‘வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு’ என்கிற நூல் வெளியீட்டு விழாவில் அந்நூலின் மொழிபெயர்ப்பாளர் பிரசாந்தி சேகரம், நெறியாளர் ரீனா ஷாலினி ஆகிய இருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடல்.
எழுத்தாக்கம் : நுட்பவினைஞன்
பிரசாந்தி, என்னுடைய முதல் கேள்வியானது மிகவும் தனிப்பட்டது. முதலில் ஜெர்மன், ஃப்ரென்ச், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளும் இரண்டு பேருக்கும் பொதுவாகத் தெரிந்த ஆங்கிலமும் தமிழும் நானறிந்த மொழியான மலையாளம் என இந்த எல்லா மொழிகளிலும் எல்லா கலைஞர்களைப் பற்றியும் கிட்டத்தட்ட விடியவிடியப் பேசியிருக்கிறோம். எனது நினைவு சரி என்றால் நீங்கள் ரில்க்க என்கிற பெயரை என்னிடம் உச்சரித்ததே இல்லை. கடந்த ஆண்டு என்னுடைய பிறந்தநாளின்போது அழைத்தீர்கள். ரில்க்கவின் கவிதைகளை மொழிபெயர்க்கப் போவதாக கூறினீர்கள். நாம் இரண்டு பேரினதும் பலமும் பலவீனமும் தொழில்முறையினாலானது; அதேசமயம் பூரணமானதும்கூட. அடுத்த எனது பிறந்தநாள் வருவதற்கு முன்பாக ரில்க்கவை நீங்கள் புத்தகமாகக் கொண்டு வந்து விட்டீர்கள். ஆக, உங்களிடம் என்னுடைய கேள்வி இதுதான். ஏன் ரில்க்க? அதுவும் இப்போது ஏன் ரில்க்க? ஏனென்றால் மொழிபெயர்ப்புக்காக நான் உங்களை அதிகம் துரத்தியிருக்கிறேன். நீங்கள் அதிலிருந்து தப்பித்துத் தப்பித்து ஓடிக்கொண்டே இருந்திருக்கிறீர்கள்.
நான் ஒவ்வொன்றாகக் கூற விழைகிறேன். முதலில் ஏன் ரில்க்க என்றால் ஜெர்மன் இலக்கியத்தில் (கவிதை என்று மட்டும் குறிப்பிடவில்லை) கில்ட், ஷியக்கல், ஹைனர், ஹெய்ட்டலிக் என இவர்களுக்கு அப்பால் ரில்க்கவின் படைப்புகள் மிக முக்கியமானவை; மிக அழுத்தமானதும்கூட. ரில்க்கவை மறந்து நாம் ஜெர்மன் இலக்கியத்தைப் (கவிதை சார்ந்து மட்டும் அல்ல) பற்றிப் பேசிவிட முடியாது. முதலாவதாக ரில்க்கவை அவரது மூலமொழியான ஜெர்மன் மொழியில் இருந்து தமிழில் கொண்டுவர வேண்டிய தேவையிருக்கிறது. இதற்கும் அப்பால் ஏன் ரில்க்க என்றால் அவர் ஒரு கவிஞராக உங்கள் எல்லோரிடமும் அறியப்பட்டிருக்கிறார். ஆனால் ரில்க்கவை ஒரு கவிஞனுக்கும் அப்பால் வைத்து இந்த நூல் பேசுகின்றது. ஒரு கவிஞனுக்கும் அப்பால் சென்று அவரை ஒரு கலைஞனாக உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதுதான் அழுத்தமான முக்கியமான செயலாக நான் பார்க்கிறேன்.
நமது உரையாடலில் ரில்க்க எப்பொழுதுமே இருந்ததில்லை என்பது உண்மையே. எனது வாழ்வு ஃப்ரீடா கானோ, ஃபன் காக், பிரான்ஸ் காஃப்கா, பான்ஸ் ஹெக் என இப்படி இந்த வரிசையில்தான் இருந்தது. ரில்க்க எவ்வாறு என் வாழ்வில் வருகிறார் என்றால் அவர் அலையாக வருகிறார்; விதவிதமான அலையாக வருகிறார். இப்போது ரில்க்க வந்ததற்குக் கட்டாயமான இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ரில்க்க பிறந்த நூற்று ஐம்பதாவது ஆண்டு இது. அவர் பிறந்தது 1875 ஆம் ஆண்டில். அவர் இறந்தது 1926 ஆம் ஆண்டு. இந்த 2025 ஆம் ஆண்டு என்பது ரில்க்க பிறந்த நூற்று ஐம்பதாவது ஆண்டு. அடுத்த ஆண்டு என்பது அவர் இறந்த நூறாவது ஆண்டாகும். ரில்க்கவை தமிழில் கொண்டு வருவதற்கு இதைவிட ஒரு பொருத்தமான நிகழ்வு இருக்காது.
இரண்டாவது உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு சிறிய கதை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இலையுதிர் காலத்தில் மழைநேர அதிகாலைப் பொழுதில் வார பத்திரிகையில் ரில்க்கவின் ஒரு கவிதை பிரசுரம் ஆகி இருந்தது. ரில்க்கவின் கவிதையில் எப்போதும் ஒரு வரி இருக்கும். அந்த ஒரு வரிதான் எனக்கு அந்தக் கவிதையை மொழிபெயர்க்கச் சொல்லும். அப்படியாக அப்பத்திரிகையில் வந்த ஒரு வரியை வைத்து ரில்க்கவை தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று தோன்றியது. அப்போதெல்லாம் அடிக்கடி கவிதைகளை மொழிபெயர்த்து முகநூலில் பகிரும் காலம். இந்தக் கவிதையை மொழிபெயர்த்து முகநூலில் பகிர்ந்துவிட்டு நான் சனிக்கிழமையின் அன்றாடத்திற்குள் நுழைந்து விட்டேன். எல்லோருக்கும் தெரியும் சனிக்கிழமைகள் என்பது மாயங்கள் நிகழ்த்தவல்லது.
