல்லை. கடந்த முறை குண்டுவெடிப்பால் ஏற்பட்ட சில விரிசல்கள் கட்டடத்தில் இருந்தன. தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும் அவற்றைப் பார்ப்பதற்கு அவள் ஆர்வமாக இருந்தாள். ஓர் ஒளிக்கதிர் இப்போது கூடத்தின் குறுக்கே விழுந்தது. நின்று, கூடத்து மேசையை அவள் உற்றுப் பார்த்தாள். அதன் மேல் அவளுக்கு ஒரு கடிதம் இருந்தது.
வீட்டுக் கண்காணிப்பாளன் திரும்பி வந்திருக்க வேண்டும் என்று முதலில் எண்ணினாள்; ஆனால், வீடு முற்றிலுமாய் மூடப்பட்டிருந்தபோது கடிதத்தை யார் பெட்டியில் போட்டிருக்க முடியும்? இது ஒரு சுற்றறிக்கை அல்ல; இது ஒரு ரசீதுகூட அல்ல. மேலும், அஞ்சல் அலுவலகத்தில் சொல்லி, அவளுக்காக வரும் அனைத்துக் கடிதங்களையும் கிராமத்தில் உள்ள தனது முகவரிக்குத் திருப்பி அனுப்ப ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தாள். வீட்டுக் கண்காணிப்பாளனுக்கு (அவன் திரும்பி வந்திருந்தாலும் கூட) இன்று அவள் லண்டனில் இருப்பாளென்று தெரியாது. அவளுடைய வருகை ஒரு எதிர்பாராத ஆச்சரியமான வருகையாகத்தான் திட்டமிடப்பட்டது. எனவே இந்தக் கடிதத்தின் விசயத்தில் அவனது கவனக்குறைவும் அதைத் தூசியில் படிந்து காத்திருக்கச் செய்ததும் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தின. அந்த எரிச்சலுடன், முத்திரை இல்லாத அந்தக் கடிதத்தை எடுத்தாள். அது முக்கியமான கடிதமாக இருக்க முடியாது; முக்கியமான கடிதம் என்றால் அனுப்பியவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும். அவள் கடிதத்தைப் படிக்காமல் அதை எடுத்துக் கொண்டு விரைவாக மாடியிலுள்ள அறைக்குச் சென்றாள். அந்த அறை, தோட்டத்தைப் பார்க்கும் வண்ணம் அமைந்திருந்தது. மரங்களும் காடுபோல வளர்ந்த புல்வெளிகளும் ஏற்கனவே புகைபோல் இருளால் மூடப்பட்டிருந்தன. கடிதத்தைப் பார்க்க அவளுக்கு மீண்டும் தயக்கம் ஏற்பட்டது. ஏனென்றால், யாரோ அவளது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் தலையிட்டிருப்பதாகவும், அவளது பழக்கங்களை மதியாமல் அலட்சியமாக நடந்துகொண்டிருப்பதாகவும் உணர்ந்தாள். இருப்பினும், மழை பெய்யத் தொடங்குவதற்கு முன் நிலவும் பதட்டத்தில், அவள் அதை வாசித்தாள். சிலவரிகளே அதில் எழுதப்பட்டிருந்தன:
“அன்புள்ள கேத்லீன், இன்று நமது ஆண்டுவிழா; நாம் சொன்ன நாள் என்பதை நீ மறந்திருக்க மாட்டாய். ஆண்டுகள் மெதுவாகவும் வேகமாகவும் கடந்துவிட்டன. எதுவும் மாறவில்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, உன் வாக்குறுதியைக் காப்பாற்றுவாய் என்று நான் நம்புகிறேன். நீ லண்டனை விட்டு வெளியேறியதைப் பார்த்து நான் வருத்தப்பட்டேன், ஆனால் நீ சரியான நேரத்தில் திரும்பி வருவாய் என்பதால் நான் திருப்தி அடைந்தேன். எனவே, ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் நீ என்னை எதிர்பார்க்கலாம். அதுவரை… கே.”
