Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பெண்ணியக் கோட்பாடுகளின் தமிழாக்கம்: ராஜ்கௌதமனின் மூன்று மொழிபெயர்ப்புகள்- வரலாறும்  வாசிப்பும்

அ. மோகனா
அ. மோகனா
April 1, 2026
பெண்ணியக் கோட்பாடுகளின் தமிழாக்கம்: ராஜ்கௌதமனின் மூன்று மொழிபெயர்ப்புகள்- வரலாறும்  வாசிப்பும்

கதைகள், புராணங்கள், தொன்மங்கள் ஆகியவற்றையே அறிவாதாரங்களாகக் கொண்டு சாதி, மதச் சழக்குகளில் அருமை வாய்ந்த மானிடப் பிறப்பைப் பாழாக்கிக் கொண்டிருக்கிற கீழைத்தேயக் ‘கிழட்டுப்’ பண்பாடுகளுக்கு, குறிப்பாக இந்தியச் சமுதாயத்திற்குப் பெண்ணியம் பற்றிய கல்வியும், அறிவும், புரிதலும் மிகவும் இன்றிமையாதவையாக இருக்கின்றன. (2021:5)

தமிழ் ஆய்வுச்சூழல் பல உலகளாவிய சிந்தனைகளுடன் உரையாடி வளர்ந்துள்ளது. அந்த உரையாடல்களில் மொழிபெயர்ப்பு ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது. மார்க்சியம், கடவுள் மறுப்பு உள்ளிட்ட பல கோட்பாடுகள் தமிழில் அறிமுகமானதற்கு மொழிபெயர்ப்பு ஆக்கங்களே அடிப்படை; அவ்வாறே பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகள் தமிழில் அறிமுகமாகியதற்கும் மொழிபெயர்ப்புகளே அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளன. புனைகதையாளர், ஆராய்ச்சியாளர், கோட்பாட்டாளர், இயக்கச் செயற்பாட்டாளர் எனப் பன்முகப் பரிணாமத்தைப் பெற்ற பேராசிரியர் ராஜ்கௌதமனின் (1950-2024) மொழிபெயர்ப்பு ஆக்கங்களும் இப்பின்புலத்தில் குறிப்பிடத்தக்கவை. சமூக அமைப்பின் படிநிலைகளை அவதானிக்கும் வகையில் அவர் மேற்கத்திய பெண்ணியக் கோட்பாடுகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஜெர்மன் கிய்ரீர் (Germaine Greer) எழுதிய “பாலற்ற பால் – பெண்பால், நபும்சகம்” (The Female Eunuch) மற்றும் கேட் மில்லெட்டின் (Kate Millett) “பாலியலரசியல்” (Sexual Politics) ஆகிய நூல்களின் தமிழாக்கம் ராஜ்கௌதமனின் ஆழமான மொழிபெயர்ப்பு நுட்பத்தைக் காட்டுவதோடு இதுவரை பெரிதும் கவனப்படுத்தப்படாத பெண்ணியத்தின் தர்க்கரீதியிலானஅடிப்படைகளையும் வெளிப்படுத்துகின்றன. மேலும் சாரா காம்பிள் (Sarah gamble) பதிப்பித்த பெண்ணியமும் பின்னையப் பெண்ணியமும் குறித்த விமர்சன அகராதி (1998) டோரில் மோய் (Toril Moi) எழுதிய பாலியல் / பிரதியியல் அரசியல்: பெண்ணிய இலக்கியக் கோட்பாடு (1988) ஆகிய இரண்டு பிரதிகளையும் மொழிபெயர்த்து “பெண்ணியம்: வரலாறும் கோட்பாடும்” என்று வெளியிட்டுள்ளார். இம்மூன்று நூல்களும் மூன்றுகட்ட பெண்ணிய அலைகளின் பின்புலத்தில் எழுந்தவை. பிற பெண்ணிய ஆய்வுச் சிந்தனை நூல்களிலிருந்து பெரிதும் மாறுபட்டவை.  ராஜ்கௌதமன் மொழிபெயர்த்துள்ள இப்பெண்ணிய நூல்கள் குறித்த உரையாடலைக் கீழ்க்கண்ட நிலைகளில் தொகுத்துக் கொள்வோம்.

ராஜ்கௌதமன் மொழிபெயர்த்துள்ள நூல்களின் அறிமுகம்; அந்நூல்கள் எழுதப்பட்ட பின்புலம்; விவாதித்துள்ள கருத்துகள் குறித்த சில பதிவுகள்.

தமிழ்ச் சூழலில் இந்நூல்களின் தேவை; ராஜ்கௌதமனின் தேர்வும் கோட்பாட்டு முறையியலும்; பெண்ணியம் தொடர்பாக வெளிவந்துள்ள பிற ஆக்கங்களிலிருந்து தனித்துவம் வாய்ந்தவையாக இக்கோட்பாட்டு நூல்கள் தொழிற்படும் தன்மை.

ராஜ்கௌதமனின் மொழிபெயர்ப்பு முறையியல்; கைக்கொண்ட மொழி இலாவகம்; வெறும் வார்த்தை மொழிபெயர்ப்பாக இல்லாமல் நூலின் கனபரிமாணத்தைக் கையளித்திருக்கும் முறை.

பெண்ணியம்: வரலாறும் கோட்பாடும் – சாரா காம்பிள் – டோரில் மோய் (2021)

முன்னர்க் குறித்தபடி இரண்டு நூல்களை மொழிபெயர்த்து ஒரே நூலாகக் கொடுத்துள்ளார். பெண்ணியம் குறித்த அடிப்படைப் புரிதல்களைப் பெறுவதற்கான கருவி நூலாக இந்நூல் உள்ளது. சாரா காம்பிள் (sara gable) 1998இல் தொகுத்த The Icon critical dictionary of feminism and post feminism என்ற இந்நூலில் மொத்தம் பதினைந்து கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் முதல் நான்கு கட்டுரைகளை மட்டும் ராஜ்கௌதமன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

தொடக்க காலப் பெண்ணியம் (Early Feminism) என்ற கட்டுரை ஸ்டீபன் ஹாட்ஜ்ஸன் ரைட் (Stephanie hodgson wright) என்பவரால் எழுதப்பட்டது. இக்கட்டுரை பெண்ணுரிமைச் சிந்தனையின் தொடக்கக் காலத்தைப் பற்றிய ஆழமான உரையாடலை முன்னெடுக்கிறது. 16-ம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில், பெண்களின் கல்வி, சமூக நிலை, அறிவுத்துறைப் பங்கேற்பு ஆகியவற்றில் தோன்றிய சில புதிய மாற்றங்களின் பின்புலத்தில் பெண்ணியத்தின் தோற்றுவாய்த்தன்மையினை விளக்குகிறார். பெண்ணுரிமை குறித்த சிந்தனை 19-ம் நூற்றாண்டில்தான் ஆரம்பித்தது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து; ஆனால் Stephanie அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே பெண்கள் தங்கள் உரிமை உணர்வை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்த தன்மையை விவாதிக்கிறார். இக்காலத்தில் பெண்கள் பெரும்பாலும் வீட்டிற்குள் மட்டுமே வாழ்ந்தனர்; அவர்கள் கல்வி, சொத்துரிமை, அரசியல் பங்கேற்பு போன்றவற்றில் விலக்கப்பட்டிருந்தனர். சமூகத்தில் ஆண்களின் மேலாதிக்கம் காரணமாக, பெண்கள் “இயற்கையாகவே குறைவானவர்கள்” என்ற எண்ணம் வலுப்பெற்றிருந்தது. மதத்தின் பெயரால் இச்சிந்தனை பரவலாக்கப்பட்டது. ஆனால், சில கல்வியுள்ள பெண்கள் இந்த நிலையை ஏற்காமல் தங்கள் எழுத்துகளின் மூலம் ஆணாதிக்கச் சிந்தனைகளை எதிர்த்துப் பேசத் தொடங்கினர்.