நான் எனது அன்றாடத்திற்குள் சென்ற ஒரு சில நொடிகள் அல்லது ஒரு சில நிமிடங்களில் எழுத்தாளர் நரனிடமிருந்து ஒரு செய்தி வந்தது. ரில்க்கவின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்கலாமா? சால்ட் பதிப்பகத்திற்கு புத்தகமாகக் கொண்டு வரலாமா? என இப்படி சில கேள்விகள் அதில் இருந்தன. அந்த நொடியில் இந்தக் கேள்வியை மறுப்பதற்கு எந்த காரணமும் என்னிடம் இல்லை. ஏனென்றால் நான் மொழிபெயர்த்ததும் எனக்குப் பிடித்திருந்தது; நரன் அவர்கள் கேட்ட விதமும் பொருந்திப்போனது. எனக்கு ஏன் இதைச் செய்யக்கூடாது என்று தோன்றியது. இதுதான் ரில்க்க என் வாழ்வில் வந்துசேர்ந்த நிகழ்வு. அப்பொழுது மழை பெய்ததுகூட எனக்கு சரியாகத்தான் இருந்திருந்தது. ரில்க்க இலையுதிர் காலத்தை மிகவும் நேசித்தவர்.
ஐரோப்பிய நிலத்தில் இலையுதிர் காலம் என்பது வீழ்தலுக்கானது. அந்த வீழ்தலையும் தாண்டி அவர் இருக்கின்றார். அதனாலும் இன்றைய மனநிலையில் அவர் மிகவும் பொருந்துகிறார். எனவே, ரில்க்கவின் கவிதைகளை தமிழில் கொண்டு வருவது அவசியமாக இருக்கின்றது. அதற்கும் அப்பால் முதல்முறையாக அவரை ஜெர்மன் மொழியில் இருந்து ஆங்கிலம் வழியாக அல்லாமல் நேரடியாக அவரது நூறு கவிதைகளுடன் தமிழ் மொழிக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
என்னுடைய அடுத்த கேள்வி வாசிப்பு அனுபவம் சார்ந்தது. ரில்க்கவை நான் வாசிக்கிறேன். அவரது நூறு கவிதைகளையும் வாசிக்கிறேன். முதலில் இருந்து இறுதியில் இருந்து நடுவில் இருந்து என எல்லா விதத்திலும் வாசிக்கிறேன். நான் இப்பொழுது இந்த நேரத்தில் ரில்க்கவை ஒரு கவிஞராகவும் என்னை ஒரு வாசிப்பாளராகவும் பார்க்கவில்லை. அவர் ஒரு நாடகக் கலைஞரைப்போல நிகழ்த்துகிறார் நிகழ்த்துகிறார் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார். நான் ஒரு பார்வையாளராக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் மன அழுத்தத்திற்குள்ளும் காதலுக்குள்ளும் காமத்திற்குள்ளும் என்னைக் கைப்பிடித்து கூட்டிக்கொண்டு செல்கிறார். மேலும், சிறுத்தை எனும் அவரது கவிதையை வாசித்ததில் இருந்து நான் சிறுத்தையாக சுற்றிக்கொண்டு இருக்கிறேன். அதைக் கடக்க எனக்கு காலங்கள் பல ஆகலாம். இந்தப் பார்வை சரியானதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார். நான் வெறுமனே பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
நீங்கள் உணர்வது சரியானதுதான். ஏனென்றால் கவிதைக்குள் வருவதற்கு ரில்க்க தேர்ந்தெடுத்தது அரங்கத்தை. இது அவரைப் பற்றி பலருக்கும் தெரியாத ஒரு பக்கம். ரில்க்க பிறந்த நகரம் அரங்கம் நிகழ்த்துகிற பிராக் நகரம். அந்த நகரம் அக்காலத்தில் கலைஞர்களைத் தீவிரமாகக் கொண்டாடிய நகரம். பிராக் நகரத்தில் அரங்க செயல்பாடு என்பது மிகவும் தீவிரமாக இயங்கியக் காலகட்டம். அவருக்கு அந்த அரங்கத்தின் வெளி என்பது மிகவும் தேவையானதாக இருந்தது. தான் விரும்பிய எண்ணங்களுக்கு வடிவம் கொடுப்பதாக அந்த அரங்கம் இருந்தது.
ரில்க்கவின் நாடகப் பிரதிகளை காத்திரமானது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், கவிதை என்று வரும்போது அரங்கச் செயல்பாட்டின் ஊடாகத்தான் அவர் கவிதைக்குள் வருகிறார். அவருக்கு ஒரு ஒளி தேவைப்படுகின்றது; அரங்கம் தேவைப்படுகின்றது; காட்சிப்படுத்துதல் தேவைப்படுகின்றது; கதை சொல்லல் தேவைப்படுகின்றது. இவை எல்லாவற்றையும் அரங்கத்தின் வாயிலாக உள்வாங்கித்தான் அவர் கவிதைக்குள் நுழைகிறார். சில வேளைகளில் அவரது கவிதைக்குள் ஒரு கதைதான் இருக்கும். அது கவிதையாக இல்லாமல். ஏனெனில், அவர் ஒரு கதை சொல்லியாகத்தான் கவிதைக்குள் நுழைகின்றார். அவருக்கு சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அவரது கவிதையின் வடிவம்கூட கதை சொல்லலின் வடிவமாகத்தான் இருக்கின்றது. நீங்களும் இதுகுறித்து முன்பே என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். அதற்கான காரணம் என்னவென்றால் அவர் அரங்கத்தின் ஊடாகத்தான் கவிதைக்குள் நுழைந்திருக்கிறார் என்பதே பதிலாக இருக்கிறது.