திருமதி. டிரோவர் தேதியைப் பார்த்தாள்: அது இன்றைய தேதியிடப் பட்டிருந்தது. அவள் கடிதத்தைப் படுக்கைமேல் போட்டாள்; பின்னர் மீண்டும் அந்தக் கடிதத்தை எடுத்து வாசித்தாள். சாயம் பூசியிருந்த அவளது உதடுகள் வெளிர ஆரம்பித்தன. அவளது முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து, கண்ணாடியை நோக்கிச் சென்றாள்; அதில் ஒரு தெளிவான பகுதியைத் துடைத்து, உடனடியாகவும் இரகசியமாகவும் தன் முகத்தைப் பார்த்தாள். நாற்பத்து நான்கு வயதுடைய பெண் அவள்; கவனமில்லாமல் கீழே இழுத்து விடப்பட்டிருந்த தொப்பியின் விளிம்பின் வழியே தெரிந்த கண்களுடன் தன்னைப் பார்த்தாள். தேநீர் நேரச் சிற்றுண்டி உண்ட உணவு விடுதியிலிருந்து வெளியே வந்ததிலிருந்து அவள் தனது முகத்தில் எந்த ஒப்பனைப் பவுடரும் பூசவில்லை. அவளது கணவன் திருமணத்தின்போது அவளுக்குக் கொடுத்த முத்துகள், மெலிந்துவிட்ட அவளது கழுத்தைச் சுற்றித் தொங்கிக் கொண்டிருந்தன. கடந்த இலையுதிர் காலத்தில் நெருப்பைச் சுற்றி அமர்ந்திருந்தபோது, அவளது சகோதரி பின்னித் தந்த இளஞ்சிவப்புக் கம்பளி மேற்சட்டையை இப்போது அவள் அணிந்திருக்க, அந்த முத்துகள் மேற்சட்டையின் பிளவிற்குள் விழுந்திருந்தன. திருமதி டிரோவரின் வழக்கமான முகபாவனை, அடக்கி வைத்த கவலைக்கு உட்பட்டிருந்தாலும், ஒப்புதல் உணர்வுடன் கூடியதாக இருந்தது. அவளது மூன்றாவது மகனின் பிறப்பின்போது ஏற்பட்ட கடுமையான நோய்க்குப் பிறகு, அவளுடைய வாயின் இடப்பக்கத்தில் அடிக்கடி ஒரு தசை நடுக்கம் தோன்றத் தொடங்கியது. ஆனால் இதையெல்லாம் மீறி, எப்போதும் உற்சாகமாகவும் அமைதியாகவும் தோன்றும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள்.
கண்ணாடியிலிருந்து அவசரமாக அவளுடைய முகத்தைத் திருப்பி, பொருட்கள் இருந்த பெட்டகத்திற்குச் சென்றாள்; அதைத் திறந்து, மூடியை வீசி, தேடுவதற்கு மண்டியிட்டாள். ஆனால் மழை பலமாகப் பெய்யத் தொடங்கியதால், கடிதம் கிடந்த படுக்கையைப் பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை. மழையின் இரைச்சலுக்கும் நடுவே தேவாலயத்தின் கடிகாரம் ஆறு முறை அடித்தது அவளுக்குக் கேட்டது. அதிகரித்துக் கொண்டே செல்லும் திகிலுடன் அவள் ஒவ்வொரு மணி அடிப்பையும் எண்ணினாள்.
