தெலு(ங்)கு மூலம்: எம். ஹரிகிஷன்
தமிழில் : திருவை
சித்திர குள்ளன்
ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அந்தக் கிழவி தினமும் காலையிலே வீட்டு முற்றத்தைச் சுத்தமாகப் பெருக்கி சாணம் தெளித்து அழகாகக் கோலம் இடுவாள். ஒருநாள் வீட்டு முற்றத்தில் பெருக்கிக் கொண்டிருந்தபோது, வெள்ளையாகக் கோழி முட்டை ஒன்று பளபளனு மின்னுவதைக் கண்டாள். கிழவி அதை எடுத்து வந்து அடை போடலாம் என்று அடுப்பில் வைத்தாள். தோசைக்கல் சலசலசல என்று நன்றாக சூடேறியதும் உடைப்பதற்காக முட்டையைக் கையில் எடுத்தாள்.
அதற்கிடையில்… அதன் உள்ளே இருந்து, “பாட்டி… பாட்டி… பாத்து… கொஞ்சம் மெதுவா ஒடை” என்று சத்தம் வந்தது. “இது என்னடா பா?” கோழி முட்டை பேசுகிறதே என்று ஆச்சரியப்பட்டு, அதைக் கவனமாக எடுத்து மெதுவாக ஒடைத்தாள். அவ்வளவுதான்… உள்ளே இருந்து நம்ம கட்டைவிரல் இருக்கிறது இல்லையா… அந்த அளவுக்கு சிறிய குள்ளன் கலகலகலனு சிரித்துக்கொண்டே வெளியே வந்தான். கிழவி அவனைக் கவனமாகக் கையில் எடுத்து, வெந்நீர் போட்டு தலைக்கு குளிப்பாட்டினாள்… மென்மையான துணியால் சுத்தமாகத் துடைத்து… அழகாக உச்சி எடுத்து வாரி முத்தமிட்டாள்.
குள்ளன் இருப்பது பெருவிரல் அளவுக்குதான் இல்லையா… அப்புறம் அவனுக்கு துணிகள் எப்படி? கிழவி அவனுக்காக வண்ண வண்ண துணிக் கந்தல்களை எடுத்து வந்து சின்ன அங்கி, சின்ன பேண்டு, சின்ன தொப்பி தைத்துக் கொடுத்தாள். அவன் வண்ண வண்ண பேண்டையும் அங்கியையும் போட்டுக் கொண்டு, தலையில் தொப்பியையும் அணிந்து , “என் செல்ல பாட்டி” என்று மகிழ்ச்சியோடு பாட்டியை முத்தமிட்டான்.
குள்ளன் ஒரு நாள் வீட்டில் திரிந்து கொண்டிருந்தபோது ஒரு மூலையில் சில மரத் துண்டுகளைக் கண்டான். அவற்றையெல்லாம் ஓரிடத்தில் சேர்த்து உளி, ரம்பம், சுத்தி கொண்டு வந்து கஷ்டபட்டு ஒரு சிறிய வண்டியைத் தயார் செய்தான். வண்டிக்கு நல்ல வண்ணம் அடித்து, பூக்களைக் கட்டினான். இரண்டு எலிகளைப் பிடித்துக்கொண்டு வந்து வண்டிக்குக் கட்டினான்.
கட்டியதும் வண்டி மேலேறி சல்சல் என்று மகிழ்ச்சியாகத் தெருவில் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்த போது வழியில் அவனுக்கு ஓரிடத்தில் செப்பு நாணயம் ஒன்று கிடைத்தது. அதை எடுத்து வந்து கிழவியிடம் கொடுத்தான். அதைப் பார்த்து கிழவி, “அடேய்… செப்பு நாணயம் கிடைக்கிறவனுக்கு ராஜா மவளோடு கல்யாணம் நடக்குமாம்… போ… போயி… அதை முடிச்சிட்டு வா போ” என்றாள்.
குள்ளன் சரியென்று கிழவி காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி ராஜா மகளைக் கல்யாணம் செய்து கொள்வதற்காகப் புறப்பட்டான். அப்படி சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு கருப்புப் பூனை எதிரில் வந்து “குட்டி பையா… குட்டி பையா… எங்க போற?” என்று கேட்டது. அதற்கு அவன், “ராஜா மவளை கல்யாணம் பண்றதுக்காக” என்று கூறினான். “அப்படினா நானும் வறேன்… என்னையும் கூட்டிட்டு போ” என்றது அந்த பூனை.
அவன் சரியென்று தலையசைத்து “இந்த காதுல ஏறிக்கோ” என்று அதனை இடது காதில் ஏற்றிக் கொண்டான்.
மீண்டும் போய்க் கொண்டிருந்த போது, வழியில் ஒரு சிறுத்தைப் புலி எதிரில் வந்து”குட்டி பையா… குட்டி பையா… எங்க போற?” என்று கேட்டது. அதற்கு அவன், “ராஜா மவளை கல்யாணம் பண்றதுக்காக” என்று கூறினான். “அப்படினா நானும் வறேன்… என்னையும் கூட்டிட்டு போ” என்றது அந்தப் புலி. அவன் சரியென்று தலையசைத்து அதனை வலது காதில் ஏற்றிக் கொண்டான்.
மீண்டும் பக்குவமாய் சல்சல்லென்று எலிகளை விரட்டி போய்க் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு சமுத்திரம் அளவிற்கு பெரிய குளம் குறுக்கே வந்தது.
குள்ளன் என்றால் சாதாரண குள்ளனா… பெரிய மாயக்காரன் இல்லையா. உடனே வாயைத் திறந்து அந்தப் பெரிய குளத்திலிருந்த நீரையெல்லாம் ஒரு துளிகூட மிச்சம் வைக்காமல் சர்ரென்று வயிற்றில் உறிந்து வைத்துக் கொண்டான். மீண்டும் சல்சல்லென்று எலிகளை விரட்டி சாயந்தரத்திற்கு எல்லாம் ராஜ்யத்தை வந்து அடைந்தான்.
ராஜா அரசவையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்… குள்ளன் அப்படியே உள்ளே நுழையப் போனான், வீரர்கள் மறித்து உள்ளே அனுமதிக்கவில்லை. அவன் சரியென்று மெதுவாக வண்டியைப் பின்னால் திருப்பி ஒரேமுறையில் சர்ரென்று எலிகளை விரட்டி, கண்ணை மூடித் திறப்பதற்குள் வீரர்கள் காலுக்கிடையில் ரிவ்வென்று உள் நுழைந்து அரசவையின் நடுவில் வண்டியை நிறுத்தினான். ராஜா அவனைப் பார்த்து கண்கள் சிவக்க “யார்ரா நீ… என் அனுமதியில்லாம முன்னால வந்து நிக்குற ?” என்றான் கோபமாக. அதற்கு, அவன் வண்டியிலிருந்து இறங்கி, துளியும் பயம் இல்லாமல், “ராஜா… நான் உன் மவளை கல்யாணம் பண்றதுக்காக வந்துருக்கேன், எனக்கு உன் மவளை ஒழுங்கா கல்யாணம் பண்ணி வையி” என்றான்.
அதைக் கேட்டதும் ராஜாவிற்கு தலையே சுற்றியது. அவனைக் கோபத்தோடு இறங்க இறங்க பார்த்து, “பெருவிரல் அளவுக்கு கூட இல்லை உனக்கு என் மவ வேணுமா… ஏய், யார் அங்கே?” என்றான். உடனே வீரர்கள் ஓடி வந்தனர். “ஏய்… இவனை தூக்கிட்டு போயி நம்ம கோழிப் பண்ணைக்குள்ள போடுங்கடா… இவனை அதுங்க கொத்திக் கொத்தியே சாவடிச்சிரும்” என்றான். சரியென்று வீரர்கள் அவனைப் பிடித்துச் சென்று கோழிப் பண்ணைக்குள் தூக்கி வீசினர்.
கோழிகள் எல்லாம் ஒரே நேரத்தில் குள்ளனைப் பார்த்தன. “கொக்கரக்கோ” என்று கத்திக்கொண்டு கொத்துவதற்காக முன்னால் ஓடி வந்தன. உடனே அவன் இடது காதில் இருந்த பூனையை அழைத்தான். அவ்வளவுதான், அது “மியாவ்” என்று பயங்கரமாக கத்திக்கொண்டு தாவி கோழிகள் மேல் பாய்ந்தது. வேற என்ன… கோழிகள் எல்லாம் ஒரே ஓட்டமோ ஓட்டம். பூனை அவற்றைத் துரத்திப் பிடித்து கிடைத்துபோச்சு என்று எல்லாவற்றையும் சுத்தமாக கொன்றுத் தின்றது. காலையிலே வீரர்கள் வந்தனர். பார்த்தால் வேறு என்ன? குள்ளன் நிம்மதியாக கலகலனு சிரித்துக்கொண்டு குஜாலாக இருந்தான். வீரர்கள் ஓடோடி… ராஜாவிடம் சென்று, “ராஜா… ராஜா… அந்த குள்ளன் சாதாரண ஆள் இல்ல. நம்ம கோழிங்க எல்லாத்தையும் ஒன்னு கூட மிச்சம் வைக்காம கொன்னு தின்னுட்டான்”. என்று கூறினர்.
ராஜாக்கு கோபம் அதிகமானது. “அப்படியா…அப்டினா அவனைப் பிடிச்சிட்டு போயி நம்ம காளை மாட்டுத் தொழுவத்துல போடுங்கடா” என்றான். வீரர்கள் அப்படியே ஆகட்டும் என்று குள்ளனைப் பிடித்துச் சென்று களைமாட்டுத் தொழுவத்தில் வீசி எறிந்தனர். காளைகள் என்றால் மாமுலு எருமைகள் கிடையாது. ராஜாவின் காளைகள். நல்லா தின்னு தின்னு பருத்துக் கொழுத்துப் போயி ஒவ்வொன்றும் ஒரு யானை அளவிற்கு இருந்தன. குள்ளன் கொஞ்சம் கூட பதறவில்லை. உடனே வலது காதில் இருந்த சிறுத்தைப் புலியை அழைத்தான்.
அவ்வளவுதான்… சிறுத்தை உறுமிக்கொண்டே தாவி காளைகள் மேல் பாய்ந்தது. புலியைக் கண்டதும் காளைகள் எல்லாம் ஓட்டமோ ஓட்டம். புலி அவற்றைத் துரத்தி துரத்தி கிடைத்துபோச்சு என கொன்று தின்றது. அடுத்த நாள் காலையிலே வீரர்கள் வந்து பார்த்தனர். பார்த்தால் வேறு என்ன? குள்ளன் நிம்மதியாக கலகலனு சிரித்துக்கொண்டு இருந்தான். வீரர்கள் ஓடோடி… ராஜாவிடம் சென்று, “ராஜா… ராஜா… அந்த குள்ளன் நம்ம காளைகள கூட கொன்னு தின்னுட்டான்”. என்று கூறினர். ராஜா ஆச்சரியப்பட்டு, “அப்படி இருக்காது இருந்தாலும்… அவனைத் தூக்கிட்டுப் போயி நெருப்புல போட்டு சுட்டெரிங்கடா?” என்றான்.
வீரர்கள் குள்ளனை பிடித்துக்கொண்டு போயி பெரிய காய்ந்த புல் படுக்கை மேல் போட்டு… கடுகு எண்ணெய் எடுத்து வந்து படுக்கை முழுதும் நன்கு ஊற்றி தீ வைத்தனர். அவ்வளவுதான்… கடுமையாக பிடித்துக் கொண்டது. இருந்தாலும் குள்ளன் எதற்கும் பயப்படவில்லை. ஒரே முறையாக வயிற்றில் மறைத்து வைத்திருந்த நீர் எல்லாவற்றையும் மெதுவாக வெளியேற்ற ஆரம்பித்தான். தீ முழுவதும் அணைந்து போனது. அப்பொழுது கூட நீரை வெளியேற்றுவதை மட்டும் நிறுத்தவில்லை. வெளியேற்றிக் கொண்டே இருந்தான். நீர் வெளியேறிய வேகத்தில் அது வீடுகள், மரங்கள், பசுக்கள் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போனது. மக்கள் எல்லோரும் ஓட்டமும் நடையுமாய் ராஜாவிடம் சென்று “ராஜா… ராஜா… கொஞ்சநேரம் விட்டா ராஜ்யம் முழுக்க முங்கிபோயி எல்லாரும் செத்துப் போயிடுவோம் போல இருக்கு. நீங்கதான் எப்படியாவது எங்கள காப்பாத்தணும்” என்று கண்ணீர் வடித்தனர்.
ராஜா குள்ளன் சாதாரண ஆள் இல்லை என்பதை உணர்ந்தான். விரைந்து… குள்ளனிடம் சென்று “தப்பு நடந்துடுச்சு என்னை மன்னிச்சிடு. என் மவளை உனக்கே கல்யாணம் பண்ணி வைக்குறேன். என் ராஜ்யத்தை துவம்சம் பண்ணாத” என்று பணிவாகக் கேட்டான். அப்போது குள்ளன் சரியென்று நீர் எல்லாவற்றையும் பழையவாறு உறிஞ்சிக் கொண்டான். ராஜா கொடுத்த வாக்குப்படி பல்லக்கின் மேல் குள்ளனை ஏற்றி மேலதாளத்தோடு ராஜ சபைக்கு அழைத்து வந்தான். அடுத்த நாள் மக்கள் அனைவரையும் அழைத்து பூமி அளவு மேடையும் ஆகாசம் நிறைய பந்தலும் போட்டு ஏழேழு பதினான்கு லோகமும் அதிர்ந்து போகிற மாதிரி பிரம்மாண்டமாக கல்யாணம் செய்து வைத்தார்.
கோட்டகொண்டா திறமைசாலி
நம்ம கர்னூலு ஜில்லாவில் கோட்டகொண்டா என்ற ஓர் ஊர் உள்ளது. அந்த ஊரில் ஒரு திறமைசாலி இருந்தான். அவன் ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு, சுருட்டு மீசை, சிங்கம் மாதிரி குரல், எதற்கு என்றாலும் சரி உ என்றால் ஊ என்று எல்லோரையும் தாண்டி முன்னால் இருப்பான். அசாத்தியமான வீரன் அங்கு சுற்றியுள்ள ஊர்களில் நல்ல பேரு. அதுமட்டும் இல்லை அவனுக்கு சின்ன வயதில் இருந்து சுத்தமாக பயமென்றால் என்னவென்றே தெரியாது. அர்த்தராத்திரி சுடுகாட்டில் ஒத்தையில் படு என்றாலும் படுப்பான்.
அந்த ஊருக்கு அருகிலேயே மானப்பாடு என்ற ஓர் ஊர் இருந்தது. அந்த ஊருக்கு வெளியே ஆலமரத்தில் பேய் ஒன்று இருக்கிறது. அது மிகவும் சேட்டை பிடித்தது. இராத்திரி சமயத்தில் யாராவது அந்த வழியில் வந்தார்கள் என்றால் போதும் அவர்கள் மேல் விழுந்து இல்லாத சேட்டைகள் எல்லாம் செய்யும். அதன் அட்டூழியம் தாங்க முடியாமல் ஜனங்கள் கீழேயும் மேலேயும் புரண்டு விழுந்து ஓடினால் விழுந்து விழுந்து சிரிக்கும்.