மேலும், இன்னொரு காரணம் என்னவென்றால் பிராக் நகரத்தில்தான் வியன்னாவைப்போல ஒன்றுகூடல்களும் பல்வேறு நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கின்றன. அந்த நகரம்தான் ஓவியம் சார்ந்து சிற்பம் சார்ந்து பல கலைஞர்களை ரில்க்கவிற்கு அறிமுகம் செய்துள்ளது. அந்நகரத்தில்தான் அவர் கிளாராவை சந்திக்கிறார். கிளாராதான் ரில்க்கவிற்கு ரோஜானுக்கும் முன்பே ஒரு விசயத்தை பார்வையிடுதல் எவ்வாறு என்பதை கற்றுக் கொடுக்கிறார். இரண்டு கவிஞர்களை ஓரிடத்தில் வைத்து ஒரு விசயத்தைப் பார்க்கச் சொன்னால் அவ்விருவரிடம் இருந்தும் இரண்டு அல்லது பத்து கவிதைகள் உருவாகும் என்பது நமக்குத் தெரியுமல்லவா. அப்படியான பார்வையிடுதல் என்பது கலைஞனுக்கு அல்லது கவிஞனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கிளாராதான் அவருக்கு சொல்லுகிறார். ஆக, ரில்க்கவின் கவிதைகளில் நிகழ்த்துதல் என்பது கிளாராவிடம் இருந்துதான் வருகிறது. அவர்களது உறவுகளில் இருந்துதான் வருகிறது. மேலும், சொல்லப்போனால் கிளாரா ஒரு ஓவியரும் சிற்பக் கலைஞரும் ஆவார். அவர்தான் ரோஜானுக்கும் முன்பாக ரில்க்கவின் கவிதைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
பின் நாட்களில் கிளாராதான் ரில்க்கவின் மனைவியாகவும் ஆகிறார். அவர்தான் ரில்க்கவின் கவிதைகளை செதுக்குவதிலும் செப்பனிடுவதிலும் அதை பதிப்பிற்குரிய முறையில் உருவாக்குவதிலும் அளப்பரிய பங்காற்றுகிறார். கூடுதலாக ரில்க்கவினுடைய கவிதைகளின் தலைப்பைக்கூட கிளாராதான் தெரிவு செய்கிறார். அவர்களுக்கு இடையே கடிதப் போக்குவரத்து மூலமும் நேரடி தொடர்பிலும் ஒரு தீவிரமான உரையாடல் நடைபெற்றுக் கொண்டே இருந்தது. இப்படியான செயல் என்பது அந்த காலத்தில் ஒரு விசித்திரமான செயலாக பார்க்கப்பட்டு வந்தது. இப்படியாக ஒரு மனைவிக்கும் கணவனுக்கும் இடையிலான எழுத்து சார்ந்த உரையாடலில் ரில்க்க தனது கடிதங்களில் கிளாராவை தன்னைவிட மேலானவள் என்று கூறுகிறார். கிளாராவின் பாதைகளில் ரில்க்க பயணம் செய்கிறார். கிளாரா பாரிஸ் செல்கிறார். ரில்க்க அதைப் பின்தொடர்கிறார்.
கிளாரா நைல் நதியில் பயணம் செய்கிறார். ரில்க்கவும் அதையே செய்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு மனைவி அல்லது பெண் செய்ததை தான் பின்தொடர்கின்றேன் என்ற பொருளில் இல்லாமல் மிகவும் இயல்பாக அவரைப் பின்தொடர்ந்ததை அப்பட்டமாக ரில்க்க வெளிப்படுத்துகிறார். மேலும், ரில்க்கவிற்கு ஒரு பெண் என்பதையும் தாண்டி ஒரு வழிகாட்டல் எனுமளவில் கிளாரா தேவைப்படுகிறார். அப்படியான வழிகாட்டுதலை ரில்க்க எல்லா பெண்களிடமும் காண்கிறார். அதைக்குறித்து ரில்க்கவும் பெண்களும் என்கிற தலைப்பில் இந்த இரவு முழுவதும் உரையாடலாம். ஏனெனில், ரில்க்கவின் வாழ்வில் அவ்வளவு பெண்கள் இருக்கிறார்கள்.
ரில்க்கவின் வாழ்வில் அரங்கம் குறித்த செய்தியானது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. எனில், தற்போது நான் பார்க்கும் பார்வை சரியானது என்று நினைக்கிறேன். இப்பொழுது நாம் விசயத்திற்கு வருவோம். ரில்க்க அவர்கள் எல்லா கலைகளிலும் அதனது எல்லா பக்கங்களிலும் முயற்சி செய்து பார்த்திருக்கிறார். மேலும், எல்லா கலைகளிலும் அவரது சாராம்சம் இருக்கிறபொழுது நீங்கள் ரில்க்கவை ஒரு கவிஞராக மட்டும் எப்படி வகைப்படுத்துவீர்?