“ஏற்பாடு செய்யப்பட்ட நேரம்… கடவுளே!” என்றாள். “என்ன நேரம்? நான் எப்படி…? இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு…”
தோட்டத்தில் சிப்பாயுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண், அவனது முகத்தை முழுமையாக ஒருபோதும் பார்த்ததில்லை. அப்போது இருட்டாக இருந்தது. அவர்கள் தோட்டத்திலிருந்த மரத்தின் கீழ் விடைபெற்றுக் கொண்டிருந்தனர். இப்போதும் அப்போதும். இந்தத் தீவிரத் தருணத்தில் அவனைக் காணாமல் இருப்பதால், அவள் அவனை ஒருபோதும் பார்த்ததே இல்லையோ என்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. அவள் அவனுடன் கைகுலுக்கி இந்தச் சில தருணங்களில் அவனது இருப்பை உறுதிப்படுத்தினாள். அவள் அப்படி ஒவ்வொரு முறையும் கைகொடுக்க நீட்டியபோது, அதை அவன், அதிக இரக்கமின்றி, வலிமிகுந்த முறையில் அவனது சீருடையின் மார்புப் பொத்தான்களில் அழுத்தினான். அவளது உள்ளங்கையில் வெட்டிய அந்தப் பொத்தானின் அழுத்தமே ஒவ்வொரு முறையும் அந்தச் சந்திப்பின் மூலம் அவள் எடுத்துச் செல்லும் நினைவாக இருந்தது. பிரான்சில் இருந்து வந்த அவனது விடுமுறை ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. எனவே அவன் ஏற்கனவே திரும்பச் சென்றிருக்க வேண்டும் என்றே அவள் விரும்பினாள். அது ஆகஸ்ட் மாதத்து 1916. அவர்கள் சந்திக்கும்போது அவன் அவளை முத்தமிடாத தன்மை, அவளை அவன் பார்த்த விலகிய பார்வை போன்றவை கேத்லீனை அச்சமடையச் செய்தன. அவள், அவனது கண்கள் இருந்த இடத்தில் அமானுட வெளிச்ச ஒளிகளைப் பார்த்ததுபோலக் கற்பனை செய்தாள். திரும்பிப் புல்வெளி வழியே மேல் நோக்கிப் பார்த்தபோது, மரக்கிளைகளின் வழியே, வரவேற்பறையின் சன்னல் ஒளிர்வதைக் கண்டாள். அவள் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடி, தாய் மற்றும் சகோதரியின் பாதுகாப்பான அரவணைப்புக்குள் பாய்ந்து சென்று அழுது, “நான் என்ன செய்வேன், நான் என்ன செய்வேன்? அவன் போய்விட்டான்” என்று சொல்லத் தயாரானாள்.
அவள் மூச்சு வாங்குவதைக் கேட்ட அவளது வருங்காலக் கணவன், எந்த உணர்ச்சியுமின்றிக் கேட்டான்: “குளிராக இருக்கிறதா?”
“நீ வெகுதொலைவிற்குப் போகிறாய்.”
“நீ நினைப்பது போல் அவ்வளவு தூரம் இல்லை.”
“எனக்கு புரியவில்லை.”
“நீ புரிந்துகொள்ளத் தேவையில்லை” என்று அவன் சொன்னான். “நீ புரிந்துகொள்வாய். நாம் என்ன சொன்னோம் என்பது உனக்குத் தெரியும்.”
“ஆனால் அது… அப்படியானால் நீ… அப்படியானால்…”
“நான் உன்னுடன் இருப்பேன்” என்றான் அவன். “விரைவாகவோ அல்லது தாமதமாகவோ. அதை நீ மறக்க மாட்டாய். நீ காத்திருந்தாலே போதும்.”
ஒரு நிமிடத்திற்கும் மேல் கழிந்தபிறகே அவள் அமைதியான புல்வெளியில் ஓட முடிந்தது. சன்னல் வழியாகத் தன் தாயையும் சகோதரியையும் பார்த்தபோது, அவர்கள் அந்த நேரத்தில் அவளைக் கவனிக்கவில்லை. அவள் அவனுக்களித்த அந்த இயல்புக்கு மாறான வாக்குறுதி அவளையும் மற்ற மனிதர்களையும் பிரித்து இடைநிறுத்துவதை உணர்ந்தாள். தன்னை அவனிடம் வேறு எந்த வழியிலும் கொடுத்திருந்தால் கூட, இவ்வளவு தனிமையான, தொலைந்துபோன, கைவிடப்பட்ட உணர்வுடையவளாக அவள் இருந்திருக்க மாட்டாள். இதைவிடத் தீய ஓர் ஒப்பந்தத்தை அவள் எப்போதும் எடுத்திருக்க முடியாது.
