எங்கிருந்தோ ஒலிக்கிறது
என் செவியில் மட்டும் பறையிசை
நான் ஆடுகிறேன்
பாடுகிறேன்
அங்கே இசைப்பதும் பாடுவதும்
யாராக இருக்கக் கூடும்
என் அப்பனாகத்தான் இருக்கக் கூடும்
எப்பொழுதோ
அவரை அடக்கம் செய்தோம்
இப்பொழுதும் கேட்கிறது எனக்குள்
அவரது குரல்
அது நிழல் அல்ல நிஜம்
அவர் தானே நான்
எல்லாச் சாவு வீட்டிலும்
அப்பாதான் பாட்டுப் பாடுவார்
அவர் வீட்டிலும் ஒரு சாவு
அவருக்காக யார் பாட்டுப் பாடுவார்கள்
அசையாமல் கிடக்கிறது
அப்பாவின் உடல்
மார் அடித்துக்கொண்டு
அழும் அம்மாவைச் சமாதானப்படுத்துகிறது
எப்பொழுதே அப்பா பாடிய
ஒப்பாரி பாடல் ஒன்று இப்பொழுது நினைவுகளில்
பெயர்ப்பலகை இல்லாத
ஒரு சிறிய கிராமம்
தம்பி காலனித் தெருவுக்கு
எந்தத் தெரு வழியாக
போகலாமென்று கேட்க
தான் அணிந்திருந்த
காலணியை நோட்டமிட்டவாறே
செட்டியார் வீட்டு கடைசித் தெரு வழியாக
போகலாமென்று அவன் கூற
என் பாதங்களைத் தலையில் தூக்கி
வைத்துக்கொண்டேதான் நடந்தேறுகிறேன்
ஒவ்வொரு முறையும்
அந்த ஊர்த் தெருவைக் கடந்து
என் சேரிக்குப் போகும் பொழுதெல்லாம்
மலம் சுமக்கிறேன்
உன் பிணம் சுமக்கிறேன்
நீ பசியாற நெல் சுமக்கிறேன்
நெல் சோறாக வேக விறகு சுமக்கிறேன்
உனக்காகவே எல்லாம் சுமந்த
என் உடல்களைத் தூக்கிக்கொண்டு போகிற
பாதங்களைச் சுமக்கவே மறுக்கிறது
உன் தெரு வழியாக
சுடுக்காட்டிற்குப் போகிற
அந்த ஒத்தையடிப் பாதை
காலம் தூரம் இல்லை
அதிகாரம் நோக்கியே
எங்கள் கால்கள் நடைபோடும்
அம்பேத்கர் பிறப்பதற்கு முன்
என் தாத்தனையெல்லாம்
பறையன் சக்கிலி தோட்டி எனத்
தொடர்ந்து அது இது என்று
ஒருமையில் அழைப்பாய்
டாக்டர் அம்பேத்கார் பிறந்தற்குப் பின்
என் அப்பனையும்
என்னையும் வாங்க வக்கில்
சாரென்று வணக்கம் வைக்கிறான்
எங்கள் சேரிக்கென்று
அடையாளமாய்ச் சொல்ல
எதுவும் இல்லை எங்களுக்கு
அந்த அரசமரத்தடி நூலகத்தைத் தவிர
Art : Malvika’s Madhubani








Leave a Reply