ரில்க்கவை கவிஞராக எப்படி வகைப்படுத்துவது என்பதைவிட அவரின் கவிதைகளை எப்படி வகைப்படுத்துவது என்பதாக பேசலாம் என்று நினைக்கிறேன். ஆனால், பொதுவாக வகைப்படுத்துதல் என்பது எப்போதும் எனது மனதிற்கு உகந்ததாக இருந்ததில்லை. ஏனென்றால் ஒரு விசயத்தை வகைப்படுத்துகிறபோது தானாகவே ஒரு சட்டகம் வந்து விடுகிறது. அந்த சட்டகத்திற்குள் அடைத்துவைத்து இவர்தான் ரில்க்க அல்லது இவ்வளவுதான் ரில்க்க என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் பாரிஸ் நகரத்திற்கு சென்றதற்கு பிறகு எழுதப்பட்ட கவிதைகள் அல்லது பாரிஸ் நகரத்திற்கு செல்வதற்கு முன்பு எழுதப்பட்ட கவிதைகள் என்பதாக ரில்க்கவின் கவிதைகளின்மீது ஒரு பொதுவான பார்வை இங்கு இருக்கிறது. அந்த பார்வைக்கு பின்னால் மாபெரும் குறியீட்டுக் கலைஞரான அகஸ்ட் ஒஜா என்பவர் இருக்கிறார் என்பதை இங்கு மறுத்திட இயலாது. ஆனாலும் இதிலே இப்போது என்னுள்ளிருக்கும் பெண்ணிலைவாதம் எட்டிப் பார்க்கையில் ரில்க்கவின் கவிதைகளை லூ என்கிற பெண்ணுக்கு முன்பாக அல்லது லூ என்கிற பெண்ணுக்கு பின்பாக என்பதாகவே நான் வகைப்படுத்திப் பார்க்கிறேன்.
லூ என்பவர் யாரென்றால் அவர் ஒரு ஜெர்மானிய, ரஷ்ய எழுத்தாளர்; உளவியலாளர்; கட்டுரையாளர். மேலும், ரில்க்கவை விட பதினைந்து வயது மூத்தவர். இவை எல்லாவற்றையும் விட தத்துவவாதி பீச்சலின் காதலை நிராகரித்தவர். அவரது திருமண விண்ணப்பத்தை நிராகரித்தவர். இவ்வாறான ஒரு பெண் ரில்க்கவின் வாழ்வில் வருகிறபோதுதான் அவரின் கவிதைகள் மாறுகின்றன. மேலும், அந்தக் காலத்தில் ஏனைய எழுத்தாளர்களைப்போல ரில்க்கவும் தனது படைப்புகளை லூ காண வேண்டும் என்று காத்திருந்திருக்கிறார். லூவிடமிருந்து தனது படைப்பு குறித்து ஒரு கருத்தோ விமர்சனமோ வராதா என்று எண்ணியிருக்கிறார். ஏனென்றால் ரில்க்க படைப்புலகத்திற்கு வருவதற்கு முன்பாகவே படைப்புலகில் லூ மிகவும் ஆழமான கட்டுரைகள், படைப்புகள் ஆகியவற்றை எழுதியவர். அதனையொட்டி இவ்விருவருக்கும் இடையே ஒரு சந்திப்பு நிகழ்கிறது. அச்சந்திப்பிலேயே லூவின்மீது தலைகால் புரியாத காதலில் ரில்க்க விழுந்து விடுகிறார். அதற்குப் பிறகு ரில்க்கவின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றது. மாற்றம் என்றால் அவரது பெயரே மாறுகிறது.
ஏனென்றால் ரில்க்கவிற்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் ரெனி மரியா ரில்க்க என்பதாகும். இதிலே ரெனி என்பது பிரெஞ்சு மொழியில் பெண் குழந்தைக்கு சூட்டப்படும் பெயராகும். ரெனி என்ற சொல்லின் பொருள் மீண்டும் பிறப்பது என்பதைக் குறிப்பதாகும். ஏனென்றால் ரில்க்கவின் தாயாருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விடுகின்றது. அதனால் அடுத்த ஆண்டு பிறந்த ரில்க்கவிற்கு ‘ரெனி’ என்று பெயர் சூட்டி பெண் குழந்தைக்கான ஆடைகள், தலைமுடி என எல்லாம் உடுத்தி ஆறு ஆண்டுகள் வரைக்கும் அவரை பெண் பிள்ளையாகவே வளர்த்தார். லூ ரில்க்கவின் வாழ்வில் நுழைந்தபிறகு ஒரு பெண்ணின் பெயரில் ஒரு ஆண் எழுதக்கூடாது என்று கட்டளையிடுகிறார். ரெனி என்பதற்கு மாற்றாக ரைனெர் என்கிற பெயரை அவரே பரிந்துரை செய்கிறார். அதைத்தொடர்ந்து ரில்க்கவின் அடுத்த கடிதத்திலேயே ரெனி மரியா ரில்க்க என்ற பெயரானது ரைனெர் மரியா ரில்க்க என்று மாறியது. கூடவே, அவரது கையெழுத்தும் ரைனெர் மரியா ரில்க்க என மாறியது.
ரில்க்கவின் கையெழுத்தைப் பற்றி கூறுவதென்றால் அவருடையது மிக மிக அழகான ஓவியம் போன்றது. அந்த கையெழுத்தின் வடிவமானது பல காலங்களை தன்னகத்தே கொண்டிருக்கும். காலங்கள் என்று சொன்னால் ஜெர்மன் மொழியில் உதாரணத்திற்கு ஒரு காலத்தில் ‘எச்’ (H) எனும் எழுத்தை ஒரு விதமாக எழுதுவர். கேஜ்ஹை காலத்தில் எச் எனும் எழுத்தானது ஒரு விதமாக எழுதப்பட்டது. ஆனால், ரில்க்கவின் காலத்தில் எச் எனும் எழுத்தானது வேறுவிதமாக எழுதப்பட்டது. ஆனால் ரில்க்க என்ன செய்வார் என்றால் அவரது எழுத்து வடிவத்தில் காலங்களை இணைப்பார். லூவின் ஆலோசனையில் எழுத்தின் வடிவத்தில் காலங்கள் இணையக்கூடாது. ஏனெனில் அது குழப்பத்தை விளைவிக்கும் என்று அவர் கருதினார். அதனால் ரில்க்கவின் எழுத்து வடிவத்தை மாற்ற வைக்கின்றார். இதற்கும் அப்பால் அவரது கவிதையின் பாடுபொருள் மாற்றப்படுகிறது.