இத் தொடக்ககால முயற்சிகள் பெரிய இயக்கங்களாக இல்லை; அவை தனிநபர் குரல்களாகவே ஒலித்தன. பெண்களின் சிந்தனை, வேதனை, விழிப்புணர்வு ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக இருந்தன. இதுவே “early feminism” என்று கூறப்படுகிறது. பெண்கள் தங்கள் சிந்தனையை வெளிப்படுத்திய வழிகளில் ஒன்றாகக் கல்வி பற்றிய விவாதமும் இருந்தது. அப்போது பெண்கள் கல்வி பெற முடியாதது அவர்களின் திறமையின்மையைக் காட்டவில்லை, மாறாகச் சமூக அமைப்பே அவர்களை அந்த வாய்ப்பிலிருந்து விலக்கியது என்பதைச் சில எழுத்தாளர்கள் எடுத்துரைத்தனர். பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட்டால் அவர்கள் ஆண்களுக்கு இணையாகச் சிந்திக்கவும் உருவாகவும் முடியும் என்ற நம்பிக்கை இந்தக் காலத்தின் முக்கியமான கருத்தாக இருந்தது.

அதேபோல், பெண்கள் மத விவாதங்கள், தத்துவ உரையாடல்கள், சமூகப் பிரச்சினைகள் போன்ற துறைகளிலும் பங்கேற்க ஆரம்பித்தனர். அவர்களுடைய எழுத்துகள் பெண்களின் அனுபவங்களை, உணர்வுகளை, தங்கள் மீது நடக்கும் சமூக அநீதிகளை வெளிப்படுத்தும் புதிய குரலாக இருந்தன. அந்தக் காலத்தில் பெண்கள் தங்களை “பெண்ணியவாதிகள்” என்று அழைக்கவில்லை; ஆனால் அவர்கள் எழுத்துகள் பின்னாளில் உருவான பெண்ணுரிமை இயக்கங்களுக்குத் தத்துவ அடிப்படையை அமைத்துக் கொடுத்தன. “பெண்கள் இயற்கையாகவே உணர்ச்சிவசப்பட்டவர்கள் அல்லது ஆண்களை விட குறைவானவர்கள்” என்ற பாரம்பரியக் கருத்தை அவர்கள் எதிர்த்தனர். பெண்களின் கீழ்மைத்தன்மை இயற்கை அல்ல, அது சமூகத்தின் கட்டமைப்பால் உருவாக்கப்பட்டது என்ற வாதம் அவர்களின் எழுத்துகளில் வெளிப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் Christine de Pizan, Mary Astell, Margaret Cavendish ஆகிய எழுத்தாளர்கள் பெரிதும் குறிப்பிடத்தக்கவர்கள். Christine de Pizan தனது “The Book of the City of Ladies” என்ற படைப்பில் பெண்களின் அறிவாற்றலை வியந்து, பெண்கள் ஆண்களுக்கு இணையான புத்திசாலித்தன்மையுடையவர்கள் என்றார். Mary Astell “If all men are born free, how is it that all women are born slaves?” என்ற கேள்வியால் சமூகத்தின் இரட்டைச் சிந்தனையைக் கேள்விக்குட்படுத்தினார். Margaret Cavendish அறிவியல் மற்றும் தத்துவம் போன்ற ஆணாதிக்கத் துறைகளில் எழுதியதன் மூலம் பெண்களின் அறிவுத்துறைசார்ந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

மேற்குறித்த அனைத்து முயற்சிகளும் பெண்கள் தங்கள் குரலை வெளிப்படுத்திச் சமூகத்தின் மனப்பான்மையை மாற்ற முயன்ற தொடக்கநிலைச் செயற்பாடுகள். Stephanie Hodgson-Wright, பெண்ணுரிமை இயக்கம் திடீரெனத் தோன்றியதல்ல; அது பல நூற்றாண்டுகளாக உருவாகிக் கொண்டிருந்த சிந்தனைப் போக்கின் விளைவு; பெண்கள் தங்கள் அனுபவங்களை, கல்வியை, சமூக நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிய தருணமே பெண்ணியத்தின் விதை என்று இக்கட்டுரையில் வலியுறுத்துகிறார். இதன்மூலம் பெண்ணுரிமை என்பது ஒரு சமகாலப் பிரச்சினை அல்ல, வரலாற்றின் ஆழத்தில் வேரூன்றிய மனப்போராட்டம் என்பதை இக் கட்டுரை விரிவாகப் பேசுகிறது.

மொத்தத்தில், Stephanie Hodgson-Wright எழுதிய “Early Feminism” கட்டுரை பெண்களின் குரல் எவ்வாறு வரலாற்றில் மெதுவாக உருவாகி, சமூகச் சிந்தனையையும் இலக்கியத்தையும் மாற்றியமைத்தது என்பதை விளக்குகிறது. பெண்கள் தங்கள் அனுபவங்களைக் கொண்டு எழுத்தின் மூலம் சமூகத்தின் ஆணாதிக்கம் மீதான நுட்பமான எதிர்ப்பை வெளிப்படுத்திய தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கட்டுரை பெண்ணுரிமை இயக்கத்தின் ஆரம்பக் கட்டங்களைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான பதிவாகவும், பெண்களின் வரலாற்றுச் சிந்தனையின் அடிப்படை ஆவணமாகவும் இருக்கிறது.

அடுத்த கட்டுரை வேலரி சாண்டர்ஸ் (Valerie Sanders) எழுதிய முதல் அலை பெண்ணியம் (First Wave Feminism) 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பெண்கள் தங்களுக்கான சமூக, அரசியல், கல்வி உரிமைகளைப் பெறும் நோக்கில் எழுந்த பாரிய இயக்கமே “முதல் அலை பெண்ணியம்” (First Wave Feminism) என்று Valerie Sanders குறிப்பிடுகிறார். இது பெரும்பாலும் மேற்கு நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் மிகவும் வளர்ச்சியுற்றது. இந்தக் காலகட்டத்தில் பெண்கள் சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மனிதர்கள் என்ற அடிப்படை உண்மையை வலியுறுத்தினர்.