அதனாலயே இருட்டினால் போதும் யாராக இருந்தாலும் சரி… எவ்வளவு வேலை இருந்தாலும் சரி… செத்தாலும் அந்தப் பக்கம் போகவே மாட்டார்கள்.
ஒருநாள் நம்ம கோட்டகொண்டா திறமைசாலி வேலை விஷயமாக அவன் அத்தை ஊருக்குச் சென்றான். வேலை முடிகிற சமயம் நன்றாக இருட்டியது. அவன் அத்தை ஊரில் இருந்து கோட்டகொண்டாக்குப் போக வேண்டும் என்றால் இடையில் மானப்பாட்டைத் தாண்டியாக வேண்டும். இவனுக்கு பயம் என்றால் என்னவென்று தெரிந்தால் இல்லையா… புறப்பட்டான். அதைப் பார்த்து அவனுடைய அத்தையும் மாமாவும் “மாப்பிளை… மாப்பிளை… மானப்பாடு பேய் மோசமானது. பாத்துச்சுனா விடாது மேல மேல விழுந்து பயமுறுத்தும். ராத்ரியானாலே அந்த வழில யாரும் போ மாட்டாங்க. நீ கூட இந்த ராத்ரி இங்கயே படுத்துட்டு காலையிலயே போ” என்றனர். ஆனால் இதற்கு எல்லாம் பயப்படுகிற இரகமா நம்ம ஆளு இல்லை அல்லவா… வெறுங் கையாலேயே புலியைக் கொன்றவன் . அதனால் வேண்டாம்…வேண்டாம் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் கத்தியை இடுப்பில் சொறுகிக் கொண்டு புறப்பட்டான்.
அவன் அப்படி… அந்த இருட்டில்…தனியாக… நடந்து… நடந்து… மெதுவாக மானப்பாட்டை அடைந்தான். தூரத்தில் ஆலமரம் தென்பட்டது. அவனுக்கு அத்தை மாமா சொன்னது ஞாபகத்திற்கு வந்து கவனமாக அடிமேல் அடிவைத்து… அங்குமிங்கும் கவனித்துக் கொண்டு செல்லத் தொடங்கினான்.
அவன் சரியாக அந்த மரத்திற்கு கீழே வந்தானோ… இல்லையோ… இவனைப் பற்றி தெரியாத அந்தப் பேய் மேலே இருந்து “ஓ” என்று கத்திக் கொண்டே பறந்து வந்து அவன் மேல் தாவியது. ஆனால் அவன் பயப்படுவானா… வெறுங்கையாலேயே பெரிய புலியை எதிர்த்தவன்…. பேய் அப்படி தாவிக்கொண்டே… தாவிக்கொண்டே இருக்க… படக்கென்று அதன் முடியைப் பிடித்து விர்விர்விர் என்று சுற்றி நிலத்தில் போட்டு அடித்து… நொடியில் இடுப்பில் சொறுகி இருந்த கத்தியை எடுத்து பரபரபரவென்று அதன் முடியை அறுத்தான். அதற்கு அதன் முடி என்றால் மிகவும் பிடிக்கும்.
அதோடு அது கப்பலே மூழ்கியது போல் அழுது அழுது அவன் காலைப் பிடித்துக் கொண்டு “தப்பு நடந்துடுச்சி… இனி ஜென்மத்துக்கும் இந்தமாரி எப்பயும் மனுஷங்க சோலிக்கே போமாட்டன் … என் முடியை எனக்கு தா” என்று பின்னாலேயே சென்றது.
அவன் அந்த முடியை இடுப்பில் சொறுகிக் கொண்டு “என் பின்னாலயே வந்து…நான் சொல்ற வேலைங்க எல்லாத்தையும் பண்ணு… அப்ப குடுக்குறேன்” என்றான். சரியென்று அவனைப் பின் தொடர்ந்துக் கொண்டே யாரும் பயப்படாமல் இருக்க பெண்வேடம் போட்டுக்கொண்டு மானப்பாட்டில் இருந்து கோட்டகொண்டாவிற்கு வந்தது.
அந்தக் கோட்டகொண்டா திறமைசாலிக்கு ஊருக்கு வெளியே ஒரு பெரிய வயல் இருந்தாலும் அது தரிசு பூமியாக இருந்தது. வயல் முழுவதும் கற்களும் பாறைகளும் பெரிய பெரிய குழிகளுமாக அடர்த்தியான மரங்களுமாக இருந்தன. அவன் அந்தப் பேயை அழைத்து “போ… போயி… என் வயல் முழுசையும் நல்லா சுத்தம் பண்ணிட்டு வா போ” என்றான்.
அவன் அப்படி சொன்னது தாமதம் அந்தப் பேய் விரைந்து… ஓடோடி… வயல் கரைக்குச் சென்று… கற்களையும் பாறைகளையும்…. மரம் கிரம் என எல்லாவற்றையும் சுத்தமாக எடுத்து வீசிவிட்டு… ஓடோடிப் போய் “நீ சொன்ன மாறியே உன் வயல் முழுசும் நல்லா சுத்தம் பண்ணிட்டேன்… என் முடியை எனக்கு தா” என்று கேட்டது.
அதற்கு அவன் கால் மேல கால் போட்டு உட்கார்ந்துக் கொண்டு சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்தபடியே “வயலை சுத்தம் பண்ணா முடிஞ்சிதா… தண்ணி வேணாமா… போ… போயி…ஒரு பெரிய கிணறு தோண்டிட்டு வா போ” என்றான். அவன் அப்படி சொன்னது தாமதம் அந்தப் பேய் ஓடோடி வயல் கரைக்குச் சென்று… ஏழு இராத்திரி, ஏழு பகல் கஷ்டப்பட்டு ஒரு பெரிய கிணறு தோண்டி தண்ணீர் ஊறியதும் ஓடோடி அவன் அருகில் சென்று “நீ சொன்ன மாறியே உன் வயல்ல கிணறு தோண்டிட்ட… இப்பயாச்சும் என் முடியை எனக்கு தா” என்று கேட்டது.
அதற்கு அவன் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்தபடி “வயலை சுத்தம் பண்ணி, கிணறு தோண்டுனா முடிஞ்சிதா… வயலை எவன் உழுவான்” என்றான். அவன் அப்படி சொன்னது தாமதம் அந்தப் பேய் ஓடோடி வயல் கரைக்குச் சென்று… காளைகளுக்கு கலப்பையைப் பூட்டி… நிலம் முழுவதும் உழுது… ஓடோடி… அவன் அருகில் சென்று “நீ சொன்ன மாறியே உன் வயல் முழுசையும் நல்லா உழுதிட்டேன்… இப்பயாச்சும் என் முடியை எனக்கு தா” என்று கேட்டது.
அதற்கு அவன் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்தபடி “வயலை சுத்தம் பண்ணி, கிணறு தோண்டி, உழுதால் முடுஞ்சிதா… வயல்ல எவன் விதை போடுவான்” என்றான். அவன் அப்படி சொன்னது தாமதம் அந்தப் பேய் விதை மூட்டையை தோளில் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் வயல் கரைக்குச் சென்று வயல் முழுவதும் நன்றாக பாத்தி கட்டி… நிலம் நன்றாக நனைந்ததும்… விதைகளை எல்லாம் தூவிவிட்டு ஓடோடி மறுபடியும் அவன் அருகில் சென்று “நீ சொன்ன மாறியே உன் வயலு முழுசும் தூவிட்டேன்…. “இப்பயாச்சும் என் முடியை எனக்கு தா” என்று கேட்டது.
அதற்கு அவன் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்தபடி “வயலை சுத்தம் பண்ணி, கிணறு தோண்டி, உழுது, விதை தூவுனா முடுஞ்சிதா… பயிறு எவன் பண்ணுவான்” என்றான். அவன் அப்படி சொன்னது தாமதம் அந்தப் பேய் ஓடோடி வயல் கரைக்குச் சென்று… பயிருக்கு தேவைப்படும்போது எல்லாம் உரம் போடும்… தண்ணீர் பாய்க்கும்… பூச்சிமருந்து தெளிக்கும்… பசுக்களும் பறவைகளும் வந்து நாசம் பண்ணாம… இராத்திரி பகலாக காவல் காத்து கடைசியில் பயிர் நல்ல செழிப்பாக வளர்ந்ததும் விரைந்து…. ஓடோடி…அவன் அருகில் சென்று “நீ சொன்ன மாறியே உன் வயலு முழுசும் நல்லா செழிப்பா பயிறு பண்ணிட்ட…” இப்பயாச்சும் என் முடியை எனக்கு தா” என்று கேட்டது.
அதற்கு அவன் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்தபடி “வயலை சுத்தம் பண்ணி, கிணறு தோண்டி, உழுது, விதை தூவி, பயிறு பண்ணா முடுஞ்சிதா… அறுத்து குவிச்சி வீட்டுக்கு எவன் எடுத்துட்டு வருவான்” என்றான். அவன் அப்படி சொன்னது தாமதம் அந்தப் பேய் ஓடோடி வயல் கரைக்குச் சென்று… பயிர் முழுவதையும் அறுத்து, குவித்து வண்டியில் ஏற்றி வீட்டிற்கு கொண்டுவந்து “நீ சொன்ன மாறியே பயிர் முழுசையும் உன் வீட்டுல சேர்த்திட்டேன்… இப்பயாது என் முடியை எனக்கு தா” என்று கேட்டது.
அப்போது அவன் அதன் முடியை எடுத்து வந்து “இன்னொரு தடவை இந்த மாதிரி… நீ எங்கயாச்சும்… யாரையாச்சும்… தொல்ல பண்ணனு தெரிஞ்சுதுனு வையி… அவ்ளோதான்… இந்த வாட்டி உன் முடியை வெட்டினதோட விட மாட்டேன். ஒரேயடியா உன் தலையை வெட்டிருவேன்” என்று மிரட்டி அதன் முடியை அதன் கையில் வைத்தான். அவ்வளவுதான்… அந்தப் பேய் முடியை எடுத்தது தாமதம் அடுத்ததாக சுற்றிமுற்றி யாரும் பார்க்காதபடி கீழேயும் மேலேயும் விழுந்து ஓடிப்போனது.
சின்னதம்பி – பெரியதம்பி
ஒரு பெண்ணிற்கு சின்னதம்பி பெரியதம்பி என்று இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டைப் பிள்ளைகள். இரட்டைப் பிள்ளைகள் என்றால் தெரியும் தானே… பார்ப்பதற்கு அச்சசலு ஒரேமாதிரி இருப்பார்கள். சின்னதம்பி யார் என்றோ பெரியதம்பி யார் என்றோ அவர்களாகச் சொல்லவில்லை என்றால் தெரியாது. அவர்களில் சின்னதம்பி மிகவும் அப்பாவி. ஆனால் பெரியதம்பி அப்படி கிடையாது நல்ல புத்திசாலி.
இரண்டு பேரும் வளர்ந்து பெரியவர்களாயினர். பெரியவர்கள் ஆகியும் தாயையே நம்பி இருந்தால் நன்றாகவா இருக்கும். அதனால் ஏதாவது வேலை தேடிக்கொண்டு தன் சொந்த காலில் நிற்க முடிவு செய்தனர்.
பெரியதம்பி தன் ஊரிலேயே விவசாயம் செய்து வந்தான். சின்னதம்பி பக்கத்து ஊரில் ஒரு செட்டியிடம் சென்றான். அந்த செட்டி சரியான கஞ்ச பிசினாரி. அதுமட்டுமில்லை பெரியதாக பொருள் ஏதும் இல்லாதவன். அவன் சின்னதம்பியின் அப்பாவித் தனத்தைப் பார்த்து “பாரு. என்கிட்ட வேலை இருக்கு… ஆனால் இடையில நிக்க கூடாது. கண்டிப்பா செய்யனும். இடையில நின்னனு வையி…. எனக்கு கோழிமுட்டை அளவுல தங்கம் கொடுக்கனும். இதே நான் உன்னை வேலையில் இருந்து எடுத்தேனு வையி. நான் உனக்கு கோழிமுட்டை அளவுல தங்கம் கொடுக்கிறேன் இந்த ஒப்பந்தம் சரினா சேரு. இல்லனா வேணாம்” என்றான். சின்னதம்பிக்கு செட்டியின் தந்திரபுத்தி தெரியாது இல்லையா. அதனால் அப்பாவித்தனமாக சரியென்று வேலையில் சேர்ந்தான்.
அவ்வளவுதான்… அன்றிருந்து செட்டி அவனை இரவும் பகலும் ஒரே வேலையில் போட்டு துவைத்து எடுத்தான். செட்டிக்கு ஒரு பெரிய அங்காடி இருந்தது. தினமும் சின்னதம்பியை அழைத்து “டேய்… சாமானுங்க எல்லாத்தையும் வெளிய எடுத்து சுத்தம் பண்ணு” என்பான். “தினமும் எதுக்குங்கய்யா” என்று கேட்டு விட்டால் போதும். கய்யமுய்யனு எரிந்து விழுந்து “உனக்கு சரின்னா செய்யி… இல்லனா நின்னுடு” என்பான். பாவம் சின்னதம்பி வாயை மூடிக்கொண்டு ஒவ்வொரு நாளும் சாமானை எல்லாம் வெளியே எடுத்து சுத்தம் செய்துவிட்டு மீண்டும் எல்லாவற்றையும் உள்ளே வைப்பான். செட்டி சின்னதம்பியை அழைத்துக் கொண்டு தினமும் தோட்டத்திற்குச் செல்வான் . கிணறு பக்கத்திலேயே ஒரு பெரிய பானை இருக்கும். அது நிரைய தண்ணீர் இறைக்கச் சொல்வான். சின்னதம்பி எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிரம்பவே நிரம்பாது. எதனால் என்றால் அதனடியில் செட்டி ஒரு பெரிய ஓட்டை போட்டிருந்தான். அதனால் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் ஊற்றியதும் காலியாகிவிடும். இவன் அப்பாவி இல்லையா. இவனுக்குத் தண்ணீர் என்னவாகிறதென்றே புரியவில்லை. செட்டி தோட்டம் முழுவதும் நன்கு நனைந்தும் “சரி… சரி… இனி போதும் பானை கூட நிரம்பல, நாளைக்கு பாத்துக்கலாம் வா” என்று அழைத்துச் செல்வார். அப்படி ஒவ்வொரு நாளும் தோட்டம் முழுவதிற்கும் நீர் இறைத்து விடுவான். பாவம் குடம் குடமா தண்ணீர் இறைத்து இறைத்து அவன் கைகள் சிவந்து போய்விடும்.
