ஆலமரத்தில் பல் துலக்கியபடி
சுந்தரகாளி எக்காளமிட்டு ஊர்சுற்றி வந்தாள்
எட்டுமுழப் புடவையை
ஊருக்குள் விரித்துச் சுழற்றினாள்
கழுத்திலிருந்த மண்டையோட்டை
காபி அருந்தும் குவளையாக்கிளாள்
கடும் கோபமாக முறைத்து முறைத்துப் பார்த்தாள் காளி
உக்கிரம் தெறிக்க ஆடுபவளை
ஒன்றுமே செய்யமுடியவில்லை
என்னசொல்வாளெனத் திகைத்து நின்று கொண்டிருந்தனர்
வறண்ட தன் கறுப்பு உதட்டிற்கு
டாசெல்லார் உதட்டுச்சாயம் பூசச் சொன்னாள்
நேரம் பார்க்க இடது கையில் ஒரு ஸ்மார்ட் வாட்ச் அணியச் சொன்னாள்
யாமப் பயணம் சுற்றி வரும் தனது கால்களுக்கு விகேசி செருப்பு கேட்டாள்
வழக்கமான புடவை இல்லாமல் ஜீன்ஸ் பேண்ட் கேட்டாள்
சுருட்டை விட்டெறிந்து நல்லதொரு இண்டிமேட் கேட்டாள்
படையலுக்குப் பதிலாக கேஎப்சி சிக்கனும்
பீட்சாவும் கேட்டாள்
ஊரார் திகைத்துப் போயினர்
விடாமல் மீண்டும் தனக்கென ஸ்மார்ட் போனும் கேட்டது
காளி தன் மகிமையற்றுப் பேசக்கூடாதென
ஊரார் அம்மையைக் கேட்டனர்
கடும் கோபம் கொண்டவள்
வந்தவழியே திரும்பிப் போவதாகக் கிளம்பினாள்
சந்திர பகவானின் பூநூலை சார்ஜராக மாற்றிக் கொண்டு
ஐயனாரின் பவரை வைத்து
ஐபோனை வாங்கிக்கொண்டும்
கிளம்பினாள்
சிறிது நேரத்தில் எல்லாருடைய வாட்சப்புக்கும் செய்தி வந்தது
“தி இஸ் மை நியூ நம்பர்
ஐ அம் சுந்தர காளி மற்றும்
அடுத்த திருவிழாவை கூகுள் மீட்டில்
வைக்கவும் என.
Art : sudipta-sana
திருச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி இளங்கலை விலங்கியல், முதுகலை விலங்கியல், இளங்கலை கல்வியியில் பயின்றுள்ளார். பள்ளி ஆசிரியர் மற்றும் துப்புரவுப் பணியாளர் குழந்தைகளுக்கான சமூகப்பணி தொண்டு நிறுவனத்தில் திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரின் முதல் கவிதை தொகுப்பு தோடயம் யாவரும் பதிப்பகம் மூலம் 2024 ஆம் ஆண்டு கோவை புத்தக காட்சியின் போது வெளியாகி தூரிகை விருது பெற்றிருக்கிறது.








Leave a Reply