காலனியத்திற்கு முந்தைய இந்திய மரபு அழகிய மரம்தானா? சுதேச மரபை முன்நகர்த்த விரும்பும் ஆய்வாளர்கள் இந்தியப் பாரம்பரியக் கல்வியை அழகிய மரம் என்கின்றனர். ‘இந்தியாவில் கல்வி அனைவருக்குமானது’ என்பதான கருத்தியலை இந்தியவியல் ஆய்வாளர் தரம்பால் முன்வைக்கிறார். முதலில் ஒன்றைச் சொல்லிவிடுவோம். இந்தியா ‘அனைவருக்கும்’ என்ற கருத்தியலுக்கு எதிரானது. இங்கு பொது இயங்கு வெளி என்ற ஒன்று உண்டா? பின் எவ்வாறு பள்ளி மட்டும் அனைவருக்குமானதாக இருந்திருக்கும்? தரம்பால், வில்லியம் ஆடம் என்பவரின் குறிப்பை முன்வைத்து தனது சுதேச மரபைச் சிலாகிக்கிறார். வில்லியம் ஆடம் என்னதான் கூறினார்? “மதராஸ் பிரசிடென்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது”. தரம்பாலின் அழகிய மரம் ஒவ்வொரு கிராமத்திலும் செழித்து வளர்ந்து இருந்ததா? விசாரணையைத் தொடரலாம்.
I
புதுப்பட்டி என்பது மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த ஒரு கிராமம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அக்கிராமம் திருநெல்வேலி மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. சீர்திருத்த கிறித்தவம் புதுப்பட்டியை வட திருநெல்வேலி மாவட்டத்திற்குள் வைத்திருந்தது. கத்தோலிக்கக் கிறித்தவம் மதுரை மறை மாநிலத்தின் உறுப்பாக இக்கிராமத்தை பதிவு செய்து வைத்துள்ளது. புதுப்பட்டி எனும் கிராமத்தில் சுதேசக் கல்வி என்ற ஒன்று இருந்ததா?
சுதேசக் கல்வி என்பது திண்ணைப்பள்ளி, சைவ மடப்பள்ளி, வைணவப் பள்ளி என்பதாகச் சொல்லப்படும். பெரும்பாலும் திண்ணைப் பள்ளிகள்தான் நிறைந்திருந்தன. திண்ணைப்பள்ளியில் அரிச்சுவடி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நிகண்டுகள், பொன்னிலக்கம், நெல்லிலக்கம், எண் சுவடி என்பதான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. கடிதம் எழுதுதல், கணக்கு வழக்குப் பார்த்தல் என்பதுதான் திண்ணைப்பள்ளியின் தலையாய நோக்கம். உ.வே.சா. போன்ற ஒரு சில மாணவர்கள்தான் மேற்படிப்பு வேண்டி சைவ மடங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படும் பள்ளிகளுக்குப் பயிலச் சென்றனர். சுதேசப் பள்ளியான திண்ணைப்பள்ளியோ, மடங்களால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளோ அனைவருக்குமான பள்ளிகளல்ல. திண்ணைப்பள்ளிகள் சாதிக்கொரு பள்ளியாக இருக்கும். உ.வே.சா. படித்த திருவாவடுதுறை ஆதினம் நடத்திய பள்ளியில் சைவ வேளாளர்கள், பிராமணர்கள் என்ற இருசாதியினர் படித்ததாகவே அறிய முடிகிறது. இவர்களோடு ‘வெள்ளை வேட்டிக்காரர்’ என்ற சொல்வாயிலாக உயர்சாதிப் பிள்ளைகள் சிலர் படித்திருக்கலாம். மொத்தத்தில் சுதேசப்பள்ளி என்பது அனைவருக்குமானதல்ல. தரம்பாலின் அழகியமரம் என்பது எதுவாக இருக்கும்?
புதுப்பட்டியில் திண்ணைப்பள்ளி, சைவ, வைணவ மடங்களின் பள்ளிகள் இல்லை. பின்னர் புதுப்பட்டியில் எந்தப் பள்ளித்தான் முதலில் துவங்கப்பட்டது? புதுப்பட்டியின் பள்ளி வரலாற்றை அறிவதற்கு முன்னர் புதுப்பட்டி எனும் கிராமத்தின் காலனிய வரலாற்றைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.