சில மாதங்களுக்குப் பிறகு, அவளது வருங்கால கணவன் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டபோது, அவன் கொல்லப்பட்டதாகவே அனைவராலும் கருதப்பட்டது. கேத்லீன் தைரியமாக நடந்து கொண்டாள். அவளது குடும்பத்தினர் அவளுக்கு ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல், அவளது தைரியத்தைப் பாராட்டவும் செய்தனர். கிட்டத்தட்ட எதுவும் தெரியாத அந்த மனிதன், அவளுக்கு ஒரு கணவனாக இருந்திருக்க முடியாது என்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு அவள் தன்னை ஆறுதல் படுத்திக் கொள்வாள் என்றும் அவர்கள் நம்பினார்கள். அது ஆறுதல் பற்றிய ஒரு கேள்வியாக மட்டுமே இருந்திருந்தால், விசயங்கள் மிகவும் நேராக முன்னேறி இருக்கும். ஒரு சிறிய துக்கத்திற்குப் பின், எல்லாவற்றிலிருந்தும் ஒரு முழுமையான விலகல்தன்மையை ஏற்படுத்திக் கொண்டாள். அவள் மற்ற காதலர்களை நிராகரிக்கவில்லை, ஏனென்றால் காதலர்கள் அவள்முன் தோன்றவேயில்லை. பல ஆண்டுகளாக, அவள் ஆண்களை ஈர்க்கத் தவறிவிட்டாள். அவளது முப்பதுகள் நெருங்கியபோது, அவள் குடும்பத்தினரின் கவலையைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இயல்பாக இருந்தாள். அவள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்கினாள்; யோசித்தாள். முப்பத்தி இரண்டு வயதில் வில்லியம் டிரோவரால் திருமணம் செய்துகொள்ளப்பட்டதால் அவள் மிகவும் நிம்மதியடைந்தாள். அவள் அவனை மணந்து, இருவரும் கென்சிங்டனின் அமைதியான, மரங்கள் நிறைந்த பகுதியில் குடியேறினர்: இந்த வீட்டில் ஆண்டுகள் கழிந்தன; அவளது குழந்தைகள் பிறந்தனர், மேலும் அடுத்த போரின் குண்டுகளால் அவர்கள் வெளியேறிக் கிராமத்துக்குச் செல்லும்வரை அவர்கள் அனைவரும் அங்கேயே வாழ்ந்தனர். திருமதி. டிரோவராக அவளது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. மேலும் தான் இன்னும் கண்காணிக்கப்படுவதாக அவளுக்கு எண்ணத் தோன்றவில்லை.
இந்நிலையில், உயிரோடு இருந்தாலும், இறந்திருந்தாலும், அந்தக் கடிதத்தை எழுதியவன் அவளுக்குச் செய்தது ஒரு மிரட்டல்தான். வெற்று அறைக்கு முதுகு காட்டிக் கொண்டு பெட்டகத்தினருகே மண்டியிட்டமர்ந்திருந்தவள், அதைத் தொடர்ந்து செய்திட முடியாமல், சுவரை ஒட்டி வைக்கப்பட்டிருந்த நேரான நாற்காலியில் அமர்ந்தாள். அவளது பழைய படுக்கையறையின் நீண்ட காலப் பயன்பாட்டின்மை, அவள் திருமணமாகி வசித்த லண்டன் வீடு… இப்போது நினைவுகள் அனைத்தும் ஆவியாகவோ அல்லது கசிந்துபோனவோ போலக் கீறல் விழுந்த கோப்பையாகத் தோன்றின; இதுவே அவளது உள்ளத்தில் ஒரு நெருக்கடியை உருவாக்கியது. அந்த நெருக்கடியை அப்படியே உணர்ந்தபடியே, அந்தக் கடிதத்தை எழுதியவன் அவளைச் சரியான நேரத்தில் தாக்கியிருந்தான். அந்த வீட்டின் இம்மாலை நேர வெறுமை, பல்லாண்டுகளாக அங்கு ஒலித்த குரல்கள், பழக்கங்கள், காலடிச் சத்தங்கள் அனைத்தையும் அழித்துவிட்டது. மூடிய ஜன்னல்களின் வழியாக, சுற்றியிருந்த கூரைகளின் மீது மழை விழும் சத்தத்தை மட்டுமே அவள் கேட்டாள். தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள, ‘நான் நல்ல மனநிலையில்தான் இருக்கிறேன்’ என்று அவள் தனக்குத்தானே கூறிக் கொண்டாள். சில விநாடிகள் கண்களை மூடி, ‘அந்தக் கடிதம் நான் கற்பனை செய்ததுதான்’ என்று தன்னை நம்பச் செய்தாள். ஆனால் அவள் கண்களைத் திறந்தபோது, அந்தக் கடிதம் அங்கே படுக்கையின் மேல் கிடந்தது.