செட்டிக்கு ஒரு சின்னக் குழந்தை இருந்தது. செட்டி மனைவி சின்ன தம்பியை அழைத்து குழந்தையை தூக்கிக்கொள் என்று கொடுப்பாள். சின்னதம்பி அந்தப் பிள்ளையை இடுப்பில் ஏந்திக்கொண்டே திரிவான். எப்போதாவது கை வலிக்கிறது என்று கொஞ்சம் இறக்கினால் போதும்… அது குவ்வென்று அழ ஆரம்பித்து விடும். அவ்வளவுதான்… வாய்க்கு வந்தபடி செட்டியும் செட்டியோட மனைவியும் திட்டுவார்கள். அதனாலயே பாவம் அவன் எவ்வளவு வலித்தாலும் வலியில் முக்கிக் கொண்டும் முணங்கிக் கொண்டும் அப்படியே குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரிவான்.
இவ்வளவு வேலை வாங்குகிறார்கள் இல்லையா…குறைந்தது சோற்றையாவது ஒழுங்கா போடுவார்களா என்றால் அதுவும் கிடையாது. களி, கஞ்சி, மீந்துபோன, கெட்டுப் போன சோறு, கறிகளைப் போடுவார்கள். பாவம்… அவற்றைத் தின்ன முடியாமல் அவன் உடல் பாதிக்கு பாதி இளைத்துப் போனான். இப்படியே ஒரு மாதம் ஆனபிறகு அவனுக்கு வாழ்க்கை மீதே விரக்தி ஏற்பட்டது. வேலையும் செய்ய முடியவில்லை. நின்று விடலாம் என்றால் ஒப்பந்தப் படி கோழிமுட்டை அளவுக்குத் தங்கம் கொடுக்கனும் இல்லையா. அதோடு அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒருநாள் நடுராத்திரி எல்லோரும் உறங்கியதும் சொல்லாமல் கொல்லாமல் அவர்கள் ஊருக்கு சென்றான். பெரியதம்பி அருகில் சென்று கண்ணீர் வழிய வழிய செட்டி படுத்துகிற பாடுகளை எல்லாம் சொல்லி தேம்பித் தேம்பி அழுதான். பெரியதம்பி நன்கு யோசித்து “டேய்… நீயும் நானும் அச்சசலு ஒரேமாரி இருக்கோம் இல்லையா. நீ தாராளமா இங்கயே இரு. நான் போறேன் செட்டிக் கிட்ட, போவப் போவ என்ன நடுக்குதுனு நீயே பாரு” என்று இராவோடு இராவாக சின்னதம்பிக்குப் பதிலாக செட்டி வீட்டிற்குச் சென்று எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி அங்கேயே படுத்துக் கொண்டான்.
செட்டிக்கு இது எதுவும் தெரியாது இல்லையா… காலையில் எப்போதும் போல அவனை அழைத்து “டேய்… சாமானுங்க எல்லாத்தையும் வெளியில போட்டு சுத்தம் பண்ணு” என்று சொல்லி விட்டு சென்றான். சிறிது நேரங்கழித்து வந்து பார்த்தால் வேற என்ன? பானைகள் எல்லாம் அங்காடி முன்னால் ஒடைந்துபோய் கிடந்தன. இரும்பு சாமான்கள் எல்லாம் நெளிந்து போயிருந்தன. தானியங்கள் எல்லாம் ரோட்டில் கிடந்தன. அவன் அதிர்ந்து போய் கய்யோ முய்யோனு கத்திக்கொண்டு “டேய்… என்னடா இதெல்லாம்” என்று ஓடோடி உள்ளே வந்தான். பெரியதம்பி வெறுமனே கைகளைக் கட்டிக் கொண்டு “நீங்கதானங்க ஐயா சாமான்கள எல்லாம் வெளியே போட்டு சுத்தம் பண்ணுனீங்க. அதனாலதான் முதல்ல எல்லாத்தையும் வெளிய போடுறேன்… அதுக்கப்புறம் சுத்தம் பண்ணுறேன்” என்றான். அதற்கு செட்டி “அப்படியா தூக்கி போட்டு பாடாக்குவ. மெதுவா வைக்க வேணாம்” என்று எரிந்து விழுந்தான். அப்பொழுது பெரியதம்பி கோபமாக “நீங்க எப்படி சொல்றிங்களோ அப்படி செய்யுறது தான் என் வேலை, மெதுவா வைக்கனும்னு முன்னாலயே சொல்லனும் இல்லையா” என்றான். செட்டி முணங்கிக் கொண்டே எல்லாவற்றையும் பொறுக்கி எடுத்து உள்ளே வைத்தான்.
பிறகு அவனை அழைத்து “டேய்… தோட்டக்கரைக்கு போயி பானை நிரைய தண்ணி பிடிச்சிட்டு வா போ” என்றான். பெரியதம்பி சரியென்று போய் இரண்டு பானை தண்ணீர் ஊற்றினான். ஊற்றிய நீர் ஊற்றிய உடனே காலியாகியது. இதென்னப்பா இப்படி காலியாகிறது என்று பானையை எடுத்துப் பார்த்தான். பார்த்தால் வேற என்ன? கீழே அரைக் கையளவு ஓட்டை இருந்தது. “ஓஹோ… இதான் விஷயமா” என்று மெழுகு எடுத்து வந்து அந்த ஓட்டையை அடைத்துப் பானை நிறைய நீர் எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். அவனைப் பார்த்து செட்டி “என்னடா இப்போதான் போன அதுக்குள்ள வந்துட்ட” என்றான். அதற்கு அவன் சிரித்து கொண்டே “என்னங்க ஐயா. பானை நிரைஞ்சிட்டு அதனால வந்துட்டேன்” என்றான். செட்டி ஓடிப்போயி பார்த்தால் வேறு என்ன பானை நிரம்பவும் தண்ணீர் இருந்தது.
பெரியதம்பி மிகவும் சாவகாசமாக விசில் அடித்துக் கொண்டு உட்கார்ந்ததும் செட்டியின் மனைவி அவனை அழைத்து “டேய் இதை தூக்கிக்கிட்டு திரி போ…” என்று குழந்தையைக் கையில் கொடுத்தாள். அவன் பக்கத்தில் மறைவாக தூக்கிக் கொண்டு போயி யாருக்கும் தெரியாமல் அதன் குண்டியில் அழுத்தி ஒரு நுள்ளு நுள்ளினான். அவ்வளவுதான் அது கதறி அழ ஆரம்பித்தது. அவன் பிள்ளையை எடுத்துக் கொண்டு போய் “அம்மா… இது அழுதுட்டே இருக்குங்க” என்று திரும்பவும் செட்டி மனைவியிடமே கொடுத்தான்.
அன்றிருந்து ஒவ்வொரு முறையும் குழந்தையை வாங்கியதும் அதை அழுத்தி ஒரு நுள்ளு நுள்ளுவான். அவ்வளவுதான் அது “ஓ” என்று அழ ஆரம்பித்துவிடும். வேற என்ன சில நாள்களுக்குப் பிறகு பாவம் அந்தக் குழந்தை அவனைப் பாரத்தாலே பயத்தில் நடுங்கும். அவன் தூக்குவதற்கு கை சாய்த்ததும் கெவ்வென்று அழுதுகொண்டே அவங்க அம்மாவை கெட்டியாக பிடித்துக் கொள்ளும். அது எதற்கு இப்படி அழுகிறது என்று தெரியாமல் செட்டியின் மனைவி முணங்கிக் கொண்டு தானே தூக்கிக் கொண்டு திரிய ஆரம்பித்தாள்.
அதோடு… பெரியதம்பி வேலை சோலி எதுவும் இல்லாமல் மாப்பிளை மாதிரி சுற்றித் திரிந்து வந்தான். செட்டிக்கு அவனிடம் என்ன வேலை சொல்வது என்றாலும் பயமாக இருந்தது. எதாவது ஒன்றை உடைத்து விடுவான். அதோடு அவனை எப்படி துரத்துவது என்று யோசிக்கத் தொடங்கினான். போகட்டும் என்று வேலையில் இருந்து நிறுத்திவிடலாமா என்றால் ஒப்பந்தம் படி கோழி முட்டை அளவில் தங்கம் கொடுக்கனும் இல்லையா அதில் அவனுக்கு விருப்பம் இல்லை.
ஒரு நாள் செட்டி மனைவி செட்டியை அழைத்து “அவனை எங்க அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போயி அங்க கொஞ்சநாளுக்கு வேலையில வையி. அவங்க இவனுக்கு நல்லா புத்தி சொல்லுவாங்க” என்றாள். செட்டி சம்மதித்தான்.
மறுநாள் காலையிலேயே செட்டி பெரியதம்பியை அழைத்து “டேய்…. நாம எங்க மாமியார் ஊருக்குப் போவனும் , கிளம்பு” என்றான். பெரியதம்பி சரி என்றான். செட்டியின் மனைவி இருவருக்கும் வேற வேற பொட்டலங்களில் சாப்பாடு கட்டிக் கொடுத்தாள். செட்டியோடதில் நல்ல நல்ல பண்டங்கள், பலகாரங்கள், லட்டுக்கள் வைத்து பெரியதம்பி யோடதில் களியும் வற்றலும் வைத்து “டேய். இது உனக்கு, இது உங்க ஐயாவுக்கு” என்று கொடுத்தாள். சரியென்று இருவரும் புறப்பட்டனர். அப்போதெல்லாம் பஸ்ஸோ இரயிலோ எதுவும் கிடையாது இல்லையா. எங்கு செல்வது என்றாலும் நடந்தே போக வேண்டியதுதான்.
இருவரும் மெதுவாக நடந்து சென்றனர். அப்படி இரண்டு மணி நேரம் நடந்ததும் செட்டிக்கு காலையில் சாப்பிட்டது எல்லாம் ஜீரணமாகி பசி எடுக்க ஆரம்பித்தது. அதோடு ஓரிடத்தில் “டேய்… எனக்கு ரொம்ப பசியாக இருக்கு. போயி அந்த ஆத்துல முகத்தை கழுவின்னு வறேன். சாப்ட்டு போலாம்” என்று சொல்லிவிட்டு முகம் கழுவ சென்றான். செட்டி அப்படி போனானோ இல்லையோ உடனே பெரியதம்பி கடகடனு செட்டியோட பொட்டலத்தைப் பிரித்து அதில் இருந்த லட்டுகள், பண்டங்கள், பலகாரங்கள் என எல்லாவற்றையும் நாக்கை சொட்டை அடித்துக் கொண்டு சுத்தமாக வலித்து தின்னான். தனக்கான பொட்டலத்தைப் பிரித்து அதில் இருந்த களியையும் வற்றலையும் செட்டி பொட்டலத்தில் வைத்து கட்டிவிட்டு எதுவும் தெரியாத அப்பாவி போல அமைதியாக உட்கார்ந்து இருந்தான். செட்டி சுத்தமாக கைகளையும் கால்களையும் கழுவிவிட்டு வந்ததும் “என்னங்க ஐயா. அம்மா களியும் வத்தலும் வச்சிருக்காங்க. திங்க முடியாம செத்து போனேன்னு வையி, இந்த இதுல உங்களுக்கு என்ன வச்சிருக்காங்க” என்றான். செட்டி தன்னுடைய பொட்டலத்தைப் பிரித்தான். பெரியதம்பி அதை எட்டிப் பார்த்து “அடடே உங்களுக்கும் களியும் வத்தலும் தானா உங்களுக்கு நல்லதா வச்சி எனக்கு கெட்டுப்போனத வைச்சிட்டாங்களோனு நினைச்சேன்… அம்மா எவ்ளோ நல்லவங்க. இரண்டு பேருக்கும் ஒரேமாதிரி வச்சிருக்காங்க” என்றான்.
செட்டிக்கு களியையும் வற்றலையும் பார்த்ததும் உயிரே போனது போல் இருந்தது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அதைப் பார்க்கவே பயமாக இருந்தது. எதனால் என்றால் தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எப்போதும் களியும் வற்றலும் தின்றதே இல்லை. ஆனால் வயிற்றிற்குள் பசி புரட்டி எடுத்தது. அதோடு மனசுக்குள்ளேயே புலம்பிக் கொண்டு ஒவ்வொரு பிடியாய் பலவந்தமாக விழுங்கினான். காரம் தாங்க முடியாமல் கண்களில் நீர் வழிந்தது. கொஞ்சம் கூட தின்ன முடியாமல் கையைக் கழுவிக் கொண்டான். மீண்டும் இருவருமாக நடையைக் கட்டினர்.
அப்படி…. கொஞ்ச தூரம் நடக்கவும் செட்டிக்கு களைப்பாக இருந்தது. சரியாக சாப்பிடவும் இல்லை. அதோடு பசியும் அதிகமாகியது… பெரியதம்பியை அழைத்து “டேய்… என்னால நடக்க முடில. நீ சீக்கிரம் போயி எங்க மாமியார்ட நல்ல சாப்பாடு பண்ணி நான் வந்ததும் போடச் சொல்லு, நான் பொறுமையா வறேன்” என்றான். பெரியதம்பி சரியென்று ஓடோடி போய் செட்டி மாமியார் வீட்டை சென்று அடைந்தான்.
அவன் செட்டி மாமியார் வீட்டிற்கு சென்று “என்ன உன் மகள்தான் அனுப்பிருக்காள். உன் மருமவன் பின்னால வந்துட்டு இருக்காரு. மருமவன் வறாருனு நல்ல நல்ல பண்டம் பலகாரம்லாம் பண்ணி போடுவிங்க. இதுல உங்க மருமவனுக்கு மஞ்சள் காமாலை வேற வந்திருக்கு. மாசக் கணக்குல பத்தியம் இருக்கனுமாம். களியையும் தொவையலையும் தவுர்த்து வேற எதையும் திங்கக் கூடாதுனு வைத்தியர் சொல்லிருக்காராம். பாத்து கவனம்” என்று கூறினான். அவர்கள் உண்மையென்று நம்பி “சரி” என்றனர்.
செட்டி பொறுமையாக நடந்து நடந்து வந்து சேர்வதற்கு மத்தியானம் ஆனது. வயிறு சலசலனு சத்தம் போட்டது. எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தனர். செட்டியின் அத்தை எல்லோருக்கும் பண்டம் பலகாரங்கள் வைத்தாள். மருமகனுக்கு மட்டும் களியும் துவையலும் வைத்தாள். அதைப் பார்த்ததும் செட்டி ஆடிப்போனான். சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நாக்கை சப்பைக் கொட்டி மூக்கு புடைக்க தின்று கொண்டு இருந்தனர். அதைப் பார்க்க செட்டிக்கு வாயில் எச்சில் ஊறியது. ஆனால் கேட்டால் எல்லோரும் என்ன நினைப்பார்களோ என்னமோ என்று நினைத்து பசியையும் பொறுக்க முடியாமல் அந்தக் களியையும் துவையலையுமே தின்றான். எப்போதும் பழக்கம் இல்லை இல்லையா. அதனால் அதை தின்ன கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் செட்டிக்கு வயிறு குடகுட என்று குடைய ஆரம்பித்தது. செம்பு எடுத்துக் கொண்டு ஊர் முனையில் இருக்கிற குளத்துக் கரைக்குப் போய் வந்தான். வந்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் குடகுட என்று குடைந்தது. செட்டி மீண்டும் போய் வந்தான். இராத்திரி ஆனது. மீண்டும் வழக்கம் போலவே. அத்தை எல்லோருக்கும் பண்டம் பலகாரங்கள் வைத்து மருமகனுக்கு மட்டும் களியும் துவையலும் வைத்தாள். அத்தை எதற்கு இப்படி செய்கிறார்கள் என்று புரியாமல்… கக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பாவம் செட்டி மீண்டும் அவற்றையே தின்றான்.