முன்பு பெண்கள் வீட்டுப்பணிகள், குழந்தைப் பராமரிப்பு போன்ற குறிப்பிடத்தக்க மற்றும் கீழ்மட்ட பணிகளுக்கு மட்டுமே வலுக்கட்டாயமாக ஒதுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குச் சொத்து உரிமை, கல்வி, அரசியல் பங்கேற்பு ஆகியவை மறுக்கப்பட்டிருந்தன. இதை எதிர்த்து பலரும் குரல் கொடுத்தனர். Mary Wollstonecraft தனது 1792 ஆம் ஆண்டின் “A Vindication of the Rights of Woman” என்ற நூலில் பெண்களும் அறிவாற்றல் மற்றும் நியாயமான, விவேகம் கொண்ட சக மனிதர்கள் என்பதையும் அவர்களுக்குச் சமமான கல்வி வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். இந்த நூல் தான் பின்னர் வந்த பல பெண்ணியச் சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. Sanders குறிப்பிடுவதுபோல், முதல் அலை பெண்ணியம் பெரும்பாலும் “சட்டத்திற்குள் சம உரிமை” (Legal Equality) என்ற கோரிக்கையை மையமாகக் கொண்டது. பெண்கள் திருமணமான பிறகு தங்களுடைய சொத்துக்களை இழந்து விடுவது, கல்வியில் பங்குபெற முடியாமை, வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுதல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. John Stuart Mill, Harriet Taylor, Emmeline Pankhurst ஆகியோர் பெண்களின் வாக்குரிமைக்காக வலுவான குரலை எழுப்பினர்.

அமெரிக்காவில் Seneca Falls Convention (1848) என்ற நிகழ்ச்சி மிக முக்கியமான ஒன்று. இங்குப் பெண்களும் ஆண்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள் என்ற “Declaration of Sentiments” வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வின் தொடர்ச்சியில் பல நாடுகளில் படிப்படியாக பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. 1918இல் முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமாக வாக்குரிமை கிடைத்தது. பிறகு, 1928 இல்தான் ஆண்களுக்குச் சமமான விகிதத்தில் பெண்களுக்கும் வாக்குரிமை பெற்றனர். Valerie Sanders பெண்ணிய இயக்கத்தின் வரையறைகள் குறித்து விமர்சிக்கவும் செய்கிறார். முதல் அலை பெண்ணியம் பெரும்பாலும் நடுத்தர வர்க்க வெள்ளை பெண்களின் அனுபவங்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தியது. வறியவர்கள், தொழிலாளர் பெண்கள், கருப்பின பெண்கள், குடியேற்றப் பெண்கள் ஆகியோரின் பிரச்சனைகள் அதில் போதுமான அளவு சேர்க்கப்படவில்லை. மேலும், பாலினம் மட்டுமே அல்லாது இனவியல், சமூக நிலை, பொருளாதார வேறுபாடுகளும் பெண்களின் நிலையைப் பாதிக்கின்றன என்பதை அது பெரிதாக உணரவில்லை. பேசவும் இல்லை.

ஆனால், Sanders இந்த இயக்கம் பெண்களின் சுயமரியாதை மற்றும் அடையாள விழிப்பை உருவாக்கியது; அதற்கான துவக்கமாகவும் இருந்தது; என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார். இதுவே பின்னர் இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை பெண்ணியச் சிந்தனைகளுக்கான அடித்தளமாக அமைந்தது. சட்டப்பூர்வமான உரிமைகளுக்கான போராட்டத்திலிருந்து சமூக மற்றும் மனவியல் அடக்குமுறைகளுக்கான ஆராய்ச்சிகளுக்குப் பெண்ணியச் சிந்தனை வளர்ந்த தன்மையினை இக்கட்டுரை பதிவு செய்துள்ளது.

1960 – 1980களுக்கிடையில் உருவான “இரண்டாம் அலை பெண்ணியம்” (Second Wave Feminism), பெண்கள் சமூகத்தில் உண்மையான சமத்துவத்தையும் தனிநபர் சுதந்திரத்தையும் அடைய முயன்ற ஓர் ஆழமான இயக்கம் என்கிறார் Sue Thornham. முதல் அலை பெண்ணியம் பெரும்பாலும் சட்டபூர்வமான உரிமைகள், குறிப்பாக வாக்களிக்கும் உரிமை மற்றும் சொத்து உரிமை போன்றவற்றில் மையமிட்டிருந்தது. ஆனால் இரண்டாம் அலை பெண்ணியம் அதைக் கடந்தது. பெண்களின் வாழ்வில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் குடும்பம், வேலை, உடல், பாலினம், கலாச்சாரம், ஊடகம், அரசியல் எனக் கவனத்தில் கொண்டது.

இந்த இயக்கத்தின் முக்கிய நம்பிக்கை “The Personal is Political” எனும் கோட்பாடு. அதாவது, பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், திருமணம், உடலியல் அனுபவங்கள் அனைத்தும் அரசியல் கட்டமைப்புகளால் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற கருத்து. பெண்களின் வாழ்வை ஒடுக்குவது சட்டம் அல்லது ஆணாதிக்கம் மட்டுமல்ல, கலாச்சார வழக்கங்கள், ஊடகப் பிரதிநிதித்துவம், சமூக மதிப்பீடுகள் ஆகியவையும் காரணம் என்பதை இது வெளிக்கொணர்ந்தது.

இரண்டாம் அலை பெண்ணியத்தின் முக்கியமான நோக்கங்களாகப் பெண்களுக்குச் சமமான சம்பளம், வேலைவாய்ப்பு, கல்வி, குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் உரிமை, கருத்தடை மற்றும் கருக்கலைப்பு பற்றிய முடிவெடுக்கும் உரிமை ஆகியவை இருந்தன. இது ஒருபுறம் பெண்களின் உடல் மற்றும் பாலியல் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியபோதும், மறுபுறம் பெண்களின் மனவியல், உணர்ச்சி, சமூக ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்திய புதிய தத்துவங்களை உருவாக்கியது.

Sue Thornham கூறுவதுபோல், இரண்டாம் அலை பெண்ணியம் ஒரே விதமாகப் பெண்களின் அனுபவத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதில் வர்க்கம், இனம், சமூக நிலை, பாலின விருப்பம், கலாச்சாரப் பின்னணி எனப் பல்வேறு வேறுபாடுகள் இருந்தன. ஆரம்ப காலத்தில் இந்த வேறுபாடுகள் போதுமான அளவு பேசப்படவில்லை. இயக்கம் பெரும்பாலும் நடுத்தர வர்க்க வெள்ளைப் பெண்களை மையமாகக் கொண்டது என்பதையும் Thornham விமர்சிக்கிறார். இதனால் பின்னர்க் கருப்பினப் பெண்ணியம் (Black Feminism), ஒருபால் ஈர்ப்புப் பெண்ணியம் (Lesbian Feminism) ஆகிய புதிய துணை இயக்கங்கள் தோன்றின.

இந்த இயக்கத்தின் முக்கியச் சாதனை பெண்களின் சுய அடையாள உணர்வை வலுப்படுத்தியது. பெண்கள் தங்களை “மற்றவர்களுக்காக இருப்பவர்கள்” என்ற எண்ணத்திலிருந்து “தங்களைத் தாங்களே வரையறுக்கும்” நிலைக்கு வந்தனர். கல்வி, ஊடகம், இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் பெண்கள் தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்தி, சமூக அமைப்புகளைக் கேள்விக்குட்படுத்தினர். Thornham, இந்த இரண்டாம் அலை பெண்ணியம் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டது. அது ஒருங்கிணைந்த இயக்கமாக இல்லாமல், பல்வேறு நோக்கங்களால் சிதறி இருந்தது. ஆனாலும், பெண்களின் மீதான அடக்குமுறையை வெளிக்கொண்டு வந்து, சமூகத்தின் அடிப்படை மதிப்புகளை மாற்றியதில் இதன் தாக்கம் பெரிது. இதுவே பின்னர் உருவான மூன்றாம் அலை பெண்ணியம் மற்றும் பின்னைய பெண்ணியம் (Post-feminism) ஆகிய இயக்கங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது என்கிறார்.