திருமதி. டிரோவர், கடிதம் கிடைத்த விசித்திரமான விசயத்தைப் பற்றி அதிகமாக யோசிக்க விரும்பவில்லை. அவள் இன்று வீட்டிற்கு வருவாள் என்று லண்டனில் உள்ள யாருக்குத் தெரியும்? ஆனால், யாருக்கோ இது தெரிந்திருக்க வேண்டும். வீட்டின் கண்காணிப்பாளன் திரும்பி வந்திருந்தால், அவள் வருவாள் என்று எதிர்பார்க்க வாய்ப்பில்லை. அவன் கடிதத்தைத் தன் பையில் வைத்து, நேரம் கிடைக்கும்போது அஞ்சல் மூலம் அனுப்பி வைத்திருப்பான். கண்காணிப்பாளன் வந்ததற்கு வேறு எந்த அறிகுறியும் இல்லை. அப்படியென்றால், வேறு யார்?
தனிமையான வீடுகளின் கதவுகளில் போடப்படும் கடிதங்கள், அவைகளாகவே பறந்து வந்தோ நடந்து வந்தோ கூடத்தில் உள்ள மேசைகளில் அமர்வதில்லை; அவை தூசி படிந்த வெற்று மேசைகளின் மீது, தம்மைக் கண்டறியும் உறுதிப்பாட்டுடன் அமர்ந்திருக்காது. இதைச் செய்வதற்கு ஒரு மனிதக்கை தேவை; கண்காணிப்பாளனைத் தவிர வேறு யாரிடமும் சாவி இல்லை. ஆனால், ஒரு வீட்டிற்குள் சாவி இல்லாமல் நுழையலாம். இப்போது அவள் தனியாக இல்லை என்பது சாத்தியமான ஒரு கருதுகோள். அவள் கீழே காத்திருக்க வைக்கப்படலாம். எதுவரை காத்திருக்க வைக்கப்பட்டாள்? “ஏற்பாடு செய்யப்பட்ட நேரம்” வரை. குறைந்தபட்சம், அது ஆறு மணி இல்லை. மணி ஆறு அடித்தது.
அவள் நாற்காலியில் இருந்து எழுந்து சென்று கதவைப் பூட்டினாள்.
இப்போது, வெளியேறுவதுதான் சிறந்தவழி. ஓடிவிடலாமா? இல்லை, அது இல்லை: அவள் ஊருக்குத் திரும்பும் ரயிலைப் பிடிக்க வேண்டும். அவளது குடும்ப வாழ்க்கையின் முக்கிய அடித்தளமாக இருந்த ஒரு பெண்ணாகத் திரும்பிச் செல்ல வேண்டும். அவள் தனது கணவன், அவளது பிள்ளைகள் மற்றும் அவளது சகோதரியிடம் பொருட்களைக் கொண்டுபோய்க் கொடுக்கவேண்டும். எடுத்துச் செல்ல வந்த பொருட்களை எடுத்துச் செல்லாமல் கிராமப்புறத்துக்குத் திரும்பிச் செல்ல அவள் விரும்பவில்லை. பெட்டகத்தில் தனது வேலையை மீண்டும் தொடங்கிய அவள், ஒருவிதமான பரபரப்புடனும் தடுமாற்றத்துடனும், ஆனால் உறுதியான வழியில் பல பொதிகளைக் கட்டத் தொடங்கினாள். இவை, அவள் ஏற்கனவே கொண்டுவந்த பைகளுடன், கைகளால் எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அதிகச் சுமையுடையதாக இருக்கும்; எனவே ஒரு வாடகைக் காரை ஏற்பாடு செய்ய வேண்டும். வாடகைக் காரைப் பற்றிய எண்ணத்தால் அவளது இதயம் உயர்ந்தது; அவளது இயல்பான சுவாசம் மீண்டும் தொடங்கியது. நான் வாடகைக் காருக்குத் தொலைபேசி செய்வேன்; வாடகைக் காரால் மிக விரைவில் வர முடியாது. வாடகைக் காரின் எஞ்சின் சத்தம் வெளியே எனக்காகக் காத்துக்கொண்டிருப்பதை நான் கூடத்திற்குச் செல்லும் வரை அமைதியாகக் கேட்டுக்கொண்டே நடப்பேன். நான் தொலைபேசி செய்வேன்… ஆனால் முடியாது. தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது. அவள் தவறாகக் கட்டிய ஒரு முடிச்சை இழுத்துச் சரிசெய்தாள்.