லூவானவர் ரில்க்கவின் வாழ்வில் வரும்வரை அவரது கவிதைகள் முழுக்க காதல் காதல் காதல் என்றே இருந்தது. லூ வந்த பிறகு அவரது கவிதைகளுக்கு மரண சாயல் வருகிறது. துயரம், அல்லல்படுதல், அலைக்கழிப்பு, வாழ்வின் நெருக்கடி ஆகியவை வருகின்றன. அதன்பிறகு கவிதை முழுமையாகிறது அல்லது ஒரு வாழ்வை சொல்கிறது. ரில்க்கவின் கவிதைகளில் இந்த மாற்றங்கள் எல்லாமே லூவின் வருகையின் ஊடாகத்தான் வந்து சேர்கிறது. அதனால்தான் வகைப்படுத்துதல் என்று சொல்லும்போது நான் ரில்க்கவின் கவிதைகளை லூ அவரது வாழ்க்கையில் வந்த பிறகு அல்லது லூ அவரது வாழ்க்கையில் வருவதற்கு முன்பு என்பதாகக் கூறுகிறேன். இதனாலேயே அவரது கவிதைகளை பாரிஸ் நகரத்திற்கு செல்வதற்கு முன்பு அல்லது பாரிஸ் நகரத்திற்கு சென்றதற்கு பின்பு என்று பொதுவாகக் கூறுவதை நான் நிராகரிக்கச் செய்கிறேன்.
எதேச்சையாக நீங்கள் கூறிய பதிலுக்கும் என்னுடைய அடுத்த இரண்டு கேள்விகளுக்கும் ஒற்றுமை இருப்பதாக நான் நினைக்கிறேன். அவரது கவிதைகளை வாசிக்கையில் அல்லது அவரைப் பற்றிய குறிப்புகளை வாசிக்கையில் ரில்க்கவின் வாழ்வில் பெண்கள் அதாவது அவருடைய பாட்டி, அம்மா, மகள் ரூத் மற்றும் அவரது வாழ்வில் வந்துபோன காதலிகள் எல்லோருமே அவருக்கு சாபமாகக் கொடுத்துவிட்டு…
குறுக்கிட்டு, ரில்க்க பெண்களை ஒரு தாயாக வழிகாட்டலாக பார்க்கிறார். லூவை தாயினும் மேலான தாய் என்று சொல்கிறார். ஆனால், ஒருகட்டத்தில் லூ ரில்க்கவின் கவிதைகளுக்கு வழிகாட்டியாக இருந்தாலும் அவரது வாழ்விலிருந்து முற்றாக விளகுகிறார். அப்படி அவர் விலகிப் போவதற்கு முன்பாக ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடைசிக் கடிதத்தில் நீ ஒரு இருண்ட கடவுளிடம் போ. அவர்தான் உன்னைக் காப்பாற்றுவார். இனி என்னால் உன்னை சரிசெய்ய முடியாது என்று எழுதுகிறார். ஆக, அவரது வாழ்வில் வந்த பெண்களிடம் எல்லாம் அவர் தன்னை சரி செய்வதற்கு முழுமையாக ஒப்படைத்திருக்கிறார். ஆனால், ரில்க்கவை எல்லா பெண்களாலும் சரி செய்துவிட முடியாது. அதனிலும் மேலாக பெண்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன இல்லையா.
அடுத்ததாக ஒரு கேள்வி கேட்க வேண்டும். ரில்க்க பெண்களிடம் சரணாகதி ஆவதுபோல் செல்கிறார் என்பது உண்மையே. ஆனால், ரில்க்கவின் கவிதைகளை வாசிப்பவர்களால் நிச்சயமாக காதலில் இருந்து தப்பிக்க முடியாது. அவரது பிரதிகளுக்கு காதலி ஆகாமலும் தப்பிக்க முடியாது. அவரது அன்னம் என்கிற கவிதையின் வடிவமைப்பைப் பற்றிக் கூறுங்கள். அவரது காதல் கவிதைகளைப் பற்றியும் காதலைப் பற்றியும் கூறுங்கள்.
அவரது காதல் கவிதைகளைக் குறித்து இரவிரவாக பேசலாம். மேலும், அவரது காதல் கவிதைகளை மட்டுமே ஒரு தனித்தொகுப்பாகவும் வெளியிடலாம். ரில்க்க லூவைப் பற்றி மட்டுமே முந்நூறிலிருந்து நானூறு வரைக்குமான காதல் கவிதைகளை எழுதியிருப்பார். சுபயன் என்கிற தலைப்பில் அவர் அந்தக் கவிதைகளை எழுதி இருப்பார். ஆனால், நீங்கள் காதல் என்று சொல்கையில் எனக்கு காமம் என்றே கேட்டது. ஏனென்றால் நீங்கள் குறிப்பிட்ட அன்னம் என்ற கவிதையில் காமத்தை நான் ஒரு பொருளாக பார்க்கின்றேன். அக்கவிதையை மேலோட்டமாக வாசிக்கும்போது அன்னம் என்பது தண்ணீரில் மிதப்பது அல்லது தண்ணீருக்குத் தன்னை ஒப்புக் கொடுப்பது அல்லது அலையோடு அலையாக மாறுவது என்பதுபோலான ஒரு பொருள் இருக்கும். ஆனால், அதை ஆழ்ந்து வாசிக்கையில் காமத்தின் மென்மையான தன்மையொன்று இழையோடிக் கொண்டிருக்கும்.