II
புதுப்பட்டியின் அறிதலை எங்கிருந்து தொடங்குவது? 1972-இல் இருந்து 1975 வரை சேசு சபையின் உள்வட்ட இதழான காரிடாரில் ஜான் பூஜ்ஜோ எனும் சேசு சபை பாதிரியார் தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். புதுப்பட்டியை மைய இடமாகக் கொண்டு அப்பகுதியில் கிறித்தவத்தை பரப்பிய ஜான் பாப்டிஸ் திரிங்காலின் வாழ்க்கை வரலாறே அத்தொடர் கட்டுரையின் கருப்பொருள். அக்கட்டுரையில் புதுப்பட்டிக்கு கிறித்தவம் வந்த வரலாறு சொல்லப்பட்டுள்ளது.
தென்புலமெங்கும் அப்போது புதிய கால்தடங்கள் தென்பட்டன. ஒவ்வொரு கால்தடமும் சில வரலாறுகளை அள்ளித் தருபவை. வடக்கன்குளம், புன்னைவனக் கூடாரங்கள், சேந்தமரம் வயக்காடுகள் என்பதான அறியாத நிலப்பரப்புகளுக்குள் பதிந்திருந்த கால்தடங்களின் வரலாறு இன்று கண்டுசொல்லப்படுகிறது. அப்படியானதொரு கால்தடம் புதுப்பட்டியையும் விட்டுவைக்கவில்லை. எப்போதும் போல் அக்கால்தடம் வெள்ளைக் கால்தடம்தான். அது ஒரு பாதிரியாரின் தடமும்கூட. அந்த ஆண்டு சுமார் 1800-வாக இருக்கலாம். அதுவும் ஒரு பழமையான கிறித்தவக் கதைதான்.
பூஜ்ஜோ பாதிரியார் இப்படி எழுதுகிறார். அது ஒரு பழைய கிறித்தவர்கள் வாழும் பூமி. அந்நிலம் நோக்கி ஒரு பாதிரியார் வந்துள்ளார். அந்நிலத்தில் வாழ்ந்துவரும் கிறித்தவர்களை அறிவதற்காக அந்தப் பாதிரியார் வந்ததாகப் பழமரபுக் கதை ஒன்று சொல்கிறது. அந்தப் பாதிரியார் வந்த தருணத்தில் சாலியர் சாதிப் பெண் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. அவளைப் பைத்தியம் என்று சொன்னார்கள். அப்பெண்ணை பேய் பிசாசு பிடித்திருக்கிறது என்றும் கூடச் சிலர் கூறினர். உடல்நிலை சரியில்லாத அப்பெண்ணைச் சுகமாக்க வேண்டிய இக்கட்டான நிலை அப்பாதிரிக்கு ஏற்பட்டது. “பெண் குணமானால் நீங்கள் கர்த்தருக்குள் அடைக்கலம் புகுவீர்களா?” கேள்வி மிகப்பெரிதுதான். ஆனால் அதுதான் நடந்தது. அப்பெண் சுகமானாள். ஏராளமான கனிகள் கிறித்தவத்திற்குக் கிடைத்தன. முதல் ஞானஸ்ஞானம் அங்கு நிகழ்ந்தேறியது.
சாலியர் கிறித்தவர்களுக்குக் கல்லறையும், சிறிதான தேவாலயமும் உருவாக்கப்பட்டன. நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்போது திடீரெனக் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த சாலியர்கள் இந்து மதத்தைப் பின்பற்றும் அவர்களது உறவினர்களாலேயே கொடுமைப்படுத்தப்பட்டனர். கிறித்தவர்கள் இந்துக்களால் பெரும் துன்பத்திற்கு உட்படுத்தப்பட்டனர். துயரங்களைச் சகிக்க இயலாமல் 1842 ஆம் ஆண்டில் 30 சாலியர் குடும்பங்கள் மதுரைக்குப் புலம் பெயர்ந்தனர். மத மோதல்களால் ஏற்பட்ட முதல் புலப்பெயர்வு இது என்று சொல்லலாம். பிற்காலத்தில் புதுப்பட்டிக்கு 1875 ஆம் ஆண்டு வந்த திரிங்கால் பாதிரியார் சிதிலமடைந்த கிறித்தவர்களின் தேவாலயத்தையும் அவர்களது கல்லறையையும் முதலில் பார்வையிட்டார் என்று ஜான் பூஜ்ஜோ பாதிரியார் எழுதுகிறார். இக்கதையில் பள்ளி என்பது இல்லை.