ஓடிச்செல்லும் எண்ணம்… அவன் என்னிடம் எப்போதும் அன்பாக இருந்ததில்லை. உண்மையிலேயே இல்லை. அவன் அன்பாக இருந்ததாய் எனக்கு எந்த நினைவும் இல்லை. ஒருபோதும் என்னை அவன் கருத்தில் கொள்ளவில்லை என்று அம்மா சொல்லியிருந்தார். அவன் என் மீது ஒரு தீவிரமான வைராக்கியத்துடன் இருந்தான்… காதலாக இருந்திருக்காது. காதல் அல்ல. நான் அப்படி வாக்குறுதி அளிக்க அவன் என்ன செய்தான்? எனக்கு நினைவில் இல்லை — ஆனால் அவளால் வாக்குறுதி அளித்திருக்க முடியும் என்றே உணர்ந்தாள்.
அவள் அனைத்தையும் கூர்மையுடன் நினைவில் வைத்திருந்தாள். அப்போதிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் புகைபோலக் கரைந்துவிட்டன. அவனது பொத்தான் அழுத்தியதால் உள்ளங்கையில் ஏற்பட்ட வடுவை உள்ளுணர்வாகத் தேடினாள். அவன் சொன்ன, செய்த அனைத்தையும் மட்டுமல்ல; அந்த ஆகஸ்ட் வாரத்தில் அவளது இருப்பின் முழுமையான இடைநீக்கத்தையும் அவள் நினைவில் வைத்திருந்தாள். நான் நானாக இல்லை — அவர்கள் அனைவரும் அந்த நேரத்தில் என்னிடம் சொன்னார்கள். அவளுக்கு அனைத்தும் நினைவிருந்தது. ஆனால் ஒரு புகைப்படத்தின் மேல் அமிலம் சொட்டியதுபோல, ஒரு வெண்மையான எரியும் வெற்றிடமாக அந்த நினைவுகள் இருந்தன; எந்த நிலையிலும், அவன் முகத்தை அவளால் நினைவுகூர முடியவில்லை.
எனவே, அவன் எங்கு காத்திருந்தாலும், எனக்கு அவனைத் தெரியாது. நீங்கள் எதிர்பார்த்திராத ஒரு முகத்திலிருந்து தப்பிச் செல்ல உங்களுக்கு நேரம் இருக்காது.
மணி என்னவென்று அடிப்பதற்கு முன், அவள் வாடகைக்காரைப் பிடித்துவிட வேண்டும். அவள் தெருவில் இறங்குவாள்; சதுக்கத்தின் பக்கமாகச் செல்வாள்; சதுக்கம் பிரதான சாலைக்குச் செல்லும் இடத்தில் திரும்புவாள்; அவள் வாடகைக் காரில், பாதுகாப்பாகத் தன் வீட்டு வாசலுக்குத் திரும்புவாள்; திடமான ஓட்டுநரைத் தன்னுடன் வீட்டிற்குள் அழைத்து வருவாள்; அறையிலிருந்து பொதிகளை எடுத்துச் செல்வாள். வாடகைக் காரின் ஓட்டுநரைப் பற்றிய எண்ணம் அவளை உறுதியானவளாகவும் தைரியம் கொண்டவளாகவும் மாற்றியது. அவள் தன் கதவைத் திறந்து, மாடிப்படிக்குச் சென்று, கீழே ஏதாவது சப்தம் வருகிறதா என்று கவனித்துக் கேட்டாள்.
அவளுக்கு எதுவும் கேட்கவில்லை — ஆனால் அவள் எதையும் கேட்காத அந்த நேரத்தில், கீழ்த்தளத்திலிருந்து மாடிப்படிக்கு வந்த, பழைய காலாவதியான காற்று அவளது முகத்திலடித்தது. கீழே, யாரோ ஒருவர் கதவையோ ஜன்னலையோ திறந்து, இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்திருக்க வேண்டும்.