இராத்திரி எல்லோரும் வராண்டாவில் கட்டிலில் படுத்துத் தூங்கினர். செட்டிக்கு என்னமோ வயிறு குடைய ஆரம்பித்தது. சுற்றியும் இருட்டு. பயமாக இருந்தது. மெதுவாக பெரியதம்பியை எழுப்பி “டேய்… வயிறு குடகுடனு இருக்கு. போயி செம்பு எடுத்துன்னு வா போ… குளத்துக் கரைக்கு போயிட்டு வருவோம்” என்றான்.
பெரியதம்பி அங்குமிங்கும் பார்த்து “ஐயா… இந்த ராத்ரில குளத்து கரைக்கு ஒரே எத்தனை தடவை போவிங்க. இன்னைக்கு அமாவாசை வேற. பாம்புங்களும், தேளுமா சுத்திக்கினு இருக்கும். மிதிச்சிட்டங்கனா அவ்ளோதான்” என்று பயமுறுத்தினான்.
செட்டி வயிற்றைப் பிடித்துக் கொண்டு “பின்ன எப்படி ரா” என்றான். அதற்கு பெரியதம்பி “எல்லோரும் நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்காங்க. மேல கல்லை தூக்கி போட்டா கூட எந்திருக்க மாட்டாங்க போல. நான் ஒரு பானைய எடுத்துட்டு வறேன். உங்களுக்கு வயிறு கலக்கிறப்ப எல்லாம் அதுல உக்காருங்க. விடியிறதுக்கு முன்னால இருட்டுல என்னை எழுப்பி விடுங்க நான் அதை தூக்கினு போயி தூரமா போட்டுட்டு வந்துடுறேன்” என்றான். செட்டி “சரி” என்றான். பெரியதம்பி ஒரு பானை கொண்டு வந்து செட்டி கட்டிலுக்கு அருகில் வைத்துவிட்டு உறங்கினான். செட்டிக்கு இராத்திரி முழுக்க வயிறு கலக்கிக் கொண்டே இருந்தது. அதோடு பானையும் மெதுவாக நிறைந்தது.
விடிய மணி நான்கு ஆகியது.. இன்னும் ஒரு மணிநேரம் கடந்தால் ஒவ்வொருத்தராக எழ ஆரம்பித்து விடுவர். செட்டி மெதுவாக பெரியதம்பிக்கு அருகில் சென்று “டேய்… எழுந்திரிடா… விடிய போவுது. பானையை போட்டுன்னு வா போ” என்றான். பெரியதம்பி எதுவும் கேட்காததுபோல் அப்படியே படுத்திருந்தான். செட்டி எத்தனை முறை தட்டினாலும் ஒரு அசைவும் இல்லை பதிலும் இல்லை… செட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. விடிந்ததும் அத்தை,மாமா, மாப்பிளைங்க பார்த்தால் வேறு என்ன? மரியாதை இருக்காது. அதோடு வேறு வழியில்லை என்று நினைத்து தானே போட்டுவிட்டு வருவதற்காக பானையை தூக்கிக் கொண்டு அடிமேல் அடி வைத்து மெதுவாக வீட்டை விட்டு வெளியேறினான்.
செட்டி அப்படி வெளியே போனானோ இல்லையோ பெரியதம்பி படக்கென்று எழுந்தான். ஓடோடி போய் அத்தை,மாமாவையும் மாப்பிள்ளைகளையும் படபடனு எழுப்பி “நீங்க உங்க மருமவனுக்கு நேத்து சரியா மரியாதை கொடுக்கலயாம். கோவபட்டாரு. அதனால காலையிலேயே யாருடயும் சொல்லாம கொல்லாம போய்ட்டு இருக்காரு” என்றான். அவர்கள் உண்மையா இல்லையானு எழுந்து வந்து பார்த்தால் வேற என்ன செட்டி படுக்கையில் இல்லை. வேகவேகமா வெளியே வந்து பார்த்தால் தூரத்தில் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது.
”மருமவனே கொஞ்சம் நில்லு” என்று சத்தமாகக் கத்தினர். அந்த சத்தத்தைக் கேட்டு செட்டி ஆடிப் போனான். கையில் பானையைப் பார்த்தால் வேற எதாவது இருக்கா? மரியாதையே போயிடும் இல்லையா, அதனால் அவர்கள் கத்துவதைக் கேட்காதது போல நடித்தவாறு பரபரனு நடையில் வேகத்தைக் கூட்டினான். அதைப் பார்த்து அத்தையும் மாமாவும் மருமகன் நிஜமாகவே கோபத்தில் போகிறார் என்று நினைத்து மருமகனை திரும்ப அழைத்து வருவதற்காக “மருமவனே.. மருமவனே..” என்று கத்திக் கொண்டு பின்னாலே சென்றனர்.
அவ்வளவுதான்… அதைப் பார்த்து செட்டி அதிர்ந்து போய் அவர்களிடம் மாட்டக்கூடாது என்று தானும் ஓட்டமும் நடையுமாய் செல்ல ஆரம்பித்தான். செட்டி பின்னாலேயே அத்தையும் மாமாவும் மாப்பிள்ளைகளும் என எல்லோரும் நில்லுங்க நில்லுங்க என்று கத்திக் கொண்டே நடையில் வேகத்தைக் கூட்டினர். செட்டி தடாலடியாக முல் மேலும் புதர் மேலும் தட்டித் தடுமாறி நடந்து கொண்டிருந்தான். அதற்கிடையில் எதிரில் ஒரு பெரிய பாறை குறுக்காகக் கிடந்தது. செட்டி அதைப் பார்க்கவில்லை. அவ்வளவுதான் அதில் கால் தடுமாறி டமார்னு விழுந்து குப்புற அடித்து விழுந்து கிடந்தான். கையில் இருந்த பானையும் பறந்து போய் கீழே விழுந்து படார்னு உடைந்தது. அவ்வளவுதான் அதில் இருந்தது எல்லாம் அவன் உடல் முழுக்கக் கொட்டியது. அங்கே பின்னாலயே வந்த அத்தையும் மாமாவும் அந்த நாற்றத்திற்கு மூக்கைப் பொத்தினர். மாப்பிள்ளையும் முகத்தை அவ்வளவு விகாரமாக வைத்துக் கொண்டு “என்ன மாமா… இதெல்லாம்” என்றான். செட்டி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு பெரியதம்பியால் தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் கண்ணீர் விட்டு அழுது கொண்டே சொன்னான்.
அது எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “ஒரு கோழி முட்டை அளவு தங்கத்துக்கு ஏன் இவ்ளோ கஷ்டம் உங்களுக்கு. இப்டியே விட்டா போவ போவ இவன் இன்னும் உங்கள என்னென்ன கஷ்டம்லாம் படுத்துறானோ… முதல்ல இப்பயே அவனை வேலையில இருந்து தூக்குங்க” என்றனர். செட்டி சரியென்று பெரியதம்பியை வேலையில் இருந்து நீக்கி விட்டு ஒப்பந்தப் படி கோழிமுட்டை அளவிலான தங்கத்தை அவன் கையில் கொடுத்து அனுப்பினான்.
பெரியதம்பி மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டே அதை எடுத்துக் கொண்டு அவர்கள் ஊருக்கு சென்று சின்னதம்பி கையில் வைத்தான்.
டிங்குருபிள்ள
ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான். சின்ன வயதிலேயே அவனுடைய அம்மா அப்பா இறந்து போயினர். அதோடு அப்பா அம்மா இல்லாத பையனே என்று அவனோட பாட்டி அவனை பாசமா, மிகுந்த அன்போடு வளர்த்தாள். அவன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து வந்தாள். தினம் ஒரு தீனிப்பண்டம் செய்து கொடுப்பாள். அதோடு அவன் அவை எல்லாவற்றையும் தின்று தின்று நன்கு கொழுத்துப் போனான்.
ஒருநாள் காலையிலேயே பாட்டி அவனை தலைக்குக் குளிக்க வைத்து, புது துணிகள் போட்டு, அழகா உச்சி எடுத்து தலை சீவி, நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து, கையில் சிலேட்டு குச்சியைக் கொடுத்து “அடேய் நான்னா… நீ நல்லா படிச்சி பெரிய டாக்டரா ஆவனும்டா” என்று ஆசையாக வாழ்த்தி பள்ளியில் சேர்த்தாள்.
அவன் சரியான குண்டு இல்லையா… அதனால் பள்ளியில் பிள்ளைகள் எல்லோரும் அவனைப் பார்த்தாலே “ஏய் குண்டன் வந்திட்டான்… ஏய் குண்டன் வந்திட்டான்” என்று ஒரே கிண்டல் கேலி செய்ய ஆரம்பித்தனர். அப்படி சும்மா யாராவது நம்மை கிண்டல் செய்தால் நமக்கு அழுகை வரும் இல்லையா… பாவம் அவனுக்கும் கூட துக்கத்தில் கண்களில் கண்ணீர் வழிய தேம்பி தேம்பி அழுது கொண்டு அப்படியே வீட்டிற்கு திரும்பி வந்தான்.
பாட்டி அவனை அருகில் அழைத்து பாராட்டி சீராட்டி “ஏன்டா எதுக்கு இப்படி தேம்பி தேம்பி அழுதுக்கினு இருக்க…உனக்கு அப்படி என்ன கவலை” என்று கேட்டாள். அதற்கு அவன் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு “பாட்டி… பாட்டி… நான் இனி அந்த பள்ளிக் கூடத்துக்கு போவயே மாட்டேன்… எல்லோரும் சும்மா குண்டன்… குண்டனு கிண்டல் பண்றாங்க” என்றான். பாட்டி சேலை முடியால் அவன் கண்ணீரைத் துடைத்து விட்டு் “இனி உன்னை யாராச்சும் அப்படி சொன்னா உடனே டிங்குருபிள்ளனு சொல்லு… என்ன நடக்குதுனு நீயே பார்ப்ப” என்றாள்.
சரியென்று அவன் சிலேட் குச்சியை எடுத்துக் கொண்டு மீண்டும் பள்ளிக் கூடத்திற்குச் சென்றான். அவனைப் பார்த்ததும் பிள்ளைகள் எல்லோரும் வானத்துக்கும் பூமிக்கும் விழுந்து விழுந்து சிரித்து கொண்டே “டேய்… குண்டன் திரும்பயும் பள்ளியூடத்துக்கு வந்துட்டான் டோய்”… சத்துணவு மூட்டலாம் பத்திரம் டோய்” என்று ஒரே கிண்டலும் கேலியும் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் அப்படி கிண்டல் செய்ய செய்ய அவன் கண்களில் கண்ணீராய் வழிந்தது. அதற்கிடையில் அவனுக்குப் பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது. உடனே எல்லோரையும் கோபமாக பார்த்து ‘உங்க எல்லோருக்கும் டிங்குருபிள்ள” என்று சத்தமாக ஒரு கத்து கத்தினான்.
அவ்வளவுதான்… அங்கு இருந்தவர்கள் அங்கு அங்கேயே படார்னு கீழே விழுந்து இறந்து போயினர்.
சிறிது நேரத்தில் அவர்கள் ஆசிரியர் பாடம் எடுப்பதற்காக பள்ளிக்கு வந்தார். வந்து பார்த்தால் வேற என்ன… இவனைத் தவிர எல்லாரும் இறந்து கிடந்தனர். “என்னடா… ஆச்சு இவங்களுக்கு… எல்லாரும் இப்படி இறந்து கிடக்கிறாங்க” என்று கேட்டார். அவன் நடந்தது அனைத்தையும் கூறினான். அதோடு ஐயாவிற்கு கோபம் வந்து கட்டையை எடுத்து “என்ன வேலை பண்ணிருக்க குண்டா… இரு உன்ன என்ன பண்றனு பாரு” என்று கையிலும் காலிலுமாக அடித்தார். ஐயாவும் கூட குண்டா என்று அடிக்கவும் அவனுக்கு மிகவும் கோபம் வந்தது ‘ஐயாவுக்கு டிங்குருபிள்ள’ என்றான்.
அவ்வளவுதான்… ஐயா நாற்காலியில் இருந்து படார்னு கீழே விழுந்து இறந்து போனார்.
பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் யாரும் இல்லை. ஆசிரியர் கூட இல்லை. இனியும் அங்கே இருந்து என்ன செய்வது. அதனால் அவன் திரும்ப வீட்டிற்கு வந்தான். அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்த பேரனைப் பார்த்து பாட்டி கோபமாக “ஏன்டா… உனக்கு எதும் நல்ல காலமே வராதா… பள்ளூடத்துக்கு போயி அஞ்சு நிமிஷம் கூட ஆவல… அதுக்குள்ள பைய தூக்கிட்டு வந்துட்ட. தின்னு தின்னு நல்லா ஒடம்புதான் வளர்ந்துச்சே தவிர்த்து அறிவு வளறல… குண்டு பயலே” என்று திட்டினாள். பாட்டியும் தன்னை குண்டன் என்று திட்டியதும் அவனுக்கு மிகவும் கோபம் வந்தது. உடனே “பாட்டிக்கு டிங்குருபிள்ள” என்றான்.
அவ்வளவுதான்… பாட்டி இருந்த நிலையிலே படார்னு கீழே விழுந்து இறந்து போனாள்.
ஒருத்தனாகவே வீட்டில் இருக்க முடியாமல் ரொம்ப நேரம் அங்கும் இங்குமாகச் சுற்றினான். சிறிது நேரத்தில் பசி எடுத்தது. சாப்பிட வீட்டில் எதுவும் இல்லை. செய்வதற்கு பாட்டியும் இல்லை. விளையாடலாமா என்றால் பிள்ளைகள் யாரும் இல்லை. சரி பள்ளிக் கூடத்துக்காவது போகலாமா என்றால் வாத்தியாரும் இல்லை. அதோடு அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சோகமாக உட்கார்ந்து இருந்தான். அப்போது எதிரில் கண்ணாடி இருந்தது. அதற்குள்ளே சாய்ந்து பார்த்தான். அவன் உருவம் அவனுக்கே குண்டாக கேலி செய்வது போல் தெரிந்தது. உடனே கோபமாக கண்ணாடியைப் பார்த்து விரலை நீட்டி “உனக்கு டிங்குருபிள்ள” என்றான்.
அவ்வளவுதான்… பாவம்… அவனும் கீழே விழுந்து இறந்து போனான்.
