Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

சம காலத்தைப் பேசும் சிறுகதைகள்

கவிப்பித்தன் .
கவிப்பித்தன் .
January 1, 2026
சம காலத்தைப் பேசும் சிறுகதைகள்

தமிழ் இலக்கண, இலக்கிய உலகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையும் பெருமையும் கொண்டது என்றாலும் தமிழ்ச் சிறுகதைகளின் காலம் சற்றேரக்குறைய ஒரு நூற்றாண்டுதான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதனாலேயே தமிழ்ச் சிறுகதைகள் இதுவரை கடந்து வந்த வடிவங்களும், உத்திகளும் மிகக் குறைவாகவே உள்ளன. இந்தப் பின்புலத்தில்தான் நாற்பத்தி இரண்டு வயதுக்குள் ஒரு படைப்பாளி 100 சிறுகதைகள் எழுதுவதும், அவை அனைத்தும் பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமாவதும், அவற்றைத் தொகுத்து ஆயிரம் பக்கங்களுக்கு நெருக்கமாகப் புத்தகமாக வெளியிடுவதும் தமிழ் இலக்கிய உலகில் சாதாரணமாக நடந்து விடுவதில்லை.

வங்கிகளில் ஏதோ ஒரு கடன் பெற்றும், நகையை அடமானம் வைத்தும், கைமாற்றுக் கடன் வாங்கியும் கவிதை நூல்களை வெளியிட்ட கவிஞர்கள் நிறைந்த தமிழ்நாட்டில், இன்றைய தமிழ் இலக்கிய உலகமும், பதிப்பு உலகமும் சற்றே ஆரோக்கியமான சூழலை எட்டியுள்ளதாகவே இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தனது 100 சிறுகதைகளைத் தொகுத்து ”அண்டனூர் சுரா 100” என இரண்டு தொகுதிகளாகக் கொண்டு வந்திருக்கிற எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களுக்கும், அதை அழகான வடிவமைப்பில் பதிப்பித்துள்ள நியூ சென்சுரி புக் அவுஸ் பதிப்பத்திற்கும் திறந்த மனதோடு முதலில் நம் வாழ்த்துக்களைச் சொல்லலாம். அண்டனூர் சுரா – 100 தொகுப்புகளில் உள்ள கதைகளை மொத்தமாக வாசித்துப் பார்க்கையில் அந்தக் கதைகளில் உள்ள சில அடிப்படைக் கூறுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 100 கதைகளில் 16 கதைகள் பல்வேறு பரிசுப் போட்டிகளுக்காக எழுதப்பட்டு, பரிசுகளைப் பெற்ற கதைகளாக உள்ளன. இளம் படைப்பாளிகளுக்கும், புதிதாக எழுத வருபவர்களுக்கும் இப்படியான இலக்கியப் பரிசுப் போட்டிகள் எழுதுவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளதையும், அதேநேரத்தில் அவை கதையின் அளவு, உள்ளடக்கம், நோக்கம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளதையும் உணர முடிகிறது.

பல்வேறு நாடுகளில் போர் மற்றும் உள்நாட்டுக் கலகங்களால் வாழ்க்கையை இழந்து, உயிர் பயத்தோடு வாழ நேர்கிற அகதிகளின் அவல வாழ்க்கை, நடுவண் அரசு அண்மையில் கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், தமிழகத்திற்கும், கர்நாடக மாநிலத்திற்குமான காவேரித் தண்ணீர்ப் பிரச்சினை, பசுவதைத் தடைச் சட்டம், பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா நோயாளிகள் பலருக்குச் சிகிச்சை அளித்து, அதனால் கொரோனா நோய்த் தொற்றி இறந்து போன ஒரு மருத்துவரின் பிணத்தைத் தங்களின் சுடுகாட்டில் புதைக்க விடாமல் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியது, திரைத்துறையில் நெருப்பைப் பற்ற வைத்த மீ… டூ பிரச்சினை, ஆக்சிஜன் சிலிண்டர இல்லாமல் மருத்துவமனையில் சின்னஞ்சிறு குழந்தைகள் இறந்து போனது எனச் சமகாலத்தின் உணர்வுபூர்வமான சிக்கல்கள் பலவற்றைக் கதைக் கருக்களாக எடுத்துக்கொண்டு அவற்றை அண்டனூர் சுரா கதைகளாக்கியிருப்பதை மனதாரப் பாராட்ட வேண்டும்.