III
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை 1840 இல் நிகழ்ந்தது. ஜான் கிறிஸ்டின் அருளப்பன் இக்கிறித்துவம் சீர்திருத்தக் கிறித்தவமாகத் தென்பட்டது. சீர்திருத்தக் கிறித்தவத்தின் தூதுவராக ஜான் கிறிஸ்டின் அருளப்பன் அறியப்படுகிறார். யார் இந்த அருளப்பன்? திருநெல்வேலிக்கருகே உள்ள உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர். ரேனியஸ் உருவாக்கியிருந்த குரு மடத்தில் படித்தவர். ரேனியஸின் நேரடி மாணவர். குரோவ் பாதிரியாரால் வடிவமைக்கப்பட்டவர். கிறித்தவத்தில் சாதி இல்லை என்று சொன்னதோடு தான் உருவாக்கிய புதிய திருச்சபையில் சுதேச மனிதன் ஒருவன் இணையவிரும்பினால் அவன் முதலில் ஜாதியைக் கைவிட வேண்டும் என்பதைக் கொள்கையாக அறிவித்தவர். அருளப்பன் புதுப்பட்டிக்கு ½ கிலோமீட்டர் தூரம் உள்ள கிறிஸ்த்தியன் பேட்டையை உருவாக்கியவர். நிலம் வாங்கிப் புதிய ஊரை உருவாக்கினார். அங்கு குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. தேவாலயம் உருவாக்கப்பட்டது. தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. அருளப்பன் விவசாய நிலத்திற்கும், புதிய குடியிருப்புத் தேவைக்காகவும் குளம் ஒன்றை வெட்டினார். இன்று போதகர் குளம், போதகர் காடு என்று அவை அழைக்கப்படுகின்றன.
ஜான் கிறிஸ்டின் அருளப்பனை அறிவதற்கு The History and Diaries of an Indian Christion J.C. Aroolappan எனும் நூல் உள்ளது. இந்நூல் 1939 இல் எழுதப்பட்டது. ஜி.எச்.லாங் என்பவர் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலில் வத்திராயிருப்பு வட்டாரச் சமூகச் சூழல், கல்வியறிவு, பஞ்சம், காலனியகால வரிமுறைகள் முதலானவை கொஞ்சமாகக் கூறப்பட்டுள்ளன.
1840 இல் புதுப்பட்டிக்கு மேற்கே ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலங்கள் விலைக்கு வாங்கப்பட்டன. விலைக்கு வாங்கப்பட்ட கரடுமுரடான நிலங்கள் அருளப்பனால் சீர்படுத்தப்பட்டன. அரசாங்கத்திடமிருந்து நிலங்கள் விலைக்கு வாங்கப்பட்டதாகவே ஜி.எச்.லாங் எழுதுகிறார். கம்பெனி ஆட்சி அகன்று எலிசபெத் ஆட்சி வந்த தருணத்தில் 150 ரூபாய்கு அரசிடமிருந்து வாங்கிய தானிய விளைச்சலுக்கு வரியாக ரூ.400 போடப்பட்டதாக அருளப்பனின் டைரிக் குறிப்புகள் கூறுகின்றன. 1854இல் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. அரசின் வரியும் 700 ரூபாயாக உயர்த்தப்பட்டது. நிலத்தின் தீர்வையும், விளைச்சலுக்கான வரியும் உள்ளபடியே மிகவும் அதிகம்தான்.
அருளப்பன் அரசின் வரிக்கொள்கையை மெதுவான குரலில் எதிர்க்கிறார். பயிர்கள் மழையாலோ, வெயிலாலோ அழிந்து போனாலும் அரசுக்குக் கட்டவேண்டிய வரியைக் கட்டியே தீரவேண்டுமாம். பஞ்ச காலத்தில்கூட அதிக வரிப்பணம் வசூலிக்கப்பட்டதாகவும் நொந்து கொள்கிறார்.