அன்னம் நீரோடு இணைவது என்பது எனது தனிப்பட்ட பொருள் விளக்கத்தில் காமத்தை நோக்கி மென்மையான தன்மையில் சொல்லப்பட்ட கவிதையாக தோன்றியது. இவ்வாறல்லாமல் அவர் மிக நேரடியாகவே காமத்தைப் பற்றி பேசிய கவிதைகளும் உண்டு. கிரேக்க புராண கதையில் லீடா என்கிற பெண் ஹெலினாவின் தாயாக இருக்கிறாள். கடவுளின் கடவுளான சியூஸ் லீடாவின்மேல் மையல் கொண்டு ஒரு அன்னமாக மாறுகிறார். லீடா அதை ஒரு அன்னமாக அல்லாமல் கடவுள் என்றே உணர்கிறார். மறுக்க இயலாமல் ஒருவரோடு ஒருவர் இணைகிறார்கள். இந்த அன்னம் என்கிற கவிதையின் உச்சம் என்னவென்றால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் கூடி இணைகிறபோதுதான் அந்த அன்னம் தனக்கு சிறகு உள்ளது என்பதையே உணர்வதாக எழுதி இருப்பார். ஆகவே, இக்கவிதை ஒரு காதலை பேசவில்லை. மாறாக இது நேரடியாக காமத்தைப் பேசுகிற கவிதையாக இருக்கிறது.
ரில்க்கவை இவ்வளவு வியந்தாயிற்று. ஆனால், அவரை என்னால் மன்னிக்க முடியாத இடம் ஒன்று உள்ளது. அவரது மகளான ரூத்துக்கு எட்டு வயது இருக்கும்போது காய்ச்சல் வருகிறது. அக்காய்ச்சலின்போது தானொரு தந்தையாக இருந்துகொண்டு ரூத்தைப் பார்க்க நேரடியாகச் செல்லாமல் ஒரு கவிதையை எழுதி, அதை எனக்குப் பதிலாக அனுப்புகிறேன் என்று ரூத்திற்கு அனுப்பி இந்தக் கவிதையைப் படி. அது உன்னை குணப்படுத்தும் என்கிறார். இப்படியான ரில்க்கவை என்ன செய்யலாம்?
ரில்க்கவை நாம் ஒன்றும் செய்ய முடியாது (சிரிப்புடன்). ஆம், ரில்க்கவின் மகள் ரூத்திற்கு எட்டு வயது இருக்கும்போது காய்ச்சல் கண்டு நோயில் படுத்திருக்கிறார். அப்போது ரில்க்க பாரிஸில் இருக்கிறார். அவர் தனது மகளைக் காண உடனடியாக கிளம்பி வரவில்லை. அதற்குப் பதிலாக ஒரு கவிதையைத்தான் எழுதி அனுப்புகிறார். அந்தக் கவிதையை அனுப்பிவிட்டு அவர் சொல்கிறார். இந்தக் கவிதை உன்னைப் பார்த்துக் கொள்ளும். ஏனெனில் இந்த கவிதைதான் நான் என்று. அவர் ஒரு கலைஞராக வெளிப்பட விரும்புகிறாரேயொழிய ஒரு நல்ல மனிதராக அல்ல. ஆகவே, அவரது கவிதைகளை வாசித்து அதனுடைய காதலியாக இருக்கிறேனேயொழிய அவரை ஒரு நல்ல மனிதராக ஏற்று நான் நேசிக்க முடியாது. இதை அவருமே கூட மறுக்கவில்லை. அவரது கடிதப் பரிமாற்றங்களில் நேரடியாகவேகூட சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை கலைதான் அவரது வாழ்வு; வாழ்வுதான் அவரது கலை. மேலும், அவர் கலையை ஒரு உச்சமாகக் கொண்டாடித் தீர்த்தார்.
கலைக்கு சேவகனாக சேவை புரியத்தான் அவர் விரும்பினார். மற்றதெல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். அதற்காகத்தான் அவர் தனிமையைத் தேர்ந்தெடுத்தார். கலைக்கான தனிமையை அவர் கொண்டாடினார். அவரது பயணங்களும் அதையொட்டியே இருந்தன. ஆனாலும்கூட அவர் நோய்வாய்ப்படும்போதும் தனது இறுதி காலத்தின்போதும் தனிமையின் பிரச்சனையை கண்டுகொண்ட அவர் அதைக்குறித்து ‘ஒரு காயத்தின்மீது நீண்ட நாள் ஒட்டியிருந்த கட்டு போலத்தான் தனிமை. உரிக்கும் போது அவ்வளவு வலிக்கும்’ என்று கூறினார். இருந்தபோதும் எழுத்துக்காகவும் கலைக்காகவும் மனைவியிடமிருந்தும் மகளிடமிருந்தும் விலகி அந்தத் தனிமையைத் தேர்ந்தெடுக்கவே செய்தார். தனிப்பட்ட முறையில் நான் மிகவும் அதிகமான அகத்தூண்டல் பெற்றது ரில்க்கவிடம் இருந்துதான். அதனால்கூட அவரை என்னால் ஒன்றும் செய்ய இயலாது.