அப்படியான கதைகளில் ஒன்று எண் வலிச் சாலை சிறுகதை. சில ஆண்டுகளுக்கு முன்னர் எட்டுவழிச் சாலை அமைப்பதற்காக தமிழக அரசின் சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது அது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பாக மாறியது. அப்போது நடந்த போராட்டங்கள் தமிழ்நாட்டைக் கடந்தும் பெரிய பேசுபொருளாக மாறியது. மாமன்னர் மார்த்தாண்ட வர்மாவின் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான அரண்மனைக்கும், பத்மநாபர் ஆலயத்திற்கும் இடையிலான பாதையை அகலப்படுத்திய வரலாற்று நிகழ்வோடு எட்டுவழிச் சாலை போராட்டத்தைப் புனைந்து ஒரு சிறுகதையாக எழுதியிருக்கிறார் அண்டனூர் சுரா. எள்ளலும், வலியும் நிறைந்ததாக அக்கதை உருப்பெற்றிக்கிறது.

“பருவத்துணிக்கை” என்கிற கதை, பேருந்தில் கைக்குழந்தையோடு பயணம் செய்கிற ஒரு இளம் தாயைப் பற்றியது. பயணம் முழுவதும் அக்குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருக்க, அந்தத் தாயோ அதில் பிரக்ஞை இல்லாதவளாக எதையோ வெறித்தபடி கிடக்கிறாள். பேருந்தில் பயணிக்கிற ஒவ்வொருவரும் எரிச்சலடைகிற போதும் அவள் அப்படியே கிடக்கிறாள். ஒரு இளம் பெண்ணின் மன அழுத்தத்தையும், அதன் பின்புலத்தையும், அதில் இருக்கிற வலியையும் சொல்லாமல் சொல்கிறது. கதை முடிந்த பிறகுதான், கதையில் சொல்லாமல் விடப்பட்ட இளம் வயது திருமணம், நிறைவேறாத காதல், கௌரவக் கொலைகள் என நமக்குள் வேறு பல கதைகள் விரிகின்றன. இப்படியான நேரடிக் கதை சொல்லல் வடிவத்தைத் தவிர்த்த கதைகள்தான் வாசகனை வேறொரு தளத்துக்கு அழைத்துச் செல்லும்.

இப்படிச் சிறுகதைகளில் புதிய புதிய உத்திகளையும், வடிவங்களையும் சில படைப்பாளிகள் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். கதை முடியும் இடத்தோடு ஒரு கதை முடிந்து போகாமல், அங்கிருந்து பல கதைகள் தொடங்கி, அது வாசகனுக்குள் நகர வேண்டும். அது அவனையும் ஒரு படைப்பாளி மன நிலைக்கு மாற்ற வேண்டும் என்பதும் ஒரு சிறந்த உத்தி என்பதை இந்தக் கதையும் மெய்யாக்கியிருக்கிறது.