கிறிஸ்த்தியான் பேட்டைக்கு மேற்கே கான்சாபுரம் எனும் கிராமம் உண்டு. இக்கிராமத்தில் மறவர் சாதியினர் அதிகம். இவர்களது ஊர்த் தலைவனுக்குச் சேர்வைக்காரன் என்று பெயர். “இவன் மிகச் செல்வாக்கு படைத்தவன். அரசனைக்காட்டிலும் மிகப் பயங்கரவாதியும்கூட” என்று பேராசிரியர் சவேரியார் எழுதுகிறார். பேராசிரியர் சவேரியார் குறிப்பிடும் மறவர் சாதி ஊர்த்தலைவனின் தந்தை “… ஜான் போதகர் என்று பெயர் பெற்ற இந்திய மறுநெறிக் கிறித்தவப் பாதிரியாருடன் தொடர்ந்து 20 ஆண்டுகள் சண்டை நடத்தினவன்” என்று சவேரியார் எழுதுகிறார். நிலத்தின் மீதான உரிமை என்ற ஒன்று பண்பாட்டுத் தளத்தில் தலித் மக்களுக்குக் கிடையாது. அதை ஒட்டியே இந்த மோதல் நிகழ்ந்திருக்கலாம்.
ஒரு முறை நீர் மீதான உரிமை குறித்து ஒரு பிரச்சனை பூதாகரமாக மேலெழும்பியது. கிறிஸ்த்தியான் பேட்டைக்கு மேற்கே பெரியகுளம் எனும் கண்மாய் உள்ளது. வத்திராயிருப்பு வட்டாரத்தில் உள்ள பெரிய கண்மாய் பெரியகுளம்தான். பெரியகுளம் நீர் யாருக்குச் சொந்தம்? பெரியகுளத்திலிருந்து வரும் தேவைக்கு அதிகமான தண்ணீர் பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றதொரு அறிக்கையைச் சில பிராமணர்கள் அரசுக்குச் சமர்ப்பித்திருக்கிறார்கள். இச்செய்தியை அருளப்பனிடம் காலனியக் காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். அருளப்பன் அதனை எதிர்த்து அறிக்கை கொடுத்திருக்கிறார். இத்துடன் கீழ்குறித்தவற்றையும் இணைத்து நோக்கலாம். வத்திராயிருப்பு வட்டாரத்தில் நிலங்கள் பிராமணர்களிடம் குவிந்துகிடந்தன. பிராமணர்கள் மிராசிகள் என்றே அழைக்கப்பட்டனர். பிராமணர்களின் நிலங்களை வெள்ளாளர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தனர். பிராமணர்களுக்குச் சுவாமி போகம் அளந்து கொடுத்து வந்தனர். தாமஸ் மன்றோ கொணர்ந்த ரயத்வாரி சட்டப்படி குத்தகை செய்த நிலங்களை வெள்ளார்கள் தங்களுக்குப் பட்டா போட்டுக் கொண்டனர். ஒரு வகையில் மரபார்ந்த நில உடமை பிராமணர்களிடமிருந்து வெள்ளாளர்களுக்கு நவீன வரி முறைகளால் மடைமாற்றமடைந்தது.
இச்சூழலில் பிராமணர்களுக்கு மரபுவழிப்படி கொடுத்து வரப்பட்ட சுவாமி போகம் வெள்ளாளர்களால் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வெள்ளாளர்கள், பள்ளர்கள் முதலான சாதிகளை ஒருங்கிணைத்து மிராசுதாரர்களான பிராமணர் வயல்களில் நடக்கவிருந்த அறுவடையை தாசில்தார்களும், கணக்குப்பிள்ளையும் தடுத்தார்கள். இது ஒரு கலவரச் சூழலை அவ்வட்டாரத்தில் உருவாக்கியது. பிரச்சனை நீதிமன்றம்வரை சென்றது. சுவாமி போகம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. வெள்ளாளர்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதைத் தொட்டு 1850களிலும் முரண்பாடு முற்றியது. இம்முரண்பாடு பிராமணர் X பிராமணரல்லாதார் என்ற எதிர்ப்பு அரசியலுக்கு வித்திட்டது என்பதுவரை ராஜ் கௌதமன் தனது “ஆரம்பக்கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்” எனும் நூலில் முன்வைக்கிறார்.