மழை நின்றுவிட்டது; திருமதி. டிரோவர் தனது வீட்டின் முன் கதவிலிருந்து வெற்றுத் தெருவுக்குள் அங்குலம் அங்குலமாக வெளியேறியபோது, நடைபாதைகள் சூடாகப் பிரகாசித்தன. அவளுக்கு எதிரே இருந்த ஆளில்லாத வீடுகள், அவற்றின் சேதமடைந்த பார்வையுடன் அவளது பார்வையைச் சந்தித்தன. முக்கியச் சாலையில் வாடகைக் காரைத் தேடிச் செல்லும்போது, அவள் பின்புறம் திரும்பிப் பார்க்காமல் இருக்க முயன்றாள். அங்கிருந்த அமைதி மிகவும் தீவிரமாக இருந்தது; போரின் சேதத்தால் லண்டன், அமைதியின் ஓடைகளில் ஒன்றாக இந்தக் கோடையில் விளங்கிக் கொண்டிருந்தது. தெருச் சதுக்கத்தில், மக்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த இடத்தில், அவள் தனது இயற்கைக்கு மாறான வேகத்தை உணர்ந்து சரிசெய்து வேகத்தைக் குறைத்தாள். சதுக்கத்தின் திறந்த முனையில், இரண்டு பேருந்துகள் உணர்ச்சியற்றபடி கடந்து சென்றன: பெண்கள், ஒரு பிரம்பு வண்டி, சைக்கிள் ஓட்டுபவர்கள், ஒரு வண்டியை ஓட்டும் ஒரு மனிதன் ஆகியவற்றைப் பார்த்து வாழ்க்கையின் சாதாரண ஓட்டத்தை மீண்டும் உணர்ந்தாள். அதிக மக்கள் வசிக்கும் சதுக்கத்தின் மூலையில் வாடகைக் கார்கள் இருக்க வேண்டும். இருந்தது. குறுகிய வாடகைக்கார் வரிசை. இந்த மாலையில் ஒரே ஒரு வாடகைக்கார்தான் இருக்கிறது. இந்த வாடகைக் கார் வாடகைதாரர் இல்லாமல் வெறுமனே இருந்தாலும், அவளுக்காகவே விழிப்பாகக் காத்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. அவள் வாடகைக்காரை நெருங்கி வந்து பின்கதவில் கை வைத்தவுடன், ஓட்டுநர் சுற்றும் முற்றும் பார்க்காமல் தனது வண்டியை உயிர்ப்பித்தான். அவள் காரில் ஏறியபோது கடிகாரம் ஏழு அடித்தது. கார் பிரதான சாலையில் ஏறியது. அவளது வீட்டிற்குச் செல்வதற்கு, கார் திரும்ப வேண்டும்; அவள் இருக்கையில் சாய்ந்தாள். கார் சரியான பாதையில் திரும்பியது. தான் எங்கே செல்லவேண்டும் என்பதைச் சொல்லவில்லையே, எப்படிக் கார் திரும்புகிறது என்று ஆச்சரியப்பட்டாள். அவள் ஓட்டுநரையும் தன்னையும் பிரித்துவைத்த கண்ணாடி மறைப்பைத் தட்டுவதற்கு முன்னோக்கிச் சாய்ந்தாள்.
ஓட்டுநர் காரின் வேகத்தை மெல்லக் குறைத்து, கிட்டத்தட்ட நின்றபின், திரும்பிப் பார்த்தான்; கண்ணாடி மறைப்பைச் சரித்துத் திறந்தான். அந்த அசைவின் அதிர்ச்சியால் திருமதி டிரோவர் முன்புறம் தள்ளப்பட்டு, அவளது முகம் கண்ணாடியைத் தொட்டுவிடும் அளவுக்கு அருகில் வந்தது. திறந்த சிறிய இடைவெளியின் வழியாக, ஓட்டுநரும் பயணியும் ஆறு அங்குலத்திற்கும் குறைவான தூரத்தில் நெடுநேரம் கண்ணோடு கண் கலந்தனர். சில விநாடிகள் திருமதி டிரோவரின் வாய் திறந்தபடியே இருந்தது; பிறகுதான் அவளது முதல் அலறல் வெளிவந்தது. அதன்பின் அவள் இடைவிடாது அலறி, கையுறை அணிந்த கைகளால் கண்ணாடியை அடிக்கத் தொடங்கினாள். அதே வேளையில் அந்த வாடகைக்கார் இரக்கமில்லாமல் வேகமெடுத்து, வெறிச்சோடிய தெருக்களின் பின்புலப் பகுதிகளுக்குள் அவளைக் கொண்டு சென்றது.