யாரு பெரியவங்க
ஒரு ஊரில் இராமையா என்ற ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு நாள் இந்த உலகத்தில் எல்லரையும் விட பெரியவங்க யார்? என்று ஒரு சந்தேகம் வந்தது. சந்தேகம் வந்தால் உடனே தீர்த்துக்கொள்ள வேண்டும் இல்லையா… கையோடு எப்படித் தெரிந்துக் கொள்வது என்று பார்க்கிற ஒவ்வொருவரையும் கேட்க ஆரம்பித்தான். ஆனால் யாரைக் கேட்டாலும் “எனக்கு தெரியாது… எனக்கு தெரியாது” என்றார்களே தவிர யாரும் பதில் சொல்லவில்லை.
ஒருநாள் அவர்கள் ஊருக்குத் துறவி ஒருவர் வந்தார். இராமையா ஓடோடி அந்தத் துறவியிடம் சென்று “சாமி… சாமி… இந்த உலகத்துல எல்லார விடயும் பெரியவங்க யாரு” என்று கேட்டான். அதற்கு அந்தத் துறவி சிறியதாக ஒரு புன்னகை செய்துவிட்டு தன் பையிலிருந்து சின்னதாக ஒரு சாமி சிலையை எடுத்து இராமையாவிடம் கொடுத்து “பாரு ராமையா… இந்த உலகத்துல தெய்வத்தை விட பெரிய ஆளு யாரும் கிடையாது… எடுத்துட்டு போயி இந்த சிலைக்கு பூஜைலாம் பண்ணு போ” என்றார்.
இராமையா அப்போது இருந்து தினமும் சாமி சிலைக்கு பூஜை செய்து, பிரசாதம் வைத்து விட்டு அதன் பிறகு தான் உண்பான். ஒருநாள் எப்போதும் போல் பிரசாதம் வைத்துவிட்டு திரும்பவும் பின்னால் இருந்து படார்னு சத்தம் வந்தது. “என்னதான் ஆச்சு” என்று திரும்பி பார்த்தால் வேற என்ன…ஓர் எலி சாமி சிலையைக் கீழே தள்ளிப் போட்டுவிட்டு பிரசாதத்தைத் தின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த இராமையா “அடடே… இத்தனை நாளா கடவுள்தான் பெரிய ஆளுனு நினைச்சி தேவையில்லாம பூஜை எல்லாம் பண்ணிட்டனே… ஆனால் அந்த கடவுள் என்ன பெரிய ஆளு. அந்த கடவுளை கீழே தள்ளி போட்ட இந்த எலிதான் உண்மையிலே பெருசு” என்று நினைத்து அன்றிருந்து எலிக்கு பூஜை செய்து பிரசாதம் வைத்து வந்தான்.
ஒருநாள் எலிக்கு பிரசாதம் வைத்து பூஜை செய்து கொண்டிருந்தபோது அந்த எலியைப் பார்த்த ஒரு பூனை “அப்பா… எத்தனை நாள் கழிச்சி மாட்டிருக்கு இது” என்று அதைப் பிடித்து ஒரு வழி பண்ணலாம் என்று ஒரு தாவு தாவியது. அவ்வளவுதான்… பூனையைப் பார்த்து எலி ஆடிப் போய் கீச்சு கீச்சு என்று சத்தம் போட்டுக் கொண்டு அதனிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் சர்ரென ஓடிப் போனது. அதைப் பார்த்த இராமையா ”அடடே… இத்தனை நாளா எலிதான் பெருசுனு நினைச்சி தேவையில்லாம பூஜை எல்லாம் பண்ணிட்டனே… ஆனால் இந்த எலி என்ன பெருசு… அதைத் விரட்டுன இந்த பூனைதான் உண்மையிலே பெருசு” என்று நினைத்து அன்றிருந்து பூனைக்கு பூஜை செய்து பிரசாதம் வைத்து வந்தான்.
ஒருநாள் பூனை பிரசாதம் தின்று கொண்டிருந்தபோது எங்கிருந்தோ ஒரு நாய் வந்து “அப்பா… எத்தனை நாளுக்கு அப்புறம் பாக்கிறேன்” என்று நினைத்து அதைப் பிடிப்பதற்கு ஒரு தாவு தாவியது. அவ்வளவுதான்… பூனை ஆடிப் போய் அதனிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் ‘ம்யாவ் ம்யாவ்’ என்று கத்திக் கொண்டு சர்ரென ஓடிப் போனது. அதைப் பார்த்த இராமையா “அடடே… இத்தனை நாளா பூனைதான் பெருசுனு நினைச்சி தேவையல்லாம பூஜை எல்லாம் பண்ணிட்டனே… ஆனால் இந்த பூனை என்ன பெருசு… இதை விரட்டுன அந்த நாய்தான் உண்மையிலே பெருசு” என்று அன்றிருந்து நாய்க்கு பூஜை செய்து பிரசாதம் வைத்து வந்தான்.
அந்த நாய் தினமும் பிரசாதத்தை நல்லா மொக்கு மொக்குனு மொக்கி கொழுப்பேறி பருத்துப் போய் இருந்தது. ஒருநாள் இராமய்யாவுக்கு காய்ச்சல் வந்து படுக்கையில் இருந்தே எழுந்திரிக்க முடியாமல் போனான். நாய்க்கு தினமும் காலையிலே தின்னு பழகிப் போச்சு இல்லையா… அதனால் “இது என்னடா எனக்கு இன்னும் பிரசாதம் வைக்கல” என்று வீட்டிற்குள் நுழைந்து அடுப்பில் இருந்த சோற்றுப் பானைகள் எல்லாவற்றையும் கீழே இழுத்து போட்டு நக்கத் தொடங்கியது.
அப்பொழுதே உள்ளே வந்த இராமையாவின் மனைவி உடைந்து போன பானைகளையும் நாயையும் பார்த்து “ஓய் திருட்டு கொட்டா…. சோத்து பானைய எல்லாம் உடைக்கிறியா” என்று மூலையில் இருந்த துடப்பக் கட்டையை எடுத்து அதை கீழேயும் மேலேயும் போட்டு புரட்டி எடுத்தாள். அந்த அடி தாங்க முடியாமல் அது குய்யிகுய்யினு கத்திக் கொண்டே ஓடிப் போனது. அதைப் பார்த்த இராமையா “அடடே… இத்தனை நாளா நாய்தான் பெருசுனு நினைச்சி தேவையல்லாம பூஜை எல்லாம் பண்ணிட்டனே… ஆனால் அந்த நாய் என்ன பெருசு… அதை கீழேயும் மேலேயும் போட்டு புரட்டி எடுத்த என் பொண்டாட்டிதான் உண்மையிலே பெரிய ஆளு” என்று அன்றிருந்து மனைவிக்கு பூஜை செய்து பிரசாதம் வைத்து வந்தான்.
அதைப் பார்த்து அவள் “அப்பா… நான் எவ்ளோ பெரிய அதிர்ஷ்டகாரி… என் புருஷன் என்ன எவ்ளோ நல்லா பாத்துக்கிறாரு” என்று பூரித்துப் போனாள். ஒருநாள் அவள் கறி செய்ய… செய்ய நினைவு இல்லாமல் இரண்டு முறை காரம் போட்டுவிட்டாள். இராமய்யா வாயில் ஒரு பிடி வைத்தது தாமதம் வாய் முழுதும் அப்படியே எரிந்தது. அதோடு அவனுக்கு மனைவி மேல் பயங்கரமான கோபம் வந்து “ஓய் திருட்டுக் கொட்டா… கறியில இவ்ளோ காரமா போடுவ” என்று முடியைப் பிடித்து நங்குநங்குனு நான்கு குத்து குத்தினான். அவள் பயத்தில் நடுநடுங்கி போய் தப்பு நடந்துபோச்சு என்று அவன் காலைப் பிடித்துக் கொண்டாள்.
அவன் “அடடே… இத்தனை நாளா… என் பொண்டாட்டிதான் பெரிய ஆளுனு தேவையில்லாம பூஜை எல்லாம் பண்ணிட்டனே… ஆனால் என் பொண்டாட்டி என்ன பெரிய ஆளு… என்னைப் பாத்து பயத்துல கிடுகிடுனு நடுங்குறா. அப்படினா நான்தான் எல்லாரை விடயும் பெரிய ஆளு” என்று அன்றிருந்து அவன் மற்றவர்களுக்கு பூஜை செய்வதை நிறுத்திவிட்டு தனக்கு தானே செய்து வந்தான்.
யாக் தூ
ஒரு ஊரில் ஐயர் ஒருவன் இருந்தான். அவன் அதிக மூடநம்பிக்கைகளைக் கொண்டவன். எப்போதும் பூஜைகளும் ஜபங்களுமாக செய்து கொண்டு இருப்பான். நடந்ததையும் நடக்காததையும் நினைத்து நினைத்து பயப்படுவான். காப்புக் கட்டியிருக்கும் போது மனைவி, குழந்தைகளைக் கூட அருகில் வர விடமாட்டான்.
ஒருமுறை அவர் மனைவி சமைத்துக் கொண்டிருந்த போது பசியாக இருக்கிறதென்று ஒரு தேங்காய்த் துண்டை எடுத்துத் தின்று கொண்டிருந்தாள். அப்போது பக்கத்துவீட்டுப் பெண் ஒத்தாசைக்காக அவளை அழைத்தாள். அவள் தின்று கொண்டிருந்த அந்த தேங்காய்த் துண்டை அங்கேயே அலமாரியில் வைத்துவிட்டு வெளியே சென்றாள். அப்பொழுது தான் அந்த ஐயர் குளித்து விட்டு காப்பு கட்டிக் கொண்டு வெளியே வந்தான். முந்தைய நாள் முழுவதும் விரதம் இருந்ததனால் நன்கு பசி எடுத்தது. பசி தாங்க முடியாமல் ஏதாவது கிடைக்குமா என்று சமையலறைக்குள் சென்றான். அங்கு அலமாரியில் தேங்காய்த் துண்டைக் கண்டான். அது மனைவி கடித்து விட்டு வைத்தது என்று அவனுக்கு தெரியாது… கையோடு அந்தத் துண்டை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தான்.
கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் அவனோட மனைவி அங்கு வந்தாள். தேங்காயத் துண்டை அலமாரியில் தேடினாள். அதைப் பார்த்து அவர் “என்ன எதை… தேடிட்ருக்க. என்ன வேணும்” என்று கேட்டான். அதற்கு அவள் “இப்போதான் தின்னுட்டு தேங்காய்த் துண்டு ஒன்னை இங்க வச்சிட்டு போனேன், அதைத்தான் தேடிட்ருக்கேன்” என்றாள். அதைக் கேட்டதும் அவன் ஆடிப் போனான்.
”என்னது… அந்த தேங்காத் துண்டு நீ எச்சி பண்ணதா… என்ன அபச்சாரம். உன் எச்சியையா தின்னேன்” என்று வாயில் தண்ணீர் ஊற்றி அலும்பு… அலும்பு… என்று அலும்பினான். அதைப் பார்த்து அவள் “என்னங்க நீங்க வேற… புருஷன் பொஞ்சாதிக்குள்ள என்னங்க எச்சி” என்றாள். அதற்கு அவன் கோபமாக அவளைத் திட்டிய திட்டு ஒருபாடு திட்டி விட்டு “உனக்கென்ன தெரியும் சாஸ்திரம் சம்பிரதாயம்லாம் ஆச்சாரம்னா ஆச்சாரம் தான். இதுவரைக்கும் நான் பண்ண புண்ணியங்கள எல்லாம் நாசம் பண்ணிட்டியே” என்று தலையில் தலையில் அடித்துக் கொண்டு அந்த ஊரில் இருக்கிற பெரிய பண்டிதரிடம் சென்றான். அவரிடம் நடந்தது அனைத்தையும் கூறினான்.
அந்தப் பண்டிதர் அவனிடம் இருந்து ஐந்நூறு ரூபாய் வாங்கி விட்டு பெரிய பெரிய புத்தகங்களை எல்லாம் புரட்டி, அரைமணி நேரம் காற்றிலே பார்த்தவாறு ஏதேதோ கணக்கு எல்லாம் போட்டு “பாரு ஐயரே… நீ யாராவது ஒரு மகா பதிவிரதா கை சமையல சாப்பிட்டா போதும். உன் பாவம் எல்லாம் போயிடும்” என்று கூறினான். அதற்கு அந்த ஐயர் “அது மாதிரி பதிவிரதா எங்க இருக்காங்களோ கொஞ்சம் சொல்லுங்க சாமி” என்றான். பண்டிதர் சிறிது நேரம் யோசித்து “பக்கத்து ஊர்ல சேஷம்மானு ஒரு நல்ல பதிவிரதா இருக்கிறாள். அங்க போ” என்று கூறினான். ஐயர் அடுத்த நாள் காலையிலே தலைக்குக் குளித்து விட்டு பக்கத்து ஊருக்கு புறப்பட்டான். சேஷம்மா வீட்டை அடைந்து தான் வந்த வேலையைக் கூறினான். அதற்கு அவள் “சரி ஐயரே… அதுல என்ன இருக்கு… கொஞ்ச நேரம் உட்காரு… சமையல் ஆனதும் கூப்பிடுறேன்” என்று அந்த ஐயரை உட்கார வைத்துவிட்டு சமையல் வேலையில் மூழ்கினாள்.
சமையல் முடிந்ததும் மருமகளை அழைத்து அந்த ஐயருக்கு பரிமாறச் சொன்னாள். அவள் அவருக்கு சோறு, பருப்பு எல்லாம் பரிமாறிவிட்டு கடைசியாக வீட்டில் இருந்த பாயாசம் அனைத்தையும் அவருக்கே ஊற்றினாள். அதைப் பார்த்து அத்தை மருமகளை உள்ளே அழைத்து “என்ன… பாயாசம் எல்லாத்தையும் அவருக்கே ஊத்திட்ட. கொஞ்சம் கூட நமக்கு இல்லாம” என்றாள். அதற்கு அவள் குரலைத் தாழ்த்தி “ஒன்னும் இல்லை அத்தை… இங்க நாம வேலை பார்த்திட்டு இருந்தப்ப பக்கத்து வீட்டு குட்டி நாய் வந்து பயாசத்துல பாதிய லொடலொடனு நக்கியே குடிச்சிடுச்சு. அதான் அதை எதுக்கு தூர போடுவானேனு எல்லாத்தையும் அவருக்கே ஊத்திட்டேன்” என்றாள். அப்பொழுது கை கழுவுவதற்கு அந்தப் பக்கம் வந்த ஐயருக்கு அவர்கள் பேசியது எல்லாம் காதில் விழுந்தது. “தூ… தூ… இவ்ளோ நேரம் நான் தின்னது நாய் எச்சியயா” என்று அந்த அத்தையையும் மருமகளையும் திட்டின திட்டு ஒருபாடு நல்லா திட்டிவிட்டு வேக வேகமாக வீட்டிற்கு வெளியே வந்து தின்றது எல்லாவற்றையும் யாக்கு யாக்கென்று கையை வாயில் விட்டு வாந்தி எடுத்தான். திரும்பி பொறுமையாக வீட்டிற்குப் புறப்பட்டான். கொஞ்ச தூரம் நடக்கவும் நன்கு களைத்துப் போனான். ஒரு வீட்டின் முன்னால் சாய்ந்தான்.