இரண்டாம் அலை பெண்ணியம் என்பது பெண்களின் வாழ்வை அரசியல் அரங்கிற்குக் கொண்டு வந்த புரட்சியாக இருந்தது. பெண்கள் தங்கள் உடல், மனம், குடும்பம், பணியிடம், சமூக உறவுகள் ஆகிய அனைத்திலும் சமத்துவம் தேடுவதற்கான புதிய சிந்தனையை உருவாக்கியது. Sue Thornham இதை ஒரு அறிவார்ந்த, பல அடுக்குகளைக் கொண்ட, சமூக மாற்றத்தின் அலை என்று வர்ணித்திருப்பதும் குறிப்பிடத்தக்ககது.

“பின்னையப் பெண்ணியம்” (Post-feminism) என்ற கருத்தை Sarah Gamble மிகத் தெளிவாகத் தன்னுடைய கட்டுரையில் விளக்கியுள்ளார். இது “பெண்ணிய இயக்கம் முடிந்துவிட்டது” என்ற பொருளில் அல்ல; மாறாக, முதல் மற்றும் இரண்டாம் அலை பெண்ணியத்தின் சாதனைகள் முடிந்தபின் உருவான புதிய கலாச்சார, சமூக, அறிவியல் நிலையைக் குறிக்கிறது. பெண்ணியம் அடைந்த முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, இப்போது பெண்கள் சமுதாயத்தில் எப்படி வாழ்கிறார்கள்? ஊடகம் அவர்களை எப்படிப் பிரதிபலிக்கிறது, அவர்கள் சுய அடையாளத்தை எப்படிக் கட்டமைக்கிறார்கள் என்பதைப் பேசுவதே பின்னையப் பெண்ணியம் என்கிறார்.

Sarah Gamble வலியுறுத்துவது, post-feminism ஒரு “பிந்தைய நிலை” அல்ல; அது ஒரு சிந்தனை முறை. இது “பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள்” என்ற பாரம்பரியக் கண்ணோட்டத்துக்கு எதிராக, பெண்கள் தங்களின் வாழ்க்கையில் சுய முடிவுகளை எடுக்கும் திறனையும், பொறுப்பையும் கொண்டவர்கள் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. பெண்கள் இனிச் சமூகத்தின் பல்வேறு பகுதிகளில் சுதந்திரமாகச் செயலில் ஈடுபடலாம் என்ற புதிய நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது.

முதல் மற்றும் இரண்டாம் அலை பெண்ணியங்கள் பெண்களுக்குச் சட்ட உரிமைகள், கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் போன்றவற்றை வழங்கியபோதிலும், சில முக்கியமான பிரச்சனைகளை அவை கவனத்தில் கொள்ளவில்லை. உடல், பாலினம், ஊடகங்கள், நவீன வாழ்க்கை முறை போன்றவை பெண்களின் அனுபவத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதை post-feminism எடுத்துரைக்கிறது. அதாவது, “பெண்களின் உடல் மற்றும் மனம் அரசியல் அரங்கிலிருந்து பிரிக்க முடியாதது” என்பதையும் இது வலியுறுத்துகிறது.

Gamble, post-feminism பெண்களை ஒரே மாதிரியான சமூகக் குழுவாகப் பார்க்காது. இனம், சாதி, வர்க்கம், பாலின விருப்பம், கலாச்சாரம், கல்வி நிலை போன்ற பல்வேறு வேறுபாடுகள் பெண்களிடம் வேறுபட்ட அனுபவத்தை உருவாக்குகின்றன. ஆகையால், ஒரு பெண்ணின் வாழ்வு மற்றொரு பெண்ணின் அனுபவத்துடன் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. இந்த வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதே post-feminism இன் அடிப்படை என்கிறார்.

ஊடகங்களும் post-feminism இல் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றன. நவீன ஊடகங்கள் பெண்களைச் சுதந்திரமானவர்களாகக் காட்டினாலும், அதே சமயம் அவர்களின் தோற்றம், உடலமைப்பு, வாழ்க்கைமுறை போன்றவற்றைப் புதிய வடிவில் கட்டுப்படுத்துகின்றன. Gamble இதை “மாறுபட்ட அடக்குமுறை” என்கிறார். வெளிப்படையாகச் சுதந்திரம் இருப்பது போல் தோன்றினாலும், மறைமுகமாகச் சமூகத்தின் அழுத்தம் இன்னும் தொடர்கிறது.

மொத்தத்தில், Sarah Gamble வலியுறுத்துவது, post-feminism என்பது பெண்ணியத்தின் முடிவு அல்ல; அது அதன் புதிய வடிவம். பெண்கள் தங்கள் வாழ்க்கையைச் சுயமாகக் கட்டுப்படுத்தும் காலத்தில், அவர்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள், சுய அடையாளக் கேள்விகள், ஊடகப் பிரதிநிதித்துவங்கள் ஆகியவற்றை விவாதிக்கும் சிந்தனையாக இது செயல்படுகிறது. இது பெண்ணியத்தின் தொடர்ச்சியாகவும் மாற்றத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும் என்ற நூலின் இரண்டாம் பகுதி டோரில் மொய் எழுதிய பாலியல் / பிரதியியல் அரசியல்: பெண்ணிய இலக்கியக் கோட்பாட்பாடு (1988). இந்நூல் பேசும் கருத்துகளைக் காணலாம்.

1988ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Sexual/Textual Politics: Feminist Literary Theory’ என்ற இந்தப் புத்தகத்தில் Toril Moi பெண்ணிய இலக்கியக் கோட்பாட்டின் வளர்ச்சியையும், அதன் பல்வேறு தத்துவப் பார்வைகளையும் ஆழமாக ஆராய்ந்துள்ளார். இது பெண்ணியம் எப்படி இலக்கிய விமர்சனத்தின் வழியாக சமூக, அரசியல், கலாச்சார நிலைகளைக் கேள்விக்குட்படுத்தியது என்பதை விளக்குகின்ற முக்கியமான ஆய்வு.

Toril Moi இந்த நூலில் மூன்று முக்கியத் தளங்களை இணைத்து ஆராய்கிறார்.

♦   அமெரிக்கப் பெண்ணிய இலக்கிய விமர்சனம்

♦   பிரிட்டிஷ் பெண்ணியக் கோட்பாடு,

♦   பிரஞ்சுப் பெண்ணிய சிந்தனை.

முதலில், அவர் Kate Millett, Elaine Showalter ஆகிய அமெரிக்கப் பெண்ணிய அறிஞர்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறார். அவர்கள் பெண்களின் படைப்புகளைச் சமூக-அரசியல் அடக்குமுறைக்கு எதிராகக் கட்டமைத்ததன் மூலம் பெண்ணிய இலக்கியத்தைச் சமூக மாற்றத்தின் கருவியாக வடிவமைத்தனர்.