IV
படிப்பறிவின் நிலை எவ்வாறு இருந்தது? பொதுவாக மாவட்டத்தில் படிப்பறிவின் நிலை சொல்லும்படியாக இல்லை என்பதுதான் அருளப்பனின் கணிப்பு. வத்திராயிருப்பு வட்டாரத்தில் கல்வியறிவு எவ்வாறிந்தது? ஒரு முறை அருளப்பன் கைப்பிரதியை முன்வைத்து வத்திராயிருப்பில் கிறித்தவம் குறித்தான சொற்பொழிவை நிகழ்த்துகிறார். மக்கள் கணிசமாகக் கூடிச் செவிமடுக்கின்றனர். ஆனால் கைப்பிரதியை வாங்குவதற்கு முன்வரவில்லை. இதுகுறித்து அருளப்பன் இவ்வாறு எழுதுகிறார். “அநேகர் கூர்ந்து கவனித்தனர். அநேகருக்கு வாசிக்க அறியாததினால் மூன்று கைப்பிரதியை மட்டும் கொடுத்தோம். இந்த வட்டாரத்தில் ஒவ்வொரு கிராமத்தின் நிலைமை இதுவாகத்தான் இருந்தது”.
பெரும்பாலும் எழுத்துப் பழக்கம் அறியாத வட்டாரத்தில் தான் அருளப்பன் முதன் முதலாகப் பள்ளியைத் துவங்குகிறார். அப்பள்ளியில் ஆங்கிலம், கணிதம், தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 12 மாணவர்கள் தங்கிப் படித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து பன்றி மேய்க்கும் மாணவர்களில் இருவர் அவ்வேலையைச் செய்து கொண்டே தமிழ் எழுத்துக்களைக் கற்று வந்துள்ளனர். 1857இல் கிறிஸ்த்தியான் பேட்டையில் உள்ள பள்ளியில் 20 மாணவர்கள் படித்துள்ளனர். 6 பேர் தங்கிப் படித்துள்ளனர். 1866 ஆம் ஆண்டு அதே பள்ளியில் 40 குழந்தைகள் படித்துள்ளனர். இந்த ஆண்டில்தான் பள்ளிக்கெனப் புதிதாகக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இப்பள்ளியை ஒரு முறை ஆய்வு செய்த அரசு அதிகாரி ஒருவர் “பள்ளிக்கூடக் குழந்தைகளில் பணக்காரப் பிள்ளைகளைக் காட்டிலும் ஏழைப்பிள்ளைகள் அதிகம் அறிந்து வைத்துள்ளனர். கிறித்தவப் பிள்ளைகளைக் காட்டிலும் பிராமணப் பிள்ளைகள் அதிகம் தேர்ச்சியடையவில்லை..” என்று கூறியதை அருளப்பன் பதிவு செய்து வைத்துள்ளார்.
சீர்திருத்தக் கிறித்தவத்திற்குப் பின்பு திரிங்கால் வ.புதுப்பட்டியில் 1880 இல் ஒரு பள்ளியை உருவாக்குகிறார். அப்பள்ளி தமிழ்வழிப் பள்ளி. அப்பள்ளியில் பாதிநேரம் விவசாயக்கல்வி போதிக்கப்பட்டது. 1842ல் உருவாக்கப்பட்ட கிறிஸ்த்தியான்பேட்டை பள்ளியில் உருவாகி வந்த காலனியச் சூழலுக்கான கல்வி கற்பிக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவான கத்தோலிக்கக் கிறித்தவம் கல்வியைப் பின்னோக்கிக் கொண்டு சென்றது. நவீனச் சூழலுக்கான ஆங்கிலக் கல்வியைக் கொடுக்காததின் வாயிலாக தலித்துகளுக்குக் காலனிய வேலை வாய்ப்புகள் இல்லாமலாக்கப்பட்டன. சீர்திருத்தக் கிறித்தவம் 1842-லேயே தலித்துகளை நவீன நாகரிகச் சூழலுக்கான கல்வி வாசலை திறந்துவிட்டதையும் கத்தோலிக்கம் அதனை இல்லாமல் ஆக்கியதும்தான் வரலாற்றுச் சோகம்.