******
எலிசபெத் பவுயென் (1899 – 1973)
அயர்லாந்தின் டப்ளின் நகரில் பிறந்த எலிசபெத் பவுயென் ஆங்கில நாவலாசிரியராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். அவரது சிறுவயது அயர்லாந்தில் கழிந்தது. பின்னர் கல்விக்காக இங்கிலாந்துக்குச் சென்றார். பவுயென் எழுத்துக்களில் மனநிலை, தனிமை, சமூக மாற்றங்கள் போன்றவை முக்கியமான இடம் பெறுகின்றன. மனித உணர்ச்சிகளின் ஆழத்தையும், அவர்களுக்குள் உருவாகும் நுணுக்கமான உறவுகளையும் நுட்பமாக சித்தரித்தவர். அவரது The Last September (1929) என்ற புதினம் அயர்லாந்து சுதந்திரப் போரின் பின்னணியில் எழுதப்பட்டது. The Death of the Heart (1938) என்ற புதினத்தில் ஓர் இளம் பெண்ணின் மன உலகம் ஆழமாகக் விவரிக்கப்படுகிறது. The Heat of the Day (1949) இரண்டாம் உலகப்போர் கால லண்டனை அடிப்படையாகக் கொண்ட புதினம். அவரது எழுத்து பாணி நுட்பமானது, உணர்ச்சியோடு கூடியது. விர்ஜினியா உல்ஃப் மற்றும் ஹென்றி ஜேம்ஸ் ஆகியோரின் எழுத்து பாணியில் அவர் எழுதினார். The Demon Lover and Other Stories (1945) என்ற சிறுகதைத் தொகுப்பில் அமானுடம் மற்றும் உளவியல் மனநிலை இரண்டும் கலந்துள்ளன. அமானுடக் காதலன் (The Demon Lover) எனும் இச்சிறுகதை வெறும் பேய்க்கதையல்ல; மனதின் இருண்ட அடுக்குகளை வெளிப்படுத்தும் உளவியல் ஆய்வு. மனித மனத்தின் பயம், நினைவுகள், குற்ற உணர்வு மற்றும் போர் உண்டாக்கும் உளவியல் சிதைவுகளைப் பற்றிய ஆழமான வெளிப்பாடுகளைச் சொல்லும் ஒரு கதையாகும்.
Art : atmos.earth
தூத்துக்குடி மாவட்டம் சென்னம்பட்டி எனும் சிற்றூரில் பிறந்தவர். எழில் மயில் வாகனன் என்னும் இயற்பெயர் கொண்ட இவர், தன் தந்தையின் பெயருடன் இணைத்து எழில் சின்னதம்பி என்று புனைபெயராக்கிக் கொண்டுள்ளார்.
மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர், ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் தரப்பகுப்பாய்வு இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார்.
சிற்றிதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும், கவிதைகளும், கலைத்துறைக் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. ஓப்ரா பற்றிய அறிமுகமும், ஓப்ராக் கலைஞர் பவரொட்டி பற்றிய கட்டுரையும், ஐரோப்பிய ஓவிய, நாடக, நடனக் கலைஞர்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளும் சிற்றிதழ்களில் வெளியானவை.
‘சிறுகதை’ காலாண்டிதழில் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளியாகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர், செல்பேசியின் பயன்பாடு பரவலாக ஆரம்பித்த காலங்களில் தமிழில் ‘செல்பேசித் தொழில்நுட்பம்’ குறித்த அறிவியல் கட்டுரைகள் மின்னிதழ்களில் தொடராக வெளிவந்தன. மாய எதார்த்தக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ‘கடைசி வருகை’ முதல் புத்தகம், மார்ச் 2022-ல் வெளியானது. ‘லத்தீன் அமெரிக்கப் பெண்ணெழுத்து’ எனும் இரண்டாவது மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘கடலோடியின் மனைவி’ 2024 டிசம்பரில் வெளியானது. ‘இயல்திரிபுப் புனைகதைகளின்’ மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘சிலந்தி’ விரைவில் வெளியாகவிருக்கிறது.
தொன்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட உலக வரலாற்றுப் புதினங்கள் எழுதுவது எதிர்காலத் திட்டமாக வகுத்துள்ளார்.








Leave a Reply