மயிறுக்கு மணமுண்டோ?
நிலத்திற்கும் மணமுண்டு
நீருக்கும் மணமுண்டு
கல்லுக்கும் மணமுண்டு
இவையெல்லாம் மெய்யென்றால்
அந்தப் பெண்ணின்
மயிறுக்கும் மணமுண்டு
மெய்தானே!
அப்படியிருக்க
நக்கீரனுக்கு ஞானமில்லை
பாவமந்த தருமி
தருமியைக் கவிஞராக்க
நக்கீரனுக்குத்தான் மனமில்லை
கலப்பு மணமும் மாட்டு ரத்தமும்
கலப்பு மணத்தைக் காணப்பிணமாக்கி
கௌரவத்தைக் காப்பற்றியதாய்க் கம்பீரமாய் மீசைமுறுக்கி
சுயரத்தம் ஒரு துளியேனும் கலப்பாகி அரும்பிவிடாதிருக்க
அழித்துவிட்டேன் என்றெண்ணி
பிதற்றிக்கொண்ட பெற்றோன்
எழுபதுகளின் கடைவாயில் காலனுக்காய்க் காத்திருக்க
அந்த மாட்டு மனிதனின் கலப்பு ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு
இதயத்தை இரும்பாக்கி
இன்றும் இன்பமாய் இதமாய் வாழத்தான் செய்கிறான்.
இருந்தும் கூட வலிக்கத்தான் செய்கிறது
அன்றைய நினைவுகளின் சில நொடிகள்…
அதுவாய் வாழ்தல் அதற்கினது
நமக்கல்ல
பறவையாய்ப் பறந்திட
ஆசையாய் எழுந்திட
பறப்பதின் நெளிவும் சுளிவும்
இறகின் வன்மையும் மென்மையும்
பறந்திட்ட பறவைக்குத்தான் தெரியும்.
முள்வேலிகளில் கிழிக்கப்பட்டு
மரக்கிளைகளில் வெட்டுப்பட்ட
சிறகின் பாரமும் காயமும்
அதற்குத்தான் தெரியும்
அதுவாய் வாழ்தலின்
இனிதும் கொடிதும்
நீ நீயாய் வாழ்தல் இனிது
அனுபவம் பெறுவாய்
அறிவால் சிறப்பாய்
பிறர் வாழ்வை
நீ வாழ்தலென்பது
ஒருபோதும் இனிதல்ல.
Art : Narayan Shelke
இரா.இராதிகா சேலத்தைச் சார்ந்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். பொருள்முதல்வாதத் தத்துவத்தின் அடிப்படையில் சங்க இலக்கியத்தை அணுகி “சங்கப் பாடல்களில் மந்திரமும் சடங்குகளும்” எனும் ஆய்வுக்கு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். “வெள்ளிமலை மக்களின் வாழ்வியல்” எனும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்று நாட்டுப்புறவியல் துறையிலும் ஆய்வு நிகழ்த்தியவர். மேலும் பொதுவுடைமைச் சிந்தனைத் தளத்தில் இயங்க ஆர்வம் கொண்டவர். தலித் இலக்கியப் படைப்பாளுமையைக் கையாளுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.








Leave a Reply