V
கிறிஸ்த்தியான் பேட்டையில் 1855ல் அச்சகம் உருவாக்கப்பட்டது. அச்சுக் கருவியை நாகர்கோவிலில் பணிசெய்த மால்ட் பாதிரியாரிடமிருந்து அருளப்பன் வாங்கிவந்துள்ளார். சென்னையிலிருந்து தமிழ் அச்சு 240 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலிருந்து மால்ட் பாதிரியாரால் அசோட்டின் என்பவர் அச்சு வேலையைக் கற்றுக் கொடுப்பதற்காக கிறிஸ்த்தியான் பேட்டை வந்துள்ளார். கிறிஸ்த்தியான் பேட்டை அச்சகத்தில் தமிழிலும், தெலுங்கிலும் கைப்பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. ஏறக்குறைய 721 கைப்பிரதிகள் அச்சிடப்பட்டதாக மேற்சொன்ன நூல் பதிவு செய்கிறது.
புதுப்பட்டிக்கு மேற்கே ½ மைல் தூரத்தில் நவீனம் வீச்சாக வேலை செய்து கொண்டிருந்தது. புதுப்பட்டியில் கிறித்துவத்திற்கு மாறியவர்கள் கொடுமை செய்யப்பட்டுள்ளனர். பெரும் கூட்டம் ஒன்று மதவெறுப்பால் சொந்த நிலத்தை விட்டுப் புலம் பெயர்ந்துள்ளது.
கால ஓட்டத்தின் எல்லை இப்போது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்து நின்றது. அங்குதான் கத்தோலிக்கப் பைபிளின் இரண்டாம் திருப்புதலை (மொழியாக்கம்) திரிங்கால் நிகழ்த்திக் காட்டினார். இன்னும் சில நூல்களும்கூட அங்கிருந்து உருவாயின. இப்போது தரம்பாலின் அழகியமரம் கருத்தியலை இங்குப் பொருத்திப் பார்ப்போம். சுதேசக் கல்வி என்பது எங்கு யாரால் பெறப்பட்டது? கல்வியறிவே பெறப்பட்டிருக்காத குக்கிராமங்கள் கிறித்தவம் எனும் நவீன வரவால் மட்டுமே கல்வி என்பது அக்கிராமங்களுக்குச் சாத்தியமானது என்பதிலிருந்து அழகியமரம் என்ற ரொமாண்டிசிசத்தை வாசகர்கள் பொருத்திப் பார்த்துக் கொள்ளவும்.
VI
1910 (?)ஆம் ஆண்டில் ஒரு நூல் கிறித்தவ வட்டாரத்திற்கு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டது. புதுப்பட்டியில் உள்ள வெள்ளாளர் சாதி வட்டாரத்திலிருந்து “துவான் அந்திக்கு வழிநடை சிந்து” எனும் நூல் வெளிவந்துள்ளது. நல்லுப்பிள்ளை என்பவரின் மகன் வீரபத்திரப்பிள்ளை இந்நூலை எழுதியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோதாவிலாச அச்சகத்தில், இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது. இந்நூல் பாடல் வடிவில் உள்ளது. வெள்ளாளர் தெருவிலிருந்து அத்தியில் உள்ள பக்கிரிசாமி கோவில் வரையிலான நிலங்கள் இப்பாடலில் பேசுபொருளாகியுள்ளன.
அத்தி கோவில் என்றால் அது துவான் கோவில்தான். யார் இந்த துவான்? திவாண் ஷா என்பதுதான் மக்கள் மொழியில் துவான் என்றானது. திவாண் ஷா யார்? திவாண் ஷா ஒருமுறை அத்திக்கு மேற்கேயுள்ள அடர் வனப்பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி வந்துள்ளார். அத்தியோடை அகன்று விரிந்த ஓடையாகும். மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். நாங்கிற ஆம்பளையாளால் கூட இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்தமுடியாதாம். வெயில் கொழுத்தும் கோடையிலகூட அத்தியில தண்ணி வரத்து நிக்காதாம். அத்தி ஓடை மணலைக் கையால் தோண்டினாலே தண்ணீர் ஊத்தா கிடைக்குமாம். அப்படியான அத்திஓடைக் கரைக்கு அந்தப்புரம் ஒரு பெண் மாடு மேய்ச்சுட்டு இருந்தாங்களாம். அந்த இடத்துக்கு வந்த திவாண் ஷா ‘அம்மா, பசிக்குது. சோறு ஏதாவது இருந்தா கொடுங்க’. அங்க செத்த நேரம் ஒக்காரு மவனே… ஈங்கக்குள்ள சோத்தக் கொண்டாந்திடுரேன்’ன்னு சொல்லி கலயத்துல இருந்த சோத்த எடுத்துட்டுத் திரும்பிவந்து பாக்காங்க.. அந்த இடத்துல நின்ன மனுசனக் காணல. அந்த மனுசன் நின்ன இடத்துல இப்ப அத்திச்செடி நிக்குது. அத்திச்செடி மரமாகி இன்று அது அத்தி கோவிலாகி மக்கள் வழிபடும் இடமாகிவிட்டது. ஒரு பெண்ணுக்கு துவான் காட்சி தந்த இடமே இன்று அத்திக் கோவிலாக மாறியுள்ளது.