அடுத்ததாக, Elaine Showalter உருவாக்கிய Gynocriticism என்ற கோட்பாட்டை Moi விவரிக்கிறார். இது பெண்கள் தங்கள் சொந்த எழுத்து மரபை உருவாக்கி, ஆணாதிக்க இலக்கியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க முயற்சித்த குறிப்பிடத்தக்க சிந்தனை முறை. பின்னர், Moi பிரெஞ்சுப் பெண்ணியத்திற்கான பிரதிநிதிகளான Julia Kristeva, Helene Cixous மற்றும் Luce Irigaray ஆகியோரின் கருத்துக்களை ஆழமாக ஆராய்கிறார். இவர்களின் படைப்புகள் மொழி, மனவியல் மற்றும் பாலினத்தின் உளவியல் அடையாளத்தை மையப்படுத்தியவை. குறிப்பாக Kristeva கூறும் “semiotic” மற்றும் “symbolic” கூறுகள், பெண்கள் எழுத்தின் வழியாகத் தங்கள் அடையாளத்தை எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதைக் காட்டுகின்றன.

Toril Moi இந்தப் பிரெஞ்சுக் கோட்பாடுகளை post-structuralist (பின் அமைப்பியல்) பார்வையுடன் இணைத்து ஆராய்கிறார். இதன் மூலம் பெண்ணியம் என்பது ஒரு ஒரே வடிவிலான அரசியல் இயக்கமல்ல, மாறாகப் பல்வேறு கலாச்சாரங்களில் மாறுபடும் ஒரு சிந்தனை என அவர் வலியுறுத்துகிறார். இந்த நூலின் முக்கிய வாதம், “பெண்களின் எழுத்து அரசியல் சார்ந்தது” என்பதே. அதாவது, பெண்கள் எழுதும் விதமே சமூகத்தில் அவர்களின் இடத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது. எனவே, பெண்ணிய இலக்கியம் என்பது ஆணாதிக்க அமைப்புகளின் மொழி, ஆளுமை, அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு அரசியலாக மாறுகிறது. மேலும் பிரஞ்சுப் பெண்ணியத்தின் உளவியல்-மொழியியல் தாக்கத்தை விரிவாக உரையாடலுக்கு உட்படுத்துகிறார்.

இந்த ஆய்வு பெண்ணியத்தின் தத்துவ ரீதியான பரிணாமத்தை வெளிப்படுத்தும் ஒரு வழிகாட்டி நூலாகவும், இலக்கியக் கோட்பாடுகள் பெண்களின் அனுபவங்களை எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதை விவரிப்பதாகவும் இருக்கின்றது. சுருக்கமாக, Toril Moi-யின் Sexual/Textual Politics என்பது பெண்ணிய இலக்கிய விமர்சனத்தின் அடிநாதமாக இருக்கிறது. இது பெண்களின் எழுத்து, வாசிப்பு, சிந்தனை ஆகியவை சமூகத்தின் அரசியல் அமைப்புகளை எவ்வாறு மாற்றுகின்றன என்பதை ஆழமாக ஆராய்ந்துள்ளது.

தமிழில் பெண்ணியம் தொடர்பாக வெளிவந்துள்ள பிற நூல்களைக் காட்டிலும் ராஜ்கௌதமன் மொழிபெயர்த்திருக்கும் இந்த ஆய்வுப் பதிவுகள் இத்துறையில் மேலதிக வெளிச்சத்தைத் தருகின்றன. தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப எளிமைப்படுத்தியும் அதே சமயம் பொருண்மையின் கன பரிமாணத்தைத் தவறவிடாமலும் இம்மொழிபெயர்ப்பு அமைந்திருக்கிறது. பெண்ணியக் கோட்பாட்டின் மீதான ஈடுபாடும் தமிழ்ச்சூழலில் அவை பெற வேண்டிய முக்கியத்துவத்தையும் ராஜ்கௌதமன் இம்மொழிபெயர்ப்புப் பணிகளின் மூலம் உணர வைத்துள்ளார்.

பாலற்ற பால் பெண்பால் நபும்சகம் (2011)

இரண்டாம் அலை பெண்ணியத்தின் போது உருவான மிகமுக்கியமான ஆய்வு Germaine Greer (1970) எழுதிய The Femal Eunuch. இதனை ராஜ்கௌதமன் பாலற்ற பெண்பால் பெண்பால்நபும்சகம் என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூலின் முன்னுரையில் ’சுதந்திரமான தமிழ்மொழிபெயர்ப்பாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது’ (2011:7) என்று குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது.

1970 ஆம் ஆண்டு வெளியான ‘The Female Eunuch‘ என்பது இரண்டாம் அலை பெண்ணியத்தின் (Second Wave Feminism) முக்கியமான மற்றும் தாக்கம் பெற்ற ஆய்வு. ஆஸ்திரேலியப் பெண்ணியச் சிந்தனையாளர் Germaine Greer, இந்த நூலில் பெண்களின் உடல், பாலினம், சமூக அடக்குமுறை மற்றும் சுய அடையாளம் ஆகியவற்றை ஆழமாக வரலாற்றுப் பின்புலத்தில் ஆராய்ந்துள்ளார். இந்த ஆய்வு உடல், ஆன்மா, அன்பு, வெறுப்பு என்ற நான்கு பகுதிகளாக உள்ளது. உடல் என்பதில் பண்பாட்டுப் பால், எலும்புகள், வளைவுகள், முடி, பால், கொடிய கர்ப்பப் பை என பெண்களின் உடல்சார்ந்த அறிவியல் அடிப்படையிலான கருத்துகளும் பழமைவாத நம்பிக்கைகளும் உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆன்மா என்ற பகுதியில் ஒரே வகைமாதிரி, சக்தி, குழந்தை, சிறுமி, பூப்பு, உளவியல் விற்பனை, கச்சாப்பொருள், பெண் ஆற்றல், வேலை என உளவியல் அடிப்படையலான உரையாடல் இடம்பெற்றுள்ளது. அன்பு என்ற பகுதியில் இலட்சியம், பிறநலம், தன்னலமம், மிகை மயக்கம், கற்பனைக் காதல், ஆண்பால் மாயப்புனைவின் இலக்கு, காதல், ‘திருமணம் பற்றிய நடுத்தரவர்க்கத் தொன்மம்’, குடும்பம், பாதுகாப்பு உள்ளிட்டவை பேசப்பட்டுள்ளன. வெறுப்பு என்ற இறுதிப் பகுதியில், வெறுப்பும் அருவருப்பும், துயரம், மனக்கசப்பு, கிளர்ச்சி, புரட்சி ஆகிய அரசியல் செயற்பாடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் மையக் கருத்து,  சமூகம் பெண்களை “உண்மையான உயிருள்ள மனிதர்கள்” ஆக அல்ல, “அடக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட உடல்கள்” ஆக மாற்றிவிட்டது என்பது. நவீன சமூக அமைப்பு பெண்களின் பாலியல் சக்தியை (sexual energy) கட்டுப்படுத்தி, அவர்களை “eunuch”, அதாவது உடல் இருக்கிறது, ஆனால் உணர்ச்சி மற்றும் சுய ஆற்றல் இல்லாதவர்களாக மாற்றியுள்ளது என்பதே.