கொஞ்சம் வெத்திலை பாக்கு போடலாம் என்று இடுப்பில் சொறுகி இருந்த பையை எடுத்தான். அதில் வெத்தலை, சுண்ணாம்பு இருந்தன ஆனால் பாக்கு இல்லை. அதனால் அவன் அந்த வீட்டுப் பெண்ணை அழைத்து “அம்மா… எதும் தப்பா எடுத்துக்காம கொட்டை பாக்கு ஒன்னு இருந்தா கொடுங்கம்மா… உங்களுக்கு புண்ணியமா போவும்” என்றான். அதற்கு அவள் “அதுக்கு என்ன ஐயரே.. கொட்டை பாக்கு தானே… கொண்டு வறேன் இருங்க” என்று உள்ளே சென்று கொட்டைப் பாக்கு ஒன்றை எடுத்துவந்து கொடுத்தாள்.
ஐயர் அந்தப் பாக்கை வாயில் போட்டு க்க்ஷணத்தில் படபடனு நொறுக்கி மென்று கொண்டிருந்தார். அதைப் பார்த்து அந்த வீட்டுப் பெண் “அப்பா… உங்களோட பல்லு பயங்கர வலிமையானதுதான் சாதாரண பல்லு கிடையாது ஐயரே… இரும்பு பல்லு” என்று மூக்கில் விரல் வைத்தாள். அதற்கு ஐயரும் “என்னாச்சுங்கமா… எகுக்கு அப்டி மெச்சிக்கிறீங்க” என்று கேட்டான். அதற்கு அவள் “அது ஒன்னும் இல்லை ஐயரே… அந்தப் பாக்கை நான் கடிச்சேன்… என் புருஷன் கடிச்சாரு… மவன் கடிச்சான்… என் மருமவள் கடிச்சாள்… கடைசியா வீட்டுக்கு வந்த சொந்தக்காரங்க எல்லாரும் கடிச்சாங்க. அப்பலாம் அது ஒரு துரும்பு கூட உடையல. அப்டி அவ்ளோ கெட்டியான பாக்கை நீங்க ஒரே கடில பட்டுபட்டுனு உடச்சிட்டிங்களே. அதான் அப்டி மெச்சிக்கினேன்” என்றாள். அதைக் கேட்டதும் அந்த ஐயர் ஆடிப் போனான்.
“என்னது… இப்ப நான் சவிச்சிக்கினு இருக்கிற பாக்கு இத்தன பேரு எச்சி பண்ணதா” எனறு அவளை திட்டின திட்டு ஒருபாடு நல்லா திட்டிவிட்டு “தூ…” என்று வாயில் இருந்ததை எல்லாம் துப்பினான். வாயைக் கழுவலாம் என்று சுற்றி முற்றியும் பார்த்தால் ஒரு வீட்டின் முன்பு பானையில் தண்ணீர் இருப்பது தெரிந்தது. அவன் ஓடோடிப் போய் அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்துக் கொண்டிருந்தான்.
அதற்கிடையில் அந்த வீட்டுப் பெண் அதைப் பார்த்து கடகடனு வெளியே வந்து “என்ன ஐயரே… தண்ணி வேணும்னா கேட்டு வாங்கிருக்கலாம் இல்லயா… அப்படி பன்னிங்க வாய் வச்ச தண்ணில கழுவுறதுக்கு பதிலா” என்றாள். அதைக் கேட்டதும் அவன் ஆடிப் போய் “என்னது இது பன்னி வாய் வச்ச தண்ணியா” என்று இன்னொரு தடவை உள்ளிருப்பது எல்லாவற்றையும் பொலக் பொலக் என்று கக்கினான்.
“பொஞ்சாதி எச்சி தானேனு பேசாம வீட்டுலயே இருந்திருக்கலாம். தோஷம்… தோஷம்னு… அழைஞ்சதுக்கு எனக்கு இது தேவைதான்” என்று நினைத்துக் கொண்டு கம்முனு வீட்டுக்கு செல்லும் வழியைப் பிடித்தான்.
மனிதனாக மாறிய கழுதை
ஒரு ஊரில் பண்டிதர் ஒருவர் இருந்தார். அவரிடம் கல்வி கற்க நிறைய பேர் வருவர். அவர் எப்பேற்பட்ட மூர்க்கனையும் தன் சாமர்த்தியத்தால் திருத்தி நல்ல பண்டிதனாக மாற்றி அனுப்பி வைப்பார்.
பக்கத்து ஊரில் ஒரு பையன் இருந்தான். அவன் சுத்த வடிகட்டுன முட்டாள். ஆ சொன்னால் ஈ என்பான். ஈ சொன்னால் ஊ என்பான். அவனோட தந்தை யார்யாரோ குருக்களிடம் அழைத்துச் சென்று பார்த்தார். ஆனால் யாராலும் சிறு துளி கூட கற்றுக்கொடுக்க முடியவில்லை. எப்படி இவனைத் தேற்றுவது என்று தலையில் தலையில் அடித்துக் கொண்டு இருந்தபோது ஒருவர் இந்தப் பண்டிதர் குறித்துச் சொன்னார். கையோடு அவன் அந்தப் பண்டிதரைச் சந்தித்து தன் கஷ்டங்களை எல்லாம் கூறினார். அதற்கு அந்தப் பண்டிதர் சிரித்து விட்டு “ஒன்னும் பயப்படுறதுக்கு இல்ல… என் வாழ்க்கையில இப்ப வரைக்கும் இதுமாதிரி எத்தனையோ கழுதைகள கஷ்டபட்டு நல்ல மனுசனா மாத்தியிருக்கேன். உங்க கழுதையை கணக்கா.. அனுப்பி வைங்க. ஆறு மாசத்துல முடியிறப்பலாம் நல்ல மனுசனா மாத்தி அனுப்பி வைக்கிறேன்” என்றார்.
சரியாக பண்டிதர் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அந்த வீட்டின் முன்பாக அப்பாவி ஒருவன் சென்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு பிள்ளைகள் கிடையாது. அதனால் ஒரு கழுதையை வாங்கி வந்து சொந்த மகன் போல வளர்த்து வந்தான். அவன் அந்தப் பண்டிதர் பேசியதை எல்லாம் கேட்டான். அவன் மிகவும் அப்பாவி இல்லையா… அதனால்… “ஓஹோ… பண்டிதர் எப்படிப்பட்ட கழுதயா இருந்தாலும் ஆறு மாசம் முடியிறப்பலாம் நல்ல மனுசனா மாத்திடுவாறா” என்று நினைத்துக் கொண்டு வேக வேகமாக வீட்டிற்குச் சென்றான். மனைவியிடம் “எம்மா… எம்மா… இவ்ளோ நாளா நமக்கு தெரியாம இருந்திருக்கு ஆனா நம்ம ஊரு முனையில இருக்குற பண்டிதர் ஒன்னும் அப்டிஇப்டினு சாதாரண ஆளு கிடையாது. கழுதைய கூட மனுசனா மாத்துற சக்தி அவர்ட இருக்காம்” என்றான். அவள் புருஷனைவிட பெரிய அப்பாவி. அதோடு ஆச்சரியமாக “அப்படியா… சரி… நமக்கும் பிள்ளைங்க இல்ல இல்லயா… அவரு கால்ல விழுந்தாச்சும் நம்ம வளத்துட்டு இருக்க கழுதய மனுசனா மாத்திருவோம். சரியா…” என்றாள். அதற்கு அந்த அப்பாவியும் “சரி” என்றான்.
இருவரும் சேர்ந்து கழுதையை இழுத்துக் கொண்டு பண்டிதரிடம் சென்றனர். “சாமி… எப்படியாசும்… எங்க கழுதைய மனுசனா மாத்தி புண்ணியம் கட்டிக்கோங்க சாமி… உங்க உதவிய ஜென்மத்துக்கு மறக்க மாட்டோம். பிள்ளைங்க இல்லாத எங்களுக்கு இந்த ஒரு உதவி பண்ணுங்க சாமி” என்று அவர் காலில் விழுந்தனர்.
பண்டிதருக்கு ஒன்னும் புரியவில்லை. “என்னங்க இது. எழுந்திருங்க. நான் என்ன..கழுதையை மனுசனா மாத்துறது என்ன. இது யாராலயும் பண்ண முடியாது” என்றார்.
”சாமி… அப்டி சொல்லாதிங்க சாமி … ஆளுக்கு ஏத்தாப்போல இப்டி மாத்தி மாத்தி பேசுனா எப்படி… காலையில நீங்க பக்கத்து ஊர் காரர்ட பேசுனது எல்லாத்தையும் கேட்டேன். நாங்க இங்கயே செத்தாலும் சாவோமே தவுத்து உங்க கால மட்டும் விட மாட்டோம். நீங்க என்ன பண்ணுவிங்களோ தெரியாது… எங்க கழுதையை மனுசனா மட்டும் மாத்தி தந்திருங்க” என்றனர்.
பண்டிதருக்கு காலையில் தான் பக்கத்து ஊரு ஆளிடம் பேசியது ஞாபகம் வந்தது. ஒரு பேச்சு வாக்குல கழுதைனு சொன்னதை உண்மையான கழுதை என்று நினைத்துக் கொண்ட அவர்களது அப்பாவித்தனத்தை எண்ணி பாவப்பட்டார். எப்படியாவது இவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்து “அடடேய்… கழுதையை மனுசனா மாத்தனுன்றது ஒன்னும் சின்ன விஷயம் கிடையாது. இலட்சத்துல செலவாவுற வேலை… மாசத்துக்கு ஐம்பதாயிரம் அப்படினு ஆறுமாசத்துக்கு செலவு பண்ணனும்” என்றார்.
அதற்கு அந்த அப்பாவி கொஞ்சம் கூட பின் வாங்காமல் “எவ்ளோ செலவானாலும் பரவால்ல… அதுக்கு நான் தயாரு சாமி… வீடு, வயலு எல்லாத்தையும் வித்தாச்சும் வேணுண்ட்ற பணத்தை கொண்டு வறேன்… இந்த கழுதையை மட்டும் மனுஷனா மாத்துனிங்கனா போதும்” என்றான். பிடித்திருந்த கால்களை விடாமல்.
பண்டிதருக்கு இனி என்ன செய்வதென்றே தோணவில்லை. “சரி… அந்த கழுதைய ஆசிரமத்தில ஒரு மூலைல கட்டிட்டு போங்க” என்றார். அவர்கள் மகிழ்ச்சியாகக் கழுதையை ஆசிரமத்தில் ஒரு மூலையில் கட்டிவிட்டு சென்றனர். பண்டிதர் அதனை யாருக்கும் தெரியாமல் இராத்திரி, இராத்திரி பக்கத்து ஊரில் இருக்கிற தன் நண்பனிடம் அனுப்பி ஒளித்து வைத்தார்.
அந்த அப்பாவி மாதத்திற்கு ஒருமுறை அங்கிங்கு என கடன் வாங்கி சேர்த்த பணத்தை எல்லாம் பண்டிதரிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். “கழுதை பூஜையில இருக்கு. மனுசன மாறிட்டிருக்கு. இப்ப யாரும் பாக்க கூடாது. ஆறுமாசம் ஆனதும் ஒரேயடியா பார்ப்ப” என்று பண்டிதர் பணம் வாங்கிட்டு அனுப்பினார்.
அப்படி… ஒவ்வொரு மாதமாகக் கடந்து… கடந்து… மெதுவாக ஆறுமாதங்களும் கடந்தன. உடனே அந்த அப்பாவி ஓடோடி வந்து “சாமி… ஆறு மாசம் ஆயிடுச்சு . என் பையன எங்க” என்று கேட்டான் மகிழ்ச்சியாக.
அதற்கு அந்தப் பண்டிதர் “அடேய்… நீ குடுத்தது வயசுல ரொம்ப பெரிய கழுதை இல்லையா… அதனால உன் மவன் கூட அப்படியே பெரியவனாயி பக்கத்து ஊருக்கு கிராம அதிகாரியா ஆயிட்டான்” என்றார்.
அதற்கு அந்த அப்பாவி மிகவும் மகிழ்ச்சியாகி “அப்படியா சாமி அப்புறம் என் மவன் என்னய அடையாளம் கண்டுப்பானா” என்று கேட்டான். அதற்கு அந்தப் பண்டிதர் சின்னதாக புன்னகைத்து விட்டு “ஞாபகம் இருக்கலாம். இல்லாமயும் இருக்கலாம். எதுக்கும் நல்லது. நீ உன் கழுதைக்கு எப்பயும் போடுற பச்சை புல்ல கொஞ்சம் எடுத்துனு போ. உன்னை ஞாபகம் இல்லனா அதைக் காட்டு. ஞாபகம் வந்துரும்” என்றார்.
அந்த அப்பாவி மிகவும் மகிழ்ச்சியோடு பக்கத்து ஊருக்கு சென்றான். அந்த நேரத்தில் கிராம அதிகாரி கிராம சபையில் நாற்காலியில் காலு மேல காலு போட்டு உக்காந்து எதோ சண்டைக்கு தீர்வு சொல்லிக் கொண்டு இருந்தான். “ஆஹா! என் மகன் எவ்ளோ பெரிய பதவில இருக்கான்” என்று சந்தோஷத்தில் அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தக் கிராம அதிகாரி “யாருயா இந்த புது ஆளு என்ன அப்படியே வாயு பொலந்துகினு பாத்துட்டு இருக்கான்” என்று நினைத்து வார்த்தைக்கு வார்த்தை அவனையே பாரத்தான். அந்த அப்பாவி “இவன் என்னடா… இத்தனை வாட்டி என்ன பார்க்குறான். ஆனால் கொஞ்சம் கூட எதுவும் கேக்கல. கடைசில என்ன மறந்தே போய்ட்டானோ என்னமோ” என்று பையில் இருந்து பச்சை புல்லை எடுத்து அந்தக் கிராம அதிகாரியிடம் காட்டினான். “தாம்மா… தா… தா… என் செல்ல கழுத… என் தங்க கட்டி இல்லயா… தாம்மா… தா… தா… என்று அழைத்தான்.
அதைப் பார்த்த கிராம அதிகாரிக்கு கோபம் வந்து “யாருடா நீ அப்டி கூட்டிட்டு இருக்க. ஒரு மட்டு மரியாதை வேணாம்.” என்றான் கோபமாக.
அதற்கு அந்த அப்பாவி “ஏன்டா… கழுதைப் பயலே… என்னய மறந்துட்டியா… உன்ன மனுசனா பாக்க எவ்ளோ செலவு பண்ணிருக்கேன்” என்று கோபமாகக் கத்தினான்.