கைக்குழந்தையோடு வீடு வீடாகக் கதவைத் தட்டி, குழந்தைக்காகப் பால் கேட்கும் ஒரு தாயின் அவலத்தையும், வாசகன் எதிர்பாராத ஒரு முடிவையும் சொல்கிற மிடற்று தாகம் கதை, கடன் வாங்கச் செல்கிற ஒரு மனிதனின் உணர்வுகளை நகைச்சுவையோடு சொல்கிற கடன்பட்டார் நெஞ்சம் கதை, சாதிச் சான்றிதழ் வாங்க முடியாமல் தவிக்கிற பூம்பூம் மாட்டுக்காரச் சிறுமியைப் பற்றிய சான்றிதழ் கதை, காவல் நிலைய விசாரணையின் போது ஒரு பெண்ணின் மீது நிகழ்த்தபடுகிற வன்முறையைப் பற்றிய லத்திக் கதை, கிராமங்களில் நடக்கிற திருமண விருந்துகளின் போது விரிக்கப்டும் விரிப்புள் பற்றியும் அவற்றையும் அமர்ந்து விருந்துண்ணத் தகுதியான சாதியினர் பற்றியும், அதன் வலிகளைப் பற்றியும் பேசும் சிணுங்கி கதை என நல்ல வாசக அனுபவங்களைத் தருகிற பல கதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அவற்றைப் பேலவே, கற்பூரவள்ளி, ஒரு டிஎம்சி கண்ணீர், அவளொரு பிஞ்சு, பிஞ்சு வீடு, எலிச் சோறு, திற, ஊர் முழ வேட்டி, பத்தியச் சோறு என மேலும் பல கதைகள் இத்தொகுப்பில் கவனிக்கத்தக்கக் கதைகளாக உள்ளன. கதைகள் தோறும் விரவியுள்ள பல புதிய உவமைகள் ரசிக்கத்தக்கதாக உள்ளன.
அண்டனூர் சுராவின் கதைகளில் உள்ள குறைபாடாக நான் உணர்வது, பார்க்கிற, கேட்கிற முக்கியமான செய்திகள் எல்லாவற்றையும் வஞ்சனை இல்லாமல் கதைகளாக்கி இருப்பது.

செய்திகளைக் கதைகளாக்கலாம். ஆனால் அவை இலக்கியத்தன்மையோடும், செயற்கைப் பூச்சுகள் இன்றியும் கதைகளாகி இருக்க வேண்டும். அப்படிப் பல கதைகள் பல எழுத்தாளர்களால் வெற்றிகரமாகக் கதைகளாக்கப்பட்டு, அவற்றுக்கு இலக்கிய அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. அப்படி இல்லாமல், எல்லாவற்றையும் கதைகளாக்கிவிட வேண்டும் என்கிற வேகத்தையும், கதைகளின் எண்ணிக்கையை மேலும் கூட்டிவிடவேண்டும் என்கிற ஆர்வத்தையும் கைவிட்டு, இன்னும் கூடுதல் மெனக்கெடல்களோடு அண்டனூர் சுரா கதைகளை எழுத வேண்டும். தேவையற்ற பொருந்தாத சில உவமைகளையும் தவிர்த்துவிட்டு, கதைகளின் மெருகில் கூடுதல் கவனம் செலுத்தினால் அண்டனூர் சுராவிற்கு இன்னும் ஆழ்ந்த வாசிப்பும், பொறுமையும் இருந்தால் அது அவரை மேலும் உயர்த்தும்.

எதை எழுதுகிறோம், யாருக்காக எழுதுகிறோம் என்பதிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவரது ஒவ்வொரு கதையும் அந்தத் திசையை நோக்கிப் பயணிக்க வேண்டும். அதன்மூலம் மேலும் சிறந்த படைப்பாளியாக அவரால் தடம் பதிக்க முடியும் என நம்புகிறேன்.


 

கவிப்பித்தன் .
கவிப்பித்தன் .

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நீவாநதிக்கரை (பொன்னை நதி) கிராமமான வசூர் கிராமத்தில் பிறந்தவர். விலங்கியலில் இளம் அறிவியல் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கியவர். தற்போது தமிழக அரசின் வருவாய்த்துறையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, அம்மக்களின் வட்டார வழக்கிலேயே தொடர்ந்து எழுதிவருகிறார்.
இதுவரை 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், 2 கவிதைத் தொகுப்புகள் என எழுதியுள்ளார். சிறந்த நாவலுக்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருது, எஸ்.ஆர்.எம்.தமிழ்ப்பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, சைளமா இலக்கிய விருது, சிறுகதைத் தொகுப்புகளுக்காக ஜெயந்தன் விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, எழுச்சித் தமிழர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
பல்வேறு பத்திரிகைகளில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026
  • நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    January 4, 2026
  • சிக்கிம் சுந்தரி

    சிக்கிம் சுந்தரி

    January 4, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (3)
  • கதை (4)
  • கவிதை (11)
  • கவிதை (62)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)

Archives

  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (3)
  • கதை (4)
  • கவிதை (11)
  • கவிதை (62)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top