மொழியாக்கம் பற்றிய இந்தக் கேள்வியோடு முடித்துக் கொள்கிறேன். ரில்க்கவை மொழிபெயர்ப்பது என்பது ஒரு மரமார்ந்த வடிவமானது. அவரை மொழிபெயர்ப்பதில் சில விசயங்களை உடைக்கலாம். அதாவது நிறுத்தற்குறிகள் போன்றவற்றை. ஆனாலும் பிரசாந்தி சேகரத்தை மொழிபெயர்ப்பில் சமாதானப்படுத்துவது என்பது சுலபமானது அல்ல என்று எனக்குத் தெரியும். இது உங்களுக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்திருக்கும். எனக்கும் இது மிகவும் மகிழ்ச்சியானது. கவிஞர் வெய்யில் இதுகுறித்து முகநூலில் எழுதி இருந்தார். இன்றைக்கு ரில்க்கவை தமிழில் வாசிப்பது குறித்து எழுத்தாளர் குப்புசாமியும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணனும் கூறியிருந்தார்கள். ரில்க்கவை மொழிபெயர்ப்பதற்கு நீங்கள் ஒரு காலகட்டத்தையே ஒப்புக் கொடுத்திருந்தீர்கள். இங்கே எப்பொழுதும் மொழிபெயர்ப்பு என்பது ஒரு படி கீழே பார்க்கப்படுகிறது. குப்புசாமி அவர்கள் இது குறித்து தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். உடன் அனுராதா ஆனந்த் அவர்களும் இங்கு இருக்கிறார்கள். நானும் ஒரு மொழிபெயர்ப்பாளராக இருப்பதால் மொழிபெயர்ப்பு என்பது ஒரு சாதாரணமான விசயமாக இல்லை. மொழிபெயர்ப்பை நாம் ஒரு படைப்புக்கு நிகராக பார்க்கிறோம்; அதற்காக மெனக்கெடுக்கிறோம். ஆதலால் இத்தோடு நான் இதை முடித்துக் கொள்கிறேன். இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இந்நூலில் மொழியாக்கம் பற்றிய ஒரு குறிப்பை நான் எழுதி இருக்கிறேன். அதை வாசித்து நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆனால், இங்கே இரண்டு குறிப்பிட்ட விசயங்களை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் என்கிற இரண்டில் நான் மொழியாக்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். ஏனென்றால் இங்கே இருக்கும் பலருக்கும் தெரியும் ‘ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்பு மரபு’ என்று ஒன்று இருக்கிறது. உதாரணத்திற்கு சொல்வதென்றால் பாரதியின் ஒரு கவிதையை ரஷ்ய மொழியில் கொண்டு செல்லும்போது ரஷ்ய மொழிபெயர்ப்பாளர் அந்தக் கவிதையின் மொழிபெயர்ப்பாளராக அல்லாமல் ஆசிரியராக மாறிவிடுகிறார். அவ்வாறு அவர் ஆசிரியர் ஆகும்போது பாரதியின் ஒரு கவிதையை முதலில் ஒரு வரியாக ஆக்குகிறார். ஒரு வரி என்று நாம் சொல்லுவது பாரதியின் ஆன்மா, லயம் குறையாமல் அக்கவிதையின் தாளம் தப்பாமல் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து தனித்துவமான ஒரு படைப்பாக மிளிர வைக்கிறார். ஆக, ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்பு மரபு என்பது ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட படைப்புக்கு நிகராக இருக்கும்.
தமிழ்ச் சூழலில் அவ்வாறான ஒரு மரபு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. தமிழில் தற்சமயம் இரண்டு நாவல்கள் வந்திருக்கின்றன. ஒரு மொழிபெயர்ப்பு நூல் வந்திருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பு நூல் அது மொழிபெயர்க்கப்பட்ட நாவலுக்கு நிகராக இருப்பதில்லை அல்லது அவ்வாறு பேசப்படுவதில்லை. ஆனால், ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்பு மரபில் ஒரு பண்பாடு இருக்கிறது. அதனால்தான் பிரஷோவோ ரில்க்கவோ ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்படும்போது அவர்கள் ரஷ்யமொழி கவிஞர்களாகவே ஆகிவிடுகின்றனர். ரஷ்ய இலக்கியத்தில் ரில்க்கவும் பங்கு பெறுகின்றார். ஏனென்றால் ரில்க்கவின் படைப்பு அவரிடமிருந்து எடுக்கப்பட்டு ஒரு தனித்துவமிக்க ரஷ்ய படைப்பாக மிளிர்கின்றது. அப்படித்தான் மொழியாக்கம் செய்பவரின் அல்லது ஆசிரியரின் வேலையாக ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்பு மரபு பார்க்கிறது. நான் ரில்க்கவை மொழிபெயர்க்கும்போது இந்த மரபு குறித்து அறிந்திருக்கவில்லை. ஆனால், உண்மையைச் சொல்வதென்றால் ரில்க்கவை மொழிபெயர்த்து முடித்தபிறகு இப்படியான மரபு இருப்பதை அறிந்தேன். அப்போது ஒன்றைக் கண்டுகொண்டேன். நானும் அதே மொழிபெயர்ப்பு மரபில்தான் பயணித்திருக்கிறேன் என்பதை. அது என்னை அங்கலாய்க்கவிடாமல் ஒரு நிறைவைத் தந்தது.