பெண் உடலின் அரசியல் குறித்து Greer, பெண்களின் உடல் மீது சமூகமும் மதமும் நிர்ணயித்த கட்டுப்பாடுகள் அவர்களை “மனிதராக” வாழ முடியாதவர்களாக ஆக்கியுள்ளது. உடை, ஒழுக்கம், மரியாதை, திருமணம் முதலான கருத்துகள் அனைத்தும் பெண்களை அடக்கி வைக்கும் கருவிகளாகச் செயல்படுகின்றன. பெண்கள் தங்கள் உடலை வெட்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று காட்டமாகவே விமர்சிக்கிறார்.

மேலும் திருமணம் என்பதே ஓர் அடக்குமுறை அமைப்பாகக் காணப்படுகிறது என்கிறார். Greer-ன் கருத்துப்படி, பாரம்பரியத் திருமணம் பெண்களை ஆணின் சொத்தாக மாற்றுகிறது. வீட்டு வேலை, குழந்தைப் பராமரிப்பு போன்ற பணிகள் “அன்பு” என்ற பெயரில் பெண்களின் சுதந்திரத்தை மறைக்கின்றன. இதனால் பெண்கள் தங்கள் தனிப்பட்ட கனவுகள், ஆசைகள், உடலுணர்வுகள் அனைத்தையும் அடக்கிக் கொள்ள வேண்டிய நிலை உருவாகிறது.

Greer மிகத் தெளிவாகவே பெண்களின் sexual liberation குறித்துப் பேசுகிறார். அவர் கூறுவது, உண்மையான பெண்ணியம் பெண்களுக்குச் சட்ட உரிமைகளை மட்டுமே அல்ல, உடல் மற்றும் மனச் சுதந்திரத்தையும் வழங்க வேண்டும். பெண்கள் தங்கள் பாலுணர்வை வெட்கமின்றி வெளிப்படுத்தவும், அதை தங்கள் அடையாளத்தின் ஒரு பகுதி என ஏற்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்.

பொதுவாக, பெண்கள் தங்களை அடக்கிவைக்கும் இந்தச் சமூக மதிப்புகளை “உள்ளுணர்வாகவே” ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆண்களின் பார்வையில் பார்க்கப் பழகிவிட்டனர்; இதுவே பெண்களின் உண்மையான அடிமைத்தனம். இந்த மனவியல் சங்கிலிகளை உடைக்காவிட்டால், வெளிப்புறச் சுதந்திரம் எதுவும் அர்த்தமில்லை எனத் தர்க்கபூர்வமாக உரையாடுகிறார்.

‘The Female Eunuch‘ வெளியான போது, மிகப் பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பலர் இதை “பெண் இருப்பை எதிர்க்கும் சமூகம் எதிர்கொள்ளும் குரல்” என்று பாராட்டினார்கள்; சிலர் இதை மிகுந்த அதிர்வை உண்டாக்கும், மரபுவிரோதமான நூலாகவும் கண்டனர். ஆனால், இதன் தாக்கம் உலகளவில் பெண்களின் சிந்தனையையும், பாலியல் அரசியலையும் மாற்றியது.

Germaine Greer-ன் ‘The Female Eunuch‘, பெண்களின் உடல், மனம் மற்றும் சமூகத்தில் அவர்களின் நிலையை மறுபரிசீலனை செய்யும் ஒரு புரட்சிகர ஆய்வு. இது பெண்கள் தங்கள் உடலை, சிந்தனையை, ஆசையை மீட்க வேண்டும் என்ற தீவிரமான அழைப்பாக இருக்கிறது. Greer-ன் கருத்துப்படி, “பெண்ணியம் என்பது ஆண்களை வெறுப்பது அல்ல; பெண்கள் தங்களை உண்மையாக நேசிக்கக் கற்றுக்கொள்வது.” இந்த ஆய்வினை ஒரு சுதந்திரமான மொழிபெயர்ப்பாகக் கையளித்திருக்கிறார் ராஜ்கௌதமன். ஒரு தேர்ந்த சிந்தனையாளரால்தான் தன் சமூகத்திற்குத் தேவைப்படும் ஆக்கங்களை எளிதாக அடையாளங் காணமுடியும். ராஜ்கௌதமனின் The Female Eunuch மொழிபெயர்ப்பும் இத்தன்மைக்குக் கட்டியம் கூறுவதாகவே இருக்கின்றது.

பாலியல் அரசியல் (2021)

இரண்டாம் அலை பெண்ணியத்தில் வெளியான மற்றுமொரு முக்கியமான ஆய்வு *Sexual Politics (1970) அமெரிக்கப் பெண்ணிய அறிஞர் Kate Millett எழுதிய இவ்வாய்வும் நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியும் சில உட்பகுதிகளைக் கொண்டுள்ளன. முதல் பகுதியின் முதல் அதிகாரம் பாலியல் அரசியலுக்கான எடுத்துக்காட்டுகளாக ஹென்றி மில்லர், நார்மன் மெய்லர், அர்மாண் ழான் ஜெனே ஆகியோரின் பிரதிகளை ஆராய்கிறது. இரண்டாம் அதிகாரத்தில் பாலியல் அரசியல் பற்றிய கோட்பாடு கருத்தியல், உயிரியல், சமூகவியல், வர்க்கம், பொருளாதாரமும் கல்வியும், வன்முறை – வன்சக்தி, மானிடவியல், தொன்மமும் மதமும், உளவியல் எனப் பல கூறுகளால் ஆராயப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில உள்ள மூன்றாம் அதிகாரம் வரலாற்றுப் பின்புலம் – பாலியல் புரட்சி என வரலாற்று அடிப்படையில் முதற்கட்டம் (1830-1930), அரசியல், விவாதம், இலக்கியம் என விரிவாகப் பகுத்தாராய்கிறது. நான்காம அதிகாரத்தில் நாஜி ஜெர்மனி, சோவியத் யூனியன் மாதிரிகளில் இருக்கும் பிற்போக்குக் கொள்கைகளைக் கட்டுடைக்கிறது. அவ்வாறே கருத்தியலின் எதிர்வினை என்று ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனையையும் பிந்தைய சில ஃப்ராய்டியவாதிகளின் சிந்தனைத் தரவுகளையும் கேள்விக்குட்படுத்துகிறது.

இந்த நூலில் “பாலினம்” (sex) என்பது உயிரியல் அடிப்படை மட்டுமல்ல, அது ஒரு அரசியல் அமைப்பு என்கிற புதுமையான கருத்தை முன்வைக்கிறார். சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே காணப்படும் அனைத்து அதிகார உறவுகளும் “பாலியல் அரசியல்” (sexual politics) என்பதன் வெளிப்பாடு. அதாவது, ஆண்கள் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் போது, பெண்கள் அந்த அமைப்பின் கீழ் ஒடுக்கப்பட்டவர்களாக நிலைநிறுத்தப்படுகிறார்கள்.

பாலியல் என்பதும் ஓர் அரசியல்; சமூக அமைப்புகள், மதம், இலக்கியம், சட்டம், கல்வி, குடும்பம் அனைத்தும் ஆண்களின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே “பாலியல்” என்பது தனிப்பட்ட உறவு அல்ல; அது ஒரு அரசியல் அதிகாரம் என்கிறார் Millett. பெண்ணியம் வெறும் சம உரிமை இயக்கமாக மட்டும் இல்லாமல், அடக்குமுறை அரசியல் அமைப்பை உடைக்கும் சிந்தனையாக இருக்கிறது.

