புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஓர் இலக்கிய வடிவமாகும். மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை கற்பனையுடன் உரைநடையில் எழுதப்படுவது நாவலாகும். Novel என்னும் சொல் Novela என்னும் இத்தாலிய மொழியிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். கி.பி.பதினாறாம் நூற்றாண்டிலிருந்து நாவல் என்னும் சொல் ஆங்கில மொழியில் வழக்காட்சியுற்று நிலைபெற்ற வந்துள்ளது. தொடக்க காலத்தில் தமிழில் நாவலை வசன காவியம் என்றழைத்தனர். வசன காவியம் எனும்போது நாவலைக் காவியத்தின் வாாிசாகக் கொண்ட மனப்பான்மையைக் காட்டுகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலே நாவலிலக்கியம் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்தவற்றுள் கதைப்பாடல்களும் உள்ளுரம் குன்றியமையும் என்கிறார் டாக்டர் டில்யார்ட்.
மேலைநோக்கில் தமிழ் நாவல்கள் என்னும் நூலில் பேராசிரியர் ப.மருதநாயகம் தமிழில் உள்ள முப்பத்தாறு நாவல்களைப் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளைக் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் பகுதி 1ல் பிரதாப முதலியார் சரித்திரம், சின்ன சங்கரன் கதை, கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம், பொய்த்தேவு, துன்பக்பகேணி, மிதிலா விலாஸ், அன்பே ஆரமுதே, பொன்னியின் செல்வன், சாயாவனம், பாாிசுக்குப் போ, வேருக்கு நீர், எங்கே போகிறோம்?, மோகமுள் ஆகிய பதினான்கு நாவல்களைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் நாவலிலக்கியம் என்பது மேலைநாட்டாாின் நாவல்களைப் பின்பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருப்பெற்றது.
மேலைநாட்டார் நாவலுக்குத் தரும் விளக்கங்களை பேராசிரியர் ப.மருதாநாயகம் குறிப்பிடுகிறார். நாவல் என்பது வாழ்க்கையின் ஒளிபொருந்திய நூலாகும். நாவல் மனிதனின் முழுமையைப் படம்பிடித்துக் காட்டும். நாவலிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் உண்டு. நாவலாசிரியன் பிறதுறை அறிஞர்கள் யாவரைக் காட்டிலும் மேலானவன் என்பதோடு நாவலே இலக்கியப் படைப்புகள் எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது என்பது டி.எச்.லாரன்ஸ் அவர்களின் நாவல் பற்றிய கருத்தாகும். லாரன்ஸ் அவர்களின் கூற்றில் ஓரளவிற்கு உண்மை உண்டு என்று பேராசிரியர் ப.மருதநாயம் கூறுகிறார். பல மொழிகளில் நாளும் வளர்ந்துவரும் நாவல் லாரன்ஸ் கூற்றை உண்மையெனப் புலப்படுத்துவதாக மருதநாயகம் கருதுகிறார்.
ஐரோப்பாவில் நாவல் இலக்கியம் தோற்றம் குறித்து பக்தின் கூறுவதாவது: முதன்முதலில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இயக்கம் நாவல் பிறக்க ஏற்ற சூழலைத் தந்தது. ஐரோப்பாவின் பாமரப் பண்பாட்டில் நாவலின் தன்மை இருந்ததாக பக்தின் கூறுகிறார்.
கத்தோலிக்க நாடுகளில் ஈஸ்டருக்கு 40 நாட்கள் முன்பு ‘லெண்ட்’ நோன்பினை மேற்கொள்வர். இது தொடங்குவதற்கு முன் வரும் செவ்வாய்க் கிழமை நடைபெறும் கோலாகல நிகழ்ச்சியே கார்னிவெல். இந்நிகழ்ச்சியில் எந்தவிதமான கட்டுப்பாடுமின்றிக் கலை நிகழ்ச்சிகள் தோன்றும் . இது நடிப்போருக்கும் பார்ப்போருக்கும் இடைவெளி மறைய கிண்டலும் நையாண்டியும் மிகுந்து காணப்படும். இதில் பழங்கதைகள் புறக்கணிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையனுபவமே இடம்பெறும். இத்தகைய விழாக்காலப் பாமரப் பண்பாடு நாவல் தன்மையை உருவாக்கியது. பல மேற்கு ஐரோப்பியக் கலைகளும், மொழிகளும், பண்பாடுகளும் ஒன்றோடொன்று உறவாடியதால் நாவல் இலக்கிய வகை தோற்றம் பெற்றது. நாவலின் வேர்களை நாட்டார் வழக்காற்றில் காணலாம் என்கிறார் பக்தின்.