இசுலாமிய மரபில் தர்ஹா உண்டு. இது அவுலியாக்கள் மரபின் தொடர்ச்சி. ஆனால் இந்த இடம் தர்ஹாவல்ல. திவாண் ஷா அவுலியா அல்ல. அவரது உடல் அந்த இடத்தில் புதைக்கப்படவில்லை. திவாண் ஷா காட்சி தந்த இடத்தை மக்கள் இன்று திவாண் ஷா தர்ஹா என்று அழைக்கின்றனர். இது இசுலாமிய மரபில் புதுவகை மரபாகத் தென்படுகிறது.
இந்து, கிறித்தவம், இசுலாமியர் என்ற மதபேதமின்றி துவான் வணங்கப்படுகிறார். குழந்தைவரம் வேண்டுபவர்களின் முதல் தேர்வு துவான் நேர்ச்சிதான். ‘துவான் அத்தி வழிநடைச் சிந்து’ நூல் அதன் அடிப்படையில் உருவானதுதான். நோய்த் தீர்வுக்காகவும் துவான் நேர்ச்சை விடப்படுகிறது. திருமணம் நடப்பது, தீர்க்கமுடியாத வழக்குகளில் நீதி வேண்டுவது, தங்களது குடும்பத்துக்குப் பாதுகாப்புக் கோருவது என்பதான மக்களின் பண்பாட்டுத் தேவைகளில் துவான் சாமி வீற்றிருக்கிறார்.
‘துவான் அத்திக்கு வழிநடை சிந்து’ நூலின் ஆசிரியர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இசுலாமிய தேவதூதனான துவான் சாமியைப் போற்றிப் பாடும் நோக்கில் உருவாக்கப்படும் நூல் ஒன்றுக்கு இந்துக் கடவுளர்களான முருகன், கணபதி, சிவன் ஆகியோர் துணையோடிருக்க வேண்டும் என்கிறார். இது ஒரு அற்புதமான மடைமாற்றம். வரவேற்கப்பட வேண்டிய மத பேதமற்ற நிலைப்பாடாகும். வ.புதுப்பட்டி மண்ணில்தான் மதம்மாறிய கிறித்தவர்கள் அடித்து விரட்டப்பட்டனர். அதே ஊரில்தான் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் மதத்துவேசமற்ற அறிவுமரபு ஒன்று உருவாகியிருக்கிறது. இது ஒரு வளர்நிலை மாற்றமாகும்.
நவீனத்தின் தொடக்கம் புதுப்பட்டியில் தலித்துகளிடம் குடிகொண்டிருந்தது. எழுத்து மரபு, அறிவு மரபு என்பது தலித் கிறித்தவர்கள், கிறித்தவ பாதிரியார் என்றதிலிருந்து சாடி அனைத்து மக்களுக்கும் பரவியிருப்பதை இங்கு இப்போது சொல்லி வைப்போம். மதச்சார்பற்ற மரபு ஒன்று காலனிய காலத்தில் அதே கிராமத்திலிருந்துதான் உற்பத்தியாகியிருக்கிறது என்பதையும் கோடிட்டுக் காட்டலாம்.
Art of Curiosity Studio
அ.ஜெகநாதன் ஆய்வாளர்.மதுரையில் வசிக்கிறார்.








Leave a Reply