Millett தனது நூலில் Jean gennet, Henry Miller, Norman Mailer ஆகியோரால் எழுதப்பட்ட நாவல்களை ஆராய்கிறார். இவர்களின் படைப்புகளில் பெண்கள் பெரும்பாலும் பாலியல் பொருட்களாகவும், ஆண்களின் ஆட்சிக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

அவர் இத்தன்மையை “இலக்கியத்தின் வழியாக உருவாக்கப்படும் ஆணாதிக்கம்” எனக் குறிப்பிடுகிறார். இலக்கியம் பெண்களின் இடத்தைச் சமூகத்தில் எவ்வாறு குறைத்தது, அவர்களை எப்படிப் ‘பாலியல் அடையாளம்’ மூலமாகக் கட்டுப்படுத்தியது என்பதையும் விவாதத்திற்கு உட்படுத்துகிறார். அதே சமயம், Simone de Beauvoir எழுதிய ‘The Second Sex‘ நூலை மேற்கோளாகக் கொண்டு, பெண்கள் “மற்றவர்கள்” (the Other) என வரையறுக்கப்படுவது சமூகத்தின் அடிப்படை வன்முறை என்றும் விமர்சிக்கிறார்.

Millett குடும்பத்தைப் “பாலியல் அரசியலின் மிகப் பெரிய களமாக” அடையாளங்காண்கிறார். பாரம்பரியக் குடும்பம் ஆணின் ஆட்சியை நிலைநிறுத்தும் கருவியாகச் செயல்படுகிறது. பெண்கள் வீட்டின் உள்ளே அடக்கப்பட்டு, பொருளாதார ரீதியாக ஆண்களைச்  சார்ந்தவர்களாகவே இருப்பதற்குத் தள்ளப்படுகிறார்கள். “குடும்பம் என்பது அரசியல் நிறுவனமாகும்; அதில் ஆண்கள் ஆளுகிறார்கள், பெண்கள் ஆளப்படுகிறார்கள்.”என்பதே  Millett இன் ஆணித்தரமான கருத்தாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை ‘Sexual Politics‘ சமூக மாற்றத்திற்கான அழைப்பாக இருக்கிறது. பெண்களின் விடுதலை கல்வியிலும், சட்டத்திலும், மனவியலிலும் தொடங்க வேண்டும் என்பதே பிரதானம். பெண்கள் தங்கள் உடலையும், பாலினத்தையும், மனதையும் மீட்டுக்கொள்ள வேண்டும்; ஆணாதிக்கம் உருவாக்கிய “பொய்யான இயற்கை” என்ற கருத்தை உடைக்க வேண்டும் என்பதை பாலியல் அரசியல் பல தளங்களில் தர்க்கப்பூர்வமாக உரையாடியுள்ளது.  Kate Millett-ன் ‘Sexual Politics‘ பெண்கள் எதிர்கொண்ட அடக்குமுறையின் அறிவியல், கலாச்சார மற்றும் அரசியல் வேர் காரணங்களை வெளிப்படுத்தும் ஆய்வு. இது பெண்ணியத்தை அரசியல் உரையாடலுக்குள் பொருத்திப் பார்க்கிறது.

ஆணாதிக்கம் என்பது இயற்கையானது அல்ல; அது மனிதனால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு; எனவே அதை மனிதனே மாற்ற முடியும் என்பதே இவ்வாய்வின் கருத்து. 

இந்த ஆய்வு பெண்களுக்கு உலகளவிலான புதிய சிந்தனைகளை ஏற்படுத்தியது. பெண்ணியம் ஒரு சமூகச் சீர்திருத்தம் அல்ல, ஒரு அரசியல் புரட்சி என்பதை Millett தெளிவாக இவ்வாய்வின் மூலம் நிறுவியுள்ளார்.

மேற்குறித்த இரண்டு நூல்களுமே தமிழ் ஆய்வுச் சூழலில் பெண்ணியம் குறித்த மேலதிகத் தெளிவான சிந்தனைகளைப் பெற வழிவகுத்தவை. வாய்பாட்டு முறையிலான பெண்ணிய நோக்கு, கருவி நூல்களிலிருந்து மாறுபட்டவை. பெண்ணியம் சார்ந்த புதிய ஆய்வு முறையியலைப் பேசுபவை.

மொழிபெயர்ப்பு நூல்களின் மூலத்தை வாசித்தபின் ராஜ்கௌதமனின் மொழிபெயர்ப்பு நுட்பம், ஆழ்ந்த சிந்தனையியல், தமிழ்ச் சூழலுக்குத் தகுந்தமுறையில் கையளித்திருக்கும் முறை ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. முன்னர்க் குறித்தபடி அவர் மொழிபெயர்ப்பை வெறும் ‘சொல்-பெயர்ப்பு’ செயல்பாடாகப் பார்க்கவில்லை; “கருத்து-பெயர்ப்பு” பணியாகக் கவனமுடன் செய்திருக்கிறார். மேற்கத்திய கோட்பாடுகளைத் தமிழில் கொண்டு வரும்போது அவர் மூன்று நிலைகளைப் பின்பற்றியுள்ளார்.

♦   கருத்தின் தத்துவத்தை, தர்க்கத்தை ஆழமாகப் புரிந்துகொள்வது.

♦   அதனை தமிழின் சமூக, கலாச்சார, இலக்கியச் சூழலுடன் இணைப்பது.

♦   மொழியமைப்பு, தத்துவம், தர்க்க உரையாடல் ஆகியவை ஒன்றோடு ஒன்று கலக்கும்படி வடிவமைப்பது.

இந்த நுட்பத்தின் மூலம் அவர் பெண்ணியக் கோட்பாடுகளை வெறும் மொழிபெயர்ப்பாக இல்லாமல், தமிழ்மொழி வழியாகச் சுயசிந்தனையாக மாற்றுகிறார். குறிப்பாக The Female Eunuch மொழிபெயர்ப்பில், பாலற்ற பெண்பால் என்பதோடு பெண்பால் நபும்சகம் என்பதைப் பாலற்ற பெண்பால் என்ற கருத்தியலோடு இணைத்திருக்கிறார். நபும்சகம் என்பது சமசுகிருதச் சொல்லாக இருந்தாலும் அதன்பொருண்மை தமிழ் ஆய்வுச் சூழலில் நன்கு அறியப்பட்ட ஒன்று. இவ்வாய்வின் ஒரு பகுதியும் அதன் மொழிபெயர்ப்பும் வருமாறு,

When the life of the party wants to express the idea of a pretty woman in mime, he undulates his two hands in the air and leers expressively. The notion of a curve is so closely connected to sexual se-mantics that some people cannot resist sniggering at road signs. The most popular image of the female despite the exigencies of the clothing trade is all boobs and buttocks, a hallucinating sequence of parabola and bulges. (35)

பெண்களின் உடலை வளைவுகளை வைத்து மட்டுமே மதிப்பிடும், புரிந்து கொள்ளும் தன்மையை விவாதிக்கின்ற பகுதி இது. மைம் என்கிற பேச்சற்ற நிகழ்த்து வடிவத்தில் ஓர் ஆண் பெண்ணைக் குறிக்க எத்தகைய அசைவுகளைக் காட்டுவான் என்பதும் சாலையின் வளைவுகளைக் கூடப் பெண்ணின் அங்க அசைவுகளோடு தொடர்புபடுத்திச் சிரிக்கின்ற தன்மையும் இப்பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. இப்பகுதியை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்திருந்தால் அது  ஒரு அந்நியமான புரிதலைத் தருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ராஜ்கௌதமன் மொழிபெயர்ப்பு வருமாறு,