அதற்கு அந்த கிராம அதிகாரி குழம்பிப் போயி எழுந்து “யார்ரா நீ கழுதை… கழுதைனு… கோவத்தை கிளறின்னு இருக்க” என்று பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து பட்டுபட்டுனு இரண்டு போடு போட்டு காவலர்களை வைத்து அவன் கழுத்தைப் பிடித்து ஊருக்கு வெளியேத் தள்ளினான்.
அப்பாவி அந்த அவமானத்தைத் பொறுக்க முடியாமல் போனான். மூச்சு இறைக்க இறைக்க பண்டிதரிடம் சென்று “சாமி… எவ்ளவோ கஷ்டபட்டு வளத்து பெருசாக்கி ஒரு மனுசனா மாத்துனா என்னயே ஞாபகத்துல வச்சிக்காத இந்த மாதிரி மவன் இருந்து என்ன இல்லனா என்ன… அவன் எனக்கு வேண்டயே வேண்டாம். எவ்ளோ செலவானாலும் பரவால்ல அவனை திரும்பயும் கழுதையா மாத்திருங்க” என்று அவர் காலைப் பிடித்துக் கொண்டான்.
”சரி.. ஒரு ஆறுமாசம் கழிச்சி வா” என்றார் பண்டிதர். ஆறு மாதம் ஆனதும் அவன் கழுதையை அவனிடமே ஒப்படைத்தார். அந்தக் கழுதையைப் பார்த்ததும் அந்த அப்பாவி “என்னவோ… மனிசனா ஆனதும் அவ்ளோ திமிரு ஆயிடுச்சா உனக்கு… என்னையே யாருன்னு தெரிலயா… உங்க ஆளுங்க கூட சேர்ந்துட்டு என்னயே ஊரை விட்டு வெளிய தள்ளுறியா… இப்ப வந்துச்சா புத்தி, கொழுப்பு இறங்கிடுச்சா” என்று கட்டையை எடுத்து பட்டுபட்டுனு இரண்டு போடு போட்டான்.
அதற்கிடையில் பண்டிதர் அதுவரைக்கும் அவன் கொடுத்த பணத்தோடு வெளியே வந்து “வேண்டாம் வேண்டாம்… தேவையில்லாம அதை அடிக்காத. பாவம் அது திரும்ப கழுதையா மாறுனதும் நடந்தது எல்லாத்தையும் மறந்திருக்கும்” என்று சொல்லி விட்டு “இதோ இந்த பண மூட்டையை எடுத்துக்கோ… நேத்து ஊர்க்கு வெளியில இருந்து வந்திட்டு இருந்தப்ப வயல்ல கிடைச்சிது. நீ என்னமோ இதை மனுசனா மாத்துறதுக்கு நிறைய கடன் வாங்கிருப்ப போல இருக்கு. இதவச்சு அது எல்லாத்தையும் கட்டிரு போ” என்று அவன் கொடுத்த பணத்தை அவனிடமே கொடுத்தார்.
அவன் அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு குனிந்து அவருக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு விட்டு “வாவா…. புஜ்ஜி…. தா…. போலாம்…. பா” என்று கழுதையை இழுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வீட்டுக்குச் சென்றான்.
குரங்கு – திருடன்
ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அவள் மிகவும் ஏழை. அவளுக்குப் பிள்ளைகள் கிடையாது. அதனால் ஒரு குரங்கு குட்டியை எடுத்து பாசமாக வளர்த்து வந்தாள். அதைப் பார்த்து ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் “அரே கிழவி… உனக்கே சோத்துக்கு வழி இல்ல. அப்புறம் உனக்கெதுக்கு இந்த குரங்கு” என்று கிண்டல் கேளி செய்தனர். யார் என்ன சொன்னாலும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் அந்தக் கிழவி குரங்கை நல்லா பாசமாகப் பார்த்துக் கொண்டாள். தினமும் காலையிலேயே அதை குளிப்பாட்டி அழகா தலை வாரி் நல்ல சுத்தமான துணிகளைப் போட்டு விடுவாள். தான் சாப்பிட்டாலும் சாப்பிடா விட்டாலும் அதற்கு மட்டும் வயிறு நிறையப் போடுவாள்.
ஒரு நாள் அந்தக் குரங்கு கிழவியிடம் வந்து “பாட்டி… பாட்டி… நான் காட்டுக்குப் போயி பழங்கள பொறுக்கினு வறேன் …” என்று கூடையை தலையில் வைத்துக் கொண்டு பழங்களைத் தேடி… காட்டிற்குள் சென்றது. அப்படி சென்று கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ஒரு பெரிய மாமரத்தைக் கண்டது. உடனே அதன்மேலே ஏறி பழங்களைப் பறிக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் யாரோ வருவதுபோல் சத்தம் கேட்டது.
”யாரய்யா” என்று மேலே இருந்து பார்த்தால் வேற என்ன… ஒரு திருடன் குதிரை மேலே தான் திருடிக் கொண்டு வந்த தங்கங்களை எல்லாம் போட்டுக் கொண்டு வருவது தெரிந்தது. அவன் எங்கே போகிறான் என்று குரங்கு அவன் பின்னாலேயே… பின்னாலேயே… மறைந்து…. மறைந்துச்……. சென்றது. அவன் அப்படி சிறிது தூரம் போனதும் ஒரு குகைக்குள்ளே போய் தங்கத்தை எல்லாம் அங்கே ஒளித்து வைத்துவிட்டு அந்தக் குகை யாருக்கும் தெரியாமல் இருக்க சுற்றியும் மரக்கிளைகளைக் குறுக்கு மறுக்காகப் போட்டு வைத்துவிட்டுச் சென்றான்.
அவன் அப்படி போனானோ… இல்லையோ… அதற்காகவே காத்துக் கொண்டிருந்த குரங்கு கடகடனு உள்ளே சென்றது. சென்று பார்த்தால் வேற என்ன. ரத்தினம், வைரம், ஆரம், ஒட்டியாணம், மூக்குத்தி, வளையல், கம்மல்… எல்லாம் தங்கம் தகதகனு பிரகாசமாக…மின்னிக் கொண்டு குவியல் குவியலாகக் கிடந்தன. உடனே குரங்கு மகிழ்ச்சியாக கூடையை எடுத்து அது நிறைய எல்லாவற்றையும் நிறைத்துக் கொண்டது. திரும்ப எல்லாம் இருந்தது இருந்தது போலவே குகைக்கு மரக்கிளைகளை குறுக்கு மறுக்காகப் போட்டு வைத்துவிட்டு, கூடையை எடுத்துக் கொண்டு கடகடனு வீட்டிற்கு வந்து, “பாட்டி… பாட்டி… கொஞ்சம் இந்த கூடையை இறக்கு வா” என்றது. “எவ்ளோ பழம் பொறுக்கினு வந்த …. இவ்ளோ அவசரபடுற” என்று பாட்டி கூடையை இறக்கிப் பார்த்தால் வேற என்ன… வைரம்… இரத்தினம்… தங்கம்… தகதகனு மின்னிக்கொண்டு இருந்தன. பாட்டி அவை எல்லாவற்றையும் எடுத்து ஒழித்து வைத்து தேவைப்படும்போது எல்லாம் ஒவ்வொன்றாக விற்று நிம்மதியாக வாழ்ந்து வந்தாள்.
வீட்டில் பணம் தீர்ந்து போகும்போது எல்லாம் அந்தக் குரங்கு கூடையை எடுத்துக் கொண்டு போய்த் தங்கம் எடுத்துவரத் ஆரம்பித்தது. அப்படி குரங்கு கூடை கூடையாக எடுத்து வந்துக் கொண்டிருந்தது இல்லையா… அதோடு திருடனுக்கு சந்தேகம் வந்தது. “இதென்னப்பா… நான் தினம் எங்க எங்க இருந்தோ… என்ன என்னத்தையோ… எடுத்துட்டு வந்து ஒளிச்சு வச்சா… நாள் ஆவ ஆவ நிறையாம குறைஞ்சுக்கினே வருதே” என்று நினைத்து எங்கும் போகாமல் எதிரில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தில் ஏறி நோட்டம் விட ஆரம்பித்தான்.
குரங்கிற்கு திருடன் அங்கேயே மரத்து மேலே ஒளிந்திருப்பது தெரியாது இல்லையா. அதனால் எப்போதும் போல ஒருநாள் கூடையை எடுத்துக் கொண்டு குகைக்குள் சென்று நிரப்பிக் கொண்டிருந்தது. “ஓஹோ இதானா விஷயம் ” என்று நினைத்து அவன் மெதுவாக மரத்தில் இருந்து இறங்கி வந்து அடிமேல் அடி வைத்து பின்பக்கமாக வந்து படக்குனு அதைப் பிடித்துக் கொண்டான். அது எவ்ளோ கெஞ்சிப் பார்த்தும் விடவில்லை. இனி ஒன்னும் பிரயோஜனம் இல்லை என்று நினைத்த குரங்கு தப்பிக்க என்ன வழி என்று யோசித்து “திருடனே… திருடனே… எனக்கு ஒரு அக்கா இருக்கா. அவள் அழகுனா அழகு அப்படியொரு அழகு. என்னை மட்டும் விட்டேனு வையி எங்க அக்காவை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்… ” என்றது. சரியென்று திருடன் அதை விட்டுவிட்டான். அப்போது அந்த குரங்கு “நாளைக்கு எங்க வீட்டுக்கு வா. எங்க அக்காவை கூட்டினு போயிட்டே இரு” என்றது. அவன் ‘சரி’ என்று மகிழ்ச்சியில் அதற்கு கூடை நிறைய தங்கத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தான்.
சொல்லப்போனால் குரங்குக்கு அக்கா தங்கச்சினு யாரும் கிடையாது இல்லையா… அதனால் “நாளைக்கி திருடன் வந்தா என்னதான் பண்றது” என்று யோசித்து… கடைசியில் ஒரு சாக்கு மைதா மாவைக் கொண்டுவந்து ஒரு பெரிய பொம்மை செய்தது. அதற்கு சேலையை சுற்றி, வளையல் போட்டு, நெத்தியில் குங்குமம் வைத்து, சிகை அலங்காரம் எல்லாம் செய்து அப்படியே அழகான பெண்பிள்ளை மாதிரி தயார் பண்ணி கட்டிலில் படுக்க வைத்தது.
அடுத்த நாள் காலையிலே திருடன் குதிரையில் ஏறி அவர்கள் வீட்டிற்கு வந்தான். குரங்கு கை,கால் கழுவுவதற்கு தண்ணீர் கொடுத்து விட்டு உள்ளே உட்கார வைத்து “எங்க அக்கா விரதத்துல இருக்கா. அஞ்சு நாளைக்கு யார்டயும் பேச மாட்டா – சாப்பிட மாட்டா. தண்ணி கூட குடிக்க மாட்டா. கட்டில விட்டு கீழ இறங்க மாட்டா. இந்த அஞ்சு நாளைக்கி நீ அவள எதுவும் சொல்ல கூடாது. விரதம் முடிஞ்சதுக்கு அப்றம் ஹாயா கல்யாணம் பண்ணிக்கோ” என்று பொம்மையை கீழே விழாமல் கட்டிலோடு சேர்த்து தூக்கிக் கொண்டு போய் திருடன் வீட்டில் வைத்துவிட்டு வந்தது. வந்ததும் வராததுமாக வீட்டில் இருப்பவை எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி இராத்திரியோடு இராத்திரியாக பாட்டியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு யாருக்கும் தெரியாத இடத்திற்கு ஓடிப் போனது.
திருடனுக்கு கட்டிலில் இருப்பது பொம்மை என்று தெரியாது இல்லையா. அதனால் “அப்பா எனக்கு வரப்போற பொண்டாட்டி பார்க்க எவ்ளோ அழகா இருக்கா” என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனான். ஒருநாள் கழிந்தது …… இரண்டு நாள்கள் கழிந்தன… மூன்று நாள்கள் கழிந்தன… நான்கு நாள்கள் கழிந்தன… ஐந்து நாள்கள் கழிந்தன… கடைசியில் ஒரு வாரங்கூட கடந்தது.
”இதென்னப்பா….. இத்தனை நாளாயும் எழுந்து வரமா இருக்கா” என்று கத்தி அழைத்துப் பார்த்தான். அங்கு இருப்பது பொம்மை இல்லையா, அதனால் ஒரு அசைவும் இல்லாமல் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது. அதோடு அவனுக்கு கோபம் தலைக்கு ஏறி “எழு மேல” என்று கையைப் பிடித்து இழுத்தால் வேற என்ன… கையோடு வந்தது. கலை பிடித்து இழுத்தால் காலும் கையோடு வந்தது.
”அம்மா… திருட்டுப்பயலே… மாவுப் பொம்மைய வைச்சிக்கினு பொண்ணுனு என்னையே ஏமாத்திருயா. இரு உன்னை ஒரு வழி பண்றேன்” என்று அவன் கோபமாக கத்தி எடுத்துக் கொண்டு ஊருக்குள் சென்றான். போய்ப் பார்த்தால் வேற என்ன கிழவி இல்லை… குரங்கும் இல்லை…
பிச்சைக்காரர்களும் பிரியாணியும்
ஒரு ஊரில் பிச்சைக்காரர்கள் மூன்றுபேர் இருந்தனர். அவர்களில் ஒருவன் ஊனம். இன்னொருவன் கூனன். மற்றொருவன் குருடன். மூன்று பேரும் சேர்ந்து நல்லா ஒன்னு மன்னாய் இருப்பர். தினமும் காலையிலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மூலைக்குச் சென்று ஊர் முழுவதும் சுற்றித் திரிந்து பிச்சை எடுப்பர். சாயங்காலம் ஆனதும் மீண்டும் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து, தாங்கள் எடுத்தவற்றை எல்லாம் நிம்மதியாக சாப்பிட்டு விட்டு உறங்குவர். அவர்கள் மூன்று பேருக்கும் ரொம்ப நாள்களாக வாழ்க்கையில் ஒரு முறையாவது நல்லா சுடச்சுட பிரியாணி செய்து வைத்து வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் பிரியாணி செய்ய வேண்டும் என்றால் நிறைய பணம் தேவை இல்லையா… அந்தந்த நாள் எடுக்கும் பிச்சை அந்தந்த நாள் சாப்பாட்டுக்கே சரியாகப்போய் விடுகிறது. அப்புறம் இதில் எப்படி… அதோடு அவர்கள் மூன்று பேரும் நன்கு யோசித்து தினமும் ஒரு ரூபாய், அரை ரூபாய் என எடுத்து வைக்க ஆரம்பித்தனர். அப்படி சில நாள்கள் கழிந்தன. ஒரு நாள் மூன்று பேருக்கும் பிரியாணி தின்ன வேண்டும் என்கிற ஆசை மிகவும் அதிகமாகிப் போனது. அதோடு சந்தைக்குப் போய் இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தை வைத்து கிடைக்கிற சரக்குகளை எல்லாம் வாங்கி வந்தனர். மூன்று பேரும் மகிழ்ச்சியில் ஆடிப் பாடி பிரியாணி சமைக்க ஆரம்பித்தனர். அரிசி, எண்ணெய், மசாலா, காரம், உப்பு என எல்லாவற்றையும் சமபாகத்தில் போட்டனர். கொஞ்ச நேரத்தில் கமகம என்று கொதித்துக் கொண்டு பிரியாணி தயார் ஆனது. அந்த கமகம வாசத்திற்கு மூன்று பேருடைய வாயிலும் எச்சில் ஊறியது. சப்பைக் கொட்டிக் கொண்டு தின்னலாம் என்று ஆவலோடு மூடியைத் திறந்து பார்த்தால் வேற என்ன அரிசி குறைவாக இருந்ததால் பிரியாணி கொஞ்சமே தயார் ஆனது. மூன்று பேரும் சாப்பிட்டால் யாருக்கும் வயிறு நிறையாது. யாராவது ஒருத்தருக்கு மட்டுமே சரியாக இருக்கும்.”சாப்புட்டா யாராவது ஒருத்தர் வயிறு நிறைய சாப்பிடலாம் அதை விட்டுட்டு… மூன்று பேரும் கொஞ்சம் கொஞ்சம் தின்னு என்ன பிரயோஜனம்” என்று நினைத்தனர்.