தமிழில் நாவல்
ஆங்கிலேயாின் ஆட்சியின் விளைவாகத் தோன்றிய வர்க்கப்பிாிவுகள் யாவற்றிலும் காலத்தால் முந்தியது மத்தியதர வர்க்கமே ஆகும். கைத்தொழில், வர்த்தகத்துறை போன்றவை தோன்றுவதற்குப் பல தசாப்தங்கள் முன்னரே கல்வியறிவு பெற்றவராக மத்தியத்தர வர்க்கத்தினர் தோன்றினர். தமிழில் முதன்முதலில் நாவல் எழுதிய பலர் ஆங்கிலம் கற்றவரே என்பதில் ஐயமில்லை. உதாரணமாக வேதநாயகம் பிள்ளை அரசாங்கத்தில் முன்சீபு உத்தியோகம் செய்தவர். மாதவையா உப்பு சுங்க இலக்காவில் பணிபுாிந்தவர், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். ராஜமையர் பத்திாிகையாளர். இவர்கள் மத்தியத்தர வர்க்கப் பிரதிநிதிகள் என்பதில் ஐயமில்லை.
மேலைநாட்டாரைப் பின்பற்றித் தமிழில் நாவல் எழுத பல முயற்சிகள் தோன்றினாலும் நாவலின் வடிவை ஒத்து அனைவராலும் நாவல் என ஏற்றுக்கொள்ளப்பட்டு முதல் நாவலாக வெளிவந்தது வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரமாகும்’(1879). இதைத்தொடர்ந்து ராஜமைய்யாின் ‘கமலாம்பாள் சரித்திரம்’, மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திரம்’ ஆகியன தமிழின் முதல் மூன்று நாவல்கள் எனும் இடத்தைப் பிடித்தன.
இதைப்போன்று தென்னிந்திய மொழிகளான தெலுங்கில் ஶ்ரீ ரங்கராஜ சரித்திரம் (1872), ராஜசேகர சரித்திரம்(1878), மலையாளத்தில் கந்தலதா (1887), இந்துலேகா (1889), கன்னடத்தில் சூர்யகாந்தா (1893), இந்தாராபாய் (1889) முதலிய நாவல்கள் பிறந்தன. இவை அனைத்தும் ஆங்கில நாவல் இலக்கியத் தாக்கத்தால் அவ்வம் மொழிகளில் பிறந்து நாவல் இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம்.
தமிழில் பாரதியார் கவிதைகள் மூலம் பலரால் அறியப்பட்டாலும் சிறுகதை, நாவல் முதலிய இலக்கியங்களையும் எழுதியுள்ளார். பாரதியின் முற்றுப்பெறாத நாவல், நாவல் முயற்சி எனப் பலராலும் அறியப்படுவது ‘சந்திாிகையின் கதை’ என்பதாகும். பாரதியார் 1904 முதல் 1921 வரை சின்ன சங்கரன் கதை முதலிய 45 சிறுகதைகளை எழுதியுள்ளார். பேராசிரியர் ப.மருதநாயகம் சின்ன சங்கரன் கதையை நாவலாகக் குறிப்பிட்டு இருப்பது வியப்புக்குாியதாகிறது.
சின்ன சங்கரன் கதை நாவலுக்கு உாிய தன்மையைப் பெற்றிருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் ப.மருதநாயகம். மேலைநாட்டாரான ஜேம்ஸ் ஜாய்ஸ் என்பவாின் A Portrait Of The Artist As A Young Man எனும் நாவலும் பாரதியின் சின்ன சங்கரன் கதையும் ஜெர்மானிய மொழியில் அழைக்கப்பெறும் Kunstlerroman எனும் நாவல் வகையைச் சார்ந்தது என இரு நூலையும் ஒப்பிடுகிறார் பேராசிரியர் ப.மருதநாயகம்.
Kunstlerroman என்பது வளர்ச்சி நாவலின் ஓர் உட்பிாிவாகும். கவிஞன், நாவலாசிரியன், பாடகன், ஓவியன், சிற்பி போன்ற யாரேனும் ஒரு கலைஞனின் மேம்பாட்டைப் படிப்படியாகக் காட்டி அவன் தன்னைக் கலைஞனாக அடையாளம் கண்டு, கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதை உச்சநிலையைக் கொண்டு முடிவதாகும்.
A Portrait Of The Artist As A Young Man எனும் நாவலில் ஜாய்ஸ் தன்னுடைய இளமைக் காலத்தை நினைவுகூர்வதன் மூலம் தன்னைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதன் கதைத்தலைவனான ஸ்டீவன் டேடலஸ் சமயத்தையும், தன் நாட்டு விடுதலைப் போரையும், தன் நாட்டையும் புறக்கணித்துத் தான் ஒரு கலைஞனாக, கலைவாழ்வை மேற்கொள்வது தனக்கேற்றது என்றுணர்ந்து அதைச் செயல்படுத்தும் வரலாற்றைக் கூறுகிறார். இவ்வாறே பாரதியின் கதைத்தலைவனான சின்ன சங்கரன் கவிதை இயற்றுவதில் ஆர்வம்கொண்டு தன் கலை வாழ்வை மேற்கொள்வதாக அமைகிறது.
வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் எனும் கட்டுரையில் பேராசிரியர் ப.மருதநாயகம் தமிழ் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தையும், மலையாள முதல் நாவலான சந்துமேனானின் ‘இந்துலேகா’வையும் ஒப்பிடுகிறார்.
மலையாள நாவலான இந்துலேகாவின் கதைத்தலைவி இந்துலேகா ஆங்கிலக்கல்வியின் பெருமையும் பெண்களுக்கு ஆங்கிலக் கல்வியின் இன்றியமையாமையும் கூறுவதாகச் சித்தாிக்கப்படுகிறது. ஆனால் பிரதாப முதலியார் சரித்திரத்தில் ஞானம்பாள் ஆங்கிலக் கல்வியைச் சில இடங்களில் சாடுவதாக அமைகிறது.
ஆங்கிலக் கல்வியைப் போற்றும் சந்துமேனான் ஆங்கிலேயாின் ஆட்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாராட்டவே இந்துலேகாவைப் படைத்துள்ளார் என்கிறார் மருதநாயகம். பிரதாப முதலியார் சரித்திரத்தில் கல்விக்கூடங்களில் லத்தீனும் சமஸ்கிருதமும் படிக்க வாய்ப்பளித்த அன்றைய ஆங்கிலேய அரசு, தமிழையும் பிற தாய் மொழிகளையும் மாணவர்கள் கற்க வழி செய்யாததைக் கண்டிக்கிறார் வேதநாயகம்.
இந்திய மொழிகளில் முதல் நாவல்கள் எழுதிய யாரும் வேநாயகம்போல் தாய்மொழிக்கு முன்னுாிமை தராதது வியப்புக்குாியது என்கிறார் மருதநாயகம்.
லட்சுமியின் மிதிலா விலாஸ் கிரிம் சகோதரர்களின் சிண்டரெல்லா கதையைப் பின்பற்றி சிண்டரெல்லா போலவே கதைத்தலைவி தேவகியை வடிவமைத்துள்ளார் என்பதனைத் தமக்குக் கட்டுரையில் தெளிவுற விளக்குகிறார் மருதநாயகம். க.நா.சுவின் பொய்த்தேவு யதார்த்த நாவலாக அமைகிறது. பிரச்சார நாவல்களும், துப்பறியும் நாவல்களும் அற்புத நிகழ்ச்சிகளின் புனைவியல் நாவல்களும் மிகுதியாக எழுதப்பட்டு வந்த நாட்களில் ஒரு யதார்த்த நாவலை மாறுப்பட்ட முறையில் எழுத முயன்றவர் க.நா.சு எனப் பாராட்டுகிறார் மருதநாயகம்.
நாவல்களைப் பற்றிய கட்டுரைகள் மட்டுமின்றி நாவல் இலக்கியம் எனும் பகுதியில் மேலைநாட்டார் நாவலுக்குக் கூறும் கோட்பாடுகளையும் நாவல் தோற்றம் ஐரோப்பாவில் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றியும் கூறுவதோடு மட்டுமல்லாமல் தமிழ் நாவல்கள் எழுதுபவருள் உயர்ந்த கலைப் படைப்புகளையே முழுநோக்காகக் கொண்டு இறுதிவரைக் கலைக்காகத் தம் எழுத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்ற உறுதியான உள்ளத்தோடு செயல்படுபவர் மிகக்குறைவு எனும் விமர்சனத்தை முன்வைக்கிறார் பேராசிரியர் ப.மருதநாயகம்.
இராணிப்பேட்டை மாவட்டம் மோசூரில் பிறந்த து.லோகபிரியா, சென்னை மாநிலக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளராவார். பின்காலனியம் கோட்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
உங்கள் நூலகம் இதழில் பக்தவத்சல பாரதியின் மானுடவியல் பேசுவோம் குறித்த கட்டுரை எழுதி உள்ளார். இந்து தமிழ்திசையில் புலவர் புராணம், வேடிக்கை பார்க்கும் இருள், காயங்களால் மறைக்கப்பட்டவர்கள் ஆகிய நூல்களுக்கு விமர்சனக் கட்டுரை எழுதியுள்ளார். பண்பாட்டு நோக்கில் தூர்வை நாவல், அடையாளங்களை மீட்டெடுக்கும் பின்காலனிய முயற்சியில் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு என இரு கட்டுரைகளைக் கருத்தரங்கிற்காக எழுதியுள்ளார்.
Leave a Reply