ஆண்கள் மட்டும் கூடியிருக்கும்போது, ஓர் அழகிய பெண்ணைப் பற்றிக் கூறும் ஒருவர், அதனை வெளிப்படுத்தத் தமது இரண்டு கைகளையும் கொண்டு அலைகளைப் போல சைகை செய்து காட்டுவார். பெண் உடலின் வளைவுகளைப் பற்றிய அபிப்பிராயம் பாலியல் அர்த்தத்தோடு மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளது. சாலை விதியைக் குறிக்க வரையப்பட்ட வளைவைக் கண்டதும் எழுகிற நமட்டுச் சிரிப்பினைச் சிலரால் அடக்க முடியவில்லை. பெண்கள் உடுத்துகிற ஆடைகளின் துணி வியாபாரத்தின் யுக்திகள் பிரமாதமாக இருந்தபோதிலும், பெண்பால் பற்றிய வெகுசனப் படிமத்தின் பெரும்பகுதி எல்லாமே மார்பகங்கள், புட்டங்கள், மனப்பிரமையூட்டுகின்ற உவமானங்களின் வரிசை, தசைத் திரட்சிகள்.(2011:42)

இங்கு மைம், leers expressively அதாவது காம நோக்குடன் பார்த்தல் ஆகியவை விடுபட்டிருக்கின்றன. சுதந்திரமான மொழிபெயர்ப்பு என்பதால் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் விடுபடல் என்பது திட்டமிட்டதல்ல. கவனமாகவே இப்பகுதியை ராஜ்கௌதமன் கையாண்டுள்ளார். தமிழ்ச்சமூக விழுமியத்துடன் பெண் குறித்த ஆணின் அங்க அசைவைக் காட்ட முயற்சிக்கிறார். சாதாரணமாக இப்பகுதியை வாசிப்பவர்களுக்குக் கைகளை வீசி நளினமாக நடந்து காண்பிக்கும் ஆணின் கேலிக்குரிய வடிவமே தோன்றும். எதைச் சொல்லவேண்டும் என்று தீர்மானிப்பதைப் போல எதைச் சொல்லவேண்டாம் என்பதிலும் மொழிபெயர்ப்பாளரின் சிந்தனை இயங்கும் நிலையைப் புரிந்து கொள்ளமுடிகின்றது.

இம்மூன்று மொழிபெயர்ப்புகளையும் ஒரு சேர வாசிக்கும்போது பெண்ணியத்தின் தோற்றம், வளர்ச்சி, செல்நெறி ஆகியவை குறித்த தர்க்கபூர்வமான புரிதலைப் பெறமுடியும். கோட்பாட்டு நூல்களின் மொழிபெயர்ப்புகளை வாசிக்கும்போது ஏற்படக்கூடிய அயற்சி இவற்றை வாசிக்கும்போது ஏற்படவில்லை. காரணம் ராஜ்கௌதமன் கையாண்டிருக்கும் மொழி அவ்வாறானது. முன்னர்க் குறித்தபடி வேறு பிரதேசம் சார்ந்த ஆக்கங்களை, ஆய்வுகளை மொழியாக்கம் செய்யும்போது தான் சார்ந்த சமூகம் குறித்த கவனத்தையும் கொண்டிருக்கும் தன்மை. பெண் என்ற சகஉயிரிமீதான கவனமும் பெண்ணியச் சார்பும் உடைய இயக்கச் செயற்பாட்டாளராக இருப்பதால் ராஜ்கௌதமனுக்கு இத்தன்மை எளிதாக வாய்த்திருக்கிறது.

ராஜ்கௌதமனின் இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் தமிழில் பெண்ணிய உரையாடலுக்குப் புதிய தளத்தை உருவாக்கியுள்ளன. முன்னர் தமிழ்ப் பெண்ணியம் பெரும்பாலும் சமூக அனுபவம் மற்றும் இலக்கியத்தின் வழியே வெளிப்பட்டது. ஆனால், மேற்கத்திய பெண்ணியக் கோட்பாடுகள் தமிழில் வந்ததன் மூலம் கல்விசார் உரையாடல்கள் வலுவடைந்தன. குறிப்பாக பல்கலைக்கழக ஆய்வுகளில் கேட் மில்லெட்டும் கிய்ரும் தத்துவ அடிப்படையில் விவாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 

பெண்ணியம் என்பது உலகளாவிய ஒரு சிந்தனை இயக்கம்; அதன் தமிழாக்கம் என்பது ஒரு கலாச்சார மறுவாசிப்பு; ராஜ்கௌதமனின் மொழிபெயர்ப்பு நுட்பம் உலகச் சிந்தனையையும் தமிழ்ச் சூழலின் விழுமியத்தையும்  இணைத்துக் காட்டுகிறது. Greer முன்னெடுத்த பெண்நிலை விவாதம், Millett ன் அதிகாரம் மீதான விமர்சனம், Gamble மற்றும் Toril Moi ஆகியோரின் வரலாற்றுச் சிந்தனை இவை அனைத்தும் ராஜ்கௌதமனின் தமிழாக்கத்தால் புதிய வடிவம் பெற்றுள்ளன. ராஜ்கௌதமனின் இப்பங்களிப்பு தமிழில் பெண்ணியத்திற்கான தத்துவ அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது.

உதவிய நூல்கள் : 

1970 Millett, Kate, Sexual Politics. New York: Doubleday.  
1970 Kier, German. The Femal eunuch. Harper Collins e-books.  
1988 Toril Moi, ‘Sexual/Textual Politics: Feminist Literary Theory’,  Methuen (London).
1999 Sarah gamble, The Icon critical dictionary of feminism and post feminism, Icon Books Ltd, Cambridge.
2011 ஜெர்மெய்ன் கிரீர், பாலற்ற பால் பெண்பால் நபும்சகம், தமிழில் ராஜ்கௌதமன், விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்.
2021 சாரா காம்பிள் – டோரில் மொய், பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும், தமிழில் ராஜ் கௌதமன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.
2021 கேற் மில்ற், பாலியல் அரசியல், தமிழில் ராஜ் கௌதமன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.

அ. மோகனா
அ. மோகனா

மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரான முனைவர் அ.மோகனா, இலக்கிய ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் ‘தமிழில் விலாச நூல்கள்’ (2012) நூலுக்காக எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருது பெற்றுள்ளார். தேவார யாப்பியல், தமிழ் இலக்கியம் மற்றும் நூல் விமர்சனங்களில் நிபுணத்துவம் பெற்று, பல்வேறு பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

Share :

One response to “பெண்ணியக் கோட்பாடுகளின் தமிழாக்கம்: ராஜ்கௌதமனின் மூன்று மொழிபெயர்ப்புகள்- வரலாறும்  வாசிப்பும்”

  1. Dr.A.Mohana
    Dr.A.Mohana
    April 1, 2026

    அருமை. வாழ்த்துக்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top