ரில்க்கவின் கவிதைகளை மொழியாக்கம் செய்வது என்பது மிகப்பெரிய சவால் நிறைந்தது. கடந்த ஒன்பது மாதங்களாக நான் நானாக இருக்கவில்லை. போகன் சங்கர் அவர்கள் ஒருமுறை கேட்டிருந்தார். ரில்க்கவை அணுகுவது என்பது மனச்சோர்வில் முடிகிறதா அல்லது வியத்தலில் முடிகிறதா என்று. தொடக்கத்தில் ரில்க்கவை அணுகுவது என்பது அவரது காதல் அதுகுறித்த வியத்தல் என்பதாகவே இருந்தது. ஆனால், பிறகுதான் நான் பெரும் மனச்சோர்வுக்கு தள்ளப்படுகிறேன் என்பதை கண்டுகொண்டேன். அப்போது என்னோடு வாழ்ந்த பலரும் நான் நானாக இருக்கவில்லை என்று கூறினார்கள். ஆக, ரில்க்க அவர்கள் மனச்சோர்வு, வியத்தல் ஆகிய இரண்டையும் எனக்குள் தள்ளிவிட்டிருக்கிறார். ரில்க்கவின் ஒரு வார்த்தை அல்லது அவரது மொழி என்பது ஒரு காலகட்டத்திற்குள் செல்வது என்று குப்புசாமி அவர்கள் கூறினார். நான் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தது 1985 ஆம் ஆண்டு. அந்த காலகட்டத்தில் உள்ள ஜெர்மன் மொழிக்கும் ரில்க்கவின் ஜெர்மன் மொழிக்கும் பெரிய மாறுபாடு இருக்கிறது. பல வார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை. பரிதவிப்பு என்கிற கவிதையில் பனஸ் என்கிற ஒரு வார்த்தை வருகிறது. இன்று ஜெர்மனியில் யாரும் அந்த வார்த்தையை பிரயோகிக்க மாட்டார்கள். கஜரி அவர்களுடன் உரையாடும்போது அந்த வார்த்தையை நான் தேட வேண்டும் என்று கூறினேன். ஆக, ரில்க்கவின் மொழி என்பது இவ்வாறானது. அவரின் மொழிக்குள் செல்வதற்கு எனக்கு பல காலங்கள் ஆனது. மேலும் அவரின் காலகட்ட ஜெர்மன் மொழிக்குள் செல்வது என்பது பெரும் சவால் நிறைந்ததாகும்.
ரில்க்க நான்கு அல்லது ஐந்து சொற்களைச் சுருக்கி ஒற்றைப் பெயர்ச்சொல்லாக மாற்றுவார். ஒரு பெருஞ்சொல்லாக மாற்றுவார். ஒரு கவிதையில் உள்ள மூன்று வரிகளை ஒற்றைச் சொல்லாக மாற்றுவார். உதாரணத்திற்கு ‘பிளட்டா லைஷன் சௌ’ என்பதை எடுத்துக் கொள்ளலாம். இங்கே பிளட்டா என்றால் இலைகள்; லைஷன் என்றால் இறந்த உடல்; ஷௌ என்றால் பார்வைக்கு வைக்கப்பட்டது என்று பொருள். அதாவது பார்வைக்கு வைக்கப்பட்ட உயிரிழந்த இலைகள் என்று பொருள். ஆனால், இது கவிதையில் சருகுகளாக மாற்றப்படுகிறது. இதுதான் நான் அவரை அணுகிய விதமும் வெளிக்கொணர்ந்த விதமும் ஆகும். இறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். ரில்க்க அவர்களின் கவிதைகளை உடைக்கச் சொன்னது ரீனா ஷாலினி அவர்களே. அது எனக்கு ரில்க்கவையே உடைப்பதுபோல் ஆகிவிட்டது. அவரது கவிதைகளை உடைப்பது என்பது கடினமானது. ஆனால், அவரது முதல் கவிதையை உடைத்தபோது தமிழில் அது கவிதையாகவே இருந்தது. எனவே, அந்த உடைப்பு என்பது சரியானதுதான். ரீனா ஷாலினி அவர்களே அதற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுவல்லாமல் இந்த நூலின் தலைப்பான ‘வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு’ என்பது குறித்து நானும் ரீனா ஷாலினியும் அடிக்கடி பேசி இருக்கிறோம். ரில்க்க இத்தலைப்பிற்கு எழுதிய வார்த்தைக்கு வசந்தம் என்கிற பொருள் இல்லை. அதில் காய்ந்த காலம், பூக்காத காலம், கருகிய காலம் என்பவையே பொருளாக இருந்தன. ஆனால், பிருந்தா சேது அவர்கள்தான் காய்ந்த காட்டிலிருந்து வசந்தம் வராத காட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அதுதான் பரிதவிப்பு என்கிற கவிதையின் முதல்வரியாக இந்த நூலின் தலைப்பாக ஆனது. அதற்கு பிருந்தா சேது அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இக்கவிதைகளை செதுக்கியதில் செப்பனிட்டதில் இருவரின் பங்கு முதன்மையானது. ஏனென்றால் ஆரம்பத்தில் நான் ரில்க்கவின் உளத்திற்குள் மொழிக்குள் அவரது சட்டகத்திற்குள்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். அதிலிருந்து விடுபட்டு அவரை தமிழுக்குக் கொண்டு வருவது எனக்குப் பெரும் சவாலாகவே இருந்தது. மேலும், இந்த நூல் இன்றைக்கு உங்கள் கைகளில் இருப்பதற்கு சிலரை நினைவில் கொண்டு அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். எனது அம்மா அப்பா ஆகிய இருவரே எனது எழுத்தின் முதல் வாசகர்கள். அதில் அகமகிழ்ந்து சுற்றியுள்ள உலகையே மறப்பவர்கள். அம்மாவின் தீரா காதல் நான் என்றால் அடுத்தது இந்த நூலாகத்தான் இருக்கும். இந்த நூல் அம்மா இல்லாத அப்பாவின் இருப்பிற்கு பெரும் அர்த்தம் சேர்க்கும் என்று நம்புகிறேன்.
Image : Shruti TV Literature








Leave a Reply