அப்புறம் மூன்று பேரில் யார் அதை சாப்பிடுவது… மூன்று பேருக்குமே சாப்பிட வேண்டும் என்று இருந்தது. பின்பு நன்கு கலந்து ஆலோசித்து “நம்ம மூனு பேரும் படுத்து தூங்குவோம். காலைல எழுந்து யார் யாருக்கு என்னென்ன கனவு வந்துச்சுனு பார்ப்போம். யாருக்கு நல்ல கனவு வந்துச்சோ அவங்களுக்கு தான் பிரியாணி” என்ற முடிவுக்கு வந்தனர். சரியென்று மூன்று பேரும் தூங்கினர். குருடனும் கூனனும் தூங்கிய கொஞ்ச நேரத்தில் ஊனன் தூக்கத்தில் இருந்து மெதுவாக எழுந்து சத்தம் எதுவும் போடாமல் கூச்சமே இல்லாமல் பிரியாணி எல்லாவற்றையும் சுத்தமாக வழித்துத் தின்று விட்டு, எதுவும் தெரியாத அப்பாவி போல நிம்மதியாக உறங்கினான்.
காலையில் மூன்று பேரும் எழுந்தனர். குருடனுக்கும் கூனனுக்கும் ஊனன் பிரியாணி தின்றது தெரியாது இல்லையா. அதனால் கூனன் எப்படியாவது பிரியாணி சாப்பிட வேண்டும் என்று இராத்திரி அவனுக்கு ஒரு கனவும் வரவில்லை என்றாலும் “டேய். எனக்கு நேத்து இராத்திரி எவ்ளோ செமையான கனவு வந்துச்சு தெரியுமா. நான் கனவுல ஹைதராபாத்கு போனேன், அங்க சார்மினார், கோல்கொண்டா, பிர்லாமந்திர், அசெம்ப்ளி எல்லாத்தையும் பார்த்தேன், அதுக்குள்ள நம்ம பிரதமர் என்ன பார்த்து ஏன்டா கூனா…. நல்லா இருக்கியா என்று நலம் விசாரிச்சாரு. அப்புறம் அவங்க வீட்டுக்கு கூட்டுனு போயி வேணான் வேணாம்னு சொல்ல சொல்ல கேட்காம நல்ல பிரியாணியா வச்சாரு. அப்பா பயங்கர ருசியா இருந்துச்சு” என்றான்.
அதைக் கேட்ட குருடன் உடனே “ஓ நீ ஹைதாராபாத்கு போனியா. நேத்து இராத்திரி நான் தனியா நம்ம நாட்டு தலைநகரம் டெல்லிக்கு போனான். என்னைப் பார்த்ததும் நம்ம பிரதமரு ஓடி வந்து கட்டிப்பிடிச்சிட்டு அவரு வீட்டுக்கு கூட்டிட்டு போயி வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல கேட்காம நல்லா பிரியாணியா சாப்பிட கொடுத்தாரு. அப்பா என்னா ருசிடா” என்றான்.
இரண்டு பேர் சொன்னதையும் கேட்ட ஊனன் எதுவும் பேசாமல் கம்முனு உட்கார்ந்திருந்தான். அதைப் பார்த்து “என்னடா. அப்படியே கம்முனு உட்கார்ந்திருக்க. உனக்கு எதுவும் கனவு வரல்லயா” என்றான் கூனன்.
அதற்கு ஊணன் “என்ன சொல்ல சொல்றீங்க. நேத்து இராத்திரி அப்படி தூங்குனனோ இல்லயோ… உடனே ஒரு பெரிய ராட்ஜசன் வந்தான். அவன் என்ன எழுப்பி டேய்… மரியாதயா நீ அந்த பிரியாணிய திங்குரியா ? இல்ல என்னய உன்ன திங்க சொல்றியா ? என்று பயங்காட்டினான். எனக்கு என்ன பண்றதுனே தெரில. உன்ன கூப்பிடலாம்னு பார்த்தா நீ என்னடானா ஹைதராபாத்ல பிரதமரோட சேர்ந்து பிரியாணி தின்னுட்டு இருந்த. குருடனை கூப்பிடலாம்னா இவன் என்னடானா தனியா டெல்லில பிரதமரோட இருந்து பிரியாணி தின்னுட்டு இருந்தான். அப்புறம் என்ன பண்றதுனே புரியாம என் உயிரைக் காப்பாத்திக்கிறதுக்கு… எப்படியும் நீங்க ரெண்டு பேரும் அங்க பிரியாணி தின்னுட்டு இருக்கீங்கலனு நான் இங்க இருந்த பிரியாணி எல்லாத்தையும் தின்னுட்டேன்?” என்றான். அவ்ளோதான் அதற்கு என்ன சொல்வது என்றே புரியாமல் குருடனும் கூனனும் வாயைப் பொளந்தனர்.
பெயர் மறந்து போன ஈ
ஒரு ஊரில் ஒரு ஈ இருந்தது. அதற்கு ஒரு அழகான வீடு. ஒருநாள் பண்டிகை ஒன்று வந்தது. பண்டிகை நாள் ஈ காலையிலே எழுந்து வீட்டு முற்றத்தை சுத்தமாக பெருக்கி சாணி தெளித்துக் கொண்டிருந்தது. அப்படி தெளித்துக் கொண்டு இருக்க… இருக்க அது தன் பெயரை மறந்து போனது.
”என் பேரே எனக்கு ஞாபகம் இல்லனா எப்டி? யாராவது வந்து உன் பேரு என்னனு கேட்டால் என்ன சொல்றது, அசிங்கமா போயிடும் இல்லயா” என்று நினைத்து செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு ஒரு மூலையில் உட்கார்ந்து தீவிர ஆலோசனையில் மூழ்கியது. ஆனால் எவ்வளவு யோசித்தும் அதற்கு அதன் பேரு ஞாபகம் வரவில்லை. அதனால் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று பறந்து சென்று கொண்டிருந்தபோது அது ஓரிடத்தில் ஒரு பெத்தராசி பெத்தம்மாவைக் கண்டது. உடனே அது பேதராசி பெரியம்மாவிடம் சென்று
”பேதராசி பெரியம்மா! பேதராசி பெரியம்மா! என் பேரு என்னனு உனக்கு தெரியுமா?” என்று கேட்டது. அதற்கு அவள் “என்னமோ எனக்கு தெரியாது. போயி என் பையனைக் கேளு” என்றாள்.
”சரி” என்று அது பறந்து சென்று பேதராசி பெரியம்மா மகனிடம் போய் “பேதராசி பெரியம்மா, பெரியம்மா பையனே! என் பேரு என்னனு உனக்கு தெரியுமா” என்று கேட்டது. அதற்கு அவன் “என்னமோ எனக்கும் தெரியாது. போய் என் கையில் இருந்த கோடாரியைக் கேளு” என்றான்.
அதோடு அது கோடாரியிடம் சென்று “பேதராசி பெரியம்மா, பெரியம்மா பையனே, பையன் கையில் இருக்கிற கோடாரியே ! என் பேரென்னனு உனக்கு தெரியுமா” என்று கேட்டது. அதற்கு கோடாரி “என்னமோ எனக்கும் தெரியாது. நான் வெட்டின மரத்தை கேளு” என்றது. அதோடு அது மரத்திடம் போயி “பேதராசி பெரியம்மா, பெரியம்மா பையனே, பையன் கையில் இருக்கிற கோடாரியே, கோடாரி வெட்டுற மரமே என் பேரு என்னனு உனக்கு தெரியுமா” என்று கேட்டது. அதற்கு அந்த மரம் “என்னமோ எனக்கும் தெரியாது. என் மேல இருக்கிற பறவைங்கள கேளு” என்றது.
அதோடு அது பறவைகளிடம் சென்று “பேதராசி பெரியம்மா, பெரியம்மா பையனே, பையன் கையில் இருக்கிற கோடாரியே, கோடாரி வெட்டுற மரமே, மரத்தில் இருக்குற பறவைங்களே என் பேரு என்னனு உங்களுக்கு தெரியுமா” என்று கேட்டது. அதற்கு அந்தப் பறவைகள் “என்னமோ எங்களுக்கும் தெரியாது. போயி நாங்க குடிக்கிற தண்ணியை கேளு” என்றன.
அதோடு அந்த ஈ தண்ணீரிடம் சென்று “பேதராசி பெரியம்மா, பெரியம்மா பையனே, பையன் கையில் இருக்கிற கோடாரியே, கோடாரி வெட்டுற மரமே, மரத்தில் இருக்குற பறவைங்களே, பறவைங்க குடிக்கிற தண்ணியே என் பேரு என்னனு உனக்கு தெரியுமா” என்று கேட்டது. அதற்கு அந்தத் தண்ணீர் “என்னமோ எனக்கும் தெரியாது. போயி எனக்குள்ள இருக்கிற மீனுகளை கேளு” என்றது.
அதோடு அந்த ஈ மீன்களிடம் சென்று “பேதராசி பெரியம்மா, பெரியம்மா பையனே, பையன் கையில் இருக்கிற கோடாரியே, கோடாரி வெட்டுற மரமே, மரத்தில் இருக்குற பறவைங்களே, பறவைங்க குடிக்கிற தண்ணியே, தண்ணில இருக்கிற மீனுகளே என் பேரு என்னனு உங்களுக்கு தெரியுமா” என்று கேட்டது. அதற்கு அந்த மீன்கள் “என்னமோ எங்களுக்கும் தெரியாது. போயி எங்களை பிடிக்கிற மீனவனை கேளு” என்றன.
அதோடு அந்த ஈ மீனவனிடம் சென்று “பேதராசி பெரியம்மா, பெரியம்மா பையனே, பையன் கையில் இருக்கிற கோடாரியே, கோடாரி வெட்டுற மரமே, மரத்தில் இருக்குற பறவைங்களே, பறவைங்க குடிக்கிற தண்ணியே, தண்ணில இருக்கிற மீனுகளே, மீனுகளை பிடிக்கிற மீனவனே! என் பேரு என்னனு உனக்கு தெரியுமா” என்று கேட்டது. அதற்கு அந்த மீனவன் “என்னமோ எனக்கும் தெரியாது. போயி அந்த மீனுகளை திங்கிற ராஜாவை கேளு” என்றான்.
அதோடு அந்த ஈ ராஜாவிடம் போயி “பேதராசி பெரியம்மா, பெரியம்மா பையனே, பையன் கையில் இருக்கிற கோடாரியே, கோடாரி வெட்டுற மரமே, மரத்தில் இருக்குற பறவைங்களே, பறவைங்க குடிக்கிற தண்ணியே, தண்ணியில் இருக்கிற மீனுகளே, மீனுகளைப் பிடிக்கிற மீனவனே, மீனவன் பிடித்த மீனுகளை தின்னுற ஓ ராஜா என் பேரு என்னனு உனக்குத் தெரியுமா” என்று கேட்டது. அதற்கு அந்த ராஜா “என்னமோ எனக்கும் தெரியாது. போயி நான் ஏறுற குதிரையைக் கேளு” என்றான்.
அதோடு அந்த ஈ குதிரையிடம் சென்று “பேதராசி பெரியம்மா, பெரியம்மா பையனே, பையன் கையில் இருக்கிற கோடாரியே, கோடாரி வெட்டுற மரமே, மரத்தில் இருக்குற பறவைங்களே, பறவைங்க குடிக்கிற தண்ணியே, தண்ணில இருக்கிற மீனுகளே, மீனுகளைப் பிடிக்கிற மீனவனே, மீனவன் பிடிச்ச மீனுகளைத் தின்னுற ராஜாவே, ராஜா ஏறுற குதரையே! என் பேரு என்னனு உனக்கு தெரியுமா” என்று கேட்டது. அதற்கு அந்தக் குதிரை “என்னமோ எனக்கும் தெரியாது. என் வயித்துல இருக்கிற பிள்ளையை கேளு” என்றது.
அதோடு அந்த ஈ குதிரை வயிற்றில் இருக்கும் பிள்ளையிடம் சென்று “பேதராசி பெரியம்மா, பெரியம்மா பையனே, பையன் கையில் இருக்கிற கோடாரியே, கோடாரி வெட்டுற மரமே, மரத்தில் இருக்குற பறவைங்களே, பறவைங்க குடிக்கிற தண்ணியே, தண்ணில இருக்கிற மீனுகளே, மீனுகளை பிடிக்கிற மீனவனே, மீனவன் பிடிச்ச மீனுகளை தின்னுற ராஜாவே, ராஜா ஏறுற குதரையே, குதிரை வயித்துல இருக்கிற குட்டியே! என் பேரு என்னனு உனக்கு தெரியுமா” என்று கேட்டது.
அதற்கு அந்த குதிரைக் குட்டி “உன் பேரா? அது… அது.. ஈ… ஹி… ஹிஹி… ஹிஹிஹி…” என்று கணைத்தது. குதிரைக் குட்டி “ஈஹிஹிஹி” என்று கணைப்பதைக் கேட்டதும் அதற்கு டக்கென்று தன் பெயர் நினைவுக்கு வந்தது.
”ஆ.. ஞாபகம் வந்திருச்சி. ஞாபகம் வந்திருச்சி என் பேரு ஈ இல்லையா. ஆமா ஈ தான், ஈ தான் என்று கத்திக் கொண்டே மகிழ்ச்சியாக அங்கு இருந்து வீட்டிற்குப் பறந்து போனது.
Art : John
மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற ‘திராவிடன் பல்கலைக் கழகம்’ இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். தமிழ் தெலு(ங்)கு மொழிக் கீர்த்தனைகளில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாகத் தெலு(ங்)கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இவர் தன்னைக் கவிதைகள், ஆய்வு, மொழிபெயர்ப்புகள் என்று படைப்புலகிலும் ஆய்வுலகிலும் ஈடுபடுத்தி வருகிறார்.








Leave a Reply